இருந்தாலும் கணவனின் வெற்றியை பக்கத்தில் இருந்து பார்க்கும்போது மனதிற்கு இதமாக இருந்தது.. பட பூஜையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் நாளிதழ்களிலும் சோசியல் மீடியாக்களிலும் வெளியாகின.. வளர்ந்து வரும் முன்னணி நடிகரை வைத்து படம் இயக்கப்படுவதாக இருந்தது.
சசி தன்னுடைய கனவை எட்டிப் பிடிக்கும் வெறியோடு இந்த படத்தில் உழைத்தான். நேரம் காலம் மறந்தான். குடும்பத்தையும் மறந்து போனான். பல நாள் அலுவலகத்திலேயே தங்கியிருந்தான். அவன் முகத்தை பார்ப்பதே அரிதாகி போனது. அவன் குரலை கேட்பதே பெரிய விஷயமாக இருந்தது.
சோமசுந்தரத்திற்கும் விசாலாட்சிக்கும் சசி தன் மகன் என்று சொல்ல பெருமை பிடிபடவில்லை. எந்த வாயால் அவன் உருப்பட மாட்டான் என்று திட்டி கழித்தார்களோ அதே வாயால் என் மகன் தான் பெருமை பேசினார்கள்..
படத்தை எடுத்து முடிப்பதற்குள் ஏகப்பட்ட தடங்கல்கள்.. புரொடக்ஷன் மேனேஜருக்கும் அவனுக்குமான மோதல்..படப்பிடிப்பில் நடக்கும் எதிர்மறை நிகழ்ச்சிகளை மட்டும் புரொடக்ஷன் மேனேஜர் தயாரிப்பாளரிடம் திரித்து கூற அதனால் அவனுக்கும் தயாரிப்பாளருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டது..
தின ஷெட்யூலின் பண வரவு குறைந்தது. படபிடிப்புக்கு தேவையான தளவாடப் பொருட்கள் குறைத்துக் கொடுக்கப்பட்டது. சக ஊழியர்கள் கூட சசிக்கு மதிப்பளிக்காதது அவனின் மன அழுத்தத்தை அதிகரித்தது.
அவன் போடும் கடின உழைப்பெல்லாம் வீண் விரயமோ என்கிற அளவிற்கு அவனை நினைக்க தூண்டியது. இருப்பினும் விடாமுயற்சியோடு அந்தப் படத்தை அவன் நினைத்தது போல் எடுத்து முடித்து விட்டான்.
ஆனால் அதற்குப் பிறகுதான் ப்ரொடக்ஷன் மேனேஜர் தனது சுயரூபத்தை காட்டினார். படம் எடுப்பது எளிதுதான். ஆனால் அதனை திரைக்கு கொண்டு வருவதற்குள் பிரம்ம பிரயாத்தானம் செய்ய வேண்டியதாகிவிட்டது.
முன்னோட்டக் காட்சியை பார்த்த விநியோகஸ்தர்கள் படத்தை வாங்க மறுத்தார்கள்.. ரத்தம் தெறிக்க தெறிக்க ஆடியன்சை சீட்டின் நுனியில் அமர வைக்கும் அளவிற்கு சண்டை காட்சிகள் கிடையாது. வயிறு வலிக்க சிரித்து உருளும் அளவு காமெடிகள் கிடையாது. வாலிபர்கள் உடல் முறுக்கேறும் அளவிற்கு கவர்ச்சி நடனங்களும் அதில் இல்லை..
சுருக்கமாக சொல்லப்போனால் சசி எடுத்தது வாழ்வியல் திரைப்படம்.. எதார்த்தமான கதைக்களம்.
விணியோகஸ்தர்கள் படத்தை வாங்க மறுத்ததால் சசிக்கும் தயாரிப்பாளருக்கும் மோதல் ஏற்பட்டது.. தென் மாவட்டங்களில் இருந்து விநியோகஸ்தர்கள் படத்தை பார்க்க வருவதற்கு தயாரிப்பாளர் பணம் கொடுக்கவில்லை.
