Advertisement

*8*

மடிந்ததின் வலியை அனுபவித்தவன் அதையெல்லாம் தாண்டி முன்னேற வேண்டும் என்ற துடிப்புடன் இருந்தவன் மூச்சை முடக்கியிருந்தது அந்த விபத்து. எல்லாம் முடிந்தது என்று நினைக்கையிலேயே அருணின் கை நடுங்க, அருகில் இருந்தவர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்து சிகாவிடமிருந்து அருணை பிரித்து தனியாக அமர வைத்தனர். 

தன் உடல் முழுதும் ஈஷியிருந்த சிகாவின் இரத்தம் அருணின் மூளை முடுக்கெல்லாம் சென்று சேர்ந்து அவனை நடுங்க வைத்தது.

“நல்ல பையன்.”

“தான் உண்டு தன் வேலை உண்டுன்னு இல்லாம துறுதுறுனு இருப்பான்.”

“எப்படி எப்படியோ வர வேண்டிய பையன் இப்படி ஆகிடுச்சே.”

“கலிகாலம், கொள்ளைகாரங்க, கொலைகாரங்க எல்லாம் தெனாவெட்டா சுத்தும் போது துடிப்போட இருந்தவனை தூக்கிட்டு போயிடுச்சே இந்த விதி.” 

சிகாவை பற்றி தெரிந்த அக்கம்பக்கத்து கடைக்காரர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்ள எதுவும் அருண் கருத்தில் பதியவில்லை. அதிர்வில் அவன் வீட்டுக்கு அழைத்து தகவல் சொல்ல வேண்டும் என்ற எண்ணமும் எழவில்லை. 

அருகில் இருந்தவர்களே அருணை உசுப்பி சிகாவின் அண்ணனுக்கு தகவல் தர வைத்தனர்.

விஷயம் கேள்விப்பட்டு பதட்டத்துடன் ஓடி வந்த சேகரை வரவேற்றது அருணின் கடைக்கு வெளியே குறிப்பிட்ட இடத்தை சுற்றிலும் டேப் சுற்றப்பட்டு அதனுள்ளே வெள்ளை நிற மார்க் இடம்பெற்றிருந்த வெற்றிடம் தான். 

“என்… என்னாச்சு? சி… சிகா எங்க?” சேகரின் கரகரத்த குரலில் தெளிந்த அருண், கோடாய் வழிந்த விழிநீரை துடைத்தபடி எழுந்தான். நெஞ்சடைக்கும் உணர்வை ஏற்கனவே அனுபவித்தவன் என்றாலும் சிகாவின் இழப்பால் மீண்டும் தோன்றிய அவ்வுணர்வு செயலிழக்க வைத்தது.

“வாங்க…” சேகர் கைப்பற்றி அங்கிருந்த கட்டையில் அமர வைத்தவன், தண்ணீர் வர வைத்து கொடுக்க, நடுங்கும் கரத்துடன் அதை பற்றி அருகில் வைத்துவிட்டு அருண் கையை இறுக பற்றினான்.

“சிகா எங்கன்னு சொல்லுங்க.”

கலங்கிய கண்களை துடைத்த அருண் சேகர் கை பற்றி எழுப்பி அழைத்துக்கொண்டு மருத்துவமனை சென்றான்.

அருண் வாய் திறந்து சொல்லாவிடினும் நிதர்சனம் புரிந்தது சேகருக்கு. வாய் விட்டு சொல்ல முடியாத பாரமொன்று தொண்டையில் சிக்கிக் கொண்டு அழுத்தியது. வாழ்க்கை பற்றிய பயம் ஒரு ஓரத்தில் இருந்தாலும் அதை பெரிதாய் மண்டையில் ஏற்றுக்கொள்ளாது இத்தனை தினங்களை கடந்திருக்க, சிகா இல்லாத அந்த சில நிமிடங்களை கடப்பது முடியவே முடியாத காரியமாய் தெரிந்தது.

ஈடு செய்ய முடியாத இழப்பு என்பார்களே அப்படியான வேதனை குடும்பத்தினருக்கு. 

மருத்துவமனை சென்று அரசு நடைமுறைகள் அனைத்தையும் செய்து சிகாவை வீடு சேர்த்திருந்தான் அருண்.

