29

வான்மதியின் திருமணத்திற்கு இன்னும் நாட்கள் எஞ்சிருக்க மரியாதைக்காகவும் முறைக்காகவும் முதல் பத்திரிகையை சம்மந்தி வீட்டில் வைக்க வந்தார்கள் பரசுராம் தம்பதியினர்.

சோமசுந்தரம் வீட்டில் தான் இருந்தார். ஆனால் அறையை விட்டு வெளியே வரவேயில்லை.. விசாலாட்சி தொலைக்காட்சி பெட்டியினுள் புகுந்து விடுபவர் போல வைத்த கண் வாங்காமல் அதையே பார்த்துக் கொண்டிருந்தார்.

தென்றல் முன்கூட்டியே சொல்லியிருந்ததால் சசி வீட்டில் இருந்தான்..

மாமனார் மாமியார் இருவரும் வாசலுக்கு வரும் போதே வெளியே என்று அவர்களை மரியாதையாக அழைத்து வந்தான்..

சங்கோஜத்தோடு தான் அவர்கள் அந்த வீட்டிற்குள் காலடி எடுத்து வைத்தார்கள்.. பெற்றவர்களால் உண்டான அவமரியாதை மருமகனால் சற்று மறக்கடிக்கப்பட்டது.

“வாங்க மா.. மா.. அன்ட்டி.. இல்ல அத்தை” இத்தனை வருடங்களுக்கு கழித்து மாமனார் மாமியாரை அழைப்பதற்கு திக்கித் திணறினான் சசி.

நடந்த எதையும் அவர்கள் யாராலயும் மறக்க முடியவில்லை. இருந்தாலும் மாற்ற முடியாது என்பதை புரிந்து கொண்டபடியால்  முதலில் தயக்கத்தை உடைத்தது பரசுராமே.

” எப்படி இருக்கீங்க தம்பி? ஆளு ரொம்ப மெலிஞ்சு போயிட்டீங்க..” இலகுவாக வரவழைத்த குரலில் பரசுராமன் பேச்சை ஆரம்பிக்க  சசிக்கும் அந்த உற்சாகம் தொற்றிக் கொண்டது.

வாசுகி மென் புன்னகையோடு அவனுக்கு தலையசைத்து  தயக்கத்தோடு அந்த வீட்டிற்குள் அடி எடுத்து வைத்தார். இருவரும் தாத்தா பாட்டியை கண்டதும் ஓடி வந்து கட்டிக் கொண்டார்கள். அவர்களைக் கொஞ்சி முத்தமிட்டு மகிழ்ந்தவர்கள்  கையோடு வாங்கி வந்திருந்த விளையாட்டு பொருட்களையும் தின்பண்டங்களையும் பிள்ளைகளிடம் கொடுத்து அவர்கள் சந்தோஷத்தில் மனம் நிறைந்தார்கள்.

இதனைக் காணாதது போல் கண்டு கொண்டிருந்த விசாலாட்சிக்கு பற்றி எரிந்தது. ஒருமுறை கூட பிள்ளைகள் இருவரும் அவரிடம் இந்த அளவுக்கு சிரித்தது கிடையாது. பிறந்ததிலிருந்து அவர்களை  ஒரு பொருட்டாய் சீண்டாத பாட்டியை  மேலும் தாயை எந்நேரமும் பழித்துக் கொண்டிருக்கும் பாட்டியை குழந்தைகள் வெறுப்பதில் தவறில்லையே.

தென்றல் வேகமாக வந்து வாசுகி கையை பிடித்துக் கொண்டாள்..

“வாம்மா.. வாங்கப்பா..”

” எப்படிடா இருக்க..”வாஞ்சையாக மகளை விசாரித்தார் பரசுராம்.

