20

மேற்கொண்டு மனைவியை படிக்க வைப்பதாக கூறிய சசி மித்ரனை கையில் பிடிக்க முடியாத அளவிற்கு வேலைகள் அழுத்தி பிடித்தன. அவனை நேரில் பார்க்கும் தருணங்கள் அவனிடம் எதுவும் கேட்க தென்றலுக்கு மனம் வராது. சோர்ந்த முகத்தோடு சில சமயம் குளிக்காமல் கூட உறங்கி விடுவான்.

மெல்ல மெல்லமாக அவன் வீட்டில் இருக்கும் நேரங்கள் அரிதாகியது.. இரண்டு மாதங்கள் ஆகிவிட்டது  தென்றல், சசி மித்ரன் வீட்டிற்கு வந்து.

இந்த இரண்டு மாதங்களிலும் அவள் வெளியே எங்கேயும் செல்லாமல் வீட்டிற்குள்ளேயே வளைய வந்தாள். அவளை வெளியே அழைத்து செல்ல சசிக்கு நேரமில்லை. வெளியே செல்ல அவளுக்கு நேரமில்லை. எந்நேரம் பார்த்தாலும் வீட்டில் ஏதாவது ஒரு வேலை இருந்து கொண்டே இருந்தது தென்றலுக்கு.

விசாலாட்சி கண்களுக்கு மட்டும் எங்கிருந்துதான் அழுக்கு தெரியுமோ கடவுளுக்கு தான் வெளிச்சம். நன்றாக மாப் போட்டு தரையை சுத்தமாக துடைத்தாலும் உடனே மருமகளை கூப்பிட்டு காட்டுவார்.

” என்ன வேலை பண்ற நீ மேலுக்கும் வலிக்காம தரைக்கும் வலிக்காம.. அங்க பாரு அந்த மூலையில் பாரு.. அப்படியே தூசி அண்டி கிடக்கு. நல்ல மூல முடுக்கெல்லாம் அடிச்சு துடைக்க தெரியாதா..

” என்ன பாத்திரம் விளக்குற.. நல்லா தேச்சு கழுவு அப்பதான் கரையெல்லாம் போகும்.. “

” பாத்ரூம்ல கால வைக்க முடியல.. உலகத்தையே ஒரு ரவுண்டு வந்துடலாம் போல.. என்ன பொண்ணோ ச்சே” அந்த வீட்டில் அனைத்து அறைகளும் அட்டாச் பாத்ரூம் வசதிகள் கொண்டன. இதுவரை அவற்றை கழுவுவது அனைத்தும் வேலையாட்களின் பொறுப்பு. எப்பொழுது தென்றல் மருமகளாக வந்தாலோ அப்பொழுது இரண்டு வேலையாட்களுக்கு சீட்டை கிழித்து விட்டார் விசாலாட்சி.

பிடிக்காத மருமகள் வேலை செய்வதை காண ஆனந்தம். அவர் அறையில் உள்ள குளியலறை முதல் கொண்டு தென்றல் தான் கழுவ வேண்டும்.. ஒரு வார்த்தை சசியிடம் தென்றல் இதை பற்றி சொல்லியிருந்தால்  கண்டிப்பாக தாயை கண்டித்து இருப்பான்.. தென்றல் அனைத்தையும் பொறுத்து போக விசாலாட்சி தலைக்கு மேல் ஏறி ஆட ஆரம்பித்து விட்டார்..

வீட்டு வேலைகளை செய்தே தென்றல் ஓய்ந்து போனாள். சோமசுந்தரம் விசாலாட்சியை கண்டித்தார். கணவன் முன்னிலையில் தென்றலின் வேலைகள் குறைந்தாலும் சோமசுந்தரம் வீட்டில் இல்லாத நேரம் மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறியது. தேவா தென்றலிடம் தேவைக்கு மட்டுமே பேசுவான்..

அந்த வீட்டில் சசியைத் தவிர மற்ற அன்னியர்களாக இருந்த போதிலும் யாரும் அவளை வெறுத்து ஒதுக்கவில்லை என்பது தென்றலின் மனதிற்கு இதமாக இருந்தது.. பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் புரிந்தவளுக்கு இதற்கு மேல் எதை எதிர்பார்க்க முடியும்?

இன்னும் ஒரு மாதத்தில் சசிக்கு ஷூட்டிங் ஆரம்பித்து விடும்.. இப்பொழுதாவது வீட்டில் இருக்கிறான். ஷூட்டிங் ஆரம்பித்தால் அவனைக் காண்பதே அரிதாகிவிடும்.

