28

” நல்லா இருக்கியா”

” எப்படி இருக்கீங்க”

இந்த இரண்டு வார்த்தைகளை கேட்பதற்கு  பெற்றவர்களுக்கும் வாய் வரவில்லை. மகளுக்கும்  கேட்க மனமில்லை. பார்த்தாலே தெரிகிறதே அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்வின் லட்சணம்.

விசாலாட்சி பேசிய வார்த்தைகளை கேட்டு  பரசுராம் வாசுகி இருவரும் வாங்கி வந்திருந்த பொருட்களை மேஜை மீது வைத்து விட்டு  அமைதியாக அந்த வீட்டிலிருந்து வெளியேறினார்கள்.. சோமசுந்தரம் அனைத்தையும் வேடிக்கை பார்த்தாரே தவிர  மனைவியை மீறி வாய் திறந்தார் இல்லை.

மாமியாரையும் மாமனாரையும் பார்வை பார்த்த தென்றல் தன் பிள்ளைகள் இருவரையும் அழைத்துக் கொண்டு பெற்றோர்கள் வழி சென்றாள்.. அந்த பெரிய பங்களாவின் கேட்டினை தாண்டி தெருவில் இறங்கி நிற்க  தென்றலும் அவர்கள் பின்னோடே வந்து நின்றாள்..

நல்ல வேலையாக  பரசுராம் வந்த ஆட்டோ இன்னும் அங்கே அவர்களுக்காக காத்திருந்தது.. பரசுராம் வாசுகி இருவரும் ஆட்டோவில் ஏற  தென்றல் தயங்கி நின்றாள். அவள் கண்கள் கலங்கி வழிந்தது.

“சார் போலாமா”.. ஆட்டோக்காரர் கேட்க..

” ஒரு நிமிஷம் இருப்பா.. ” பூங்கொடியை பார்த்து கை நீட்டினார் வாசுகி.

” பாட்டி கிட்ட வா கண்ணு.. ” தென்றலுக்கு உதடு துடித்தது. பேரப்பிள்ளைகளுக்கு பாட்டி தாத்தா இருவரும் புகைப்படத்தில் பார்த்து பழகிப் போனவர்கள். ஆனால் பாட்டி தாத்தாவுக்கு பேரப்பிள்ளைகள் இருவருமே புதியவர்கள்.

வாசுகி கையை நீட்டியதும் பூங்கொடி அம்மாவை நிமிர்ந்து பார்த்தாள்.. தென்றல் தலையாட்டியதும் பூங்கொடி ஆட்டோவில் ஏறி வாசுகி மடியில் அமர்ந்தாள்..

தென்றல் அமர்ந்து கொள்ள குழலி அவள் மடியில் அமர்ந்தாள்.. ஆட்டோவில் யாரும் பேசவில்லை. மாதவி வீடு நோக்கி பயணப்பட்டார்கள்.

கண்களில் மட்டும் தென்றலுக்கும் வாசுகிக்கும் கண்ணீர் வடிந்த வண்ணம் இருந்தது. பரசுரம்  ஊமையாய் இதயத்திற்குள் கண்ணீர் வடித்தார்.. வாசுகி இறுக்கமாக பேத்தியை கட்டிக்கொண்டார். அவரது நடுங்கும் விரல்கள் பேத்தியின் தலை முதல் கால் வரை மெல்ல ஸ்பரிசித்து கண்ணீராய்  இத்தனை காலம் அவர்கள் செய்த தவறினை எடுத்துக் கூறியது.

மாதவி வீட்டிற்கு அனைவரும் வர வேகமாக வாசலுக்கு விரைந்தாள் வான்மதி..

நீண்ட வருடங்கள் கழித்து அக்காவை பார்ப்பவள் தாவி கட்டிக் கொண்டாள்.. பிள்ளைகளையும் பாசமாய் அவள் கட்டிக்கொண்டு  உச்சி முகர

” உள்ள போலாம்.. ” பரசுராம் வெளியே வைத்து எதையும் பேச விரும்பவில்லை.

வீட்டிற்குள் நுழைந்ததும் மாதவி அங்கே நடந்ததை துருவி கேட்க அவமானத்தில் வாய் பேச முடியாமல் அமைதியாக அமர்ந்து விட்டார் பரசுரம்..

” என்ன ஆச்சு.. அந்த பொம்பள ரொம்ப பேசிட்டாளா.. என்னண்ணே சொன்னா..” மாதவிக்கு விசாலாட்சியை பற்றி முன்பே தெரியும் என்பதால் கண்டிப்பாக பெரிதாக ஏதோ நடந்திருக்கிறது என்பது அவருக்கு புரிந்தது.

