Advertisement

“என்கிட்ட தான் கடைசியா பேசினான். உங்களை எல்லாம் பாத்துக்க சொல்லிட்டு கண் மூடினான். அப்போ அவன் கண்ல பயம் தெரில,  எல்லாத்தையும் நான் பொறுப்பா பாத்து சரி பண்ணிடுவேன்னு நம்பிக்கை தெரிஞ்சுச்சு. என்னையும் உங்கள்ல ஒருத்தனா சேர்த்துக்கோங்க. அவன் இடத்தை கண்டிப்பா என்னால நிரப்ப முடியாது. ஆனா என் வாழ்க்கையில இருக்கிற வெற்றிடத்தை உங்களால நிரப்ப முடியும்.” என்றதும் தேவி நிமிர்ந்து அவன் முகம் பார்த்தார்.

அருணை ஒன்றிரண்டு முறை தான் பார்த்திருக்கிறார் எனினும் அவனை பற்றிய பேச்சுக்கள் இன்றி அவர்கள் நாள் என்றும் கழிந்ததில்லை. சிகாவின் காலை எப்படி தொடங்கினாலும் இரவுகள் அருண் புராணமின்றி ஓயாது. குடும்பம் இல்லை, ஒழுங்காய் உண்ணுவதில்லை, உறங்குவதில்லை, மனதில் எதையோ வைத்து மருகுகிறார் என்று புலம்பிவிடுவான் சிகா. அருண் பேச பேச சிகா பகிர்ந்ததின் நினைவுகள் மேலெழும்பி வர, புதிதாய் ஊறியது கண்ணீர்.

“கொஞ்சமா சாப்புடுங்க. நீங்க திடமா இருந்தா உங்க குடும்பமும் எழுந்துடுவாங்க.” என்றான் அருண்.

“புருஷனை இழந்தாலும் என் புள்ளைங்க இருக்காங்கன்னு தேத்திகிட்டு இந்த ஊருக்கு வந்தேன். இப்படி புத்திர சோகத்தையும் எனக்கு குடுத்திருக்க வேண்டாம் எங்க மாரியாத்தா. எங்க குடும்பத்து மேல அப்படி என்ன வெறுப்பு… சொந்த மண்ணுல எல்லாத்தையும் இழந்து இப்போ புள்ளையும் இல்லை. என்ன பாவம் பண்ணேன்னு தெரியலயே.” அழுகையுடன் வந்தது தேவியின் வார்த்தைகள்.

“நீங்களே இப்படி பேசுனா கல்பனாவுக்கு ஆதரவா யார் இருப்பா. அந்த பொண்ணை நினைச்சு பாருங்க அம்மா… அந்த பொண்ணுக்காகவாவது நீங்க தேறி வரணும்.”

தேவியின் பார்வை கல்பனாவிடம் சென்றது. புத்திர சோகம் ஒருபுறம் இருந்தாலும் இந்த பெண் எத்தனை கனவுகளோடு மணவாழ்வில் அடியெடுத்து வைத்திருப்பாள். இப்படி ஆகிவிட்டதே, என் துயருக்கு சற்றும் குறைந்தது இல்லை அவளது. தான் தேறினால் தான் இந்த பெண்ணை தேற்ற முடியும் என்று தோன்ற, தொண்டை அடைத்தாலும் கல்பனாவை கைபிடித்து அழைத்து தானே ஊட்டிவிட்டார்.

உணவு தேவைப்படவில்லை என்றாலும் தான் இப்படியிருந்தால் தன்னை பார்த்து எல்லாரும் வருந்துவர் என்று கடினப்பட்டு உணவை முழுங்கினாள் கல்பனா.

எப்படியோ உண்டு உறங்கினால் சற்று தெளிவார்கள் என்ற நம்பிக்கையில் அருண் கிளம்ப எத்தனிக்க, 

“சாப்புட்டுட்டு போங்க.” என்று நிறுத்தினாள் கல்பனா.

சிகா அருணை பற்றி சொல்லும் போதெல்லாம் கேலி பேசியிருக்கிறாள், கோபப்பட்டு, எரிச்சல் பட்டிருக்கிறாள். ஆனால் இன்று முன்னின்று அனைத்தையும் அவன் செய்ததில் சிகா இவரை புகழ்ந்து தள்ளியதில் தவறவில்லை என்ற எண்ணம். அதன்பொருட்டே அவனை கவனித்தாள்.

