அதோடு தாயின் இந்த குணமே தந்தையால் தானே! ராதிகா எந்த வம்புகளும் வேண்டாம் என ஒதுங்கி இருந்து கொள்வார். அவரால் எதிர்த்துப் போராட முடியாது என்றில்லை. உடலும் மனமும் அதற்குத் தயாராக இல்லை. அவருக்கு உறுதுணையாக, பக்கபலமாக ஒருவரும் நிற்க மாட்டார்கள். சிங்கிள் மதர் அனுபவிக்கும் மொத்த வலிகளையும் அனுபவித்தவர் அவர்.

அன்னை எதுவோ மறைக்கிறாரோ என்கிற சந்தேகமும் கொஞ்ச நாட்களாக இருக்கிறது. அதை கண்டறியவும் முடியவில்லை.

என்ன தோன்றியதோ ஜீவனா அன்றே அம்மாவிடம் சொல்லி விட்டாள். “சென்னைக்கு போயி வேலை செஞ்சு பார்க்கிறேன் மா… எனக்கும் கொஞ்சம் எக்ஸ்போஷர் கிடைக்கும்…” என்று சொன்னவள், அன்னையின் சம்மதத்தை வாங்கிக் கொண்டு சென்னைக்கும் வந்து சேர்ந்து விட்டாள்.

வந்து ஒரு நாள் தான் ஆகியிருக்கும் அதற்குள், “இன்று பார்ட்டிக்கு வா… தொழில்முறையில் சில பெரிய தலைகளை அறிமுகம் செய்கிறேன். அவர்கள் நிறுவனத்திற்கும் இன்டீரியர் டிசைனிங் செய்ய வாய்ப்பு கிடைக்கும்… உனக்கு ரொம்ப டேலண்ட் இருக்கு… அதை இன்னும் டெவலப் பண்ணி நீ அதுல எக்ஸ்பெர்ட் ஆகணும்” என்று தந்தை திருமூர்த்தி சொல்ல, இவள் தன் அன்னைக்கு அழைத்துத் தான் அனுமதி கேட்டாள்.

ராதிகாவோ, “அதெல்லாம் எதுக்குடா?” என தயங்க, இவள் தந்தை சொன்னதை எடுத்துக் கூறினாள்.

“சரி… ஒருமுறை போய் பாரு… எனக்கு தெரிஞ்சு உனக்கு அதெல்லாம் ஒத்து வராது… உங்க அப்பாவும் அங்கே போனா நீ கூட இருக்கிற ஞாபகமே இல்லாம இருக்கலாம். கவனமா போயிட்டு வா…” என்று மட்டும் சொன்னார்.

ராதிகா எப்பொழுதும் இப்படித்தான், அவர் இஷ்டத்துக்கு வளைக்க மாட்டார்… உனக்கு ஒத்து வருகிறதா என்று முயற்சி செய்து பார்… என வழிகாட்டி விட்டு கூட நிற்பார்.

அவரின் இந்த தெளிவு திருமூர்த்திக்கு பிடிக்காது. ‘இவ பெரிய டீச்சருன்னு நினைப்பு’ என குத்திப் பேசுவார். சரி அபிப்ராயம் எதிர்பார்க்கிறார் போல என்று மனதில் பட்டதை ராதிகா சொன்னால், ‘ஆமா எனக்கு தெரியாதது தான் அஞ்சாங்கிளாஸ் டீச்சருக்கு தெரிய போகுது பாரு’ என எரிந்து விழுவார்.

ஆனால், ஜீவனாவுக்கு அம்மாவின் இந்த அணுகுமுறை மிகவும் பிடிக்கும். அவருடைய கருத்தைத் திணிக்காத தாயின் மேல் அவளுக்கு எப்பொழுதுமே பிரமிப்பும் மரியாதையும் உண்டு.

“தேங்க் யூ சோ மச் மா… போயிட்டு வந்து எப்படி இருந்ததுன்னு சொல்லறேன். முதல் முறை போகிறதால ரொம்ப எக்ஸைட்மெண்ட்டா இருக்கு…” என சந்தோஷமாகச் சொல்லி வைத்தவள், அப்பொழுதே பார்ட்டிக்கு எந்த உடையில் போவது எப்படி மேக்கப் செய்வது என திட்டமிடத் தொடங்கி விட்டாள்.