வாசுகி நடந்ததை அழுகையோடு கூற

“ம்ம்ம் அதெல்லாம் ஒரு மனுஷியா.. கொஞ்சம் கூட  மனசாட்சியே இல்லாம எப்படித்தான் இப்படி அவளால பேச முடியுது.. ச்சீ பணம் காசு இருக்குன்னா அது அவளோட. கடைசி காலத்துல எல்லாத்தையும் பொட்டில போட்டு கொண்டா போகப் போறா..கடவுள் எல்லாத்தையும்  பாத்துட்டு தான் இருக்கு. நம்ம பிள்ளையை படுத்துற பாட்டுக்கும் கொஞ்சம் கூட அடுத்தவங்க மனச புரிஞ்சுக்காம வெடுக்கு வெடுக்குன்னு பேசுற பேச்சுக்கும்  கூலி கொடுக்காம விட்டுறாது..” மாதவி பொரிந்து தள்ளினார்.

வாசுகியும் பரசுராமும் பேரப்பிள்ளைகளை ஆசை தீர கட்டி முத்தமிட்டு அழுது கரைந்தார்கள். பூங்கொடியை பார்க்கும்போது தான் அவர்கள் இருவருக்கும் நெஞ்சே அடைத்து விடும்படி இருந்தது.. பெற்ற மகளிடம் வீம்பாக இருந்தது தவறோ என்கிற எண்ணம் அவர்கள் இதயத்தை குத்தி கிழித்தது..

குழலிக்கு ஓரளவு நடத்தும் விஷயங்களை கிரகித்துக் கொள்ள முடிந்தது.. ஆனால் கொடிக்கு அவள் புரிந்து கொண்ட விஷயத்தை கூட  வெளிக்காட்ட முடியாத படி இறைவன் அவளை படைத்துவிட புதிய உறவுகளை கண்டு அவள்  செய்கை மொழியில் பேச  அதற்கு மேல் பேத்தியை  அந்நிலையில் காண முடியாமல் மண்டியிட்டு கீழே அமர்ந்த பரசுராம் கதறியே விட்டார்.

பூங்கொடியின் குட்டி கால்களை பிடித்த படி பரசுராம் கதற தென்றல் கரத்தினால் முகத்தை மூடிக்கொண்டு குலுங்கி அழுந்தாள்..

” தாத்தாவை மன்னிச்சிரு டா கண்ணு.. எனக்கு தெரியாம போச்சு டா.. இங்க இப்படி நடக்குதுன்னு எனக்கு முன்னாடியே தெரிஞ்சிருந்தா கண்டிப்பா தாத்தா உங்களை  இந்த மாதிரி நிற்கதில விட்டிருக்க மாட்டேன் டா.. என்ன மன்னிச்சிரு பாப்பா.. ஐயோ என்ற கண்ணு” பூங்கொடி மிரண்டு விட்டாள்..

குழந்தையின் முகம் மாறியதை கண்ட ஹரிதாஸ் தான் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து

” மச்சான்.. என்ன நீங்க பிள்ளைங்களுக்கு தைரியம் சொல்ல வேண்டிய நீங்களே இப்படி அழுந்தா பாவம் அதுங்க என்ன செய்யும்.. பேத்தி பயந்துட்டா பாருங்க..” அதன் பிறகு தான் தன்னை கட்டுக்குள் கொண்டு வந்த பரசுராம் பூங்கொடியை தூக்கி வைத்துக் கொண்டார்.

வான்மதி அக்காவின் கண்ணீரை துடைத்து அவளோடு சகஜமாக பேச முற்பட  மாதவி அனைவருக்கும் சாப்பாடு தயார் செய்தார்.

பேர பிள்ளைகளிடம் சகஜமாய் பேச முடிந்த பெற்றோர்களால் பெற்று வளர்த்த மகளிடம் வார்த்தையாட முடியவில்லை.

அவளாய் தேடிக் கொண்ட வாழ்க்கை தான். அவர்களின் நெஞ்சிலும் தலையிலும் இடியை இறக்கிவிட்டு  எவ்வளவு கஷ்டம் வந்தாலும் வீம்பாக பெற்றோர் வீட்டு வாசலை மிதிக்காமல் வைராக்கியமாய் வாழ்ந்து கொண்டிருப்பவள்..

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்கிற ரீதியில் ஐந்து நிமிடங்கள் கூட சசி வீட்டில் இருந்திருக்க மாட்டார்கள். அதற்குள் அவர்கள் கேட்ட வார்த்தைகள் ஆயுசுக்கு மறக்காது..

இத்தனை வருடங்களில் அவர்கள் பொத்தி வளர்த்த செல்ல மகள் மாமியாரிடம் எத்தனை வசவுகள் வாங்கியிருப்பாள்? பெரியவர்கள் பார்த்து சீர் செனத்தி செய்து வைத்து குறை இல்லாமல் நடத்தி வைக்கும் திருமணத்திலேயே மாமியார்கள் ஆயிரம் குறை கண்டுபிடிக்கும் போது, வெறும் கையும் மாலையுமாய் வீட்டிற்குள் நுழைந்தவளை  விசாலாட்சி எவ்வளவு கொடுமை செய்திருப்பார் என்பதை நினைக்கும் போதே பெற்றவர் இருவருக்கும் நெஞ்சத்தில் பழுக்க காய்சியை கம்பியை கொண்டு இழுப்பதை போல  ரணமாய் எரிந்தது..