எப்படியாவது படத்தை திரைக்கு கொண்டுவர முயற்சிகள் செய்தான்.. புதுமுக விநியோகஸ்தர்களை வைத்து முன்னோட்டக் காட்சிகளை ஏற்பாடு செய்ய சசியிடம் பணம் இல்லை.. தயாரிப்பாளர் அவனை கை கழுவி விட்டார்..இத்தனை முயற்சிகளும் விழலுக்கு இறைத்த நீரானது.. சசியின் நம்பிக்கை ஆட்டம் கண்டது.. ஒரு கட்டத்திற்கு மேல் அனைத்தும் அவன் கைவிட்டு செல்ல சசி இடிந்து அமர்ந்தான். ஆசையாக அவன் கட்டிய கண்ணாடி கோட்டை பணம் என்ற ஒரு சிறிய கல்லால் சுக்குள் சுக்களாக உடைந்து நொறுங்கியது..
அவன் ஆசையாக எடுத்த படம் திரைக்கு வராமல் பெட்டியில் நிரந்தரமாக உறங்க தொடங்கியது.. சசி மன அழுத்தத்திற்கு ஆளானான். ராசி இல்லாத இயக்குனர் என்று சினிமா வட்டாரத்தில் முத்திரை குத்தப்பட்டான்.
புது தயாரிப்பாளர்கள் அவனை வைத்து படம் இயக்குவதற்கு தயங்கினார்கள். நெருங்கிய நண்பர்கள் கூட அவனின் அழைப்பை ஏற்க மறுத்தார்கள். அவனின் வெற்றியில் கூட இருந்த அனைவருமே அவனின் தோல்வியில் தூரத்தில் கூட நின்று பார்க்க மறுத்தார்கள்.. சசி மணமுடைந்தான்.. ஊடகங்களிலும் நாளிதழிலும் வெகு விமர்சையாக எடுக்கப்பட்ட படம் தியேட்டர் கிடைக்காமல் முடங்கியது என்று செய்திகள் வெளியானது.
” தேவையான நம்ம குடும்பத்துக்கு இதெல்லாம்.. படம் எடுக்கிறேன் மண்ணாங்கட்டி எடுக்கறேன்னு போயி ராசி கெட்டவனு பேர் வாங்கிட்டு வந்திருக்க.. உங்க அப்பா வெளிய தலை நிமிர்ந்து நடக்க முடியல.. தெருவுல போற நாய் எல்லாம் உங்க மகன் தானே அப்படின்னு கேள்வி கேக்குது..
சொந்தம் பந்தம் கல்யாணம் காட்சி ஒரு நல்லதுக்கு போக முடியல.. எல்லாரும் இதைப் பத்தியே பேசி அப்படியே நாண்டுக்கிட்டு தொங்கலாம் போல இருக்கு..” சசியின் தோல்வி அவன் வீட்டிலேயே அலசி ஆராயப்பட்டது. அவனின் பெற்றோர்கள் அவனது வளர்ச்சியில் துணை நின்று தோள் கொடுக்காதவர்கள் அவனது வீழ்ச்சியில் தேளாய் மாறி அவனைக் கொட்டி தீர்த்தார்கள்..
உறவினர்கள் ஆறுதல் சொல்வதாக அழைத்து வெந்த புண்ணில் வேலை பாய்ச்சினார்கள்..
அந்த நேரத்தில் அவனுக்கு இருந்த ஒரே ஆறுதல் அவன் மனைவி தென்றல் மட்டுமே.. சசியின் கோபத்தின் வடிகாலே அவள்தான். அதுவரை அவனின் அன்பான முகத்தை மட்டுமே பார்த்து வந்தவள் அவனின் தோல்வி முகத்தை தாங்கிக்கொள்ள முடியாமல் துவண்டாள்.
சசியின் தோல்வி தென்றலின் வாழ்வில் பெரிய புயலை ஏற்படுத்தியது.. அவள் பேசினாலே சண்டை என்றானது..
ஒருநாள் குடித்துவிட்டு வந்து உறங்கிக் கொண்டிருந்த பூங்கொடியை தூக்கி போதையில் அவளை கீழே போட்டு விட பாவம் குழந்தையின் தலையில் அடி.. பூங்கொடி வீறிட்டு அழ
” உங்களுக்கு அறிவு இல்லையா.. குடிச்சிட்டு வந்து உங்களை யார் குழந்தையை தூக்க சொன்னது.. ” குழந்தையை தூக்கி சமாதானம் செய்தாள் தென்றல்..
