Advertisement

*9*

தன் மடியில் படுத்திருக்கும் மகளின் தலையை வருடியபடி இருந்தார் சரளா. காயத்ரி இருவருக்கும் டீ எடுத்து வந்து கொடுக்க, அதை கண்டுகொண்ட மாதிரி தெரியவில்லை இருவரும்.

“கல்ப்ஸ், டீ குடிடி.” காயத்ரி உசுப்ப, 

“அத்தானும் இப்பிடித்தான் கூப்பிடுவாங்க காயு.” எனும்போதே உடைந்தது கல்பனாவின் குரல். வலியும் நடுக்கமுமாய் மனம் சிகாமணியின் நினைவுகளில் திண்டாடியது. 

வேந்தன் மனைவியை அழுத்தமாய் பார்த்து இடவலமாய் தலையசைக்க, உள்ளே சென்றுவிட்டாள் அவள். 

“ரெண்டு பேரும் டீ குடிச்சாதான் நான் வேலைக்கு கிளம்புவேன். ஒழுங்கா குடிங்க.” என்றான் வேந்தன்.

அண்ணன் இப்படி சொல்லவும் நிமிர்ந்த கல்பனா, கண்களை அழுந்த துடைத்துக்கொண்டு டீயை படக்கென்று உள்ளே சரித்தாள்.

வேகமாய் அவளருகே வந்த வேந்தன் அவள் தலை தட்டி, “என்ன அவசரம், மெதுவா குடி.” 

ஒரு டம்ளர் டீயை ஒரே மூச்சில் கவிழ்த்ததால் ஏற்பட்ட இருமல் மட்டுப்பட, தலையில் அடித்துக்கொண்டவள், “நான் ஒருத்தி, அம்மாவை பாத்துக்க வந்துட்டு அழுதுட்டு இருக்கேன். 

அம்மா, டீ குடிக்க புடிக்கலைன்னா ஜுஸ் போட்டு எடுத்துட்டு வரவா? மாத்திரை போடணும் நீ.” 

“அம்மாவை பாத்துக்கணும் தான். அதுக்காக நீ அழக்கூடாதுனு இல்லை. மொத்தமா அழுது முடிச்சிடு, என்ன பண்ணலாம்னு பாக்கலாம்.” என்ற வேந்தனை நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்தாள்.

“என்ன இன்னும் அழனுமா… இவ அழுதது எல்லாம் போதும்.” சரளா வேகமாய் குறுக்கிட்டார்.

“அம்மா, நீ கொஞ்சம் அமைதியா இரு. உன் அவசரம் தான் எல்லாத்துக்கும் காரணம்.”

“நீங்க நல்லா இருக்கணும்னு தானே அவசரப்பட்டேன். இந்த பாழா போன வியாதி வராம இருந்திருந்தா அந்த பயலுக்கு என் பொண்ணை கட்டி கொடுத்திருக்கவே மாட்டேன்.”

சிகாவை குத்திக்காட்டி பேசுவது போலிருக்க அப்பேச்சு இனிக்கவில்லை கல்பனாவுக்கு, “அம்மா, என்ன பேசுற நீ? அத்தானோட எவ்வளவு சந்தோஷமா வாழ்ந்தேனு நீயும் பாத்த தானே?” 

“பத்து நாள் இருந்தா போதுமா? வாழ்க்கை முழுக்க இருக்க வேண்டாமா?” 

“அந்த பத்து நாளே வாழ்க்கை முழுக்க போதும் எனக்கு.” என்றாள் கல்பனா முடிவாய். 

“கூறுகெட்டு பேசாத. இன்னைக்கு இல்லைனாலும் இன்னும் கொஞ்ச நாள் கழிச்சி…”

“அம்மா, எதையாச்சும் உளராம தூங்கு.” என்று அவரை பேசவிடாது கத்தரித்து இருந்தான் வேந்தன். மகனை முறைத்தவர் மீண்டும் வாய் திறக்கும் முன்,

“நீ என்ன நினைச்சு இப்படி பேசிட்டு இருக்கேன்னு புரியுது. ஆனா அது நடக்காது. என்னை பாத்துக்க எனக்கு தெரியும். நீ உன் உடம்பை மட்டும் பாரு.” இன்னும் அடுத்து என்ன என்று வாழ்க்கை குறித்த தெளிவு வரவில்லை என்றாலும் சரளா பேசுவதின் அர்த்தம் புரியாதில்லை. 

