“ராஜேஷ் நீ என்ன சொல்லற? அவளுக்கு இன்னும் நாப்பத்தஞ்சு வயசு கூட ஆகலை… அதுக்குள்ள… இதென்ன சாகற வயசா?” என தவிப்போடு தேவராஜன் கேட்க, தாமரையும் பதறினார்.
“தம்பி காப்பாத்தவே முடியாதா? கொஞ்சம் ரிப்போர்ட்ஸ் நல்லா செக் பண்ணி சொல்லு…”
“ஸ்பெஷலிஸ்ட் கிட்ட செக் பண்ணனும். நான் இன்னைக்கே பார்த்து பேசறேன். ஆனா, இப்படியே ராதிகா டெம்பரரி சொலூஷன் மட்டும் பண்ணிட்டு இருந்தா அதிக காலம் அவங்க உயிரை இழுத்துப் பிடிக்க முடியாது… இத்தனை பேரு இருந்தும் அந்த பொண்ணை விட்டுட்டீங்க…” என்று ஆதங்கமாக ஒலித்தது ராஜேஷின் குரல்.
“மாமா டைம் வேஸ்ட் பண்ண வேணாம். உடனே செக் பண்ணி சொல்லுங்க… மேற்கொண்டு என்ன பண்ணலாம்ன்னு யோசிக்கலாம்…” என்று மாமாவை அனுப்பி வைத்த கௌதமன், “நீங்க என்ன? இப்ப இன்னும் உங்களுக்கே வைத்தியம் பார்க்கணுமா? கொஞ்சம் கூட ஸ்ட்ராங்கா உங்களால இருக்க முடியாதா? உங்க தங்கச்சிக்கு ஒன்னுன்னா போயி பார்க்கிறதை விட்டுட்டு நீங்க நெஞ்சை பிடிச்சுட்டு படுத்துட்டு இருக்கீங்க…” என்று கௌதமன் தந்தையிடம் காய்ந்தான்.
“கெளதம் என்னடா? அப்பாவை எதுக்கு இப்படி எல்லாம் பேசற?” தாமரை மகனை கடிந்து கொண்டார்.
“பின்ன வேற என்ன செய்ய சொல்லறீங்க? இவ்வளவு அநியாயம் அத்தைக்கு நடந்திருக்கு. இவர் நினைச்சிருந்தா அவங்களுக்கு சப்போர்ட் பண்ணி இருக்கலாம். யாரால என்ன செஞ்சுட முடியும்? சாதாரண எமோஷனல் பிளாக்மெயில், தப்பா பரவுன வதந்தி அதுக்காக அத்தை வாழ்க்கையையே மொத்தமா பலி கொடுத்துட்டாரே… இதே இவருக்கு ஒரு பொண்ணு இருந்திருந்தா இப்படித்தான் விட்டேத்தியா நடந்திருப்பாரா? அநியாயமா அவங்க இத்தனை காலம் கஷ்டப்படற மாதிரி ஆயிடுச்சு…”
தேவராஜனாலும், தாமரையாலும் பதில் சொல்ல முடியவில்லை. சாட்டையால் அடிப்பது போன்ற மகனின் கேள்வியில் அத்தனை நியாயங்கள் கொட்டிக் கிடக்கிறதே! அதிலும் ராஜேஷ் சொல்லிச் சென்ற விஷயம் தலையில் இடியை அல்லவா இறக்கி விட்டது!
அதன் பிறகு நடந்தது எல்லாம் அசுர வேகம் தான்! அங்கிருக்கும் ஸ்பெஷலிஸ்ட்களிடம் ராஜேஷ் விசாரித்து, சிகிச்சை செய்ய முடியும் என்ற நம்பிக்கை கிடைத்ததும், கௌதமனும் தேவராஜனும் தான் சேலம் விரைந்தனர். தேவராஜனின் உடல்நிலை குறித்து வேண்டாம் என்று மறுத்த போதும், “இல்லை நானும் வரேன்…” என பிடிவாதமாய் கிளம்பிச் சென்றார்.
“எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை” என ஒப்புக்கொள்ள மறுத்த ராதிகாவை பேசி சரிகட்டி, ராதிகா மற்றும் ஜீவனாவுடன் மீண்டும் சென்னை வந்து சேர்ந்தனர்.
சிகிச்சை நல்லபடியாக முடிந்து ராதிகா பூரண குணமடைய மேலும் சில வாரங்கள் எடுத்துக் கொண்டது. அதற்குள் ஜீவனா தவித்த தவிப்பு, தாயை இழந்து விடுவோமே என்கிற பேரச்சம் எல்லாம் சொல்லில் அடங்காத வேதனைகள். யாரையும் அவளின் அருகில் கூட விட மறுத்தாள்.
பழக்கமற்ற உறவுகளிடம் ஒட்டுதல் வர மறுத்தது. இன்று அன்னையைக் காப்பாற்றியதில் அவர்களின் பங்கு அளப்பரியது என்றாலும் இந்த நிலைக்கு வருவதற்கும் அவர்கள் தானே காரணம்.
அவர்கள் நியாயமாக நடந்திருந்தால், அன்னைக்கு சேர வேண்டிய சொத்து கிடைத்திருக்கும். அது இருந்திருக்கும் பட்சத்தில் அன்னையிடம் சிகிச்சைக்குப் பணமில்லாது போயிருக்காது. அதை அவர்கள் தள்ளிப்போட்டுக் கொண்டே இத்தனை சிக்கலையும் இழுத்து வைத்திருக்கவும் மாட்டார்கள்.
