“அம்மா ம்மா.. இங்க பாரேன் தாத்தா எங்களுக்கு என்னன்னா வாங்கி கொடுத்திருக்கிரானு” இதுவரை யாருமே அவர்களுக்கு இது மாதிரி வாங்கி கொடுக்காத நிலையில்  கண்ணில் பட்ட பொருட்களை எல்லாம் வாங்கிக் கொடுத்த தாத்தா  பிள்ளைகளுக்கு மிகவும் பிரியமானவராகி போனார்..

தென்றல் கண்களில் சட்டென்று ஒரு ஏக்கம் தோன்றியது.. அந்த ஏக்கத்தோடு தந்தையை ஒரு பார்வை பார்த்தவள்  ஏக்கப்பட தனக்கு என்ன தகுதி இருக்கிறது என்பதால்  நொடியில் அப்பார்வையை தளர்த்தினாள்.

பெற்று வளர்த்து பெயர் வைத்து பெரிய ஆளாக்கிய தந்தைக்கு தெரியாத மகளின் உள்ளம்.. தென்றலின் முகத்திற்கு நேராக தான் வாங்கி வந்த பொட்டலத்தை நீட்டினார் பரசுராம்..

தென்றல் பார்வை அந்த பொட்டலத்தில் பதிந்து மெல்ல தந்தையை நோக்கி உயர

“பால் பன்னு கண்ணு.. உனக்கு புடிக்குமே”.. தென்றல் இதயத்தை யாரோ கோடாரியில் இரண்டாய் பிளந்தது போல உணர்ந்தாள்..

“ப்பா” பரசுராம் கால்களை கட்டிக்கொண்டு அவள் குலுங்கி அழ மீண்டுமொரு உணர்ச்சி வளையத்திற்குள் அந்த குடும்பம் சிக்கி மீண்டது..

அனைத்தையும் மனைவி வாயிலாக கேட்டு அறிந்து கொண்ட பரசுராம் உணவு வேலை முடிந்து  பேத்திகளோடு விளையாடிக் கொண்டே மகளிடம் கூறினார்.

“கண்ணு இங்க இருந்தது போதும்.. இதுக்கு மேல உன்னை இங்க விட்டுட்டு போனா அடுத்த தடவை பார்க்கும்போது நீ இருப்பியா இல்லையான்னு கூட எங்களுக்கு தெரியல.. கழுதை தேஞ்சி கட்டெறும்பான கதையா ஆயிருச்சு உன் நிலைமை.. பேசாம பிள்ளைங்கள கூட்டிட்டு  அங்க வந்துரு.. நீ வேணும்னா ஒன்ற புருஷன் அங்க வரட்டும்..” பரசுராம் முடிவாக கூறினார்..

“ஆமாடி.. உன்ற அப்பா சொல்றத கேளு கண்ணு.. நீயும் புள்ளைங்களும் அங்க வந்துருங்க.. நீங்க முக்கியம்னு நினைச்சா  அந்த மனுஷன் அங்க வந்துட்டு போறாரு.. அங்க பொழைக்கிறதுக்கு வழியா இல்ல.. சொந்தமா ஒரு தொழில் கூட உங்க அப்பா வச்சு கொடுத்துடுவாரு..” அதற்கு மேலும் மகளை வேதனை தீயில் வாட விடாமல் பெற்ற வயிறு காப்பாற்றத் துடித்தது.

” என்னடி நாங்கல்லாம் பேசிக்கிட்டே இருக்கோம்.. நீ என்னன்னா விட்டத்தை பார்த்துட்டு  எனக்கு என்னன்னு உட்கார்ந்து இருக்க.. ” வாசுகி சிடுசிடுத்தார்.