பூங்கொடியும் பூங்குழலியும்  தங்கள் மேல் மிகவும் பிரியமாய் இருந்த தாத்தா பாட்டியிடம் நொடியில் ஒட்டிக் கொண்டார்கள்.

அவர்களுக்காக வாங்கிய பொருட்களை எல்லாம் அங்கேயே வைத்துவிட்டு வந்திருக்க மீண்டும் பேரப்பிள்ளைகளுக்கு நொறுக்கு தீனியும் விளையாட்டு பொருட்களும் வாங்குவதற்கு பரசுரம் வெளியே கிளம்பினார். கூடவே பேரப்பிள்ளைகள் இருவரும் அவர் கையைப் பிடித்து தானும் வருவதாக தலையசைத்துக் கேட்க மறுக்கவா முடியும் அவரால்.. அந்த வயதிலும் கொடியை தூக்கிக் கொண்டவர்  குழலியின் கையைப் பிடித்துக் கொண்டார்.

ஹரிதாஸ் பெண்களுக்கு தனிமை தர எண்ணி  காரை எடுக்க  பேரப்பிள்ளைகளோடு இருவரும்  கடை வீதிக்கு சென்று விட்டார்கள்.

வீட்டில் இப்பொழுது தனித்திருந்தது  நான்கு பெண்கள் மட்டுமே.. வான்மதியிடம் பேசிக் கொண்டிருந்த தென்றலை பார்வையால் வருடினார் வாசுகி.

பார்த்துப் பார்த்து அவர் வளர்த்த  பட்டுக்கூந்தல் காலத்தின் கோலத்தாலும், கடுமையான மன உளைச்சலாலும்  பராமரிப்பற்று வெடித்து  எலிவால் போல் மாறியிருந்தது.. பசும் நெய்யில் மிதக்கும் முந்திரி அல்வா போல  தொட்டால் வழுக்கும் கன்னங்கள் இரண்டும்  ஒட்டிப் போய், தங்க மேனியவள்  கார் வண்ணத்தை கொஞ்சம் கடன் வாங்கிருக்க, பாலும் நெய்யுமாய் ஊட்டி வளர்த்த அழகு மகள் பாழடைந்த கட்டடத்தை போல எப்போது வேண்டுமானாலும் ஒடிந்து விடுவாள் என்கிற நிலையில் இருந்தாள்..

வாசுகியின் கண்கள் தன்னை பார்ப்பதை தென்றலின் உள்ளுணர்வு உணர்த்தியது. தாயை நேர் பார்வை பார்க்க அவளுக்கும் முடியவில்லை.. என்னதான்  இருந்தாலும் அவளும் செய்தது தவறு தானே.. குற்ற உணர்ச்சி இதயத்திற்குள் குறுகுறுப்பை உண்டாக்க வான்மதி பேசுவதற்கு தலையாட்டுவதை மட்டுமே கடமையாக செய்து கொண்டிருந்தாள்.

ஒரு முடிவோடு வாசுகி மெல்ல எழுந்தார்.. எப்போது வேணாலும் அடைத்துக் கொள்வேன் என்கிற ரீதியில் ரத்த ஓட்டங்கள் தாறுமாறாய் ஓடியது.. கண்ணீர் வற்றிவிட்ட நிலையில்  மெதுவாய் தென்றலை நெருங்கியவர்  அவளின் தலையை வருடினார்.

அவ்வளவுதான் தாயின் ஸ்பரிசமும் அவரின் மஞ்சள் வாசத்தையும் நீண்ட ஆண்டுகள் கழித்து மிக அருகாமையில் அனுபவித்தவளுக்கு தன்னை கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை. வாசுகி இடுப்பை கட்டிக்கொண்டு சிறு குழந்தையென கதறி தீர்த்தாள்.

“ஸ்ஸ்ஸ்… ஒன்னும் இல்லடி.. ஒன்னும் இல்ல கண்ணு.. அம்மா வந்துட்டேன்ல.. இனிமே ஒன்னும் இல்ல.. எல்லாத்தையும் ஒன்ற அப்பா பாத்துக்குவாரு..அழாதடி.. அழாதடி பாவி மவளே..” மகளுக்கு ஆறுதல் சொல்வதாக நினைத்துக் கொண்டு அவரும் அழுதார்..

“ஏண்ணி அழாத அழாதன்னு சொல்லிட்டு நீங்களே அழுத்திங்கனா அப்புறம் அந்த புள்ள எப்படி அழுவாம இருக்கும்..” மாதவி சத்தம் போட்டதும் வாசுகி தன்னை உணர்ந்து மனதை திறப்படுத்திக் கொண்டார்.

பின்பு தென்றல் பக்கத்தில் அமர்ந்து  அவளிடம் பேச்சுக் கொடுத்து நடக்கும் யாவற்றையும் அறிந்து கொண்டார்..

அதற்குள் வெளியே சென்று இருந்தவர்களின் திரும்ப வீட்டிற்கு வர பிள்ளைகள் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி.