துர்க்கை அம்மனின் கோவிலில் ராகு காலத்தில் விளக்கு போட்ட தென்றல் ஒரு ஓரத்தில் அமர்ந்தாள்.. அப்பொழுது அவள் பக்கத்தில் ஒரு நடுத்தர வயது பெண்மணி வந்து அமர்ந்து கையோடு அவர் கொண்டு வந்திருந்த ஒரு மூட்டை எலுமிச்சை பழத்தை அதற்கான ஊசியில் நூல் கோர்த்து கோர்க்க ஆரம்பித்தார்..
விரதத்தில் இருந்திருப்பார் போல அவர் முகம் மிகவும் சோர்ந்து காணப்பட்டது.. பத்து பழங்களுக்கு மேல் அவரால் கோர்க்க முடியாமல் கரங்கள் நடுங்கியது.. வியர்வை துளிகள் அதிகமாய் முகத்தில் துளிர்க்க அவரின் முகம் வெளிரி காணப்பட்டது..
அந்தப் பெண்மணி தன்னுடைய அருகில் அமர்ந்ததிலிருந்து அவரைப் பட்டும் படாமல் கவனித்துக் கொண்டிருந்த தென்றல் அவரது முகமாற்றத்தை கண்டு
” ஆன்ட்டி என்ன பண்ணுது.. ” அக்கறையோடு அவரிடம் விசாரித்தாள்.
” படபடன்னு வருதும்மா..” முகத்தில் வழிந்த வியர்வையை துடைத்தபடி பெண்மணி கூறினார்.
” உங்களுக்கு சுகர் இருக்கா.. காலையில இருந்து நீங்க சாப்பிடலையா “..
பெண்மணி ஆம் என்ற தலையாட்ட தென்றல் உடனடியாக எழுந்து கோவிலின் வெளியே சென்றாள். கோவிலுக்கு முன்பிருந்த சிறிய பெட்டி கடையில் சோடா வாங்கி வந்தவள் வேகமாக அந்தப் பெண்மணியிடம் நீட்டி
” குடிங்க ஆன்ட்டி” தனக்கு மிகவும் அவசியமான ஒன்று என்பதால் அந்த பெண்மணியும் நன்றியோடு வாங்கி குடிக்க ஆரம்பித்தார். குடித்து முடிக்கையில் அவர் மிகவும் ஆசுவாசமாக உணர்ந்தார்.
” ரொம்ப நன்றிம்மா..” குடித்த சோடாவுக்கு அவர் பணம் எடுத்து நீட்ட
” பரவால்ல ஆன்ட்டி.. ” அந்த பணத்தை வாங்க மறுத்தாள் தென்றல்.. என்னதான் முகத்தில் ஒரு தெளிவு வந்த போதும் எலுமிச்சை மாலையை கோர்க்க முடியாமல் அவரது கைகள் நடுங்கியது.. சாப்பிட்டு மாத்திரை போட்டால் ஒழிய இந்த கை நடுக்கம் நிற்க போவதில்லை.
இருந்தும் விடாமல் மாலை கோர்க்க முயற்சித்து அவர் தோல்வியை தழுவ
” ஆன்ட்டி உங்களுக்கு பிரச்சனை இல்லைனா நான் கோர்த்து தரேன்..” தானாக உதவ முன் வந்தாள் தென்றல்.
” உனக்கு வேற வேலை இருக்கும்மா.. நான் பாத்துக்கறேன் ” பெண்மணி தயங்கினார்.
” பெருசா வேலை எல்லாம் இல்லை ஆன்ட்டி கொடுங்க.. ” அழகான எலுமிச்சம் மாலையை கோர்த்து கட்டிக் கொடுத்தாள் தென்றல்.
” நீ நல்லா இருப்பம்மா.. என் பையனுக்காக வேண்டி தொடர்ந்து எட்டு வாரம் கோவிலுக்கு வந்து மாலை கட்டி போட்டு வேண்டிட்டு வரேன். இந்த வாரம் மட்டும் என் வேண்டுதல் நிறைவேறிட்டா கண்டிப்பா அந்த அம்மா என் பையனுக்கு நல்ல வழி காட்டிடுவா.. எங்க கடைசி வாரம் சோதனை வந்து வேண்டுதல் செய்ய முடியாம போயிடும்னு பயந்து போயிட்டேன்..ரொம்ப நன்றிம்மா..”