தென்றல் முகத்தை அழுத்தமாய் துடைத்துக் கொண்டு

“ப்பா.. அம்மா எனக்காக உங்க பிடிவாதத்தை எல்லாம் விட்டுட்டு இவ்வளவு தூரம் தேடி வந்தீங்க.. இத்தனை வருஷம் என்ன நடந்தாலும் கேட்க நாதி இல்லாம நான் பட்ட பாடு கொஞ்ச நஞ்சம் இல்லை.. அத்தை ஒருத்தங்க இருந்ததால  இன்னிக்கு நானும் என் பிள்ளைகளும்  அடுத்தவங்க கால கழுவி குடிக்காம இருக்கோம்..

இப்பவும் நான் எடுத்த முடிவு தப்புன்னு சொல்ல மாட்டேன்.. இன்னைக்கு என் புருஷன் என்ன நல்லா வச்சுக்கல தான். அவரால நான் படுற பாடு கொஞ்சம் நஞ்சம் இல்லை. ஆனா என்னை நல்லா வச்சிருந்திருக்காரு.. அவரு சந்தோஷத்துல ஒட்டிக்கிட்டு இருந்த நான் கஷ்டத்துல பிள்ளைகளை கூட்டிட்டு பொறந்த வீட்டுக்கு ஓடி வர்றதுல என்ன நியாயம் இருக்கு?

இதுவே ஒரு வேளை அவரோட படம் வெளிய வந்து பெரிய ஹிட் ஆயிருந்தா எல்லாமே மாறி இருக்கும் இல்லையா..” தென்றல் பேச வாசுகி மகனை கோபமாய் முறைத்தார்.

” அதுக்குன்னு.. வீட்டுல நடக்கிறது கூடவா ஒரு மனுஷனுக்கு கண்ணு தெரியாது? வேலை வெட்டிக்கும் போறது இல்ல.. பொண்டாட்டி புள்ளைய நல்லா வச்சுக்க துப்பு இல்ல.. புள்ளைங்களுக்கு வாய்க்கு ருசியா ஏதாச்சும் நல்லதா நாலு வாங்கி கொடுக்க வக்கில்ல.. சரி ஆத்தாக்காரி கிட்ட பொண்டாட்டிய ஏச்சு பேச்சு வாங்காம ஒழுங்கா வச்சு வாழவும் வழி இல்ல.. இப்படிப்பட்ட மனுஷனுக்காக நீ வக்காலத்து வாங்கிட்டு வரியா..

இது உன்னோட ஒன்னும் நிக்க போறது இல்ல.. தோ பெத்து வச்சிருக்கியே ரெண்டு பொம்பள பிள்ளைங்க.. அதுங்க நிலைமைய என்னைக்காச்சும் நினைச்சு பார்த்தியா.. பெரியவளை விடு சின்ன குட்டி? இந்நேரம் அவளுக்கு ட்ரீட்மென்ட் எடுத்து இருந்தா ஓரளவுக்காவது பேச வாய் வந்திருக்கும்..

இதுக்கு மேல ட்ரீட்மென்ட் எடுக்க போய் எப்ப அவ பேசி? புருஷன் புருஷனு உன் புள்ளைங்கள எல்லாம் பலி கொடுக்க போறியா..

கொஞ்சமாச்சும் அறிவோட பேசு.. இத்தனை நடந்து இருக்கு ஒரு தடவை கூட உனக்கு நம்ம வீட்டுக்கு வரணும்னு தோணல.. அப்படி என்னடி வீராப்பு உனக்கு? நாங்க இல்லாம நீ வந்துட்டியா.. இன்னைக்கு நீ உன் பிள்ளைங்கள கஷ்டப்பட்டு வளக்குற மாதிரி தானே அன்னைக்கு நாங்களும் உன்ன வளத்தோம்.. நீ வலிச்சு புள்ள பெத்த மாதிரி தானே நான் உன்னை பெத்துருப்பேன்..”

“வாசு”

” நீங்க சும்மா இருங்க..சரி எங்களுக்கு மனசு தாங்கல.. ஆயிரம் இருந்தாலும் எங்க புள்ளனு இப்ப நாங்க தானே இறங்கி வந்துருக்கோம். இதுக்கு மேல என்ன பண்ணனும் நினைக்கிற.. உனக்கு சேர வேண்டிய சீர் செனத்திய நாங்க செஞ்சா மட்டும்  அந்த பொம்பள வாய மூடிருன்னு சொல்ல வரியா..

