,
கணவன் வாந்தி எடுத்ததை கழுவி விட்டு ஒரு குடம் தண்ணீரை தூக்கி அவன் தலையில் ஊற்றி போதையை தெளிய வைத்து அதற்கு அவன் சன்மானமாக கொடுத்த முறைப்பினை பரிசாகப் பெற்ற தென்றல், வேறு ஏதும் சொல்லாமல் வீட்டிற்குள் சென்றாள்..
மனம் முழுக்க கசந்து வழிந்தது. புகுந்த வீட்டில் அவளுக்கு ஏற்படும் அவமானங்கள் ஒரு பக்கம். அந்த அவமானத்தை துடைத்து துணை நிற்க வேண்டியவனோ முழு போதையில் நின்று கொண்டிருக்கிறான்.
அவ்வளவு நேரம் வெளியே எட்டிப் பார்க்காத விசாலாட்சி கையில் துண்டோடு பதற்றத்தோடு வெளியே சென்றார்.
” படுபாவி இந்த ராத்திரி நேரத்துல தலையில தண்ணி ஊத்திட்டு துடைக்க துண்டு கூட கொடுக்காம போறா திமிரு புடிச்சவ.. இதெல்லாம் உனக்கு தேவையாடா? நான் அப்பவே “
” அம்மா நிறுத்துரியா.. இன்னும் எத்தனை வருஷத்துக்கு அப்பவே அப்பவேனு அப்ப நடந்ததை சொல்லிக்கிட்டே இருப்ப.. உன்கிட்ட காசு இருக்கா.. இருந்தா குடு இல்லன்னா தள்ளிப்போ” தன் தலையை துவட்டிக் கொண்டிருந்த தாயை விரட்டினான் சசி.
விசாலாட்சிக்கு கோபம் வந்தது.
” ஒரு காசுக்கும் உதவாம இருந்தாலும் பெத்த மகன்னு சேவகம் செய்யறேன் பாத்தியா என்னை இப்படித்தான்டா தள்ளி விடுவ.. உன் தம்பி மாதிரி நீ என்ன சம்பாதிச்சா கொடுத்து வச்சிருக்க? கேட்கிறப்ப எல்லாம் அஞ்சு பத்துன்னு எடுத்து நீட்ட.. உன் அப்பா வர நேரமாச்சு. ஒழுங்கு மரியாதையா எந்த பிரச்சனையும் பண்ணாம வீட்டுக்குள்ள வந்துரு..
வீணா உழைச்சு களைச்சு வீட்டுக்கு வர மனுஷனை கடுப்பாக்காத.. அக்கம் பக்கம் எல்லாம் சிரிக்குதுடா உன்னை பார்த்து மானமே போகுது..” விசாலாட்சியின் போதனைகளை கேட்டுக் கொண்டிருக்க சசிக்கு விருப்பமில்லை. அவன் எப்பொழுதோ வீட்டிற்குள் சென்று விட்டான்.
கை கால்களை கழுவிக் கொண்ட தென்றல் பிள்ளைகள் இருவருக்கும் தட்டில் சப்பாத்தி வைத்து எடுத்துக்கொண்டு அறைக்குள் சென்றாள்.. கிட்டத்தட்ட இருவருமே உறங்கி விட்ட நிலையில் இருந்தார்கள்.
சில வினாடிகள் கையில் தட்டை ஏந்தி கொண்டு தன்னுடைய பிள்ளைகளை கண்ணீர் மல்க பார்த்தாள் தென்றல்.. அந்த வயதில் அன்னையைக் கட்டிக் கொண்டு அவளும் அவளது தங்கையும் சந்தோஷமாக கதை பேசிய நினைவு வந்தது. ஆனால் அவளது பிள்ளைகள் வாய்விட்டு சிரிக்க கூட இந்த வீட்டில் உரிமை கிடையாது.
” கொடி.. குழலி எந்திரி.. எந்திரிங்க ரெண்டு பேரும் சாப்பிட்டு படுக்கலாம்.. ” அரை உரக்கத்திலிருந்து
குழந்தைகள் இரண்டும் எழுந்து அமர
” அம்மா எனக்கு சாப்பாடு வேணா.. ஒரே தூக்கமா இருக்கு” மீண்டும் படுக்கையில் சாய முற்பட்ட குழலியை இழுத்துப் பிடித்த தென்றல்
” மூணே மூணு சப்பாத்தி.. அம்மா ஊட்டி விடுவேனாம்.. என் செல்ல குட்டிங்க ரெண்டு பேரும் சாப்பிட்டு சமத்தா தூங்குவிங்களாம். அப்பதான் அம்மா நாளைக்கு ரெண்டு பேருக்கும் அந்த ரேமன் செஞ்சு தருவேன் ஓகே” பிள்ளைகளைப் பேசி சமாதானப்படுத்தி இருவருக்கும் சப்பாத்தியை ஊட்ட தொடங்கினாள் தென்றல்..
