Advertisement

கரகோஷங்களுக்கு இடையே புன்னகையுடன் மேடையேறிவள் தங்கமெடலுடன் கொடுக்கப்பட்ட சான்றிதழை பல்கலைக்கழக துணைவேந்தரிடமிருந்து வாங்கி புகைப்படம் எடுத்துவிட்டு மறுபுறம் கீழே இறங்கினாள். அவள் விழிகள் மாணவர்கள் கூட்டத்தை தாண்டி குடும்பத்தினர் இருக்குமிடத்திற்கு சென்று தன் குடும்பத்தை தேடியது. கூட்டத்தில் அவர்கள் தெரியவில்லை.

சான்றிதழை வாங்கியபின் எப்போதுடா கிளம்புவோம் என்று நொடிக்கு நொடி கைக்கடிகாரத்தை பார்ப்பதும் எதிரே மேடையை பார்ப்பதுமாய் இருக்கையின் நுனியில் அமர்ந்திருந்தாள் கல்பனா. அவள் பொறுமையை வெகுவாக சோதித்துவிட்டு ஒன்றரை மணி நேரம் கழித்தே விழா முடிந்தது. தோழிகளிடம் கூட சொல்லிக்கொள்ளாமல் குடும்பத்தினரை தேடியபடியே பார்வையாளர்கள் இருக்குமிடம் வேகமாய் வர, சரளா அவளை நெருங்கி அவள் கழுத்தில் இருந்த மெடலை பூரிப்புடன் பார்த்தார்.

சதை பிடிப்போடு தென்பட்டவர் தோல் தொட்ட முடியை சிறிய பேண்டில் அடக்கி, முகம் கொள்ளா புன்னகையுடன் மகளின் கன்னம் வழித்து குதூகலிக்க, கல்பனாவின் பார்வை கணவனையும் மகனையும் தேடியது.

“அமுதன் ஒரு இடத்துல உக்கார மாட்டேன்னு ஒரே அடம். மாப்பிள்ளை வெளில கூட்டிட்டு போயிருக்காரு.” என்ற மகளின் தேடலுக்கு பதில் கொடுத்தார் சரளா. 

“இது நிஜமாவே தங்கமாடி?” என்று மெடலை தொட்டுப்பார்த்து கேட்டாள் காயத்ரி. அவள் கையில் சமத்தாய் இருந்தான் அவள் இரண்டு வயது மகன். மகள் நந்தினி சரளா கையில். 

“மேல தங்க முலாம் பூசியிருப்பாங்கடி.”

“சரி நில்லு அப்படியே ஒரு போட்டோ எடுக்கிறேன்.” என்ற காயத்ரி மகனை அத்தையிடம் கொடுத்துவிட்டு போட்டோ எடுக்க தயாராக, 

“அவங்களும் வந்துடட்டும்டி.” என்று நிற்க மறுத்தாள் கல்பனா.

“அண்ணன் வந்ததும் சேர்ந்து எடுத்துக்கலாம். இப்போ தனியா ஒன்னு எடுக்கிறேன் ரொம்ப பண்ணாம நில்லுடி.” என்று அதட்டி போட்டோ எடுத்துக்கொண்டிருக்கும் போதே அம்மா என்று அழைத்தபடி ஓடி வந்தான் அமுதன்.

நான்கு வயது மகனை வாரியணைத்து தூக்கியவள், “அப்பாகிட்ட சேட்டை பண்ணீங்களா?”

“இல்லையே.” என்று கையை ஆட்டி, தலையையும் பலமாய் ஆட்டினான் சின்னவன்.

“ஆமாமா சேட்டை பண்ணல, சாக்லேட் வேணும்னு மட்டும் அழுதான்.” என்று கிண்டலடித்தபடி வந்த அருண் மனைவியை வாஞ்சையாய் பார்த்தபடி நிற்க,

“அண்ணா சீக்கிரம் பிரேம்குள்ள வாங்க. உங்களையும் அமுதனையும்தான் தேடிட்டு இருந்தா.” காயத்ரியின் துரிதத்திற்கு ஈடுகொடுத்து கல்பனாவுடன் நின்று போட்டோ எடுத்துக்கொண்டவன் சரளாவையும் காயத்ரியையும் அழைக்க, பிள்ளைகளுடன் நால்வரின் நிழலுருவமும் செல்பியாய் போனில் பதிந்தது. 

