17

அன்றிலிருந்து சோதனை மேல் சோதனை போதுமடா சாமி என்கிற பாடல் மட்டுமே தென்றல் மனதில் ஓயாமல் ஓடிக் கொண்டிருக்கிறது.. முதலில் தென்றலின் படிப்பு தடைப்பட்டது. பணம் இருந்தால் தானே செமஸ்டருக்கு செலுத்த முடியும்..

விசாலாட்சி சோமசுந்தரத்தின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு  தென்றலை வீட்டுக்குள் அனுமதித்தாரே தவிர அவருக்கு தென்றலை சுத்தமாக பிடிக்கவில்லை. கோவிலில் தனக்கு உதவிய பெண் இவள் தான் என்று அவருக்கு அடையாளம் தெரிந்தாலும் பிறருக்கு உதவக்கூடிய நல்ல மனம் அவளுக்கு இருக்கிறது என்று புரிந்து கொண்டாலும், அவரால் புது மருமகளை சந்தோஷத்தோடு  வரவேற்க இயலவில்லை.

அரசல் புரசலாக விஷயம் அக்கம் பக்கம் பரவி  உறவினர்களுக்கும் கசிந்தது. தென்றலை பார்ப்பதற்காகவே  விசாலாட்சியின் வீட்டிற்கு நித்தமும் உறவினர்கள் கூட்டம் படையெடுத்து வந்தது.

தென்றலின் அழகும் அவள் அமைதியும் எதுவும் அவர்கள் கண்களைத் தாண்டி மனதிற்கு பதியவில்லை. படிக்கும் வயதில் வீட்டை விட்டு ஓடி வந்த பெண் ஓடுகாளி என்கிற ரீதியில் தான் அவளை பார்த்து விட்டு சென்றார்கள்..

சசி வீட்டிற்குள் காலடி எடுத்து வைத்த அன்றே தென்றலுக்கு அவள் எடுத்த முடிவு எவ்வளவு அபத்தமானது என்றது புரிந்தது..

” ஏன்டி இவன் எல்லாம் ஒரு ஆளுன்னு எதை பார்த்துட்டு இவன் பின்னால ஓடி வந்த.. இந்த வயசுல எவனையாச்சும் காதலிச்சு இழுத்துட்டு ஓடுனா தான் உன்ன மாதிரி பொண்ணுங்களுக்கு மனசு ஆறுமா..அவன் யாரு என்ன.. என்ன வேலை செய்றான்.. அவனை நம்பி போனா நம்ம வாழ்க்கை நல்லா இருக்குமா இப்படி எதைப் பத்தியும் யோசிக்காம ஒருத்தன் பாக்குறதுக்கு நல்லா இருந்துட்டா போதும்.

உடனே வயசு சுகத்த தீத்துக்கறதுக்கு அவன் பின்னாடி நாய் மாதிரி நாக்கை தொங்க போட்டு ஓடி வர்றது.. நான் கூட உன்ன கோவிலில பார்த்தப்ப நினைச்சேன் இந்த காலத்திலயும் அடுத்தவங்களுக்கு உதவி செய்யற பொண்ணா இருக்கியேனு.

இப்பதானே தெரியுது எல்லாமே திட்டம் போட்டு பண்ணியிருக்க.. ரெண்டு நகைக்கடை இருக்கு பெரிய கோடிஸ்வரனு நினைச்சிட்டியா..

வேலை வெட்டிக்கு போகாம படிச்ச படிப்புக்கு தண்டமா ஊரை சுத்திட்டு திரியுது இந்த முண்டம். இத நம்பி ஓடி வந்திருக்கியே உன்னை எந்த செருப்பால அடிக்கிறது. சோத்துக்கு என்ன பண்றதா உத்தேசம்.. ” இப்படி விடாமல் விசாலாட்சி வார்த்தைகளால் விலாச  அவர் கூறிய ஒவ்வொரு வார்த்தைகளையும் கேட்ட தென்றலுக்கு மயக்கம் ஒன்றுதான் வராத குறை.

வாங்கி வாங்கி மறுத்துப்போன சசிக்கு தாயின் வசவுகள் எதுவுமே பெரியதாக தெரியவில்லை. தென்றலின் மெல்லிய உணர்வுகளை பற்றி அவனுக்கு துளியும், கவலையில்லை.. பிறந்ததிலிருந்து பெண்களோடு சரியாக பழகத் தெரியாதவனுக்கு அவர்களின் மெல்லிய உணர்வும் கண்ணாடி போன்ற மனதைப் பற்றியும் என்ன தெரியும்?

