அண்ணன் மகள்களை பார்த்ததும் மாதவிக்கு சந்தோஷம் தாங்கவில்லை. ஆயிரம் உறவுகள் இருந்தாலும் பிறந்த வீட்டு உறவுகள் பெண்களுக்கு மேல் அல்லவா? அதிலும் கணவன் வீட்டு உறவுகளின் அழும்பல் தாங்க முடியாமல் தனி ஆளாக தத்தளித்துக் கொண்டிருந்தவருக்கு அண்ணன் மக்களை பார்த்ததும் கால்கள் தரையில் படவில்லை.
ஓடி வந்து தங்கள் கையில் இருந்த பேக்கை வாங்கி, நலம் விசாரித்த அத்தையை கண்டதும் தென்றலும் வான்மதியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். உண்மையைச் சொல்லப் போனால் அவர்கள் நினைத்தது வேறு அங்கே மாதவி நடந்து கொண்டது வேறு.
அண்ணன் வீட்டிற்கு சென்றால் மாதவியின் அதிகாரம் தூள் பறக்கும்.. வாசுகிக்கு ஒரு நிமிடம் ஓய்வு என்பது சொர்க்கம் போன்றது. அந்த அளவிற்கு மாதவியின் அதிகாரம் இருக்கும்.
தந்தையின் பேச்சை தட்ட முடியாமல் மனதிற்குப் பிடிக்காமல் தான் இருவரும் அத்தை வீட்டிற்கு வந்தது. ஆனால் மாதவியின் கண்களில் அவர்களை கண்டதும் தென்பட்ட ஆனந்தம் பிள்ளைகள் இருவரின் இதயத்திலும் அத்தை மேல் சற்று பாசத்தை வரவழைத்தது.
மாதவி ஹரிதாஸிற்கு இரண்டு பிள்ளைகள்.. மூத்தவன் அகிலன் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறான். இளையவள் பிருந்தா பள்ளியில் பதினொன்றாவது படித்துக் கொண்டிருக்கிறாள்..
தென்றலையும் வான்மதியும் கண்டதும் பிருந்தா வேகமாக உள்ளிருந்து ஓடி வந்தாள்.
“ஹேய் வாங்கடி.. எவ்ளோ நேரம் வெயிட் பண்றது? தென்றல் முன்ன விட சூப்பரா இருக்கடி.. என்ன கிரீம் போடுற? ஹேய் வானு நீ என்னடி முன்னாடி விட கருத்து போயிருக்க?” எப்பொழுதுமே பிருந்தா அக்கா தங்கை இருவரிடமும் சற்று நெருக்கமாகவே இருப்பாள்.
வீட்டில் இருந்த உறவுகள் யாவரும் தென்றல் மற்றும் வான்மதியிடம் நலம் விசாரித்தார்கள். புதிதாக அவர்களை பார்ப்பவர்களுக்கு பெருமையாக அவர்களை தன்னுடைய அண்ணன் பெண்கள் என்று அறிமுகப்படுத்தி வைத்தார் மாதவி.
“பெரியவ தென்றல் இருக்காளே படிப்புல அவள அடிச்சுக்கவே முடியாது. எப்பவுமே கிளாஸ் டாப்பர் அவ.. நீங்க வேணும்னா பாருங்க 10th-ல ஸ்டேட் லெவல் வருவா..” அத்தை பெருமையாக உறவுகளிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.
“அப்படியா.. நான் கூட பொண்ணு அழகா இருக்கு அறிவா இருக்காதுன்னு நெனச்சேன்..” பிருந்தாவின் சித்தி முறை உறவு ஒன்று வேண்டுமென்றே தென்றலை மட்டம் தட்டியது..
மாதவிக்கு சுருசுருவென்று ஏறியது.. ” எங்க தென்றல் அழகாக இருப்பா.. அது விட அறிவாவும் இருப்பா.. உங்க நினைப்பெல்லாம் என் தென்றல் கிட்ட ஆகாது.. ” அத்தை தனக்கு வக்காலத்து வாங்குவது தென்றலுக்கு சந்தோஷமாக இருந்தது.
“சரி மாதவி சின்னவளும் அக்கா மாதிரி நல்ல படிப்பாளா” பேச்சை மாற்றுவதற்காக அதே சித்தி வான்மதியை பற்றி விசாரித்தார்.