வீட்டிலே இருப்பது மன அழுத்தத்திற்குள் தென்றலை தள்ளியது. அன்று வேலைகள் அனைத்தையும் முடித்தவள் விசாலாட்சியின் முன்பு சென்று நின்றாள்.

“அத்தை..” சீரியலில் கவனமாக இருந்தவர் மருமகள் மீது பார்வையை செலுத்தினார்.

” அத்தை நான் கோவிலுக்கு போயிட்டு வரேன்”.. விசாலாட்சி மருமகளை ஆராய்ச்சியாக பார்த்தாலும் மேற்கொண்டு எதையும் கேட்காமல் அமைதியாக இருந்தார். அதுவே தென்றலுக்கு நிம்மதியை கொடுக்க உடனே கோவிலுக்கு கிளம்பினாள்..

ரொம்ப தூரமில்லை.. பக்கத்திலிருந்த கோவிலுக்கு சென்றவளுக்கு  நன்றாக மூச்சை இழுத்து விட முடிந்தது. எந்த அளவிற்கு அவள் மன அழுத்தத்தில் இருந்துள்ளால் என்பதை அவளாலேயே அந்த நொடி உணர்ந்து கொள்ள முடிந்தது.

சிறிது நேரம் கோவிலில் அமர்ந்திருந்தவள் நவகிரகத்தை சுற்றி விட்டு கிளம்ப  அந்த நேரம் அவள் தலைசுற்றியது. தடுமாறி கீழே போனவளை  ஒரு கரம் அழுத்தமாக பற்ற யார் என்று தென்றல் பார்க்க அங்கு நின்று கொண்டிருந்தான் அகிலன்..

அவனை கண்டதும் தென்றலுக்கு  கண்கள் கலங்கியது.. “மாமா”

கை தாங்கலாக அவளை அழைத்துச் சென்று அமர வைத்தான். கோவிலின் வெளியே ஓடிச் சென்று  சோடா வாங்கி வந்து கொடுத்தான்..

எப்படி அவனிடம் பேச்சை ஆரம்பிப்பது என்று புரியாமல் அமைதியாக இருந்தாள். அகிலனை அவளின் சங்கடத்தை உணர்ந்து

” எப்படி இருக்க தென்றல்.. என்ன தனியா வந்திருக்க சசி வரலையா.. ” அவன் சகஜமாக பேச முயல வார்த்தை வராமல் தடுமாறினாள் தென்றல்.

அவள் மீது தவறில்லை என்ற போதிலும்  அகிலனை பார்த்து சகஜமாக வார்த்தையால இயலாமல் தவித்தாள்.

தன்னுடைய பதிலுக்காக அகிலன் காத்திருப்பதை உணர்ந்தவள் ” தனியா தான் மாமா வந்தேன்.. நான் நல்லா இருக்கேன் நீங்க அத்தை வீட்ல எல்லாரும் எப்படி இருக்கீங்க”

“ம்ம்ம் இருக்கோம்..” சிறிது தயக்கத்திற்கு பின்

” சசி உன்ன நல்லா பாத்துக்குறானா.. ” தென்றலின் மெலிந்த தோற்றம் அகிலனை அவ்வாறு கேட்க வைத்தது.

“ம்ம்ம்” மெல்லிய புன்னகையோடு தலையாட்டினாள் தென்றல்.

சசி மீது அகிலனுக்கு தீராத கோபம் இருந்தது. தென்றல் மீது அவனுக்கு இருந்த காதலை ஒரு தடவையாவது தன்னிடம் கூறியிருந்தால் இந்த அளவுக்கு பிரச்சனை முற்றி போயிருக்காது. தென்றல் வீட்டில் அவனே பேசி சுமூகமான முடிவை எடுக்க வைத்திருப்பான்.

” அவன் தான் சொல்லல.. உனக்கும் என்கிட்ட சொல்ல தோணல” தென்றல் தலை குனிந்தாள்.

” ஏன் பயமா” அகிலன் விடுவதாக இல்லை.

” அப்படி இல்ல மாமா.. உனக்கு எல்லாத்தையும் தெளிவா சொன்னா தான் புரியும். ” தென்றல் நடந்த அனைத்தையும் தெளிவாக அகிலனிடம் சொல்ல அகிலன் தலையில் கை வைத்தபடி அமர்ந்து விட்டான்.. பெரிதாக தவறு நடந்தது அவனுக்கு உறைத்தது.