விசாலாட்சியின் வார்த்தைகள் அத்துமீறி போக  தென்றல் அழுகையில் கரையவும் தான், அதற்கு மேலும் பொறுக்க முடியாமல் வாயைத் திறந்தான் சசி மித்ரன்.

“ம்மா இப்ப என்ன உனக்கு? நாங்க இந்த வீட்ல இருக்க கூடாதுன்னு சொல்லிரு இந்த நிமிஷமே என் பொண்டாட்டி கூட்டிட்டு நான் வெளிய போறேன். நானும் பாத்துகிட்டே இருக்கேன் என்னமோ வாய்க்கு வந்ததெல்லாம் பேசிட்டு இருக்க. நீ பேசுறதுக்கு தான் நான் கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்தேனா இவள. நம்ம அளவுக்கு இல்லனாலும் இவளும் ஒன்னும் இல்லாதவ கிடையாது.

எனக்காக வீட்டில பார்த்த கல்யாணம் வேணாம்னு  ஓடி வந்து என்ன கல்யாணம் பண்ணிக்கிட்டவ. நீங்க எல்லாரும் என்ன ஒரு மனுசனா மதிக்காத போது என்ன நம்பி வந்தவ.

என்னமோ வானத்துக்கும் பூமிக்கும் கிடந்து குதிக்கிற. இதுல பாதி தான்  உன் புருஷன் சம்பாரிச்சது. மீதி தாத்தா சொத்து. கோர்ட்ல கேஸ் போட்டா என்ன நடக்கும் தெரியும்ல.. மொதக்கொண்டு தாத்தா உயில்ல என்ன எழுதி வச்சிட்டு போனாரு..” திடீரென்று சசி மித்ரன் உயில் வரை பேச  விசாலாட்சிக்கு வார்த்தைகளே வரவில்லை.

தன்னுடைய தந்தையை உரித்து வைத்து பிறந்திருந்த சசி மித்ரன் என்றால்  விசாலாட்சியின் தந்தைக்கு உயிர்.. அவனுக்கு நினைவு தெரிந்த போதே அவரின் உயிர் பிரிந்து விட்டது. பேரன் மீது கொண்ட அலாதி பிரியத்தினால்  அவரின் பெரும்பாதி சொத்தினை  முழு மனதோடும் தெளிவோடும் சசி மித்ரன் பெயரில் எழுதி வைத்திருந்தார்..

இப்பொழுது சொத்தை பிரித்தால் தேவாவுக்கும் இவர்களுக்கும் கூட சசிக்கு கிடைக்கும் பங்கில் கால்வாசி தான் கிடைக்கும்.. இந்த ஒரு காரணத்தினாலே சோமசுந்தரம்  சசி என்னதான் தற்குறியாக இருந்தாலும் அவனை வெளியே அனுப்பாமல் வீட்டிற்குள் வைத்து அடைகாத்தார்.

இப்பொழுது மனைவி என்று ஒருத்தி வந்த பிறகு மகனை வீட்டை விட்டு வெளியே அனுப்பினால் நாளையே வக்கீல் நோட்டீஸ் வீடு தேடி வரும்.. நினைக்கும் போதே விசாலாட்சிக்கு பகீர் என்றது.

” ஏம்பா இப்படி பண்ணிங்க” புகைப்படமாக சுவரில் தொங்கிக் கொண்டிருந்த தன்னுடைய தந்தையை பார்த்து மானசீகமாக கேட்டு வைத்தார் விசாலாட்சி.

சசிக்கு தற்சமயம் மட்டுமே தாயின் வாயை அடைக்க முடிந்தது. அதற்குள் தென்றல் அந்த வீட்டிற்கு வந்து ஒரு வார காலம் முடிந்தது. சொத்தை பற்றி சசி  பேசிய பிறகு  அவர்களை வீட்டை விட்டு வெளியே செல் என்ற வார்த்தையை கஷ்டப்பட்டு முழுங்கிக்கொண்டார் விசாலாட்சி.

முதல் நாள் அழுகையில் கரைந்த தென்றலை எவ்வளவோ சமாதானம் செய்ய முயன்றான் சசி. வீட்டில் சாப்பாடு எடுக்காமல் வெளியே சென்று சாப்பாடு வாங்கி வந்து மனைவிக்கு ஊட்டி விட்டான்.

“அழாத தென்றல்.. அவங்களுக்கு என்ன தெரியும்.. திடீர்னு இப்படி பண்ணாதால கோவத்துல பேசிட்டாங்க. எதையும் மனசுல வச்சுக்காத. சீக்கிரமா எல்லாம் சரியாயிடும். நாளைக்கே நான் படம் பண்ணிட்டா உன் அப்பா அம்மா கூட கோபம் மறந்து நம்ம வீட்டுக்கு வருவாங்க..” அவனுடைய சமாதான வார்த்தைகள் எதுவும் தென்றலை சென்றடையவில்லை.

