27

ஒரு வழியாக வான்மதியோடு பேச ஆரம்பித்த தென்றல் மனதின் பாரங்கள் நீங்க சற்று நிம்மதியாக இருந்தாள். சில வேளைகளில் மதுவின் தயவை நாடாமல் மனிதனாய் நடந்து கொள்வான் சசி. அப்படியான ஒரு வேளையில் தான்  தென்றல் முகத்திலிருந்து அந்த நிம்மதியை  அவன் உணர்ந்து கொண்டான்.

வழக்கம்போல வேலை முடிந்து வீட்டிற்கு வந்து வீட்டிலும் வேலைகளை செய்துவிட்டு படுக்கையில் விழப்போனவள் பாதத்தைப் பிடித்தான் சசிமித்ரன்..

தென்றல் ஆடாமல் அசையாமல் படுத்திருந்தாள். எப்பொழுதாவது சசி மதுவை தேடாமல் இருந்தால் மனைவியின் மீது அக்கரை பட்டு அவள் பாதத்தை பிடித்து விடுவான்.

ஒருவேளை மனதளவில் பாவ மன்னிப்பு கேட்பதாய் கூட இருக்கலாம் யார் கண்டா?

வலது காலில் கருப்பு கயிறு மட்டும் கட்டிருந்தாள். திருமணமான புதிதில்  அவன் வாங்கி கொடுத்த  ஒன்பது மணிகள் வைத்த வெள்ளி மெட்டி நிறம் தேய்ந்து உருக்குலைந்து அவளது விரல்களில் ஒட்டிக் கொண்டிருந்தது.

பட்டிலும் மென்மையான தென்றலின் உள்ளங்கால்கள்  அயராத உழைப்பின் காரணமாய்  பாத வெடிப்பினை அவளுக்கு பரிசாக வழங்கியிருந்தது.. குதிங்கால் தோள்கள்  உராய்ந்து வெடித்து பாதத்தை தொட்டாலே முள்ளு செடியில் கை வைப்பதை போல உணர்த்தியது..

இப்படியான சமயங்களில் சசியின் மனம் உண்மையாகவே வாடி விடும். காதல் மனைவிக்கு சுகம் கொடுக்காமல், பெற்ற பிள்ளைகளுக்கு கடமையை செய்யாமல்  அப்படி என்ன கனவு வேண்டி கிடக்கிறது? நாளை அவனுக்கும் நேரம் வந்து பெரிய இயக்குனராக மாறிவிட்டால் பணம் சொத்து ஆடம்பர வாழ்க்கை அனைத்தும் காலடியில் கொட்டி கிடக்கும்.

ஆனால் இழந்த சந்தோஷங்களும், இன்று அவன் மனைவி படும் கஷ்டங்களும் சரியாகிவிடுமா?

மெல்ல அவள் பாதத்தில் தைலத்தை போட்டு தேய்த்துக்கொண்டே

” உன் ஃபோன்ல பார்த்தேன் வானுனு ஒரு வாட்ஸ்அப் மெசேஜ் வந்துச்சு.”..

“ம்ம்ம் என் தங்கச்சி”

” பேசிட்டியா.. “

“ம்ம்ம்” அடுத்த வார்த்தை கேட்க அவனுக்கு வாய் வரவில்லை.

” பிருந்தா மூலமா திரும்ப பேசிருக்கா.. அவளாவே தான் அடிச்சா..” தானாகவே கணவனிடம் நடந்ததை கூறினாள் தென்றல்.

” அப்பா அம்மா”மென்று விழுங்கி வார்த்தைகளை வெளி விட்டான்  சசி.

