சசியின் படவேலை ஒரு பக்கம் படு பிஸியாக சென்று கொண்டிருக்க, தென்றல் தன்னுடைய மன நிம்மதியை சுத்தமாக இழந்தாள். கணவனிடம் மகளுக்கு நடந்த கொடுமையை சொல்லாமல் மறைத்திருந்தவளுக்கு ஒவ்வொரு நாளும் அந்த சின்ன மொட்டை பார்க்கும் போது மனம் அரிக்கத் தொடங்கியது.
மகளுக்கு தான் துரோகம் செய்வதாக அவள் இதயமே அவளை கொன்று கிழித்தது. வாயுள்ள பிள்ளையாக இருந்தால் கூட மன வேதனையை வாய் விட்டு புலம்பும். பூங்கொடியின் நிலையை எண்ணிப் பார்க்க இதயம் கனத்தது.
ஒரு காலத்தில் அவளும் சரி வான்மதியும் சரி பேருந்தில் சென்றால் கயவர்கள் யாராவது தவறாக நடந்து கொள்ள கூடும் என்பதால் வாசுகி தனியாக பிள்ளைகளை எங்கேயும் அனுப்ப மாட்டார். கூட்டம் அதிகமாக முண்டியடிக்கும் பேருந்துகளில் பிள்ளைகளோடு செல்ல மாட்டார். ஒன்று ஆட்டோ இல்லையென்றால் கூட்டமே இல்லாமல் வரும் பேருந்திற்காக மணிக்கணக்காக கூட காத்திருந்த காலங்கள் உண்டு.
அவளை விட ஒரு தலைமுறை முன்னிருந்த அம்மாவே குழந்தைகளை இந்த அளவிற்கு பாதுகாக்கும் போது அவளுக்கு என்ன வந்தது?
மெதுவாக கொடியிடம் பேச்சு கொடுத்து பார்த்தாள்.. குழந்தை தனக்கு நடந்த அசம்பாவிதத்தை மறக்காமல் இன்னும் ஞாபகம் வைத்திருந்தாள். அவ்வளவு சீக்கிரம் அது கொடியின் மனதில் இருந்து அகலாது. ஏன் அவள் குடுகுடு கிழவியான பிறகும் இந்த நினைவுகள் அவள் மனதை குத்தி கிழிக்கக்கூடும்.
யோசித்து யோசித்து மண்டை காய்ந்தது தான் மிச்சம். தர்ஷினி அதே வீட்டில் இருந்தாலும் தென்றலை பார்க்க நேர்ந்தாலும் எதுவுமே நடக்காததை போல காட்டிக் கொண்டாள்.
சரியாக மூன்று மாதங்கள் கழிந்த நிலையில் பிள்ளைகளோடு கோயிலுக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பினாள் தென்றல். ஹாலில் அமர்ந்து வருணோடு விளையாடிக் கொண்டிருந்தான் சைதன்யா.
அக்காவிடம் வம்பிழுத்து விட்டு வேகமாக வீட்டிற்குள் ஓடி வந்த பூங்கொடி ஹாலில் சைதன்யாவை கண்டதும் அவளது கால்கள் ரெண்டும் சடன் பிரேக் போட்டன. பேயை கண்டு அரண்டது போல அவள் முகம் வெளிரிப் போனது…
“ஹேய் புடிச்சிட்டேன்..” குழலி பின்னால் ஓடி வந்து நின்று கொண்டிருந்த தங்கையைப் பிடித்துக் கொள்ள இப்பொழுது தான் அவளும் கவனித்தாள் சைதன்யா அமர்ந்திருப்பதை.. அவனைப் பார்க்கும் போது அப்படியே நங்கு நங்கென்று அவன் தலையில் குட்ட வேண்டும் போல இருந்தது பூங்குழலிக்கு.
பிள்ளைகள் இருவரையும் பார்த்தபடி வீட்டிற்குள் நுழைந்த தென்றல் சைதன்யாவை பார்த்ததும் ஆணி அடித்ததைப் போல நின்று விட்டாள். அவளின் கண்கள் ஆட்டோமேட்டிக்காக கொடியை நோக்க குழந்தை கை கால் நடுங்க ஆரம்பித்து விட்டது. தென்றல் தன்னை பார்க்கும் பார்வையிலேயே அவளுக்கு அனைத்தும் தெரிந்து விட்டது என்பதை உணர்ந்த சைத்தன்யா கவனமாக அவனின் பார்வையை வேறு பக்கம் திருப்பிக் கொண்டான்..
