Advertisement

“நீ பட்டதெல்லாம் போதும்டி, நடந்த எல்லாத்தையும் மறந்துடு. அப்பாவை நல்ல இடமா பாக்க சொல்றேன், வேற கல்யாணம் கட்டிக்க. என் கண் குளிர நீ சந்தோஷமா வாழ்றதை பார்த்துட்டு கண் மூடிடுறேன்.”

“ம்மா!” அழுத்தமாய், அமைதியாய் அதே சமயம் ஆக்ரோஷமான அழைப்பு. 

“கஷ்டமா தான் இருக்கும். ஆனா நாளைக்கு நீ மட்டும் தனியா நிப்படி. புருஷன் இருந்தாதான் பொண்ணுங்களுக்கு மரியாதை. ஒத்தையா நிக்குறவளை என்னைக்குமே இந்த ஊரும் உறவும் அரவணைச்சிக்காது, தள்ளி தான் நிறுத்தும். நாளைக்கே உன் அண்ணன்காரன் பொண்டாட்டி புள்ளைனு அவன் குடும்பத்தை பாத்துட்டு போயிடுவான். நீ ஏன்டி தனியா இருக்கனும்?”

பதிலடி கொடுக்க நா பரபரத்தாலும் சரளாவின் உடல்நிலையும் மருத்துவர் வலியுறுத்திய ஆலோசனையும் மனதில் வைத்து கடினப்பட்டு தன்னை கட்டுப்படுத்திய கல்பனா, “சும்மா உளறாம தூங்குமா. எனக்கு தூக்கம் வருது.”

“கண்ணை மூடுனா உனக்கு ஒரு நல்லதை செஞ்சு வைக்காம அப்படியே போய்டுவேனோனு பயமா வருது. நீ சரின்னு சொல்லு அப்பா சொல்ற மாதிரி, நீ சொல்ற மாதிரி நான் கேக்குறேன், உங்களை தொந்தரவு பண்ண மாட்டேன், என் உடம்பை நல்லா பார்த்துப்பேன்.” 

மகள் வாழ்க்கை என்ற ஆதங்கத்தில் துவங்கி, பின் வருத்தத்தில் பேசி, புலம்பும் கட்டத்தை எட்டுகையில் கல்பனாவின் தலையை யாரோ சுத்தியல் வைத்து தட்டுவது போல் தெறிக்க ஆரம்பித்தது. 

“எல்லாம் இப்போவே நடக்கணும்னா எப்படி? கல்யாணத்தையும் அவசரமா பண்ணி வச்சு அதை ரசிக்கவிடாம படுத்துன. கல்யாணம் ஆன அப்புறமும் உன் கூடவே இருந்து என்னத்தை கண்டேன்? இப்போ அத்தானுக்காக என்னை அழ கூடவிடாம அடுத்த வாழ்க்கை பத்தி பேசுற.

கொஞ்சமாச்சும் என்னை நினைச்சி பார்த்தியா? எப்போதும் உன் உடம்பு, உன் வியாதி, உன் சந்தோஷம் மட்டும் தான்ல. ஊர் உலகம் என்ன சொன்னா என்ன? அண்ணன் காயத்ரி எல்லாம் எப்படி வாழ்ந்தா என்ன இப்போ? 

நானும் அப்படியே இருக்கணும்னு என்ன அவசியம். எனக்கு டைம் கொடுக்கவே மாட்டியா?” மனதில் இருந்ததை கொட்டியவள் அத்தோடு நிறுத்தாமல் இருந்த அழுத்தத்தில் கதவை திறந்துகொண்டு வெளியேறப் போக, பின்னோடே வந்துவிட்டார் கபிலன்.

கண் அயர்ந்து உறங்கும் நேரம் கல்பனாவின் குரல் உயர்ந்து அவரை எழுப்பிவிட, அவள் மனதில் இருப்பதை கொட்டட்டும் என்று அவள் பேசுவதை அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தவர். திடுமென கல்பனா கதவை திறந்துகொண்டு செல்லவும் பதறியடித்துக்கொண்டு அவளை பின்தொடர்ந்து நிறுத்தினார்.

அதிர்ந்த சரளா மகன் அறைக் கதவை தட்டிவிட்டார். வெளியே நடப்பது எதையும் அறியாது மோன நிலையில் இருந்தவர்கள் சட்டென தெளிந்து வந்து பார்க்க, கல்பனா கரம் பற்றி ஏதோ பேசிக்கொண்டிருந்தார் கபிலன். அதற்கு மறுப்பாய் தலையாட்டிக் கொண்டிருந்தாள் கல்பனா. 