” அவ மட்டும் என்ன குறைஞ்சவளா? அக்கா படிப்புல கெட்டிக்காரினா சின்னவ ஸ்போர்ட்ஸ்ல கெட்டிக்காரி.. பேட்மின்டன் சாம்பியன் அவ” வான்மதி அசடு வழிந்தாள்.. மாமா ஹரிதாசன் வந்தவர்களை வரவேற்று விட்டு தன் வேலையை பார்க்க சென்றார்.
பிருந்தாவின் அறையிலேயே தென்றல் வான்மதி இருவரும் தங்கி கொண்டார்கள். ஏறக்குறைய அனைவருக்கும் ஒரு வயது வித்தியாசம் என்பதால் அரட்டைக்கு அங்கே பஞ்சமில்லை. தென்றலும் வான்மதியும் பயந்த அளவு இல்லாமல் அத்தையின் வீடு அவர்களுக்கு பிடித்தே போனது.
மாமா மகள் தென்றலை ஓரக்கண்ணால் ரசிப்பது அகிலனின் இளமைக்கு தீனி போட்டது. ஒரு மூலையில் அவள் இன்னும் பள்ளி படிப்பை முடிக்காத சிறுமி என்று நினைப்பு ஒட்டிக் கொண்டிருந்தாலும் சிறுவயதில் இருந்து தென்றலையும் அவனையும் சேர்த்து பெரியவர்கள் போட்ட முடிச்சு சற்று உரிமையாகவே தென்றலின் மீது பார்வையை செலுத்த கூறியது.
அவனுடைய பார்வையை தென்றலும் உணர்ந்தே இருந்தாள். அத்துமீறாத அப்பார்வை அவளை எந்த விதத்திலும் சலனப் படுத்தவில்லை.. சில சமயங்களில் வயதிற்கே உரிய குறுகுறுப்பும் தன்னை ஒருவனின் பார்வை விடாமல் துரத்தும் பரிதவிப்பும் அகிலனின் பார்வைக்கு மறுப்பார்வை பார்க்கச் சொல்லும்.
கல்மிஷம் இல்லாத பார்வையை அவன் பக்கம் பரிதாபப்பட்டு வீசுபவள், அதன் பிறகு அகிலன் என்ற ஒரு ஜீவன் அங்கே இருக்கிறது என்பதை கண்டு கொள்ள மாட்டாள்.
பிருந்தாவோடு அவளுக்கும் வான்மதிக்கும் நேரம் இறக்கை கட்டிக் கொண்டு பறந்தது. சென்னை அவர்களுக்கு புதிதல்ல..
முன்பு மாதவியின் குடும்பம் அமஞ்சிக்கரையில் ஒரு வாடகை வீட்டில் குடி இருந்தார்கள்.. இப்பொழுது அண்ணா நகரில் சொந்தமாக இடம் வாங்கி சற்று பிரம்மாண்டமாக வீடு கட்டி குடிப்புக உள்ளார்கள்..
தங்கை வீடு கட்டுவதற்கு பரசுராம் அவர்களின் பூர்வீகமாக ஊரில் இருந்த ஒரு ஏக்கர் நிலத்தை மாதவியின் கட்டாயத்தின் பெயரில் விற்று அதில் வந்த இருபது லட்சத்தில் பத்து லட்சத்தை மாதவியிடம் கொடுத்து விட்டார்..
அவரிடமிருந்து பத்து லட்சத்தையும் வாங்குவதற்கு மாதவி போராடினார்.
” அண்ணா இப்ப எதுக்கு உனக்கு காசு? எனக்கு தான் வீடு கட்டற செலவு இருக்கு? மொத்தமா எனக்கு கொடுத்துடு.. நான் கொஞ்சம் கொஞ்சமா உனக்கு திருப்பி கொடுத்தர்றேன். பசங்க கல்யாணத்துக்கு தானே சேர்த்து வைக்கிற. அதுக்கு இன்னும் வருஷம் கிடக்கு.. ” தங்கை என்றால் கோலெடுத்த குரங்காய் ஆடும் பரசுராம் என்ன நினைத்தாரோ மாதவியின் வற்புறுத்தலுக்கு இணங்கவில்லை.
” வேணாம் மாதவி உன் பங்க நீ வாங்கிக்கோ அதுதான் சரி.. எனக்கு தெரிஞ்ச ஒருத்தரு பத்து லட்சம் வட்டி கேட்டு இருக்காரு. அவருக்கு மாத்தி விட்டா மாசா மாசம் வட்டியும் ஆச்சு. அசலும் கைக்கு வந்து சேரும்..” அண்ணன் வார்த்தையை மீறி எதுவும் செய்ய இயலாத நிலையில் மாதவி தன்னுடைய பங்கை வாங்கிக் கொண்டு வந்து விட்டார்.