தென்றலுக்கு நன்றி கூறிய பெண்மணி எழ முயற்ச்சிக்க அவர் கால்கள் தடுமாறியது. தென்றல் அவரை கைத்தாங்கலாக பிடித்து சன்னதி அருகே அழைத்துச் சென்றாள். எலுமிச்சை மாலையை பூசாரியிடம் கொடுத்து அதை அம்மனுக்கு சாற்றுவதை அப்பெண்மணி பக்தியோடு பார்க்க எங்கே அவரை விட்டால் விழுந்து விடுவாரோ என்கிற பயத்தில் அவர் பக்கத்தில் நின்று கொண்டிருந்தாள் தென்றல்..
அப்பொழுது தென்றலின் பின்னால் வந்து நின்றான் சசி. தென்றல் அவனை உணரவில்லை. எலுமிச்சை மாலை சாற்றப்பட்டு அம்மனுக்கு தீபம் காட்ட அம்மனின் கரத்திலிருந்து பூ கீழே விழுந்தது.
அந்தப் பெண்மணிக்கு மிகுந்த மகிழ்ச்சி. பூசாரி எலுமிச்சை மற்றும் பூக்கூடை அடங்கிய தட்டை பெண்மணியிடம் கொடுத்து
” உங்க பையனுக்கு கல்யாணம் ஆகணும்னு வேண்டிக்கிட்டு அம்மனுக்கு ஒன்பது வாரம் விளக்கு போட்டு மாலை சாத்திட்டீங்க.. அவளே ஆசிர்வாதம் கொடுத்துட்டா. சீக்கிரமா நல்ல செய்தி சொல்ல போறீங்க.. ” பெண்மணிக்கு சந்தோஷம் தாங்கவில்லை.
குங்குமத்தை எடுத்து நெற்றியில் வைத்துக் கொண்டு திரும்ப அங்கே சசியை கண்டதும் அவரின் முகம் மேலும் மலர்ந்தது.
” டேய் சசி.. சரியான நேரத்துக்கு தான் வந்திருக்க.. ” அப்பொழுது தான் தென்றலும் தனக்கு பின்னால் திரும்பி பார்த்தாள். சசியை கண்டதும் அவள் ஒரு நொடி திகைத்தாள். மறு நொடி சினேகமாக புன்னகைத்தாள்.
“ம்மா பூஜை முடிஞ்சுதா.. எனக்கு முக்கியமான மீட்டிங் இருக்கு. உனக்கு எத்தனை வாட்டி சொல்லிருக்கேன் கோவில் குளம்னா நீ போ. தேவை இல்லாம எதுக்கு என்னையும் இதுல இழுக்கிற.. இந்த மாதிரி விஷயத்துல எல்லாம் எனக்கு நம்பிக்கை கிடையாது. ஒருவாட்டி சொன்னா புரியாதா” தாயிடம் கடுமையாக பேசினாலும் சசியின் கண்கள் அவ்வப்போது தென்றலை மென்மையாக தழுவி சென்றது.
” முடிஞ்சுதுடா இதுதான் ஒன்பதாவது வாரம்.. உனக்கு கல்யாணம் ஆகணும்னு வேண்டிக்கிட்டு தான் இதெல்லாம் பண்றேன்” அந்தப் பெண்மணி வேறு யாரும் அல்ல சசியின் அம்மா விசாலாட்சியே.
“ம்க்கும் நான் இருக்கிற நிலைமைக்கு இப்ப கல்யாணம் ஒன்னு தான் குறைச்சல்” சலித்துக் கொண்டான் சசி.
” அப்படி என்னத்துக்கு சலிச்சுகிட்டு ஒன்ன செய்யணும்? உனக்கு கொழுப்பு இருக்கிறத விட்டுட்டு பறக்கறது பிடிக்க ஆசைப்படுற.. ” விசாலாட்சி முகத்தை திருப்பினார்.
தென்றலின் முன்பு விசாலாட்சியின் இந்த பேச்சு சசிக்கு ரசிக்கவில்லை.. அது அவன் முகத்திலிருந்து தென்றலுக்கு புரிந்தது. அவன் வந்து விட்ட பின் தன்னுடைய உதவி விசாலாட்சிக்கு தேவைப்படாது என்பது அவளுக்கு தெரிய
” சரி மா டைம் ஆகுது நான் கிளம்புறேன்.. ” நாசுக்காக தென்றல் இருவரிடமும் விடைப்பெற்றாள்..
