பரம்பரை பரம்பரையாக தொழிலில் பழம் தின்னு கொட்டை போட்டு வரும் அவர்களுக்கு யார் மெய் சொல்வார் யார் பொய் கூறுவார் என்று தெரியாமலா இருக்கும்..

நேர்கொண்ட பார்வையோடு தன் மகளின் கஷ்டத்தை வாய் விட்டு சொல்லிக் கொண்டிருப்பவளை கண்டதும் சைதன்யாவை வெட்டி போடும் அளவு ஆத்திரம் வந்தது சத்யனுக்கு. தர்ஷினியை போல அல்லாமல்  கொஞ்சமே கொஞ்சம் மனிதாபிமானம் கொண்டவன் சத்யன்..

” உங்க பொண்ணு கொஞ்சம் வளர்ந்ததும் நான் மன்னிப்பு கேட்டேனு சொல்லுங்க.. இப்ப சொன்னா அவளுக்கு புரியாது.. இப்படி ஒரு தறுதலையை பெத்ததுக்கு  நான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்கிறேன்..”

” உங்க மன்னிப்பு எனக்கு தேவையில்லை.. “

” தெரியும்.. எந்த நம்பிக்கைல நீங்க என்னை நம்பி வந்து சொன்னீங்கன்னு எனக்கு தெரியாது.. ஆனா என் பையனால நீங்களும் உங்க பொண்ணு அனுபவிச்ச மன கஷ்டத்துக்கு கண்டிப்பா நான் நியாயம் செய்ய வைப்பேன்.. “

” யோசிச்சு பார்த்தா சைதன்யா சின்ன பையன். எப்படி அவன் மனசுல இப்படி ஒரு அழுக்கு வந்துச்சுன்னு எனக்கு தெரியல. சரியான வளர்ப்பு இல்ல. என் பொண்ணுக்கு எதுவும் ஆகாம இருக்கறதுனால தான் இந்த நிமிஷம் வரைக்கும் நான் உங்க கிட்ட பேசிட்டு இருக்கேன்.. எப்பவும் இப்படி பேசுவேன்னு நீங்க நினைக்கக் கூடாது.. “

தென்றல் சென்று விட சத்யன் யோசனையில்  அமர்ந்து விட்டான்.மீட்டிங் கேன்சல் ஆனது. அந்தப் பெண் சொல்லி சென்றது போல வளர்ப்பு சரியில்லை.. இப்படியே விட்டால் பத்திரிகைகளில் சமூக ஊடகங்களிலும்  நாள் ஒரு மேனியும் பொழுது ஒரு வண்ணமுமாக வெளிவரும்   பாலியல் பலாத்காரப் பட்டியலில் தன்னுடைய மகனும்  ஒரு அங்கமாக வந்து விடுவான் என்கிற நினைப்பு சத்யனை ஆட்டம் காண வைத்தது..

உடனே சத்யன் பள்ளிக்கு கிளம்பினான்.. பாதி நேரத்திலேயே அவனை அழைத்துக் கொண்டு  அவர்களின் பீச் ஹவுஸ் சென்றான்.

“என்ன டேட்” புரியாமல் வினவியை சைதன்யாவுக்கு  அடி பலமாய் விழுந்தது.

“பொறுக்கி ராஸ்கல் மொளச்சு மூணு எல்லாம் விடல அதுக்குள்ள உனக்கு எங்க இருந்துடா இந்த பொறுக்கி புத்தி வந்துச்சு..” அடி விலாசி விட்டான் சத்யன்..

அடியின் நடுவே நடந்ததை அவன் கூட, தந்தையை எதிர்க்க முடியாமல் துவண்டு விழுந்தான் சைதன்யா.

” உனக்கும் ஒரு தங்கச்சி இருக்கு. அத பத்தி கொஞ்சம் கூட உனக்கு கவலை இல்லை. இந்த வயசு இல்ல எந்த வயசா இருந்தாலும்  இப்படி ஒரு தப்ப பண்ண உனக்கு என்ன துணிச்சல் இருக்கணும்.. செய்வியா.. செய்வியா ” அடி ஒவ்வொன்றும் இடியாய் விழுந்தது.

“நோ ப்பா.. செய்ய மாட்டேன் ப்ளீஸ் விட்ருங்க..” கதறினான் சைதன்யா. கை ஓயும் மட்டும்  அவனை அடித்து வெளுத்த சத்யன்

” இதப்பத்தி வெளியே யார்கிட்டயும் மூச்சு விடக்கூடாது.. பிளஸ் டூ முடிச்ச கையோட நீ அப்ரோட் போற.. வீட்டில எப்படி அடிபட்டுச்சுன்னு கேட்டா  ஸ்கூல்ல ஃப்ரண்ட்ஸ்குள்ள பிரச்சனைன்னு சொல்ற.. இனிமே எக்காரணம் கொண்டும் அந்த வீட்டு பக்கத்து நீ தலை வச்சு படுக்க கூடாது.. மீறி ஏதாவது ஒன்னு என் காதுல விழுந்துச்சு பெத்த புள்ளன்னு பாக்க மாட்டேன் சுட்டு தள்ளிடுவேன்.. ” சைதன்யா பயத்தோடு தலையாட்டினான்..