” நல்லா இருக்கேன் பா.. “

“ம்மா.. அத்தையும் மாமாவும் வந்திருக்காங்க..” சசி கூறியது செவியில் விழுந்தாலும்  பிறவி செவிடன் போல ஆடாமல் அசையாமல் அமர்ந்திருந்தார் விசாலாட்சி.

அவர் அவமரியாதை செய்வது நன்றாக புரிந்தது. வந்தவர்கள் முன்னிலையில் பெற்றவளை கண்டிக்க முடியாத நிலை.

“ம்மா” சசி பற்களை கடித்தான். வேண்டுமென்றே தொலைக்காட்சி சத்தத்தை இன்னும் அதிகரித்தார் விசாலாட்சி.

அடுத்து அங்கே நடக்கப் போகும் ரசபாதங்களை பரசுராம் உணர்ந்து கொள்ள

” பரவால்ல மாப்பிள்ளை ஏதோ சுவாரசியமா பாத்துட்டு இருக்காங்க.. எங்களுக்கும் பத்திரிக்கை வைக்க நிறைய இடத்துக்கு போகணும்.. அப்பா வீட்ல இருக்காரா.. “

” என்ன மாமா அதுக்குள்ள கிளம்புறேன்னு சொல்றீங்க.. இருந்து சாப்பிட்டு தான் போகணும்.. நான் பாருங்க வந்தவங்கள நிக்க வச்சு பேசிட்டு இருக்கேன்.. ரெண்டு பேரும் உட்காருங்க.. தென்றல் என்ன நீயும் நீயும் நின்னுட்டு இருக்க போய் குடிக்க எதாச்சும் எடுத்துட்டு வா..” தொலைக்காட்சி ரிமோட் வேகமாக கீழே விழுந்து சிதறியது..

தன்னுடைய பெற்றோர்கள் அவமதிக்கப்படுவதை தென்றலால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.. இன்று ஒரு வார்த்தை விசாலாட்சி பேசினாலும் உண்டு இல்லை என்கிற நிலையில்தான்  தென்றல் காத்திருந்தாள்.

சசிக்கு மிகுந்த தர்ம சங்கடமாகியது.. இப்பொழுது தாயிடம் வாயை திறந்தால்  கண்டிப்பாக வந்தவர்கள் வாழ்நாள் முழுவதும் நொந்து கொள்ளும் அளவிற்கு வார்த்தைகளை சிதற விடுவார். நல்ல விஷயத்திற்காக வீடு தேடி வந்திருக்கிறார்கள். விசாலாட்சி வாயைத் திறந்தாலே நல்ல காலத்திலேயே தில்லைநாயகம்..

மனம் கோணும் படி கண்டிப்பாக பேசுவார்.. ஒரு நேரமில்லாவிட்டாலும் ஒரு நேரம் அவரின் வார்த்தைகள் ஏதாவது பலித்து விட்டால் நினைக்கவே நெஞ்சம் பதறியது..

” இருக்கட்டும் ங்க.. பரவால்ல எங்களுக்கும் நேரம் இல்ல.. அப்பா இருந்தா கூப்பிடுங்க..” தென்றலும் சசியும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

அதில் உண்மை புரிபட

” சரி நீங்க வாங்கிக்கோங்க.. ” தட்டில் பழம்  வெற்றிலை பாக்கு பணம் கூடவே பத்திரிக்கை வைத்து முறையாக சசி தென்றலிடம் நீட்டினார்கள் பரசுராம் வாசுகி இருவரும்.

” நீங்கதான் வீட்டுக்கு மூத்த மாப்பிள்ளை. என்னதான் என் தங்கச்சி பையனையே வான்மதிக்கு பேசினாலும்  உங்களுக்கு தான் பொறுப்பு ஜாஸ்தி.. ஒரு நாலஞ்சு நாள் முன்னாடியே வந்துட்டீங்கன்னா  நல்லா இருக்கும்..”