அவள் கேவி அழுக அவனுக்கே ஒரு மாதிரியாகி விட்டது ” எல்லாமே என்னால தானே. நான் உன் வாழ்க்கையில் வராம இருந்திருந்தா இந்நேரம் நீ அகிலன கல்யாணம் பண்ணிட்டு பிடிக்குதோ இல்லையோ காலப்போக்குல வாழ்க்கை வாழ்ந்திருப்ப.. ஸாரி ம்மா” உண்மையான வருத்தத்தோடு சசி பேச தென்றலுக்கு தன் வருத்தத்தை விட அவனின் வருத்தமே மேலோங்கி நின்றது.

கண்களை துடைத்துக்கொண்டவள் அவன் உணவை ஊட்டி விட உண்டு முடித்தாள். நல்ல விஷயம் என்னவென்றால் சசியின் அறையிலேயே பாத்ரூம் வசதி இருந்தது. எக்காரணம் கொண்டும் அவள் கீழே இறங்கி செல்ல வேண்டிய அவசியம் இல்லை.

அன்று முழுதும் யார் முகத்திலும் விழிக்காமல் அறைக்குள்ளேயே இருந்தாள். தேவாவுக்கு இந்த விஷயம் தெரியும். அவன் மட்டும் தான் வீட்டிற்கு வந்ததும் அண்ணனின் அறை கதவை தட்டினான்.

“என்னடா”.. என்றான் சசி.

” கங்கிராட்ஸ் டா அண்ணா.. எப்படியோ உனக்கு பிடிச்ச பொண்ண கல்யாணம் பண்ணிட்டியே.” காதல் தோல்வியில் இருந்தவனுக்கு  அண்ணனின் காதலாவது கை கூடியதே என்கிற மகிழ்ச்சி.

” எங்க அவங்க” கட்டிலில் படுத்து அழுது கொண்டிருந்த தென்றலை கேட்டான்.

சசி அவனை அறைக்குள் அழைத்து தென்றலை எழுப்ப அவளும் கண்ணை துடைத்துக் கொண்டு எழுந்து நின்றாள்.

தேவாவுக்கு தென்றலை பார்க்க சங்கடமாக இருந்தது. பெரிதாக குடும்ப விஷயத்தில் எதிலும் அவன் பட்டுக் கொள்ள மாட்டான். தன்னுடைய காரியத்தில் சரியாக இருப்பான். சசி தொழிலை கவனிக்காமல் சினிமா என்று பைத்தியம் பிடித்து சுற்றுவதை பற்றி அவனிடம் பேசும் படி தேவாவை நச்சரித்திருக்கிறார் விசாலாட்சி.

“தோ பாருமா அண்ணன் தம்பியா இருந்தாலும் வாயும் வயிறும் வேற.. இது அவனோட வாழ்க்கை என்ன செய்யணும்னு அவனுக்கு தெரியும். தேவை இல்லாம எல்லாத்துலயும் மூக்கை நுழைக்காத. உனக்கு வேணும்னா நீ போய் அவன் கிட்ட சொல்லு. இந்த வேலையெல்லாம் என்கிட்ட வச்சுக்காத.” கத்தரித்து பேசினான் தேவா..

அப்படிப்பட்டவனுக்கு தென்றலை விசாலாட்சி எந்த முறையில் வரவேற்று இருப்பார் என்பது பார்க்காமலேயே தெரிந்தது.. அண்ணி என்று அவளை அழைக்க முடியவில்லை எப்படியும் அவனை விட வயதில் சிறியவளாக இருப்பாள்..

” அழாதீங்க.. கொஞ்ச நாள் எல்லாரும் கோபமா இருப்பாங்க. அப்புறம் உங்கள பிடிச்சு போயிரும். நான் ரொம்ப பிராக்டிகல். உங்களை கேவலப்படுத்துறவங்க முன்னுக்கு நீங்க ரெண்டு பேரும் நல்லா வாழ்ந்து காட்டணும். அப்போதுதான்  நீங்க மட்டும் இல்ல உங்களுக்கு பொறக்குற குழந்தைங்க கூட இவங்க முன்னுக்கு தலை நிமிர்ந்து வாழ முடியும்.. தைரியமா ஒரு முடிவு எடுத்து வந்துட்டீங்க. இனிமே எல்லாமே உங்க கையில தான் இருக்கு.. ” உண்மையை உரக்க பேசினான் தேவா.