தென்றல் மதிய உணவு வேலை முடிந்து அலுவலகத்திற்கு சென்று இருந்தாள்.. அவளை மீண்டும் தன்னுடைய அலுவலகத்திற்கு வரச் சொல்லி இருந்தான் சத்யன். வேலை முடிந்து நேராக அங்கே சென்றாள்.

சத்யனுடைய தனிப்பட்ட அறையில்  அடி வாங்கி சுருண்டு படுத்திருந்தான் சைதன்யா..

” பேட் டச் பண்ணதுக்கே இந்த நிலைமை.. இதுவே வேற மாதிரியா இருந்தா  நீங்க சொன்ன மாதிரி என் பையன் படத்துக்கு மாலை தான் போட்டுருக்கணும்..” ஒரு நல்ல தகப்பனாக சத்யன் பேசினான்.

” நான் அவன பாக்கலாமா”..

“ம்ம்ம்” சைதன்யா படுத்திருந்த அறைக்குள் நுழைந்தாள் தென்றல்.

உடல் முழுவதும் வீங்கி கன்றி சிவந்து  எழுந்து அமர கூட திராணியற்ற நிலையில் படுத்திருந்தான் சைதன்யா. அவன் அருகே சென்று அமர்ந்தாள் தென்றல். பக்கத்தில் ஆள் அரவம் உணர்ந்து சைதன்யா கண்விழிக்க  எதிரில் தென்றலை கண்டதும் பயத்தில் அவனது விழிகள் விரிந்தன.

” குட் டச் பேட் டச் உங்க வீட்ல யாரும் உனக்கு சொல்லிக் கொடுக்கலையா.. என் பொண்ணா இல்லாம இதுவே உன் தங்கச்சியா இருந்திருந்தா இந்த மாதிரி பண்ணிருப்பியா.. ” நிதானமாக கேள்வி கேட்டாள் தென்றல். சைதன்யா கண்கள் கலங்கியது.

” ஸ்கூல்ல சொல்லிக் கொடுத்து இருப்பாங்களே.. கூடா நட்பு கேடு விளைவிக்கும்னு.. சேர்க்க சரியா இருக்கணும்.. இப்ப கூட என் கண்ணுக்கு நீ ஒரு பதினேழு வயசு பையனா தெரியல.. உன்ன மொத மொத நான் பார்க்கும் போது  என் பொண்ணு குழலி வயசு தான் இருந்திருக்கும்..

எப்படி உனக்குள்ள இப்படி ஒரு சாத்தான் பூந்துச்சு.. சைதன்யான்ற பேர சாத்தானு மாத்தி வெச்சிக்கிட்டியா?

உன்ன செருப்பால அடிக்கணும்னு அளவுக்கு எனக்கு ஆத்திரம் இருக்கு.. ஏற்கனவே நீ செத்த பாம்பு. இதுக்கு மேலயும் உன்ன அடிக்க  எனக்கு மனசு வரல. நாளைக்கு உனக்கும் கல்யாணம் நடக்கும். ஒரு பொண்ணு பொறக்கும். அதுவும் வாய் பேச முடியாத பொண்ணா இருந்து அந்த பிள்ளைக்கு இப்படி ஒரு நிலைமை வந்தா நீ என்ன பண்ணுவ.. நாமளே ஒரு காலத்துல இததான செஞ்சோம்.. இதெல்லாம் சர்வ சாதாரணன்னு தூசி மாதிரி தட்டி விட்டு போயிருவியா.. போக முடியுமா.. ” சைதன்யா கண்களில் இருந்து கண்ணீர் வடிந்தது.

இந்த விஷயத்தை நான் அன்னைக்கே செஞ்சிருப்பேன். கொஞ்ச நாள் விஷயத்தை நான் ஆற போட்டேன்.. ஒருவேளை நீ நீயா இல்லாம ஏதோ ஒரு நினைப்புல  தெரியாம தப்பு பண்ணிட்டியோனு யோசிச்சேன்.. இப்பதான் பிஞ்சிலேயே பழுத்திடறீங்களே..ஆனா நேத்து  எங்க வீட்ல உன்ன பார்க்கும்போது உன் கண்ணுல ஒரு சொட்டு பயம் இல்லை. அப்பதான் தெரிஞ்சது எல்லாமே நீ பிளான் பண்ணி தான் பண்ணிருக்க.

ஆனா உன்ன பாத்த என் பொண்ணு குளிர் காய்ச்சல் வந்து படுத்திருக்கா.. காலம் முழுக்க இது அவ மனசுல வடுவா இருக்கும். எதுக்கு என் பொண்ணுக்கு இவ்வளவு பெரிய தண்டனை கொடுத்த.. ” சைதன்யா தட்டு தடுமாறி எழுந்து தென்றல் கையைப் பிடித்து கதறி விட்டான்.