விடியலில் காதல் பார்வை பார்த்து, கலகலவென சிரித்து கனியுடன் விளையாடிவிட்டு சென்றவன் மறுவிடியல் காணாத வண்ணம் வீடு வந்திருக்க, என்ன நடக்கிறது என்பதை உணர முடியாது சிலையென உறைந்திருந்தாள் கல்பனா. அவள் மட்டுமல்ல தேவியும் சரளாவும் கூட நடந்துவிட்ட விபரீதத்தை கிரகிக்க முடியாது சிகாவின் உடலை வெறித்தபடி அமர்ந்திருந்தனர். 

மகள் வாழ்க்கை என்ற கேள்வி தொங்கி நிக்கையிலே நொடிந்துவிட்டார் கபிலன். வேந்தன் கூட இறுக்கமாய் அமர்ந்திருந்தான். ஒவ்வொருவர் மனதிலும் ஒவ்வொரு விதமான பாரம். 

கவலைகள் பல இருந்தாலும் அதையெல்லாம் தூசு போல் தட்டிவிட்டு எதையும் தீர்க்கத்துடனும் நம்பிக்கையுடனும் அணுகுபவனை இனி எங்கனம் கொண்டு வர… அவன் விட்டுச் சென்ற இடத்தை ஈடு செய்வோர் உண்டோ. அவனுக்கு நிகர் அவனே எனும்போது அவனின் இழப்பை தாங்கிக்கொள்ளவது முடியாதல்லவா.

உணர்விலும் உயிரிலும் கலந்துவிட்டவனோடு எக்கணத்திலும் இனி சேர முடியாது என்ற நிதர்சனம் தாக்க, கல்பனாவின் கண்ணீர் கோடாய் இறங்கியது. அதரங்கள் நடுங்க, வெடித்துக் கிளம்பும் அழுகையை வெளிக்காட்ட தெம்பின்றி பிரிதுயரை மெல்ல உணர்ந்தாள் அவள். 

அவனில்லாத உலகம், அவனில்லாத விடியல், அவனில்லாத வாழ்க்கை என்ற உண்மை மெல்ல மூளையின் நரம்புகள் அனைத்திற்கும் சென்றடைய கேவல் வெடித்துக் கிளம்பியது. 

கண்ணீரை துடைத்தபடி அவளின் ஒரு புறம் சுசீலாவும் மறுபுறம் காயத்ரியும் அமர்ந்திருந்தனர். பெயருக்கு கூட என்ன ஆறுதல் சொல்லி கல்பனாவை தேற்றுவது என்று தெரியவில்லை இருவருக்கும். 

இதில் சுசீலா பாடு திண்டாட்டமாகிப் போனது. வெளிறிப் போயிருந்த முகத்தோடு சுவரை வெறித்தபடி அமர்ந்திருக்கும் கணவனை நெருங்க முடியாது தவித்துக்கொண்டிருந்தாள் சுசீலா. 

அவளுக்குத் தெரியும் சிகா சேகரின் பலம். சிகா அவர்களின் நம்பிக்கை. சிகா அவர்கள் வாழ்க்கையின் விடியல். துவண்டிருக்கும் நேரத்தில் தோள் கொடுக்கும் விருட்சம்.

காலம் முழுதும் அவனை நம்பி இருக்க முடியாது என்பது தெரிந்தாலும் தள்ளி நின்றாவது தங்களுக்கான வழி காட்டுவான் என்ற தைரியம் இருந்தது. இப்போது அது உடைந்துவிட, அவர்களே உடைந்துவிட்ட நிலை. 

அனைவரையும் ஒற்றை ஆளாய் தேற்றி இறுதி காரியங்களை செய்ய வைத்திருந்தான் அருண். 

அழுது அழுது கல்பனாவின் இமைகள் வீக்கம் கண்டுவிட, சிகை கலைந்து பார்க்கவே பரிதாபமாக இருந்தாள். கண்ணீரும் கம்பலையும் என்பார்களே அப்படி. அவளுடன் கலந்திருந்த சிகாவே இல்லை எனும் போது அவளிடமிருந்து பறிக்கப்பட்ட சுமங்கலியின் அடையாளங்கள் அவளை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. முற்றிலும் ஓய்ந்து துவண்டு போயிருந்தாள். 

