எப்படி எதனால் ஏன் இப்படி எந்த கேள்வி கேட்டாலும் பிடித்து வைத்த பிள்ளையார் போல் பெற்றவர்கள் முன்பு நின்று கொண்டிருந்தாள் தென்றல் மாலையும் கழுத்துமாக. அவளின் பக்கத்தில் சசிமித்ரன் எந்தவித குற்ற உணர்ச்சியும் இல்லாமல் அமைதியாக நின்று கொண்டிருந்தான்..
பரசுராம் பார்த்து வைத்திருந்த நவீனை வேண்டாம் என்று விட்டு மாதவியின் மகன் அகிலனோடு தென்றலின் திருமணத்தை நடத்த திட்டமிட அகிலனை பிடிக்காமல் அதனை பெற்றோரிடம் சொல்லவும் முடியாமல் தன்னுடைய விருப்பத்தை மதிக்காமல் நடக்கும் பெற்றோரை பற்றி கவலை கொள்ளாமல் வாழ்வின் மிகப்பெரிய முடிவை அசாதாரணமாக எடுத்தாள் தென்றல்..
தென்றலிடமிருந்து அழைப்பு வரும்போது ஒரு தயாரிப்பாளரின் முன்பு அமர்ந்திருந்தான் சசி மித்ரன். இதுவரை அவன் வாழ்வில் நடக்காத அதிசயம் நடந்து கொண்டிருந்தது. ஆம் அவனின் கதை தயாரிப்பாளருக்கு மிகவும் பிடித்து விட்டது..
” தம்பி எனக்கு கதை ரொம்ப பிடிச்சு போச்சு.. இன்னிக்கு நாள் ரொம்ப நல்லா இருக்கு. டோக்கன் அமௌன்ட் கொடுத்து ஆரம்பிச்சிடலாம்.” என்ற தயாரிப்பாளர் அவரிடம் இருந்த இரண்டாயிரம் ரூபாயை எடுத்து அட்வான்ஸ் தொகையாக சசிக்கு கொடுக்க நல்ல நேரம் பார்த்துக் கொண்டிருந்தார்.. இன்னும் மூன்று நிமிடத்தில் குளிகை ஆரம்பித்து விடும்.
காதல் வாழ்க்கையில் அவனுக்கு மிகப்பெரிய அடி விழுந்திருந்தாலும் முன்னேற்றப் பாதையில் அவனுக்கான கதவு திறக்கப்பட்டு இருப்பதை அந்த நொடியில் உணர்ந்தான் சசி மித்ரன்.
சரியாக அதே நேரம் தென்றலிடமிருந்து அழைப்பு வந்தது. அவளின் எண்ணை கைப்பேசியில் பார்த்ததும் உடலில் உள்ள ஒவ்வொரு செல்லும் உடனே அழைப்பை எடுத்து அவள் குரலை கேட்க துடியாய் துடித்தது. சூழ்நிலை கருதி தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு அமர்ந்திருந்தான்..
முழு ரிங் சென்றும் அவன் எடுக்காமல் இருக்க அவனுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பி விட்டாள் தென்றல் மிக அவசரம் என்று..
மறுபடியும் சசிக்கு அழைக்க அதற்கு மேல் அவனால் அங்கே அமர்ந்திருக்க முடியவில்லை. குளிகை நேரம் வந்து விட தயாரிப்பாளர் வாய் திறக்கும் முன்
“சா.. சார் ப்ளீஸ் ஒரு இம்போர்ட்டண்ட் கால்..”
தயாரிப்பாளருக்கு அது அபசகுனமாகப்பட்டாலும்
” சரிப்பா போய் பேசிட்டு வா.. ” அடுத்த கனமே வேகமாக அந்த அறையில் இருந்து வெளியேறினான் சசி மித்ரன்.
“ஹெலோ” அந்தப் பக்கம் தென்றலின் அழுகை.. முதலில் சசிக்கு எதுவும் புரியவில்லை.. ஒரு வழியாக சென்று பேசமாதானப்படுத்தி விஷயம் என்னவென்று வினவ, அவள் சொன்னதைக் கேட்டவனுக்கு தலை சுற்றியது.
அகிலன் அவனின் நெருங்கிய நண்பன். இத்தனை நாட்களில் ஒருமுறை கூட அவன் தென்றலை பற்றி சசியிடம் மூச்சு விட்டது. ஏன் கடந்த வாரம் கூட அவனை சந்தித்து பேசிக் கொண்டிருந்தானே!