கிரகப்பிரவேசம் முடிந்து அண்ணன் பிள்ளைகள் இருவரும் மீண்டும் கோயம்புத்தூர் திரும்பி விடுவார்கள் என்பதால்
” ஏங்க பிள்ளைங்க ரெண்டும் அண்ணா அண்ணி இல்லாம இப்பதான் மொத தடவை நம்ம வீட்டுக்கு வந்துருக்குங்க. வீட்டுக்குள்ளேயே இருந்தா அவங்களுக்கு போர் அடிக்கும். இன்னிக்கு ஆபீஸ் முடிஞ்சு கொஞ்சம் சீக்கிரமா வந்தீங்கன்னா அப்படியே பீச்சு பார்க்கணும்னு கூட்டிட்டு போயிட்டு வரலாம்.. ” கணவனிடம் நைசாக கேட்டார் மாதவி.
“ப்ச் என்னடி கிரகப்பிரவேசம் வேற நெருங்கிடுச்சு எவ்ளோ வேலை இருக்கு. இந்த நேரத்துல உங்க எல்லாரையும் கூட்டிட்டு ஊர் சுத்த முடியுமா.. பிள்ளைகளை கூட்டிட்டு போனா பெருசுங்க எல்லாம் சும்மா இருக்கும்னு நினைக்கிறாயா.. ஆளாளுக்கு நானும் வரேன் நீயும் வரேன்னு வந்து செலவு மேல செலவு வைப்பாங்க.. நீ என்ன பண்ணு யாருக்கும் சொல்லாம அகிலனையும் பிருந்தாவையும் அவங்க ரெண்டு பேரையும் கூட்டிட்டு வெளியே போயிட்டு வர சொல்லு..” என்றவர் பிள்ளைகள் செலவுக்கு மாதவிடம் பணம் கொடுத்துவிட்டு சென்றார்..
அகிலனிடம் விஷயத்தை கூறியவர் பெண்கள் மூவரையும் கிளம்ப சொன்னார்.
பிருந்தா தென்றல் வான்மதி மூவரும் வெளியே கிளம்ப அதனைப் பார்த்துக் கொண்டிருந்த மாதவியின் மாமியார் செங்கமலம் ” ஏய் பிருந்தா எங்கடி கிளம்புறீங்க மூணு பேரும்.. ஸ்கூல் லீவ் விட்டா போதுமே வீட்டுல இருக்க முடியாதே உங்களுக்கு? சொந்தக்காரங்க எல்லாம் வந்து இருக்காங்க இந்த நேரத்துல வெளியே போனா நல்லாவா இருக்கும்? என்ன பிள்ளை வளக்குறான்னு கேட்க மாட்டாங்க?” பாட்டியின் வசவை வாங்கிய பிருந்தா நேராக தாயிடம் சென்று சொல்லிவிட்டாள்.
மாதவி ஒரு வழியாக தன்னுடைய மாமியாரை சமாளித்து அகிலன் துணையோடு பெண்கள் மூவரையும் அனுப்பி வைத்தார். அனைவருக்கும் சினிமாவுக்கு சென்று விட்டு பீச்சிற்கு சென்றார்கள்..
வான்மதியும் பிருந்தாவும் அலைகடலில் விளையாட கடலில் இறங்காமல் அவர்களைப் பார்த்தபடி கரையில் அமர்ந்திருந்தாள் தென்றல்.. அவளுக்கு சோளம் வாங்கி வந்து கொடுத்தான் அகிலன்..
” தென்றல் நீ இங்கேயே உட்கார்ந்திரு என் ஃப்ரண்டு வந்துருக்கான்.. நான் பாத்துட்டு வந்துடறேன்.. ” தென்றலின் பதிலை எதிர்பார்க்காமல் அங்கிருந்து நகர அவன் வாங்கித் தந்திருந்த சோளத்தை ரசித்து உண்டு கொண்டிருந்தாள் தென்றல்..
வலது கையில் சோளமும் இடது கையால் மணலில் எதையோ கிறுக்கி கொண்டிருந்தாள். கடல் காற்று அவளின் போனி டைலை தழுவிச் சென்றது..
“தென்றல்” அகிலனின் குரல் கேட்டு திரும்பி பார்க்க அப்பொழுதுதான் முதல்முறையாக சசி மித்ரனை சந்தித்தாள் இளந்தென்றல்..