அப்பொழுது சொட்ட நனைந்தபடி உள்ளே வந்தான் சசி.. பிள்ளைகள் அவனை கண்டதும் அவனின் கோலத்தைக் கண்டு குழம்பி போனார்கள்.
” அப்பா மழையே பெய்யல எப்படி நெனைஞ்சிங்க”.. குழலி தலையை சொரிய
“அப்பா ஜாக்கிங் போய்ட்டு வந்தேன்டா.. நீங்க சாப்பிடுங்க” அவன் வாயை இழுத்து இழுத்து பேச குழலிக்கு ஓரளவுக்கு புரிந்தது விஷயம். தினம் அவள் பார்க்கும் கூத்து தானே.. அதற்கு மேல் அப்பாவிடம் வாய் கொடுக்காமல் வேகமாக சாப்பிட்டு அக்கா தங்கை இருவரும் படுத்து விட்டார்கள். அதற்குள் சசியும் குளித்து விட்டு வந்தான்.
அவன் வெளியே வந்து பார்க்கும்போது அங்கே தென்றலை காணவில்லை. ஹாலில் சென்று அமர அப்போது தான் வீட்டிற்கு வந்தார் சோமசுந்தரம்.. சொந்தமாக நகைக்கடைகள் இரண்டு வைத்திருந்தார்.
சசி மித்ரனின் குடும்பத்தை பொறுத்தவரை குடும்பம் பெரியது. குடும்பத்தின் வருமானமும் பெரியது. நகைக் கடை ஓனரின் மகன் என்பதால் அந்த ஊரில் அவனை தெரியாதவர் யாரும் இல்லை.. படித்து முடித்த கையோடு சசியிடம் ஒரு கடையையும் தேவாவிடம் இன்னொரு நகைக்கடையையும் ஒப்படைக்க திட்டமிட்டு இருந்தார் சோமசுந்தரம்.
” படிச்சு முடிச்சுட்டு என்னடா செய்யப் போற… வெட்டியா ஊர சுத்துறதுக்கு தான் தண்டமா உன்ன படிக்க வச்சேனா? ” இருபத்திரண்டு வயதில் இளம் காளையாக தந்தையின் முன் நின்று கொண்டிருந்தான் சசி மித்ரன்.
” அப்பா நான் அப்பவே சொன்னேன் எனக்கு படிப்புல இன்ட்ரஸ்ட் கிடையாது.. நீங்கதான் உங்க காசுக்கு தண்டமா என்னை காலேஜ்ல சேர்த்து விட்டீங்க. பேருக்கு ஏதோ ஒரு டிகிரி. என்னால உங்கள மாதிரி அந்த நகைக்கடையில சேட்டு கெட் அப் போட்டுட்டு உட்கார முடியாது.” மகன் தன்னை எதிர்த்துப் பேசியதை காட்டிலும் அவன் என்ன திட்டம் வைத்திருக்கிறான் என்பதை அறிந்து கொள்ள சோமசுந்தரத்திற்கு ஆர்வம் பிறந்தது.
” நகை கடையில உட்கார முடியாதுன்னா துரை வேறு என்ன பண்ண போறீங்க? ஐடி கம்பெனி ஓனரா ஆகலான்னு பிளான் வச்சிருக்கியா.. ” தந்தையின் குரலில் எள்ளல் அதிகமாக தென்பட்டது.
“ப்ச் ப்பா நான் படம் பண்ண போறேன்..” கண்களில் கனவு மின்ன தன்னுடைய எதிர்கால திட்டத்தினை தந்தையிடம் ஒப்பித்தான் சசி மித்ரன்.
சத்தியமாக அவன் கூறிய வார்த்தைகளின் பொருள் சோமசுந்தரத்திற்கு விளங்கவில்லை.
” படம் பண்றதுன்னா இந்த ஷார்ட் பிலிம்னு சொல்லிட்டு கையில கேமராவோட ஒரு பத்து இருபது பேர் சேர்ந்து பண்ணுவிங்களே அதானே.. இல்ல இந்த ரீல்ஸ் கண்ட கருமம் அதுவா.. கன்றாவி யூடியுப் பக்கம் போக முடியல.. எத தொறந்தாலும் இதுங்களே திரும்பத் திரும்ப வருதுங்க.. இந்த எழவ பண்ண தான் உன்ன தண்டமா படிக்க வச்சேனா..” அப்பொழுது தான் சசி உணர்ந்தான் தான் கூறியது தந்தைக்குப் புரியவில்லை என்று.