வேறு பெண்ணை பற்றி அல்லவா அவன் கதையளந்து கொண்டிருந்தான்.. சட்டென்று நண்பனுக்கு துரோகம் செய்வதாய் ஒரு எண்ணம் தோன்ற சசியின் மனதில் குறுகுறுப்புக்கு கூடியது..
ஒரு பக்கம் தென்றலை இழக்க அவன் மனம் தயாராக இல்லை. மறுபுறம் அகிலனை நினைக்கும் போது பயம் நெஞ்சை அடைத்தது. அகிலன் இதனை எப்படி எடுத்துக் கொள்வான்? ஒருவேளை அவன் மனதிலும் தென்றல் இருந்தால்?
தென்றல் சொல்வதை அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தவன் எது எப்படி இருந்தாலும் அவளை இழக்க முடியாது என்பதை நன்கறிந்து கொண்டான்.. தன் வீட்டிலும் நாளை பெண் பார்க்க நாள் குறித்து விட்டார்கள்.. நொடியில் அந்த அபாயகரமான முடிவை எடுத்தால் சசி மித்ரன்.
” தென்றல் நான் சொல்றத நல்லா கேளு. உன்னால உன் அப்பா கிட்ட நம்மள பத்தி பேச முடியுமா”
” அது எப்படி முடியும் சசி? என் அத்தை அழுததுக்கே பார்த்து வச்சிருந்த பையன வேணான்னு சொல்லிட்டு அகிலனுக்கு என்ன கட்டிக் கொடுக்க ரெடியாயிட்டாரு. இப்போ போய் நான் உங்கள விரும்புறேன்னு சொன்னா என்ன நடக்கும்னு யோசிச்சு பாருங்க.. கண்டிப்பா எமோஷனல் பிளாக்மெயில் செஞ்சு உடனே அகிலன வர வச்சு என்ன கல்யாணம் பண்ணி கொடுத்துடுவாரு.. ” தென்றல் சொல்வதின் உண்மை அவனுக்கு புரிய தான் செய்தது.
“சரி.. என் வீட்டிலேயும் அப்படித்தான். ஏதாச்சும் சொல்லப்போனா என் அம்மாவுக்கு நெஞ்சு வலி வந்துருது. நமக்கு இது பிடிக்கலன்னாலும் வேற வழி இல்லாம தான் இந்த முடிவுக்கு வரோம்.. நான் இன்னைக்கே கோயம்புத்தூர் கிளம்புறேன். அங்கே என் ஃப்ரண்ட் இருக்கான். அவன் கிட்ட எல்லாத்தையும் பேசிடுறேன்.
உனக்கு இன்னும் இருபத்தோரு வயசு ஆகல. அதனால கோவில்ல வச்சு கல்யாணம் பண்ணிக்கலாம்.. முதல்ல உன் அப்பா அம்மா முன்னுக்கு போய் நிப்போம்..” அவனோடு ஓடிப் போய் தாலி கட்டாமல் ஒரு வீட்டில் தனியாக தங்குவதற்கு பதில் இது எவ்வளவு மேல் என்றுதான் தென்றலுக்கு தோன்றியது. சரி என்று தலையாட்டினாள்.
மீண்டும் உள்ளே வந்த சசி தயாரிப்பாளரிடம் ” சார் ஸாரி சார்.. ரொம்ப அர்ஜென்டான மேட்டர். நான் உங்களை நெக்ஸ்ட் வீக் மீட் பண்றேன் சார் ப்ளீஸ்.. ” சசியின் பதற்றம் அவன் முகத்தில் தெள்ளத் தெளிவாக தெரிந்தது.
” அதுக்கு என்னப்பா போய்ட்டு வா அப்புறம் பாத்துக்கலாம்.. “..
சசி திட்டப்படியே முதல் காரியமாக கோயம்புத்தூரில் இருந்த அவன் நண்பன் சந்துருவுக்கு அனைத்து அழைத்து விஷயங்களையும் கூறினான்..