அவளின் அக்கறையில் ‘இந்த பெண் சீக்கிரம் தேறிவிடுவாள்’ என்ற நம்பிக்கை அருணுக்கு.

“இருக்கட்டும். பாத்துக்கோங்க,” என்றுவிட்டு கிளம்பிவிட்டான்.

வீடு மயான அமைதியாகிவிட, சுசீலாவின் அன்னை மகளிடம் தனியாக பேச நேரம் பார்த்துக்கொண்டிருந்தார். ஆனால் சூழ்நிலை கிடைக்காது போக, வேறு வழியின்றி கிளம்பிவிட்டார்.

இரவு சுசீலாவே அனைவரையும் கவனித்துக்கொண்டாள். ஹாலில் பாய் விரித்து படுக்கச் சொல்ல, அவனில்லாத இரவு கல்பனாவை திகிலூட்டியது. மொத்தமாய் இருபது நாள் கூட இன்னும் ஆகவில்லை அதில் பாதி நாளுக்கு மேல் அம்மா வீட்டினில், சிகாவுடன் இருந்த பொழுதுகளை விரல் விட்டு எண்ணிவிடலாம். ஆனால் அந்த சொற்ப நாட்களே வாழ்க்கை முழுதுக்கும் போதும் என்றளவுக்கு நிறைவாகவே இருந்தது.

தொண்டையை அடைக்கும் துக்கத்தை விழுங்கிவிட்டு அமைதியாக சென்று படுத்துக்கொண்டாள் கல்பனா. தலையணை அவளது துக்கத்தை அமைதியாய் பகிர்ந்து கொண்டது. கல்பனா படுத்ததும் சுசீலா தேவியைப் பார்க்க, அவரும் கண்ணை கசக்கியபடி கல்பனா அருகில் படுத்துக்கொண்டார். 

பெருமூச்சுடன் கதவடைத்து விளக்கணைத்த சுசீலா அறைக்குச் செல்லத் தயங்கி வாயிலில் நின்றாள். அறையை விட்டுக்கொடுக்கும் போதெல்லாம் முகத்தை தூக்கியிருந்தாலும் ஒருநாளும் இப்படி மொத்தமாக அவர்களின் வாழ்க்கை முற்றாகிட வேண்டும் என்று எண்ணியதில்லை. மனது கனத்தது. வாழ்க்கை பற்றிய பயம் மீண்டும் பன்மடங்காக உயர்ந்தது. 

“சுசீ,” சேகரின் குரல் உள்ளிருந்து நயித்து வர, அவனை சமாளிக்கும் திடம் கொடு என்று கடவுளை வேண்டியபடி உடைந்திருந்த சேகரை தேற்றச் சென்றாள் சுசீலா. 

அவனில்லாத நாட்கள் ஆமை வேகத்தில் நகரத் துவங்கியது. அவனில்லை என்ற நிதர்சனத்தை அனைவரும் ஏற்றுக்கொண்டாலும் புகைப்படமாய் அடைக்கப்பட்ட சித்தப்பா எங்கே என்று கனி தினம் பத்து முறையாவது கேட்டுவிடுவாள். பிரிதுயர் உணர்ந்த பிஞ்சுக்கு அந்த பிரிவு நிரந்தரம் என்று இன்னும் புரியவில்லை. 

ஒரு வாரம் சென்றிருக்கும், கையில் மஞ்சப்பையுடன் வீட்டிற்கு அன்று காலையே வந்துவிட்டான் அருண். வந்தவனை சுசீலா வரவேற்க, கல்பனா புன்னகைக்க முயன்று தோற்றுப்போனாள். 

“சேகர் இல்லையா?”

“ரூம்ல இருக்காரு,” சுசீலா அவனை அழைத்தாள்.

சேகர் வந்ததும் அந்தப்பையை அவனிடம் நீட்டினான். சேகர் வாங்காது நெற்றி சுருக்கிப் பார்க்க, “வாங்கிக்கோங்க, உங்க தம்பியோடது.” என்று அவன் கையில் திணித்தான். 

