23

சோமசுந்தரம் சென்ற கார் விபத்துக்குள்ளாகி விட்டது. நல்ல வேளையாக இடது கால் எலும்பு முறிவோடு அவர் உயிர் பிழைத்து விட்டார்.. ஒட்டு
மொத்த பழியும் பிறந்த பச்சிளம் குழந்தை மேல் விழுந்தது. விசாலாட்சி ஆடி தீர்த்து விட்டார்..

சசி வீட்டில் இருந்த நேரமெல்லாம்  ஓரளவிற்கு நாவை கட்டுப்படுத்தி வைத்திருந்தவர் அவன் தலை மறைந்ததும் தென்றலை வார்த்தைகளால் கொத்தி குதற ஆரம்பித்தார்..

குழந்தைக்கு ஆசையாக தென்றல் பூங்குழலி என்று பெயர் வைத்திருந்தாள். ஆனால் விசாலாட்சி அந்த குழந்தையை கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் “சனியனே”என பட்டப்பெயர் வைத்து அழைத்தார்..

இரவில் கலைத்து வீடு வந்து சேரும் கணவனிடம்  மனம் பொறுக்காமல் இதனை பற்றி முறையிட்டாள் தென்றல்..

சசிக்கு தாயின் போக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. அவன் நேரடியாக சோமசுந்தரத்தை பார்த்து

” அப்பா நானும் என் பொண்டாட்டியும் இந்த வீட்ல இருக்கிறது அம்மாவுக்கு பிடிக்கல. இத்தனை நாள் தென்றல கரிச்சு கொட்டிட்டு இருந்தாங்க. இப்போ என் புள்ளைய சனியனே சொல்றதெல்லாம் பார்த்துட்டு என்னால சும்மா இருக்க முடியல..

எனக்கு உங்க சொத்தும் வேணாம் ஒரு மண்ணும் வேணாம்.. நீங்க சம்பாதித்தத நீங்களே வச்சுக்கோங்க. தாத்தா எனக்கு கொடுத்த பங்கை மட்டும் எடுத்துட்டு நான் என் பொண்டாட்டி பிள்ளையை கூட்டிட்டு வெளிய போறேன்..” சோமசுந்தரம் திணறி விட்டார் மகனின் அதிரடி கண்டு.

“சசி.. என்ன பேச்சு இது தனியா போறேன்னு? நாம எல்லோரும் சேர்ந்து வாழ தானே இவ்ளோ பெரிய வீடு கட்டி வச்சிருக்கேன். ஏதோ ஆக்சிடென்ட் ஆயிடுச்சு, இவ கண்டதையும் மனசுல வச்சுக்கிட்டு சின்ன பிள்ளைன்னு கூட பாக்காம வாய்க்கு வந்த மாதிரி பேசிட்டுருக்கா. உனக்கு தான் உன் அம்மாவை பத்தி தெரியுமே.. இதெல்லாம் பெருசா எடுத்துக்காது டா” அப்பொழுது கூட விசாலாட்சி மீது தவறு இருக்கிறது என்று ஒத்துக்கொள்ள அவருக்கு மனம் இல்லை.

” ஏம்பா இதுவே உங்கம்மா எங்களை சனியன்னு சொல்லியிருந்தா அம்மாவுக்கு எப்படி இருந்திருக்கும்.. ” பதில் பேச முடியாமல் தலை குனிந்தார் சோமசுந்தரம்.

” இல்லை எனக்கு சத்தியமா புரியல பொறந்து பச்சை குழந்தை. அதோட மூஞ்ச கூட பார்க்க மாட்றாங்க. தூக்க மாட்றாங்க. இப்போ என்னன்னா என் பிள்ளைக்கு  பட்டப் பேரு வேற.. அன்னிக்கி என் காது படவே எமனு சொல்றாங்க.. இதெல்லாம் கேக்குறதுக்கு உங்களுக்கு சுகமா இருக்கும். எனக்கு தலையெழுத்து இல்ல.. ” அதன் பிறகு சசியை சமாளிக்க சோமசுந்தரம்  வெகுவாக பாடுபட்டார்.

