41

வார்த்தைகளுக்கு கை கால் முளைத்தால்  அது பலரின் கழுத்தை நெரித்து கொன்று விடும். நிற்க வைத்து செருப்பால் அடிக்கும். மலர் தூவி அர்ச்சிக்கும்.

ஆனால் கடவுளின் படைப்பில் வார்த்தைகள் மிகவும் விந்தையானவை. கை கால்களைக் கொண்டு செய்ய வேண்டிய அத்தனை விஷயங்களையும்  நிராயுதபாணியாக  அசால்டாய் செய்வது தான் வார்த்தை ஜாலம்..

‘குடும்பத்திற்காக’ இந்த ஒன்றை வைத்துக் கொண்டு எத்தனை பேர் இங்கே ஆட்டமாய் ஆடுகிறார்கள்? சற்று திரும்பிப் பார்த்தால்  அந்த குடும்பத்திற்காக என்பதே அவர்கள் அகராதியில் வேறு அர்த்தம் கற்பிக்கிறது.

தன்னவள் கிணற்று நீர், மன்னித்துவிடு என்ற தழுக்கான வார்த்தையில்  தன்னவளை சமாளித்து விடலாம் என்பதே சசி மித்ரனின்  பிரம்மாஸ்திரமாக இருந்தது.

மார்புக்கு குறுக்கே கைகளை கட்டிக் கொண்டு நிதானமாக வார்த்தைகளை சிதற விடும் மனைவியை அதை விட நிதானமாக பார்த்தான் சசி மித்ரன். அவள் வார்த்தைகள் கொடுத்த அதிர்ச்சியை நொடியில் சமாளித்து விட்டான்..

கடப்பாரையை விழுங்கி ஜீரணமாக்கியவன் ஆயிற்றே.. தென்றல் அம்மாதிரி கேள்வி கேட்டதை உண்மையில் அவன் விரும்பவில்லை என்பதே நிஜம்.

” இப்ப நான் என்ன பண்ணிட்டேன்னு குறுக்கு விசாரணை பண்ற”

” நீங்க தூங்குற மாதிரி நடிக்கிறீங்களா இல்ல உண்மையா தூங்குறீங்களா”..

“ப்ச்”.. தலை முடியை அழுத்தமாய் கோதியவன்

” தோ பாரு செல்லம்.. நான் அன்னைக்கே உன்கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டேன் இதெல்லாம் படத்தோட ஃபிரீ ப்ரோமோஷன். அடுத்தவன் ஆயிரம் பேசுவான். இது எல்லாத்துக்கும் அர்த்தம் சொல்லிக்கிட்டு இருக்க என்னால முடியாது.” அவன் பொறுமையை இழுத்து பிடித்துக் கொண்டு பேசினான்.

தென்றல் அசையாமல் நின்றாள்.

சசி என்ன நினைத்தானோ ” இனிமே இந்த மாதிரி நடக்காது. இது அவ்ளோ தான். உன் கூட சந்தோஷமா இருந்து எவ்ளோ நாள் ஆகுது. ப்ரடியூசருக்கு தலைக்கால் புரியல. அடுத்த படமும் நான் தான் பண்ணனும்னு சொல்லிட்டாரு.. எனக்கு அதெல்லாம் பெரிய விஷயம் இல்லடி. எனக்கு உன் கூட பசங்க கூட டைம் ஸ்பென்ட் பண்ணனும். என்னமோ உங்கள விட்டு ரொம்ப தூரம் போன மாதிரி இருக்கு.

ப்ளீஸ் டி.. போதும் நான் ரொம்ப டயர்டா இருக்கேன்.. ” மீண்டும் அவளை கட்டி அணைக்க முயற்சித்தான்.

தன்னுடைய முழு பலத்தையும் திரட்டி அவனை தன்னிடம் இருந்து விலக்கித் தள்ளினாள் தென்றல். சசிக்கு கோபம் தலைக்கேறியது.

கையிலிருந்த மலர் கொத்தை விசிறி எறிந்தான்..

” இப்ப என்னடி வேணும் உனக்கு.. என்ன எழவுக்கு  நடு வீட்ல எழவு விழுந்த மாதிரி மூஞ்ச வச்சிருக்க.. எவ்ளோ பெரிய சக்சஸ்.. ஆசையா பொண்டாட்டி கிட்ட சொல்லலாம்னு வந்தா  ச்சீ.. வீடா இது.. வெளிய போயிட்டு வர ஆம்பள ஆயிரம் பிரச்சனையை தூக்கி தோளுல வெச்சிருப்பான்.

