அகிலன் வான்மதி திருமணத்திற்காக ஒரு வாரம் இருக்கும் பொழுது அலுவலகத்தில் விடுமுறை சொல்லியவள் பிள்ளைகள் இருவரையும் அழைத்துக் கொண்டு கோயம்புத்தூர் கிளம்பினாள்.
சசி தயாரிப்பாளரோடு ஒரு மீட்டிங் இருப்பதாக கூற அவனை தொல்லை செய்யவில்லை தென்றல். அவளும் பார்த்துக்கொண்டு தானே இருக்கிறாள். இம்முறை தன்னை நிரூபித்தே ஆக வேண்டிய நிர்ப்பந்தத்தில் இரவு பகல் பாராமல் உழைத்துக் கொண்டிருக்கிறான் சசி மித்ரன்.. தயாரிப்பாளரின் விருப்பத்தைப் போல கதையில் சில மாற்றங்களை தினமும் செய்து கொண்டிருக்கிறான்.
இருந்துமே தானே அவளை அழைத்துச் சென்று பெற்றோர் வீட்டில் விடுவதாக அவன் கூற தென்றல் அதனை மறுத்து விட்டாள். பத்திரமாக அவளை கோயம்புத்தூருக்கு பஸ் ஏற்றி விட வந்தான்.
என்னவோ தெரியவில்லை திருமணமானதிலிருந்து இருவரும் பிரிந்திருந்ததில்லை. இதுவே முதல் தடவை என்பதால் இருவருக்குமே மனம் கனத்து போனது..
“ம்ம்ம் அங்க போயிட்டு எனக்கு கால் பண்ணு.. மாமா பஸ் ஸ்டாண்டுக்கு வந்துடறேன்னு சொன்னாரு..ம்ம் அப்புறம்..ஹான் பாத்ரூம் போகும்போது பாத்துக்கோ.. குழலி கொடிய கவனமா பாத்துக்க சொல்லு..
கண்ட இடத்துல நிப்பாட்டுவானுங்க.. கடை சுத்தமா இருந்தா மட்டும் சாப்பாடுங்க. இல்லனா பிஸ்கட் இருக்கு உன் பேக்ல சிப்ஸ் வாங்கி வச்சிருக்கேன். அப்புறம் சாக்லேட் ட்ரிங்க் கூட வச்சிருக்கேன்..”
அனைத்திற்கும் தலையாட்டினாள் தென்றல்..
” பத்திரமா போயிருவ இல்ல.. ” சசியின் தடுமாற்றம் அவளுக்கு புதிதாக இருந்தது..
” அதெல்லாம் நான் பத்திரமா போயிருவேன்.. நீங்க எவ்வளவு சீக்கிரம் வேலை முடியுதோ அவ்வளவு சீக்கிரம் வந்து சேருங்க.. நேரத்துக்கு சாப்பிடுங்க.. ” தென்றலுக்கும் தொண்டை அடைத்துக் கொள்ள இருந்தாலும் தன்னை சமாளித்துக் கொண்டாள்.
” சரி கவனமா இரு.. கெர்டன் நல்லா இழுத்து விட்டுக்கோ.. ஏதாச்சும் ஒன்னுனா உடனே கால் பண்ணு.. ” என்றவன் குழந்தைகள் பக்கம் திரும்பினான்.. கொடியை தூக்கி வைத்து கன்னத்தில் முத்தம் கொடுத்தான்.
குழலியின் கன்னத்தில் முத்தமிட்டு” ஃபர்ஸ்ட் டைம் தாத்தா வீட்டுக்கு போறீங்க.. அங்க போயிட்டு சேட்ட பண்ண கூடாது.. அது வேணும் இது வேணும்னு தாத்தாவுக்கு செலவு வைக்க கூடாது. அம்மா சொல்றபடி கேட்டு நடக்கணும்.. சமத்தா இருக்கணும்.. தங்கச்சிய நல்லா பாத்துக்கோ.. ” குழலி சரியென்று தலையாட்டினாள்..
பேருந்து கிளம்ப ஆயத்தமாக தென்றல் குழந்தைகளோடு பேருந்தில் ஏறினாள். படுத்துக்கொண்டே செல்வதற்கு வசதியாக சீட்டை எடுத்திருந்தாள்.. குழந்தைகளும் அவளும் அவர்களுக்கான சீட்டில் அமர்ந்து கொள்ள ஜன்னல் வெளியே அவர்களைப் பார்த்தபடி நின்றிருந்தான் சசி.
