“கண்ணு.. உன்ற மனசுல என்னதான் நினைச்சுட்டு இருக்க.. ஸ்கூல் தொறக்கப் போறான்.. உன்னால தனியா அங்க பேர் போட முடியுமா. பொண்டாட்டி இருக்குனு தெரிஞ்சும் அவ நடுவுல பாய் போட்டு படுக்க துடியா துடிச்சிட்டுருக்கா. அந்த பிசாச அடிச்சு பத்திட்டு ஒன்ற புருஷனை கைக்குள்ள போட்டுக்க உனக்கு திராணிருக்கா..”
“வாசு”.. பரசுராம் கண்டித்தார்.
“அட சும்மா இருங்க. கம்முனு இரு கம்முனு இரு என்ற வாய அடக்கி என்ன ஆகப்போது.. நம்ம பொண்ணு வாழ்க்கை புயல் காத்துல அடிச்சிக்கிட்டு போகுது. கண்டும் காணாம இருக்குறதுக்கு என்னால முடியலைங்க.. ஒவ்வொரு நாளும் பொழுது வந்து போனா என்ன நடக்கும் ஏது நடக்கும்னு நினைச்சு நினைத்து எனக்கு பிபி ஏறி போச்சு.. சின்னது கேட்கிற கேள்விக்கு பதில் சொல்ல முடியாம இந்த வயசுல ஓடி ஒளியறது நல்லாவா இருக்கு..
நான் முடிவா சொல்லிப்புட்டேன்.. இவ சென்னைக்கு போனா நாமளும் இவ கூடவே போறோம். கேட்க ஆள் இல்லைன்னு நினைப்பு அவன் மனசுல. அந்த விளங்காத பையன் மண்டைல அடிச்சு நாங்கல்லாம் இருக்கோம்னு காட்டனோம்.. ஒன்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை துரத்துற மாதிரி என் மகளை பத்தி விட்டுட்டு அந்த பிசாசு அவ இடத்தை புடிச்சுக்குவாளா..” கணவனை ஏற்றி விட்டார் வாசுகி.
இவர்கள் இருவர் பேச்சையும் கேட்காமல் தென்றல் உறுதியான ஒரு முடிவுக்கு வந்து விட்டாள்.
சசி இந்த ஒரு மாத காலமாக வீட்டிற்குள் அடைந்து கிடந்தான். இடையில் ஒரு விசாலாட்சியை மருத்துவமனையில் சென்று பார்த்ததோடு சரி.
அவன் என்ன நேரத்திற்கு உறங்குகிறான் என்ன நேரத்துக்கு எழுகிறான், சாப்பிடுகிறானா இல்லையா என்று எதுவுமே தெரியாத நிலை.
கிட்டத்தட்ட பைத்தியக்காரனைப் போல் மாறிவிட்டான் சசி மித்ரன்.
எப்படியும் தென்றல் தன்னிடம் வந்து விடுவாள் என்கிற நம்பிக்கை அவன் மனம் முழுவதும் நிரம்பி கிடந்தது.
என்ன விட்டு உன்னால இருக்க முடியாது.. என்ன பத்தியா.. எப்படி எலும்பா போய்ட்டேன். எனக்கு தெரியும்.. எனக்கு தெரியும் நீ வருவ. என்ன வந்த உடனே பேச மாட்ட. ஊமைக் கோட்டான் மாதிரி உள்ள போவ.. இந்த தடவை நானும் பேசமாட்டேன். ஒவ்வொரு தடவையும் உன்கிட்ட நான் தொங்கிக்கிட்டு வர்றதுனால உனக்கு இளக்காரணமா போச்சு..
பேச வைக்கிறேன் டி.. ஐயோ சசி உங்களை சந்தேகப்பட்டது தப்புன்னு நீயே வந்து என்னை கட்டிப்பிடிச்சு அழுவ. அழ வைக்கிறேன். இந்த அளவுக்கு என் ஆளாகிட்ட இல்ல. நீ இல்லன்னா ஒண்ணுமே இல்லன்னு நிலைமைக்கு என்ன தள்ளிட்ட இல்ல.. ஆமா.. ஆமா அதை ஒத்துக்க எனக்கு எந்த ஈகோ கருமமும் கிடையாது. ஆமாடி நீ இல்லாம எனக்கு எதுவும் செய்ய முடியல.