அப்படின்னா சொல்லு எங்க சக்திக்கும் மேல உனக்கு என்ன செய்யணுமோ எல்லாத்தையும் நல்லபடியா செய்றோம். ஆனா ஒன்னு  இதுக்கு மேல உன்னையும் என் பேர பிள்ளைங்களையும் இப்படி விட எங்களால முடியாது..பொம்பள புள்ளைங்கடி.. அதுங்க வாழ்க்கைய பாரு” இன்னும் பல வாராக வாசுகி மகளிடம் எடுத்துக் கூறினார்.

எப்படியாவது தென்றல் மனதை மாற்றி அவளை தங்களோட கோயம்புத்தூர் அழைத்துச் செல்ல வேண்டும் என்பதுதான் அவர்களின் எண்ணம்.

ஆயிரம் சொன்னாலும் செவிடன் காதில் ஊதிய சங்காய் தென்றல் திரும்பத் திரும்ப ஒரே விஷயத்தை சொல்லிக் கொண்டிருந்தாள்.

“ம்மா நீ என்ன சொன்னாலும் சரி.. எனக்கு நம்பிக்கை இருக்கு.. கஷ்டம் யாருக்கு தான் வரல.. அவரு நல்லவரும்மா.. கண்டிப்பா ஒரு நாள் அவரும் படம் பண்ணுவாரு. அப்போ இந்த கஷ்டம் எல்லாம் இருந்த இடம் தெரியாம போயிடும்..” திரும்பத் திரும்ப ஒரே விஷயத்தை தென்றல் கூற  மகளுக்கு கணவன் மீது இருந்த நேசத்தை புரிந்து கொண்டார் பரசுராம்.

பேச வாய் எடுத்த மனைவியை அடக்கியவர்

” அப்ப நாங்க அவர்கிட்ட பேசி பார்க்கட்டுமா..”

” வேணாம்பா.. எனக்காக நீங்க இறங்கி வந்தீங்க அதுவே போதும். அவருக்காக நீங்க இறங்கி வரணும்னு அவசியம் இல்ல. அதுல நியாயமும் கிடையாது. ஒரு நாள் அவரே ஜெயிச்சுட்டு உங்க முன்னாடி வந்து நிப்பாரு.. என் மக சரியான ஒருத்தனை தான் தேர்ந்தெடுத்தானு நீங்க நினைக்கிற அளவுக்கு ஒரு நாள் வந்து நிப்பாரு.. நீங்க எல்லாரும் என்கிட்ட பேசினதே போதும்.. எனக்காக நீங்க எல்லாரும் எப்பவும் இருப்பீங்கன்ற இந்த நினைப்பே எனக்கு போதும்..

என் பிள்ளைகளுக்கு  அன்பான தாத்தா பாட்டி, எனக்கு அடுத்து அவங்களை தாங்கி பிடிக்கிற சித்தி இந்த சொந்தம் போதும்..” தென்றலின் உறுதி அவர்களை வாயடைக்க செய்தது. சீர் செய்வதாக கூறியும் அவர்களை  பிடிவாதமாக தடுத்தாள் தென்றல்..

இரவு போல் அவர்கள் ஊருக்கு கிளம்ப அவர்களை பஸ் ஏற்றிவிட்டு தென்றல் வீடு வந்து சேர்ந்தாள். சசி அன்று தாமதமாக வீட்டிற்கு வந்தான். அத்தி பூத்தாற்போல் குடித்திருக்கவில்லை.

தென்றல் இரவில் அவனிடம் நடந்ததை கூறினாள்.

” எனக்கு ஒரு ஃபோன் பண்ணி இருக்கலாமே நான் வந்திருப்பேனே.. “

” வேணாம்.. என் அப்பா கிட்ட சொன்னேன்.. சரியான ஒருத்தனை தான் என் மக தேர்ந்தெடுத்து இருக்கான்னு  அவரை நினைக்கிற நிலையில நீங்க அவர பாக்கணும்னு.. ” சசிக்கு வார்த்தைகள் வரவில்லை. தென்றலை இறுக்கமாய் கட்டிக் கொண்டான்.