பைக்கில் வரும்போது” காலையில இருந்து விரதம் சுகர் மாத்திரை வேற சாப்பிடல. திடீர்னு கண்ணு இருட்டிகிட்டு வந்துருச்சு. எங்கடா ஒன்பதாவது வாரம் வேண்டுதல் செலுத்த முடியாதுன்னு திக்கு திக்குன்னு இருந்துச்சு. யாரு பெத்த பொண்ணு நல்ல நேரத்துக்கு வந்து உதவி பண்ணுச்சு.. ” விசாலாட்சி அவர் போக்கில் சொல்லிக் கொண்டிருக்க
” சுகர் மாத்திரை சாப்பிடலையா.. உன்னை யாரு இதெல்லாம் பண்ண சொன்னா.. எப்போ கல்யாணம் பண்ணனும் யாரை கல்யாணம் பண்ணனும்னு எனக்கு தெரியும்.. தேவை இல்லாம உடம்பு போட்டு வருத்திகிட்டு பழியை தூக்கி என் மேல போடுறீங்க” சசி கடுமையாக தாயை சாடினான்.
” செருப்பால அடிப்பேன் நாயே.. நீ உருப்படனும்னு தான் நான் கோவில் கோவிலா ஏறி இறங்கிட்டு இருக்கேன். உனக்கு ஒரு கல்யாணத்தை பண்ணி வெச்சா தான் உன் வாழ்க்கையில் அடுத்த படி ஏற முடியும்னு நம்ம குடும்ப ஜோசியர் சொல்லிருக்காரு..”
இந்த ஜாதகம் ஜோசியம் இதில் எல்லாம் சசிக்கு சுத்தமாக நம்பிக்கை கிடையாது.
” நீயும் உன் புருஷனை எப்ப பாரு ஜோசியத்தை கட்டிட்டு அழுங்க. என் வாழ்க்கைய பத்தி எனக்கு தெரியாதா. நீங்க காட்டுற பொண்ண எல்லாம் என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாது. இப்ப கல்யாணம் பண்ணிக்க சொல்லுவீங்க. அப்புறம் கடையில உட்கார சொல்லுவிங்க. அதுக்கப்புறம் சினிமாவை மொத்தமா ஊத்தி மூடிட்டு வர சொல்லுவீங்க. இதுதான உங்க எல்லாரோட மாஸ்டர் பிளான்..” மகன் சொல்வது உண்மையாக இருந்தாலுமே அதனை ஒத்துக் கொள்ள விசாலாட்சிக்கு மனம் வரவில்லை.
” நீ என்ன வேணா நினைச்சுட்டு போ அதை பத்தி எங்களுக்கு கவலை கிடையாது. பெத்ததுக்கு உன்னை வளர்த்து நல்லபடியா படிக்க வச்சாச்சு. நாங்க நல்லா இருக்கும் போதே உனக்கு ஒரு கல்யாணத்தை பண்ணி குடும்பம் குட்டியோட நீ வாழ்றதை பார்த்தா போதும்.. ” சென்டிமெண்டாக பேசி மகன் வாயை அடைத்தார் விசாலாட்சி.
சிறிது நேரம் அமைதிக்கு பிறகு ” ஆமா யாரு உனக்கு ஹெல்ப் பண்ணா கோயில்ல.. “
” என் பின்னாடி ஒரு பொண்ணு நின்னுட்டு இருந்தால.. கிளம்பும்போது கூட மணியாச்சி போகணும்னு சொன்னாளே.. ” சசிக்கு இதயத்தில் பட்டாம்பூச்சி பறந்தது.
” ரொம்ப நல்ல பொண்ணு.. ஓடிப்போய் சோடா வாங்கிட்டு வந்து அவளே மாலையே கோர்த்து கொடுத்துட்டா.. ” விசாலாட்சி தென்றலுக்கு பாராட்டு பத்திரம் வாசித்துக் கொண்டிருந்தார்.
அதேநேரம் ஹாஸ்டல் வந்து சேர்ந்திருந்த தென்றலுக்கு கோவிலில் தன்னை ஆர்வமாக எதிர் நோக்கிய சசியின் கண்களே மீண்டும் மீண்டும் நினைவுக்கு வந்து போனது.. அவனை மறக்க நினைக்கும் போதெல்லாம் எப்படியாவது தன் முன் கொண்டு வந்து நிற்கும் விதியை யோசித்து குழம்பி போனாள். சசியை பார்க்கும் போது ஏதோ ஒரு விதத்தில் அவளது இதயம் தள்ளாடுவதை அவளால் உணர முடிந்திருந்தது.