அகிலனின் பக்கத்தில் அவனை விட உயரமாக நின்று கொண்டிருந்த சசி மித்ரன் முதல் பார்வையிலேயே தென்றலுக்கு அச்சத்தை பரிசாக கொடுத்திருந்தான். அவனின் உயரத்தை காணும் போது மலைப்பாக இருந்தது அவளுக்கு. தன்னை அறியாமல் எழுந்து நின்றாள்..
” நான் சொன்னேன்ல என் ஃப்ரெண்ட் இவன் தான் சசி.. டேய் என் மாமா பொண்ணு டா. பேரு தென்றல் கோயம்புத்தூர்ல இருந்து வந்திருக்கா..” சசி மித்ரன் அகிலனோடு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தான்.
தன் முன்னால் செய்வதறியாத திகைத்து நின்ற சிறுமியை கண்டதும் அவன் இதழ்களில் புன்னகை மிளிர்ந்தது. தென்றலின் போனி டைல் காற்றில் அலைமோத கற்றை கூந்தல் களைந்து என்னை தொட்டுப்பார் என்று அவனுக்கு சவால் விட்டது..
பிறை நெற்றியும் கூறிய மூக்கும் சிவந்த இதழ்களும் அலைபாயும் அவளது விழிகளும் இவ்வளவு ஏன் அவள் கண்ணுக்கே தெரியாத அளவு வைத்திருந்த கருப்பு பொட்டு கூட அவனது கவனத்தை தன் பக்கம் ஈர்த்தது.
முதல் பார்வையிலேயே சசி மித்ரன் என்ற இளைஞனின் மனதில் தன்னை அறியாமல் தன்னுடைய உருவத்தை ஆழ பதித்து விட்டாள் இளந்தென்றால்..
“ஹெலோ” அறிமுகத்தின் முதல் படியை தானே எடுத்து வைக்க
என்ன பதில் கூறுவதென்று புரியாத தென்றல் இதழ்கள் விரியாமல் மெல்ல புன்னகைத்து விட்டு வேகமாக அங்கிருந்து ஓடினாள்.
பிருந்தாவும் வான்மதியும் இன்னும் கரையில் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அவர்களோடு இவளும் இணைந்து கொண்டாள். அவர்கள் விளையாட இவள் அருகே நின்று சிரித்துக் கொண்டிருந்தாள்.
” என்னடா ஒரு ஹாய் கூட மேனஸ்க்கு சொல்ல மாட்டாளா.. ” சசியின் குரல் அவனை மீறி ஏமாற்றத்தோடு ஒலித்தது.
ஆனால் சசிக்கு அவன் கூறிய வார்த்தை மட்டுமே செவிக்குள் எதிரொலித்தது.. அவளின் பெயரை ஆர்வமாய் கேட்டு தெரிந்து கொண்டான். அது என்னவோ சசி அங்கிருக்கும் வரை பெண்கள் மூவருமே அந்த பக்கம் வரவில்லை. சிறிது நேரம் அகிலனோடு பேசிவிட்டு கிளம்பிய சசியின் பார்வை காற்றில் கலைந்து சித்திரம் தீட்டிக் கொண்டிருந்த தென்றலின் தன்னை அறியாமல் பார்த்துவிட்டு நகர்ந்தது.
ஒரு வாரம் இறக்கை கட்டிக் கொண்டு செல்ல கிரகப்பிரவேசம் வந்தது. முதல் நாளே பரசுராமும் வாசுகியும் வந்து விட்டார்கள்.. தூரத்து உறவினர்கள் அனைவரும் ஹரிதாஸின் பழைய வீட்டிற்கு வந்துவிட கிரகப்பிரவேசத்தன்று அனைவரும் கிளம்பி புது வீட்டிற்கு சென்றார்கள்.
தங்கை குடும்பம் முன்னேற்றத்தை நெஞ்சார்ந்த சந்தோஷத்தோடு பார்த்துக் கொண்டிருந்தார் பரசுராம்.. மூன்று நாட்களுக்கு முன்பு கடற்கரையில் பார்த்த சசியின் ஞாபகம் எள்ளளவும் தென்றலை பாதிக்கவில்லை. அவளைப் பொறுத்தவரை அவன் முகம் அறியாத அந்நியன்..