“இந்த நேரத்துல தூங்காம என்ன பண்றீங்க ரெண்டு பேரும்?” என்ற கேள்வியுடன் அவர்களை வேந்தன் நெருங்க,

“நான் வீட்டுக்கு போறேன்.” பிடிவாதமாய் நின்றாள் கல்பனா.

“எதுனாலும் காலைல பேசிக்கலாம். உள்ள வா கல்பனா.” மறுப்பு தங்கையிடம்.

இன்னமும் ஏதோ அவன் வருந்தி அழைத்துக்கொண்டிருக்க, தள்ளி நின்று  அவர்களை ஒருவித கடுப்புடன் பார்த்துக்கொண்டிருந்தாள் காயத்ரி. சற்று முன்தான் கணவனிடம் தான் கருவுற்றிருக்கலாம். சந்தேகமாய் இருக்கிறது, பரிசோதனை செய்ய வேண்டும் என்று பேசிக்கொண்டிருந்தாள். அந்த நிகழ்வை ரசித்து அனுபவிக்கும் முன் இப்படி ஒரு பிரச்சனை என்று அத்தை கதவை தட்டவும் காயத்ரிக்கு வெறுத்துவிட்டது. கல்பனா இப்படி இருக்கும் வரை தங்களுக்கு நிம்மதியும் தனிமையும் கிட்டப்போவதில்லை என்று ஆழ பதிந்து போனது.

“இப்படி ராத்திரி நேரத்துல சண்டை போடாம கல்பனாவை அவங்க வீட்டுல விட்டுட்டு வாங்க, அவங்களாச்சும் நிம்மதியா தூங்கட்டும்.” ஒருவித இறுக்கத்துடன் காயத்ரி சொல்ல, வேந்தன் மனைவியை முறைத்த முறைப்பில் அவள் கப்சிப் என்றெல்லாம் ஆகவில்லை. 

அவர்களை நெருங்கி கல்பனா கைப்பிடித்தவள், “இன்னைக்கு நைட் தூங்கிட்டு காலைல போகலாம், உள்ள வா.” என்று அழைக்க, கல்பனாவுக்கு அவளிடம் முரண்டு பிடிக்க மனமில்லை.

“நீயாவது என்னை புரிஞ்சிக்கோடி காயு.” கெஞ்சவே செய்தாள்.

“புரியுது. என்ன செய்யலாம்னு சொல்லு.”

“நீ பாத்துக்கோ, நான் வரேன்.” தீர்க்கமாய் சொன்னவள் காயத்ரியிடம் இருந்த தன் கரத்தை விடுவிடுத்துக்கொண்டு விறுவிறுவென சிகா வீடு நோக்கி நடந்தாள்.

“அடியே, என் பொண்ணை அனுப்பிட்டு வேடிக்கை பார்த்துட்டு நிக்குற. இந்த நேரத்துல போறாளே போய் கூட்டிட்டு வா வேந்தா…” சரளா மீண்டும் துவங்க, அத்தையை நெருங்கிய காயத்ரி உதட்டில் ஒற்றை விரல் வைத்து, 

“பேசி பேசி நீ அனுப்பிட்டு எங்களை சொல்லாத அத்தை. நீ பேசாம இருந்தாவே அவ நல்லா இருப்பா…” என்று மிரட்டலாகவே சொல்ல, அதிர்ந்து பார்த்தார் சரளா.

அண்ணன் மகள் என்று தூக்கி வைத்து ஆடினாயே உனக்கு வேண்டும் என்பது போல் கபிலன் பார்த்துவிட்டு மகள் வீடு செல்கிறாளா என்று கவனிக்க அவள் பின்னே சென்றார். 

“அம்மாகிட்ட இப்படித்தான் பேசுவியா?” வேந்தன் மனைவியை கண்டித்தான்.

“நான் வேற என்ன பண்ணட்டும். பாத்துட்டே இருக்கேன் கல்ப்ஸ் வந்த நாள்லேந்து வருத்தங்குற பேருல அவளை குடைஞ்சிட்டே இருக்காங்க. அவளும் நிம்மதியா இல்லை நானும் இல்லை, இவங்க பேசாம இருந்தா இப்படிலாம் நடக்குமா?” என்று எதிர் கேள்வி கேட்டாள் அவள்.

