தென்றலின் கர்ப்பத்தில் இருந்த குழந்தையும் வளர்ந்தது. சசியின் வேலையும் கூடியது. தன் குடும்பத்தினர் யாரிடமும் பேச முடியாத வேதனையில் மனரீதியாக பெரிதளவு பாதிக்கப்பட்டிருந்தாள் தென்றல்.. அவளை மாதாந்திர பரிசோதனைக்கு மருத்துவரிடம் அழைத்துச் செல்ல கூட சசியால் வர முடியாது..
அவன் வேண்டுமென்றே செய்யவில்லை. அவனின் வேலையப்படி. முதலில் எல்லாம் தென்றலுக்கு இதனை நினைத்து எரிச்சலாக இருந்தது. பிறகு உழைத்து முன்னேறினால் தான் அவள் குடும்பத்தின் முன்பு தலை நிமிர்ந்து நிற்க முடியும்.. மகள் நல்லவனை தான் தேடி இருக்கிறாள் என்கிற எண்ணத்தை அவள் பெற்றோருக்குள் விதைக்க முடியும்.
அந்த ஒரே காரணத்திற்காக அனைத்தையும் சகித்துக் கொள்ள ஆரம்பித்தாள் தென்றல்.. என்ன ஒரு ஆச்சரியம் மாதாந்திர பரிசோதனைக்கு நேரம் தவறாமல் மருமகளை அழைத்துச் செல்வது விசாலாட்சியின் பொறுப்பாகியது..
அதற்கு ஒரு முக்கிய காரணமும் உண்டு. விசாலாட்சி ஒரு ஜாதக பைத்தியம். தென்றல் கரு உண்டானதும் உடனடியாக ஜோதிடரை பார்க்க கிளம்பி விட்டார்.
” உங்க மருமகளுக்கு ஆண் குழந்தை பிறக்க 90 சதவீதம் வாய்ப்பு இருக்கு.. அப்படி பொறந்தா உங்க குடும்பத்துக்கே நல்லது. மாறா பொண்ணு பொறந்திருச்சு மொத அடி பாட்டனுக்கு தான் விழும்.. “.. அன்றிலிருந்து நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆண் வாரிசு வேண்டும் என்று மருமகளை வற்புறுத்தினார் விசாலாட்சி.
அவர் பேசுவதை கேட்கையில் தென்றலுக்கு சிரிப்பாக வரும்.
அவள் என்ன ரோபோவா? என்ன குழந்தை பிறக்க வேண்டும் என்று புரோகிராம் செய்வதற்கு?
என்ன இருந்தாலும் அவளின் வேலை பளு குறைந்தது என்னவோ உண்மை. வேலையை விட்டு தூக்கிருந்த இரண்டு வேலையாட்களை மீண்டும் வேலையில் அமர்த்தி விட்டார் விசாலாட்சி. சோமசுந்தரம் ஆச்சரியமாக இதனை பார்த்தாரே தவிர எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார்.
சசிக்கு வீட்டு நடப்பு எதுவுமே தெரியவில்லை. அறிந்து கொள்ளவும் அவன் விரும்பவில்லை..
” செக்கப் போனியே டாக்டர் என்ன சொன்னாங்க”
” கொஞ்சம் வீக்கா இருக்கேன்.. பாத்துக்கணும்னு சொன்னாங்க”
” நல்லா சாப்பிட்டு ரெஸ்ட் எடு.. நீ நல்லா இருந்தா தான நம்ம பேபியும் நல்லா இருக்கும்.. ” இவ்வளவுதான் அவனின் அக்கறை. அதைத் தாண்டிய அக்கறையோ அல்லது கர்ப்பிணிக்கு உண்டான ஆசையை கேட்டு அறிந்து கொள்வதற்கோ அவனுக்கு நேரம் கிடையாது.
இயந்திரகதியில் அலைந்து கொண்டிருந்தவனை ஒரு நாள் சோமசுந்தரம் அழைத்துக் கண்டித்தார்.