அமைதியாக அவன் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தாள் தென்றல். பிறகு சசியை தனியாக வரும்படி கண்ணைக் காட்டி விட்டு சென்றான் தேவா. சசியும் தம்பியை பின் தொடர  அண்ணனின் கையில் இருபதாயிரம் பணத்தை திணித்தான் தேவா.

“என்னடா ” சசி அதிர்ந்தான்.

” உன்கிட்ட எப்படியும் இருக்காதுன்னு எனக்கு தெரியும். இது கடக்காசு இல்ல என்னோட சேவிங். உன்ன நம்பி வந்த பொண்ணுடா போட்டுகரத்துக்கு மாத்து துணி இருக்கானு கூட தெரியல.. இதுக்கு முன்னாடி நீ எப்படியோ. ஆனா இவங்களுக்காகவாவது சீக்கிரமா படம் பண்ண பாரு. இனிமே முன்னாடி மாதிரி  தயவு செஞ்சு இருக்காத..

அதே மாதிரி ஒரு தடவை தான் என்னால கொடுக்க முடியும். இப்ப நான் உனக்கு கொடுத்தது கூட கடனாதான் கொடுக்கிறேன். எப்பவும் அதை ஞாபகத்துல வச்சுக்கோ.. ” நறுக்கு தெறித்தார் போல பேசி சென்றான் தேவா.

தேவா பேசியது தென்றல் மனதில் ஒரு தெளிவை ஏற்படுத்தி இருந்தது. எப்படி இருந்தாலும் இனி இதுதான் அவள் வாழ்வு. அதனை தனக்கு சாதகமாக மாற்றிக் கொள்வது எப்படி என்று தான் யோசிக்க ஆரம்பித்தாள்.

விசாலாட்சி அந்த யோசனையில் ஒரு லாரி மண்ணை கொட்டினார். அறையிலேயே இருக்க முடியாது அல்லவா அதனால் மறுநாளே  தைரியத்தை வரவழைத்துக் கொண்டு சமையலறைக்குள் நுழைந்தாள் தென்றல்..

விசாலாட்சியின் ஆத்திரம் எல்லை கடந்தது. ஆகாத மருமகள் கைபட்டால் கால் பட்டால் குத்தம் என்கிற நிலைக்கு ஆளானாள் தென்றல். எந்நேரம் பார்த்தாலும் விசாலாட்சி கொத்திபி பிடிங்கும் பாம்பாக காட்சியளித்தார். சோமசுந்தரத்தை வீட்டில் பார்ப்பதே அரிது. மீறி அவர் வீட்டில் இருக்கும் சமயங்களில் விசாலாட்சி தென்றலை ஏதாவது சொன்னாலும் வாயை மூடிக் கொண்டிருப்பார்.

சசி காலையில் தென்றலுக்கு சாப்பிட ஏதாவது வாங்கி கொடுத்து விட்டு வெளியே செல்பவன் மதியம் தான் வருவான். சில நேரங்களில் மாலை கூட ஆகிவிடும். பசி வயிற்றை கிள்ளினாலும் தண்ணீரை குடித்து தன்னை அடக்கிக் கொள்வாள் தென்றல்..

வெயிலில் அலைந்து திரிந்து  வாங்கி வந்த உணவை தென்றலுக்கு கொடுத்துவிட்டு சோர்வாக அமர்ந்து விடுவான் சசி. அவனைப் பார்க்கும் போதெல்லாம் பொங்கி வந்த ஆத்திரம்  போன இடம் தெரியாது.

உறவினர்கள் வந்து பார்த்துப்போக காட்சி பொருளானாள் தென்றல்..

இப்படியே முதல் வாரம் முடிந்துவிட மறு வாரத்திலிருந்து விசாலாட்சி யோசிக்க ஆரம்பித்தார். மருமகள் என்று வந்தாயிற்று. இனி அவளை வீட்டை விட்டு வெளியே அனுப்பினால் மகன் சொத்தில் கை வைத்து விடுவான். எனவே வந்ததுக்கு வீட்டு வேலையாவது செய்யட்டும் என்று தென்றலுக்கு வீட்டு வேலையை தூக்கிக் கொடுத்தார்.

அறையில் அடைந்து கிடப்பது பைத்தியம் பிடிப்பது போல இருக்க முதலில் தனக்கு செய்ய கிடைத்த வீட்டு வேலையை சற்று திருப்தியுடனே செய்தாள் தென்றல்..