“ஆதங்கத்துல பேசுறாங்கன்னு விடாம நீயும் சரிசமமான மரியாதை இல்லாம பேசுறதெல்லாம் நல்லா இல்லை சொல்லிட்டேன்.”

“கல்ப்ஸ் வேணும்னா எல்லாத்தையும் பொறுத்துகிட்டு மனசுல வச்சிகிட்டு இருக்கலாம். என்னால முடியாது.” என்று சிடுசிடுத்துவிட்டு சென்றாள் அவள்.

“இந்த சில்வண்டு இவ்ளோ பேசுவாளா?” என்று பார்த்து நின்றார் சரளா.

“நீயும் கொஞ்சம் விட்டுத்தான் புடியேன். அவ மனசு மாறுற வரைக்கும் வெயிட் பண்ண சொல்லி அப்பா சொன்னாரு தானே, அவர் பேச்சை கேக்காம ஏன் இப்படிலாம் பண்ணிட்டு இருக்க?” அதிருப்தி வெளிப்படுத்தியவனும் தங்கை பாதுகாப்பாக வீடு சென்றுவிட்டாளா என்று உறுதிபடுத்திக் கொண்டு உறங்கச் சென்றுவிட்டான்.

இரவு படுத்துவிட்ட பின் வீட்டு வாசலில் நிற்கும் மருமகளை அதிர்வுடன் வரவேற்ற தேவி என்னவென்று விசாரிக்க,

“நான் தூங்கனும் அத்தை. என்னை எதுவும் கேக்காதீங்க.” என்றவள் பாய் விரித்து ஹாலில் ஓரமாய் படுத்துக்கொண்டாள்.

தனியாக வந்தாளா என்று குழப்பத்துடன் தேவி எட்டிப்பார்க்க கேட் அருகே நின்ற கபிலன் திரும்பி செல்வது தெரிந்தது. 

எதோ பிரச்சனை என்பது மட்டும் புரிய, கல்பனாவை தொந்தரவு செய்யவில்லை. காலை பார்த்துக்கொள்ளலாம் என்று அனைவரும் இருக்க, காலை நேரமே எழுந்து குளித்துக் கிளம்பினாள்.

“எப்போ வந்தமா?” சேகர் விசாரிப்புக்கு பதில் சொல்லிக்கொண்டே ஹால் அலமாரியில் எதையோ தேடினாள்.

“என்ன தேடுற கல்பனா?” சுசீலா வந்து கேட்க, கிடைச்சிருச்சு என்று அருண் கொடுத்துச் சென்ற நிதி நிறுவன விண்ணப்பத்தை காட்டினாள்.

“வேலைக்கு போகப் போறியா?” தேவி தட்டில் அவளுக்கான இட்லியுடன் நெருங்கினார்.

“ஆமா அத்தை, அவங்க சொன்ன வேலை நல்ல இடம் மாதிரிதான் தெரியுது. போய் பாக்குறேன்.” என்றவள் காலை உணவை முடித்துக்கொண்டு கிளம்பினாள்.

“அந்த பக்கமா தான் போறேன், உன்னை விட்டுட்டு போகவா?” என்று சேகர் கேட்க,

“வீட்டுக்கு போய் ஐடி கார்ட் எல்லாம் எடுத்துட்டு போகணும். லேட் ஆகிடும் அத்தான், நீங்க கிளம்புங்க.”

சரியென்று சேகர் தன் வேலையை பார்த்துக்கொண்டு கிளம்பிவிட, அடையாள சான்றுகள் எடுக்கச் சென்ற கல்பனாவை குடைந்துவிட்டனர் வீட்டினர்.

“நீ ஏன் வேலைக்கு போற? மேல படிக்கணும்னு சொன்னீல்ல, அதுக்கு அப்ளை பண்ணு.” என்றனர் தந்தையும் அண்ணனும்.

“இப்போ படிக்கிறது எல்லாம் சரிவராது.”

“ஏன், ஏன், ஏன் சரி வராது? கல்யாணம் தான் வேணாம்னு சொன்ன, நீ விரும்புன மாதிரி படிக்குறதுக்கு என்ன வந்துச்சு?” கணவன் மற்றும் மகனின் கண்டிப்பில் அதுவரை அமைதியாய் இருந்த சரளா அதற்கு மேல் முடியாமல் கேட்டுவிட்டார்.