இனி இப்படி ஒரு சம்பவம் நடக்காது என்று அவர் வாக்குறுதிகளை அள்ளி வீசிய பின்பே சசி ஓரளவு சமாதானமானான். அவனை சமாதானப்படுத்திய கையோடு விசாலாட்சியை அழைத்தவர் கன்னம் பழுக்க ஒரு அறை விட்டார்.

” இன்னொரு தடவை அந்த பொண்ண பத்தியும் குழந்தையை பத்தியும் ஒரு வார்த்தை பேசின கொன்றுவேன் உன்ன.. நிம்மதியா இருக்க முடியுதாடி இந்த வீட்ல.. உனக்கு என்ன பிரச்சனை? அந்த பொண்ண பத்தி விட்டுட்டு வேற எவளயாச்சும் அவன் தலையில கட்டலாம்னு நினைக்கிறியா.. ஒரு நாள்.. ஒரே ஒரு நாள் கூட அவன் கூட தாக்கு பிடிக்க மாட்டா..பின்னங்கால் பொடணியில அடிக்க ஓடிருவா தெறிச்சு..

சொத்த பிரினு நிக்குறான்.. பிரிச்சு கொடுக்கவா சொல்லுடி.. தேவா நல்ல காலத்துலயே குடும்பத்தோட கலகலனு பேசிருவான். அவனுக்கு வரவ எப்படி இருப்பாளோ.. அவ பேச்ச கேட்டு இவன் முந்தாணிய புடிச்சுட்டு தனியா போய்ட்டா கடைசி காலத்துல என் மூஞ்ச நீயும் உன் மூஞ்ச நானும் பாத்துட்டே சமாதி ஆயிருவோம்.. இனிமே சொத்தை பிரி அத பிரினு சசி வந்து என் முன்னாடி நின்னான்.. ” சோமசுந்தரத்தின் கடுங்கோபத்தை கண்டு விசாலாட்சி வாயை மூடிக் கொண்டார்.

இருந்தாலும் குழந்தையை பார்க்கும் போதெல்லாம் அவர் வாய் துடிக்கும். மனதிற்குள்ளேயே குழந்தையை கறுவிக் கொள்வார்.. சசி உதவி இயக்குனராக பணிபுரிந்த படம் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட்டானது.. அந்தக் குழுவினர் அனைவருக்கும் புகழ் கிடைத்தது.. மக்கள் அந்தப் படத்தை கொண்டாடி தீர்த்தார்கள்..

விசாலாட்சியின் வார்த்தை அம்புகளிலிருந்து தப்பித்த தென்றல் தான் உண்டு தன் வேலையுண்டு என்று அந்த வீட்டில் வளைய வந்தாள்.. பொதுவாக அவள் குடும்பம் வரை அவள் பார்த்துக் கொண்டாள்.. குழந்தையோடு அவளின் பொழுதுகள் இறக்கை கட்டிக் கொண்டு பறந்தன.

அவளும் சசியும் மன மொத்த காதல் வாழ்க்கை வாழ்ந்தார்கள்.. சசியும் உதவி இயக்குனரிலிருந்து  துணை இயக்குனர் ( associate director) அளவிற்கு வளர்ந்தான்.. அடுத்தடுத்த அவன் இரண்டு படங்களில்  கமிட்டாகி அந்த படங்கள் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன.. அந்தப் படத்தில் வசனகர்த்தாவாகவும் அவன் வேலை செய்ததால்   அவன் எழுதிய வசனங்கள் சோசியல் மீடியாக்களில் பட்டையைக் கிளப்பின.

அவனின் வருமானமும் உயர்ந்தது.. பணத்தை தென்றலிடம் கொடுத்தான்.. அடுத்த ஒரு வருடம் கழிய இரண்டாம் வருடத்தில்  அவர்களின் காதலுக்கு கிடைத்த பரிசு பூங்கொடி.

பூங்கொடி பிறந்த போது தான்  தென்றல் வாழ்வில் மீண்டும் சோகம் எட்டிப் பார்த்தது.

பிறக்கும் போதே காது கேட்காத வாய் பேச முடியாத குழந்தையாக பிறந்தாள் பூங்கொடி.. தற்காலிகமாக தென்றல் இதழ்களில் பூத்திருந்த புன்னகை பூங்கொடியை கண்டதும் ஒரேடியாக மறைந்து போனது..

பூங்கொடி பிறந்த போதே அவளுக்கு  காது கேட்காது என்பதை மருத்துவ பரிசோதனையில் தெரிய வந்தது.. அவள் வளர்ந்து ஒரு வயதான பிறகு அவளால் பேசவும் முடியாது என தெரிந்த பின் மிகுந்த மன அழுத்தத்திற்குள் தள்ளப்பட்டாள் தென்றல்..

சசியும்  இந்த நேரத்தில் ஒரு படத்தில் இணை இயக்குனராக (co director)பணிபுரிய அவனால் குடும்பத்தையும் பணியையும் ஒரே நேரத்தில் பார்க்க முடியாமல் தடுமாறினான்.. ஒரு கட்டத்திற்கு மேல் அவன் குடும்ப பாரத்தை தென்றல் மீது திணித்தவன் தன்னுடைய கனவை நோக்கி செல்ல ஆரம்பித்தான்.

சசியின் போக்கு சுயநலமாகப்பட்டது தென்றலுக்கு.. மழலை மாறாத குழலி  ஒரு பக்கம்.. காது கேளாத வாய் பேச முடியாத குழந்தை பூங்கொடி ஒரு பக்கம். பூங்கொடியின் மருத்துவ பரிசோதனைக்கு கூட  குழலியை அழைத்துக் கொண்டு தென்றல் தான் அலைய வேண்டியதாகி இருந்தது.

விசாலாட்சிக்கு இரண்டாவதும் பெண் குழந்தை என்றதும்  ஒட்டுமொத்தமாக சசியின் குழந்தைகளை ஒதுக்கி விட்டார். ஒரே வீட்டில் இருந்தாலும் ஒருவருக்கொருவர் முகம் கொடுத்து பேசுவதில்லை. சோமசுந்தரம் பிள்ளைகள்  விளையாடும்போது  நல்ல மனநிலையில் இருந்தால் சேர்ந்து விளையாடுவார். வெளியே எங்காவது சென்று வரும்போது சாக்லேட் வாங்கி வந்து கொடுப்பார்.

விசாலாட்சி பிள்ளைகள் அவர் பக்கம் தவழ்ந்து சென்றால் கூட
” இங்க எதுக்கு வர உன் அம்மா அங்க இருக்கா.. ” குழந்தையைப் பிடித்து தள்ளி விடுவார்.

ஓரிரு முறை அவர் இப்படி செய்வதை பார்த்து பொறுத்துப்போன தென்றல் ஒரு நாள் பொறுமை இழந்து விட்டாள்.

” அத்தை நானும் பாக்குறேன் நீங்க பண்ற எதுவுமே தெரியல.. சின்ன குழந்தை அவளுக்கு என்ன தெரியும்.. உங்களுக்கு பிடிக்கலையா நீங்க பேசாம இருங்க. இல்லன்னா என்ன கூப்பிடுங்க. குழந்தையை பிடிச்சி தள்ளுறீங்களே, என்ன மனுஷங்க நீங்க..” ஆத்திரம் பொறுக்காமல் தென்றல் பேச

” உன் பிள்ளைன்னா அத உன்னோட வச்சுக்கோ.. எதுக்கு வீடு முழுக்க மேய விடுற.. இது என்னோட வீடு. ஒண்ட வந்த பிடாரி ஊரு பிடாரிய துரத்துன மாதிரி நீ அதிகாரம் பண்ணி நான் கேட்கணுமா..” விசாலாட்சியின் வாய்க்கு முன்பு தென்றலின் கோபம் எடுபடாமல் போனது.