” கண்டிப்பா மாமா.. “

” சம்மந்தியம்மா நீங்களும்  சம்மந்திய கூட்டிட்டு வந்துருங்க.. ” பரசுராம மனம் கேளாமல் விசாலாட்சியை அழைக்க  அவர் கால் மேல் கால் போட்டுக்கொண்டு திமிராக அமர்ந்திருந்தார்.

தென்றலுக்கு அதற்கு மேல் பொறுக்கவில்லை.. அவளே பெற்றவர்களை கிளம்ப கூறினாள். அவர்கள் சென்றதும்  அறைக்குள் அமர்ந்து குலுங்கி அழுதாள்.. எப்படி அவளை சமாதானப்படுத்துவது என்றே சசி புரியாமல் குழம்பி தவித்தான்.

“தென்றல்” அவள் தோளை தொட

” பாத்தீங்களா.. உங்க அம்மா எப்படி நடந்துக்கிட்டாங்கன்னு பாத்தீங்களா.. சம்மந்தினு மரியாதை வேணாம்.. மனுஷங்கன்னு  பேஷிக் மேனர்ஸ் கூடவா இல்ல அவங்களுக்கு..

உங்ககிட்ட பணம் இருந்தா அது உங்களோட.. என் அப்பா அம்மா என்ன அஞ்சுக்கும் பத்துக்கும் உங்க வீட்டு வாசப்படியில வந்து நின்னாங்களா? ஒரு வாய் தண்ணி கூட குடிக்கல இந்த மரியாதை கெட்ட வீட்டுல..

அப்படி என்னங்க திமிரு உங்க அம்மாவுக்கு? இதுவே தர்ஷினி வீட்டிலிருந்து வந்திருந்தா  இப்படித்தான்  மட்டு மரியாதை இல்லாம கால் மேல கால போட்டு உட்கார்ந்து இருப்பாங்களா.. உங்க அப்பா அதுக்கும் மேல. கட்டுன பொண்டாட்டிய கண்டிக்க வக்கில்லை.. ஆ ஊ னா   பொம்பள மாதிரி ரூமுக்குள்ள போய் பூட்டிக்கிட்டு இருக்காரு..

ஏன் எதிர்த்து பேசினா உங்க அம்மா தலையை எடுத்துருவாங்களா.. நான் தெரியாம கேட்கிறேன் எனக்கு தான் தலையெழுத்து.. இந்த எழவெடுத்த வீட்டுல வந்து மாட்டிக்கிட்டு  உங்க அம்மா எழவு கொட்டுற மாதிரி பேசற எல்லாத்தையும் கேட்கணும்னு.. என்ன பெத்தவங்களுக்கு என்ன கேடு?

இதுவே நீங்க எங்க வீடு தேடி வந்திருக்கும் போது என் அம்மா இப்படி செஞ்சிருந்தா உங்களுக்கு எப்படிருக்கும்? என்னங்க பெரிய பணம்? எங்ககிட்ட அந்த அளவுக்கு கொட்டி கெடக்கல.. ஆனா நாங்களும் இருக்கப்பட்டவங்கதான்.. இப்படியா தல கால் தெரியாம ஆடிக்கிட்டு இருக்கோம். ஒரே ஒரு பெரிய சீக்கு வந்தா உங்க காசு எம்மாத்திரம்?

கொண்டு போய் ஆஸ்பத்திரி ஆஸ்பத்திரியா கொட்டிட்டு வருவீங்க.. இன்னிக்கு என் அம்மா அப்பா அவமானத்தை என்னால ஜென்மத்துக்கும் மறக்க முடியாது.. நான் சத்தியமா வயிறு எரிஞ்சு சொல்றேன்.. உங்க அம்மா அப்பா ரெண்டு பேரும்  படுவாங்க.. அத நீங்க பாக்காம போக மாட்டீங்க..” தென்றல் கத்தியது கீழே வரை கேட்க  அவ்வளவு நேரம் காதே கேளாதவர் போல் அமர்ந்திருந்த விசாலாட்சி தொலைக்காட்சி சத்தத்தை குறைத்து விட்டு மருமகள் பேசிய அனைத்தையும் காது குளிர கேட்டார்.