அந்தத் தவறுக்கு மூல காரணம் அவன் குடும்பத்து பெரியவர்கள்.. தென்றலின் விருப்பத்தை ஒரு தடவை கூட கருத்தில் கொள்ளாமல் அவர்கள் இஷ்டத்திற்கு முடிவு எடுக்க போய் இவ்வளவு பெரிய இக்கட்டில் தென்றல் மாட்டிக் கொண்டுள்ளாள்.

நடந்தது நடந்து முடிந்து விட்டது. இனி அதைப் பற்றி பேசி பிரயோஜனம் கிடையாது. அவனுக்கும் தென்றல் மீது பெரிதாக ஈடுபாடு இல்லாத காரணத்தினால், பெரிதாக இதனை எடுத்துக் கொள்ளவில்லை.

” எதா இருந்தாலும் என்கிட்ட கேளு.. என் நம்பர் இருக்கு தானே. ஒரு ஃபோன் பண்ண கூட மாட்டியா.. ” உரிமையாக கோபித்துக் கொண்டான் அகிலன்.

“மாமா” கேட்க வந்ததை கேட்க திணறினாள் தென்றல்.

அவளுடைய தயக்கத்தை புரிந்து கொண்டவன் ” வீட்ட பத்தி கேக்குறியா.” தலையாட்டினாள்.

” மாமா இப்ப அந்த பழைய வீட்ல இல்ல. அங்க இருக்க முடியாம ஒரே அவமானமா போயிடுச்சு..

உனக்கு தான் தெரியுமே மாமா ரொம்ப கௌரவம் பாப்பாரு. அத்தைக்கு மாமாவுக்கும் பேச்சு வார்த்தை கிடையாதுனு கேள்வி பட்டேன். என் அம்மாவும் அங்க போறது இல்ல. சொல்லப்போனா இந்த பிரச்சனைக்கு முக்கிய காரணமே என் அம்மா தானே. மாமா பார்த்த பையனுக்கே உன்ன கல்யாணம் பண்ணி கொடுத்திருந்தா இந்நேரம் இந்த பிரச்சனையே வந்து இருக்காது. தேவை இல்லாம நடுவுல  என்ன இழுக்க போய்.. ” பெருமூச்சு விட்டான் அகிலன்.

” அப்பா அம்மா தங்கச்சி எல்லாரும் எப்படி இருக்காங்க மாமா.. “

” உன் தங்கச்சி இன்னும் என் கூட காண்டாக்ட்ல இருக்கா. அவ தான் இந்த விஷயத்தை எல்லாம் சொன்னா.. அப்புறம் நீ இப்படி பண்ணதுனால  அவள வெளியவே விட மாட்றாங்களாம்.. அவளோட ஃபோனையும் வாங்கிருவாங்கன்னு சொன்னா.. அப்பாவும் அம்மாவும் உன் மேல ரொம்ப கோபமா இருக்கிறதா சொன்னா.. ” அகிலனுக்கு கஷ்டமாக இருந்தாலும் உண்மையை உள்ளபடி உரைத்தான்..

தன்னால் தங்கையின் சுதந்திரம் பறிபோனதை எண்ணி வேதனை பட்டாள் தென்றல்.. சிறிது நேரம் தென்றலிடம் பேசிவிட்டு  கிளம்பிய அகிலன் என்ன நினைத்தானோ இரண்டாயிரம்  ரூபாயை எடுத்து தென்றலிடம் கொடுத்தான்.

” எதுக்கு மாமா” தென்றல் வாங்க மறுத்தாள்.

” வச்சுக்கோ உனக்கு யூஸ் ஆகும்.. உனக்கு பிடிச்சது ஏதாச்சும் வாங்கிக்கோ.. யாரும் இல்லைன்னு நினைக்காத தென்றல். நான் இருக்கேன். அம்மா கிட்ட பேசுறேன். அவங்களுமே மாமா பேசலன்னு வேதனையில தான் இருக்காங்க. எல்லாத்துக்கும் டைம் எடுக்கும். எதைப் பத்தியும் நீ யோசிக்காத. ஆமா உன் ஸ்டடிஸ் என்ன ஆச்சு” தயக்கத்தோடு அவன் கொடுத்த பணத்தைப் பெற்றுக் கொண்ட தென்றல் கடைசியாக அவன் கேட்ட கேள்வியில் தடுமாறினாள்.