கணவனில்லை என்றால் உடனே வேறு வாழ்க்கை தேடிக்கொள்ள வேண்டுமா என்ன? துணை இல்லாத வாழ்க்கை கடினம் தான் ஆனால் முடியாத காரியம் இல்லையே. அவனின் நினைவுகள் தருவிக்கும் ஏக்கத்தை இன்பத்துடன் ரசித்து, வலியுடன் அனுபவிக்க அவள் தன்னை தயார்படுத்திக் கொண்டிருந்தாள். சரளா விட்டால் தானே… பேச்சினூடே பழசை கீறிவிடுவார். 

புது காயம் போல் அது எரியும் போதெல்லாம் அவனின் இழப்பை ஏற்றுக்கொள்ள அவள் படும்பாடு அவள் மட்டுமே அறிந்த ஒன்று. பிரிவின் வலியில் அலைப்புறும் மனம் அமைதி வேண்டி கேட்க, சரளா பேச்சு அதை குலைக்கும் விதமாகவே இருந்தது தொடர்ந்த நாட்களும்.

“ஹாஸ்பிடல் போயிட்டு வரலாம் கிளம்புமா.” காலையே கிளம்பிய கல்பனா சரளாவை உசுப்ப, அவர் இடத்தை விட்டு நகர்வதாய் இல்லை.

“ம்மா, கிளம்பு.”

“என்னாலையும் வேந்தனாலையும் வர முடியாது. மக, மருமக கூட போயிட்டு வா.” என்றார் கபிலனும்.

காயத்ரியும் அந்நேரம் கிளம்பி அறையிலிருந்து வெளியே வந்தாள். தலையில் அரை முழம் மல்லிகை பூ மணமணக்க, “கிளம்புங்க அத்தை, போய்ட்டு வந்துறலாம்.” காயத்ரி அழைக்க, சரளாவின் கண்கள் தானாய் கலங்கியது.

சரளா எழாது இருக்கவும் அவர் கைப்பிடித்து எழுப்பி நிறுத்தினாள் கல்பனா.

“புடவை மாத்திட்டு வாம்மா,” சரளாவை வலுக்கட்டாயமாக அறைக்குள் அனுப்பியவள் அப்பாவிடம் ஆட்டோ வரவழைக்கும்படி சொல்ல, ஆட்டோவும் சற்று நேரத்தில் வந்தது. முகத்தை உர்ரென்று வைத்திருந்தாலும் வாய் திறவாது மருத்துவமனை வந்தார் சரளா. 

உடன் மருத்துவமனை வளாகம் வந்த காயத்ரி, “நீங்க டோக்கன் போட்டு வெய்ட் பண்ணுங்க, நான் வந்துடுறேன்.” அவர்கள் கேள்வி கேட்கும் முன் கூட்டத்தில் மறைந்தாள்.

“என்ன இவ?” என்று சரளா பார்க்க,

“வந்துடுவா மா…” 

சரளாவுக்கு பார்க்கும் மருத்துவர் இடத்தில் ஒருவரும் காத்திராததால் உடனே உள்ளே சென்றுவிட்டனர். சரளாவை பரிசோதித்த மருத்துவர், உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாகவும் கீமோதெரபி சிகிச்சை துவங்கிவிடலாம் எனவும் மனதளவில் சுணங்கி இருப்பது போல தெரிகிறது, மனதிடத்தை கைவிடாது மனதை இலகுவாய் வைத்துக்கொள்ளும் படியும் அறிவுறுத்தி அனுப்பினார். 

கல்பனா இன்ன பிற விஷயங்களை செவிலியரிடம் கேட்டுக்கொண்டிருக்கும் போது காயத்ரி வந்துவிட்டாள்.

“டாக்டரை பாத்துட்டே வந்துட்டோம், எங்க போன நீ?” சரளா ஆராய்ச்சியாய் பார்க்க, 

“ஹாஸ்பிடலை சுத்தி பாத்துட்டு வந்தேன் அத்தை,” என்று கழுத்தை வெட்டியவள், மருத்துவர் என்ன சொன்னார் என்று விசாரித்தாள்.

“அவ்வளவு அக்கறை இருக்குறவ கூட வந்திருக்க வேண்டியதுதானே, உள்ள நுழைஞ்சதும் விட்டுட்டு போயிட்டா.” குற்றம் சாட்டினார் சரளா.

அவள் எதிர்த்து பதில் கொடுக்கும் முன், “உடம்புக்கு எதுவும் பண்ணுதாடி காயு?” என்ற கேள்வியோடு அவர்களை நெருங்கியிருந்தாள் கல்பனா.

