45

அமைதியின் உருவமாக அமர்ந்திருந்த சசி மித்ரனை பார்க்கும்போது சோமசுந்தரத்துக்கு அடிவயிறு கலங்கியது. மனைவியின் அட்டகாசத்தை அடக்காமல்  அவரை ஏற்றிவிட்டு  சொத்து கைவிட்டுப் போகாமல் காப்பதிலேயே சோமசுந்தரத்தின் நேரங்கள் பறந்து போயின.

இன்று அவர் ஆசைப்பட்ட சொத்து கையிலிருக்கிறது. ஆனால் ஒரு வாய் சோறு கூட நிம்மதியாக சாப்பிட முடியாத அவல நிலை.. சசி அவருக்கு தொழிலில் உதவியாக இல்லாமல் இருந்தாலும், தகப்பனுக்கு தோள் கொடுத்து  தொழிலை தாங்கிப் பிடித்தவன் தேவா. தனக்குப் பிறகு  தேவா விட்டு விடமாட்டான் என்கிற அசைக்க முடியாத நம்பிக்கை சோமசுந்தரத்திற்கு.

இன்று அனைத்துமே தகர்ந்து விட்டது. என்று சசி தன்னுடைய சொத்துக்கள் அனைத்தையும் தந்தை பெயரில் மாற்றி கொடுத்தானோ, அப்பொழுது அனைத்திற்கும் கணக்கு வைத்து விட்டாள் தர்ஷினி.. கணவனை கிளப்பி விட்டு  அவர்கள் பங்கு சொத்தை அபகரித்து தனியாக சென்று விட்டார்கள்.

வாழ வந்த மருமகளை  ஆட்டிப்படைத்த விசாலாட்சி  மனநிலை பாதிக்கப்பட்டு, பார்த்துக்கொள்ள வந்த தாதியை கூட அடித்த விரட்டியதால் யாருமே அவரைப் பார்க்க ஒத்துக் கொள்ளவில்லை. இறுதியில் மருத்துவர் மனநல காப்பகத்தில் விசாலாட்சியை சேர்ப்பது மேல் என்று கூறிவிட்டார்.

தென்றல் அந்த வீட்டிலிருந்தவரை  வீடு வீடாக இருந்தது. என்று அவள் அங்கிருந்து கிளம்பினாளோ, அந்த பெரிய பங்களா பேய் பங்களா போல காட்சி அளித்தது.

சோமசுந்தரம் மனைவியை காப்பகத்தில் விட மனமில்லாமல், அவரே வீட்டில் வைத்து பார்த்து தொழிலில் கவனம் செலுத்த முடியாமல் அவர் கண் முன்னாலேயே அவர் கட்டிய கோட்டை சரிந்து விழுந்து கொண்டிருந்தது.

மனம் விட்டு பேசுவதற்கு, நிம்மதியாக சாப்பிடுவதற்கு, உறங்குவதற்கு கூட அவர் இதயம் ஏங்கியது..

சசியிடம் அனைத்து உண்மைகளையும் போட்டு உடைத்தார். அவனிடம் பதில் இல்லை.

“சசி.. நான் செஞ்சது தப்புதான். ஆனா உன் நல்லதுக்கு”

” போதும்பா.. உங்க மேல கோபப்படுறதுக்கு எனக்கு யோகியத கிடையாது.. நீங்க பண்ணதுக்கு கடவுள் உங்களுக்கு தண்டனை கொடுத்துட்டாரு.. நான் பண்ணதுக்கு இப்ப அனுபவிக்கிறேன்.. வேற எதையும் என்னால சொல்ல முடியல. அம்மாவ பாத்துக்கோங்க.. ” எழுந்து வாசல் வரை சென்றவன் திரும்பி சோமசுந்தரத்தை பார்த்து

” சாப்பிடுங்கப்பா.. அம்மா எங்களுக்கு எப்படியோ.. ஆனா உங்களுக்கு நல்ல பொண்டாட்டியா இருந்தாங்க. நல்ல பொண்டாட்டி கிடைக்கிறது ஒரு வரம்.. தவற விட்டுட்டா  என்ன மாதிரி தான் நீங்களும்  தெருவுக்கு வந்துடுவீங்க.. ” மனம் முழுவதும் கசந்து வழிய  வீட்டிற்கு வந்து விட்டான்..