கையிலிருந்த பையையும் அருணையும் மாறி மாறி பார்த்துக்கொண்டே பையை பிரிக்க, அதில் ஐநூறு ரூபாய் நோட்டுகள் கொண்ட ஒரு கட்டு பணம் இருந்தது. அதிர்ந்த சேகர் அருணை பார்க்க,

“சிகா வேலை செய்யும் போது கொஞ்சம் புடிச்சிட்டு தான் சம்பளம் கொடுப்பேன், பின்னாடி அவனுக்கு தேவைப்படும் போது கொடுக்கலான்னு இருந்தேன்.”

“இவ்ளோவா?” நம்பாது கண்களை சுருக்கினான். 

“உங்களுக்கு இப்போ உதவியா இருக்கும். வச்சிக்கோங்க.” என்றவன் மற்றொரு பையை எடுத்து தேவியிடம் நீட்டினான்.

அவரும் புரியாது பார்க்க, “உங்க பேர்ல பேங்க்ல ஆர்.டி கட்டிட்டு இருந்தான், அதை க்ளோஸ் பண்ணி வட்டி வர மாதிரி எஃப்.டியா மாத்திட்டேன். பெரிய தொகை இல்லைனாலும் உங்களுக்கு கைகொடுக்கும்.” என்று சொல்லி அவரிடம் அதற்கான ஆவணங்கள் இருக்கும் பையை கொடுத்தான். 

அடுத்து ஒரு கவரை கல்பனாவிடம் நீட்ட, தயங்காது அதை வாங்கி பிரித்துப் பார்த்தாள். அவர்கள் வட்டாரத்தில் இயங்கும் நிதி நிறுவனம் ஒன்றில் நடக்கவிருக்கும் நேர்முக தேர்வுக்கான விண்ணப்பம் இருந்தது.

“இது சும்மா கண்துடைப்புக்கு வைக்குற இன்டெர்வியூ தான். இந்த பார்ம் பில் பண்ணி அங்க குடுத்திட்டீங்கன்னா இன்டெர்வியூக்கு கூப்புடுவாங்க. பெருசா எல்லாம் கேள்வி இருக்காது, எனக்கு அங்க கணக்கு வழக்கு இருக்கு நான் சொல்லி இருக்கேன் கண்டிப்பா உங்களுக்கு கிடைச்சுடும். இது புடிக்கலைனாலும் சொல்லுங்க வேற என்ன பண்ண முடியுமோ அதை பண்ணிடலாம்.” என்றான் கல்பனாவிடம்.   

அடுத்து என்ன என்று இவர்கள் யோசிக்கவும் மறந்திருக்க, அடுத்து அடுத்து என்று நீங்கள் செல்லத்தான் வேண்டும், எதுவும் இதோடு நிற்கப் போவதில்லை வாழ்க்கையை வாழ்ந்துதான் ஆகவேண்டும் என்று உசுப்புவது போலிருந்தது அருணின் செயல்.

அழுத்தியிருந்த பாரம் ஓரடி பின் சென்று அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று மனங்கள் கணக்கிட ஆரம்பித்தது. சிகாவின் பணத்தை வைத்து கனியை பள்ளி சேர்த்துவிடலாம் என்ற கணக்கு சேகருக்கும் சுசீலாவுக்கும். 

எவ்வளவு வட்டி வரும் என்று தெரியவில்லை என்றாலும் இனி அனைத்தையும் யோசித்து குடும்பத்தை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் தேவிக்கு.

கல்பனா அடுத்து என்ன செய்வது என்று புரியாது முடிவெடுக்க முடியாது நின்றாள். மேற்படிப்பு படித்து வேலைக்கு சென்றுகொண்டே ஆசிரியர் பயிற்சிக்கும் படித்து ஆசிரியர் ஆக வேண்டும் என்ற அவளது திட்டங்கள் அவசர திருமணம் என்றதிலேயே அடிபட்டு போனது. எல்லாம் சரியானதும் மேலே படிக்க வைக்கிறேன் என்று சிகா வாக்கு கொடுத்திருந்தான். இப்போது அவனே இல்லை எனும்போது எங்கு திரும்பினாலும் முற்றுப்புள்ளியே முந்தி நின்றது.

என்ன உதவி வேண்டுமானாலும் எந்த நேரமாக இருந்தாலும் அழைக்கும்படி சொல்லிவிட்டு தன் அலைபேசி எண்ணையும் பகிர்ந்துவிட்டு கிளம்பினான் அருண். சேகரும் அன்றுதான் வேலைக்கு கிளம்ப, மாலையே அருண் வந்து சென்ற விசயம் கேள்விப்பட்டு வந்துவிட்டனர் வேந்தனும் கபிலனும்.