அதேசமயம் அந்த உணர்வு அவளுக்கு நல்லதாகவும் படவில்லை. மீண்டும் ஒருமுறை சசியை சந்திக்காமல் இருப்பதே இருவருக்கும் நல்லது என்கிற முடிவுக்கு தான் இறுதியாக அவளால் வர முடிந்தது.. மேலும் இரு வாரங்கள் கழிய சசியின் நினைவு அவளுக்கு வராமல் போனது. படிப்பில் முழு கவனம் செலுத்தினாள்..
மூன்றாவது வாரம் கோயம்புத்தூருக்கு செல்ல பேருந்தில் ஏறி அமர்ந்தாள். சிங்கிள் ஸ்லிப்பர் போட்டிருந்தாள். அவளுக்கு முன் ஸ்லிப்பரில் சசி அமர்ந்திருந்தான். பேருந்தில் ஏறி சில வினாடிகளில் அவனைக் கண்டதும் தென்றலின் இதயம் படுவேகமாக துடித்தது.
எதிர்பாராத சந்திப்பில் சசியின் முகம் மலர்ந்தது.
“ஹெல்லோ.. எங்கங்க கோயம்புத்தூரா”
“ம்ம்ம்”.. தன்னுடைய இடத்தில் பேக்கை வைத்தாள் தென்றல்.
“ம்ம்ம்” தென்றல் வெளியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள். தன்னோடு பேசுவதை அவள் நிராகரிக்கிறாள் என்பதை புரிந்து கொண்ட சசிக்கு அவமானமாக இருக்க அவனும் பேச்சை நிறுத்திக் கொண்டான். பேருந்து நகர இருவருமே உறங்க ஆரம்பித்தார்கள்.
அடுத்த இரண்டு மணி நேரத்தில் பேருந்து பயணிகளின் இடைவேளைக்காக நிறுத்தப்பட்டது. சசி பேருந்தில் இருந்து கீழே இறங்கினான். தென்றல் இறங்கவில்லை. மீண்டும் பேருந்து அரை மணி நேரத்தில் நகரத் தொடங்கியது.
சரியாக ஒரு மணி நேரம் கடந்திருக்கும் நிலையில் தென்றலுக்கு அடி வயிற்றை முட்டியது.
அவளும் எவ்வளவோ கட்டுப்படுத்தி பார்த்தாள். பேருந்து ஓட்டுனர் குலுக்கி குலுக்கி பேருந்தை செலுத்தியது வேறு மேலும் அவளது வேதனையை அதிகப்படுத்தியது. சற்று நேரத்திற்கு முன்பு தான் பேருந்தை நிறுத்தினார்கள். மீண்டும் எங்கே நிறுத்துவார்கள் என்றே தெரியவில்லை.
ஒரு கட்டத்திற்கு மேல் படுக்க முடியாமல் எழுந்து அமர்ந்து விட்டாள். வயிற்றை இறுக்கமாக பிடித்துக் கொண்டவள் மூச்சை இழுத்து பிடித்துமே தன்னை கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் மிகவும் போராடினாள்.
போக்குவரத்தை பயன்படுத்தும் போது பெண்களுக்கே உரித்தான வேதனை இது.. அவர்கள் பேருந்து நிறுத்தும் இடத்தில் எல்லாம் பெண்களால் பயன்படுத்த முடியாது. சிலர் பல்லை கடித்துக் கொண்டு சென்று விடுவார்கள். சிலரும் மிகவும் தூய்மை பார்ப்பவர்கள்.
இதனால் பயணத்தில் அவர்கள் படும் பாடு சொல்லில் அடங்காது.
அது மாதவிடாய் சமயம் என்பதால் இரு மாதிரியான வேதனையில் ஆட்கொள்ளப்பட்டாள் தென்றல்.. பேருந்து குலுக்களில் அவளின் அடிவயிறு ஒரு பக்கம் வலியை கிளப்ப சிறுநீர் கழித்தே ஆக வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டாள்..
பேசாமல் சென்று ஓட்டுனாரிடம் பேருந்து நிறுத்தச் சொல்லலாம் என்கிற முடிவில் அவள் இருக்கையில் இருந்து இறங்கி ஒரு எட்டு எடுத்து வைத்தாள்.. படக்கென்று ஸ்கிரீனை விலக்கிய சசி
” என்ன ஆச்சு”.. உதட்டை கடித்த தென்றல்
” ரெஸ்ரூம் போகணும்” அவள் நின்ற நிலைமையை பார்த்த சசிக்கு அவளின் அவசரம் புரிந்தது. விரைவாக அவனை பேருந்து ஓட்டுநரிடம் சென்று விஷயத்தை கூறி ஒரு ஓரமாக நிறுத்தி சொல்லினான்.