வீட்டுக்கு வந்த உடனே அவங்க கிட்ட நாலு வார்த்தை அனுசரணையா பேசி, மனசுக்கு இதமா நடந்துக்க தெரியுதா.. உன் மனசுல என்ன நெனச்சிருக்க.. நீ என்ன சொன்னாலும் நான் கைய கட்டிக்கிட்டு வாய பொத்திகிட்டு கேக்கணுமா.. பெரிய டீச்சரா நீ.. நிக்க வச்சு கேள்வி கேக்குற.. இந்த வேலையெல்லாம் என்கிட்ட வச்சுக்காத.. ” அவன் போட்ட சத்தத்தில் பிள்ளைகள் இருவரும் அறை கதவை திறந்தார்கள்..

அவர்கள் தலையைக் கண்டதும் அவன் அமைதியானான்.

“அம்மா”.. கொடி மிரண்டு விழிக்க

“குழலி.. பாப்பாவ கூட்டிட்டு போய் தூங்கு. நாளைக்கு அம்மா வந்து எழுப்புற வரைக்கும் வெளிய வரக்கூடாது. ஒன்னும் இல்ல அம்மாவும் அப்பாவும் கொஞ்சம் சத்தமா பேசிட்டோம். போய் படுங்க.” குழலிக்கு  நடப்பது புரிந்தது. தென்றல் சொன்னதை செய்தாள்.

சசிக்கு  ஆத்திரத்தில் உடல் நடுங்கியது. அனைத்தையும் தென்றல் கவனித்துக் கொண்டிருந்தாள்.

” கொஞ்சம் வந்து உட்காருறீங்களா.. ” ஒருவேளை அவள் கத்தி  ஆர்ப்பாட்டம் செய்திருந்தால் கூட அவன் அடங்கிருக்க வாய்ப்புண்டு. அவளுடைய அமைதியான அணுகுமுறை அவனுக்கு வெறியை கிளப்பியது. குற்றமுள்ள நெஞ்சு குத்தி கிழித்தது.

தென்றல் சோபாவில் அமர்ந்து விட, வேறு வழியில்லாமல்  ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு அவனும் அமர்ந்தான்.

” எதுக்கு இப்ப தேவை இல்லாம சீன் போட்டுட்டு இருக்க. என்ன நடந்துச்சு ஏது நடந்துச்சுன்னு உன்கிட்ட புளி போட்டு விளக்காத குறையா சொல்லிட்டேன். இதுக்கு மேல என்ன கேள்வி உனக்கு.. தேவையில்லாத வேலை பண்ணிட்டுருக்க நீ.. உன்னால புள்ளைங்க என்னை என்ன நினைக்கும்.. ” அமர்ந்த வேகத்தில் கடுகாய் பொறிந்தான்.

அப்பொழுதும் தென்றல் முகத்தில் எந்த ரியாக்ஷனும் இல்லை. அப்படியே வந்த ஆத்திரத்தில் அவளை ஓங்கி அறைய கைகள் பரபரத்தது.

“ஹேய்.. ஹேய்.. மூஞ்சிய..ஹான் மூஞ்சி இருக்குல இந்த எழவெடுத்த மூஞ்சி.. இந்த மூஞ்சிய இப்படி வெச்சிக்காத.. புரியுதா புரியுதா”.. வலது கரத்தின் ஆள்காட்டி விரல் மற்றும் கட்டை விரலை கொண்டு  தென்றலின் இரு பக்க கண்ணத்தையும் பிடித்து அழுத்தினான்.

பற்களை கடித்தபடி அவன் வார்த்தைகளை குதறி துப்ப அவள் முகத்தில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. பயமோ கவலையோ கோபமோ அழுகையோ  எதுவும் இல்லை. மூச்சு விடும் பொம்மையாக அவன் பேசுவதை அவள் கேட்டுக் கொண்டிருந்தாள்.

அதுதான் அவனை மனித ரூபத்தில் இருந்து மிருகமாக்கி கொண்டிருந்தது..

