24

தன்னைப் பற்றிய சிந்தனைகளில் மூழ்கிய சசி வீழ்ந்ததிலிருந்து எழுந்து வராமல்  போதையெனும் தீய பழக்கத்திற்கு அடிமையாகி அவனையே அதில் முழுதாக இழந்தான்.. அவனோடு அவனின் மனைவி இரு மகள்களும் சந்தோஷத்தை இழந்தார்கள்.

ஆரம்ப காலகட்டத்தில்  அவன் வாழ்க்கை எப்படி இருந்ததோ மீண்டும் அதே நிலைக்கு தள்ளப்பட்டான். ஸ்கிரிப்ட் ரைட்டிங், கதை சொல்வது, ஸ்கிரிப்ட் பவுண்டிங்  என ஏதாவது ஒன்றை செய்து அதில் வரும் பணத்தை அவனின் தேவைக்கு எடுத்துக் கொண்ட பிறகே தென்றலிடம் கொடுத்தான்.

என்னதான் வீட்டு வாடகை பிரச்சனை இல்லாமல் இருந்தாலும் அவர்கள் சாப்பிடும் செலவு, பிள்ளைகளின் தேவைகள் இப்படியான பணத்திற்கு தென்றல் எங்கு செல்வாள்? இதனால் தினம் கணவன் மனைவி இருவருக்கும் சண்டை.

ஒரு கட்டத்திற்கு மேல் தென்றலுக்கு வாழ்க்கை வெறுத்தே விட்டது.. என்ன செய்வதென்று புரியாமல் அவள் திணறிக் கொண்டிருந்த வேளை தான், பிள்ளைகள் இருவரையும் தூக்கிக்கொண்டு மாதவி வீட்டிற்கு சென்றாள்..

தென்றலை கண்டதும் மாதவிக்கு பேரதிர்ச்சி.. பேரழகி இல்லாவிட்டாலும் கண்களுக்கு குளிர்ச்சியான அழகு தென்றல். லட்சணமான முகம்.. அதில் எந்நேரமும் குடிகொண்டிருக்கும் அமைதியோடு கூடிய புன்னகை. கண்கள் இரண்டும் பளிச்சென்று மின்னலிடும்.. சதை மூங்கிலான உடலழகு அவளை நிச்சயம் அழகி என்று பறைசாற்றும்.

குரங்கு கையில் கிடைத்த பூமாலையாக கோலம் அழிந்து, சோபை இழந்த முகத்தோடு அண்ணன் மகள்  வாசல் வந்து நிற்க மாதவியின் நெஞ்சம் பரிதவித்தது. அதுவரை தென்றல் மீது அவருக்கு இருந்த கோபம் அனைத்தும்  சூரியனைக் கண்ட பனி போல் கரைந்து போனது..

இறுதியாக அவரது மகள் திருமணத்திற்கு பரசுராம் வீட்டிற்கு பத்திரிக்கை கொடுக்க சென்றார். கதவை திறக்கவில்லை அவர். ஹரிதாஸ் அதோடு கொஞ்சநஞ்சம் ஒட்டிக் கொண்டிருந்த உறவையும் கத்தரித்து விட்டார்.

“ஐயோ தென்றலு.. என்னடி கோலம் இது..” வாசலுக்கு ஓடி வந்தவர் தென்றலை கட்டிக்கொண்டார். அத்தை தன்னை கண்டதும் கோபத்தில்  ஆடித் தீர்த்து விடுவார் என்கிற எண்ணத்தில்  பயத்தோடு நின்று கொண்டிருந்தவளுக்கு மாதவியின் கண்ணீர் கழிவிரக்கத்தை ஏற்படுத்தியது..

“அத்தை” அதற்கு மேல் வார்த்தை வராமல்  விசும்பினாள் தென்றல்..

சட்டென்று நிதானத்திற்கு வந்த மாதவி

” உள்ள வாடி.. உன் பசங்களா.. ” குழலி அம்மாவின் இடையை கட்டிக்கொள்ள கொடியை தூக்கிக்கொண்டார் மாதவி..