இதோடு நூறாவது முறையாக தென்றலுக்கு முயன்றான்.. முழு ரிங்கும் அடித்து ஓய்ந்தும் அவள் அழைப்பை எடுக்கவில்லை.. விரல்கள் தேயும் அளவிற்கு  குறுஞ்செய்திகள் அனுப்பி விட்டான்.

எதையும் அவள் திறந்து படிக்கவில்லை.. இதற்கு மேல் விட்டால்  நிலைமை மோசமாகிவிடும். விடக்கூடாது. விட்டவரை போதும். ஆன்லைனில் டிக்கெட் புக் செய்தான்.. இடையில் மூன்று மணி நேரங்கள் இருந்தது. பைத்தியம் ஒன்றுதான் பிடிக்காத குறை.

வீட்டிலிருந்தால் மூச்சு முட்டியது. வெளியே செல்வதற்கும் பிடிக்கவில்லை. அவள் கத்தி ஆர்ப்பாட்டம் செய்து சண்டையிட்டிருந்தால் கூட  இத்தனை வழித்திருக்காதோ என்னவோ.. பாவி மௌனத்தால் அவனை கொன்று விட்டாள்.

இந்த மூன்று மணி நேரத்தில் சசி  நிறைய யோசித்தான்.. இனி யோசிக்க எதுவுமே இல்லை. விமான நிலையம் வந்து விட்டான். சில மணித்துளிகளில் அவனுக்கான விமானத்தில் ஏறிய அமர்ந்து  கோவை நோக்கி செல்ல ஆரம்பித்தான்.

தென்றல் பிள்ளைகளுக்கான டீசியை  வாங்கி வர  அவளது பெற்றோர்கள் இருவருமே கேள்விகளாய் கேட்டு குடைந்தார்கள்.

” அப்பாவ பார்த்தியா அம்மா.. அவர் என்ன சொன்னாரு.. எங்கள விட்டுட்டு இருக்க அவருக்கு ஓகேவா.. எங்கள மிஸ் பண்ணுவாரா.. அந்த பொம்பள கூட போயிட்டாரா” பெற்றவர்களை விட  பெரிய மகளே சமாளிப்பது தென்றலுக்கு பெரும்பாடாய் இருந்தது..கொடி ஒரு பக்கம் ஆர்ப்பாட்டம் செய்தாள்..

யாரின் கேள்விகளுக்கும் தென்றல் பதில் சொல்லவில்லை.. வழக்கம்போல மௌனத்தை தன் கையில் ஆயுதமாய் எடுத்தவள்  அறைக்குள் சென்று முடங்கினாள்.

என்னென்னவோ எண்ணங்கள்.. ஆனால் தென்றல் உறங்கவில்லை.. விடியலில் அவள் முகம் கழுவிக் கொண்டிருக்க

“தென்றல்.. சீக்கிரம் வாடி..” வாசுகியின் சத்தம் கேட்டது..

வாசுகி அதிகாலையில் எழுந்து  வாசல் தெளிக்க சென்றவர், கேட் அருகே அரவம் தெரிய நிமிர்ந்து பார்த்தார். அங்கே தோளில் ஒரு பேக்கோடு, காட்சியளித்தான் சசி மித்ரன்.

அவனைக் கண்டதும் அதும் அந்த நேரத்தில் வாசகிக்கு தூக்கி போட்டது.

“வாங்க.. வாங்க மாப்பிள” அவசர அவசரமாக அவனை வரவேற்றார். என்னதான் மகளின் வாழ்வைப் பற்றிய கவலைகளும், சசி மீது அடக்க முடியாத ஆத்திரத்தில் இருந்தாலும் இந்த நேரத்தில் அவன் வீடு தேடி வந்திருக்க அதையெல்லாம் காட்ட முடியவில்லை..