வரிந்து கட்டிக்கொண்டு அவர் சசியின் அறை கதவை தட்ட  கடுப்போடு போய் கதவை திறந்தான் சசி. கையில் சூலம் ஒன்றுதான் இல்லாத குறை விசாலாட்சிக்கு.

” என்னமா.. ” அவர் மீதிருந்த கடுப்பில் சசி எரிந்து விழ

” என்னடா உன் பொண்டாட்டிக்கு வாய் எட்டூருக்கு நீளுது.. நீயும் அதைக் கேட்டுகிட்டு ஊமையனாட்டம்  நின்னுட்டுருக்க.. காதை சேர்த்து ரெண்டு அப்பு அப்பாம.. உன் பொண்டாட்டிய பேச விட்டு ரசிச்சிட்டு இருக்கியா.. ” அங்கே அறைக்குள் பூட்டிக் கொண்டு வெளியே நடப்பதில் கவனம் வைத்திருந்த சோமசுந்தரம் விசாலாட்சி குரலை கேட்டதும் விஷயம் பெரிதாகிவிடும் என்பதால் உடனடியாக சசியின் அறைக்கு ஓடி வந்தார்.

அதற்குள் தாயின் வார்த்தைகளைக் கேட்டு ரத்தம் கொதிக்க ஓங்கி கதவை ஒரு குத்து குத்தினான் சசி. நல்ல தேக்கில் செய்த கதவு அது. ஆனால் அவனின் முழு பலத்திற்கும்  ஓங்கி குத்து சிறு விரிசல் விழுந்தது குத்துப்பட்ட இடத்தில்.

அதுவரை விசாலாட்சி பேசியதற்கு கோபத்தின் உச்சியிலிருந்த தென்றல் கணவனின் ரௌத்திரத்தை கண்டு வேகமாக அவனை நெருங்கி

” என்ன பண்ணிட்டு இருக்கீங்க நீங்க? ஐயோ” பரிதவிப்போடு அவன் கரத்தைப் பிடித்துக் கொண்டாள் தென்றல். இத்தனை அளவு கோபத்தை  மகனிடம் எதிர்பாராத விசாலாட்சி  ஆடிப் போய் நிற்க  அதற்குள் அங்கே வந்திருந்த சோமசுந்தரத்திற்கு  மகனின் உள்ளத்தில் எரிந்து கொண்டிருக்கும் தீ இப்பொழுது அணையாது என்பது புரிந்தது.

“விசாலம்.. என்ன பிரச்சனை இங்க? உன்னால வாய மூடிக்கிட்டு இருக்க முடியாதா? தினம் ஏதாச்சும் புது புதுசா பிரச்சினையை கிளப்பிக்கிட்டே இருப்பியா? உடம்புக்கு முடியாத மனுஷன் வீட்டில இருக்கான்னு நினைப்பு இருக்கா இல்லையா உனக்கு? அசத்தியா இருக்கு கொஞ்ச நேரம் தூங்குறேன் சம்பந்தி வீட்டுக்காரங்க வந்தா எழுப்ப சொல்லிட்டுதான படுத்தேன்.. அவங்க வந்தாங்களா இல்லையா” முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயன்றார் சோமசுந்தரம்.

நரம்புகள் முறுக்கேறி தன்னுடைய முழு உயரத்திற்கும் நின்று கொண்டிருந்த மகனை நடுக்கத்தோடு பார்த்துக் கொண்டிருந்த விசாலாட்சி சோமசுந்தரத்தின் பொய்யை கேட்டதும் சட்டென்று சுதாகரித்தார்..