” எப்படியும் அவங்க பேசிட்டாலும்.. என் தங்கச்சி பேசினதே பெரிய விஷயம்.. உங்களுக்கு தெரியுமா அவ நல்லா படிச்சு இப்போ காலேஜ்ல இங்கிலீஷ் ப்ரொபசரா இருக்கா.. பாவம் என்னால அவளுக்கு ரொம்ப கஷ்டம்.. அன்னைக்கு என்னோட லைப் தான் பெருசுன்னு சுயநலமா முடிவு எடுத்துட்டேன். அதனால நான் மட்டும் இல்ல அவளும் ரொம்ப படாத பாடு பட்டுட்டா…” தென்றல் எதை நினைத்தும் கூறவில்லை. எதார்த்தமாக அவள் நடந்ததை விவரித்துக் கொண்டிருந்தாள்.

திருடனுக்கு தேள் கொட்டியதை போல சசி திருட்டு முழி முழித்தான்..

” என்ன சத்தத்தையே காணோம்? நான் ஒன்னும் உங்கள குத்தி காட்டல.. ” அப்பொழுதும் சசி அமைதியாகவே இருந்தான்.

தென்றல் தங்கையோடு தான் பேசியதை சிலாகித்து அவனிடம் பகிர்ந்து கொண்டிருந்தாள்.

அவள் பேச பேச அவள் அறியாமல் அவளின் முகத்தில் வந்து போன பாவத்தை வைத்தே எந்த அளவிற்கு அவள் குடும்பத்திற்காக ஏங்கியிருக்கிறாள் என்பது அவனுக்கு புரிந்தது.. கரடு முரடான அவள் பாதத்தை விரல்களால் வருடிய போதும் அவள் கூச்சத்தில் சிலிர்க்கவில்லை.

நெகிழிப் பையில் நெய் ஊற்றினால் வழுக்கி கொண்டு செல்லுமே அது போல் ஒரு காலத்திலிருந்து அவளின் உள்ளங்கைகளும் உள்ளங்கால்களும்.. கால்களின் நிலை நடந்து  நடந்தே நிலை மாறிருக்க உள்ளங்கைகளின் நிலையை சொல்லித்தான் தெரிய வேண்டுமா..

அவள் பேசி முடிக்கும் வரை மௌனமாக இருந்தவன்

” கேட்கிறேன்னு தப்பா நினைக்காத.. “

” தப்பா நினைக்கிற மாதிரி ஏன் கேக்குறீங்க” பதில் கேள்வி கேட்டாள் தென்றல்.

” கேட்காம இருக்க முடியல.. “

“அப்படினா” அவள் எதுவோ சொல்ல வர

“ஸ்ஸ்ஸ் ப்ளீஸ் டி எதுவும் பேசாத.. நான் சொல்ல வேண்டியதை சொல்லிக்கிறேன்.” அவனது கண்கள் இறைஞ்ச தென்றல் மௌனமானாள்.

” என்னால உனக்கு எப்பவும் கஷ்டம் தான்.. வீட்டுல வேலை செய்ற இடத்துல  நம்ம சொந்தத்துக்கு நடுவுல, உன் குடும்பத்துல இப்படி எந்த இடத்துலயும் நான் உனக்கு சந்தோஷத்தை கொடுக்கவே இல்லையே.. உனக்கு என்ன வயசிருக்கும்? முப்பத்தி ரெண்டுக்குள்ள ஒட்டு மொத்த பாரத்தையும் உன் மேல சுமந்துகிட்டு இருக்க.. சுமத்தினது நான்.. உனக்கு என் மேல கோபமே வரலையா?

தினம்  நான் கேட்கிறேனோ இல்லையோ  என்னோட அக்கௌன்ட்டுக்கு  முன்னூறு  ரூபா அனுப்பி விட்டுடற.. மேற்கொண்டு நான் பணம் கேட்டாலும் கொடுக்கிற.. என்னோட சட்ட கிழிஞ்சிருந்தா உடனே வாங்கி வைக்கிற.. இவ்ளோ ஏன் நான் போடுற பாக்சர் கூட  எல்லாமே நீ தான் கவனிச்சு வாங்கி வைக்கிற.