“ஹ்ஹான்… ஒன்னுமில்லையே, கிளம்பலாமா? ஓலால ஆட்டோ போடவா?” பதில் சொல்லாது ஆட்டோ புக் செய்தாள் காயத்ரி.

“அழுத்தக்காரி, ரெண்டு பேரும் கேக்குறோம் பதில் சொல்றாளா பாரு.” என்ற சரளாவின் கூற்றுக்கு கல்பனாவின் மனது ஆதரவு கொடுத்தது. 

சற்று நேரத்திற்கெல்லாம் ஆட்டோவில் வீடு வந்துவிட்டனர். காலை வெயிலில் சென்று வந்ததால் மூவருக்குமே ஓய்வு தேவைப்பட்டது. காயத்ரி கதவடைக்கும் நேரம் தேவி வந்து எட்டிப்பார்த்து மருத்துவர் என்ன சொன்னார் என்று விசாரித்துவிட்டுச் சென்றார். 

இரவு நேரம் அனைவரும் உண்ணுகையில் காயத்ரி கணவனை ஓரக்கண்ணால் பார்ப்பதும் பின் தட்டில் கவனம் செலுத்துவதுமாய் இருக்க, அதனை கண்டுகொண்ட வேந்தன் புருவம் உயர்த்தினான். இடவலமாய் தலையசைத்தவள் குனிந்து தட்டில் கவனம் பதிக்க, என்ன முயன்றும் பொங்கும் களிப்பை அடக்க முடியவில்லை. அவள் அதரங்கள் விரிந்து அதனை அப்பட்டமாய் காட்டிக்கொடுத்தது. 

‘என்னடா இவ, ஒரு மார்க்கமா சிரிக்குறா, வெட்கப்படுறா… தனியா சிக்கட்டும் பாத்துக்குறேன்.’ என்று எண்ணிய வேந்தன் தனிமையை எதிர்நோக்க, அவனின் லயத்தை கலைத்தார் கபிலன்.

“அடையார் ஆஸ்பித்திரிக்கு மாறிக்கலாமா வேந்தா?”

கேள்வியில் சட்டென நிமிர்ந்த கல்பனா, “ஏன்ப்பா? இங்கயே நல்லாதானே பாக்குறாங்க?” என்று தற்போது காட்டிக்கொண்டிருக்கும் தனியார் மருத்துவமனையை சுட்டிக்காட்டினாள்.

“ஏற்கனவே அடையார்ல தான் சேர்க்க வேண்டியது. சிகா தான் விசாரிச்சிட்டு இப்போ காட்டுற ஆஸ்பித்திரில நல்லா பாக்குறாங்க, இங்கேயே பார்க்கலாம், வீட்டுக்கும் பக்கம்னு சொன்னான்.” என்றவர் சற்று இடைவெளி விட்டு,

“அப்போ தீவிரமா விசாரிக்க நேரமில்லை. அதான் சிகா சொன்ன மாதிரி அங்கேயே பார்த்தோம். ஆனா இனியும் அதே இடத்துல காமிச்சா கட்டுப்படி ஆகாது.” 

“இங்கேயே பாக்கலாம் அப்பா, முன்னாடி விசாரிக்க நேரமில்லை. இப்போ விசாரிச்ச அப்புறம் அங்க போகனுமானு தோணுது.” என்றான் வேந்தன்.

“ஏன் இப்படி சொல்ற? தமிழ்நாடுல கேன்சர் சிகிச்சைன்னாலே அடையார் ஆஸ்பித்திரி தான் எல்லாருக்கும் நியாபகம் வரும். நல்ல ட்ரீட்மெண்ட் கொடுக்குறாங்க, செலவும் நம்ம கைக்குள்ள இருக்குற மாதிரி பாத்துக்கலாம்.” 

“டிரீட்மெண்ட்ல எந்த குறையும் இல்லை. நல்லாத்தான் பாக்குறாங்க ஆனா ரொம்ப வெயிட் பண்ணி பாக்கணும். இப்போ அங்க போனா திரும்ப எல்லா டெஸ்ட்டும் எடுத்துட்டு தான் டிரீட்மென்ட் ஸ்டார்ட் பண்ணுவாங்க. தேவையில்லாத அலைச்சல்.” என்றான் வேந்தன்.

எல்லா நேரமும் அவனோ கபிலனோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப் போவதில்லை. அதற்கான விடுப்பும் நேரமும் அவர்களிடம் இல்லை. கல்பனாவும் காயத்ரியும் தான் பார்க்க வேண்டும். அவர்களுக்கு பக்கமாக இருந்தால் தான் சிரமம் இருக்காது என்ற எண்ணம் வேந்தனுக்கு.