ஷூட்டிங்கில் இருக்கும் போது பல தடவை சசி வீட்டிற்கே வராமல் இருந்திருக்கிறான். அப்போதெல்லாம் இல்லாத தனிமை திடீரென்று இப்பொழுது மனம் முழுவதும் வியாபித்திருந்தது..
பேருந்து கிளம்ப குழந்தைகள் சசிக்கு டாட்டா காட்ட தென்றல் சின்ன தலையசைப்போடு தன் சொந்த ஊருக்கு கிளம்பினாள்.
கோயம்புத்தூருக்கு வந்து இறங்கும்போது பரசுராம் அரை மணி நேரத்திற்கு முன்பாகவே வந்து அங்கே காத்திருந்தார்.. மகளையும் பேரப்பிள்ளைகளையும் கண்டவருக்கு ஆனந்தம் தாண்டவம் ஆடியது..
பிழைப்புக்காக ஹரிதாஸ் சென்னை வந்து செட்டில் ஆனாலும் அவரின் பூர்வீகமும் கோயமுத்தூர் தான். உறவுகள் பலர் அங்கே இருக்க திருமணத்தை அங்கேயே நடத்திவிட விரும்பினார் ஹரிதாஸ்.
“வாடா..” தென்றலின் கையில் இருந்து பேக்கை பெற்றுக்கொண்ட பரசுராம் பேரப்பிள்ளைகளுடன் பேசியபடி காரை நோக்கி சென்றார். அவரின் பின்னால் மெதுவாக நடந்து கொண்டிருந்த தென்றல் சசிக்கு அழைக்க ஒரே ரிங்கில் எடுத்து விட்டான்.
ஆச்சரியத்தோடு ” தூங்கலையா”
” நீ பிள்ளைகளை கூட்டிட்டு போற பத்திரமா போய் சேந்தியா இல்லையான்னு தெரியாம எப்படி தூங்க.. ” அத்திப்பூத்தார் சில சமயங்களில் அவனுக்குள்ளிருந்து வரும் பாசமான வார்த்தைகள் தென்றல் மனதை குளிர்விக்கும்.. அந்த அதிகாலை பொழுதிலும் இதமான சூடான தேநீர் போல அவனுடைய வார்த்தைகள் அவள் இதயத்தை குளிராய் வருடி வயிற்றை சூடாய் நிரப்பியது.
” நாங்க வந்துட்டோம்.. அப்பா கார் எடுத்துட்டு வந்துருக்காரு..”
“ம்ம் சரி வீட்டுக்கு போயிட்டு ப்ரீ ஆயிட்டு கால் பண்ணு..”
” நீங்க தூங்குங்க.. நான் அப்புறம் போன் பண்றேன்.. ” அழைப்பு துண்டிக்கப்பட அவசரம் காரை கிளப்பவும் சரியாக இருந்தது. தென்றல் ஏறிக்கொள்ள கார் வேகம் எடுத்தது.
கிட்டத்தட்ட பதினோரு வருடங்களுக்குப் பிறகு கோயம்புத்தூர் வருகிறாள் தென்றல்.. பாதிக்குப் பாதி மாறி இருந்தது.. அனைத்தையும் கவனித்தாளே தவிர எதையும் தந்தையிடம் கேட்கும் திராணியற்று அமைதியாக வந்தாள். ஒவ்வொரு இடங்களும் அவளுக்கு பல செய்திகள் சொல்லியது. அடி மனதில் ஒரு ஓரத்தில் அழுத்தி கிடந்த பசுமையான நினைவுகள் யாவும் மீண்டும் துளிர் விடத் தொடங்கியது.
அதன் தாக்கத்தால் சில இடங்களை கடக்கும்போது அவள் இதழ்களில் புன்னகையும், சில இடங்களில் கடக்கையில் பெருமூச்சம் வெளிப்பட்டது. அனைத்தையும் பின்னால் பார்க்கும் கண்ணாடி வழியாக கவனித்துக் கொண்டிருந்த பரசுராம் விதியை நினைத்து பெருமூச்சு விட்டார்.
இப்பொழுது அவர்கள் இருக்கும் வீட்டிற்கு வந்து இறங்கியதும் வான்மதி ஓடி வந்தாள்.. அதிகாலை என்றாலும் இவர்களின் வரவுக்காக வீட்டில் யாரும் உறங்கவில்லை.. முதல் தடவையாக பிள்ளைகளோடு இந்த வீட்டில் தென்றல் காலடி எடுத்து வைக்க அந்த நேரத்திலும் வாசுகி அவர்களுக்கு ஆலம் சுத்தினார்.