” அந்த பொண்ண நீ லவ் பண்ணி தான கூட்டிட்டு ஓடி வந்த. என்னமோ வேண்டா வெறுப்பா அவ கூட வாழ்ற மாதிரி என்னடா வாழ்க்கை? நானும் பாக்குறேன் நீ பாட்டுக்கு வர போற.. இந்த லட்சணத்துல உனக்கு ஒரு பிள்ளை வேற. பாவம்டா அந்த பொண்ணு. உனக்காக குடும்பத்தை எல்லாம் விட்டுட்டு இங்க வந்து அம்போன்னு உக்காந்திருக்கு.. என்னதான் நம்ம வீட்ல வசதி வாய்ப்பு இருந்தாலும் பேசுறதுக்கு ஒரு நாதி இருக்கா அந்த பொண்ணு கிட்ட..
கொஞ்சம் அந்த பொண்ணு கூட டைம் ஸ்பென்ட் பண்ணு. வெளியே கூட்டிட்டு போ. மாசமா இருக்கிற பொண்ணுடா நிறைய ஆசை இருக்கும். என்ன வேணும் ஏது வேணும்னு கேட்டு செய்ய பாரு. பொம்பள பாவத்தை சம்பாதிக்காத சசி. ” சோமசுந்தரம் கண்டித்த பிறகு தான் சசிக்கு தான் செய்து கொண்டிருந்த காரியம் உறைத்தது..
அவனுடைய வேலையில் மட்டும் கவனமாக இருந்தவன் தென்றலை பற்றி அடியோடு மறந்து விட்டான். அவனது காதல் மிக சுலபமாக கைகூடியதும் இனி தென்றல் அவனுக்கு மட்டுமே சொந்தம் என்றானதும் அவனுக்கு அலட்சியம் வந்து விட்டது.
படப்பிடிப்பு இல்லாத நாட்களில் கூட அலுவலகத்திற்கு ஓடி விடுபவன் இந்த இரண்டு நாட்களாக குட்டி போட்ட பூனை போல தென்றலை சுற்றி வந்தான்.. கணவனின் மாற்றம் தென்றலுக்கு ஆச்சரியமாக இருந்தது.
அவளை வெளியே அழைத்துச் சென்றான். நிறைய பேசினான்.. அவளைப் பேச வைத்து அவளுக்கு பிடித்ததை அறிந்து கொண்டான். சசி புரிந்து கொண்டது ஒன்றுதான் தென்றல் அவள் குடும்பத்தை மிகவும் தேடுகிறாள்..
முடிந்தவரை தென்றலோடு இருக்க முயற்சி செய்தான் சசி. முன்போல் வேலை என்று ஓடாமல் கிடைக்கும் நேரங்களில் தென்றலுக்கான நேரத்தை கொடுத்தான்.. அவள் பிறந்த நாளின் போது மறந்துவிட்டான் என்று தென்றல் நினைத்திருக்க கேக் வாங்கி வந்து விட்டு அவளை ஆச்சரியப்படுத்தினான்.
கூடவே அவளின் தனிமையை போக்குவதற்கு குட்டி நாய் ஒன்றினை வாங்கி வந்து பரிசளித்தான்..
தென்றலுக்கு ஒன்பதாம் மாதம் வளைகாப்பு செய்ய சொந்த பந்தத்தை எல்லாம் அழைத்திருந்தார் சோமசுந்தரம்.. உறவுகள் அனைத்தும் புரணி பேசினாலும் தவறாமல் விழாவுக்கு வந்து கலந்து கொண்டார்கள்.
வந்தவர்கள் அத்தனை பேருமே தென்றலின் குடும்பத்தை பற்றி தான் விசாரித்தார்கள். பெற்றோர்கள் இல்லையே என்ற கவலையை தவிர்த்து வந்தவர்கள் தூண்டி துருவியதே தென்றலுக்கு வேதனையை அளித்தது..
அன்றைய நாள் அவள் மனதை வேதனை கூறு போட்டு கொல்ல வலி பொறுக்க முடியாமல் அழுது தீர்த்தாள் தென்றல்.. சசி சமாதானப்படுத்தியும் இயலவில்லை.
மறுநாள் ஒரு முடிவோடு அகிலன் வீட்டிற்கு சென்றான்.. அவனைக் கண்டதும் மாதவி ஆடிய ஆட்டத்தை வார்த்தைகளில் சொல்ல முடியாது..
சசி தென்றல் திருமணத்திற்கு பிறகு அகிலன் சசியின் நட்பு முறிந்து போனது.. சசி தனக்கு துரோகம் செய்ததாக நினைத்தான் அகிலன்..