“போய் நின்னதும் நம்மளை முதல்ல பாக்குற அந்தஸ்துல நாம இல்லை. நம்மாள என்ன முடியுமோ அதை தான் செஞ்சுக்க முடியும். கல்பனா, அம்மா ரிப்போர்ட்ஸ் எல்லாமே பத்திரமா பையில போட்டு வை. இந்த வாரம் போய்ட்டு வந்துரலாம்.” கபிலன் முடிவாய் சொல்ல, வேந்தன் வாய் மூடிக்கொண்டான். மனதில் வேறு யோசனைகள். ஆனால் சரளாவோ,

“போற உசுரை இவ்ளோ கஷ்டப்பட்டு எல்லாம் புடிச்சி வைக்க வேணாம். நான் எங்கேயும் வர்றதா இல்ல.” அலட்டாது குண்டை தூக்கிப் போட்டார்.

“இதோ பாரு, உன்கிட்ட கெஞ்சி கொஞ்சி எல்லாம் சம்மதிக்க வைக்க எங்களுக்கு தெம்பு இல்லை. பையனும் பொண்ணும் சந்தோஷமா வாழுறதை பாக்கணும்னு எண்ணம் இருந்தா கிளம்பு இல்லையா உன் இஷ்டம்.” என்று ஒரே போடாய் போட்டார் கபிலன்.

“அப்பா? என்னங்க?” பிள்ளைகளின் அதிர்வோ மனைவியின் திகைப்போ ஒன்றும் செய்யவில்லை மனிதரை. 

மகள் தனித்து நிற்பதே மனதை உருக்கிக் கொண்டிருக்க, மனைவி பொறுப்பில்லாது பேசுகிறாளே என்ற ஆதங்கம் அவருக்கு. 

“எனக்கென்னன்னு பேசுறீங்க, ஏற்கனவே என் பொண்ணு ஒத்தையில நிக்குறா அவளை பாக்காம என்னை பார்த்து என்ன பண்ண போறேன்னு ஆதங்கத்துல பேசுனா அப்படியே விட்டிருவீங்களா?” கொதித்துப் போனார் சரளா.

“உன்கிட்ட சண்டை போடவும் தெம்பில்லை எனக்கு. பேசாம இரு, மனுஷனை கடுப்பேத்தாத.” அன்று என்ன ஆனதோ கபிலன் சிடுசிடுவென இருந்தார்.

“நான் பேசுனாலே கடுப்பாகுதா உங்களுக்கு?”

“அப்பா ஏதோ அசதில பேசுறாங்க. நீயும் ஏன்மா? அமைதியா இரேன்.” என்றான் வேந்தன்.

“பொண்ணை பெத்து வளத்து அவ இப்படி தனியா இருக்கறதை பாத்துட்டு அமைதியா தானே இருக்கேன். இன்னும் என்ன பண்ணனும்? மனசே ஆறல.” என்று கலங்கியர் அகத்தில் காயத்ரியின் பொலிவும் மகளின் நலிவும் ஒரு சேர வந்து வாட்டியது. ஒப்பீடு செய்ய விழையவில்லை என்றாலும் தானாய் ஒப்பிட்டு பார்த்தது மனம்.

கல்பனாவுக்கு காயத்ரிக்கும் கிட்டத்தட்ட ஒரே வயது. மாதங்களே வித்தியாசம். ஒன்றாகவே திருமணம் நடந்திருந்தாலும் காயத்ரி அளவுக்கு கூட மகள் வாழவில்லை, தன்னுடன் மருத்துவமனையில் தங்கி பின் வீட்டில் துணைக்கு இருந்தது என்று மகளின் திருமண வாழ்வு முக்கால்வாசி என்னுடனே கழிந்து முடிந்துவிட்டதே என்று எண்ணாமல் இருக்க முடியவில்லை.

“எல்லாரும் படுங்க, அவ புலம்பிட்டே இருக்கட்டும்.” என்று படுத்துவிட்டார் கபிலன்.

வேந்தன் அன்னையையும் தங்கையையும் ஒருமுறை பார்த்தவன் அறைக்குச் சென்றுவிட்டான். பின்னோடே காயத்ரியும். பெத்த மனம் மகன் வாழ்க்கை எண்ணி மகிழ்வதா மகள் வாழ்க்கை எண்ணி குமைவதா என்று தெரியாது மகள் பக்கம் சாய்ந்துவிட்டார்.

Advertisement