தன்னை குறுகுறுவென்று பார்த்துக் கொண்டிருக்கும் மாமியாரிடம்

” ஸாரியத்த இந்த நேரத்துல வந்து உங்களை டிஸ்டர்ப் பண்ணிட்டேன்..”

” அதனால என்ன இதும் உங்க வீடு தான்.. நீங்க வருவீங்கன்னு தென்றல் சொல்லவே இல்லையே.. “

” நேத்து என்ன நடந்துச்சுன்னு அவ சொன்னாளா”

“ம்க்கும் அவ என்னைக்கு வாய தொறந்து பேசிருக்கா.. வந்ததுல இருந்து ஊமைக்கோட்டான் மாதிரி ரூமுக்குள்ள கிடக்கா..” வாசுகி நொடித்தார்.

அதற்குள் பேச்சு சத்தம் கேட்டு, பரசுராம் வெளியே வந்தார்.

“வாசு தனியா என்ன பேசிக்கிட்டுருக்க..” அவரும் அந்த நேரத்தில் சசியை எதிர்பார்க்கவில்லை.

அவனைக் கண்டதும் திகைத்தார்.. உள்ளே கோபம் கொப்பளித்தாலும் வெளியே அவனை வரவேற்றார்.

சசி சங்கடமாக ஹாலில் நின்றான்.

” என்ன மாப்ள இந்த நேரத்துல.. எதையாச்சும் கொடுத்துட்டு போக வந்தீங்களா.. ” அவரது உள்நோக்கம் அவனுக்கு புரிந்தது.

” எனக்கு சொந்தமானதை எடுத்துட்டு போக வந்தேன்.. “

” ஏற்கனவே உங்கள கல்யாணம் பண்ணி என் பொண்ண இந்த கதிக்கு ஆளாக்கிட்டீங்க.. இதுல குழந்தைகளை உங்க கூட கூட்டிட்டு போயி அவள உயிரோடு கொன்னுராதீங்க.. ” பிள்ளைகளுக்காக அவன் வந்தான் என்று எண்ணினார் பரசுராம். ஒரு மாத காலம் மனைவியை பிரிந்து இருந்தவனுக்கு திடீரென்று என்ன ஞானோதயம்?

” நான் மட்டும் உயிரோடவா இருக்கேன். ” வலி நிறைந்த குரலில் சசி சொல்ல பெரியவர்கள் இருவரும் அவனை கூர்ந்து நோக்கினார்கள். அவனுடைய வெளித்தோற்றமும் கசங்கிய குரலும்  சசி நிம்மதியாக இல்லை என்பதை எடுத்துக் கூறியது.

அவர்களுக்குள் ஒரு இதம் பரவியது. மகளைப் பிரிந்து மருமகனும் சந்தோஷத்தில் துள்ளி குதிக்கவில்லை.

” உட்காருங்க”

” இல்ல மாமா உங்களுக்கு என் மேல நிறைய கோவமா இருக்கும். ஆரம்பத்துல இருந்தே நம்ம உறவு இப்படி தானே.. அதுக்கெல்லாம் ஒரு முடிவு கட்ட தான் நான் வந்து இருக்கேன்.. இதுக்கு மேலயும் என்னால பொறுமையா இருக்க முடியாது.. நான் போய் தென்றலை பார்க்கிறேன்.. ” அவன் பேசி முடிப்பதற்குள் வாசுகி அவளை அழைத்து விட்டார்.

“தூங்குறா போல”

” பரவால்ல அத்தை நானே போய் அவளை பாக்குறேன் எந்த ரூம்ல இருக்கா.. ” வாசுகி சொல்ல  பேக்கை சோபாவில் வீசியவன் வேகமாக மாடியேறி சென்றான்.

” என்னங்க.. அவளுக்கு பின்னால ஃபிலைட்டை பிடிச்சு இவன் வந்துருக்கணும். இவ்ளோ பாசம் இருக்கல அப்புறம் எதுக்கு தேவையில்லாத வேலை..”