நாட்கள் நகர  வான்மதியின் திருமண பேச்சு  எழுந்தது.. அங்கு சுற்றி இங்கு சுற்றி  இறுதியில் அகிலனுக்கே வான்மதியை திருமணம் செய்ய விரும்பினார்  பரசுராம்.

இரு முறை அகிலனுக்கு திருமண ஏற்பாடுகள் செய்தும்  இறுதி நேரத்தில் தட்டி போய்  மனம் வெறுத்து பேச்சை எடுக்கக் கூடாது என்று வீட்டில் கண்டிப்பாக சொல்லிவிட்டான் அகிலன். மாதவி அதனை நினைத்து கலங்காத நாளில்லை..

முதலில் தான் எடுத்த முடிவை பற்றி வாசுகியிடம் தெரிவித்தார் பரசுராம்.. மாதவியும் அகிலனும் இல்லையென்றால் தென்றலின் நிலை என்ன ஆயிருக்கும்?.. நான்கையும் நினைத்து வாசுகி, வான்மதியிடம் கேட்கச் சொன்னார்.

சிறிது நேரம் யோசித்த வான்மதி

” நான் மாமாவ கல்யாணம் பண்ணிக்கிறேன் பா.. “

” உண்மையாவா கண்ணு சொல்ற.. “

“ம்ம்ம்”

” அவனுக்கு ஒன்ன விட வயசு அதிகம் டா.. “

” பரவால்லப்பா.. எல்லாருக்கும் வயசு ஆக தானே போது.. அத்த முன்ன மாதிரி இல்ல என்ன கண்டிப்பா நல்லா பாத்துக்குவாங்க.. “

” உன் மனசுல வேற யாராச்சும் இருக்காங்களா.. ” பரசுராம்   தயக்கத்தோடு இந்த வார்த்தைகளைக் கேட்க வான்மதி சிரித்தாள்.

” சத்தியமா நான் ஓடி எல்லாம் போக மாட்டேன். என் மனசுல வேற யாரும் இல்ல. தைரியமா கல்யாணத்தைப் பத்தி அத்தை கிட்ட பேசுங்க” வான்மதி வாக்கு கொடுக்க மனநிறைவோடு மாதவிடம் விஷயத்தை தெரிவிக்க அவர் துள்ளிக் குதிக்காத குறை தான்.

ஹரிதாசுக்கும் இதில் மகிழ்ச்சி. ஆனால் அகிலன் மறுத்தான்.

“ம்மா.. அவ சின்ன பொண்ணு.. என்ன விட ஏழு எட்டு வயசு குறைவு..”

” என்னடா சின்ன பொண்ணு.. அவளுக்கே முப்பதாக போகுது..”

” உங்க அண்ணன் தங்கச்சி உறவை வளர்க்கறதுக்கு அனாவசியமா இன்னொரு தடவை பிரச்சனையை கிளப்பாதீங்க.. ” அகிலன் காட்டமாய் பேச

” அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல வானு கிட்ட பேசிட்டாங்களாம்.. அவளுக்கு ஓகே ன்னு தான் அண்ணன் விஷயத்தை சொன்னாரு.. தோ பாருடா இத்தனை வருஷம் என் அண்ணனுக்கும் எனக்கும் பேச்சு வார்த்தை இல்லாம போயிருச்சு.. எவளோ ஒருத்தி இந்த குடும்பத்துக்கு வர்றத்துக்கு என் அண்ணன் பொண்ணே என் மருமகளா வந்துட்டு போகட்டும்.. அவ்வளவுதான் நான் சொல்லுவேன் நீ எதுவும் பேசாத.. ” அவனுக்கும் மறுப்பதற்கு காரணங்கள் இல்லாமல் போக  திருமண ஏற்பாடுகள் மளமளவென்று நடந்தேறியது..