ஆனால் மீண்டும் அந்த அந்நியனை சந்திக்க வேண்டிய சூழ்நிலை அவளுக்கு ஏற்பட்டது.. கிரகப்பிரவேசத்திற்கு அகிலனின் நண்பர்கள் வந்திருக்க சசியும் வந்திருந்தான்.. வந்தவர்களுக்கு காபி கொடுக்கும் பொறுப்பு பெண்களுக்கு கொடுக்கப்பட்டது.
ஒரு தட்டில் நிறைத்து ஒவ்வொருவராக கொடுத்துக் கொண்டிருந்த தென்றல் இறுதியாக சசியின் பக்கம் வந்தாள்.. அன்று கடற்கரையில் ஸ்கிர்ட் டி-ஷர்டில் பார்த்த பெண் இன்று பாவாடை தாவணியில் இரட்டை ஜடை போட்டு கொஞ்சும் குமரியாக தன் முன்னால் நின்று கொண்டிருக்க உண்மையாகவே சசி திணறிப் போனான்.
அவனைக் கண்ட ஞாபகம் தென்றலுக்கு இருந்தாலும் மேற்கொண்டு எந்தவித சஞ்சலமும் அவள் மனதில் இல்லாததால் இயல்பாக அவன் முன்பு காபி தட்டை நீட்டினாள்.
” ஹாய் என்ன ஞாபகம் இருக்கா.. அன்னைக்கு பார்த்தீங்களே.. ஒரு ஹாய் கூட சொல்லாம போயிட்டீங்க..” சசியின் பக்கத்திலிருந்த மற்ற நண்பர்கள் ஆர்வமாக அவன் தென்றலிடம் பேசுவதை கவனித்தார்கள்..
சசியின் ஆர்வம் கண்களில் தென்பட தென்றலுக்கு தர்ம சங்கடமாகியது..
“காபி வேணுமா வேணாமா” தென்றலின் வார்த்தைகள் சற்று அழுத்தமாக வெளிவர நண்பர்கள் மத்தியில் சசிக்கு அவமானமாகியது. காபி வேண்டாம் என்று தலையாட்டினான். அத்தோடு அங்கிருந்து நகர்ந்து விட்டாள் தென்றல்.
நண்பர்கள் அனைவரும் “மச்சான் யாருடா அந்த பொண்ணு.. நல்லா பல்ப் வாங்குனியா? ஆனா சூப்பர் பொண்ணு மச்சான்” ஆளாளுக்கு ஒவ்வொன்று பேச சசியின் மனதில் மூன்று நாட்களுக்கு முன்னாடி பார்த்த தன்னை எப்படி தென்றல் மறக்கலாம் என்கிற கேள்வியே மீண்டும் மீண்டும் ஓடிக் கொண்டிருந்தது.
நல்லபடியாக கிரகப்பிரவேசம் முடிந்து விட பந்தி பரிமாறினார்கள். அகிலனின் நண்பர்கள் அனைவரும் நண்பன் வீட்டு விழாவில் மும்முறமாக ஆளுக்கு ஒரு வேலை செய்ய சாம்பார் ஊற்றும் தூக்கினை கையில் எடுத்தான் சசி மித்ரன்.
இந்த பக்கம் வான்மதி அந்தப் பக்கம் வாசுகி என்று நடுவில் அமர்ந்திருந்தாள் இளந்தென்றல். ஒவ்வொருவராக சாம்பார் ஊற்றி வர தென்றலைப் பார்த்ததும் அவள் செய்த காரியம் தான் நினைவுக்கு வந்தது. குறைந்தபட்சம் ஒரு சிரிப்பாவது சிரித்திருக்கலாம் நண்பர்களின் முன்னிலையில் இந்த அவமானம் ஏற்பட்டு இருக்காது..
தேவையே இல்லாமல் தென்றல் மீது ஆத்திரம் பொத்துக் கொண்டு வந்தது சசிக்கு.. இருந்தாலும் சபை நாகரிகம் கருதி முகத்தில் எந்தவித உணர்வையும் காட்டாமல் வான்மதிக்கு சாம்பார் ஊற்றியவன் இப்பொழுது தென்றல் இலைக்கு வந்தான்..
ஒரு கரண்டி ஊற்றியவன் வாசுகி பக்கம் நகர “அண்ணா” என்கிற குரல் அவன் நெஞ்சில் இடியே இறக்கியது. ஒரு நிமிடத்தில் வியர்த்து இதயத்துடிப்பு பன்மடங்காக உயர்ந்தது.. சாம்பார் கரண்டியை பிடித்திருந்த கரம் நடுங்க பார்வையை தென்றல் பக்கம் வீசினான் சசி.