“போயிட்டு வந்து சொல்றேன் இப்போ நேரமாகுது.” என்று நிற்காது கிளம்பிவிட்டாள் கல்பனா.

“கல்யாணத்துக்கு முன்னாடி எனக்கு நேரா பேசவே பயந்தவ இப்போ எப்படி பேசிட்டு போறா பாருங்க.” புலம்பல் துவங்கியது சரளாவிடம்.

சூழ்நிலைகள் மாறவும் அதற்கேற்றாற் போல் மகளின் நடவடிக்கையும் மாற்றம் காண்கிறது என்று புரிந்தது கபிலனுக்கு. சரளா சொல்வது போல் இத்தனை அழுத்தமாக முன்பெல்லாம் அவள் பேசியதாய் நினைவில்லை. தாங்கள் விதித்த கட்டுப்பாட்டிற்கு எந்த முகசுழிப்பும் காட்டாமல் அதன்படி நடந்தவளா இன்று இப்படி உறுதியாய் நிற்பது என்று யோசனைக்கு சென்றுவிட்டார் மனிதர். 

அருண் சொல்லிய நிறுவனத்திற்கு சென்று தன் விண்ணப்பத்தை நீட்டியவளுக்கு எதிர்மறை பதிலே கிடைத்தது. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளும் காலஅவகாசம் முடிந்துவிட்டது என்றார்கள். உடனே அருணுக்கு அழைத்துவிட்டாள் கல்பனா.

“முடிஞ்சிடுச்சா?” என்று இழுத்தவன் தன் தலையில் தட்டிக்கொண்டு, “என் மேல தான் தப்புங்க. கடைசி தேதி சொல்லாம ஃபார்ம் மட்டும் உங்ககிட்ட கொடுத்திருக்க கூடாது. கொஞ்சம் அங்க வெயிட் பண்ணுறீங்களா, நான் விசாரிச்சுட்டு உங்களை திரும்ப கூப்பிடுறேன்?” என்று அருண் கேட்க, ஆமோதித்தாள் கல்பனா.

சற்று நேரத்திற்கெல்லாம் மீண்டும் அழைத்த அருண், “மன்னிச்சிடுங்க. ஏற்கனவே ஆள் போட்டுட்டாங்களாம். எனக்கு தெரிஞ்சவரு நம்பிக்கையா சொல்லவும் தான் உங்களுக்கு சொல்லி வச்சேன். இப்படி ஆகும்னு நினைக்கல.” 

முதல் அடியே தோல்வியை சந்தித்து அதிருப்தி கொடுக்க, சோர்ந்த கல்பனா, “பரவாயில்லைங்க, எங்களுக்காக நீங்க இவ்ளோ பண்ணதே பெரிய விஷயம். நான் பாத்துக்குறேன்.” என்று அழைப்பை துண்டிக்க போக,

“இருங்க இருங்க கல்பனா. இப்போ எங்க இருக்கீங்க?” அவசரமாய் கேட்டான் அருண்.

அவள் சொல்ல, “என் கடை தெரியுமா உங்களுக்கு?”

“அத்தான் சொல்லி இருக்காங்க.”

“உங்களுக்கு கஷ்டம் இல்லைனா இங்க வர முடியுமா? முக்கியமா பேசணும். நான் கடையில தான் இருக்கேன்.”

சரியென்றவள் ஆட்டோ பிடித்து அவன் கடைக்குச் சென்றாள். ஆட்டோவிலிருந்து அவள் இறங்கவும் எழுந்து வந்து அவளை வரவேற்று குளிர்பானம் வாங்கிக் கொடுத்தான் அருண். அவள் மறுத்து குடிக்காது அவனையே கேள்வியாய் பார்க்க, இரு விரல் கொண்டு கண்களை தேய்த்தவன்,

“உங்களுக்கு ஆட்சியேபனை இல்லைனா நீங்க இங்கேயே வேலை பாக்கலாம்.”

“என்ன? இங்கேயா?”

“சிகா உங்களுக்கு எவ்ளோ முக்கியமோ அதே மாதிரி எனக்கும் முக்கியம். எதுவுமில்லாம யாருமில்லாம இருந்தப்போ அவன் தான் எனக்கு துணையா இருந்தான், கடையிலையும் சரி மனசளவுலையும் சரி. அவன் கூட இருந்தா எவ்வளவு பலம்னு உணர்ந்திருக்கேன்.” என்கவும் கல்பனா கண்கள் கலங்கிவிடுவேன் என்று நின்றது.