“கல்பனாவை வீட்டுக்கு கூட்டிட்டு போறோம்.” என்று மொட்டையாய் கூற, ஒருவருக்கும் புரியவில்லை.

“அம்மாக்கு முடியலையா அப்பா?” என்ற கேள்விதான் கல்பனாவிடம்.

“புதுசா என்ன வந்துட போகுது அவளுக்கு? நீ கிளம்பு வீட்டுக்கு போகலாம்.” என்றார் கபிலன்.

இப்போது அவர் சொல்வதன் அர்த்தம் தேவிக்கு புரிவது போல் இருக்க, “அண்ணா!” அதிர்ந்தார் அவர்.

“இன்னும் என்ன நடக்கணும் தேவி. அடுத்தது என்னனு அந்த பையன் சொல்ற நிலைமையில இருக்கோம். கல்பனாவை இனி நாங்க பாத்துக்குறோம்.” என்று உடைத்து பேசினார் கபிலன்.

“ப்பா என்ன பேசுறீங்க. நீங்க கிளம்புங்க.” என்றாள் கல்பனா.

“நல்லா யோசிச்சு தான் இந்த முடிவுக்கு வந்திருக்கோம். சிகாவுக்கு இவ்வளவு தான்னு இருந்திருக்கு முடிஞ்சிடுச்சி. ஆனா நீயும் இப்படியே இருக்கணும்னு அவசியம் இல்லை.” என்றான் வேந்தன்.

எதிர்த்து பேச வேண்டும் என்று மூளையும் மனமும் உந்தினாலும் கல்பனாவுக்கு கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது. அவ்வளவு தான் என்று எத்தனை எளிதில் சொல்கிறார்கள். இத்தனை சுலபமாய் முறித்துக் கொள்ளும்படியான உறவா அவர்களுடையது? எத்தனை நேசம், எதிர்பார்ப்புகள், கனவுகள் அனைத்தும் அவ்வளவு தானா?

“அழுது முடிக்கட்டும், நாங்க வெய்ட் பண்றோம்.” என்றார் கபிலன் இறுக்கமாய். மகள் வாழ்க்கை கண்முன் ஆட்டம் காட்ட, தளர்ந்து நலிந்து பின் இறுகிவிட்டது மனது.

நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று எந்த முகாந்திரத்தில் அண்ணனிடம் பேசுவது, சேகரை நம்பித்தான் இனி குடும்பம் என்றாகிவிட்ட, சேகர் முகம் பார்த்தார் தேவி. அவனுக்கோ இது மாதிரியான சூழலில் முடிவெடுத்து பழக்கம் இல்லாததால் திண்டாடிப் போனான். தான் ஏதாவது சொல்ல வேண்டுமா? என்ன சொல்வது? என்று மனைவியை பார்க்க அவள் கல்பனாவை பார்த்தாள். 

ஒரு மூச்சு அழுத கல்பனா புறங்கை கொண்டு முகத்தை துடைத்துக்கொண்டு, “அத்தான் இல்லைனா இது என் வீடு இல்லைனு ஆகிடுமா. அங்க வரமாட்டேன்னு எல்லாம் சொல்லல, ஒரு பத்து நாள் அங்க இருந்தா மீதி நாள் இங்க தான் இருப்பேன்.” சரளாவின் உடல்நிலையையும் கணக்கில் வைத்து அவள் சொல்ல, வேந்தன் ஏதோ மறுக்கப் போக அவன் கைபிடித்து தடுத்தார் கபிலன்.

“உன் விருப்பப்படியே இரு. அம்மா உன்னை நினைச்சு அழுதழுது ரொம்ப சோர்ந்து தளர்ந்து போயிட்டா. ஒரு வாரம் வந்து இருந்து அவளை பார்த்துக்கோ.” என்று கபிலன் பேச, அம்மாவை முன்னிறுத்தவும் மறுக்க முடியவில்லை கல்பனாவுக்கு.

ஒரு வாரம் இருந்துவிட்டு வருகிறேன் என்று சொல்லி கிளம்பிச் சென்றவள் நான்கு நாட்களிலேயே திரும்ப வந்துவிட்டாள்.

Advertisement