இரவில் தென்றல் அவன் நெஞ்சின் மேல் படுத்துக்கொண்டு ” இதெல்லாம் சரியா வருமா சசி.. “
அவள் கன்னத்தை கிள்ளி முத்தமிட்டு ” எனக்கு உன் கூட வாழனும்.. அதுக்காக நான் என்ன வேணாலும் பண்ண ரெடியா இருக்கேன்.. ” மனம் நிறைய சசியை கட்டிக்கொண்டாள் தென்றல்.
அடுத்தடுத்து வந்த நாட்களில் ஊட்டி கான்வெர்ட்டில் அட்மிஷன், எஸ்டேட் மற்றும் பங்களாவை விலைக்கு வாங்குவது என்று பரபரப்பாக கழிந்தது..
பிள்ளைகளை பெரியவர்கள் கண்காணிப்பில் விட்டுவிட்டு இருவரும் சென்று சென்னை வீட்டை காலி செய்தார்கள். ஊட்டி பங்களாவில் அவர்களின் பொருட்கள் இடம் பெற்றது.. அனைத்தும் மின்னல் வேகத்தில் நடந்தது.
பள்ளியில் ஏற்கனவே சொல்லியிருந்ததால், இரு வாரங்கள் கழித்தே பிள்ளைகள் பள்ளிக்குச் சென்றார்கள்.. வேகம் வேகம் என்று அனைத்தும் முடிந்தது.
இன்னும் இரண்டு நாட்களில் பிள்ளைகள் பள்ளிக்குச் செல்ல வேண்டும். அக்கடா என்று கால் நீட்டி அமர சோமசுந்தரத்திடமிருந்து அழைப்பு வந்தது.. சசி முகத்திலிருந்த நிம்மதியும் சிரிப்பும் துணி கொண்டு துடைத்தது போல மறைந்து போனது.
விசாலாட்சி காலமாகிவிட்டார். மனச் சிதைவில் தன்னையும் வதைத்து தன்னை சுற்றி இருப்பவர்களை வதைத்த விசாலாட்சி ஒரு கட்டத்தில் இயற்கை எய்தி விட்டார்.
விஷயத்தைக் கேள்விப்பட்ட பரசுராம் வாசுகி அவர்களோடு கிளம்பினார்கள்.. எந்த வீட்டில் ராணியாக விசாலாட்சி ஆட்சி செய்தாரோ அதே வீட்டில் நடுக்கூடத்தில், தலைமாட்டின் அருகே காமாட்சி விளக்கு எரிய கிடத்தப்பட்டிருந்தார் மாலையோடு..
வீடு முழுவதும் கூட்டம் அலைமோதியது. மாதவி குடும்பத்தினரும் வந்திருந்தார்கள். சசி அன்னையின் பாதத்தில் நெற்றி வைத்து தன்னை கட்டுப்படுத்தியவன் கண்ணீர் துளிகளை அவர் காலில் சிந்த விட்டான்.
மருமகள் இருந்து செய்ய வேண்டிய அனைத்து சடங்குகளையும் தென்றல் தர்ஷினி இருவருமே செய்து முடித்தார்கள். அந்த பெரிய வீட்டை ஆட்டி படைத்த விசாலாட்சி அரைப்பிடி சாம்பலானார்..
” மாப்ள துக்க வீட்ல சொல்லிட்டு போக கூடாது. ஏற்கனவே பிள்ளைங்க படிப்பு ஒரு மாசம் லேட்டாச்சு. இதுக்கு மேலயும் தாமதம்னா நல்லா இருக்காது. நானும் அத்தையும் பசங்கள கூட்டிட்டு ஊட்டி வீட்டுக்கு போறோம்.. காரியத்துக்கு நான் மட்டும் வந்துட்டு போறேன்…”
” மேனேஜ் பண்ணிப்பிங்களா மாமா..” தேவை அறிந்து தானாக உதவ வரும் மாமனாரை கனிவோடு நோக்கினான்.
” ரெண்டு பேரும் ஒழுங்கா இருக்கணும்.. குழலி பாப்பாவ பாத்துக்கோ. ரெண்டு பேரும் ஒழுங்கா படிக்கணும். நியூ ஸ்கூல் பழக கொஞ்சம் டைம் எடுக்கும். எதுவா இருந்தாலும் டெய்லி அம்மாகிட்ட பேசிரனும்.. இங்கே எல்லாம் முடிஞ்ச உடனே நாங்க அங்க வந்துருவோம் சரியா செல்லம்.. ” பிள்ளைகளுக்கு சொல்லி அனுப்பினாள் தென்றல்.