” எங்கடா வந்த பொறுக்கி நாயே.. உன்னால தான்டா இன்னிக்கு எங்க குடும்பம் இந்த நிலைமையில இருக்கு. எனக்குன்னு இருந்த ஒரே சொந்தம் என் அண்ணன் மட்டும்தான். காலத்துக்கும் அவரோட சொந்த நினைக்கணும்னு ஆசைப்பட்டா என் ஆசையில ஒரு லாரி மண்ணை அள்ளி கொட்டிட்டியே.. நீ எல்லாம் நல்லா இருப்பேன்னு நினைக்கிற?
இன்னிக்கு என் அண்ணன் வீட்டுக்கு போக முடியாம, பேச்சு வார்த்தை இல்லாம நான் எப்படி தவியா தவிக்கிறேன் தெரியுமா.. எல்லாம் யாரால உன்னால தான். ஆமை மாதிரி எங்க குடும்பத்துக்குள்ள பூந்து எல்லாத்தையும் நாசம் பண்ணிட்ட.. தென்றல் அப்படிப்பட்ட பொண்ணே கிடையாது.
என்ன மருந்து வெச்சியோ.. நீதான் வேணும்னு உன்ன மாதிரி ஒரு உருப்படாதவன் பின்னால ஓடி வந்துட்டா. அவளையாவது ஒழுங்கா வச்சிருக்கியா, இல்ல ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் தீர்த்து கட்டி அனுப்பிட்டியா.. ” அவனை பேசவே விடாமல் மாதவி சராசரியாக ஆத்திரத்தை கொட்டி தீர்க்க சசி பொறுமையை இழுத்து பிடிக்க வேண்டியதாயிற்று.
” தேவை இல்லாம பேசாதீங்க ஆன்ட்டி. உங்க கோபம் எனக்கு புரியுது. அதுக்காக நீங்க என்ன பேசினாலும் கேட்டுட்டு இருக்கணும்னு எனக்கு அவசியம் இல்லை”
” அவசியம் இல்லன்னா என்ன எழவுக்கு என் வீட்டு வாசப்படி ஏறி நிக்கிற.. “
” கொஞ்சம் பொறுமையா இருங்க நான் உங்க கிட்ட பேச வந்து இருக்கேன்”
” பேசிப் பேசி தானே என் அண்ணன் குடும்பத்தை இந்த நிலைமைக்கு இழுத்து விட்டுட்ட.. இதுக்கு மேல நீ பேச என்னடா இருக்கு.. ஒருவேளை தென்றல கொன்னுட்டியா..” மாதவியின் குரூரமான குற்றச்சாட்டை சசி எதிர்ப்பார்க்கவில்லை.
” வார்த்தையை அளந்து பேசுங்க உங்க வீட்டு வாசப்படி ஏறி வந்துட்டேன்னு கண்டபடி பேசாதீங்க. நான் இங்க வந்தது தென்றல பத்தி பேசுறதுக்கு.” தென்றல் என்றதும் அகிலன் அதுவரை அமைதியாக இருந்தவன் வாய் திறந்தான்.
” அம்மா நீ கொஞ்சம் சும்மா இருக்கியா.. எதுக்கு கத்திக் கூப்பாடு போடுற. முகம் பக்கத்துல இருக்கிறவங்க எல்லாம் நம்ம வீட்ட தான் பாத்துட்டு இருக்காங்க.. ” மாதவியை அடக்கியவன் சசி பக்கம் திரும்பி
” தென்றல் பத்தி என்ன பேசணும்”.. நீண்ட நாட்களுக்குப் பிறகு அகிலன் தன்னோடு பேசியதில் சற்று மகிழ்ச்சியோடு
“டேய் மச்சான்”
” தென்றல் பத்தி என்ன பேசணும்” அகிலன் சசியை மன்னிப்பதாக இல்லை..
பெருமூச்சோடு” தென்றல் இப்ப மாசமா இருக்கா.. இன்னும் ரெண்டு வாரத்துல டெலிவரி டியூ.. அவ அவங்க பேமிலிய ரொம்ப மிஸ் பண்றா.. நேத்தெல்லாம் ரொம்ப அழுக. அவளை அப்படி பாக்க எனக்கு ரொம்ப கில்டியா இருக்கு.. ப்ளீஸ் டா உன் மாமா வீடு எங்க இருக்குன்னு சொல்லு. நானே நேர்ல போய் அவங்க காலுல விழுந்து மன்னிப்பு கேட்கிறேன். சத்தியமா சொல்றேன் தென்றலுக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.