“ரெண்டு கல்யாணமும் ஒன்னா நடக்கும் போதே எனக்கு மனசுல பட்டுச்சு, சொல்ல வேணாம்னு இருந்தேன். ஆனா தோனுன மாதிரியே நடந்துருச்சு. நீங்க யோசிச்சு செஞ்சிருக்கணும் சம்மந்தி.” சுசீலாவின் அம்மா தேவியிடம் துக்கம் விசாரித்து பேச்சு வாக்கில் வார்த்தை விட்டுவிட, கல்பனா குடும்பம் மொத்தமும் அதிர்ந்து பார்த்தது.

காயத்ரி மெல்ல நகர்ந்து கணவன் கை பிடித்துக்கொண்டாள். கசங்கிய முகத்துடன் அமர்ந்திருந்த கபிலனின் அகம் அதிர்ந்து நடுங்கியது. இரு பிள்ளைகளும் தாங்கள் விரும்பிய துணையோடு விரும்பியபடி வாழ வேண்டும் என்று மனதார வாழ்த்தி திருமணம் செய்தனர். அதில் மகள் வாழ்க்கை துவங்கிய சில காலங்களிலேயே முடிவுக்கு வரும் என்று ஒரு பொழுதும் எண்ணவில்லை.

“நான்தான் அவசரப்பட்டுட்டேன். என் பொண்ணு வாழ்க்கையை நாசம் பண்ணிட்டேன். இப்படி ஆகிடுச்சே என் பொண்ணு வாழ்க்கை.” ஓய்ந்திருந்த சரளாவின் அழுகை மீண்டும் துவங்கியது.

கல்பனாவின் விழிகளும் ஓயாது கண்ணீர் சிந்தியது. 

இதையெல்லாம் வீட்டின் வெளியே இருந்த அருண் கேட்டுக்கொண்டிருந்த அதற்கு மேல் பொறுக்க முடியாது உள்ளே வந்தான்.

“நீங்க எல்லாம் இப்படி அழுதுட்டு இருக்குறதை கண்டிப்பா சிகா விரும்பமாட்டான். உங்க எல்லாரையும் உசரத்துல வைக்கணும்னு ஆசைப்பட்டவன், தளர்ந்துபோய் அவனோட கனவை சிதச்சிடாதீங்க. நாம எல்லாம் அவன்கிட்ட இருந்து கத்துகிட்ட விஷயங்களை செய்யும் போது அவன் நம்ம கூடவே இருப்பான். நம்ம செய்ற விஷயங்கள்ல வாழ்வான். பிளீஸ், கொஞ்சமாச்சும் சாப்பிடுங்க, கொஞ்சம் தூங்குங்க.”

அருண் சொன்னதுமெல்லாம் ஒருவரும் இருந்த இடத்தை விட்டு நகரவில்லை. அப்படியே அமர்ந்திருந்தனர். ஆனால் துக்கம் சற்று மட்டுப்பட்டது போலிருந்தது.

“பிளீஸ் அம்மா அப்பாவை வீட்டுக்கு கூட்டிட்டு போய் ரெஸ்ட் எடுக்க வைங்க. இப்படியே இருந்தாங்கன்னா உடம்புக்கு எதாவது வந்துற போகுது. நீங்க நல்லா இருந்தா தான் கல்பனாவுக்கு ஆறுதலா இருக்க முடியும்.” என்று வேந்தனிடம் சொன்னான் அருண். 

வேந்தனும் புரிந்துகொண்டு அன்னையை கிளப்ப,

“என் பொண்ணு இப்படி இருக்கா அவளை விட்டுட்டு வர சொல்றியா? நான் வர மாட்டேன்.” சரளா முரண்டு பிடிக்க, வேந்தன் மனைவியைப் பார்த்தான்.

அவளும் வேகமாக அவர்கள் அருகில் வந்து, “கொஞ்ச நேரம் தூங்கி எந்திரிச்சு வரலாம் அத்தை. நீங்க இன்னைக்கு புல்லா மாத்திரை போடல.”