“அது மாமா”..

” பரவால்ல விடு” மேலும் அவளை சங்கடப்படுத்த விரும்பாத அகிலன்

” நீ சரியா சாப்பிடறது இல்லையா.. என்னத்துக்கு மயக்கம் போட்டு விழ பார்த்த.. நல்லவேளை நான் பிடிச்சேன் இல்லாட்டி கீழ விழுந்திருப்ப.. “

” தெரியல மாமா திடீர்னு தல சுத்திருச்சு.. ஆமா நீ என்ன கோவிலுக்கு எல்லாம்.. ” அவனை ஆச்சரியமாக பார்த்து கேட்டாள் தென்றல்.

” நானும் நல்ல பையன் தான்மா என்னைக்காவது தோணுனா வருவேன்.. ” அவளிடம் விடை பெற்றுக்கொண்டு அகிலன் சென்று விட தென்றலும் வீட்டிற்கு சென்றாள்.

அகிலனை சந்தித்ததை பற்றி  சசியிடம் அவள் எதையும் கூறவில்லை.

இரண்டு நாட்களாக இடுப்பு வீங்கி வலி உயிர் போனது. குனிந்தால் நிமிர முடியவில்லை. நிமிர்ந்தால் குனிய முடியவில்லை..

எப்போதடா உட்கார்ந்து கொள்ளலாம் என்கிற ரீதியில்  உடல் அவளைப் பாடாய்படுத்தியது.

விசாலாட்சிக்கு மாதாந்திர மருத்துவ பரிசோதனை. என்றுமில்லாத திருநாளாக அன்று மருமகளையும் தன்னுடன் அழைத்துச் சென்றார் விசாலாட்சி..

காலையிலிருந்து ஏதும் சாப்பிடாததால்  கையோடு கொண்டு வந்திருந்த தண்ணீரை குடித்ததும்  தென்றலுக்கு குமட்டி விட்டது.

“என்ன” விசாலாட்சி கேட்க

” ஒன்னும் இல்ல காலையில இருந்து சாப்பிடல.. அதான் வெறும் வயித்துல தண்ணி குடிச்சோன” விசாலாட்சி மருமகளை கேள்வியாக பார்த்தார்.

” கடைசியா எப்ப அது வந்துச்சு”.. மாமியார் கேட்பது புரியாமல் விழித்தவள்  உண்மை நெற்றி பொட்டில் அறைய அதிர்ந்து போனாள்.

மருமகளின் முகத்தை பார்த்துக் கொண்டிருந்த விசாலாட்சி கையோடு அவளையும் அழைத்துச் சென்று பரிசோதிக்க தென்றல் கருவுற்றிருப்பது தெரிந்தது..

பெரிதாக சந்தோஷப்படவில்லை என்றாலும் வெறுப்பையும் முகத்தில் காட்டவில்லை விசாலாட்சி. மருமகளுக்கு ஒரு ஜூசை வாங்கிக் கொடுத்தவர் வீடு வந்து சேர்ந்தார்.

சோமசுந்தரத்திற்கு விஷயத்தை கேள்விப்பட்டதும் மகிழ்ச்சியாக இருந்தது. என்ன இருந்தாலும் அவர் குடும்பத்தின் முதல் வாரிசு..

சசிக்கு அழைத்தாள் தென்றல். அழைப்பு நீண்டதே தவிர அவன் எடுக்கவில்லை. இரண்டு ஒரு முறை அழைத்துவிட்டு அவள் அமைதியாக இருக்க  சிறிது நேரம் கழித்து அவனே அழைத்தான்.

” என்னடி நான் வேலையா இருக்கேன் தெரியாதா எதுக்கு நொய் நொய்ன்னு போன் அடிச்சுக்கிட்டே இருக்க..” தென்றல் மீது எரிந்து விழுந்தான் சசி. தென்றலுக்கு முகம் சுருங்கி விட்டது.

” இன்னைக்கு அத்தை கூட ஹாஸ்பிடல் போனேன்..”

“சரி.. இத சொல்றதுக்கா அடிச்ச” அவனின் வேலை புரிந்தாலும் சொல்ல வந்ததை சொல்ல விடாமல் எறிந்து விழும் அவனது குணம் தென்றலுக்கு எரிச்சலை கிளப்பியது.

