Advertisement

இரு குடும்பமும் பேசிக்கொள்ளும் முன் கோவில் பூசைக்கு நேரமானதால் அதில் கவனம் செலுத்தினர். அபிஷேகம் நடந்து சம்பிரதாயங்கள் முடியவும் அர்ச்சனைக்கு என்று கல்பனா அர்ச்சனை கூடையை நீட்டி மூவரின் பெயர் நட்சத்திரம் சொல்லவும் அருண் குடும்பம் மீதுதான் மற்றவர்கள் பார்வை முழுவதும். அதிலும் அஞ்சன் அருணை உற்றுப்பார்த்தான். மற்றவர்களை விட அவன்தான் அருணுடனே திரிந்தவன். சட்டென அவனிடம் இருக்கும் மாற்றங்களை கண்டுகொண்டான்.

அருண் தூக்கி வைத்திருக்கும் அவன் மகனின் வயது என்னவாக இருக்கும் என்று கணக்குகள் ஓட, சட்டென மனைவியை திரும்பிப் பார்த்தான் அவளும் அருணை தான் பார்த்தபடி இருந்தாள்.  

குனிந்து, “அங்க என்ன பார்வை?” என்று கீர்த்தனா காதை கடிக்க, அவள் முறைத்தாள்.

தோள் குலுக்கிவிட்டு மீண்டும் அருணிடம் பார்வையை செலுத்த, அர்ச்சனை வாங்கிக்கொண்டு மனைவியுடன் நகர்ந்துவிட்டான் அவன்.

“அதுல யார் கீர்த்தனா?” கொஞ்சம் தள்ளி வந்ததும் அருணை நிறுத்தி கேட்க,

“இப்போ அது ரொம்ப முக்கியமா?” என்றுதான் கேட்டான் அருண்.

“முக்கியம் தான். சொல்லுங்க.” என்று கல்பனா நச்சரிக்க,

“நான் அவளை பாக்கலடி.”

“சரி இப்போ பாத்து சொல்லுங்க.” என்று தொடர்ந்து நச்சரிக்க,

“அந்த பச்சை புடவை. அவ பக்கத்துல இருக்கிறதுதான் அஞ்சன், என் பிரெண்ட்.” என்று அறிமுகப்படுத்தவும்,

“பாக்கல பாக்கலைனு அவங்க கட்டி இருக்கிற புடவை கலர் எல்லாம் கரெக்ட்டா சொல்றீங்க.” கல்பனா கேலி போல் பேச கடுப்பானவன் அவளை இழுத்துக்கொண்டு வெளியேற முயல,

“ஏங்க, நில்லுங்க. உக்காந்துட்டு போகலாம்.” என்று அழுத்தமாய் கால் ஊன்றி நின்றாள் கல்பனா.

“பிடிவாதம் புடிக்காத கல்பனா. வரணும்னு ஆசைப்பட்ட, கூட்டிட்டு வந்துட்டேன். கிளம்பலாம்.” என்று அழைத்துப்பார்த்தான் அவன்.

ம்கூம் இறுதியில் அவள் இழுப்புக்குதான் செல்ல வேண்டி இருந்தது. அங்கேயே ஓரமாய் அமர்ந்தார்கள். ஆர்வமாய் அனைத்தையும் பார்த்த அமுதன் எழுந்து ஓடப்பார்க்க அவனை பிடித்து மடியில் அமர்ந்திக்கொண்டான் அருண்.

அவனோ அருண் மடியில் மண்டியிட்டு அமர்ந்து அவன் கழுத்தை கட்டிக்கொண்டவன், “ப்பா, ராட்டினம் எல்லாம் இருக்கு. அங்க போலாம் அப்பா.” என்று மழலையில் வேண்ட, புன்னகை அரும்பியது அருண் இதழில்.