“சொல்லிட்டேன்.. வேணா தென்றல்.. என்ன மிருகமாக்காத..” தவறு முழுவதும் அவன் பக்கம் இருக்க, பதற்றத்திலும்  குற்ற உணர்ச்சியிலும்  அவளுடைய நிமிர்ந்த பார்வையை பார்க்க முடியாமல் தான்  அவன் கோபத்திற்குள் தன்னை நியாயப்படுத்த முயன்றான்.

கைதேர்ந்த இயக்குனனாக இருக்கலாம். மற்றவர்களை தன்னுடைய சுண்டு விரலில் ஆட்டு வைக்கலாம். நடிப்பை சொல்லிக் கொடுத்து  கலையை வளர்க்கலாம். ஆனால் அவன் முன்னால் அமரத்திருப்பது  அவனுடைய மனைவி.

“ஹேய் ஹேய்…” அவனின் அழுத்தம்  அதிகமாக்கியது. கண்களில் ஆத்திரத்தின் விளைவாய் கண்ணீர் பெருகியது..

உண்மையில் தென்றலுக்கு வலி உயிர் போனது.. இந்த அளவிற்கு சசி உணர்ச்சிவசப்படுவான் என்று அவளே நினைக்கவில்லை..

இதற்கு மேல் உணர்ச்சிவசப்பட்டால் அது அவனுக்கு நல்லதில்லை என்பதால் பலம் கொண்ட மட்டும் அவனைத் தள்ளி விட்டாள் தென்றல்.

பற்கள் உராய்ந்து உதிரம் கசிய தொடங்கிய கன்னங்களை மெல்லத் தொட்டு பார்த்தவள்

” எத்தனை பேருக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்திருப்பீங்க. ரியாக்சன் ரியாக்ஷன்னு காட்டு கத்து கத்திருப்பீங்க.. இப்ப நான் எந்த ரியாக்ஷன் கொடுக்கணும்னு நினைக்கிறீங்க..

நீங்க சாரினு ஒரு வார்த்தை சொன்னா, உடனே கட்டிப் பிடிச்சு முத்தம் கொடுக்கணுமா.. படுக்கையில உங்களை கட்டிக்கனுமா.. எந்த ரியாக்ஷன் வேணும் உங்களுக்கு..” அவள் ஒவ்வொரு வார்த்தைக்கும் அழுத்தமாய் நிதானமாய்  இடைவெளி விட்டு பேச  உணர்ச்சிப் பிழம்பாய் மாறினான் சசி.

“தென்றல் வேணா கை வைக்கிற மாதிரி செய்யாத..” விரல் நீட்டி அவளை எச்சரித்தான்.

” கத்தாதிங்க.. உங்களுக்கு மட்டும் தான் வாய் இருக்கு
உங்களுக்கு மட்டும் தான் கத்த தெரியும்னு நினைக்காதீங்க. சத்தமா பேசினா  நீங்க சொல்றது உண்மையாயிருமா.. ” வார்த்தைகள் அவனை சுட்டது.

” என்னடி என்னென்னமோ பேசுற. கட்டுன புருஷனை சந்தேகப்படுறியே வெக்கமா இல்ல உனக்கு.. இதுதான் நீ இத்தனை வருஷம் என் கூட குடும்பம் நடத்தின லட்சணமா”

” வார்த்தையை அளந்து பேசுங்க சசி. இப்ப நீங்க பேசுற ஒவ்வொரு வார்த்தைக்கு பின்னால ரொம்ப கஷ்டப்படுவீங்க” அவனை நேர் பார்வை பார்த்தபடி கூறினாள் தென்றல்.

சசி சூடாகி விட்டான். ” என்ன பேசணும் எவ்ளோ பேசணும்னு நீ சொல்லிக் கொடுக்காத.. வேலைக்கு போயிட்டு இருக்கும் போது  என்கிட்ட குரல் ஒசத்தி பேசிருப்பியா. உக்கார வச்சி சோறு போடுறேன்ல.. அந்தக் கொழுப்பு பேச வைக்குது.. “

” பேசு.. இவ்வளவு நேரம் பெரிய வாத்தியார் மாதிரி என்ன கேள்வி கேட்டுட்டு இருந்த..இப்போ என்ன ஊமை மாதிரி இருக்க.. பேசுடி”.. தென்றலின் அமைதி அவனை நிலை கொள்ள விடாமல் தவிக்க வைத்தது. அந்தத் தவிப்பு கோபத்தை கொடுத்தது. அந்தக் கோபம் நிதானத்தை அடியோடு இழக்க வைத்தது. நிதானம் இழந்த இடத்தில் வார்த்தைகளுக்கு வரை முறை கிடையாது.