” அப்படியே நானும் செக் பண்ணேன் நான் பிரக்னண்டா இருக்கேன்..” அவனது பதிலை எதிர்பார்க்காமல் அழைப்பை துண்டித்தாள் தென்றல்.

அந்தப் பக்கம் சசிக்கு காதில் விழுந்த வார்த்தைகள் மூளைக்குச் சென்று உரைக்கவே சில நொடிகள் எடுத்துக் கொண்டன. குழந்தையைப் பற்றி அவனுக்கு எந்தவித யோசனையும் இல்லாததால் எவ்வாறு அதற்கு எதிர்வினை ஆற்றுவது என்றே புரியாமல்  நின்றிருந்தவன் மீண்டும் தென்றலுக்கு அழைக்க அவள் எடுக்கவில்லை.

எப்போதடா வேலை முடியும் என்று காத்திருந்தவன் அன்று விரைவாக வீட்டிற்கு வந்து விட்டான்.. வரும்போது கையோடு மனைவிக்கு கிட் கட்  சாக்லேட் மற்றும் ஐஸ்கிரீம் வாங்கி வந்தான்.

தென்றலுக்கு சாக்லேட் மற்றும் ஐஸ்கிரீம் என்றால் மிகவும் விருப்பம்.. அவனைக் கண்டதும் முகத்தை திருப்பினாள் தென்றல்.

இழுத்து அவளை கட்டிக் கொண்டவன் “ஸாரிடி.. ஒர்க் டென்ஷன்ல உன்னை கத்திட்டேன்..” அவள் கன்னத்தில் அழுத்தமாய் முத்தமிட..

” நீங்க என்னைக்கு கத்தாம இருந்திருக்கீங்க.. ” பிறகு அவளை கொஞ்சி கெஞ்சி சமாதானப்படுத்திய சசி தான் வாங்கி வந்த ஐஸ்கிரீமை அவளிடம் கொடுத்தான்.

” என்னால நம்பவே முடியல டி எனக்கு ஒரு பிள்ளை.. ப்பா என்ன பீல் தெரியுமா அது.. ” சந்தோஷத்தில் சசி பேசிக்கொண்டே போக தென்றல் அமைதியாக இருந்தாள்.

“என்னடா” அவள் முகத்தை நிமிர்த்தி கேட்க

” சசி இப்போ நமக்கு இந்த பிள்ளை தேவையா” தென்றலின் கேள்வியில் ஆடிப் போனான் சசி.

“ஏன்” அவன் குரலே மாறியது.

” நாம இருக்கிற சிட்டுவேஷன்ல இப்ப நம்மால ஒரு பேபி பெத்து வளர்க்க முடியுமா.. அதுக்கு எவ்வளவு செலவாகும் தெரியும்ல.. ஒரு ரெண்டு மூணு வருஷம் போகட்டும்.. நானும் என் ஸ்டடிஸ கம்ப்ளீட் பண்ணிட்டு  வேலைக்கு போறேன்..” நிலவரத்தை கணவனுக்கு எடுத்துரைத்தாள் தென்றல்..

” அபார்ஷன் பண்ணனும்னு சொல்றியா.. ” தென்றல் அமைதியாக தலையாட்டினாள்.

” ஊர் உலகத்துல போய் பாரு பிள்ளை இல்லைன்னு கோயில் கோயிலா சுத்திகிட்டு இருக்காங்க. எத்தனை லட்சம் செலவு பண்றாங்க. கல்யாணம் பண்ண வேகத்துல பிள்ளை வந்த உடனே அதோட அருமை உனக்கு தெரியலல்ல.. எவ்வளவு திமிர் இருந்தா பிள்ளைய கலைக்கணும்னு சொல்லுவ..” சசியின் ரௌத்திரத்தை கண்டு தென்றலுக்கு பயமாக இருந்தது.

” நான் அப்படி சொல்ல வரல.. இந்த பேபி எனக்கும் முக்கியம் தான். ஆனா நாம இருக்கிற சிட்டுவேஷன்”

“ஹேய் என்னடி பெரிய சிட்டுவேஷன்.. பிள்ளையைக் கொடுத்த எனக்கு அத வளக்க தெரியாதா.. எனக்கு இந்த பிள்ளை வேணும்.. என் பிள்ளைக்கு மட்டும் ஏதாச்சும் ஆனுச்சு” இந்த அளவு கடுமையை சசியிடம் எதிர்பார்க்காதவள் அழுகையோடு படுத்துவிட்டாள்.