” என்ன மன்னிச்சிடுங்க ஆன்ட்டி.. நான் ஏதோ.. நான் செஞ்சதுக்கு என்னால ரீசன் சொல்லவே முடியல.. என்ன மன்னிச்சிடுங்க” கத்தி கதறி அழுத்த சைதன்யாவை பார்த்துக் கொண்டே தென்றல் எழுந்து சென்றாள்.

ஒரு வாரம் கழிந்த நிலையில் சைதன்யா தந்தையோடு சசி வீட்டிற்கு வந்திருந்தான்.

அவனைக் கண்டதும்  பேயை பார்த்தது போல பூங்கொடி அலறி அடித்து ஓடினாள். சத்யன்   அவமானத்திலும் மகன் செய்த அசிங்கத்திலும் கைகள் முறுக்கேறி அங்கேயே சைதன்யாவை கொன்று போடும் அளவு ஆத்திரத்தோடு நின்றான்..

சம்பந்தப்பட்டவர்களை தவிர வேறு யாருக்கும் இந்த பிரச்சனை தெரிந்திருக்கவில்லை. திடீரென்று வீட்டிற்கு வந்த சத்யனை  விசாலாட்சி வரவேற்று பேசினார். தர்ஷினி வீட்டில் இல்லாத நேரம் சத்யன் மகனோடு வந்தது  அவருக்கு குழப்பமாய் இருந்தது.

இந்த பக்கம் ஒரு வேலை..அப்படியே உங்களை பார்த்துட்டு போலாம்னு.. சத்யன் கூறியதை நம்பினார் விசாலாட்சி..

சிறிது நேரம் பேசிவிட்டு  சத்யன் சைதன்யாவை அழைத்துக் கொண்டு கிளம்ப  தோட்டத்தில் பூங்கொடியை சமாதானப்படுத்திக் கொண்டிருந்தாள் தென்றல்.

சைதன்யா வேகமாக அங்கே சென்றான். அவன் வருவதை கண்டதும் கொடி அம்மாவை இறுக்கமாக கட்டிக் கொண்டாள். அவளது உடல் பயத்தில் நடுங்கியது. கண்களில் கண்ணீர் அருவியாய் கொட்டியது. அனைத்தையும் சைதன்யா மனம் படம் பிடித்தது. எவ்வளவு பெரிய தப்பை சுலபமாக செய்யவிருந்தோம் என்று அவனுக்கு புரிந்தது. தன்மீதே அவனுக்கு கோபம் வந்தது..

வேகமாக வந்தவன் தென்றல் அருகே மண்டியிட்டு அமர்ந்தான். குழலி அவனை அசூசையாக பார்த்துக் கொண்டிருந்தாள்.

“பூங்கொடி..” தயங்கியவாறு அழைத்தான் சைத்தன்யா.

“அவளுக்கு காது கேட்காது”

பூங்கொடி இன்னும் இறுக்கமாய் அம்மாவிடம் புதைந்து கொள்ள  சைத்தன்யா வெட்கி தலைக் குனிந்தான். அந்த காரணம் அவனுக்குமே தெரியுமே..

பட்டென்று பூங்கொடியின் காலை தொட்டான் சைதன்யா..

ஸ்பரிசம் உணர்ந்து கொடி பயத்தோடு அவனை திரும்பிப் பார்க்க அவன் நெஞ்சில் கை வைத்து கண்ணீர் வழிய ஸாரி என்றான்..

பூங்கொடி அம்மாவை பார்த்தாள். தென்றல் அசையாமல் அமர்ந்திருந்தாள்.. கொடிக்கு சைதன்யா கண்ணீரில் என்ன தெரிந்ததோ அழாதே என்று செய்கை காட்டினாள் அவனைப் பார்த்து.

சைதன்யா மிகவும் நொறுங்கிப் போனான்.. எத்தகைய தவறை அந்த சின்ன மொட்டுக்குச் செய்யவிருந்தான். ஆனால் அவனது கண்ணீரையும்  அவனது மன்னிப்பையும் நொடியில் தனக்கு நடக்கவிருந்த அநியாயத்தையும் மறந்து மனிதாபிமான அடிப்படையில் அவன் மீதும் கரிசனம் காட்டிய அந்த சின்ன பெண் அவன் மனதில் உயர்ந்து விட்டாள்..

மீண்டும் பூங்கொடியின் பாதத்தை தொட்டவன் தன்னுடைய வாழ்வில் இனி  தெரியாமல் கூட ஒரு பெண்ணை தவறாக பார்க்க கூடாது என்கிற எண்ணத்தோடு எழுந்து சென்றான்.

பூங்கொடி தென்றலை பார்த்து சிரித்தாள்.. அந்த சிரிப்பில் தென்றலின் மனதில் இருந்த பாரம் மெல்ல கரைந்தது..

அவ்வளவு சீக்கிரம் இளம் மனதில் ஏற்பட்ட ரணம் மறையாது.. ஆனால் கால ஓட்டம் இதை கடக்க வழி வகிக்கும்..

தொடரும்…