பட்டமளிப்பின் போது உடுத்தியிருந்த கவுனை திருப்பி ஒப்படைத்துவிட்டு கல்பனா வர, ஆட்டோ பிடித்திருந்தான் அருண். கபிலனும் வேந்தனும் வேலையிருக்கிறது என்று ஒதுங்கிவிட வரமாட்டேன் என்ற சரளாவை இழுத்துக்கொண்டு வந்திருந்தாள் காயத்ரி. 

“நாளைக்கு வீட்டுக்கு வர்றீங்கல்ல?” என்று கேட்ட காயத்ரி மகனை  தூக்கிக்கொண்டு ஆட்டோவில் ஏற, நந்தினியை தூக்கி ஏற்றிவிட்டான் அருண். உடனே நானும் போகிறேன் என்று நின்றான் அமுதன்.

“நாளைக்கு போலாம்டா.” நாளை ஞாயிற்றுக்கிழமை. வழமை போல் அருணும் கல்பனாவும் கபிலன் வீட்டிற்கு சென்றுவிடுவர். அதன்பொருட்டு அருண் அவனை நிறுத்த,

“வீட்டுக்கு வந்தா போர் அடிக்கும் அப்பா. நான் அம்மாச்சி கூட போறேன், அங்க போனா நந்து கூட விளையாடலாம், குட்டி தம்பி இருக்கான். அம்மாச்சி ஊட்டிவிடுவாங்க. ஜாலியா இருக்கும்.” என்று அமுதன் பிடிவாதமாய் சிணுங்க, அருண் கல்பனா முகம் பார்க்க, அவர்கள் அனுமதிக்கும் முன் பேரனை ஆட்டோவில் ஏற்றிவிட்டார் சரளா.

“நான் பாத்துக்கிறேன், நீங்க நாளைக்கு வந்துருங்க.” என்று சரளாவும் ஏறிக்கொள்ள, ஜோராக டாட்டா காண்பித்து சென்றுவிட்டான் அமுதன்.

“வர வர பிடிவாதம் ஜாஸ்தி ஆகிட்டே போகுது. நந்து குட்டி எப்படி அமைதியா இருக்கா பாரு, இவன்தான் வீட்டையே ரெண்டாக்குறான்.” என்றவன் வண்டியை எடுத்து வர, அமைதியாய் ஏறிக்கொண்டாள் கல்பனா.

“என்ன அமைதியா வர?” என்றுமில்லாத அமைதி கல்பனாவிடம் தெரிய, கண்ணாடியில் அவள் முகம் பார்த்தவன் உதடு பிதுக்கி வண்டியை வேகமாய் செலுத்தி வீடு அழைத்து வந்துவிட்டான்.

திருமணமாகி நாலு வருடங்கள் சென்றுவிட்டது இன்னும் அதே வாடகை வீட்டில் தான் இருக்கின்றனர். மூவருக்கு அதுவே போதுமானதாக இருக்க சேமித்த பணத்தை கடையில் முதலீடு செய்து லாபம் பார்த்துக்கொண்டிருக்கிறான் அருண். 

கதவை திறந்துகொண்டு உள்ளே நுழைந்தவள் சான்றிதழை சாமி முன் வைத்து சாமி கும்பிட்டு தனக்கும் அவனுக்குமாய் காபி போட, பின்னோடே வந்து அணைத்தவன், “என்ன அமைதியா இருக்கீங்க. என்மேல ஏதாவது கோவமா?” 

அவனை விலக்கி நிறுத்தியவள் டிகாஷனை டம்ளரில் ஊத்தியபடியே பதில் சொன்னாள், “கோவம் இல்லை, யோசிச்சிட்டு இருந்தேன். அமுதன் நந்துகூட நல்லா ஒட்டிக்கிட்டான். ஒண்ணா வேற ஸ்கூலுக்கு போறாங்களா அவ வச்சிருக்கிறது எல்லாம் இவனுக்கு வேணுமாம், இவன்கிட்ட இருக்குறதெல்லாம் அவளுக்கும் வாங்கி கொடுக்கணுமாம்.” 