“அச்சோ செல்லம் அப்பா கீழ போட்டேனா..அப்பா இப்படி தான்.. பீடை.. ரா.. சி இல்லாதவன்.. எத தொட்டாலும் கீழ தான் விழுவுது..நான் வேணும்னே போடல பாப்பா.. வாங்க வாங்க அப்பாட்ட வாங்க..” போதையில் உளறிக்கொண்டு தென்றலிடமிருந்து குழந்தையை வாங்க போக அவனை தள்ளி விட்டாள் தென்றல்..
“போதும்.. அவளே பயந்து அழறா.. போயிருங்க…” தென்றல் குழந்தையை சமாதானப்படுத்த சசி ஹாலில் சென்று படுத்தான்..
மறுநாள் அவன் முகத்தில் விசாலாட்சி தண்ணீர் ஊற்ற அடித்து பிடித்து எழுந்தான்.
“ம்மா”
” நடு வீட்ல இப்படி படுத்து கிடந்தா தரித்திரம் வீட்டுக்குள்ள வந்து பாய் போட்டு படுத்துரும்..”.. முதல் நாள் நடந்த அனைத்துமே சசிக்கு கொஞ்சம் நினைவில் இருந்தது.. முகம் கழுவி வந்தவன் பூங்கொடியை தூக்கி மடியில் வைத்திருந்தான். குழலி இப்போதெல்லாம் அவன் தென்றலிடம் கோபமாக பேசுவதை கண்டு அவன் பக்கத்தில் போனாலே அலறி ஓடி விடுவாள்.
யோசனையோடு அமர்ந்திருந்தவன் முன் டீ கப்பை நீட்டினாள் தென்றல். அவள் முகத்தை ஏறிட்டு பார்க்கவே அவனுக்கு கஷ்டமாக இருந்தது.
டீ கப்பை வாங்கிக் கொள்ள குழந்தையை தென்றல் தூக்கினாள்..
” இப்படியே இன்னும் எத்தனை நாளைக்கு இருக்க போறீங்க.. ஒருவாட்டி ஃபெயிலியர் ஆச்சு. உங்க இண்டஸ்ட்ரில இதெல்லாம் நார்மல் தான. ஒரு படம் போனா பத்து படம் கிடைக்கும்னு நீங்க எத்தனை தடவை சொல்லி இருக்கீங்க. இடிஞ்சு உக்காந்திருந்தா எதுவும் மாறப் போறது இல்ல. விட்டு இடத்துல இருந்து தான் நீங்க தொலைச்சத தேட முடியும்.. ” சொல்ல வேண்டியதை சொல்லியவள் சென்று விட்டாள்.
சசி மனைவியின் பேச்சை நிதானமாக யோசிக்க ஆரம்பித்தான். அவள் கூறுவது உண்மைதானே? அவனுக்குள் உத்வேகம் பிறந்தது. டீயை குடித்தவன் குளித்து விட்டு வந்தான்.
தென்றலிடம் தன்னை எதற்கும் அழைக்க வேண்டாம் என்றவன் எழுதுவதற்கு அமர்ந்து விட்டான்.
நேரங்கள் கடந்ததை தவிர அவனால் ஒரு காட்சியை கூட கோர்வையாக எழுத முடியவில்லை..
கற்பனைகள் கண்ணா பின்னாவென்று ஓடியது. நிலையில்லாத நோக்கத்தோடு அவன் திணறினான். இப்படியே ஒரு பக்கத்தை எழுதி முடித்தவன் சற்று நேரம் கண்ணயர்ந்தான்.. சிறிது நேரம் கழித்து எழுந்தவன் தான் எழுதியதை படித்துப் பார்க்க அவனுக்கே பிடிக்கவில்லை. வெறுப்போடு அதனை கசக்கி தூக்கி எறிந்தான்..
மீண்டும் முயன்றான். தூக்கி எறிந்தான். மீண்டும் முயன்றான். அவன் எழுதியது அவனுக்கே பிடிக்கவில்லை. காகிதம் தீர்ந்ததே தவிர கற்பனை கொட்டவில்லை. மனம் ஒரு நிலையில் இல்லாததால் அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் தடுமாறியவன் வேகமாக வெளியே சென்றான். அன்றும் வரும் போது குடித்துவிட்டு வந்தான்.
அதுவே தொடர்ச்சியானது.. தென்றல் வாழ்வில் சோகம் தொடர்கதையானது..