அமுதன் நெற்றியில் புரண்ட கேசத்தை ஒதுக்கி விட்டவன், “இப்போ யாரையும் ஏத்த மாட்டாங்கடா. வெயில் விட்டதும் ராத்திரிதான் சுத்தும். நம்ம ஊருக்கு போய் எக்ஷிபிஷன் போகலாம். அங்க இருக்கும் எல்லாம்.”

“ப்பா…” சிணுங்கல் மகனிடம்.

“அப்பா சொன்னா கேக்கணும் அமுதா.” இப்போது கண்டிப்பு கல்பனாவிடமிருந்து வந்தது.

“இதுக்கு மேல இவனுக்கு பொழுது போகாது. கிளம்பலாம் எந்திரி.” என்று அமுதனை இறக்கிவிட்டு எழவும் அஞ்சன் அம்மா அவர்களிடம் வரவும் சரியாக இருந்தது.

“எங்க காணாம போயிட்ட நீ, வூட்டுக்கு வா. ராசாவாட்டம் மாறிட்ட, எங்க இருக்க? இது பொஞ்சாதி புள்ளையா?” என்று அவனை மறுக்கவிடாமல் கேள்விகளை அடுக்க, அருணுக்கு பதில் சொல்வதை தவிர வேறு வழியில்லை. 

“கடை வச்சிருக்கியா, சந்தோசம். இப்போ வூட்டுக்கு தான் போறேன் வா.” என்று அவர் முன்னே நடக்க,

“இல்லை, ஊருக்கு கிளம்பனும். இன்னொரு நாள் வரேன்.” எனும்போதே அஞ்சன் அவர்களை நெருங்கி இருந்தான்.

“அஞ்சு, நீயே உன்ர தோஸ்த்தை வூட்டுக்கு கூட்டிபுட்டு வா. பொஞ்சாதி புள்ளைன்னு குடும்பமாகிட்டீங்க இன்னும் என்ன சின்ன புள்ளை மாதிரி மூஞ்சை திருப்பிட்டு இருக்கீங்க.” போகிற போக்கில் அவர்களுக்கு இடையில் இருக்கும் சச்சரவு பற்றி தெரியாது மகனிடம் சொல்லிவிட்டு சென்றார்.

அஞ்சனோ அருணை அழுத்தமாய் பார்த்து, “எதுக்கு வந்த?”

“அதை உங்ககிட்ட எதுக்குங்க சொல்லணும். இது எங்க குலதெய்வம் நாங்க வருவோம் போவோம் அதெல்லாம் ஏன் கேக்குறீங்க.” என்று அருணுக்கு முன் முந்திக்கொண்டாள் கல்பனா.

அதிர்ந்த அருண் அவள் கையை அழுத்திப் பிடிக்க, அவனை ஏறிட்டவள், “அறியாமைல எடுத்த முடிவால நீங்க நிறைய அனுபவிச்சிட்டீங்க. எல்லாத்தையும் இழந்து இங்கிருந்து வெறுங்கையோடு கிளம்பி போனாலும் இப்போ சொந்தமா கடை வச்சி மாசம் லட்சதுக்கு மேல சம்பாரிக்குறீங்க. ஜெயிச்சி நிக்குறீங்க. இன்னும் அதே குற்றவுணர்ச்சியோட இவங்க முன்னாடி குனிஞ்சி நிக்க வேண்டிய அவசியம் இல்லை. உங்களால யார் குடியும் கெட்டு போகல, எல்லாம் நல்லாத்தான் இருக்காங்க.” என்று அஞ்சன் பின் நின்றுகொண்டிருந்த கீர்த்தனாவை பார்த்து சொன்னாள்.

அவள் பேச்சில் சட்டென்று நிமிர்ந்த கீர்த்தனாவும் தன் கணவன் அஞ்சன் கையை அழுந்த பிடித்து, ‘பிரச்சனை வேண்டாம். சரியோ தப்போ முடிஞ்சது முடிஞ்சு போச்சு. பழசை பிடிக்காதீங்க, நாம நல்லாத்தானே இருக்கோம். இன்னும் பழசை பிடிச்சா என்னை நம்பலைன்னு அர்த்தம்.’ என்று மெல்லிய குரலில் கண்டிக்க விறைத்திருந்த அஞ்சனின் உடல் தளர்ந்தது.