அதற்குள் தர்ஷினி வந்துவிட சைதன்யா தர்ஷினி பின்னால் சென்றான்..
தென்றல் வேகமாக சென்று குழந்தையை தூக்கிக் கொண்டாள். அன்று இரவு பயத்தின் காரணத்தால் கொடிக்கு மீண்டும் காய்ச்சல் கண்டது.. தென்றல் உறக்கம் பறந்து போனது.
இந்த மன அழுத்தத்தில் இருந்தால் கண்டிப்பாக இதயம் வெடித்து விடும் என்பதால் இதற்கு மறுநாளே முடிவு கட்ட எண்ணினாள் தென்றல்..
மறுநாள் காலை எழுந்ததும் பிள்ளைகளை பள்ளிக்கு கிளப்பியவள் அலுவலகத்திற்கு அழைத்து அரை நாள் விடுப்பு எடுத்துக் கொண்டாள்.
நேராகத் தென்றல் சென்றது தர்ஷினி அண்ணனின் அலுவலகத்திற்கு.. தர்ஷினிக்கு திருமணமான இத்தனை வருடத்தில் அவளின் குடும்பத்தாரோடு தென்றல் எந்த வித பேச்சுவார்த்தையும் வைத்துக் கொள்ளவில்லை.
சோமசுந்தரத்தின் குடும்பத்தை விட பல படி பணநிலையில் மேல் உள்ள குடும்பம் தர்ஷினி உடையது.. தேவாவின் ஒழுக்கத்திற்கும் சோமசுந்தர குடும்பத்தின் பாரம்பரியத்திற்கும் தங்களின் மகளை அந்தஸ்து பார்க்காமல் கட்டிக் கொடுத்திருந்தார்கள்.
எப்போதோ சசி சொல்லி கேட்டிருக்கிறாள் இந்த அலுவலகம் தர்ஷினி அண்ணனுக்கு சொந்தமானது என்று.
ரிஷப்ஷனிஸ்ட் பெண் சிரித்த முகமாக “எஸ் மேம் ஹொவ் கேன் ஐ ஹெல்ப் யூ”என்றாள்.
தான் யார் என்று சொன்னால் பார்க்க மறுத்து விடுவானோ என்கிற பயத்தில் சிறிது யோசித்தாள் தென்றல். பிறகு ஆரம்பத்திலேயே பொய் வேண்டாம் என்பதால் தான் யார் என்பதை குறிப்பிட்டு உடனே தர்ஷினியின் அண்ணன் சத்யனை பார்க்க வேண்டுமென்றாள் தென்றல்.
அவளை ஏற இறங்க பார்த்த ரிசப்ஷனிஸ்ட் பெண் சத்தியனின் பிஏவிடம் தென்றல் வருகையை தெரிவித்தாள்.. உடனே அவன் சத்யனிடம் கேட்டு தென்றலை சத்யன் அறைக்கு வர சொன்னான்..
தென்றல் என்றால் சசியின் மனைவி என்கிற ரீதியில் மட்டுமே சத்யனுக்கு அறிமுகம். திடீரென்று அவள் எதற்காக தன்னை பார்க்க வர வேண்டும்? அவனுடைய அனைத்து கேள்விக்கும் பதிலாக முன்னே வந்து நின்றாள் தென்றல்..
நாற்பதுகளின் ஆரம்பத்தில் இருந்தான் சத்யன்.. தென்றலை அமர சொன்னான்.
தென்றல் அமைதியாக அமரவும்” சொல்லுங்க”என்றான்.
மரியாதைக்கு கூட குடிக்க நீர் வேண்டுமா என்று கேட்கவில்லை. அந்த ஒரு குணத்தை வைத்து இவன் தான் சொல்ல வருவதை எவ்வளவு தூரம் காதுக் கொடுத்து கேட்பான் என்கிற சந்தேகம் வந்து விட்டது அவளுக்கு.
” இட்ஸ் ஓகே.. இன்னும் டென் மினிட்ஸ்ல எனக்கு மீட்டிங் ஸ்டார்ட் ஆயிரும்..” நாசுக்காக கடிகாரத்தை பார்த்தான். தென்றலின் கோபம் தலை உச்சிக்கு ஏறியது.
