” செல்லம்.. நான் இருக்கிற ஃபீல்டு எப்படின்னு உனக்கு நல்லா தெரியும். அவ ஒரு அப்கம்மிங் ஹீரோயின்.. சான்ஸ்க்காக இப்படி மெசேஜ் அனுப்புவா.. அவ மட்டுமா அனுப்புறா? ” அவன் கூறுவது உண்மைதான் தினம் வாய்ப்புக்காக அவனுக்கு பல பேர் குறுஞ்செய்திகள் அனுப்புவார்கள். அவன் உதவி இயக்குனராக இருந்த போதிலே இது வழமையும் கூட.
” அவ்ளோ தானே”
” வேற என்னவா இருக்கும்னு நீ நினைக்கிற.. “
” நான் ஒன்னும் நினைக்கல எனக்கு வேலை இருக்கு” எழ முற்பட்டவளை எழ விடாமல் தன்னுடைய தேவையை தீர்த்த பின்பே விட்டான் சசி மித்ரன்.
அதன் பிறகு மேதினியை அவள் மறந்தே விட்டாள்.. சசியின் அடுத்த படத்தைப் பற்றிய பேச்சு எழுந்தது. அதில் மேதினி கதாநாயகியாக நடிக்கிறாள் என்பது கூடுதல் தகவல்..
” ஏன் வேற ஹீரோயினே இல்லையா.. எதுக்கு இவள பிடிச்ச தொங்குறீங்க”
” நானா ஆசைப்பட்டு அவளை ஹீரோயினா போடுறேன்.. ப்ரொடியூசர் பிரஷர் பண்றாரு.. இந்த கதைக்கு அவதான் சரியா இருப்பா..” அப்பொழுதும் மனம் தாங்காமல் பொறுமினாள் தென்றல்.
“செல்லம்.. இதெல்லாம் காமன்.. எதுக்கு நீ டென்ஷனாகுற..” தென்றல் எதுவும் பேசவில்லை.
இரண்டு வருடங்களில் உச்சம் தொட்டு விட்ட இளம் இயக்குனன் அவன்.. பொறாமையால் பொசுங்கும் சில நல்லுள்ளங்கள் உள்ளுக்குள்ளேயே கதறிக் கொண்டிருக்க, இவன் அடுத்தடுத்து படங்களை கொடுத்துக் கொண்டிருக்கிறான்..
சசியை கேட்டால் ஒன்று மட்டுமே கூறுவான்.. ஒவ்வொரு ஐந்து வருடத்திற்கும் நாகரிகம் மாறுகிறது. அடுத்த கட்டத்தை நோக்கி மக்கள் நகர்கிறார்கள்.. பெரிய பெரிய ஜாம்பவான்களே காணாமல் போகும்போது நானெல்லாம் எம்மாத்திரம்?
” எவ்வளவு முடியுமோ அவ்வளவு சீக்கிரம் படம் பண்ணோமா.. காசு பார்த்தோமா.. பிள்ளைங்கள படிக்க வெச்சு ஆளாக்கணோமா.. கடைசி காலத்துல எங்கயாச்சும் மலையடிவாரத்துக்கு கீழே இடம் வாங்கி அக்கடானு செட்டில் ஆயிரணும்.. எனக்கு நீ உனக்கு நான்..” இப்படி சொல்பவனிடம் என்னவென்று கேட்பது?
சசி இப்போதெல்லாம் வீட்டில் இருக்கும் நேரங்கள் குறைந்து கொண்டே வருகிறது. பிள்ளைகள் கவனித்துக் கேட்கும் நிலைக்கு அவன் தள்ளப்பட்டான்..
பூங்கொடி மருத்துவ சிகிச்சையின் முயற்சியாலும், தென்றலின் விடாமுயற்சியாலும் இப்போதெல்லாம் திக்கி திணறியாவது வார்த்தைகளை கோர்வையாக பேச கற்றுக் கொண்டாள்.
அவள் வாய் திறந்து அம்மா என்றழைத்த அந்த நொடி தென்றல் வாழ்வில் மீண்டும் பிறந்த கணம்..
சசி அவளைக் கட்டிக் கொண்டு அழுதே விட்டான்.. பெற்றோர்களின் சந்தோஷம் பூங்கொடிக்கும் வைராக்கியத்தை கொடுத்தது.. அவளும் கொஞ்சம் கொஞ்சமாக நன்றாக பேச கற்றுக் கொண்டிருக்கிறாள்.
பண ரீதியாக எந்தவித பிரச்சனையும் இல்லாமல் வாழ்க்கை சென்றாலும் மனநிம்மதியை கொஞ்சம் கொஞ்சமாக இழக்க தொடங்கினாள் தென்றல்..