எந்த இடத்தில் தென்றல் அவமானப்பட்டு நின்றாளோ அந்த வீட்டில் இப்பொழுது பழைய விஷயங்களை நினைத்தபடி அமர்ந்திருந்தாள்.. மாமியாரை புகைப்படத்தில் பார்க்கும்போது மனம் கனத்தது.. விசாலாட்சி ராட்சசி தான். ஆனால் சசி மீது வைத்த பாசத்தில் குறை சொல்ல முடியாது. அப்பாசம் பேரப்பிள்ளைகள் மீது துளி இருந்திருந்தாலும் இந்த அளவிற்கு குழந்தைகள் மனதில் வேற்றுமை இருந்திருக்காது.
பணம் இருக்கும் ஒரே காரணத்தால், எளியவரை அவர் கேவலமாக நடத்தியது எந்த விதத்திலும் நியாயமில்லை.. இன்னும் கொஞ்ச நாள் இருந்திருக்கலாம். இருந்தாலும் இந்த இடைப்பட்ட வருடங்களில் விசாலாட்சி மனதாலும் உடலாலும் பட்ட அவஸ்தைகள் கொஞ்சம் நஞ்சமில்லை. சில வேலைகளில் மரணம் கூட விடுதலையே..
ஆறுதல் சொல்லி தேற்றும் நிலைமையில் நல்லவேளையாக சசி இல்லை.. பெற்ற அன்னையை இழந்த வேதனை அவன் மனதில் இருந்தாலும் நிதர்சனத்தை புரிந்து கொண்டான். தேவா வந்து வந்து போனான். தர்ஷினி இடைப்பட்ட நாளில் எட்டிப் பார்க்கவில்லை. சோமசுந்தரம் இடிந்து போனார்.
விசாலாட்சியின் 16வது நாள் காரியத்திற்கு மீண்டும் சொந்தங்கள் ஒன்று கூடியது. பரசுரம் மட்டும் வந்து பார்த்தார்.. விசாலாட்சி என்ற அத்தியாயம் முடிந்தது.
உறவுகள் அனைத்தும் கலைந்த நிலையில் தேவா சசி இருவரும் சோமசுந்தரத்தின் அருகே அமர்ந்திருந்தார்கள். தென்றல் சசிக்கு பின்னால் நின்று கொண்டிருந்தாள்.
” அப்பா நீங்க எடுத்த முடிவு சரியா.. ” மௌனத்தை உடைத்தான் சசி.
” உங்கம்மா ராட்சசியா இருக்கலாம். என்ன பொறுத்த வரைக்கும் அவள கல்யாணம் பண்ணி தான் எல்லாமே. எனக்கு அவ நல்ல பொண்டாட்டியா இருந்தா. சீக்கு வந்து படுத்து கிடந்தாலும் பக்கத்துல அவ இருந்தா. இப்போ அவ இல்லாத இந்த வீட்டில என்னால இனிமே வாழ முடியாது. இந்த வயசுல தற்கொலை பண்ணிக்கிறது அசிங்கம்..
சொத்து சுகம் எது இருந்தாலும் நம்ம கூட இருந்து அனுபவிக்க வாழ்க்கை துணை வேணும்.. தேவாவுக்கு அவன் பங்கை எல்லாம் நான் பிரிச்சு கொடுத்துட்டேன். உன் பங்கு, இந்த வீடு இன்னும் மிச்சம் இருக்கு. இது என் சொந்த சம்பாத்தியம். உங்க ரெண்டு பேர் பேர்லயும் எழுதி வைக்கிறேன். தென்றல் ஒத்துபோவா ஆனா தர்ஷினி மாட்டா. இந்த வீட்ட வித்து ரெண்டு பேரும் பிரிச்சுக்கோங்க.
நான் காசிக்கு போறேன்.. என்னைக்காவது ஒரு நாள் தோணுனா உன்னை வந்து பார்த்துட்டு போறேன் சசி.. ” தேவா அமைதியாக இருந்தான். அவனால் பேச முடியவில்லை. தொண்டை அடைத்தது.