தயக்கத்தோடு அந்த வீட்டிற்குள் கால் எடுத்து வைத்தாள் தென்றல்.. முதல் காரியமாக வெயிலில் வந்தவளுக்கு தண்ணீர் கொடுத்தவர்

“சாப்டியாடி”என்றார் இன்று முகத்தை கண்களால் அளந்தபடி.

“சாப்பிட்டேன்” தென்றல் பொய் சொல்கிறாள் என்பது அவள் வார்த்தையில் இருந்து தெரிந்தது.

உடனே தட்டில் சாப்பாடு போட்டு எடுத்து வந்து வைத்தார் மாதவி.

” அத்தை வேணாம் நான் சாப்பிட்டு தான் வரேன்..”

” பரவால்ல அத்தை வீட்ல சாப்பிட்டா ஒன்னும் குறைஞ்சு போயிட மாட்ட..”.. தென்றலுக்கு தொண்டையை அடைத்தது.. ஹரிதாசை நினைத்து பயம் வேறு.

கண்களால் வீட்டை அளந்தாள் தென்றல்.

” என்னடி வீட்டையே பாக்குற சாப்பிடு.. “

” மாமா எங்க அத்தை”.. தென்றலின் தயக்கம் அவருக்கு புரிந்தது.

” அவரு வேலைக்கு போய் இருக்காரு நீ சாப்பிடு..” சாப்பாட்டை பிசைந்து குழலிக்கு  ஊட்ட போக

” நீ மொத சாப்பிடுடி.. பசங்களுக்கு நான் ஊட்டி விடுறேன்.. ” இன்னொரு தட்டில் சாப்பாடு போட்டு  ஊட்டி விட்டார் மாதவி.. அவ்வப்போது தென்றலையும் கவனித்தார். நீண்ட நாட்களுக்குப் பிறகு  வயிறு நிறைய உண்டாள் தென்றல். அவள் வீட்டில் உணவுக்கு பஞ்சமில்லை. ஆனால் ஒருவாய் சோற்றைக் கூட நிம்மதியாக உண்ண முடியாத அவல நிலை அவளுக்கு.

உணவு முடிந்ததும் திராட்சை பழத்தை எடுத்து வந்த தென்றலிடம் கொடுத்தார் மாதவி..

” அத்தை இப்பதானே சாப்பிட்டோம்.. “

” உனக்கு பிடிக்குமே.. சும்மா சாப்பிடு” தென்றலுக்கு கண்ணை கரித்துக் கொண்டு வந்தது.. மாதவி அவளை திட்டி அடித்திருந்தால் கூட தங்கிருப்பாள்.. ஆனால் அவரின் இந்த கரிசனம் சுமக்க முடியாத பாரமாக நெஞ்சை அடைத்துக் கொண்டு  மூச்சு விட முடியாமல் தவித்தாள் தென்றல்..

முகம் சிவந்து மூச்சுக்கே தடுமாறும் நிலையில்  அண்ணன் மகளைக் கண்டு மாதவிக்கு அவள் ஏதோ பெரிய பிரச்சினையில் இருக்கிறாள் என்பது மட்டும் புரிந்தது.. அகிலன் சசியின்  வாழ்வில் நடந்ததை அவ்வப்போது தாயிடம் பகிர்வான்.. ஒன்றும் ஒன்றும் இரண்டு என்று உடனே புரிந்து கொண்டார் மாதவி. தென்றல் பக்கத்தில் அமர்ந்து அவள் முதுகை நீவினார்..

” ஒன்னும் இல்ல நீ அமைதியா இரு பதட்டப்படாத.. ” தென்றலுக்கு அந்த நொடி அப்பேர்ப்பட்ட  அன்பும் கரிசனையும் தேவைப்பட்டது. மாதவியின் மடியில் படுத்து மனக்குமுறலை கொட்டி விட்டாள்.

நடந்தது அனைத்தையும் கேட்டு முடித்த மாதவி  மடியில் படுத்து அழும் அண்ணன் மகளை எவ்வகையில் சமாதானப்படுத்துவது என்று திணறினார்.

