Advertisement

“சாப்பாடு எடுத்து வை கல்ப்ஸ் வந்துடுறேன்.” என்ற சிகா வாயிற்கதவு அருகே நின்று அன்னையை பார்த்துவிட்டு பின்பக்கம் கடைசியில் உள்ள மாடிப்படி வழியே மாடி ஏற, தேவியும் பின்னோடு சென்றார்.

“என்னடா?”

“பணம் ஏதாவது சேர்த்து வச்சிருக்கியா அம்மா?” சிகா நேரடியாய் கேட்டிட, புருவம் இரண்டையும் நெறித்து யோசனையாய் பார்த்தார் தேவி.

“இதுக்கு மேலையும் இந்த வீட்லயே இருக்குறது சரியா வராதுமா. நல்ல வேலை மாமா நம்மகிட்ட கேட்டாரு கேக்காம சீர்ன்னு கட்டில் பீரோ கொண்டு வந்து இறக்கியிருந்தாருன்னா எல்லாருக்குமே சங்கடமாகி இருக்கும். இருக்குற அந்த ஒத்த ரூம்லதான் எல்லாத்தையும் வைக்குற மாதிரி ஆகும். அண்ணியும் சேகரும் பொழங்க கஷ்டப்படுவாங்க. தனக்கு இல்லையேன்னு அண்ணி நினைச்சிட்டா நல்லதுக்கு இல்லைம்மா. 

கல்பனாவுக்கு நிறைய செஞ்சா அண்ணி வருத்தப்படுவாங்கனு மாமாகிட்ட சொல்லவும் முடியாது. அது தப்பு. வீடு மாறுனதும் சேகர் ரூமுக்கு ஒரு கட்டில் வாங்கிப் போட்டுடலாம். பணம் வச்சிருக்கியா?”

“கொஞ்சம் இருக்குடா, ஆனா அதையும் செலவு பண்ணிட்டா அவசரத்துக்குனு எதுவுமே இருக்காது. பச்சப்புள்ள இருக்குற வீட்டுல வெறுங்கையாவா இருக்குறது. ஒருநேரம் போல ஒரு நேரம் இருக்காது.”

“ம்ம், எனக்கிட்ட கொஞ்சம் இருக்கு. அட்வான்ஸ் கொடுக்க அது போதுன்னாலும் மாசாமாசம் வாடகைக்கு ரெடி பண்ணாம அதுல கைவைக்க முடியாது. இந்த மாசம் சம்பளம் வரட்டும் என்ன பண்ணலாம்னு பாக்குறேன்.” 

“உன்ன மாதிரி இந்த சேகரும் விவரமா இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்?” 

“ம்மா, என்ன நீ. இப்படி பேசுறேனு சேகருக்கும் அண்ணிக்கும் தெரிஞ்சா சங்கடப்படுவாங்க.” கண்டிப்பு சிகாவிடத்தில்.

“பொழப்புல நெளிவு சுழிவு கத்துக்காம இப்படியே இருக்கானேனு வருத்தமா இருக்குடா. பொம்பளை புள்ளை இருக்கு. நல்லா படிக்க வச்சு கட்டிக்கொடுக்க சூதானமா இருக்கணும்ல. நீயும் எத்தினி நாளைக்கு அவனுக்கும் சேர்த்து யோசிச்சு எல்லாம் செஞ்சிட்டு இருக்க முடியும்?”  

“என்னால முடியுற வரைக்கும் செய்யுறேன். அவனை அவன் போக்குல விடு. பொறுப்பில்லாதவன் எல்லாம் இல்லை அவன். நேரம் கூடி வரல அதான் இப்படி நிலையில்லாம இருக்கான். நாமளே நம்ம குடும்பத்தை விட்டுக்கொடுத்து பேசிடக்கூடாது.” 

“நாம நினைக்குறதுக்கு சக்தி உண்டுன்னு சொல்லுவாங்க. உன் எண்ணமாவது அவனை முன்னேத்தி விடட்டும். சாப்பிட்டுட்டு தூங்கணும், சீக்கிரம் கீழ வா.” என்ற தேவி படிக்கட்டுகளில் இறங்கும் முன் திரும்பி,

“இன்னைக்கு நீயும் கல்பனாவும் ரூம்ல படுத்துக்கோங்க.”

“ம்மா…” அழைப்பிலே மறுப்பு இருக்க, அதை கண்டுகொள்ளாது கீழே சென்றார் தேவி.

ஆனால் அவரின் எண்ணத்திற்கு மாறாய் ஹாலில் பாய் விரித்து கனியின் ஒருபுறம் கல்பனாவும் அவளின் மறுபுறம் சுசீலாவும் இருக்க, மானசீகமாக தலையிலடித்துக்கொண்டார் தேவி. 

“சிகா சாப்பிட வந்துடுவான் போய் எடுத்து வை.” என்று சின்ன மருமகளிடம் அதிகாரம் செய்தவர் அவள் எழவும் சட்டென அவளிடத்தில் படுத்துக்கொண்டார். உணவு எடுக்க அடுப்பறை சென்றதால் கல்பனா இதை கவனித்திருக்கவில்லை. ஆனால் தேவியின் எண்ணத்தை புரிந்துகொண்ட சுசீலா உதடு பிதுக்கி சன்னமாய் சிரித்தாள்.