கல்பனா பேச்சே அவனை குத்த, மனைவியின் பேச்சும் அவனை இளக வைத்தது. எட்டு வருடம் முன் இருந்த கோபம் இப்போது இல்லை. அவனைக் கண்டதும் ஒரு ஒவ்வாமை. அதிலிருந்து விடுபடவே அருணை அடக்கப்பார்க்க, அருண் மனைவி பேச்சில் பின்வாங்கிவிட்டான். முன்னர் அவனை அப்படி அடித்து ஊரை விட்டு அனுப்பியும் கேட்க நாதி இல்லாமல் இருந்தான் ஆனால் இன்று மனைவி இருக்கிறாள், மகன் இருக்கிறான் என்ற நிதர்சனம் புரிய அருண் கையை பிடித்து நின்ற அமுதன் தோள் தட்டினான் அஞ்சன்.

“பேர் என்ன?”

அமுதன் அருணை பார்க்க, அவன் தலையசைக்கவும் பெயர் சொல்லிய சின்னவன், “நீங்க யாரு?”

“உன் அப்பாவோட ஃபிரெண்டு.” என்று இன்முகமாய் அஞ்சன் சொல்லவும் இறுக்கம் குறைந்து தளர்ந்தது அருணின் உடல். 

“வூட்டுக்கு வாடா,” என்று அருணை அழைத்தவன் கீர்த்தனாவிடம் கல்பனாவை கண்காட்டி, “வூட்டுக்கு கூப்புடு.” என்று அவளையும் உசுப்ப, அவர்களுடனே வீடு சென்றனர்.

நடந்து செல்லும் தூரம் தான் என்பதால் முன்னே அஞ்சனும் கீர்த்தனாவும் நடக்க, பின்னோடே கல்பனாவிடம் ஊரை பற்றி சொல்லிக்கொண்டு வந்தான் அருண். 

“அவங்களுக்கு பசங்க இருக்காங்கனு சொன்னீங்கள்ள.” என்று கல்பனா கேட்கும் போதே அஞ்சன் வீடும் வந்துவிட, உள்ளிருந்து ஓடி வந்த சிறுவன் இவர்களை கண்டு நிற்கவும் அஞ்சன் தன் மகன் சஞ்சய் என்று அறிமுகப்படுத்தி வைத்தான்.

காலம் எத்தனை வேகமாய் சுழக்கிறது என்று ஒருவரை ஒருவர் பார்த்து நினைத்துக்கொண்டனர். முன்னளவு சகஜம் இல்லையென்றாலும் அருண் அஞ்சன் வேலை பற்றி விசாரித்தான். இப்போதுதான் ஒரு கார்மெண்ட் ஆலையுடன் பார்ட்னராக பேச்சு வார்த்தை சென்று கொண்டிருக்கிறது என்றான் அஞ்சன்.

அத்தனை வசதி இருந்தும் தன் மகன் இன்னும் உச்சம் அடையவில்லை ஆனால் எல்லாவற்றையும் பிடுங்கி அடித்து துரத்திய அருண் இன்று தனக்கென்று ஒரு அடையாளம் ஏற்படுத்திக்கொண்டு உயர்ந்துவிட்டானே என்று அஞ்சனின் அப்பாவால் எண்ணாமல் இருக்க முடியவில்லை. ஏனென்றால் அவர்தான் அவனை ஊரை விட்டு விரட்டியது. இனி ஊர் பக்கமே வரக்கூடாது என்று சொல்லி இருந்தார். அவனும் இத்தனை வருடம் வராது இருந்தானே, இப்போது மனைவி குழந்தை என்று ஆகிவிட்டது இனியும் கடுமை வேண்டாம் என்று அமைதியாய் இருந்துகொண்டார் பெரியவர். 