மண்ட இந்த மண்ட முழுக்க நீ மட்டும் தான் இருக்க. இந்த நெஞ்சு முழுக்க உன் நெனப்பு மட்டும் தான் டி இருக்கு.. அதுதானே வேணும்.. அதுக்கு தானே உங்கப்பன் வீட்டுல உக்காந்துருக்க..வாடி.. வாடி இதோட எப்படி நீ என்ன விட்டு போறேன் நானும் பாக்குறேன்.. ” உடல் மெலிந்து மீசை தாடி காடு போல வளர்ந்திருக்க ஒரு பைத்தியக்காரனைப் போல காட்சியளித்தான் சசி மித்ரன்.
காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி என்பதற்கு இணங்க இலவு காத்த கிளியாகி போனது அவன் நிலை. பள்ளியே திறந்து விட்டது. இன்னும் தென்றல் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு வந்த பாடில்லை. சசியின் கைபேசி முழுக்க தென்றலின் எண்கள். ஒவ்வொரு முறையும் அவளுக்கு அழைத்து அடுத்த கணமே அதனை ரத்து செய்து விடுவான்.
வாட்ஸ் அப்பில் பேச முயன்று அதனை அனுப்புவதற்கு முன்பே அழித்து விடுவான்.. மனம் முழுக்க அவளுடைய எண்ணங்கள் ஆக்கிரமிக்க தன்னிலை இழக்க தொடங்கியிருந்தான்.
பள்ளி திறந்த அன்று காலை அவனுடைய வீட்டுக் கதவு படக்கென்று திறந்தது…
சோபாவில் அரை உறக்கத்தில் இருந்தவன் அடித்து பிடித்து எழுந்தான்.. அங்கே சிவப்பும் பச்சையும் கலந்த நிறத்தில் சுடிதார் அணிந்து, அதே நிறத்தில் துப்பட்டா போட்டிருந்தாள் தென்றல். கற்றை கூந்தலை இரு பக்கம் எடுத்து கிளிப்பில் அடைத்திருந்தாள்..
நெற்றி வகிடில் குங்குமம்.. புருவ மத்தியில் சின்னதாய் ஒரு பொட்டு. கழுவி துடைத்த முகத்தில் அதைத் தவிர வேறு ஒப்பனைகள் இல்லை..
கழுத்தில் வெறும் தாலி கயிறு. காதில் சின்ன தோடுகள். கையில் இரண்டு கண்ணாடி வளையல்கள்.
வெளித்தோற்றத்தில் எந்த மாற்றமும் கிடையாது. எளிமை விரும்பியவள்..
குடும்பத்தை பார்த்துக் கொண்டு வேலைக்கு சென்ற காலத்தில் கூட தென்றலை இந்த நிலையில் அவன் கண்டதில்லை. பஞ்சத்தில் அடிபட்ட பரதேசியைப் போல பல கோடிக்கு சொந்தக்காரி அவன் முன்பு நின்று கொண்டிருந்தாள். கோடி கோடியாக சம்பாதித்து மனைவியின் காலில் கொட்டி அவளை தங்கத்தட்டில் தாங்க வேண்டும் என்று நினைத்திருந்தவன் வைத்த கண் வாங்காமல் மனைவியின் பஞ்ச கோலத்தைக் கண்டான்.
அவனைப் போல இன்ச் இன்ச்சாக அவனை அளக்கவில்லை. ஒரே பார்வையில் அவனையும் அந்த வீட்டின் கோலத்தையும் அளந்து விட்டாள்.
தன்னை கண்டதும் அதிர்ச்சியில் நின்று கொண்டிருந்தவன் முன்பு வந்து நின்றாள் தென்றல்.. என்னதான் பேயறைந்ததை போல அவன் நின்று கொண்டிருந்தாலும் உள்ளுக்குள்
” எனக்கு தெரியும் நீ வருவ.. வந்து தான் ஆகணும்.. வந்துட்ட.. கேளு சீக்கிரம் கேளு.. ஸாரி கேளுடி..ஏன் டி இப்படி இருக்க.. என்ன கோலம் இது.. சட்டுனு ஸாரி கேளு.. உன்ன கட்டிக்கணும்டி” மனதில் ஓடுவது கண்களில் படமாக தெரிந்தது.
தென்றல் அழுத்தமாக அவன் முன்பு மார்புக்கு குறுக்கே கைகளை கட்டிய படி நின்றாள்.
அவனின் மனதின் கதறல்களை மானசிகமாக கேட்டுக் கொண்டே நின்றாள் இளந்தென்றால்..
