ராஜேஷுக்கு தன் அக்கா மகனின் மனம் தெளிவாகப் புரிகிறது. ஜீவனாவுக்கும் மனதளவில் அதே போல தான் என்றும் கணிக்க முடிகிறது.
ஆனால், ஜீவனாவின் பயம், அவள் அவளின் அன்னை மீது கொண்டிருக்கும் அன்பும், பற்றும்… அது தன் நேசத்தையே நிராகரிக்குமளவு வலுவாய் இருக்கிறதே! பிறகு எப்படி கௌதமனின் காதல் கைகூடும் என யோசனையானார்.
சரி அவள் தான் அப்படி என்றால் இவன் என்னவோ உர்ரான்கொட்டான் மாதிரி அந்த பெண்ணை பார்த்து வைக்கிறான். அந்த பெண் ஒரு முறை கையை உதறி விட்டதற்கேவா?
கௌதமை நெருங்கி, “இப்ப சமீபமா தான் இந்த பொண்ணை தெரியும்ன்னு சொன்ன… இன்னைக்கு தான் அந்த பொண்ணு பேசுச்சுன்னும் சொன்ன… இதுல எந்த கேப்புலடா நீ லவ் பண்ணுன?” என காதருகில் வந்து மெல்லிய குரலில் விசாரிக்க, அவன் தீயாய் முறைத்தான்.
“நீங்க ஒன்னும் பெரிய காதல் மன்னன் மாதிரி எனக்கு அட்வைஸ் பண்ண வர வேண்டாம் மாமா. உங்களை மாதிரி நானும் இருந்தா காதலியோட கதையை மட்டும் தூரத்துல இருந்து தெரிஞ்சுக்கிட்டு சும்மா இருந்துக்க வேண்டியது தான்…” என்று எரிந்து விழுந்தான்.
அதில் அவரின் கண்கள் அதிர்ச்சியில் பெரிதாக விரிந்து போனது. வேகமாக அவனது வாயைப் பொத்தி, “லூசு மாதிரி எதையாச்சும் உளறி வைக்காத…” என்றார் பதறியவராக.
“யாரு நான் லூசு… நான் உளறிட்டு இருக்கேன். எங்க அத்தையைப் பத்தி ஒரு இக்கன்னா விடாம எல்லாம் சொல்லறீங்கன்னா எங்க அத்தையை டாவடிக்காமயா இருந்திருப்பீங்க… பயந்தாங்கொள்ளி மாமா… அப்பவே எங்க அத்தையை ஸ்டண்ட் பண்ணி கட்டி இருந்தீங்கன்னா எங்க அத்தைக்கு இவ்வளவு அநியாயம் நடந்திருக்குமா?” என முறைத்தவனைப் பார்த்துத் திகைத்தவர்,
“டேய்! டேய்! வாயை வெச்சுட்டு சும்மா இருடா… எனக்கும் உங்க அத்தையை பிடிக்கும் தான். எங்க அம்மாவே கல்யாண பேச்சை அக்கா கிட்ட எடுத்துட்டாங்கன்னு தெரிஞ்சு நான் அடைஞ்ச சந்தோசம் கொஞ்ச நஞ்சம் இல்லை. அவ மேல இருந்த நேசம் இன்னும் இன்னும் வளர்ந்துட்டே தான் போச்சு. ஆனா என் போதாத நேரமோ என்னவோ நான் வேலைக்குன்னு டெல்லியில இருந்த சமயம் உங்க அத்தைக்கு அந்த திருமூர்த்தி கூட கல்யாணம் நடந்து முடிஞ்சுடுச்சு. அதை ஏன் எனக்கு தெரியப்படுத்தலைன்னும் புரியலை. அதை நான் எப்படி எங்க அக்காகிட்டயோ அம்மா கிட்டயோ கேட்க முடியும்? இன்னும் கல்யாணம் நடக்கலைன்னா என்னோட காதலை சொல்லலாம். கல்யாணம் முடிஞ்சு வேற வாழ்க்கைக்குள்ள போன பொண்ணை பத்தி நான் எப்படி அந்த மாதிரி பேச முடியும்? என்னால ஒன்னும் பண்ண முடியாம நின்னேன்…” என பெருமூச்சு விட்டார்.