காயத்ரியின் கையை உதறிய சரளா, “என் பொண்ணு வாழ்க்கையே இப்படி ஆகிடுச்சு. இனி என் உடம்பை பார்த்து என்ன பண்ண போறேன் நானு.” என்று ஆவேசப்பட, 

“அத்தை…” காயத்ரிக்கு அதற்கு மேல் சமாதானம் செய்யத் தெரியவில்லை. அவள் முழித்து நிற்க, முடியை அள்ளி கொண்டையிட்ட கல்பனா முகத்தை அழுந்த துடைத்துக்கொண்டு எழுந்தாள்.

“ம்மா, நீ போய் மாத்திரை போட்டு தூங்கு.”

“கல்பனா…” மகள் கையை பிடித்து தன் முகத்தில் அழுத்தி கேவ ஆரம்பித்துவிட்டார் சரளா.

அவரின் அழுகை கல்பனாவை பலவீனப்படுத்த, இதழ் கடித்து உணர்வுகளை அடக்கியவள், “போன்னு சொல்றேன்ல. என்னாச்சு இப்போ? நான் நல்லாத்தானே இருக்கேன், எனக்காக உன்னை பார்த்துக்க மாட்டியா அத்தான் மாதிரி நீயும் என்னை விட்டுட்டு போகதான் விரும்புறியா?”அவள் குரலில் இருந்த நடுக்கமும் கலக்கமும் அனைவரையும் கலங்க வைத்தது.

“ஏண்டி உன்னை இப்படி பாக்கவா அவசர அவசரமா கல்யாணம் பண்ணி கொடுத்தேன். இப்படி பண்ணிட்டானே சிகா.”

“ம்மா, கிளம்பு, இங்க இருந்து அவளை திரும்பத் திரும்ப கஷ்டப்படுத்தாத.” வேந்தன் வலுக்கட்டாயமாக சரளாவை எழுப்பினான். 

“இல்லைடா வேந்தா, என் பொண்ணை இப்படி விட்டுட்டு போய்டானே… நம்பி பொண்ணை குடுங்கன்னு கேட்டான்னு நம்பி கொடுத்தேனே.” 

“சரி வாம்மா.” என்ற வேந்தன் அப்பாவை பார்க்க, அமைதியாய் அவர் வெளியேறிவிட்டார். 

காயத்ரி மறுபுறம் வந்து சரளாவை பிடித்துக்கொள்ள, இருவரும் அவரை அழைத்துச் சென்றனர். செல்லும் முன் தங்கையை பார்த்த வேந்தன் இடவலமாய் தலையசைக்க, உதடு பிதுக்கி மெளனமாய் கண்ணீர் சிந்தினாள் கல்பனா. 

கல்பனா குடும்பம் கிளம்பிவிட, மற்றவர்களை பார்த்தான் அருண். சிகா குடும்பம் முற்றிலும் ஒடிந்து ஓய்ந்து அமர்ந்திருந்தது. எதுவும் பேசாது வண்டியை எடுத்துச் சென்று உணவு வாங்கி வந்தான். வரும் வழியிலேயே கபிலன் வீட்டிலும் அவர்களுக்கான உணவை கொடுத்துவிட்டு சிகா வீட்டிற்கு வர, அவன் கிளம்பும் போது அவர்கள் எப்படி இருந்தார்களோ அப்படியே இருந்தார்கள் அனைவரும். 

தானே உணவை பிரித்து வைத்தவன் நொடி தயங்கினாலும் அதையெல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு தானே அடுப்பறை சென்று தேடி தண்ணீர் எடுத்து வந்தான். முதலில் சுசீலாவை அழைத்தவன் கனிக்கு உணவு கொடுக்கச் சொல்ல, புரிந்துகொண்டு மகளுக்கு ஊட்டினாள்.

“நீங்களும் சாப்பிடுங்க.” சுசீலாவின் பெற்றோரையும் அவன் அழைக்க, சுசீலாவின் தந்தை சேகரை சரிகட்டி உண்ண அழைத்து வந்தார். 

சுசீலாவின் அன்னை தேவியை அழைத்து வருவார் என்று அருண் பார்க்க அவரோ அவர் மகள், மருமகன், கணவர், பேத்தி என்று இருந்து கொண்டார். பெருமூச்சு ஒன்றை இழுத்து விட்டவன் தேவியிடம் தானே சென்றான்.

Advertisement