” எந்த கோயில்ல போய்டா கல்யாணம் பண்ணனும்னு சொல்ற எல்லா கோயில்லயும் ரிசீட் கேப்பாங்க”
” மச்சான் அதெல்லாம் எனக்கு தெரியாது எப்படியாச்சும் எனக்கு எல்லா அரேஞ்ச் பண்ணி கொடு. உன்ன நம்பி தான் நான் வரேன்.. “
” இல்லடா அந்த பொண்ணு ஸ்ட்ராங்கா இருக்கு இல்ல. அப்புறம் பெத்தவங்கள பார்த்த உடனே திடீர்னு மனசு மாறி போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்தா உன் கேரியரே முடிஞ்சு போயிடும்.. கூடவே என்னையும் தூக்கி உள்ள வச்சு நொக்கி எடுத்துருவானுங்க.” சந்துருவுக்கு பயம் தொண்டையை அடைத்தது. எப்படியோ பேசி அவனை சரி கட்டிய சசி அன்று இரவே கோயம்புத்தூருக்கு கிளம்பினான்..
சந்துரு தன்னுடைய நண்பர்களை வைத்து ரசீது எதுவும் கேட்காத ஒரு சிறிய கோயிலை கண்டுப்பிடித்தான்.
அவர்களின் திட்டப்படி தென்றல் தோழியை பார்த்து வருவதாக சொல்லிவிட்டு சென்றவளை சசி வந்து அழைத்துச் சென்றான்.. மனம் முழுவதும் படபடப்பாக கோவிலுக்குள் நுழைந்தவர்கள் சுவாமி சன்னதியின் முன்பு நின்றார்கள்.
சந்துருவுக்கு தான் பதைப்பாக இருந்தது. ஓடிவரும் காதலர்களுக்கு திருமணம் செய்து வைப்பது அவனுக்கு ஒன்றும் புதிதல்ல. சொல்லப் போனால் அவனின் தொழிலே அதுதான். இதுவரை பத்து கல்யாணங்கள் அம்மாதிரி செய்து வைத்திருப்பான். அந்தப் பத்து திருமணங்களிலும் பெற்றோர்கள் வந்துவிட பெண் தாலியை கழற்றி மணமகன் முகத்தில் வீசிவிட்டு கூடவே போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்து விட்டு தான் செல்வாள்.
நம்பி வரும் நண்பர்களுக்கு நல்லது செய்ய போய் இறுதியில் போலீஸ் அடி வாங்குவது என்னவோ சந்துரு தான்..
“தோ பாருமா.. நீ ஓடி வந்தது எதுவும் பெருசு கிடையாது. இன்னும் கொஞ்ச நேரத்துல உனக்கு தெரிஞ்ச யாராவது பாத்துட்டு உங்க வீட்ல விஷயத்தை சொல்லி உன் பெத்தவங்க இங்க வந்துருவாங்க. அவங்கள பார்த்ததும் மனசு மாதிரி தாலிய கழட்டி உன் மூஞ்சில விட்டு வீசிட்டு போறதுன்னா உன் இஷ்டம். ஆனா போலீஸ் கம்ப்ளைன்ட் மட்டும் கொடுத்துறாத. இதுக்கு மேல அடி வாங்க என் உடம்புல தெம்பு இல்ல. மீறி கொடுக்கறதா இருந்தா அவன் மேல மட்டும் கொடு புரியுதா..”
யாராவது பார்த்துவிட்டு பெற்றோரிடம் சொல்லி விடுவார்கள் என்று சந்துரு சொல்லியதும் தென்றல் பயத்தோடு சசியை பார்த்தாள்.
” டேய் உன் வாய வச்சிட்டு கொஞ்சம் சும்மா இருக்கியா.. அவளே ஏற்கனவே பயந்து போய் கிடக்கா.. நீ வேற ஏன்டா.. “
“ம்க்கும் எல்லா பொண்ணுங்களும் ஆரம்பத்துல இப்படிதான்டா இருக்காளுங்க.. அது என்னவோ தெரியல பெத்தவங்கள பார்த்தா மட்டும் மனசு மாறிறுது.. நான் பொதுவா சொன்னேன்”
” நீ ஒரு ஆணியும் புடுங்க வேணாம் மூடிகிட்டு நில்லு.. எங்கடா இன்னும் ஐயர காணோம்.. ” யாராவது பார்த்து விடுவார்கள் என்கிற பயத்தில் சசியின் கரத்தை இறுக்கமாக பிடித்தபடி நின்று கொண்டிருந்தாள் தென்றல். அவளின் நடுக்கத்தை அவனால் உணர முடிந்தது.