” பிள்ளைங்க இருக்கு.. பேசுறதா இருந்தா அமைதியா பேசுங்க.. ” பிள்ளைகள் என்றதும்  கஷ்டப்பட்டு தன்னை கட்டுப்படுத்தினான்.

அவள் பக்கத்தில் நெருங்கி அமர்ந்தான்.. அவளுடைய கைகளைப் பிடித்துக் கொண்டான்.

“செல்லம்.. என்னால முடியல. விட்டா குப்புற படுத்து தூங்கிடுவேன். என்ன பாக்க உனக்கு பாவமா இல்லையா. தேவையே இல்லாத ஆர்க்யூமென்ட்.. பேசாம வா படுத்து தூங்கு நாளைக்கு காலையில எல்லாம் சரியாகும்..” தென்றலை தன்னோடு சேர்த்து எழுப்ப முயன்றான்.

அவள் எழாமல் பிடிவாதமாய் அமர்ந்திருந்தாள்.” சின்ன பிள்ளைக்கு சொல்ற மாதிரி எவ்ளோ அழகா சொல்றேன்” அவன் குரலில் சுதி ஏறியது.

தென்றல் அவனை நிமிர்ந்து பார்த்தாள்..

” உங்களுக்கு ஒன்னு தெரியுமா.. நீங்க பண்ணது உங்களுக்கு தெரியாம புரியாம இல்ல. அதோட விளைவு தெரிஞ்சதனால தான் இப்ப நீங்க தேவையே இல்லாம கத்தி சீன் போடுறீங்க.” சரியாகத் தன்னை இனம் கண்டு கொண்ட ஆத்திரம் அவன் உடல் முழுவதும் பரவியது.

கண்கள் தெறிக்க அவளை பார்த்துக் கொண்டு நிற்க  அமைதியின் உருவாய் எழுந்து நின்றவள்

“மேதினி மேல உங்களுக்கு சின்னதா ஏதோ ஒரு க்ரஷ் ஆமா தானே”.. உச்சம் தலையில் ஓங்கி அடித்தது போல இருந்தது அவனுக்கு..

அவன் பேச முற்படும்போது
” அது தப்பு இல்ல. உங்க வாழ்க்கைய உங்க இஷ்டப்படி வாழறதுக்கு உங்களுக்கு உரிமை இருக்கு. காதலிச்சீங்க கல்யாணம் பண்ணி ரெண்டு பிள்ளையை கொடுத்தீங்க. அதுக்காக காலம் முழுக்க உங்க காலை பிடிச்சு கட்டிக்கிட்டு என்கூடயே இருக்கணும்னு நான் நிர்பந்தம் படுத்த மாட்டேன்.”

“ஹேய்.. என்னடி வாய்க்கு வந்ததெல்லாம் பேசிட்டு இருக்கு..” அவனுடைய கரம் அவள் முகத்தை அடையும் முன்பே

” நான் கேட்டதுக்கு நீங்க பதில் சொல்லவே இல்லையே.. ” கன்னத்தை தீண்ட ஒரு சென்டிமீட்டர் இருக்கும் போதே அவனுடைய வலது கை நின்று விட்டது அந்தரத்தில்.

சிறிது நேரத்திற்கு முன்பு அவளுடைய கன்னத்தை அவன் பிடித்து அழுத்தியது போலவே, அழுத்தம் கொடுக்காமல் அவனுடைய கன்னத்தைப் பற்றியவள்

” என் கண்ண பாத்து சொல்லுங்க.. ” சசி அவளுடைய கண்களைப் பார்த்தான். அரை நொடிக்கும் குறைவாகவே அவனுடைய பார்வை திசை மாறியது..

” நாளைக்கு மட்டும் தான் பிள்ளைகளுக்கு ஸ்கூல். சம்மர் ஹாலிடே ஸ்டார்ட் ஆகுது. நாளைக்கு ஈவினிங் பிள்ளைகளை கூட்டிட்டு நான் கோவை போறேன்.. இது உங்க வாழ்க்கை சசி.. சந்தோஷமா வாழுங்க”.. அவனைத் தாண்டி செல்ல முற்படும் போது அவளுடைய கரத்தை பிடித்து இழுத்தான்.