ஒரு மணி நேரம் அளவளாவிவிட்டு அருண் எழுந்துகொள்ள, கல்பனாவும் அங்கு அஞ்சன் கீர்த்தனா மகனுடன் விளையாடிய அமுதனை அழைத்துக்கொண்டாள். அனைவரிடமும் சொல்லிக்கொண்டு கிளம்பும் முன் கீர்த்தனாவிடம் ஒருநொடி அதிகமாய் நிலைத்து பிரிந்தது அருணின் பார்வை. என்ன நினைத்தாளோ பின்னோடே வந்த கீர்த்தனா, 

“நான் நல்லா இருக்கேன். நீங்களும் நல்லா இருக்கீங்கன்னு பாத்தாலே தெரியுது. வாழ்த்துக்கள்.” என்றவள் அவனை ஏறிட்டு பார்க்க, மென்னகையுடன் தலையசைத்து விடைபெற்றான் அருண்.

அனைத்தையும் கவனித்தபடி இருந்த கல்பனா எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை. அன்றிரவே சென்னைக்கு பஸ்ஸில் முன்பதிவு செய்திருக்க, மூவரும் அவர்களுக்கான அந்த அப்பர் டபுள் ஸ்லீப்பரில் ஏறி அமுதனை நடுவில் போட்டு இருபக்கமும் படுத்துக்கொண்டனர்.

அமுதன் தூங்கும் வரை கல்பனாவிடம் அளவாய் பேசிக்கொண்டிருந்தவன் அவன் தூங்கிய நொடி எக்கி அவள் நெற்றியில் அழுந்த இதழ் ஒற்றி எடுத்தான். கல்பனா அதிர்ந்து பார்க்க,

“இத்தனை வருஷம் மனசுல இருந்த பாரம் அப்படியே கரைஞ்ச மாதிரி இருக்கு. நீ பிடிவாதமா கூப்பிடலேன்னா வந்திருக்கவே மாட்டேன்.” என்றவன் அமுதன் மேலிருந்த அவள் கரத்தின் மேல் தன் கரம் வைத்தான்.

கல்பனா அவனை ஆசையாய் பார்க்க, தன் மற்றொரு கரத்தை நீட்டி பிள்ளைக்கும் கல்பனாவுக்குமான தலையணையாய் மாற்றி இருவரையும் தன்னை நோக்கி இழுக்க, உறக்கத்தில் அவன் நெஞ்சோடு ஒட்டிக்கொண்டான் அமுதன். கல்பனாவும் மகன் முதுகோடு ஒட்டியபடி அருணின் கைவளைவுக்குள் அழகாய் பொருந்த, அந்த சிறிய குடும்பம் நிர்மலமான நித்திரை கொண்டது.

மாதங்கள் கழித்து கடையின் பத்திரப்பதிவு அன்றைக்கு. தற்போது இருக்கும் கடையோடு அருகில் இருக்கும் சிறிய கடையும் விலைக்கு வர, உடனே பேசி வாங்கி விட்டான் அருண். கல்பனா பெயரில் வாங்கலாம் என்று அவன் வற்புறுத்த அவளோ அருண் பெயரில் தான் இருக்க வேண்டும், பின்னாளில் வீடு வாங்கினால் தன் பெயரில் வாங்கிக்கொள்ளலாம் என்று பிடிவாதமாய் நின்றுவிட்டாள்.

காலை சாமி கும்பிட்டு அவன் நெற்றியில் திருநீறு பூசிவிட்டு அனுப்பி வைத்தாள். அவளுக்கு முக்கிய பரீட்சை இருப்பதால் முடித்துவிட்டு நேராக அலுவலகம் வந்துவிடுகிறேன் என்று அனுப்பி வைக்க, நல்லபடியாக பத்திரம் பதியப்பட்டு கடை விரிவாக்கும் பணிகள் துவங்கியது.