” உங்க ஒருத்தருக்கு நிப்பாட்டுனா இன்னும் ஒரு பத்து பேர் இறங்குவாங்க. அதனால எனக்கு இன்னும் ஒரு அரை மணி நேரம் லேட் ஆகும். அடுத்த ஒரு ஒன் அவர்ல இன்னொரு ஸ்டாப் வரும். டீ காபிக்கு நிப்பாட்டுவோம், அப்ப போய்க்கோங்க.. “
ஓட்டுனரின் மெத்தனமான பேச்சில் எரிச்சலடைந்த சசி கண்ணாடி வழியாக முன்னே பார்க்கிறான். ஐம்பது அடி தூரத்தில் ஒரு டோல்கேட் தெரிந்தது. டிரைவரை கடுங் கோபத்தோடு பார்த்தவன்
” அந்த டோல் கேட்ல வண்டிய நிப்பாட்டுறியா இல்ல நான் நிப்பாட்ட வைக்கவா.. நாங்க ரெண்டு பேரும் இறங்கிக்குவோம் நாங்க இறங்குனு அடுத்த செகண்ட் நீ பஸ் எடுத்துட்டு போயிட்டே இரு.” சசியின் தோற்றத்தை கண்ட டிரைவர் உள்ளே பயம் தோன்றினாலும் அதனை வெளியே காட்டிக் கொள்ளாதவாறு பேருந்து அந்த டோல்கேட் முன்பு நிறுத்தினார்.
வேகமாக உள்ளே சென்ற சசி அங்கே தன் இருக்கையில் அவஸ்தையோடு அமர்ந்திருந்த தென்றலிடம் ” இ ங்க ஒரு டோல்கேட் இருக்கு, இந்த ரெஸ்ட் ரூம் நீங்க யூஸ் பண்ணிக்கோங்க.. ” அவள் வேகமாக பஸ்ஸில் இருந்து கீழ் இறங்க அவளின் பேக்கையும் தன்னுடையதையும் இவன் எடுத்துக்கொண்டு இவனும் அவளை பின்தொடர்ந்து இறங்கினான். அவர்களை இறக்கி விட்ட கையோடு பேருந்து கிளம்பியது.
தன்னுடைய அவசரத் தேவையை முடித்துவிட்டு நிம்மதியோடு வெளியே தென்றல் அங்கே சசி மட்டும் நிற்பதை கண்டும் பேருந்து இல்லாததை பார்த்தும் குழம்பி போனாள்..
” ஹெலோ நாம வந்து பஸ் எங்க..” அவளின் பேக்கை தூக்கி தென்றலின் முன்பு வைத்தவன்
” அவன் போயிட்டான்” அசால்டாக கூறினான்.
அவனின் விட்டேறியான பேச்சை கேட்டதும் தென்றலுக்கு ஆத்திரத்தில் உடல் நடுங்கியது.
” போயிட்டானா.. என்ன சொல்றீங்க எப்படி பேசஞ்சர ஏத்தாம அவன் போக முடியும்..”
மிகவும் நிதானமான குரலில்
” ஆமா ஒருத்தனுக்காக நிக்க மாட்டானுங்க. இன்னும் ஒரு மணி நேரம் ஆகும்னு சொன்னான். அதுவரைக்கும் நீங்க எப்படி? அதான் போடா வெண்ணென்னு நான் பஸ்ஸ மாத்திட்டேன்.. ” நள்ளிரவு இரண்டு மணி.
முன்பின் தெரியாத ஒருவனோடு இப்படி தனித்து நிற்கையில் தென்றலுக்கு ஆத்திரம் பொத்துக் கொண்டு கிளம்பியது. அவளிடம் ஒரு வார்த்தை சொல்லிருந்தால் இன்னும் ஒரு மணி நேரம் பல்லை கடித்துக் கொண்டு இருந்திருப்பாளே.. தன்னை ஒரு வார்த்தை கேட்காமல் தன் நிலைமை புரியாமல் இப்படி நிற்க வைத்தவனை பார்க்கையில் கடித்த பற்களின் இடையே வார்த்தைகளை சிதற விட்டாள்.