வாசுகியின் வளர்ப்பும் பரசுராமின் நிதானமும் தென்றலை விசாலாட்சி அளவுக்கு தரம் இறங்க வைக்கவில்லை.. ஒற்றையளாய் இரண்டு பிள்ளைகளை பார்த்து  வீட்டிற்கும் மருத்துவமனைக்கும் அலைந்தே ஓய்ந்து போனாள் தென்றல்..

அவளின் படிப்பை பற்றியோ அவளது குடும்பத்தை பற்றியோ  ஏன் அவளின் நலம் பற்றி கூட அவளுக்கு அக்கறை இல்லை. எந்நேரம் பார்த்தாலும் இரண்டு குழந்தைகளை இடுப்பில் வைத்துக் கொண்டு அவர்களின் தேவைகளை மட்டுமே கவனித்து வந்தாள். இதில் அவ்வப்போது சசியின் கணவன் தேடல் வேறு.

சசி ஓய்வாக இருக்கும் நேரத்தில் மனைவியோடு அவனும் மருத்துவமனை செல்வான்.. அறுவை சிகிச்சை செய்தால் பூங்கொடியின் பிரச்சனைக்கு விடிவு வரும் என்று மருத்துவர்கள் கூறினார்கள்.

அதற்கான பணமும் தண்ணீராக செலவழிய தயாராக இருந்தது. அந்த அளவிற்கு சசியிடம் வருமானம் இல்லை. நிலைமை தெரிந்தும் சோமசுந்தரம் கண்டு கொள்ளாமல் இருந்தார்.. பணத்திற்கு என்ன செய்வதென்று புரியாத நிலையில் இருவரும் தவித்தார்கள்.

தென்றல் அவள் பெற்றவர்களிடம் சென்று நிலையை எடுத்துக் கூறினால் கண்டிப்பாக உதவி செய்வார்கள்.. ஆனால் தன்மானம் இடம் கொடுக்கவில்லை.

காரிருளில் இருவரும் சிறு வெளிச்சத்திற்காக தவித்துக் கொண்டிருந்த நேரத்தில் வெளிச்ச மழையே அவர்கள் மீது பெய்தது போல  சசி ஒரு நாள் நல்ல செய்தியோடு வந்தான்..

“செல்லம் இன்னைக்கு ஒரு புரொடியூசர் கதை கேட்டு இருந்தாரு மீட்டிங் போனேன் ல.. என் கதைய கேட்டதும் உனக்கு ரொம்ப பிடிச்சு போச்சு.. உடனே அம்பதாயிரத்து  ஒரு ரூபாய்க்கு செக் எழுதி கையில கொடுத்துட்டாரு. இந்த படத்துக்கு சம்பளம் மட்டுமே  எப்படியும் அஞ்சு லட்சத்துல இருந்து எட்டு லட்சம் வரும்.. பாப்பாவுக்கு ஆப்ரேஷன் பண்ணிரலாம்..”

“உண்மையாவா” கண்களில் எதிர்பார்ப்போடு அவனைப் பார்த்து கேட்டாள் தென்றல். அவளை இழுத்து மார்போடு கட்டிக் கொண்டவன்

“ம்ம்ம்”.. என்றான்..

நீண்ட நாட்களுக்குப் பிறகு தென்றல் மனதில் மீண்டும் நம்பிக்கை வெளிச்சம் எட்டிப் பார்த்தது.. சசி இயக்கும் படத்திற்கான பூஜைக்கு தென்றலை வற்புறுத்தி அழைத்துச் சென்றான்.. இரண்டு குழந்தைகளோடு பட பூஜைக்கு சென்றாள் தென்றல்.. இதுவரை சசியின் நண்பர்கள் யாரும் பெரிதாக அவளுக்கு தெரியாது. காட்டில் தொலைந்த சிறுமியின் நிலை தான் அவளுக்கு..