இடத்திற்கான பணத்தை சேமிப்பில் இருந்து கொடுத்தவன், விரிவாக்கத்திற்கு வங்கியில் கடன் வாங்கி இருந்தான். மூன்று மரச்செக்கு இயந்திரங்களும், பாரம்பரிய அரிசிகளை வைக்க ஒரு புறமும் மற்றைய அரிசி மூட்டைகளை ஒருபுறமும், பருப்பு வகைகள், பாரம்பரிய அரிசி வகைகளை அரைத்து விற்கப்படும் மாவுகள் ஒரு புறம் என்று அனைத்தையும் அடுக்கி வைத்திருந்தார்கள். வாசலிலேயே சிறிதாய் பிளைவுட்டில் இருக்கையுடன் மேசை தயார் செய்திருந்தார்கள். 

விரிவாக்கம் முடிந்ததும் சிறிய பூஜைக்கு ஏற்பாடு செய்திருந்தான் அருண். கல்பனாவை முன்னிறுத்தி பூஜை செய்து, கடை திறந்து கல்லாவில் அமர வைக்க, அவள் கண்கள் கண்ணீரில் பளபளத்தது.

“என்னாச்சுடி…” பதட்டத்துடன் அவள் தோள் தொட, 

இதழிலில் சிரிப்புடன் அவனை பார்த்தவள் அவன் கையை அழுந்தப்பிடித்து, “அத்தானோட ஆசை நிறைவேறிடுச்சு. கடையை பெருசு பண்ணனும்னு சொல்லிட்டே இருந்தாங்க.”

ஆமோதித்த அருணும் சிகா நினைவில் நெகிழ்ந்து நின்றான், “அவன்தான் துணையா இருந்து நம்மளை வாழ வைக்குறான் கல்பனா.” 

நிமிடங்கள் கழித்து, 

“ப்பா, கடை சூப்பர்.” என்று அவர்களின் மோனநிலையை அமுதன் கலைக்க, அவனை தூக்கி நெற்றி முட்டிய அவன் கன்னத்தில் முத்தம் வைத்து, “மாமா கூட வீட்டுக்கு போறியா? அம்மாவும் நானும் அப்புறம் வரோம்?” என்று கேட்க, மகனுக்கு கசக்கவா செய்யும்.

விரிவாக்கம் செய்தபின் கடை அன்றுதான் திறந்ததால் முதல் நாள் கல்பனா கடையில் இருந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணி மகனை வேந்தனுடன் அனுப்பி வைத்துவிட்டான்.

குடும்பத்தினர் கிளம்பியதும் முன்பு போல் முதலாளி நாற்காலியில் அவள்,  எதிர் நாற்காலியில் அருண் என்று இருக்க, புன்னகை வாடாது இருந்தாள் கல்பனா.

“மேடம் ரொம்ப ஹாப்பியா இருக்கீங்க போல.” 

“ஹாட்ரிக் அடிச்சிருக்கேனே சும்மாவா.” கல்பனா கண்ணடிக்க, புரியாது பார்த்தான் அருண்.

“கடை திறந்தாச்சா?” எதிர்பார்ப்புடன் அவனை பார்த்தாள்.

“ம்ம்,”

“என் எக்ஸாம்ஸ் எல்லாம் முடிஞ்சுதா?”

“ம்ம்,”

“மூணாவது, நாம நாலு பேர் ஆகிட்டோம்.” என்று கிளுக்கிச் சிரிக்க, சில நொடிகள் கழித்தே அவள் சொல்லியது விளங்கியது. 

புரிந்த நொடி அவள் முகத்தில் இருந்த சிரிப்பும் பரவசமும் அருணையும் தொற்றிக்கொண்டது. வேறென்ன வேண்டும் வாழ்க்கையில்…

Advertisement