இன்று தென்றல் வாழ்க்கையில் புயல் வீசுவதற்கு அவரும் ஒரு காரணம் என்று தினம் தினம் குற்றவுணர்ச்சியில் நிம்மதியாக வாழ முடியாமல்  தவித்துக் கொண்டிருந்தார் மாதவி.. சசியின் வளர்ச்சியை பற்றி அகிலன் கூறும்போது ஒருவகையில் அவரது மனம் சமாதானப்பட அவனுடைய வீழ்ச்சி பற்றி தெரிந்ததிலிருந்து தென்றலை நினைத்து தான் அவர் மனம் தவியாய் தவித்தது.

இப்பொழுது கண்கூடாக  தென்றலின் துடிப்பை கண்டவருக்கு  அவரை அறியாமல் கண்களில் நீர் துளிர்தது..

அனைத்தையும் அத்தையிடம் கொட்டி தீர்த்த பிறகு மனதில் இருந்த பாரங்கள் சற்று குறைய கண்களை துடைத்தபடி எழுந்து அமர்ந்தாள் தென்றல்..

“ம்மா.. பாப்பா பால் கொட்க சொல்லு”.. குழலி தாயிடம் புகார் வாசித்தாள்..

“ஸ்ஸ்ஸ்.. ரெண்டு பேரும் சேர்ந்து விளையாடுங்க.. எதையும் தொடக்கூடாது.. பால் வேணா.. கொடி அம்மாட்ட பால் கொடு..” எழுந்து சென்று கொடியின் கையில் இருந்த பந்தை வாங்கி வந்து உட்கார்ந்தாள் தென்றல். அவள் கண்கள் முழுதும் பிள்ளைகள் மேலே நிலைத்திருந்தது.

மாதவி எப்பொழுதுமே தென்றலை பொறுப்புள்ள பெண்ணாய் தான் கண்டிருக்கிறார். வாசுகியின் வளர்ப்பு அப்படி. இன்று தென்றலைப் பொறுப்புள்ள தாயாக காண்கிறார். அவள் கண்கள் முழுதும் வேதனையோடும் எதிர்காலத்தைப் பற்றிய பயத்தோடும் பிள்ளைகள் மேல் படித்திருக்க அந்த நிலைக்கு அவளை ஆளாக்கிய சசியை திட்டாமல் இருக்க முடியவில்லை மாதவிக்கு.

” இவன்லாம் ஒரு மனுஷனா? இவனுக்கெல்லாம் எதுக்கு கல்யாணம் புள்ள குட்டி? ஒரு பொண்ணு வச்சு சோறு போட்டு  வக்கில்லாதவனுக்கு  காதல் ஒன்னு தான் கேடு.. நீ எப்படித்தான் இவனை நம்பி ரெண்டு பிள்ளை பெத்தியோ…

உன் இடத்துல நானா இருந்திருந்தேன்  விறகு கட்டையை எடுத்து மண்டையை உடைச்சிருப்பேன்.. இப்பவும் ஒன்னும் கெட்டு போல. உன் வாழ்க்கை இந்த மாதிரி போனதுக்கு ஒரு வகையில நானும் தான்டி காரணம்.

எனக்கு என் அண்ணன் கூட எப்பவும்  சொந்தம் இருந்துகிட்டே இருக்கணும்.. மத்ததெல்லாம் அதுக்கு அப்புறம் தான்.. சுயநலமா நான் எடுத்த முடிவால இன்னிக்கு  யாருமே சந்தோஷமா இல்ல.

அத்தை சொல்றத கேளு தென்றல். நான் பண்ண தப்ப நானே சரி பண்றேன். நீ உன் வீட்டுக்கு போக வேணாம். இன்னைக்கு ராத்திரியே ரெண்டு பேரும் கோயபுத்தூர் போவோம். பிள்ளைங்கள பாத்தா அண்ணியால  பேசாம இருக்க முடியாது.. கண்டிப்பா அவங்க மனசு மாறிடும்..

கேக்குறதுக்கு யாரும் இல்லன்னு தானே உன் மாமியார் இந்த ஆட்டம் ஆடுறாங்க. உன் புருஷனுக்கும் மனசுல தொக்கா போச்சு. இவனுங்கள எல்லாம் இப்படியே விட்டு வெச்சா தலைக்கு மேல ஏறிடுவானுங்க. உங்க அப்பா தான் இதுக்கெல்லாம் சரிப்பட்டு வருவாரு.