” நீ ஏன்டா கவலையா இருக்க.. எனக்கு உன் மேல எந்த வருத்தமும் இல்லை. உன் வீட்டுக்கு நான் வந்தாலும் உன் பொண்டாட்டி கிட்ட மரியாதை இருக்காது. எனக்கு அப்புறம் நீங்க ரெண்டு பேரு தான் இருக்கீங்க. கடைசி வரைக்கும் உங்க உறவு நல்லபடியா இருக்கணும்னு நினைக்கிறேன்.. தர்ஷினிய பாத்துக்கோ. வருண நல்லபடியா படிக்க வை.” தேவா தோளில் தட்டிக் கொடுத்தார் சோமசுந்தரம்.
” தென்றல்.. நாங்களே சசி நல்லா வருவானு நம்புனது கிடையாது. இந்த வீட்டில என் கண்ணு முன்னாடி உனக்கு அநியாயம் நடந்தப்போ நான் தட்டிக் கேட்கல.. ஒரு விதத்துல நானும் பாவிதான். அன்னைக்கு கைகட்டி வேடிக்கை பார்த்துட்டு இப்போ சொத்த உங்க பேர்ல எழுதி வச்சுட்டு உங்க வீட்ல உக்காந்து நாட்டாமை பண்ண எனக்கு மனசு வரலம்மா..
இந்த முடிவு தான் சரி. உன்ன மாதிரி ஒரு பொண்ணு எங்க சசிக்கு கிடைச்சதுக்கு என் குடும்பமே புண்ணியம் பண்ணிருக்கணும்.. விசாலாட்சி இறக்கறப்போ ஒரு வார்த்தை சொன்னா தென்றல் நல்ல பொண்ணுனு.. உன்கிட்ட மன்னிப்பு கேட்கிற வாய்ப்பு அவளுக்கு இல்லாம போச்சு. அவளுக்கும் சேர்த்து எங்கள மன்னிச்சிரும்மா.. ” சோமசுந்தரம் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்தது. தென்றல் முன்பு கைகூப்பி மன்னிப்பு கேட்டார்.
“ஐயோ மாமா” பதறினாள் தென்றல்.
” வயசுல மூத்தவன். இல்லனா காலுல விழுந்திருப்பேன்.. என் மனசார சொல்றேன் நீ நல்லா இருப்பம்மா..” மறுநாள் காசிக்கு செல்வதாக கூறிவிட்டார் சோமசுந்தரம். இறுதியாக அவர்கள் வாழ்ந்த வீட்டில் அவரது அறையில் சென்று படுத்து விட்டார்.
தேவாவும் சசியும் அருகருகே அமர்ந்திருந்தார்கள்.
” அம்மா அப்பா செஞ்சதுக்கு அவங்களுக்கு தண்டனை கிடைச்சிருச்சு.. என் பொண்டாட்டி தென்றல பண்ண கொடுமைக்கு கடவுள் என்ன வெச்சிருக்கானோ தெரியல..
அப்பா சொன்னது ஒரு விதத்துல உண்மைதான். ஆயிரம் காசு பணம் இருந்தாலும் நமக்குன்னு ஒருத்தங்க வேணும். அந்த விதத்துல நீ ஜெயிச்சுட்ட சசி.
நாளைக்கே எனக்கு ஏதாச்சும் ஆனாலும் விட்றாதடா. “
“டேய்”
” இல்லடா.. தர்ஷணியை பொறுத்த வரைக்கும் பணம் தான் எல்லாம். அவ தென்றல் கிட்ட மட்டும் இப்படி நடந்துக்கல. அவள பொறுத்த வரைக்கும் காசு இல்லனா சல்லி காசு மதிக்க மாட்டா..
என் வீட்ல ஏதாவது நல்லது கெட்டதுனா சொல்றேன் கண்டிப்பா நீங்க வரணும். முன்ன மாதிரி பயப்பட வேண்டாம்.. இப்போ உன்கிட்டயும் அந்த காசு இருக்கு. விழுந்திடுச்சு ஓடி வந்து பல்ல காட்டுவா..
நிம்மதி இல்லனாலும் காசு இருக்கே.. பல்ல கடிச்சு வாழ்ந்து தான் ஆகணும்.. நான் போயிட்டு வரேன் டா.. வரேன் தென்றல்” தேவா சோர்ந்த நடையோடு கிளம்பினான்.
சோமசுந்தரம் கிளம்பி விட, அந்தப் பெரிய வீட்டின் சாவியை தேவாவிடம் ஒப்படைத்த சசியும் தென்றலும், மாதவி வீட்டிற்கு ஒருமுறை சென்று அவர்களின் சந்தித்து விட்டு ஊட்டி கிளம்பினார்கள்.. புதிய வாழ்வை ஆரம்பிக்க..