அவரின் தோளில் தட்டிக்கொடுத்தவன், “உங்க காதலுக்கு நடந்த சதி என் காதலுக்கு நடக்காம பார்த்துக்க வேண்டியது உங்க பொறுப்பு மாமா…” என சொல்ல, “அடேய்! இந்த கலாட்டா பண்ணறது… காதல் கல்யாணம் செஞ்சு வைக்கிறது… இதுக்கெல்லாம் நான் கொஞ்சம் கூட சரிப்பட்டு வர மாட்டேன்டா… என்னைய ஆட்டத்துல சேர்த்துக்காத… அதோட அந்த பொண்ணுக்கே பெருசா இண்ட்ரெஸ்ட் இருக்கிற மாதிரி தெரியலை…” என ராஜேஷ் பதறினார்.
“அவளுக்கு என்னை பிடிச்சிருக்குன்னு எனக்கு தெரியும் மாமா. அதை நான் பார்த்துக்கிறேன்” என்றவனிடம், “அதுதான் நல்லா பார்த்தேனே… அவ கோபத்துல கையை உதறி விட்டுட்டான்னு முறைச்சிட்டு நிக்கிற…” என்று அவனை வாரினார்.
“ம்ப்ச் அதெல்லாம் அப்படி இப்படி தான் இருப்பேன். அதுக்கு என்ன பண்ண முடியும் சொல்லுங்க… நான் முடிவு பண்ணிட்டேன் மாமா. உங்களைத் தான் மலை போல நம்பி இருக்கேன்… பிளீஸ்… உங்க அக்கா மகனுக்காக இதை எப்படியாச்சும் நடத்தி கொடுத்துடுங்க…” என அவரை வம்பிழுத்து அவன் ஒரு உடன்படிக்கை போட்டுக் கொண்டிருக்க, “நீ என்னை சரிகட்டறதுக்குள்ள அந்த பொண்ணு கிளம்பிடுச்சுடா…” என அவனிடம் ராஜேஷ் சொன்னார்.
“என்னை கேட்டா நானும் உன்கூட தானே பேசிட்டு இருந்தேன்…” என்ற ராஜேஷுக்கும் அவள் வெளியேறியது தெரியவில்லை. ஆனால், கௌதமனின் தவிப்பை பார்க்க நன்றாக இருந்தது. இந்த தவிப்பும், துடிப்பும் இருந்தால் போதும் தொழிலில் வென்றது போல காதலில் ஜெயித்து விடுவான் என்ற நம்பிக்கை அவருக்கு வந்து விட்டது.
“மாமா… அப்பாவை பார்த்துக்கங்க… நான் வரேன்…” என்றவன் அவரின் பதிலைக்கூட எதிர்பார்க்காமல் வேகமாக ஹாஸ்பிட்டலின் வாயிலை நோக்கி ஜீவனாவை தேடிக்கொண்டே ஓடினான்.
‘ஆனாலும் அநியாயத்துக்கு காதலிக்கறீங்கடா…’ என வாய்விட்டுப் புலம்பிய ராஜேஷுக்கு எப்படியும் இவன் எல்லாம் சரி செய்து விடுவான் என்னும் நம்பிக்கை நிறையவே இருந்தது.
கௌதமன் மருத்துவமனையிலிருந்து வெளியே வரும் வழி எல்லாம் தேடினான் ஜீவனா கிடைக்கவில்லை. வாயில் வரையும் வந்து விட்டான். அவள் இருப்பதற்கான அடையாளமே இல்லை.