கொஞ்சம் தாமதித்திருந்தாலும் வேறு ஏதேனும் அசம்பாவிதம் நடந்திருந்தாலும் அவள் தனி மரம் அல்லவா! அப்படி ஒரு நிலை வந்திருந்தால் இவர்கள் யாரால் தான் அவளின் அன்னையைத் திருப்பி தர இயலும்? நெஞ்சம் கனத்து போனது.
ராதிகா சென்னை வந்த விஷயம் கேள்வியுற்று வீட்டில் வேதவல்லியின் கூர் நாக்கு கண்டபடி சுழன்றது. என்ன அதனை கண்டுகொள்ளத் தான் யாருமில்லை. “நான் வீட்டை விட்டு போறேன். செத்து போறேன்…” என என்னென்னவோ பேசி மகனைத் தடுக்க நினைத்தார்.
தேவராஜ் அசராமல், “நீங்க இந்த வீட்டுலயே இருந்துக்கங்க. நான் என் பொண்டாட்டி பிள்ளைங்களோட வேற வீட்டுக்கு போயிக்கிறேன்… சாகறதோ வாழறதோ உங்க விருப்பம் தான் மா… உங்களுக்கு வயசாயிடுச்சு. இந்த மாதிரி எண்ணம் தான் வரும்… தனியா இருந்தீங்கன்னா தெளிஞ்சுடுவீங்க…” என சொல்ல,
“பெத்த அம்மாவை போயி சாக சொல்லறியே… நீ எல்லாம் நல்லா இருப்பியா?” என ஆக்ரோஷமாகக் கத்தினார்.
“என் தங்கச்சிக்கு பண்ணின பாவத்துக்கு நீங்களும் உங்க பொண்ணும் அனுபவிக்கிறீங்களே அதைவிட எனக்கு என்ன பெருசா வந்துட போகுது… நான் நல்லா இல்லைன்னா அதுக்கு காரணம் என் தங்கச்சியை நான் தனியா தவிக்க விட்ட பாவமா மட்டும் தான் இருக்கும்…”
“என்னடா ரொம்ப தான் வாய் நீளுது…” என அவர் ஆர்ப்பாட்டம் செய்ய, “உங்க மகனா இருந்துட்டு இந்தளவுக்கு கூட பேசாட்டி எப்படி? என்ன கொஞ்சம் முன்னாடியே பேசி இருந்திருக்கணும்” என பதிலுக்குக் கத்தினார்.
வீட்டில் தினமும் இதே போல தான்… வேதவல்லி மனம் நோக பேசுவதும், அதற்குத் துளியும் குறைவில்லாமல் தேவராஜன் திருப்பி தருவதுமாக வீட்டில் தினம் தினம் சச்சரவு தான்!
நாளாக நாளாக அது மெல்ல அடங்கியது. வேதவல்லி வேறு வழியில்லாமல் ஒதுங்கி, விலகிப் போனார். இல்லை வீட்டினர் அவரை ஒதுக்கி வைத்தனர் என்று சொன்னால் சரியாக இருக்கும்.
அவர் கண்டபடி பேசும்போது வாயாடும் தேவராஜனைத் தவிர வேறு யாரும் அவரிடம் பேசுவதில்லை. ஏன் அவர் இருப்பதாகக் கூட கண்டு கொள்வதில்லை. அவரது கோபத்திற்கு, நிராகரிப்புக்கு எல்லாம் துளி மரியாதை இல்லை. மகளை நம்பிப் போக முடியாது என்று அவருக்கு நன்றாகவே தெரியும். அதனால் பல் பிடுங்கிய பாம்பின் நிலையில் அவர்.
ராதிகா பூரண குணமானதும் சேலத்திற்குத் தான் செல்வேன் என உறுதியாக இருந்தார். கெளதம், ஜீவனா திருமணம் குறித்து தேவராஜன் பேச்செடுக்க, அந்த பேச்சைத் தொடங்கும் போதே துண்டித்தார்.
“என்ன ராதிம்மா…” என தேவராஜன் இயலாமையுடன் கேட்க, “அண்ணா உங்ககிட்ட என்ன சொன்னேன்? என்னை நான் பார்த்துப்பேன். நீங்க பயப்படாம இருந்துக்கங்க. நம்ம பாசம் என்னைக்கும் மாற போறதில்லை. அதுக்காக உங்களை நான் பார்க்கணும், உங்ககிட்ட நான் பேசணும்ன்னு இல்லைன்னு சொன்னேன் தானே? இத்தனை வருஷம் அப்படித்தானே இருந்தோம்…” என ராதிகா தெளிவாக சொல்ல,
“அது நம்ம எடுத்த முட்டாள்த்தனமான முடிவுன்னு இப்ப புரியுதும்மா… இனியும் இந்த விலகல் வேண்டாம்…” என்றார் வேகமாக.
“உங்களுக்கு புரியலையா? எனக்கு நீங்க, அண்ணி, உங்க மகன் எல்லாரும் வேணும் தான்… இலவச இணைப்பா எனக்கு வேண்டாதவங்களோடயும் சகவாசம் வருமே… எனக்கு அதில் துளியும் விருப்பம் இல்லைண்ணா” என உறுதியோடு கூற,
“சரி அதுக்காக நாம விலகி இருக்கணும்ன்னு என்ன இருக்கு? நானும் அண்ணியும் அங்கே உன்னை பார்க்க வரோம்…”