சொல்லப்போனா அவ என்ன லவ்வே பண்ணல. நான் தான்டா அவளை லவ் பண்ணேன். முன்னால பாத்திருந்த பையன கல்யாணம் பேசியிருந்தா கூட இந்த அளவுக்கு பிரச்சனை வந்திருக்காது.. அவளுக்கு உன்ன கல்யாணம் பண்ணிக்க இஷ்டம் இல்லடா.. எங்களுக்கு வேற வழியே இல்லாம தான்” மாதவிக்கு தென்றல் மீது கடும் கோபம் இருந்தாலும் இப்பொழுது அவள் கர்ப்பமாக இருப்பதும் குடும்பத்தை நினைத்து கலங்குவதும் வேதனையை அளித்தது.
மனம் பரிதவித்தது.. அவரால் தென்றலை சென்று பார்க்க முடியாது. எப்பொழுது என் மகனை வேண்டாம் என்று தூக்கி எறிந்து விட்டு சென்றாலும் அப்பொழுதே அந்த குடும்பத்திற்கும் நமக்கும் உறவு முறிந்து விட்டது என்று ஹரிதாஸ் மனைவியிடம் கண்டித்து கூறிவிட்டார். அவரை மீறி மாதவி எதுவும் செய்ய முடியாத நிலையில் கையை பிசைந்தார்.
” இதெல்லாம் நீ சொல்றதுக்கு முன்னாடியே எனக்கு தெரியும்.. அப்ப வேணும்னா தென்றல் உன்னை லவ் பண்ணாம இருந்திருக்கலாம். ஆனா இப்ப அவளுக்கு உலகமே நீ தான். இந்த நிமிஷம் அவங்க நினைச்சா கூட அவ அப்பா அம்மா கூட போய் இருக்க முடியும்.
என் மாமாவும் அத்தையும் அவங்க பிள்ளைங்க மேல கண்மூடித்தனமா பாசம் வச்சிருக்காங்க. ஏன் தெரியுமா அவ போக மாட்றா.. உனக்காக.. உன்ன அந்த அளவு அவ லவ் பண்றா.. ஒரு நல்ல நிலைமையில தான் அவ அப்பா அம்மாவ பாக்கணும்னு ஆசைப்படுறா..
மாமா எங்க இருக்காருன்னு எங்களுக்கு தெரியும்.. நான் சொல்றேன் அதுக்கு மேல உன்னோட விருப்பம்.. ” சசி பரசுராமின் புதிய விலாசத்தை கொடுக்க அதனைப் பெற்றுக் கொண்டவன் தென்றலிடம் இதனை பற்றி மூச்சு விடவில்லை.
மறுநாளே அவளிடம் ஏதேதோ காரணங்கள் கூறி விட்டு கோயம்புத்தூர் கிளம்பி விட்டான்.. பரசுராமின் புதிய விலாசத்தை கண்டுபிடித்து அவர்கள் வீட்டிற்கு செல்ல சசியை பார்த்த மூவருக்கும் அதிர்ச்சியாக இருந்தது.
முதலில் ஓடி வந்த வான்மதி
” அக்கா எப்படி இருக்கா” கண்கள் முழுதும் எதிர்பார்ப்போடு கேட்டாள்.
அதற்குள் வாசுகி மகளை அதட்டினார்..
“வானு.. அங்க என்னடி பேச்சு உனக்கு.. உள்ள போ” அம்மாவை ஒரு முறை திரும்பி பார்த்தவள் சசியின் முகத்தை எதிர்பார்ப்போடு பார்க்க
” பிரக்னண்டா இருக்கா. அடுத்த வாரம் பேபி பொறந்துரும்.. ” அவன் கூறியதைக் கேட்டதும் வான்மதிக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் சற்று மகிழ்ச்சியாக இருந்தது. அதோடு வான்மதி வீட்டிற்குள் சென்றுவிட பரசுராம் வாசலுக்கு வந்து நின்றார்.
சசியை யாரும் உள்ளே வரவில்லை. பரசுராம் அமைதியாக நிற்க சசி பேச்சை தொடங்கினான்.