“ம்ப்ச் எங்கே போனா?” என ஒரு காலை உதைத்தவன், வேகமாகக் கைப்பேசியை எடுத்து அவளுக்கு முயற்சி செய்ய ரிங் தான் போய்க்கொண்டே இருந்ததே தவிர, அவள் அழைப்பினை ஏற்கவே இல்லை.
சரியாக அதே நேரம் கௌதமனின் அன்னை தாமரையும், பாட்டி வேதவல்லியும் மருத்துவமனைக்கு காரில் வந்துவிட இவன் வாயிலில் நின்றிருப்பதைக் கவனித்து விட்டு அங்கேயே இறங்கிக் கொண்டார்கள்.
இவனிடம் வேகமாக வந்த தாமரை, “அப்பாவுக்கு என்ன ஆச்சுடா? இப்ப எப்படி இருக்காரு?” என பதறியபடி கேட்டார்.
“வழக்கம் போல தான்மா… டிரிப்ஸ் இறங்குது” என சொன்னவனின் பார்வை வழக்கத்தை விடவும் அதிகமாக தன் பாட்டியின் மீது வெறுப்புடன் படிந்தது.
அவனுக்கு அவன் பாட்டி நடந்துகொள்ளும் முறை எப்பொழுதுமே துளியும் பிடிக்காது. சுயநலத்தின் மறு பிம்பம் அவர். அவருக்குத் தெரிந்ததெல்லாம் அவர், அவருடைய மகள்! அவ்வளவு தான்! மகளுக்கு ஒன்று வேண்டும் என்றால், மகனை நடுத்தெருவில் நிறுத்துவதற்குக் கூட யோசிக்க மாட்டார்.
தன் அதிகாரத்தாலும் நாடகத்தாலும் அன்னை, தந்தையை வெகுவாக படுத்துவார். அவனையும் தன் இஷ்டத்திற்குத் தான் ஆட்டுவித்துக் கொண்டிருந்தார். ஒரு வயதிற்கும் மேல் அவனிடம் அவரின் ஜம்பம் பலிப்பதில்லை. அவரின் இஷ்டத்திற்கு தேவராஜன் ஆடுவதில் கர்வம் தலைக்கேறிப்போய் இருந்தவர், அவர் சொல்வதைக் கௌதமன் காது கொடுத்துக் கூட கேட்காமல் இருப்பதால் என்ன செய்வது எனத் தெரியாமல் விழி பிதுங்கி இருக்கிறார்.
ஏற்கனவே அவர் என்றால் அவனுக்குள் அத்தனை வெறுப்பு. இப்பொழுது ராதிகா அத்தைக்கு அவர் செய்த கொடுமை எல்லாம் கேள்விப்பட்ட பிறகு அவர் மீது அத்தனை கோபமாய் வந்தது. ஒரு பெண்ணின் வாழ்வையே நாசம் செய்துவிட்டு, இவருடைய பெண்ணின் வாழ்வு மட்டும் செழிக்க வேண்டும் என்று யோசித்தால்… அது எப்படி நடக்குமாம்? கர்மா என்பது இல்லாமல் போய் விடுமா என்ன? வினையை விதைத்தால் வினையை மாத்திரம் தானே அறுவடை செய்ய முடியும்!
விதைத்த வினையை எல்லாம் காலத்துக்கும் அறுவடை செய்து கொண்டே இருக்கட்டும் என வெறுப்பாக நினைத்துக் கொண்டான்.
“நான் என்ன கேட்டுட்டு இருக்கேன். நீ என்ன யோசிச்சுட்டே இருக்க?” தாமரை தான் அவனை உலுக்கினார்.
“சரியா கவனிக்கலைம்மா. என்ன சொன்னீங்க?”
“அப்படி என்ன யோசனை உனக்கு? அப்பா கிட்ட போலாம் வான்னு கூப்பிட்டேன்…”