அன்னைக்கு பாத்தேன்.. உன்னோட உள் பாவாடையில  நிறைய இடம் கிழிஞ்சிருக்கு. எல்லாத்தையும் சொந்தமா தைச்சிருக்க.. ப்ரா கூட.. தைச்சு தான் போடுற.. எனக்கும் பசங்களுக்கும் எல்லாத்தையும் பார்த்து பார்த்து செய்யற.. உனக்கு நீ எதுவுமே செய்ய மாட்ற..

நீ கடைசியா முடிவெட்டி எவ்ளோ நாள் ஆகுது.. இதெல்லாம் என்னாலதானே.. இதுவே உன் இடத்துல வேற பொண்ணா இருந்திருந்தா  சத்தியமா அடிச்சு சொல்றேன் எப்பவோ என் மூஞ்சில காரி துப்பிட்டு போயிருப்பா..

நீ எப்படி டா.. ஏன்.. எனக்கு சத்தியமா புரியல.. என்னால நீ இழந்தது மட்டும்தான் மிச்சம்.. அப்படி இருக்கும்போது எப்படி? ” தப்பு முழுவதும் அவன் பேரில் இருப்பது அவனுக்கே நன்றாக புரிந்து இருந்தாலும் இந்த கேள்வியை கேட்டே ஆக வேண்டும் என்கிற துடிப்பு அவனுக்கு..

தென்றலின் கண்கள் அவன் கண்களோடு கலந்தது.. அவன் கூறுவது உண்மைதானே அவனால் அவள் இழந்தது மட்டுமே அதிகம்.. அப்படி இருந்தும் எதனால் அவனை இன்னும் சகித்துக் கொண்டிருக்கிறாள்?

சின்ன சிரிப்போடு
” பேசாம படுத்து தூங்குங்க எனக்கு தூக்கம் வருது.. ” படுத்து விட்டாள் தென்றல்.. சசி கேட்ட கேள்விகளுக்கு  காலம் கடந்து பொறுமையாக ஒரு நாள் அவள் பதில் கூறுவாள். அந்த பதிலை  அந்நேரம் கேட்பவனின் உள்ளம் எப்படி கதறி துடிக்கும் என்பது அந்த இறைவனுக்கு மட்டுமே தெரியும்..

நாட்கள் ஓட வான்மதி மெல்ல  வீட்டில்  அக்காவை பற்றிய பேச்சை எடுத்தாள்…

” இப்போ எதுக்கு அவளோட பேச்சு.. ” ஆரம்பத்திலேயே கிள்ளி எறிந்தார் வாசுகி.

பரசுராம் அமைதியாக இருந்தார்.. அரசல் புரசலாக  தென்றலை பற்றி அவர் கேள்விப்படும் விஷயங்கள் யாவும் கலிப்பூரக் கூடியதாக இல்லை.. தந்தையாக அவரின் கடமையை செய்யவில்லையோ என்கிற தவிப்பும் துடிப்பும் நாளுக்கு நாள் அவரைக் கொன்று கொண்டே வருகிறது..

எனவே சின்ன மகள் பெரியவளை பற்றிய பேச்சை எடுத்ததும் உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்தார். வாசுகி அடக்கியதால் அடங்கிப் போகும் ஆளில்லை வான்மதி.. தினமும் அக்காவின் பேச்சு வீட்டில் இடம்பெற்றது..

ஒரு சில நாட்கள் பொருத்து போன வாசுகி

” இப்ப எதுக்கு ஓடிப் போனவளை பத்தின பேச்சு? அவ நல்லா சொகுசா தான வாழுறா?” ஆத்திரத்தில் வார்த்தையை விட்டார்.