“கேட்டதை வாங்கி கொடுக்க வேண்டியது தானே. மிஞ்சிப்போனா பேக், டிபன்பாக்ஸ், பென்சில், நோட்டு, விளையாட்டு சாமான் இதைதான் கேக்க போறான், இதுக்கா இவ்ளோ யோசிக்குற.” இயல்பாய் கேட்டு அவள் கொடுத்த காபியை ஊதி உறிஞ்சியபடி ஹாலுக்கு வர, 

“அவளுக்கு தம்பி இருக்குற மாதிரி இவனுக்கும் வேணுமாம். வாங்கி கொடுக்குறீங்களா?” என்று நமட்டு சிரிப்புடன் அருண் எதிரே அமர்ந்தாள் கல்பனா.

அதிர்ந்து பார்த்தவன் காபியை ஒரே மூச்சில் உள்ளே சரித்து, “அம்மாவுக்கும் பையனுக்கும் எனக்கு ஷாக் கொடுக்கிறதே வேலையா போச்சு. நந்து வச்சிருக்கிற எல்லாம் வாங்கி தரமுடியாதுனு சொல்லிடு.” படபடத்தவன் எழுந்துகொள்ள, கலகலவென சிரித்தவள் அவன் கரம் பற்றி அருகில் அமர்த்தினாள்.

“இப்படி ஓடுறீங்க, இப்போதான் ஸ்ட்ராட்டிங் ட்ரபுல் கூட இல்லையே.” என்று மேலும் சீண்டினாள்.

“ஹே! பிச்சிடுவேன்டி. இன்னும் ஒரு வருஷம் படிப்பு இருக்கு.” என்று மிரட்டலில் இறங்கினான் அருண்.

அமுதனுக்கு ஒரு வயது முடிந்ததும் வேலைக்கு செல்கிறேன் என்றவளை தடுத்து முதுகலை படிப்பில் சேர்த்துவிட்டான். அதன் பட்டமளிப்பு விழாவிற்கு தான் சென்று வந்தனர். தொடர்ந்து அவள் விரும்பியபடி பி.எட் படிப்பின் முதல் வருடத்தில் இருக்கிறாள். 

வண்டி ஓட்ட கற்றுக்கொடுத்து புது வண்டியும் வாங்கி கொடுத்துள்ளான். அதில் தான் தினம் காலை கல்லூரிக்கு செல்லும் முன் மகனை அம்மா வீட்டில் விட்டுவிடுபவள் மாலை கல்லூரி முடிந்ததும் அங்கு சென்று அழைத்து வந்துவிடுவாள். அவர்களின் ஆதரவில் தான் இடைவெளி விடாது ஒரே மூச்சில் படிப்பில் கவனம் செலுத்துகிறாள்.

முன்பு கூட நன்றாக படிக்கும் மாணவிதான் ஆனால் பொறுப்பு கூடிவிட்ட பின் அதை உணர்ந்து படித்தவள் பல்கலைக்கழக தங்கமெடல் வரிசையில் இடம்பிடித்துவிட்டாள். ஆசிரியர் பயிற்சி முடிந்ததும் ஏதாவது பள்ளியில் வேலைக்கு சேர்ந்து கொள்ளலாம் என்ற யோசனை இருக்கிறது. 

தினமும் தாத்தா வீட்டில் இருந்து பழகியதால் ‘ம்’ என்றால் அமுதன் மாமனுடன் கிளம்பி அங்கு சென்றுவிடுவான். செல்லம் அதிகம். சேட்டையும் அதிகம். காயத்ரி மட்டும் கண்டிப்பு காட்டுவதால் அங்கு அவளிடம் அடங்கி இருப்பான். கல்பனாவும் கவலையின்றி விட்டுச் செல்வாள். தேவியிடம் மட்டும் என்றாவது ஒருமுறை மகனை அழைத்துச் சென்று காட்டுவாள். கனிமொழியுடன் பெரிதான பழக்கமில்லை, பார்த்தால் சிரிப்பதோடு சரி. சிகாவை பற்றி இன்னும் மகனுக்கு சொல்லவில்லை, நேரம் வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்றுவிட்டான் அருண்.