“ம்மா.. கல்யாணம் பண்ணிட்டு வர்றவங்களுக்கு தான் ஆர்த்தி சுத்துவாங்க.. நீ என்ன இப்ப சுத்திட்டு இருக்க” கேலியாக அம்மாவை கேட்டாள் தென்றல்.
” ஒருவேளை அன்னைக்கே நாங்க இதை பண்ணி இருந்தா இன்னிக்கு நீ நல்லா இருந்திருப்பாயோ என்னவோ..” வாசுகியின் வார்த்தைகளை கேட்டதும் தென்றல் முகத்தில் இருந்து புன்னகை மறைந்து போக அப்பொழுதுதான் தான் கூறியதின் வீரியத்தை உணர்ந்தார் வாசுகி.
நிலைமையை சடுதியில் சரி செய்தாள் வான்மதி.
“அக்கா வா.. கல்யாணத்துக்கு வாங்கின நகை புடவை எல்லாம் நீ இன்னும் பாக்கல இல்ல..” விறு விறுவென்று அக்காவை வீட்டிற்குள் இழுத்துச் சென்றாள்.
அவர்களுக்கு டீ, காபி என்று அதிகாலை பொழுது அமர்க்களப்பட்டது.. பேருந்தில் வந்தது அசதியாக இருக்க மீண்டும் குழந்தைகள் உறங்கிவிட தென்றல் குடும்பத்தினரோடு அமர்ந்து கதை பேசிக் கொண்டிருந்தாள்.
புது இடம் புது சூழ்நிலை கட்டவிழ்த்து விட்ட கன்றாக குழந்தைகள் துள்ளின.. திருமண வேலையோடு பேரப்பிள்ளைகள் வந்திருந்த சந்தோஷமும் சேர்ந்து கொள்ள பரசுராம் வீடு களைகட்டியது. முறையுள்ள உறவுகள் அனைத்தும் பரசுராம் வீட்டிற்கு படையெடுக்க பந்தக்கால் நடும் வைபோகம் சமூகமாக நடந்தேறியது. என்ன தென்றலை கண்டதும் உறவுகள் அவலோடு சக்கரையும் சேர்த்து மெல்ல தொடங்கினார்கள்..
தென்றல் எதையும் கண்டு கொள்ளாமல் நலுங்கு, சிரிப்பு சந்தோஷம் என்று சுற்றினாள்.
” செல்லம் என்னால கல்யாணத்துக்கு வர முடியுமான்னு தெரியல.. இங்க ப்ரொடியூசர் அத மாத்தி இத மாத்துன்னு என்னை போட்டு டார்ச்சர் பண்ணிட்டுருக்கான்.. நான் வரலைன்னா தப்பா நினைக்காத.. “
” என்னங்க கடைசி நேரத்துல இப்படி சொல்றீங்க.. நீங்க வரலனா எல்லாரும் கேட்பாங்களே.. இது கூட உங்களால எனக்காக செய்ய முடியாதா” ஏற்கனவே அவளைப் பற்றிய பேச்சே வீட்டில் கொடி கட்டி பறந்து கொண்டிருக்க இந்நிலையில் சசி வரவில்லை என்றால் அவ்வளவுதான்.
இறுதியில் தான் முயற்சி செய்வதாக கூறிய சசி,தென்றல் வயிற்றில் வருவானா இல்லையா என்று புளியை கரைத்து ஒரு வழியாக முதல் நாளன்று வந்து சேர்ந்தான்..
பரமசிவமும் வாசுகியும் அவனை நல் முறையில் வரவேற்று உபசரித்தார்கள். எந்தக் குறையும் அவனுக்கு வைக்கவில்லை..
உறவுகள் அத்தனை பேருமே அவன் சினிமாவில் இருக்கிறான் என்பதை பெரிய தெய்வகுத்தம் போல பேசி அவன் மனதை உடைக்க பார்த்தார்கள்.
” உருப்படியா ஏதாவது பாருங் தம்பி.. இந்த சினிமா கினிமாலாம் நமக்கு செட் ஆகாதுங்க.. “
” கூத்தாட்ற தொழில் எதுக்கு உங்களுக்கு.. பேசாம உங்க அப்பாவோட நகைக்கடையை பார்க்க வேண்டியதுதானுங்க.. “
” உக்காந்து தின்னா நாலு தலைமுறைக்கு சொத்து இருக்கும்போது எதுக்கு தம்பி உங்களுக்கு இந்த வேஷம் கட்ற தொழிலு” இப்படி இலவசமான ஆலோசனைகள் அவன் வேண்டாம் என்றாலும் வம்படியாக அவன் மீது திணிக்கப்பட்டன.