அந்த பொம்பள நம்மள அன்னக்காவடினு நினைச்சுகிச்சா என்ன.. அவங்க அளவுக்கு இல்லாட்டியும் நாமளும் ஒன்னும் குறைஞ்சவங்க இல்லை..” மாதவி பேசிக்கொண்டே செல்ல தென்றல் அமைதியாக அமர்ந்திருந்தாள்.

” என்னடி எதுவும் சொல்லாம இருக்க”

மெல்ல அத்தையை திரும்பிப் பார்த்த தென்றல் ” ஏற்கனவே என்னால  உங்களுக்கும் மாமாவுக்கும் பிரச்சனை. இப்போ நான் இங்க வந்தது தெரிஞ்சா என்ன ஆகும்னு யோசிக்கிறேன்”

” அதுக்காக என் அண்ணன் மக பரதேசி மாதிரி வந்து வாசப்படில நிப்பா. அத பாத்துக்கிட்டு நான் கையை கட்டி வேடிக்கை பார்க்கணுமா.. என்ன ஆனாலும் சரி அந்த மனுசன நா பேசுகிறேன். நீ என்ன சொல்ற.. “

புரியாமல் அவரைப் பார்த்த தென்றல் ” என்னத்த சொல்லணும்” அவளை மாதவி கோபமாய் முறைத்தார்.

” விடிய விடிய கதை கேட்டு சீதைக்கு ராமன் சித்தப்பான்னு சொன்னானாம்.. அறிவு கெட்டவளே.. இவ்ளோ நேரம் நான் என்னடி சொல்லிட்டு இருக்கேன் அந்த சசியை விட்டு ஒளிச்சிட்டு வா.. இன்னைக்கு ராத்திரிக்கு கோயம்புத்தூருக்கு கிளம்புவோம்னு சொல்லிட்டு இருக்கேன்.”

மாதவியின் கோபம் தென்றலுக்கு புரிந்தது. எந்த பதிலும் சொல்லாமல் அமைதியாக தலை குனிந்த படி அமர்ந்திருந்தாள் தென்றல்.

” வாயில என்ன கொழுக்கட்டையா வச்சிருக்க.. சட்டுனு சொல்லு” அதட்டினார் மாதவி..

தென்றல் அப்பொழுதும் அமைதியாகவே இருந்தாள். அவள் நிறைய யோசித்தாள்.. அவள் மனதில் ஓடும் எண்ணங்களை பற்றி அறியாமல் மாதவி பேசிக்கொண்டே சென்றார்.

” படுபாவி நல்லா இருப்பானா அவன்? படிக்கிற பிள்ளை மனச கலைச்சு காதல் கத்திரிக்காய்ன்னு இந்த நிலைமையில தள்ளிட்டானே.. ரெண்டு பிள்ளைங்க இருக்கு அப்ப கூட ஒரு ஆம்பளைக்கு பொறுப்பு இல்லன்னா எப்படி? இந்த அழகுல  ஒரு பிள்ளைக்கு வாயும் பேச முடியாது காதும் கேட்காது.. இதுங்கள பத்தி கொஞ்சமாச்சும் அக்கறை இருந்திருந்தா அவன் குடிச்சிட்டு இப்படி நாறிட்டு இருப்பானா..

த்து.. மனுசன பாரு.. பிள்ளைகளையும் உன்னையும் இந்த கோலத்தில பார்க்கும் போது என் வயிறு எரியுதடி.. அவன் நல்லாவே இருக்க மாட்டான்.. நாசமா”

“அத்தை” தென்றல் குரலில் மாதவியின் வார்த்தைகள் தடைப்பட..

” இன்னும் அவனுக்கு வக்காலத்து வாங்கிட்டு இருக்கியா.. ” ஆவேசமாய் பேசினார்  மாதவி.

தென்றல் மிகவும் பொறுமையாக ஆனால் அழுத்தமான குரலில் கூறினாள்.