” கொஞ்சம் கூட உங்களுக்கு அறிவே இல்லையா.. என்னோட விஷயத்துல டிசிஷன் எடுக்க நீங்க யாரு.. ஒரு வார்த்தை இப்படின்னு சொல்லிருந்தீங்கன்னா நான் அட்ஜஸ்ட் பண்ணிட்டு இருந்துருப்பேன்ல.. இப்ப நடு ரோட்டுல என்ன நிக்க வச்சுருக்கீங்க.. இப்ப எப்படி நான் ஊருக்கு போறது..” கீச்சு குரலில் அவள் கத்த சசி இழுத்து முடித்த சிகரெட் துண்டினை தூக்கி வீசினான்.
” இப்ப எதுக்குங்க கத்துறீங்க.. நான் என்ன எனக்காகவா பஸ்ஸ நிறுத்துனேன்.. உங்கள பாத்தாலே தெரிஞ்சுது ரொம்ப அர்ஜென்ட்டுனு.. என்னமோ நீங்க மட்டும் தான் நடுரோட்டில நிற்கிற மாதிரி பேசுறீங்க. உங்களுக்காக நான் காசு போட்டு டிக்கெட் எடுத்த பஸ்ல கூட போகாம நானும் உங்க கூட ரோட்ல தான் நிக்கிறேன்.. அத பத்தி கொஞ்சம் கூட உங்களுக்கு அக்கறை இல்ல. உங்களுக்கு போய் ஹெல்ப் பண்ணேன் பாருங்க என்ன சொல்லணும்.. இப்ப என்ன உங்களுக்கு ஊருக்கு போகணும் அவ்வளவு தானே. சென்னை டு கோயம்புத்தூர் பிசியான ரூட் இது. அரை மணி நேரத்துக்கு ஒரு வாட்டி கவர்மெண்ட் பஸ் வரும் ஏறி ஊரு போய் சேர்ந்திடலாம்.. கொஞ்ச நேரம் வாய மூடிக்கிட்டு அங்க போய் உட்காரிங்களா. “
சசியின் பேச்சை கேட்பதை தவிர அவளுக்கும் வேறு வழி இல்லை. கோபத்தில் பல்லை கடித்துக் கொண்டு டீக்கடை முன்பு போடப்பட்டிருந்த ஒரு இருக்கையில் அமர்ந்தாள். பேருந்து பயணத்தின் இடைவெளியில் இறங்கி டீ குடித்துக் கொண்டிருந்த ஆண்களின் கண்கள் தென்றலை ஈ போல் முய்த்தன. அசோகர்யமாக உணர்ந்தாள் தென்றல்..
டோக்கன் வாங்கி வந்து இருவருக்குமான டீயை பெற்றுக் கொண்ட சசி தென்றல் பக்கத்தில் அமர்ந்தான். ஒரு டீயை அவளிடம் நீட்டினான். தென்றல் அவனைப் பார்த்து முறைத்தாள்.
” குடிங்க பஸ் வர இன்னும் கொஞ்சம் டைம் எடுக்கும்.. ” சூடாக எதையாவது குடித்தால் தேவலாம் போலிருக்க தென்றல் அதற்கு மேல் வாதிடாமல் டீயை வாங்கிக் கொண்டாள். அவ்வளவு நேரம் அவளை மொய்த்த கண்கள் சசி அவள் அருகே அமர்ந்ததும் வேறு புறம் திரும்பிக் கொண்டன.
அரை மணி நேரத்திற்கும் சற்று மேலாக கோயம்புத்தூர் செல்ல வேண்டிய அரசு பேருந்து வந்து சேர்ந்தது..
” இந்த பஸ் தான் வாங்க.. ” இருவருக்கும் சேர்த்து சசியே டிக்கெட் வாங்கினான்.. தென்றலை ஜன்னல் பக்கம் அமரக்கூறியவன் அவள் பக்கத்தில் வெளிப்புறமாக அமர்ந்து கொண்டான்.. சிறிது நேரத்திற்கெல்லாம் அப்படியே சீட்டின் பின்புறம் சாய்ந்து கொண்டவன் ஆழ்ந்த உறக்கத்திற்குள் சென்றான். அவ்வளவு நேரம் வெளிப்புறத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவள் மெல்ல அவன் புறம் திரும்பினாள்.
அதுவரை அவள் சந்தித்திருந்த சசியிலிருந்து இவன் மாறுபட்டவனாக தெரிந்தான்.