” நீ என்ன ஊரை கூட்டியா கல்யாணம் பண்ற.. எல்லாம் ரெடியா நிக்க.. பூசாரி வரவே மாட்டேன்னு சொன்னாரு. நான்தான் அவரு காலுல கையில விழுந்து பையன் ஒரு அனாதை. அவனுக்கு என்ன விட்டா யாரும் கிடையாது. தாலி எடுத்துக் கொடுக்கிற அளவுக்கு நான் இன்னும் பெரிய மனுஷனாகல. தயவு செஞ்சு பெரிய மனசு பண்ணி வந்து, ரெண்டு வாயில வந்த மந்திரத்தை சொல்லி தாலி எடுத்து குடுங்க. நாள பின்ன நாங்க மாட்டினானோ எக்காரணம் கொண்டும் உங்கள பத்தி மூச்சு விடமாட்டேன்னு சூடம் அடிச்சு சத்தியம் பண்ணிருக்கேன்.”
சந்துரு சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஐயர் வந்து விட்டார்.. சசியிடம் தாலி வாங்கும் அளவிற்கு பணம் இல்லை. எனவே சந்துருவின் யோசனைப்படி மஞ்சள் கிழங்கை மஞ்சள் கயிற்றில் கட்டி கொஞ்சம் பூ வெற்றிலை பாக்கு வைத்து ஐயரிடம் கொடுத்தான். அவரும் இரண்டு மந்திரத்தை சொல்லி அம்மன் பாதத்தில் தாலியை வைத்து எடுத்து வந்து சசிமித்ரன் கரத்தில் கொடுத்தார்.
கண்கள் முழுதும் கலங்கி தான் எடுத்திருக்கும் முடிவு சரியா இல்லையா என்கிற பயத்திலும் குழப்பத்திலும் நின்று கொண்டிருந்தாள் தென்றல். பெற்றவர்களும் உடன் பிறந்தவளின் முகமும் அவள் நினைவில் வந்து போக இந்த நிலைக்கு வருவதற்கு பதில் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்கிற எண்ணமே அவளுக்குள் மேலோங்கி நின்றது..
மிஞ்சி போனால் ஒரு மாதம் அழுவார்கள். பிறகு அவளை மறந்து விட்டு வேலையை பார்க்க ஆரம்பித்து இருப்பார்கள். இப்பொழுது வாழ்நாள் முழுவதும் அழிக்க முடியாத அவமானத்தை அல்லவா பெற்றோருக்கு பரிசாக கொடுக்கப் போகிறாள்..
தாலியை தென்றலின் முகத்தின் அருகே விரித்து பிடித்த சசி அவளின் கண்களை அசையாமல் பார்த்தான். அவள் கண்களைப் பார்த்தபடியே தாலியை தென்றல் கழுத்தில் கட்ட அதுவரை தேங்கிருந்த கண்ணீர் அவளின் கன்னங்களில் விழுந்து உருண்டோடியது.
அனைத்தும் நல்லபடியாக முடிய மாலையும் கழுத்துமாக சசியின் கரத்தை பிடித்துக் கொண்டு தன் வீட்டிற்கு சென்றாள் தென்றல். சந்துருவுக்கு நண்பனை நட்டாற்றில் விட்டுச் செல்ல மனமில்லை. எனவே அவனும் அவர்களோடு சென்றான்.
அன்று பரசுராம் வேலைக்கு செல்லவில்லை.. நவீனை வேண்டாம் என்று நேற்று அவன் வீட்டில் சொன்னவர் வாசுகியின் முகத்தை ஏறிட்டு பார்த்து பேச முடியாமல் தடுமாறிப் போனார். எதை நினைத்து வாசுகி,தென்றல் பிறந்ததிலிருந்து பயந்து கொண்டு இருந்தாரோ கடைசியாக அது நடந்தே விட அதற்கு முழு காரணமாக இருந்த கணவரை கண்ணால் காணவே வெறுத்தார்.
மனைவியிடம் பேச முயன்று தோல்வியை தழுவினார் பரசுராம். அன்றைய நாள் அவர்கள் குடும்ப ஜோதிடரை வீட்டிற்கு அழைத்து நிச்சயத்திற்கு நான் குறிக்க வேண்டும் என்பதால் வானதியும் வீட்டில் இருந்தாள்..