“ரைட்.. உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேச வந்தேன்.. தயவு செஞ்சு நான் பேசி முடிக்கிற வரைக்கும் கொஞ்சம் அமைதியா கேளுங்க”.. நடந்த அனைத்து விஷயத்தையும் தென்றல் சொல்லி முடிக்க உண்மையாகவே அவ்வளவு பொறுமையாக காது கொடுத்து கேட்டுக் கொண்டிருந்தான் சத்யன்.
தென்றல் சொல்லி முடித்தவன் முகம் பார்க்க சத்யன் முகத்தில் ஈயாடவில்லை.
” நான் மொத சொல்லிடுறேன்.. உங்க அளவுக்கு இல்லாட்டியும் நாங்களும் ஓரளவு வசதியானவங்கதான். உங்க தயவால எங்களுக்காக எதுவும் நடக்க போறது கிடையாது.. இது ரெண்டையும் மனசுல வச்சுக்கிட்டு நான் சொன்னதை யோசிச்சு பாருங்க..” மிக சாமர்த்தியமாக பணத்துக்காக தான் சூழ்ச்சி வலை பின்னவில்லை என்று சொல்லிவிட்டாள்.
” இது நடந்த இவ்வளவு நாள் ஏன் என்கிட்ட சொல்லல..” அவன் கேட்ட கேள்விக்கு தென்றல் தலை குனிந்தாள்.
” எங்க பேச்சே எடுபடுமானு எனக்கு தெரியல. கூடவே இத்தனை வருஷம் பெயிலியரா சுத்திட்டு இருந்த என்னோட புருஷனுக்கு அன்னைக்குனு பார்த்து தான் ஒரு நல்லது நடந்துச்சு. இந்த விஷயத்தை நான் அவர்கிட்ட சொல்லிருந்தா இந்நேரம் உங்க பையன் படத்துக்கு மாலை போட்டுருப்பீங்க.
அப்போ இப்ப எதுக்கு வந்து பேசுறன்னு பாக்குறீங்களா.. ஒவ்வொரு நாளும் என்னோட குழந்தையோட முகத்தை பார்க்கும்போது குற்ற உணர்ச்சியில செத்துகிட்டு இருக்கேன். அம்மா ஏதாவது செய்ய மாட்டாளா? இனிமே இந்த மாதிரி நடந்தா என்ன செய்யறதுன்னு அந்த குழந்தை மனசுக்குள்ள நினைக்கிறது என்னை நிம்மதியா இருக்க விடல..
எல்லாத்துக்கும் மேல எந்த தப்பு செய்யாத என் குழந்தை சொந்த வீட்டிலேயே தப்பு செஞ்ச சைதன்யாவ பார்த்து பயந்து நிற்கிறா.. இதெல்லாம் எதுனால.. எங்ககிட்டயும் கோடி கணக்குல பணம் இருந்திருந்தா தர்ஷினி நான் சொல்றது காது கொடுத்து கேட்டுருப்பா..
வாய் பேச முடியாத என் மகளுக்காக நான் தான் பேசணும். இந்த விஷயத்தை பெருசு படுத்த நான் விரும்பல. எந்த விதத்திலும் இதை நான் வெளிய சொன்னா என் பொண்ண தான் எல்லாரும் திட்டுவாங்க.. அவ வளர வளர பணத்துக்காக சின்ன வயசுலயே நீ அந்த மாதிரி பொய் சொன்னவனு ஒரு பழி அவ மேல விழுந்துரும்..
எந்தவிதமான சாட்சி இல்லாத நடந்த சம்பவத்துக்கு என் பொண்ணுங்களும் உங்க பையனும் அந்த கடவுளும் தான் சாட்சி.. இந்த வயசுலயே இப்படி பண்றவன் இன்னும் காலேஜ் போயிட்டா யோசிச்சு பாருங்க.. உங்களுக்கும் ஒரு பெண் குழந்தை இருக்கு.. எங்க வயித்தெரிச்சல் உங்க குழந்தையை நிம்மதியா வாழ விடாது..” தான் சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டு சத்யன் முகத்தை அவள் சொல்வது அனைத்தும் உண்மை என்று அவன் மனம் கூறியது.