முன்பானால் பணம் மட்டுமே அவள் பிரச்சினையாக இருந்தது. கூடவே அவள் யாருமற்ற நிலையில் நின்றாள்.. இப்பொழுது கோடிகளில் சம்பாதித்து கொடுக்கும் கணவன், அழகான பிள்ளைகள், சொந்த வீடு, அவளுக்கு புதிதாக கார் ஒன்றினை வாங்கி பரிசளித்து அதை ஓட்டவும் கற்றுக் கொடுத்திருந்தான்.
பேரும் புகழும் அவர்களை தேடி வந்தது. சொந்த குடும்பத்திற்கும் அவளின் வாழ்க்கையை பார்த்து மகிழ்ச்சி. பக்கத்திலேயே தங்கை. ஒரு தொலைபேசி அழைப்பில் ஓடிவரும் பெற்றோர்கள்.
இவ்வளவு இருந்தும் சில நாட்களாகவே தென்றல் மனதில் நிம்மதி இல்லாமல் அலை கழித்துக் கொண்டிருந்தாள்.
அதுவே பிள்ளைகளிடம் சிடுசிடுப்பை காட்ட வைத்தது.. காரணம் மேதினி. கணவன் மேல் சந்தேகத்தை வளர வைத்தது.. ஏழ்மை நிலையிலும் தன்னிலை பிறழாமல் இருந்தவள் பணம் சேர சேர கொஞ்சம் கொஞ்சமாக தன்னிலை இழக்க ஆரம்பித்தாள்.
அதற்கு தகுந்தார் போல மேதினி, சசி வீட்டில் இருக்கும் நேரமெல்லாம் அவனுக்கு அழைத்தாள்.
மேதினி அவன் பேச்சை கேட்பதாக இல்லை.. மீண்டும் அவனுக்கு அழைத்துக் கொண்டே இருந்தாள் ஏதாவது உப்பு சப்பில்லாத விஷயத்தை கேட்க..
ஆரம்பத்தில் இதன் விஷயமாக கோவப்பட்ட தென்றல் கூட இப்பொழுது கணவனின் வேலையை நினைத்து அமைதியாகி விட்டாள்.
வில்லங்கம் போட்டோஷூட் மூலமாக கிளம்ப ஆரம்பித்தது.. முதல் கட்டமாக போட்டோ ஷூட் ஆரம்பித்தார்கள்.. கேமரா லென்ஸ் வழி பார்த்துக் கொண்டிருந்தான் சசி.
அந்தப் படத்தின் நாயகியான மேதினி தான் படத்தின் மையக்கரு.. கிட்டத்தட்ட கதாநாயகனே அவள் தான்..
ஒவ்வொரு முறையும் போராட்டம் நிறைந்த ஒரு பெண்ணின் முகத்தை, தீட்சண்யம் மின்னும் விழிகளை, லென்ஸ் வழியாக கொண்டு வருவதற்கு மேதினியிடம் போராடிக் கொண்டிருந்தான் சசி மித்ரன்.
அவன் மனதில் அப்பொழுது தோன்றியது எல்லாம் ஒன்றுதான். இந்தக் கதையை அவன் எழுதியதே அவனுடைய மனைவியை கருத்தில் வைத்து தான்.
” பேசாம தென்றலயே நடிக்க வெச்சிறலாமா” யோசனை குருட்டாம்போக்கில் ஓடியது..
இந்தப் படத்தின் தயாரிப்பாளர் சசியை நம்பி முதன் முதலில் படத்தை இயக்கியவர். அவர் போன படத்தில் பெரிய கதாநாயகனை வைத்து, ஆல் இந்திய திரைப்படம் ஒன்றினை எடுத்திருக்க படம் மண்ணை கவ்வியது.
ஒரே இரவில் மனிதர் தெருவுக்கு வராத குறை. ஊரைச் சுற்றி கடன். தலையில் துண்டு ஒன்றுதான் அவர் போடவில்லை.
அவராகவே சசியை அழைத்து தனக்கொரு படம் பண்ணிக் கொடுக்குமாறு வேண்ட தன்னை வைத்து படம் தயாரித்த அவருக்கு செய்யும் நன்றியாகவே இப்படத்தை நினைத்தான் சசி மித்ரன்..
மேதினி புதுமுகம், மேலும் இளைஞர்களிடம் அவளுக்கு அமோக வரவேற்பு இருந்தது. சோசியல் மீடியாவில் மில்லியன் கணக்காக விசிறிகளை வைத்துக் கொண்டிருந்தாள்.. தயாரிப்பாளரின் மனம் அவளை சுற்றி வட்டமடித்தது.