” ஆமா பெரிய ஊர் உலகத்துல இல்லாத சம்பந்தி.. வந்ததும் கால்ல சுடு தண்ணி ஊத்துற மாதிரி போறேன் போறேனு குதிக்குறாங்க.. போறவங்கள நான் கைய புடிச்சா தடுக்க முடியும்.. ” தானும் சிறந்த நடிகை என்பதை நிரூபித்தார் விசாலாட்சி..

கணவன் மனைவியின் நாடகம்  சசிக்கு நன்றாக புரிந்தது.

” போதும் கொஞ்சம் நிறுத்துறீங்களா ரெண்டு பேரும்.. இது மனுஷன் வாழ்ற வீடா இல்ல கூத்து கொட்டாயா.. ஏம்பா அம்மா ஆரம்பத்துல இருந்தே இப்படித்தான். நீங்க ஒழுங்கா தான இருந்தீங்க.. எப்போ இருந்து நீங்களும் அவங்கள மாதிரியே நடிக்க ஆரம்பிச்சீங்க.. ” சோமசுந்தரம் என்ன சொல்வதென்று என்று புரியாமல் முழிக்க

” என்னடா இப்ப நடிக்கிறாங்க? கைய முறுக்கி கதவை குத்திட்டா  உன் பொண்டாட்டி பேசின பேச்சை எல்லாம் நான் மறந்திடுவேன்னு நினைச்சியா.. யார் வீட்டில இருந்துகிட்டு அவ என்ன பேச்சு பேசிட்டு இருக்கா.. குடும்ப பொம்பள மாதிரியா அவ பேசுற என்னமோ பஜாரி மாதிரி பேசிட்டுருக்கா? வெள்ளிக்கிழமை அதுவுமா  எனக்கும் உங்க அப்பனுக்கும் சாபம் விடுறா.. அதெல்லாம் காது குளிரா கேட்டு ரசிச்சுக்கிட்டு இருக்க.. பிள்ளையா நீ எல்லாம்.. உன்ன பெத்ததுக்கு நான் மலடியாவே இருந்திருக்கலாம்.. “

” ஆமா.. நீங்க மலடியா இருந்துருந்தா இந்நேரம் என் பொண்டாட்டி எவ்வளவோ சந்தோஷமா இருந்திருப்பா.. உனக்கு கொஞ்சம் கூட வெக்கமா இல்லையா.. அப்படி என்ன உனக்கு இறுமாப்பு? வீடு தேடி வந்தவங்களை இப்படித்தான் அசிங்கப்படுத்தி அனுப்புவியா.. ரொம்ப நல்லா மெச்சிருப்பாங்க இந்த குடும்பத்தை..

நீங்க இருக்கீங்களே இவங்களுக்கும் மேல.. என்ன நடக்குது ஏது நடக்குதுன்னு ரூமுக்குள்ள இருந்து எல்லாத்தையும் வேவு பார்த்துட்டு இப்போ ஒண்ணுமே தெரியாத மாதிரி வந்து படம் காட்டுறீங்க.. “

” என்னடா நான் உண்மையாவே”

“போதும்பா.. உங்க நடிப்பு எல்லாம் நான் பாத்துட்டு தான் இருக்கேன்.. அசிங்கமா இருக்கு.. கொஞ்சமாச்சும் உங்க வயசுக்கு தகுந்தபடி நடந்துக்கோங்க.. இப்ப என்ன அம்மா ஏதாச்சும் பேச போக  சொத்தை பத்தி நான் பேச்சை எடுத்துடுவேனு தானே ஓடி வரீங்க.. உங்களுக்கெல்லாம் இந்த சொத்து தான் பெருசா போச்சு இல்ல..

ஏன்னா நான் சம்பாதிக்கல.. உங்க முன்னாடி செல்லக் காசா இருக்கேன். உங்க சின்ன மகன் கை நிறைய சம்பாதிக்கிறான். பெரிய பணக்கார இடத்துல கல்யாணம் முடிச்சிருக்கான்..