” இந்த விஷயத்துல நீயும் நானும் பேசக்கூடாது வாசு. அவங்க ரெண்டு பேரும் பேசணும். எனக்கு என்னமோ இனிமே எல்லாமே சரியாயிடும்னு தோணுது. நீ போயி காலை சாப்பாடு ரெடி பண்ணு.. ” வாசுகி நேராக பூஜை அறைக்குள் நுழைந்தார்.

விளக்கை ஏற்றி வைத்து ” என் பொண்ண வாழ்க்கையில படக்கூடாத கஷ்டம் எல்லாம் பட்டுட்டா.. அவ வாழ்க்கையில இனிமே நாங்க சந்தோஷத்த மட்டும் தான் பாக்கணும்.. தயவு செஞ்சு  இந்த வேண்டுதல நிறைவேத்தி கொடு” தெய்வத்திடம் மனம் உருகி பிரார்த்தனை செய்தார்.

அம்மாவின் குரலை கேட்டும்  தென்றல் கீழிறங்கி செல்லவில்லை. அவளின் அறை கதவு தட்டப்பட  திறந்தவளுக்கு  கணவனைக் கண்டதும் எந்தவித அதிர்ச்சியும் ஏற்படவில்லை..

அவள் அதிர்ந்து விழிப்பாள்!
பேச வார்த்தைகள் தேடுவாள்!
கண்கள் சதிராடும்!
கால்கள் தடுமாறும்!
மேனி நடுங்கும்!
இதயம் படுவேகமாய் துடிக்கும்!

இப்படி தனக்குள்  எண்ணி வந்தவனுக்கு அவள் மார்புக்கு குறுக்கே கைகளை கட்டிக் கொண்டு நிற்க  ஆச்சரியத்தில் அவனது விழிகள் விரிந்தன.

“செல்லம்.. ” அவள் அமைதியாக வழிவிட்டு நின்றாள். அவன் அறைக்குள் சென்று கதவை சாத்தினான்.

கதவு மேல் சாய்ந்து நின்றாள் தென்றல். அவனை எதிர்பார்த்து அவள் காத்திருக்கிறாள். அப்படி என்றால் அவன் வருவான் என்று அவளுக்கு தெரியும்.. எப்படி? இத்தனை தூரம் தன் மனதை அவள் படித்திருக்கிறாளா? அடி முதல் நுனி வரை தன்னை பற்றி  இத்தனை சரியாக கணிக்க முடியுமா? அப்படி என்றால் அந்த ஒரு மாதம் எதற்காக அவள் தள்ளி இருந்தாள்? பைத்தியம் பிடித்தது அவனுக்கு.

அவளை நெருங்கி கைகளை இறுக்கமாக பிடித்துக் கொண்டான்.

” நீ நிக்கிறது பார்த்தாலே தெரியுது நான் வருவேனு உனக்கு தெரிஞ்சிருக்கு.. இதெல்லாம் நடக்கும்னு உனக்கு முன்னாடியே தெரியும்.. ஆனா எனக்கு சத்தியமா தெரியல.. நீ இல்லாம போனா  நான் இல்லன்ற அந்த நிலைமை எனக்கு புரியல. என்னை நீ புரிஞ்சு வெச்சுக்கற அளவு ஒன்ன புரிஞ்சுக்க நான் முயற்சி கூட பண்ணல..

மன்னிச்சிரு அப்படின்னு சொல்ல எனக்கு எந்த தகுதியும் கிடையாது. ஆனா என் மனசால நான் மன்னிப்பு கேட்கிறேன். ஸாரிடி.. அன்னைக்கு அப்படி பேசினது உன்னை அடிச்சது, எல்லாத்துக்கும்..

நீ இல்லனா நான் இல்லடி.. என்னால அதுக்கு மேல யோசிக்க கூட முடியல.. அன்னைக்கு ஏதோ லூசு மாதிரி நான் பேசிட்டேன்.. சத்தியமா உன் இடத்துல வேற ஒருத்தி வச்சு பார்க்க கூட எனக்கு முடியாது.. எல்லா தப்பும் என் மேல தான். தயவு செஞ்சு ஏதாச்சும் பேசு. ஊமையா
இருந்து என்ன கொன்னுராத.. என்னால முடியலடி” அவளை கட்டிக்கொண்டு அழுது கதறி விட்டான் சசி மித்ரன்.