மேதினியின் தொல்லை தாங்க முடியாமல்
” சார் பேசாம வேற அக்ட்ரேஸ் ட்ரை பண்ணலாமா.. நியூ ஃபேஸ் நிறைய பேரு இன்ட்ரஸ்டா இருக்காங்க.. ” சசி மறைமுகமாக கூறினான்.
” அட நீ வேற சும்மா இருய்யா.. இப்ப எல்லாம் யாரு மூஞ்ச பாத்து படத்துல போடுறான்.. சோசியல் மீடியாவுல கோடி கணக்குல பாலோவர்ஸ் இருக்காங்களா.. ஆளு ஃபேமஸா இருக்கான்னு பாத்துட்டு தான் இப்பல்லாம் சான்சே கிடைக்குது.. தோ பாரு சசி உனக்கு நல்லா தெரியும்.. என் நிலைமை தலையில இன்விசிபிள்ளா துண்டு போட்டுருக்கேன்.. அது பகிரங்கமா ஊரே பார்க்க போட வச்சிறாத.. உன்ன தான் நம்புறேன்.. எனக்காக எப்படியாச்சும் அந்த பொண்ண வச்சு இந்த படத்தை எடுத்து முடி” அட போங்கடா என்று இருந்தது சசிக்கு.
போட்டோ ஷூட்டில் ஆரம்பித்த வில்லங்கம் ஷூட்டிங் வரையில் நிலைத்தது.. வேண்டுமென்றே மேதினி பல டேக்குகள் வாங்கி சசியை மண்டை காய விட்டாள்.. உதவி இயக்குனர் யாராவது வந்து நடிப்பை சொல்லிக் கொடுத்தால் டைரக்டரை வர சொல்லு என்று வம்பு செய்தாள்..
சசி அவளை முறைத்துக் கொண்டே வந்து சொல்லிக் கொடுத்தால், குழந்தையாக மாறி கண்களை உருட்டினாள்.
ஒரு வழியாக அந்தப் படத்தை முடித்தான் சசி மித்ரன்.. அதோடு விட்டது சனியென அவன் சற்று மூச்சு விட அடுத்த கட்ட பிரச்சனை ஆரம்பமானது.
போட்டோ ஷூட்டின் போது சசி நாயகனுக்கும் மேதினிக்கும் எப்படி போஸ் தர வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்க, ஒரு கட்டத்தில் அதனை செய்து காட்டினான் மேதினியை வைத்து.
இது இயல்புதான்.. மேதினி அதனை தன்னுடைய சோசியல் பக்கத்தில் பகிர்ந்தாள்.. அடுத்த அரைநாளில் நாடு முழுவதும் இயக்குனர் சசி நடிகை மேதினியை பற்றி காட்டு தீ போல் பரவியது..
பரவியத் தீயை அணைக்காமல் அதனை விசிறி இன்னும் பெரிதாக்க நினைத்த மேதினி, தன்னுடைய மேனேஜரை வைத்து சோசியல் மீடியாக்களில் அவளாகவே பொய்யான தகவல்களை கொடுத்தாள்..
சசி பக்கம் இன்னும் அழுத்தம் கூடியது. எந்த பக்கம் திரும்பினாலும் அவனும் மேதினியும் சிரிப்பாய் சிரித்தார்கள்..
“ஹேய் மேதினி.. உன் புத்தி என்ன புல்லு மேய விட்ருக்கியா.. எதுக்கு இப்படி ஃபேக்கான நியூஸ் கொடுத்து பிரஷர் பண்ற.. ஒழுங்கு மரியாதையா நீ ஷேர் பண்ண போஸ்ட்ட டெலிட் பண்ணு..” உச்சபட்ச டென்ஷனில் கத்திக் கொண்டிருந்தான் சசி மித்ரன்.
மேதினிடமிருந்து எந்த ரியாக்ஷனும் வராமல் தயாரிப்பாளர் பக்கமிருந்து ஆர்ப்பாட்டமான வரவேற்பு கிடைத்தது.
” நாமளே காசு கொடுத்து செஞ்சுருந்தா கூட இப்படி ஒரு பிரமோஷன் நம்ம படத்துக்கு கிடைச்சிருக்காது.. பிரீ ப்ரோமோஷன்”.. தயாரிப்பாளரை வெறிக் கொண்டு முறைத்தான் சசி.