பொதுவாக தென்றலை தனியாக எங்கேயும் வெளியே அனுப்ப மாட்டார் வாசுகி. நேற்றைய சம்பவம் எந்த அளவிற்கு தென்றல் மனதை பாதித்திருக்கும் என்பதை அவரால் உணர முடிந்தது. நவீனை அவர்கள் தான் வீட்டில் பார்த்தார்கள். ஒரு மறுப்பும் சொல்லாமல் தலையாட்டினாள் தென்றல். நவீனிடம் மறுப்பு சொல்வதற்கும் காரணங்கள் கிடையாது. ஆனால் அகிலன்? ஒரு விதத்தில் பார்த்தால் அகிலனும் நல்லவனே. இருந்தாலும் மாதவி, அவரிடம் தான் பட்ட சித்திரவதைகளை இன்னும் மறந்து விடவில்லை வாசுகி.
குண்டு சட்டியில் குதிரை ஓட்டுவதை போல சுற்றி சுற்றி இந்த குடும்ப சங்கிலியில் மாட்டிக் கொள்வதை அவர் வெறுத்தார்.. அதனால் தான் தோழியை சென்று பார்ப்பதாக தென்றல் வந்து கூறியதும் அவளின் மனமாற்றத்திற்காக வெளியே அனுப்பி வைத்தார்..
அந்த மகள் மாலையும் கழுத்துமாக முன் பின் தெரியாதவனோடு வந்து வாசலில் நிற்க வாசுகிக்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லை. பரசுராம் மகளை பார்த்தது பார்த்தபடி நின்றார். மாதவிக்கு மட்டுமே சசியை அடையாளம் தெரிந்தது..
வானதிக்கு தன் பெற்றோரை நினைத்து பயமாகவும் சகோதரியை நினைத்து கவலையாகவும் இருந்தது.
“அடேய் படுபாவி கடைசில உண்ட வீட்டுக்கே ரெண்டகம் பண்ணிட்டியே நீ நல்லா இருப்பியா.. எத்தனை தடவை என் வீட்டுக்கு வந்து தின்னுருப்ப.. இந்த கையால ஆக்கி கொட்டிருப்பேன்.. இவ யாருன்னு உனக்கு தெரியாது.. தெரிஞ்சு தானே கூட பழகுன சிநேகிதன் குடும்பத்திலேயே கை வெச்சிருக்க.. நீ எல்லாம் நல்லாவே இருக்க மாட்டடா.. உன்ன போய் ஃப்ரண்ட் ஃப்ரெண்ட்டுனு தூக்கி தலையில வச்சுக்கிட்டு சுத்திட்டு இருக்கானே என் அறிவு கெட்ட பையன் அவன செருப்பால அடிச்சா எல்லாம் சரியா இருந்திருக்கும்..
நாயை குளிப்பாட்டி நடு வீட்டுல வச்சாலும் அதோட புத்தியை காட்டுற மாதிரி நடு வீடு வர உன்ன வர விட்டதுக்கு அவன் வாழ்க்கையிலேயே குண்டு வெச்சிட்ட..” வாய்க்கு வந்தபடி மாதவி சசியை திட்டினார்..
அவன் அமைதியாக நின்று கொண்டிருந்தான். அகிலனை நினைத்து அவனுக்குமே உள்ளுக்குள் குறுகுறுப்பு இருந்து கொண்டு தான் இருந்தது. தென்றலின் நிலை சொல்லில் வடிக்க முடியாது.
பெற்றவர்கள் ஏதாவது பேசினால் கூட அடித்து அவளை வெளியே துரத்தினால் கூட அவளின் மனம் ஆறிருக்கும். ஒரு வார்த்தை கூட பேசாமல் மௌனத்தினால் அவளை கொஞ்சம் கொஞ்சமாக கொன்று கொண்டிருந்தார்கள்..
“அப்பா” மௌனத்தின் கணம் தாங்க முடியாமல் இறுதியாக தென்றலே வாய் திறக்க, அதுவரை அமைதியாக நின்று கொண்டிருந்த பரசுராம் கைநீட்டி மகளைத் தடுத்தார்.
“இவன் யாரு” தென்றல் சொல்வதற்கு முன் முந்தி கொண்ட மாதவி சசியை பற்றி அனைத்தையும் ஒன்று விடாமல் எடுத்து விட்டார். குறிப்பாக அவன் வேலை வெட்டி எதற்கும் செல்லாமல் படம் பண்ணுகிறேன் பேர்வழி என்று ஊரை சுற்றிக்கொண்டு இருப்பதாக குற்றம் சாட்டினார்.