அவளுக்கு இதுபோல பார்ட்டிக்கு சென்று எல்லாம் பழக்கம் இல்லை. இந்த மேல்தட்டு பழக்க வழக்கங்கள் முற்றிலும் புதிது. அதனால் மிகவும் ஆசையோடு தான் பார்ட்டிக்கு கிளம்பி வந்தாள்.

அத்தனை ஆர்வத்துடன் கிளம்பி வந்தவளுக்கு இந்த பார்ட்டி மோசமான அனுபவங்களைத் தரவிருக்கிறது என்று தெரிந்திருந்தால் நிச்சயம் வராமல் இருந்திருப்பாளோ என்னவோ? விதி யாரை விட்டது?

சேலத்திலிருந்து ஜீவனா சென்னை வருவதற்கு சில முக்கிய காரணங்கள்… ஒன்று அவளது வேலையில் முன்னேற்றம் வரும்… உழைக்க அஞ்சாதவள், திறமையானவள் என்பதால் அதற்கான அங்கீகாரமும் முன்னேற்றமும் வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு…

இன்னொரு காரணம் தந்தையின் தொடர் நச்சரிப்பிற்குப் பின்னே இருக்கும் காரணம் என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டும்… அப்படி இவள் வந்து இங்குத் தூக்கி நிறுத்த வேண்டிய வேலை என்ன இருக்கிறது என்று பார்க்கத் தான் கிளம்பி வந்திருந்தாள்.

அதோடு அன்னையும் இவர்களிடம் எதிர்த்து பேசாமல் இப்படி வளையும் அளவு என்ன காரணம் இருக்கக்கூடும் என்கிற சந்தேகம்.

முடிந்தளவு இந்தமுறையோடு இவர்களின் உறவை தலை முழுகிச் சென்று விட்டால் தேவலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறாள். அந்தளவிற்கு இவர்கள் மீது வெறுப்பு நிறைந்து கிடக்கிறது அவளிடம்!

எதை எதையோ அசைப்போட்டபடி இலக்கின்றி எங்கெங்கோ பார்வையைச் சுழல விட்டுக் கொண்டிருந்தவளை நோக்கி இவள் சற்று நேரம் முன்பு முகம் சுழித்துத் திருப்பிய அந்த வயதான மனிதர் பல்லை இளித்துக் கொண்டு வந்தார்.

ஜீவனாவின் விழிகள் அதிர்ச்சியில் விரிந்து விட்டது. தன்போல பதற்றம் வந்து தொற்றிக் கொள்ள, உடனே அங்கிருந்து எழுந்து கொண்டாள்.

அதற்குள் அந்த மனிதரும், “ஹாய் ஸ்வீட்டி… வொய் ஆர் யூ அலோன்?” என கேட்டபடி நெருங்க, இவளோ வேகமாக வேறு பக்கம் நகர்ந்தாள்.

பின்னால் திரும்பித் திரும்பி பார்த்துக் கொண்டே வேகமாக சில அடிகளை எடுத்து வைத்தவள் முன்னால் சரியாக கவனம் செலுத்தாமல் விட்டிருந்தாள். கொஞ்சம் தான் நகர்ந்திருப்பாள் அதற்குள் இருப்பு தேகம் ஒன்றில் வேகமாக மோதி நிலைகுலைந்து கீழே விழ இருந்த சமயம்… அதனைத் தடுக்கும் பொருட்டு மோதியவனின் தோள்களையே அழுந்த பற்றி தன்னை நிலைப்படுத்திக் கொண்டாள்.

உண்மையில் இது அனிச்சை செயலாய் நடந்த விஷயம். எதிரில் நின்றவனின் தோள் உயரத்துக்கு இருந்த காரணத்தினால் இன்னும் அவன் முகத்தைக் கூட ஏறிட்டுப் பார்க்கவில்லை.

அதற்குள் அந்த நெடியவனோ வேகமாக இவளை விலக்கித் தள்ளி ஓங்கி அறைந்திருந்தான்.

ஹப்பா! செவிப்பறை கிழியும் அளவு ஓர் அறை!