மீண்டும் அந்த குரல் “அண்ணா”என.. தென்றலின் இதழ்கள் மௌனமாக இருக்க அவளின் பக்கத்தில் இருந்த வான்மதி தான் அழைத்துக் கொண்டிருந்தாள். ஒரு நொடியில் உடல் தளர்ந்து பெருமூச்சு வெளிப்பட்டது அவனிடமிருந்து.
” அண்ணா இன்னொரு கரண்டி சாம்பார்”.. வேகமாக அவளுக்கு சாம்பார் ஊற்ற போக
” எனக்கு இல்ல என் அக்காவுக்கு.. அவ நெறைய சாம்பார் ஊத்தி தான் சாப்பிடுவா”..அக்காவின் இலையை சுட்டிக்காட்டிய வான்மதி தன் சாப்பாட்டை சாப்பிட ஆரம்பித்து விட்டாள்..
இன்னொரு கரண்டி சாம்பார் எடுத்து தென்றல் இலையில் ஊற்ற போனவன் அப்பொழுதுதான் அவளின் குறும்பு புன்னகையை கண்டு கொண்டான். இதலோரங்கள் துடிக்க கள்ள விழி பார்வையால் ஒரு வினாடி அவனை தீண்டியவள் வேகமாக தலை குனிந்து கொண்டாள். அதுவரை மனதிற்குள் அவளை திட்டிக் கொண்டிருந்தவன் இறக்கை இல்லாமல் வானத்தில் பறக்க ஆரம்பித்தான்..
அகிலனின் வீட்டிலிருந்தவரை யாரும் அறியாத வண்ணம் சசியின் பார்வை தென்றலை தீண்டிக்கொண்டிருந்தது. முதலில் அதனை விளையாட்டுத்தனமாக எடுத்துக் கொண்ட தென்றல் பிறகு வீரியமாக சசியின் பார்வை தன் மீது படிவதை புரிந்து கொண்டாள். இதனால் ஏற்படும் பின் விளைவுகளைப் பற்றி அவள் நன்றாக அறிந்திருந்ததால் முடிந்த அளவிற்கு சசியின் கண்களில் படாத வண்ணம் தன்னை பார்த்துக் கொண்டாள்.
விழா முடிந்து அனைவரும் வீட்டிற்கு திரும்பி விட்டார்கள். இறுதியாக ஒரு முறை தென்றலின் முகத்தை கண்டுவிட சசியின் மனமே ஏங்கியது. அவனும் பலமுறை கண்களால் அவளை தேடி விட்டான். வாய் திறந்து அகிலனிடம் கேட்க கூட அவனுக்கு வாய் வரவில்லை. என்னவென்று கேட்பது? நண்பனின் உறவினள்.. அவன் வீட்டு விசேஷத்திற்கு வந்திருக்கிறாள். விசேஷம் முடிந்த கையோடு இன்றோ நாளையோ கிளம்ப போகிறாள்.
காரணமே அறியாமல் அவளைக் காண மனம் அலை மோதுகிறது என்று எப்படி அவனால் கூற முடியும்? அவளை காணாத ஏமாற்றம் இதயம் முழுக்க சூழ்ந்திருக்க தன் வீடு வந்து சேர்ந்தான் சசி மித்ரன்.. தன்னைத் தேடி சசியின் கண்கள் அலைவதை ஜன்னல் வழியாக பார்த்துக் கொண்டிருந்த தென்றலுக்கு அபாய சங்கு ஊதியது மூளை.
ஆனால் மறுநாளே அவர்கள் கோயம்புத்தூர் திரும்பிவிட அடுத்த இரண்டு ஆண்டுகள் படிப்பு மட்டுமே தென்றலின் முழு நேர கவனத்தை ஈர்த்துக் கொண்டது. சசியை பற்றிய நினைவுகளும் அப்படி ஒருவனை சந்தித்த சுவடுகள் கூட அவள் மூலையில் இருந்து துடைத்தெடுக்கப்பட்டது..
ஆனால் அந்த விதி இரண்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் சசியை சந்திக்க வைத்தது.. முதல் முறை சுலபமாய் அவனை தாண்டி செல்ல முயன்றவளுக்கு மறுமுறை சுனாமியாய் மாறி அவன் தன்னை தனக்குள் இழுத்துக் கொள்வான் என்று அப்பொழுது தெரியவில்லை.