” இல்லம்மா அக்கா நீங்க நினைக்கிற மாதிரி சந்தோஷமா இல்ல.. ” பட்டென்று வந்து விழுந்தது வான்மதியின் வார்த்தைகள். அதுவரை நடக்கும் பேச்சு வார்த்தையில் கலந்து கொள்ளாமல் தனித்திருந்த பரசுராம்

“ஏன்” அவசரமாக கேட்டார். இதுதான் சமயம் என்று தென்றல் வாழ்வில் நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் கூறி முடித்தாள் வான்மதி. பெற்ற மனம் அல்லவா இருவரும் கல்லாய் சமைந்து விட்டார்கள்.

காதலித்தவனை மனம் கொண்ட மகிழ்ச்சியில் மகள் திளைத்திருப்பாள் என்று அவர்கள் எண்ணிருக்க அவர்களின் எண்ணத்தில் பெட்ரோல் ஊற்றி வேறிலேயே கருக்கி விட்டார்கள்.

“பாவி இதுக்கா இம்புட்டு அவசரமா ஓடுனா? பேசாம நாம பார்த்த பையன கட்டிருந்தா அவளுக்கு இந்த நிலைமை வந்திருக்குமா? இப்படி சீரழிஞ்சு நிக்கிறதுக்கு  வாய் கிழிய என்ன பேச்சு பேசிட்டு போனா..” வாசுகி மனம் பொறுக்காமல் குமறத் தொடங்கினார்.

” நான் அப்பவே சில விஷயம் கேள்விப்பட்டேன்.. ஆனா ஒன்னு பாத்தியா வாசு.. இவ்ளோ நடந்தும் அவ நம்ம கிட்ட திரும்ப வரவே இல்லை.. அவளுக்கு எவ்ளோ வீம்பு பாத்தியா..” பரசுராம் பெருமூச்சோடு கூறினார்.

” ஆமா பொல்லாத வீம்பு.. இந்த வெத்து வேட்டு வீம்புக்கு ஒன்னும் குறைச்ச இல்லை.. வாய் பேச முடியாத பிள்ளைய வச்சுக்கிட்டு  அவ எப்படித்தான் காலம் தள்ளுறா..” பரசுராமிற்கும் அந்த எண்ணம் எழாமல் இல்லை..

அன்றைய இரவு முழுவதும் வாசுகி தென்றலை பற்றியே குமுறி தீர்த்தார்..

பெற்றோர்கள் இருவருக்கும் தங்கள் கடமையை சரியாக செய்யவில்லையோ என்கிற குற்ற உணர்வு நெஞ்சத்தை குத்தி கிழித்தது. அவர்களது கடமையை சரியாக செய்திருந்தால் இந்நேரம் தென்றலுக்கு இந்த நிலைமை வந்திருக்காது என்று நியாயமான மனது எடுத்துரைத்தது..

அதன் தாக்கத்தில் அடுத்த இரண்டு நாட்கள் கணவன் மனைவி ஒன்றாக கலந்தாலோசித்து அடுத்த கட்டமாக பரசுராம் மாதவிக்கு அழைத்து பேசினார். அண்ணன் பல வருடங்கள் கழித்து தன்னிடம் இயல்பாக பேச மாதவிக்கு கண்களில் கண்ணீர் பெருகியது.

தென்றலை பற்றி அவர் அறிந்த அனைத்தையும் கூறினார்.. மீண்டும் ஒருமுறை தங்கையின் வாய்மொழியாக தென்றலின் அவல நிலையை கேள்விப்பட்ட பரசுராமிற்கு இதயம் தாங்கவில்லை. உடனடியாக அவளை பார்க்க உள்ளம் ஏங்கியது..

அவளாக இறங்கி வருவாள் என்கிற நம்பிக்கை அவர்களுக்கு கிடையாது. இவ்வளவு கஷ்டத்திலும் தன்மானத்தோடு அவள் பிழைத்துக் கொண்டிருக்க எக்காலகட்டத்திலும் பெற்றோரை கரிசனையை   அவள் நாட மாட்டாள்.