“ப்பா படம் பண்றதுனா சினிமா எடுக்க போறேன்னு சொல்றேன்..” சோமசுந்தரத்திற்கு சில வினாடிகள் பிடித்தது அடுத்த வார்த்தை பேசுவதற்கு. பக்கத்தில் கேட்டுக் கொண்டிருந்த விசாலாட்சிக்கு அடுப்பில் தீயிந்து கொண்டிருந்த குழம்பை காட்டிலும் மகன் கூறிய வார்த்தைகள் கருகிய வாடையாக மாறி நவ துவாரத்தின் உள்ளும் சென்று கொண்டிருந்தன.
” சினிமாவா.. ப்ரொடியூசர் யாரு” தந்தை அக்கறையாக கேட்கிறார் என்று நினைத்து
” சொல்லுப்பா ஏன் நிறுத்திட்ட. அப்படியே படிப்படியா போய் உருப்படாம குட்டிச்சுவரா நிக்க போறேன்னு சொல்ற.. செருப்பால அடிப்பேன் நாயே.. சொந்தம் பந்தம் எல்லாம் மூஞ்சில காரி துப்பும்.. சென்னையில சொந்த வீடு கட்டுறது எவ்வளவு பெரிய கனவு தெரியுமாடா..
உன் பாட்டன் பூட்டன் சொத்தா இருந்துச்சு நமக்கு.. என் அப்பன் குடிகாரன் இருந்த எல்லா காட்டையும் குடிச்சு அழிச்சான்.. ஊரை சுத்தி கடன் வாங்கி வச்சு செத்து தொலைச்சான்… சொந்த ஊர்ல நாண்டுகிட்டு செத்தா அவமானம்னு என் அம்மா என்னை இந்த ஊருக்கு கூட்டிட்டு வந்தாங்க.. சொல்லப்போனா ஊர விட்டு ஓடி வந்தோம்.. இங்க வந்து கஷ்டப்பட்டு உழைச்சு இன்னைக்கு விசாலாட்சி சொர்ண மாளிகைனா தெரியாதவங்க யாராச்சும் இருக்காங்களா.. இதெல்லாம் எப்படி வந்துச்சு..”
” என்னமோ நீங்க மட்டும் உழைச்சு ரெண்டு நகைக்கடையை வாங்கின மாதிரி பேசுறீங்க.. என் அப்பா கடையில எடுபுடியா இருந்தீங்க.. உங்கள லவ் பண்ணி வீட்டை விட்டு ஓடி வந்து, நம்மள கண்டுபிடிச்சு உங்களுக்கு தர்மடி விழுந்ததெல்லாம் மறந்து போச்சா.. கடைசில போனா போகுதுன்னு என்ன கட்டி வெச்சி அவரோட நகைக்கடையில உங்கள உக்கார வச்சாரு முதலாளியா.. கொஞ்சம் விட்டா பரம்பரை சொத்துன்னு சொல்லிருவீங்க போல” திடீரென்று இடைவெட்டி பேசினார் விசாலாட்சி.
” ஆமா இப்ப இத சொல்லலனா குடி மூழ்கி போயிரும் பாரு.. உங்க அப்பா என்ன சும்மாவா கடையை தூக்கி என் கையில கொடுத்தாரு.. உன் அண்ணன் எதுக்குமே உதவாதவன். குடிச்சு பொண்ணுங்களோட ஊர் சுத்தி இருந்த சொத்த எல்லாம் ஊதி தள்ளிக்கிட்டு இருந்தான். கடைசியா இருந்த நகை கடையையும் அவன் ஆட்டைய போட்டுருவான்னு பயந்து போய் தான உங்க அப்பா எனக்கு உன்னை கட்டி வச்சாரு.. இல்லனா கூட்டிட்டு ஓடுனதுக்கு என்ன புதைச்ச இடத்துல இந்நேரம் மரம் மொளச்சி இருக்கும்.” சோமசுந்தரமும் ஆத்திரத்தில் வார்த்தையை விட்டார்.