இதுவே நானும் அவன மாதிரி  சம்பாரிச்சு உங்க தலையில கொட்டுனா என்ன தூக்கி வச்சு ஆடுவீங்க..

இந்த அளவுக்கு நீங்க கீழ்த்தரமா நடந்துக்குவீங்கன்னு நான் நினைச்சு கூட பாக்கல. வேணாம்ப்பா எதுவும் பேசாதீங்க..ம்மா அவ்ளோதான் உனக்கு.. இந்தக் குத்து உன் மேல விழ ரொம்ப நேரம் ஆகாது.. என்ன கேடுகெட்ட புத்தி உனக்கு..புருஷன் பொண்டாட்டி ரூமுக்குள்ள ஆயிரம் பேசுவோம்.. அதை ஒட்டு கேக்குறியே என்ன புத்தி உனக்கு.. அருவருப்பா இல்ல… இதுவே உன் மாமியார் நீயும் அப்பாவும் ரூம்ல இருக்கும் போது வந்து கதவை தட்டிருந்தா  என்ன ஆட்டம் ஆடிருப்ப..

உன் லிமிட் என்னவோ அதுபடி நடந்துக்கோ.. ரொம்ப நேரம் ஆகாது நான் வக்கீல் பாக்குறதுக்கு..”அவன் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டிருந்த தென்றலையும் பயத்தில் கதவோடு ஒட்டி நின்ற பிள்ளைகளையும் அறைக்குள் தள்ளியவன் கதவை அவர்கள் முகத்தில் அறைந்து சாத்தினான்.

சோமசுந்தரம் மனைவியை இழுத்துக் கொண்டு சென்றார்.. தனக்காக கணவன் பேசியது தென்றல் மனதை சற்று சாந்தப்படுத்தியது.. அவளின் மகிழ்ச்சிக்கு ஆயுள் மிகவும் குறைவு.

பிளாஷ்பேக் ஓவர்..

வான்மதி திருமணத்திற்கு அக்காவாக  ஒரு பவுன் மோதிரம் போட வேண்டும் என்று நினைத்திருந்தாள். ஏற்கனவே அவள் சேமித்து வைத்திருந்த தொகையோடு இந்த மாத சம்பளப் பணத்தையும் போட்டு மோதிரம் வாங்கிவிடலாம் என்று கணக்கு போட  ஒரு வார காலமாக குடிப்பக்கம் போகாத சசி அன்று முழு போதையில் வீட்டிற்கு வந்து வாசலில் வாந்தி எடுத்து மீண்டும் தென்றல் நெஞ்சில் இடியை இறக்கினான்..

அப்பொழுதுதான் தர்ஷினியும் தேவாவும்  கேஎஃப்சி சிக்கன் வாங்கி வந்து அதற்கும் ஒரு பஞ்சாயத்து.

மனம் தீயாய் தகித்துக் கொண்டிருக்க  அதனைப் பற்றி சிறிதும் அறியாமல்  முழு போதையில் வீட்டு வாசலில் வாந்தி எடுத்திருந்தான் சசி. அவளின் தலையெழுத்து அவன் எடுத்த வாந்தியை சுத்தம் செய்து அவன் தலையில் ஒரு வாளி தண்ணீரைக் கொட்டி, ஏதோ ஒரு மாதிரியாக போதையை தெளிய வைத்திருந்தாள்.

மேலும் அவள் மோதிரம் வாங்க வைத்திருந்த பணத்தையும் அவன் தன் சொந்த செலவிற்கு கேட்க வான்மதி திருமணத்திற்கு எப்படி மோதிரம் வாங்குவது என்கிற புதிய கவலை தென்றலை பிடித்துக் கொண்டது.. தன் வாழ்வில் நடந்த நிகழ்வுகளை எண்ணி இரவு தூக்கத்தை தொலைத்திருந்தாள் தென்றல்.