அதுவே ஒரு மாதம் வரை நீடிக்கும் போது தான் தான் ஒரு சம்பளம் இல்லாத வேலைக்காரி என்பது அவளுக்கு புரிந்தது.. ஒரு மாதமும் கல்லூரிக்கு செல்ல முடியாமல் சசியிடமும் இதைப் பற்றி வாயைத் திறக்காமல் இருந்தாள் தென்றல்..

சசி தென்றல் உறவை பொருத்தவரை தாமரை இலை நீராக தான் இருந்தது. தாம்பத்தியம் பற்றி தென்றல் கனவிலும் நினைக்கவில்லை. சசிக்கு அந்த எண்ணம் ஓரளவு மனதில் இருந்தாலுமே தென்றலை பொறுத்தவரை இரவு அவள் தரையில் படுத்து விடுவாள்.

சசியின் கரம் அவளை தீண்டினால் உடம்பு இரும்பாக மாறிவிடும். அவள் மனதில் பட்ட காயங்களும் அவமானங்களும் போராடி வாழ்க்கையில் வெற்றி பெற்ற பிறகு இம்மாதிரி விஷயத்தில் மனம் லாய்க்கும் என்று எண்ணியது. ஆனால் அழகான மனைவியை பக்கத்தில் வைத்துக் கொண்டு  தீண்ட முடியாமல் தவித்தான் சசி.

அன்று சசியிடம் படிப்பை பற்றி பேசியாக வேண்டும் என்று தென்றல் ஒரு முடிவோடு காத்திருக்க, இறுகிய முகத்தோடு வீட்டிற்கு வந்தான் சசி..

” என்ன ஆச்சு.. ” தென்றல் அவனை இயல்பாக கேட்க

” எனக்கு ஒரு படம் கிடைக்கிற மாதிரி இருந்துச்சு. அட்வான்ஸ் கொடுக்கிற அளவுக்கு போய்ட்டாங்க. அந்த நேரம் பார்த்து தான் நீ சரியா போன் பண்ண. நீயா படமானு வரும்போது நான் உன்னை தான் தேர்ந்தெடுத்தேன். உடனே போகணும்னு சொல்லும் போது போயிட்டு வான்னு தான் சொன்னான்..

நானும் அதுக்கப்புறம்  நாய் மாதிரி தினமும் அவனை ஃபாலோ பண்ணிட்டு தான் இருக்கேன். என்ன அவாய்ட் பண்ண ஆரம்பிச்சு  இன்னைக்கு மொத்தமா முடிச்சு விட்டுட்டான்.. வேற ஒருத்தன் சைன் பண்ணிட்டான்..” தென்றலுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

படிப்பை பற்றி பேச வந்தவள் வாயை இறுக்கமாக மூடிக் கொண்டாள். குற்றவுணர்வு அவள் இதயத்தை சுற்றி வளைத்தது. அவள் மட்டும் சசிக்கு அந்த நேரம் அழைக்காமல் இருந்திருந்தால் இந்நேரம் அவனது கனவு நிறைவேறி இருக்கும் அல்லவா? ஒரு விதத்தில் இன்றைய அவனின் இழப்புக்கு காரணம் அவள்தானே?

சமாதானம் செய்யும் பொருட்டு அவன் தோள் மீது கை வைத்தாள் தென்றல். வேகமாக அவள் மடியில் படுத்து இடுப்பை வளைத்து பிடித்துக் கொண்டான் சசி மித்ரன். முதலில் மனதில் இருந்த தவிப்பை போக்கிய அணைப்பு கொஞ்சம் கொஞ்சமாக கணவனின் தேடலை அவளுக்கு உணர்த்த மூளையில் ஷாக் அடித்த உணர்வு.

அவனை நாசுக்காக விலக்க முற்பட்டாள். காட்றாற்று வெள்ளத்தை அணை போட்டு தடுக்க முடியுமா.. கொஞ்சம் கொஞ்சமாக அவளை தன் ஆளுகைக்குள் கொண்டு வந்தான் சசி. தென்றலின் மனதில் இருந்த குற்றவுணர்வு அவனை விலக்கவும் முடியாமல் அணைக்கவும் முடியாமல் தத்தளிக்க வைத்தது.

“சசி.. இப்போ இது வேணாம். கொஞ்ச நாள் போகட்டும்” உணர்ச்சி பிழம்பாய் மாறிருந்த சசிக்கு அவளின் வார்த்தைகள் எதுவும் செவியில் ஏறாதது அவனின் கஷ்ட காலம்..

இறுதியில் தென்றலின் இதழில் முத்தமிட்டு அவளின் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தவன் தங்கள் முதல் குழந்தைக்கு வித்திட்டான்.

தொடரும்