“அவன் இல்லாத இடம் எப்படி இருக்கும்னு தெரியும். அவன் இங்க இருந்தப்போ கடையை பெருசு பண்ணுங்க, இன்னும் பெருசா நாம வளரணும்னு சொல்லிட்டே இருப்பான். யாருக்காக அதெல்லாம் செய்யணும்னு நான் மெத்தனமா இருந்துட்டேன். இப்போவும் அப்படியே இருக்க முடியாது.” என்று நிறுத்த, கல்பனாவின் புருவங்கள் சுருங்கியதே தவிர, வாய் வார்த்தையாய் அவள் எதுவும் கேட்கவில்லை. 

எதுவோ சொல்ல முயல்கிறார் சொல்லி முடிக்கட்டும் என்று இருந்தாள்.

“என் வாழ்க்கையில இருக்கிற வெற்றிடத்தை நிரப்ப உங்க குடும்பத்தால முடியும்னு சும்மா சொல்லல. மனசார சொன்னேன். சிகாவோட ஆசையை அவனுக்கு கொடுத்த வாக்கை காப்பாத்த முயற்சி பண்ணிட்டு இருக்கேன்.” என்றவன் எதிரே இருந்த தண்ணீரை மிடறு விழுங்கி,

“இந்த கடையை பெருசு பண்ணலாம்னு பாத்திட்டு இருக்கேன். செக்கு எண்ணெய், சிறுதானியம், பாரம்பரிய மூலிகை இப்படி ஏதாவது ஒன்னை அறிமுகப்படுத்தி விரிவு படுத்தலாம் இல்லையா இதே மாதிரி வேற ஏரியாவுல கடை திறக்கலாம். இப்படி யோசனை போய்ட்டு இருக்கு. நீங்க இந்த கடையை பார்த்துக்கிட்டா எனக்கும் வசதியா இருக்கும்.”

“இல்லை, எனக்கு புரியல. இங்க நான் என்ன வேலை பார்க்க முடியும்?” அரிசி மூட்டை தூக்கவா முடியும் என்ற குழப்பம் கல்பனாவிடம்.

“நீங்க கஸ்டமருக்கு பொருளை காட்டி பில் போட்டா போதும். வெயிட் போட்டு எடுத்து கொடுத்து டெலிவரி பண்ண ஏற்கனவே ஒரு பையன் இருக்கான். அவன் மத்த வேலைங்க எல்லாத்தையும் பார்த்துப்பான்.” என்றவன் தொடர்ந்து,

“உங்க படிப்புக்கு இந்த வேலை எந்த விதத்துலேயும் சம்மந்தம் இல்லைதான். ஆனா சிகா இருந்த இடத்துல நீங்க இருந்தா எனக்கும் நம்பிக்கையா இருக்கும், ஏன் சொல்றேன்னா கடையை விரிவுபடுத்த நான் நிறைய அலைய வேண்டி இருக்கும். கடையை நம்பி ஒப்படைக்க ஆள் இல்லை. 

நீங்கன்னா நான் நிம்மதியா போய்ட்டு வருவேன். சிகா ஆசைப்பட்டு இருந்த இடத்துல நீங்க இருந்தா உங்களுக்கும் நிறைவா இருக்கும்னு தோணுச்சு. கட்டாயம் இல்லை யோசிச்சு சொல்லுங்க.”

“அத்தானுக்கு உங்க கடையை பெருசா கொண்டு போகணும்னு ஆசை. அதுக்கு என்னால ஆன உதவியை செய்றேன்.” என்று உடனே சம்மதம் சொன்னாள் கல்பனா.

“உங்களுக்குனு தனிப்பட்ட விருப்பம் இருக்கும், அதை நோக்கி போகணும்னு நீங்க எப்போ நினைச்சாலும் கடை உங்களை புடிச்சு வைக்காது.” என்று வாக்கு கொடுத்து அன்றே என்னென்ன அரிசி வகைகள் இருக்கிறது, அதன் விலைப்பட்டியல், பில் போடும் முறை என்று அனைத்தையும் விளக்கினான். கல்பனாவும் உன்னிப்பாய் கேட்டுக்கொண்டாள்.

Advertisement