முரட்டுத்தனமாக அவள் தோள்களை பிடித்து உலுக்கினான்.

” அப்படியே வச்சுருவேன்.. பெரிய விஞ்ஞானி இவங்க கண்டுபிடிச்சிட்டாங்க.. தேவையே இல்லாம என்னத்துக்கு இப்ப இந்த பிரச்சனை. ஏண்டி ஆயிரம் பேர் ஆயிரம் சொன்னா உனக்கு  அறிவு இல்ல . யோசிக்க தெரியாது..

கண்ண பாத்து பேசு, காதை பார்த்து பேசுனு.. ஏண்டி அவதான் வேணும்னா நான் இந்நேரம் அவ பின்னாடி போயிருக்க மாட்டேன். அத புரிஞ்சிக்கவே மாட்ட இல்ல.. என்னமோ நான் தப்பு செஞ்ச மாதிரி, கேவலமா என்ன நிக்க வச்சு கேள்வி கேட்டுட்டு இருக்க.. நீயே கேட்கிற, நீயே பதில் சொல்ற, நீயே முடிவு எடுக்குற நீயே போற.. அப்புறம் என்ன எழவுக்கு நான் இங்க நின்னுட்டு இருக்க..” கிட்டத்தட்ட அவன் கண்களுக்கு தென்றல் ஒரு சவமாய் தான் அங்கே காட்சியளித்தாள்.

சுத்தமாக அவளிடம் உணர்வில்லை. அவள் உடல் எகுவாய் இறுகியது.. கண்களில் கண்ணீரின் எச்சம் கூட கிடையாது. காய்ந்த பாலைவனமாக காட்சியளித்தது.

” நான் கேட்ட கேள்விக்கு நீங்க பதில்”.. தேய்ந்த ரெக்கார்ட் போல அவள் அதையே கேட்க

கோபம் உச்சிக்கு ஏறிய சசி அவளை ஓங்கி அறைந்தான். தென்றல் சுருண்டு விழுந்தாள்.

“ஹா.. பதில் பதில் பதில்.. என்னடி பதில்.. என்ன பதிலு.. இப்ப நான் அவளை வச்சிருக்கனா இல்லையான்னு தெரியணும் அதானே.. ஆமா..ஏதோ ஒன்னு அவ கிட்ட இம்ப்ரெஸ் பண்ணுச்சு.. அதான் அவோட் பண்ண முடியல.. போதுமா.. போதுமா..” விழுந்து தன்னை விழி மூடாமல் பார்த்துக் கொண்டிருந்தவளை பிடித்து நிற்க வைத்து

“ஆனா.. அப்ப கூட என் மனசுல நீ தான் இருந்த.. இருக்க.. என் ஒழுக்கத்தை பத்தி நீ பேசுற.. அவ்ளோ தான்.. அவ்ளோ தான் உனக்கு என் மேல இருந்த நம்பிக்கை..ஹேய்.. ஹேய்.. நீயெல்லாம் ஒரு ஆளாடி..அவள பாத்தியா கோடி கோடியா வெச்சிருக்கா..பெரிய ஸ்டார்..

என் பின்னால நாய் மாதிரி சுத்துறா.. ஆனாலும்… ஹான் ஆனாலும் நான் அவளை திரும்பிப் பார்த்தேனா.. நீ எவ்ளோ அசிங்கப்படுத்தினாலும் உன்கிட்ட தான வரேன்.. என்ன பாத்து என்ன கேட்ட.. பதில்.. போதுமா பதில் ஹான் போதுமாடி.. என்ன நம்பாத  என் ஒழுக்கத்தை சந்தேகப்படுற யாரும்.. எவளும் என் கூட இருக்கணும்னு அவசியம் இல்ல.. போடி போ.. போய் தொல”..அவளைக் குலுக்கி கீழே தள்ளினான். தரையில் விழுந்தாள் தென்றல்.

கையில் நல்ல அடி. விழுந்த வேகத்தில் மெல்ல எழுந்து நின்றாள்..

உலகின் இறுதி நாள் இறுதி நொடி என்பதை போல அவன் முகத்தை உறுதியாய் இருந்து கொஞ்சம் நஞ்ச உயிர்பையும் இழுத்து பிடித்து அவன் முகத்தைப் பார்த்தவள்

“பதில் கெடச்சிருச்சு”.. என்று விட்டு பிள்ளைகள் அறைக்கு சென்று விட்டாள்..