எனவே குடும்பத்தோடு கிளம்பி  தென்றல் வீட்டிற்கு சென்றார்கள்  அனைவரும். விசாலாட்சியை பற்றி மாதவி கதை கதையாக சொல்லியிருக்க முதலில் தங்கை வீட்டிற்கு சென்ற பரசுராம் ஹரிதாசிடம் மன்னிப்பு கேட்டார்..

பரசுராமன் நிலை ஹரிதாஸீருக்கு தெரியும் என்பதால்  அவர் இதனை பெரிது படுத்தவில்லை. வீட்டிற்கு வந்தவர்களை நன்முறையில் வரவேற்று உபசரித்தார். விட்டுப்போன சொந்தம் மீண்டும் சேர்ந்ததில் மாதவியை தான் கையில் பிடிக்க முடியவில்லை.

வான்மதியை தங்கை வீட்டில் விட்டுவிட்டு கணவன் மனைவி இருவர் மட்டும் தென்றலை காணச் சென்றார்கள்..

இதுவரை கண்ணால் கூட கண்டிராத பேர குழந்தைகளுக்கு  தின்பண்டங்களும் உணவு வகைகளும் வாங்கிக் கொண்டு அவர்கள்  தென்றல் வீட்டிற்கு செல்ல வீட்டின் முகப்பிலேயே அவர்களை தடுத்து நிறுத்தினான் காவலாளி.

அவர்களின் சாதாரண தோற்றத்தை பார்த்து உள்ளே விட மறுத்தான்.. பரசுராம் தான் யார் என்பதை கூறவும்  உள்ளே அழைத்து விசாலாட்சியிடம் விஷயத்தை அவர் கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல் அவர்களை திருப்பி அனுப்ப கூறினார்.

காவலாளி உள்ளே விட மறுக்க அந்த பெரிய பங்களாவின் முன்பு அவமானப்பட்டு நின்றார்கள் பரசுராம் வாசுகி இருவரும். நல்லவேளையாக  அந்நேரம் வீட்டிற்கு வந்த தேவா அவர்கள் யார் என்பதை கேட்டறிந்து காவலாளியை கண்டித்து இருவரையும் உள்ளே அழைத்து வந்தான்.

விசாலாட்சி வந்தவர்களை பார்த்தது முகத்தை திருப்பிக் கொண்டார். வீட்டிலிருந்த சோமசுந்தரமும் பெரிதாக வந்தவர்களுக்கு வரவேற்பு கொடுக்கவில்லை..

அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தென்றல் வீட்டிலிருந்தாள். சமையலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவளிடம்  பூங்கொடி ஓடிச்சென்று யாரோ வந்திருப்பதாக கூற  யோசனையோடு வந்து எட்டிப் பார்த்தவளுக்கு காலுக்கடியில் பூமியின் நழுவியது.

பல வருடங்களாக அவளை தண்ணீர் தெளித்து விட்டிருந்த பெற்றோர் இன்று மகளைத் தேடி அவள் வீடு ஏறி வந்திருக்கிறார்கள். அவ்வளவு பெரிய வீட்டில் அவர்கள் அமர்வதற்கு இடமில்லை.அமர சொல்வதற்கு அங்கே யாருக்கும் மனமில்லை..

அழகோவியமான தங்கள் மகள்  கோலம் அழிந்து  வியர்த்து விருவிருக்க  தங்கள் முன்பு நின்று கொண்டிருப்பதை கண்டதும்  வாசுகி  கண்களிலிருந்து கண்ணீர் அருவியாய் இறங்கியது. பரசுராம் இதயத்திற்குள் ரத்த கண்ணீர் வடித்தார்.

“ஓசி சோத்துல உடம்ப வளக்க வந்துருச்சிங்க பஸ்ஸ புடிச்சு.. மானகெட்ட ஜென்மங்க” விசாலாட்சியின் வசவு  வந்திருந்தவர்கள் இதயத்தில் இடியை இறக்கியது..

செய்வதறியாமல் திகைத்து நின்றாள் தென்றல்.