தென்றல் கூட பயந்தாள். காரணம் சசி எதை வேண்டுமானாலும் பொறுத்துக் கொள்வான் அவனுடைய துறையைப் பற்றியும் அவனின் ஒழுக்கத்தை பற்றியும் யாராவது பேசினால் அதனை அவனால் பொறுத்துக் கொள்ள முடியாது. திருமண வீட்டில் ஏதாவது பிரச்சனை ஆகிவிடுமென அவள் பயந்தாள்.
அவளின் பயத்திற்கு வேலை வைக்காமல் அனைவரின் பேச்சுகளையும் சாதாரணமாக கடந்தான் சசி.
” தப்பா எடுத்துக்காதீங்க மாப்பிள்ளை.. என்ற சொந்தக்காரங்க எல்லாம் சினிமா பார்ப்பாங்.. சினிமாக்காரன இப்பதான் முதல் தடவ பாக்குறாங்..” பரசுராமின் கலக்கம் சசிக்கு புரிந்தது..
“அட எதுக்கு மாமா நீங்க இப்படி பம்புறிங்க.. எனக்காக தென்றல் இத்தனை வருஷம் எத்தனை பேர் கிட்ட ஏச்சு பேச்சு வாங்கிருக்கா தெரியுமா.. அவளுக்காக இதெல்லாம் நான் பொறுத்துக்க மாட்டேன்னா.. ஆயிரம் வேலை கிடக்கு இதை போய் பெரிய விஷயமா பேச வந்துட்டீங்க.. வாங்க மாமா போய் வேலையை பார்ப்போம்..” சசியின் எதார்த்தம் பரசுராம் மனதில் நிம்மதியை வர வைத்தது.
அதிலும் கடைசி நேரத்தில் வேலைகள் அனைத்துமே அவன் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்ய தென்றலுக்கும் அவனைப் பார்த்து நிம்மதி.
ஒரு வழியாக வான்மதி திருமணம் உற்றார் உறவினர்கள் சூழ பெற்றோரின் ஆசியோடு நல் முறையில் நடந்தேறியது..
வான்மதி கொடுத்த பணத்தில் அவளுக்கு தங்க காப்பு ஒன்றினை வாங்கி போட்டு விட்டாள்.
” நீ கொடுத்த காசு தான் உனக்கே வாங்கி போடறேன்னு தப்பா நினைக்காத டி. எனக்கும் ஒரு காலம் வரும்.. “
” எந்த காலம் வந்தாலும் என் அக்காவை நான் தப்பா மட்டும் எப்பவும் நினைக்க மாட்டேன்.. ” புன்னகைத்தாள் வான்மதி.
மனதை திடப்படுத்திக் கொண்டாள் தென்றல்.. அம்மா வீட்டில் அடுத்து இருந்த நாட்களும் உறவுகளின் ஜாடை பேச்சுகளை கேட்கும்படி அமைந்தாலும் அதனை அவள் பெரிது படுத்தவில்லை.
சென்னைக்கும் கோயம்புத்தூருக்கும் அழைய முடியாது என்பதால் பால் பழம் சம்பிரதாயங்கள் எல்லாம் பரசுராம் வீட்டிலேயே நடந்தது. ஒரு வழியாக மாப்பிள்ளை விருந்து முடிந்து ஐந்தாவது நாள் குடும்பமே கிளம்பி சென்னை வந்தது. மாதவி வீட்டில் வான்மதியை விட்டுவிட்டு கண்ணீரோடு தென்றலின் பெற்றோர் கிளம்பி விட்டார்கள்.
அதன் பின்பான நாட்கள் வெகு வேகமாக உருண்டோடியது.. எப்படியோ கடவுள் கிருபையில் சசிக்கு ஒரு வாய்ப்பு கிடைக்க, பட பூஜை முடிந்த கையோடு படப்பிடிப்பு ஆரம்பமானது..
யார் இந்த படத்தை வெகு ஆர்வமாக எதிர்பார்த்தார்களோ இல்லையோ தென்றல் தீ மிதிக்கிறேன் என்கிற வேண்டுதலையே அம்மனிடம் வைத்திருந்தாள்..
தீயா மிதிக்குற நான் உன்ன மிதிக்குறேன் இருன்னு கருமாரியம்மன் கண்ணம் வைத்து காத்திருந்தார்..