இதில் இரண்டாவது குழந்தை பற்றியெல்லாம் அருண் யோசிக்கவே இல்லை. அம்மாவுக்கும் மகனுக்கும் தான் கனவு. 

“அடுத்த குழந்தையை அப்புறம் பாக்கலாம். எனக்கும் தம்புவுக்கும் இப்போ லீவ் வரும். எங்கேயாவது போலாம்.” என்று கல்பனா அழுத்தமாய் பார்த்து சொல்ல, அவள் பார்வையை தவிர்த்தான் அருண்.

விடுமுறை என்றாலே அவள் எங்கு செல்ல கேட்பாள் என்று தெரிந்தவனாய் வெளி ஊருக்கெல்லாம் அழைத்து செல்வதே இல்லை. இம்முறையும் அப்படியே ஓட்டிவிடலாம் என்று நினைத்தவன், “கடை நல்லா பிக் அப் ஆகி போய்ட்டு இருக்கு. எங்கேயும் நகர முடியாது.”

“அப்படியா?” என்று அவன் முகத்திற்கு நேரே வந்து கேட்க, முகத்தை திருப்பினான் அருண்.

“இன்னும் எத்தனை வருஷம் ஓடப்போறீங்க?” அவன் கையை மென்மையாய் பிடித்தவள் தன்னை நோக்கி அவனை திருப்பி கேட்க, இதழ்களை இறுக பூட்டிக்கொண்டான்.

“நானும் பாத்துட்டே இருக்கேன், உங்களால கீர்த்தனாவை விட்டு இன்னும் வெளிய வர முடியலைல?”

“ஹே அப்படிலாம் இல்லை.” என்று அவள் முகம் பார்த்தான். அதில் தவிப்பும் சங்கடமும் நிரம்ப இருந்தது.

“வேறெப்படி? அவங்க நல்லா இருக்காங்கனு தெரிஞ்சாலும் அவங்களை சந்திக்க தைரியம் இல்லாமதான ஓடிட்டு இருக்கீங்க.”

“அவளை ஏமாத்திட்டேங்குற குற்றவுணர்ச்சி இருக்கு, ஆனா அது மட்டும் காரணம் இல்லை. அஞ்சனை எப்படி பார்ப்பேன். அவன் குடும்பத்துல உள்ளவங்க அவங்க பையன் மாதிரி என்னை பாத்துக்கிட்டாங்க, அவங்க முன்னாடி போய் நிக்க ஒருமாதிரி இருக்கு கல்பனா.”

“அதுதான் சொல்லிட்டீங்களே பையன் மாதிரின்னு. அதனாலதான் விரட்டி விட்டுருக்காங்க. உங்க பிரெண்டால அவர் மனைவியும் நீங்களும் விரும்புனதை ஏத்துக்க முடியல, அது அவங்க மேல இருக்கிற தப்பு. அதுக்கு உங்களை துரத்துவாங்களா? நீங்க தப்பு செஞ்சவராவே இருந்தாலும் உங்களை ஊரை விட்டு அனுப்ப அவங்களுக்கு எந்த உரிமையும் இல்லை.”

“நீ என்னை மட்டும் பாக்குற அதான் உனக்கு கோவம் வருது. அவங்க பக்கம் இருந்தும் யோசி.” என்று சொல்லிப்பார்த்தான், அவள் கேட்க வேண்டுமே.

“என்னால உங்களை மட்டும்தான் யோசிக்க முடியும். எனக்கு நீங்க எந்த குற்றவுணர்ச்சியும் இல்லாம நிம்மதியா இருக்கனும். அதுக்கு என்ன பண்ண முடியுமோ அதை செய்வேன்.” என்றவள் மென்மையாய் அவனை அணைத்துக்கொள்ள, அந்த நேரம் அவளின் அணைப்பும் ஆதரவும் தேவையாய் இருந்தது அருணுக்கு. 

அவளின் மென்மையை அப்படியே எடுத்துக்கொண்டவன் பின் வன்மையாகிவிட, மூச்சுமுட்டி விலகினாள் கல்பனா.

“இப்போ சொல்லுங்க, எப்போ உங்க ஊருக்கு போறோம்?”