” உங்களுக்கு இன்னும் என் மேல கோவமா இருக்குன்னு தெரியும்.. நடந்த எல்லாத்துக்கும் நான்தான் காரணம். தென்றல் மேல எந்த தப்பும் இல்லை. சொல்லப்போனா இப்போ அவ உங்கள ரொம்ப மிஸ் பண்றா.. உங்கள பாக்கணும்னு ஏங்குறா. எனக்கு அவளை அப்படி பார்க்கும்போது ரொம்ப கஷ்டமா இருக்கு. வாய்விட்டு சொல்லாட்டியும் எல்லாத்தையும் மனசுக்குள்ள போட்டு கஷ்டப்படுறா.. என்ன கோவம் இருந்தாலும் இந்த நேரத்துல அவகிட்ட கோபத்தை காட்டுறது நியாயம் இல்ல. ஒரே ஒரு தடவை உங்க கோவத்தை ஒதுக்கி வச்சிட்டு அவளை வந்து பாருங்க..” சசியை ஏற இறங்க பார்த்தார் பரசுராம்.
வாசுகியும் அவரும் பேசியே பத்து மாதங்கள் மேலாகிவிட்டது. தெளிந்த நீரோடையாக சென்று கொண்டிருந்த அவர்கள் வாழ்க்கையில் குழப்பத்தை ஏற்படுத்திய கல் சசி.. இப்பொழுது கலங்கிய நீராக சென்று கொண்டிருக்கிறது அவர்கள் வாழ்க்கை.
வாசுகி அமைதியாக நிற்க பரசுராம்
” இப்போ அவ என் பொண்ணு கிடையாது உங்க பொண்டாட்டி.. அவளை மட்டுமே பார்க்கிறது என் வேலை இல்லை. எப்போ அவளோட வாழ்க்கைய பாத்துக்க அவளுக்கு தெரியும் இல்ல முடிவு எடுத்தாளோ அப்பவே இது எல்லாத்தையும் சமாளிக்க அவளுக்கு தெரிஞ்சிருக்கணும்.
அவளால நாங்க பட்டது போதும். எனக்கு இன்னொரு பொண்ணு இருக்கு. அவள நல்லபடியா படிக்க வச்சு ஒருத்தன் கையில பிடிச்சு கொடுக்கணும். இவளால அவ வாழ்க்கையில பிரச்சனை வரக்கூடாது.
என் பொண்ணு மேல ரொம்ப நம்பிக்கை வச்சுட்டேன். என்னால இந்த நம்பிக்கை துரோகத்தை ஏத்துக்க முடியல. அந்த அளவுக்கு எனக்கு பெரிய மனசு இல்ல. உங்க பொண்டாட்டிய நல்லா பாத்துக்கோங்க தம்பி.” பரசுராம் அதற்கு மேல் எதுவும் சொல்லாமல் வீட்டிற்குள் சென்று விட்டார்.
சசி பரிதாபமாக வாசுகி முகத்தை பார்க்க
“அவ… அவளுக்கு இனிப்பு மாங்கானா ரொம்ப இஷ்டம். செஞ்சி கொடுத்தா வெறும் சோத்துல போட்டு சாப்பிடுவா..” என்றவர் கலங்கிய கண்களோடு இனிப்பு மாங்காய் செய்வது எப்படி என்று சசிக்கு எடுத்துரைத்து விட்டு விடு விடுவென்று வீட்டிற்குள் சென்று விட்டார்..
பரசுராம் பக்கமும் வாசுகி ஒரு பக்கமும் தென்றலை நினைத்து கதறினார்கள்.
அதற்கு மேல் அவர்களை வற்புறுத்த மனமில்லாத சசி சந்துருவை சந்தித்து நடந்ததைச் சொல்லி வருத்தப்பட்டு இரவே மீண்டும் சென்னைக்கு திரும்பி விட்டான்.
வந்த முதல் காரியமாக வாசுகி சொன்னபடி மனைவிக்கு இனிப்பு மாங்காய் செய்து கொடுக்க அவனை அதிர்ந்து பார்த்தாள் தென்றல்.
” உங்களுக்கு எப்படி தெரியும்.. அப்படின்னா என் அம்மா கிட்ட பேசினீங்களா.. இல்ல நேர்ல போய் பார்த்தீங்களா..” சரியாக விஷயத்தை கிரகித்து விட்டாள்.