அனைத்தையும் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த பரசுராம் தென்றலை பார்க்க அவள் உண்மை என்று தலையாட்டினாள்.
மாதவியின் அபாண்டமான குற்றச்சாட்டை சசி ஏற்க மறுத்தான்.
” இங்க பாருங்க.. என் மேல தப்பிருக்கு.அதனால தான் நீங்க பேசுறதுக்கு வாய மூடிட்டு இருக்கேன். பொண்ண பெத்தவங்க என்ன வேணாலும் செய்யட்டும் அடிக்கட்டும் மிதிக்கட்டும். நீங்க அளவுக்கு மீறி பேசிட்டிங்க. அகிலனோட அம்மானு நீங்க பேசுறத நான் மன்னிச்சு விடுறேன். இதுக்கும் மேல ஒரு வார்த்தை பேசினீங்க உங்களுக்கு மரியாதை கிடையாது.” சசி மாதவியை கைநீட்டி எச்சரித்தான்.
” என்னடா பண்ணுவ நாயே.. எவ்வளவு தைரியமிருந்தா ஒன்னும் தெரியாத சின்ன பொண்ணு மனச கலைச்சு இந்த காரியத்தை பண்ணிருப்ப.. அண்ணா நம்ம பொண்ண இழுத்துட்டு உடனே வா ஸ்டேஷனுக்கு போகலாம்.. அந்தத் தாலி புடுங்கி அவன் மூஞ்சில விட்டு வீசு. இன்னிக்கு என் பையன வர சொல்லி உன் பொண்ணு கழுத்துல தாலி கட்ட சொல்றேன்.. இவன உள்ள தள்ளி முட்டிக்கு முட்டி தட்டுனா தான் என் மனசு ஆறும்..” மாதவி கூற்றை கேட்டதும் சந்துருவுக்கு சர்வமும் கலங்கியது. போலீஸ் அடி வாங்குவதற்காக தன் உடலை அந்த நொடியில் இருந்து தயார்படுத்திக் கொண்டான்.
” சும்மா போலீஸ் போலீஸ் போலீஸ்னு ஆடாதீங்க. எங்களுக்கும் சட்டம் தெரியும். நான் ஒன்னும் உங்க வீட்டு பொண்ண கைய புடிச்சு இழுத்துட்டு போகல. அவ முழு விருப்பத்தோடு தான் இந்த கல்யாணம் நடந்திருக்கு. ஏங்க நீங்க பெத்த பொண்ணு தான் நான் இல்லைன்னு சொல்லல. அவ மனசுல என்ன இருக்குன்னு ஒரு வார்த்தை கேட்டீங்களா. இல்ல அவ சொல்லியிருந்தாலும் அதை ஏத்துக்கிட்டு நல்லபடியா எங்க கல்யாணத்தை நடத்தி வைக்கிற பக்குவம் உங்களுக்கு இருக்கா..
கண்டிப்பா எமோஷனல் பிளாக் மெயில் பண்ணி முன்னாடி பார்த்து வச்சிருந்த நவீன வேணான்னு சொல்லிட்டு அகிலனுக்கு எப்படி அவளை கல்யாணம் பண்ணி கொடுக்க சம்மதிச்சிங்களோ, அதைத்தான் இப்பயும் பண்ணிருப்பீங்க. உங்கள மாதிரி சுயநலமான பெத்தவங்களுக்காக எதுக்கு எங்க வாழ்க்கையை நாங்க வீணாக்கனும். உங்க பொண்ண நான் விரும்புறேன். கடைசி வரைக்கும் அவள நல்லபடியா வச்சு காப்பாத்துவேன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. உங்களுக்கும் அந்த நம்பிக்கை இருந்தா எங்களை ஏத்துக்கோங்க.
இல்லனா அந்த நம்பிக்கை வரவரைக்கும் நீங்க என்ன தண்டனை கொடுத்தாலும் நாங்க ஏத்துக்கிறோம். ஒண்ணா இருந்து ஏத்துக்குறோம்..” பரசுராமை பார்த்த சசி மித்ரன் சற்றும் பிசிறாத குரலில் தன்னிலை விளக்கம் கொடுத்தான்.