“சித்திரை மாசம் திருவிழா வரும்டி. அப்போ போலாம்.” என்று வாக்கு கொடுத்தவன் சொன்னது போலவே ஊருக்கு அழைத்துச் சென்றான்.

“இப்போ எதுக்குடி அங்க போறீங்க? உங்க விஷயமெல்லாம் மறந்து இப்போதான் எல்லாம் விசாரிக்குறதை நிறுத்தி இருக்காங்க. இப்போ அங்க போகணுமா? அடுத்த புள்ளைக்கான வேலையை பாரு.” என்றார் கேட்டார் சரளா. அவரின் கேன்சர் கட்டிகள் முழுதாக அழிக்கப்பட்டு, அவரின் ஆயுளை கூட்டியிருந்தனர் மருத்துவர்கள். அதன்பொருட்டு பழைய தெம்பும் பேச்சும் மீண்டிருந்தது.  

“அவர் ஊர்ல யாருக்கும் எங்களை பத்தி தெரியாதுமா. இப்போ கடை வச்சிருக்கிற இடம் விலைக்கு வருது. வாங்கலாம்னு யோசிச்சிட்டு இருக்காரு, அதான் குலதெய்வ கோவிலுக்கு போயிட்டு வரலாம்னு போறோம். நானும் போனதில்லைல அங்க எப்படினு பார்த்துட்டு வரேன்.” என்று அம்மாவை அடக்கி கிளம்பியிருந்தாள் கல்பனா.

எட்டு வருடம்.

முழுதாய் எட்டு வருடம் கழித்து மனைவி மகனுடன் சொந்த ஊரில் கால் பதித்தான் அருண். முன்பைவிட திடம் ஏறிய உடலும் உழைப்பு கொடுத்த நிமிர்வும் வசதி வாய்ப்பில் மெருகேறியும் இருந்தவனை சட்டென்று அங்கிருந்தவர்களுக்கு அடையாளம் தெரியவில்லை.

கோவில் சன்னதியில் கல்பனாவை முன்விட்டு அவள் பின்னே நின்று வழிபட்டவன், “இதுதான் குலதெய்வ கோவில்.” என்று அவள் காதில் மெல்ல கிசுகிசுக்க, அங்கு சலசலப்பு கேட்டது.

என்னவென்று அருண் திரும்பி பார்க்க, அவ்வூரின் பெரியவர் அஞ்சனின் தந்தை பழனிவேல் அவரின் ஐந்து பிள்ளைகள் அவர்களின் மனைவிகள், பிள்ளைகள் என குடும்பமாய் பரிவட்டம் ஏற்க வந்திருந்தார். அவரைக் கண்டதும் அருணின் உடல் தன்னால் விறைக்க,

“அப்பா யார் அவங்க?” என்று அருண் கன்னம் பற்றி கேட்டான் அமுதன். 

அருண் அவனுக்கு பதில் சொல்லும் முன்னே, “ஏலே அருணு, இத்தினி வருஷம் எங்கிட்டுடா இருந்த?” ஆச்சர்யமாய் அவனை அழைத்தார் அஞ்சனின் அன்னை பரிமளம்.

அவரின் குரலில் மொத்த குடும்பமும் அவனை பார்க்க, அதிர்ந்தது என்னவோ கீர்த்தனா, அஞ்சன், அவன் அப்பா பழனிவேல் அவரின் மூத்தமகன் சுவாமிநாதன் தான். அவர்களுக்கு மட்டும்தான் கடந்தகாலத்தில் நடந்தது தெரியும். ஏனையோருக்கு ஏதோ கருத்து வேறுபாட்டில் வெளியூருக்கு சென்றுவிட்டான் என்றே நினைத்திருந்தனர். 

அஞ்சன் அவனை இடுங்கும் பார்வை பார்க்க, அவனை சந்திக்க முடியாமல் முகத்தை திருப்பினான் அருண். இந்த பக்கமோ கல்பனா வந்தவர்கள் யாரென்று யூகித்து அவனை முறைத்துப் பார்க்க, ‘என்னடா சோதனை’ என்று நினைத்தவன் மறந்தும் கடைக்கண் பார்வையில் விழுந்த கீர்த்தனாவை பார்க்கவில்லை. 

Advertisement