ஜீவனாவிற்கு சில நொடிகள் மூச்சே நின்று விட்டது! கன்னங்களோடு சேர்ந்து முகமும் அவமானத்தில் சிவந்து விட்டது. என்ன ஏதென்று தெரியாமல் இப்படியுமா கை நீட்டுவான். உள்ளே கனலென கிளர்ந்த கோபத்தை அடக்க முடியாமல் பொசுக்கும் விழிகளால் அவனை ஏறிட்டுப் பார்த்தாள். முகம் அப்பட்டமாக அவனை முறைத்துக் கொண்டிருந்தது.

அவனோ இவளுக்கும் மேல் எரிச்சலில் இருந்தான். முகத்தை கடுகடுவென வைத்துக்கொண்டு, “ச்ச… எங்கே ஒதுங்கி நின்னாலும் வந்து வந்து இடிச்சா…” என்றான் முகத்தைச் சுழித்து.

‘ஓ! இவன் அந்த ஆணழகன்’ என்று இகழ்ச்சியாக எண்ணிக் கொண்டாள் ஜீவனா. இத்தனை நேரமாக இவள் வேடிக்கை பார்த்தபோது இவனும் அவள் கண்ணில் பட்டிருந்தான். என்ன பெண்கள் கூட்டம் மொய்க்கும் ஒருவனாக… எங்கு சென்றாலும் அங்கே இவனை ஈஸிக்கொண்டு நிற்க பெண்கள் இருந்தார்கள். வேண்டுமென்றே மேலே விழுந்து விழுந்து சிரித்தார்கள். இவனைப் பார்த்தவுடன் ஓடி வந்து கட்டியணைத்தார்கள். அவனுக்கு எல்லாமே அசௌகரியமாக இருந்ததை அவன் முகமே காட்டிக் கொடுத்தது.

சிலரை விலக்கி நிறுத்தினான். சிலரிடம் முகம் காட்டினான். சிலரிடம் சிடுசிடுத்தான். சிலரை சற்று வேகமாகக் கூட உதறினான்.

‘இப்பொழுது அந்த பெண்களின் வரிசையில் என்னையும் இணைத்துக் கொண்டான் போல…’ ஜீவனாவிற்கு கோபம் ஏகத்துக்கும் எகிறியது. அவனுக்குத் திருப்பி பதிலடி கொடுக்க தோன்றக் கரங்கள் பரபரத்தது.

அவனையே வெறித்து பார்த்தவள், அவளுக்கு பின்னால், “ஹே! ஸ்வீட்டி… ஸ்டாப் பிளீஸ்… உன் பேர் என்ன?” என்ற அந்த கிழவனின் குரலில் பதறிப் போனாள்.

அந்த கிழவனைப் போன்ற ஆட்களிடம் எல்லாம் நின்று ஒரு வார்த்தை பேசவும் அவளுக்கு விருப்பமில்லை. இதோ! எதிரில் நிற்கும் இந்த அவசரக்காரனிடமும் தான்!

மீண்டுமொருமுறை இவனை முறைத்துவிட்டு வேகமாக அங்கிருந்து ஓடினாள். எங்கு செல்ல என்று அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.

‘ச்சே! எங்கே போய் ஒழியறது? பேசாம கூட்டத்தோட கலந்து நின்னுக்க வேண்டியது தான்’ என ஓட்டத்தைக் குறைத்து வேகமாக நடந்தாள்.

ஓடும் அவளையும் அவளின் பின்னால் வரும் அந்த ஜொள்ளு மனிதரையும் மாற்றி மாற்றி வெறித்துப் பார்த்திருந்தவனின் புருவங்கள் யோசனையில் சுருங்கியது. அவளின் முறைப்பான முகம் நினைவில் வந்து போனது.

ஓரளவு அவளின் மேல் தவறில்லை என்று புரிந்திருக்கும். ஆனாலும் குறையாத திமிருடன் தோளைக் குலுக்கி விட்டு அங்கிருந்து நகர்ந்தான்.

ஜீவனாவிடம் அவசரக்காரன் என்ற பெயர் பெற்ற இவன் யாராக இருக்கும்?

இவனிடம் பெற்ற அடிக்கான பதிலடியை ஜீவனாவால் திரும்பித் தர இயலுமா? அந்த பார்ட்டிக்கு வந்து மாட்டிக்கொண்ட ஜீவனா இன்னும் என்னவெல்லாம் எதிர்கொள்ள வேண்டி இருக்குமோ?