“கேளு.. ஸாரி.. ஸாரி.. சொல்லுடி.. ஐயோ சொல்லித் தொலைடி.. இனிமே இப்படி செய்ய மாட்டேன் சொல்லு.. நீ இல்லாம எனக்கு வாழ்க்கை இல்லைன்னு சொல்லு..சொல்லுடி.. சொல்லுடி..” மனதிற்குள் கதறினான் சசி.
“சொல்லுடி.. எதுக்கு செத்த பொணம் மாதிரி நிக்கிற. அப்புறமா எவ்ளோ நேரம் வேணும்னாலும் நில்லு. உன்ன கல்யாணம் பண்ண பாவத்துக்கு நானும் கூட சேர்ந்து நிற்கிறேன். இப்ப தயவு செஞ்சு வாயைத் திறந்து சொல்லு. சொல்லுடி..”
தென்றல் அவன் கண்களை மட்டுமே பார்த்துக் கொண்டே நின்றாள். முதலில் அதிர்ச்சி.. பிறகு மகிழ்ச்சி.. அடுத்த எதிர்பார்ப்பு.. கொஞ்சம் கொஞ்சமாக கோபம். அதில் சிறிது தவிப்பு. மேலும் கொஞ்சம் துடிப்பு. போகப் போக இயலாமை. இறுதியில் அவனுடைய கண்கள் கெஞ்சலில் இறங்கியது.. கூடவே பயம் ஒட்டிக்கொண்டது.
” சொல்லுடி.. ஸாரி சொல்லு.. இனிமே இப்படி செய்ய மாட்டேன் சொல்லு. என்ன விட்டு போக மாட்டேன் சொல்லு.. ” தென்றல் எதற்கும் அசைந்து கொடுக்காமல் நிற்க ஆக கடைசியாக நிராசை அவன் கண்களில் நிறைந்து கிடந்தது.
கண்கள் ரெண்டும் அலை பாய்ந்தது. ஏற்கனவே சிவப்பாக மாறியிருந்த கண்கள் கொஞ்சம் கொஞ்சமாக ரத்தச் சிவப்பாக மாறியது. வியர்த்து ஊற்றியது. அவன் இதய துடிப்பு தென்றலுக்கு கேட்டது.
இப்பொழுது தென்றல் வாய் திறந்தாள்.
“நான் பிள்ளைங்களுக்கு ஸ்கூல்ல டிசி வாங்கிட்டு, கோயமுத்தூர்ல சேர்க்க போறேன்.. எப்ப வேணாலும் வந்து நீங்க பிள்ளைங்கள பாக்கலாம் போலாம். நீங்க அப்பா அவங்க படிப்புக்கு காசு கொடுக்கறதும் கொடுக்காம இருப்பதும் உங்க விருப்பம். எதுலயும் நான் தலையிடல. ஆனா இனிமே இங்க இருக்கிறது சரி படாது. உங்க வாழ்க்கைய நீங்க பாருங்க..”சொல்லிய தென்றல் அடுத்து ஒரு நிமிடத்தை கூட தாமதிக்காமல் தேவையான பொருட்கள் எல்லாம் ஒரு சூட் கேஸில் போட்டு அமுக்கி அவனைத் தாண்டி சென்றாள்.
தென்றல் அந்த வாசப்படியை தாண்டி செல்வது தெரிந்தது. கதவை இழுத்து அடைத்தாள். சின்ன தூறலாக வந்தவள் பெரும் மழையாக வெளுத்து வாங்கிவிட்டு சென்றாள்.
அவள் வந்து போன நிமிடங்கள் கனவாக இருக்கக் கூடாதா.. ஓடி சென்று அவளை பிடித்து தடுக்கவும் திராணியற்று சிலையாக நின்று விட்டான் சசி மித்ரன்.
அவனுடைய எண்ணத்தில், அவனுடைய இறுமாப்பில், ஆண் என்கிற ஈகோவில், பலமாய் தாக்கிவிட்டாள் இளந்தென்றல்..
எவ்வளவு நேரம் நின்றானோ தெரியவில்லை.. கால்கள் மடங்க அப்படியே சரிந்து தரையில் விழுந்தான்..
ஆஆ… தென்றல்… ஈகோ சுக்கு நூறாக உடைந்து போனது.. கண்களில் இருந்து கரகரவென்று கண்ணீர் வழிந்தது. இந்த ஒரு மாதத்தில் அவள் வந்து விடுவாள் என்கிற ஈகோவிலும் நம்பிக்கையிலும் பிடிவாதமாக உள்ளுக்குள் வைத்திருந்த கண்ணீர் யாவும் அவனுடைய கட்டுப்பாட்டை உடைத்து வேகமாக வெளியேறியது.