” அப்போ நீங்க என்னை லவ் பண்ணவே இல்லையா.. என்ன கல்யாணம் பண்ணதால தான் இன்னிக்கு ஊரு மெச்ச வாழ்றீங்க. இல்லனா இன்ன வரைக்கும் எடுபுடியா தான் இருந்திருப்பீங்க.. என் அப்பா மேல இருந்த பயத்துலயும் அவர் கொடுத்த சொத்துக்காகவும் தான் என்ன கல்யாணம் பண்ணி இருக்கீங்க. மத்தபடி உங்களுக்கு என் மேல விருப்பமே இல்லன்னு சொல்லாம சொல்லிட்டீங்க” முணுக்கென்று அவரின் கண்களில் கண்ணீர் திரண்டு விட்டது.
சோமசுந்தரத்தின் மனம் பாகாய்க் கரைந்தது..
” விச்சுமா நான் எப்ப அப்படி சொன்னேன்.. நீ என்னோட மகாலட்சுமி டி. நீ வந்ததுக்கப்புறம் தான் என் வாழ்க்கையில ஒரு பிடிப்பே வந்துச்சு..”
கணவரின் வார்த்தைகளில் உள்ளம் குளிர்ந்தாலும் “ம்ஹும்” மூக்கை சிந்தினார் விசாலாட்சி. திடீரென்று பேச்சு போகும் திசை மாறியதை உணர்ந்தார் சோமசுந்தரம்.
” அடியே நான் என்ன பேசிக்கிட்டு இருந்தேன்..குறுக்கால புகுந்து எல்லாத்தையும் கெடுத்துட்ட.. எங்க விட்டேன் ஹாங்.. ” ஞாபகம் வந்தவராய் தன் முன்னே நின்று கைபேசியை நோண்டிக் கொண்டிருந்த சசியை
“டேய்.. அப்படியே எஸ்கேப் ஆயிடலாம்னு பாத்தியா.. ஒழுங்கு மரியாதையா வந்து நகைக்கடையோட பொறுப்பை எடுத்துக்கோ.. உனக்கு ஒரு கடை உன் தம்பிக்கு ஒரு கடை. காலம் போன காலத்துல என்னால இதுக்கு மேல வியாபாரம் பண்ண முடியாது..”
சோமசுந்தரம் உறுதியாக சொல்லிவிட சசிக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. அவனும் எவ்வளவோ கெஞ்சி கூத்தாடி பார்த்து விட்டான். சினிமா என்பது பார்த்து ரசிப்பதற்கு மட்டுமே. நம் குடும்பத்திற்கு அது ஒத்து வராது என்பதில் சோமசுந்தரமும் விசாலாட்சியும் உறுதியாக இருந்தார்கள்.
இதனால் தினம் தினம் வீட்டில் பெரிய பிரச்சனைகள் உருவாகியது.. கடைசியாக வீட்டை விட்டு வெளியேறி நண்பர்கள் அறையில் தாங்கிக் கொண்டான் சசி.. ஆரம்பத்தில் மகனை கண்டு கொள்ளாமல் விட்ட சோமசுந்தரம் எங்கே மகன் குடும்பத்தை விட்டு முழுதாக விலகி விடுவானோ என்கிற பயத்தில் சசியை நேரில் சென்று சந்தித்தார்.
” சரி ஒரு வருஷம் டைம்.. அதுக்குள்ள அசிஸ்டன்ட் டைரக்டர்னாவது உன் பேரு படத்துல வரணும். இல்லனா நீ கடைக்கு வர.. ” அன்று ஒரு வருடம் மகனுக்கு அவகாசம் கொடுத்தவர் பன்னிரண்டு வருடங்கள் ஆகிவிட்டதை பெருமூச்சோடு உணர்ந்தார்.
தேவா தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதற்கிணங்க சமத்தாக நகைக்கடையை பார்த்துக் கொள்ள சசி மித்ரன் தந்தையின் தொழிலை பின் தொடர மறுத்தான்..
சோமசுந்தரம் குளித்து வருவதற்குள் உணவை முடித்துக் கொண்டு அறைக்குள் நுழைய ஏதுவாய் உணவு மேஜையில் சென்று அமர்ந்தான் சசி. அவனுக்கு உணவை பரிமாறினார் விசாலாட்சி.. அமைதியாக சாப்பிட்டு முடித்தவன் நாளைய உணவுக்கான ஆயத்தங்களை செய்து கொண்டிருந்த மனைவியை ஒரு பேச்சுக்காவது சாப்பிட்டாயா என்று கேட்க மறந்தான்..
சோமசுந்தரம் குளித்து வந்து விசாலாட்சியோடு அமர்ந்து அவரது இரவு உணவும் முடிந்த பிறகே அந்த வீட்டில் இறுதியாக சாப்பிட்டாள் தென்றல்.. அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு அவள் கட்டிலில் வந்து விழ சசியின் வலிமையான கரம் அவளை இழுத்து பிடித்தது.