” இந்த ரெண்டு வருஷத்துல என்னைக்காவது ஒரு நாள் நான் உங்க வீட்டுக்கு வந்திருப்பேனா.. எவ்வளவோ கஷ்டம் எவ்வளவோ சந்தோஷம்  எதுக்குமே இங்க வந்ததில்ல. வர அளவு என் புருஷன் விட்டதில்ல.. ஒருவேளை அவரோட படம் வெளியாகி  நல்லா போயிருந்தா இன்னிக்கி  எங்க வாழ்க்கை வேற மாதிரி இருந்திருக்கும். எங்க நேரம்.. வேற என்ன சொல்றதுன்னு தெரியல..

என் புருஷன் நல்லவன் அத்தை.. தயவு செஞ்சு உங்க வாயால அவனை சபிக்காதீங்க.. ” என்னதான் மனம் முழுவதும் அவன் மீது கோபத்தை வைத்திருந்தாலும் பிறர் அவனை பேசுவதை அவளால் தாங்கிக் கொள்ள இயலவில்லை..

மாதவி நொடித்துக் கொண்டார். சிறிது நேரம் அங்கே அமைதி நிலவ  ” நான் கிளம்புறேன் அத்தை” தென்றல் எழுந்து கொண்டாள்.

“ஹேய் இருடி.. தெரியாம சொல்லிட்டேன் உன் புருஷனை பத்தி போதுமா..” அவளைப் பிடித்து மீண்டும் அமர வைத்தார்..

” இப்பவே போய் அங்க என்ன பண்ண போற கொஞ்ச நேரம் உட்கார்ந்து இரு நான் போய் டீ போட்டு எடுத்துட்டு வரேன்.. பிள்ளைங்களுக்கு ஹார்லிக்ஸ் போடறேன்.. ” கொடியை தூக்கி இடுப்பில் வைத்துக் கொண்டவர்  குழலியை அழைத்துக் கொண்டு சமையல் கட்டிற்கு சென்றார்.

பிள்ளைகளின் வரவு வீடு முழுவதும் சந்தோஷத்தை கொடுத்தது.. வீட்டில் இருந்த இனிப்பு பண்டங்கள் அனைத்தையும் தூக்கி  பிள்ளைகள் கையில் கொடுத்து விட்டார்..

அவசரமாக பஜ்ஜி போட்டவர்  டீயும் பிள்ளைகளுக்கு ஹார்லிக்ஸ் கலந்து எடுத்து வந்தார்..

” எதுக்கு அத்தை பஜ்ஜி எல்லாம்”

“ஆமா மலையை தூக்கி அந்த பக்கம் வைக்கிற வேலை… சாப்பிடுடி சும்மா” மாதவி அதட்டினாலும் தென்றலை நன்றாகவே கவனித்துக் கொண்டார். இருவரும் டீ குடித்துக் கொண்டே பேச அப்பொழுது வந்து சேர்ந்தான் அகிலன்..

தென்றலை பார்த்து அதிர்ந்தாலும்  அவள் வந்த விஷயத்தை மாதவி கூற  அவனுக்கும் வருத்தமாகி போனது. குழந்தைகளோடு விளையாடிக்கொண்டே

” சொல்லு தென்றல் உனக்கு என்ன செய்யணும் நாங்க” சரியாக பாயிண்ட் பிடித்து பேசினான் அகிலன்.

தென்றல் இவ்வளவு தூரம் வந்தது உண்மையில் அவர்களிடம் உதவி வேண்டவே..

“மாமா அது.. எனக்கு ஏதாச்சும் வேலை ரெடி பண்ணி கொடுக்க முடியுமா..” தயங்கிக் கொண்டே தனக்கு வேண்டுமானதைக் கேட்டாள்.

” வேலையா நீ வேலைக்கு போய் தான் அவனுக்கு கஞ்சி ஊத்தணுமா.. நான் சொல்றதை கேளுடி.. வீணா வீம்பு புடிச்சு வாழ்க்கையை வீணாக்கிக்காத.. உனக்கு என்ன தலை எழுத்தா? அண்ணனுக்கு தெரிஞ்சா எல்லாமே சரியாயிடும். ஒரு தடவை உன் பிடிவாதத்தை விட்டுட்டு பெத்தவங்கள போய் பாரு. ” மாதவி இடைவெட்டி பேசினார்.