தென்றல் முகத்தில் கீற்றான புன்னகை தோன்றியது. உள்ளத்தில் ஒரு குரல் ஓங்கி ஒலித்தது. அவள் தோற்கவில்லை. ஜெயித்து விட்டாள். ஜெயித்துக் கொண்டே இருக்கிறாள். காதலியாக மனைவியாக அம்மாவாக அனைத்திலும் அவள் ஜெயித்துக் கொண்டே இருக்கிறாள்.

கணவன் வருவான் என்று அவள் எதிர்பார்த்தால் உண்மைதான். ஆனால் இத்தனை சீக்கிரம் வருவான் என்று அவளே எதிர்பார்க்கவில்லை..

அவள் தோளில் சூடாக அவனின் கண்ணீர் துளிகள் விழுந்தன. அவனுடைய இதயத்தின் ஓசை அவளுக்கு புரிந்தது. கணவனின் உடல் நடுக்கத்தை அவள் உணர்ந்தாள்..

பேச வேண்டும் மனம் விட்டு அவனிடம் பேச வேண்டும்.

” கொஞ்சம் உங்க கிட்ட பேசணும் சசி” அவளுடைய குரலை கேட்டதும்

“பேசு.. இதுக்கு மேலயாவது மனசு விட்டு பேசு.. முன்னாடி எல்லாம் நீ பேசறத கேட்க எனக்கு நேரமில்லை.. இப்போ எல்லாத்தையும் தூக்கி போட்டு உனக்காக வந்து நிற்கிறேன்.. பேசுடி..ஆனா இங்க இருந்தே பேசு..” அவளை இறுக்கமாக தன் நெஞ்சோடு கட்டிக் கொண்டான்..

” மூச்சு விட முடியல எப்படி பேச முடியும்” வேறு வழியில்லாமல் அவளை விலக்கி கட்டிலில் அமர்ந்தான் அவள் கைகளை விடவில்லை. அவளும் அவன் பக்கத்தில் உட்கார்ந்தாள். இருவர் கண்களும் இணைந்தன. கலங்கிய அவன் கண்களும்  தீட்சண்யமான அவளின் பார்வையும்..

” தப்புனு சொல்றத விட இது ஒரு வித குற்றம்.. ஒரு மாசமா எவ்ளோ ஈகோவோட நான் இருந்தேன். நீ வந்துருவேன்னு ஒரு ஈகோ. எந்த தப்பும் பண்ணாத நீ மன்னிப்பு கேட்கணும்னு  முட்டாள்தனமா நினைச்சேன்.. எனக்குள்ளயும் ஒரு ஆம்பள ஈகோ இருந்திருக்கு பாரேன்..

ஆனா நீ  ஒரே வார்த்தையில எல்லாத்தையும் ஒடச்சிட்ட. ஒரு மாசமா பைத்தியமா நீ வருவனு எதிர்பார்த்தேனே  முட்டாப் பய உன்னை தேடி வந்திருக்கணும்.. கேடு எனக்கு” தலையில் அடித்துக் கொண்டான் சசி.

” பேசி முடிச்சாச்சா? இப்ப நான் பேசவா “

“ஸாரிடி.. எப்பவும் என்ன பத்தி நானே பேசி.. உன்ன பேச விட்டிருந்தா எவ்வளவோ பிரச்சனை வந்திருக்காது.. பேசுடி..” அவள் கரத்தை இறுக்கமாக பிடித்து தன் இதயத்தோடு இறுக்கிக் கொண்டான்.

இன்னுமே அவன் குற்றவுணர்வு போகவில்லை. மன்னித்து விட்டேன் என்கிற வார்த்தையை அவள் வாயிலிருந்து வரவில்லை. ஒரு வித பயத்தோடு அவளை பார்த்தான் சசி..