என்ன பயன்? காலம் கடந்து விட்டது. மௌனமாய் அவன் வாழ்வில் வந்தவள், மௌனமாக தன்னுடைய பதிலை தெரிவித்து அவனை விட்டு விலகி விட்டாள்..
தன்னுடைய முடிவை பெரியவர்களிடம் கூறிய போது வாசுகி பெரிதும் எதிர்த்தார். மகளை முதுகில்லாத கோழை என்று சாடினார். மேதினியை எதிர்க்கச் சொன்னார். சசியிடம் பேசலாம் என்றார். எதற்குமே தென்றல் பதில் தரவில்லை.
” இங்க இருக்கிறது உங்களுக்கு பிரச்சனைனா சொல்லுங்க நான் வேற இடம் போகிறேன்..”
“கம்முனு இரு வாசு.. அவ முடிவு
எடுத்துட்டா.. நான் அன்னைக்கு சொன்ன மாதிரி என் மகளுக்கு பக்க பலமா நிக்க போறேன். அவ என்ன சொன்னாலும் சரிதான்..” மனதில் ஆயிரம் வேதனைகள் இருந்தாலும் மகளின் மனம் வாடக்கூடாது என்பதால் அவளது முடிவுக்கு தலை சாய்த்தார் பரசுராம்.
“நாம இனிமே சென்னைக்கு போக போறது இல்ல. இங்கேயே பாட்டி வீட்ல இருந்து படிக்கலாம்..” பிள்ளைகள் இருவரையும் அழைத்துச் சொன்னாள் தென்றல்.
“அப்பா.. இப்ப வேணும்”.. கை கால்களை உதறி அடம்பிடிக்க ஆரம்பித்தாள்..
“கொடி.. அடிச்சிருவேன்.. நான்தான் சொல்றேன்ல அப்பாவுக்கு வேலை.. இப்பவே அப்பா பிஸியா இருக்காரு ஷூட்ல.. அப்பா நிறைய சம்பாதிச்சா தானே நம்மால சந்தோஷமா இருக்க முடியும்..” என்ன சொன்னாலும் பூங்கொடி அடங்குவதாய் இல்லை.
அடுத்து குழலியை சமாளிக்க வேண்டும். மகளிடம் தென்றல் கேட்ட காலக்கெடு முடிந்து விட்டது.
“ஏன் ம்மா திடிர்னு ஸ்கூல் மாத்துற..” குழலி எப்போதுமே தாயை நேர் கேள்வி கேட்பாள்.
” நீ நிம்மதியா இருப்பியா” பதில் சொல்ல முடியாமல் தவித்தாள் தென்றல்.
” அம்மா நீ என்ன முடிவெடுத்தாலும் நான் உனக்கு சப்போர்ட் பண்ணுவேன்.. ஆனா நானும் அப்பாவ மிஸ் பண்றேன்.. அவரு கிட்ட சொல்றியா” குழலி சொன்னது தான் தாமதம் அவளை கட்டிக்கொண்டு கதறி விட்டாள் தென்றல். தான் எடுத்த முடிவால் பிள்ளைகளின் மனம் பாதிக்கப்படுவது நன்றாக புரிந்தது.
ஆனால் வேறு வழியில்லை. மனதை கல்லாக்கி கொண்டு இந்த முடிவுக்கு வந்தாள். அங்கே படித்தால் மீண்டும் சமூக வலைத்தளங்களில் இப்பேச்சு அடிபடும். அது பிள்ளைகள் மனதிற்கும் வாழ்க்கைக்கும் நல்லதல்ல.. பெண் பிள்ளைகளைப் பெற்று வைத்திருக்கும் பொறுப்பான அம்மாவாக அவள் முடிவு எடுக்க வேண்டும். அந்த முடிவின் விளைவு தான் இறுதியாக அவளின் சென்னை வருகை.
தனியாக வந்து பள்ளியில் பேசி டிசி வாங்கி விட்டாள். கோவை செல்ல வேண்டிய விமானத்தில் ஏறி அமர்ந்தவளுக்கு சசியின் பரிதவித்த கண்கள் மட்டுமே நினைவில் இருந்தது.ஆனாலும் தன் முடிவை மாற்ற விரும்பவில்லை.