” இல்ல அத்தை அது சரி வராது.. நல்லதோ கெட்டதோ என் சொந்த அறிவுல நான் தேர்ந்தெடுத்த வாழ்க்கை இது. இந்த வாழ்க்கையை வாழ்ந்து பார்க்காம பாதியில விட்டுட்டு ஓடிப்போய் நின்னா என்ன பெத்தவங்களுக்கும் கஷ்டம். எனக்கும் அது அவமானம்.. என்னால முடிஞ்ச வரைக்கும் நானே சமாளிக்கிறேன்..

மாமா நான் காலேஜ் டிஸ்கன்டினியூ.. ஏதாச்சும் வேலை.. சூப்பர் மார்க்கெட்ல கிடைச்சா கூட ஓகே தான்.. இந்த வேலைய மட்டும் வாங்கி கொடுத்தா அது போதும் எனக்கு ” மாதவிடம் ஆரம்பித்து அகிலனிடம் முடித்தாள் தென்றல்..

தென்றல் வேலைக்கு சேர்ந்து  இரண்டு வாரமாகி விட்டது. ஆம் அகிலன் அவளுக்கு தனியார் ஆடிட்டர் அலுவலகத்தில் அசிஸ்டன்ட்  அக்கவுண்டராக பேசி அவளுக்கு வேலை வாங்கி கொடுத்து விட்டான். அவனது சிபாரிசில் பிளஸ் டூ முடித்த  சர்டிபிகேட் அங்கே ஏற்றுக் கொள்ளப்பட்டது.

விஷயத்தை கேள்விப்பட்ட சசி
” இப்ப யார கேட்டுட்டு நீ வேலைக்கு போற..”

” யாரை கேட்கணும்”

” என்ன கேட்கணும்”.. அவனை குறுகுறுவென்று பார்த்தவள் உடனே எழுந்து சென்று குழந்தையின் பால் பவுடர் டப்பாவை எடுத்து வந்து திறந்து காட்டினாள்.

” உங்கள தான் கேட்டேன்.. குழந்தைக்கு பால் பவுடர் தீர்ந்து போச்சுன்னு  ஒரு வாரமா கேட்டுட்டுருக்கேன்.. இதுக்கு மேல கேட்டா  பசியில என் பிள்ளைங்க செத்தே போயிடும்.. உங்களுக்கும் உங்க அம்மாவுக்கும் வீட்டு வேலை செய்றதுக்கு நான் உங்கள கல்யாணம் பண்ணிட்டு இந்த வீட்டுக்கு வரல.

உங்களுக்கு நீங்க மட்டும் தான் முக்கியம். அப்படியே இருங்க. எங்கள நான் பாத்துக்குறேன். கூடவே உங்களையும்” சசியால் ஒரு வார்த்தை அவளிடம் மறுத்து பேச முடியவில்லை.

விசாலாட்சிக்கு அவர்கள் குடும்ப கௌரவம் போய்விடுமே என்கிற பயத்தால் அவள் வேலைக்கு போகக்கூடாது என்று தடுத்தார்..

” இத்தனை நாள் என் புருஷன் தான் சொத்தை வச்சு உங்களை பிளாக்மெயில் பண்ணிட்டு இருந்தாரு. ரொம்ப நேரம் ஆகாது அவரை தனியா பிரிச்சு நான் கூட்டிட்டு போக. உங்களுக்கு என்ன வீட்டு வேலையும் நான் செய்யணும். உங்களுக்கு கீழ அடிபணிஞ்சு நடக்குற மருமகளா இருக்கணும்.. வீட்டு வேலை நானே செஞ்சுகிறேன். என் பிள்ளைகளை நானே பார்த்துக்கிறேன்.” தென்றல் நறுக்கு தெறித்தார் போல பேச  விசாலாட்சியின் இதழ்கள் மூடிக்கொண்டது.

குழந்தைகளை பக்கத்தில் பேபி கிரஷில் விட்டுவிட்டு  வேலைக்கு செல்ல ஆரம்பித்தாள் தென்றல்.. அவளது குழந்தைகளும் வளர்ந்து பெரியவர்களானார்கள்.. அந்தக் குடும்பத்தில் பல மாற்றங்கள். ஆனால் தென்றல் வாழ்க்கையில் மாற்றம் ஒன்றுதான் மாறாமல் இருந்தது.

தொடரும்