” என்ன சார் நீங்க பாட்டுக்கு வாய்க்கு வந்ததெல்லாம் பேசிட்டு இருக்கீங்க.. இப்ப கூட உங்களோட சுய லாபத்தை தான் பாப்பீங்களா.. எனக்கும் பர்சனல் லைஃப் இருக்கு அத பத்தி கொஞ்சமாச்சும் யோசிச்சு பாத்தீங்களா. நான் வீட்டுக்கு போயி ரெண்டு நாள் ஆகுது சார். என் பொண்டாட்டி கிட்ட இருந்து எப்ப போன் வரும்னு தெரியல பக்கு பக்குன்னு இருக்கு..”
” நீ ஒருத்தன்.. என்னமோ புதுசா கல்யாணம் பண்ண மாதிரி கெடந்து குதிக்கிற.. இப்ப சோசியல் மீடியால நம்பர் ஒன் ட்ரெண்டிங் நம்ம படத்த பத்தி தான்.. ரிலீஸ் ஆகுறதுக்கு முன்னாடியே அவன்வன் நம்ம படத்த பத்தி தான் அவலா மென்னுட்டு இருக்கானுங்க.. அதைக் கெடுக்க நினைக்காத சசி.. உன் பொண்டாட்டி என்ன சின்ன பிள்ளையா.. இந்த பீல்டுல இதெல்லாம் சகஜம் எடுத்து சொல்லு..” சசி பக்க நியாயத்தை தயாரிப்பாளர் காதில் போட்டுக் கொள்ளவில்லை.
மேலும் அவனிடம் தனியாக” புரிஞ்சுக்கோ பா.. எனக்கும் குடும்பம்னு இருக்கு. பொம்பள பிள்ளைகளை பெத்து வச்சிருக்கேன். அந்த கஷ்டம் என்னன்னு உனக்கும் தெரியும். இந்த படத்தை நம்பி தான் என் குடும்பமே உயிரை கைல புடிச்சிட்டு இருக்கு. ஏதாச்சும் கோக்கு மாகாச்சின்னா குடும்பத்தோட நாண்டுக்கிட்டு தொங்குறத தவிர எங்களுக்கு வேற வழி இல்ல.. இந்த நெருப்பு அணையறதுக்குள்ள அந்த பொண்ண கூட்டிட்டு நீயே நாலு இடத்துக்கு போ..
இது எல்லாமே நம்ம படத்துக்கு ஃப்ரீ ப்ரொமோஷன்.. உன்ன தான் நம்பியிருக்கேன்.. என் கண்ணு முன்னுக்கு தெரியிற சாமி நீ தான்.. ” வாய்க்கு வந்ததை உளறி வைத்தார் தயாரிப்பாளர்.
அழுத்தத்தின் மேல் அழுத்தம் கூடியது. தென்றல் அழைத்து பேசியிருந்தால் கூட மனம் ஆறிருக்கும்.. அலுவலகத்திலேயே தங்கிவிட முடியாது என்பதால் தயக்கத்தோடு வீட்டிற்கு சென்றான்.
பிள்ளைகள் இருவருக்கும் அவனிடம் பெரிதாய் மாற்றமில்லை.. ஆனால் தென்றல் அவனை பார்த்த பார்வை இருக்கிறதே!..
முதுகுத்தண்டு சிலிட்டது அவனுக்கு. தவறு அவன் பக்கமில்லை. முதலில் தயங்கினாலும் தைரியமாக பின்பு அவளை ஏறிட்டான்.
” சோசியல் மீடியால கண்டது வரும் எல்லாத்தையும் நம்புவியா..” வம்பை விலை கொடுத்து வாங்கிக் கொண்டிருந்தான்..
” நான் எப்ப நம்புறேன்னு சொன்னேன்.. ” தென்றல் மார்புக்கு குறுக்கே கைகளை கட்டிக்கொண்டு அவனை பார்த்து கேட்டாள். அவள் நின்ற தோரணை தன்னை விசாரிப்பது போல அமைய அவனுக்கு எரிச்சல் மண்டியது.
” நீ சொல்லல ஆனா நீ சந்தேகமா பாக்குறது எனக்கு தெரியுது.. “
” உங்க கண்ணுல கோளாற வச்சுக்கிட்டு என்ன குறை சொல்லாதீங்க”
” அப்படின்னா விஷயம் என்னன்னு கேள்விப்பட்ட அடுத்த செகண்டே நீ எனக்கு ஃபோன் பண்ணிருக்கனுமா இல்லையா.. “
” நீங்க உத்தமனா இருந்தா எனக்கு ஃபோன் பண்ணிருக்கணும் தானே..”
” என்ன சந்தேகப்படுறியா”
” இதுவரைக்கும் இல்லை”
” அப்போ இனிமே”
தென்றலின் அமைதி அவன் ரத்தத்தை கொதி நிலைக்கு கொண்டு சென்றது.