“என்ன சிரிப்பு?” பெரிய மருமகளிடமும் அதிகாரம் தூள் பறந்தது. சுசீலா தலையை சிலுப்பி திரும்பி படுத்துக்கொண்டாள்.

சிறிது நேரத்திலேயே கீழிறங்கி வந்துவிட்ட சிகாவுக்கு கல்பனா உணவு பரிமாற ஹாலில் உறங்குவது போல் கண்மூடி படுத்திருக்கும் பெண்களை பார்த்து பின் மனைவியைப் பார்த்தான். 

“நான் கனி கூட படுத்துக்குறேன். நீங்களும் பெரிய அத்தானும் ரூம்ல படுத்துக்கோங்க.” கல்பனா சொல்ல, அதிர்ந்து எழுந்தாள் சுசீலா.

“சிகா தம்பியை விட்டு நீ தனியா படுக்கணும்னா பேசாம அத்தைக்கூட படுத்துக்கோமா ஏன் என் புருசனை இழுத்துவிடுற?”

சுசீலா இப்படியெல்லாம் பேசுவாளா என்பது போல் தான் அதிர்ந்து பார்த்தனர் ஏனைய மூவரும். 

“என்ன எல்லாம் அப்படி பாக்குறீங்க, கனி அப்பா வர லேட் ஆகும். நான் கதவு திறந்து விட்டுக்குறேன்.” என்றவள் மீண்டும் படுத்துக்கொள்ள, கல்பனா சிகா முகம் பார்த்தாள். அவன் உணவில் கவனம் வைக்க, பெருமூச்சு கல்பனாவிடம். சுசீலாவை புரிந்து கொள்வது கடினம் தான். 

சுசீலா தன்னிடமிருந்து ஒதுங்கிப் போவது போல் தெரிய அன்று முழுதும் அவளை இழுத்து வைத்து பேச்சு கொடுத்தாள். சட்டென சுசீலா ஒட்டாவிட்டாலும் முகம் எதுவும் காண்பிக்கவில்லை. கேட்டதற்கு பதிலும் கனியை அவளிடம் கொடுத்துவிட்டு சிறிது நேரம் அறையில் மதிய உறக்கம் கூட எடுத்தாள் சுசீலா. 

ஆனால் இரவு சிகா வந்ததும் சுசீலாவின் கண்கள் தானாய் அறை பக்கம் சென்றதை கண்டுகொண்ட கல்பனா, சுசீலாவின் சுணக்கத்தை அதிகப்படுத்தாது கொஞ்சம் விட்டுக்கொடுத்துப் போவோம் என்ற எண்ணத்திலேயே ஹாலில் படுத்தாள். சுசீலா மனம் சுணங்கி தங்களை கண்டு வருந்தினால் அது தங்களின் நிறைவையும் பாதிக்கும் மனம் உறுத்தும் என்ற நோக்கத்தில் கல்பனா நடந்துகொள்ள, தான் சங்கடப்படக் கூடாது என்று கல்பனா எடுக்கும் முயற்சிகளை அறிந்த சுசீலாவே மனமுவந்து அன்றைக்கு அறையை விட்டுக்கொடுத்தாள். 

விட்டுக்கொடுத்தார் கெட்டுப்போவதில்லை என்று அறிந்தே சொல்லி வைத்திருந்தார்கள் போலும். இரு மருமகள்களும் குடும்பத்தை ஒற்றுமையாய் நடத்த தங்களால் ஆன முயற்சியை முயற்சித்து பாக்கலாம் என்று ஒருமித்தமாய் முடிவு செய்தனர். 

காலை உணவு முடித்து ஓய்வாய் அமர்ந்த சமயம், “மதியம் சமைக்க காய் எடுத்துக்கொடு நான் நறுக்கித் தரேன்.” என்று மருமகளிடம் கேட்டார் சரளா.

இரவு தாமதமாய் உறங்கி, காலை கணவனின் சீண்டலிலிருந்து தப்பித்து அவசர அவசரமாக சிற்றுண்டி செய்து கொடுத்து வேலைக்கு செல்பவர்களை அனுப்பிவிட்டு தானும் உண்டு மாமியாருக்கு வேண்டுவதை செய்துவிட்டு மூச்சு விட நினைக்கையில் சரளா கேட்டது எரிச்சல் மூட்டியது.

“இப்போவே என்ன அவசரம் அத்தை. கொஞ்ச நேரம் கழிச்சு வெட்டிக்கலாம்.”

“என்னால முடியும் போதுதான் வெட்ட முடியும்டி. போய் எடுத்துட்டு வா.”

“என்னால இப்போ முடியாது போ அத்தை. அலுப்பா இருக்கு.”

“பிரிட்ஜிலேந்து எடுத்துட்டு வந்து கொடுக்க வலிக்குதாடி உனக்கு? தினம் உன் மாமாவுக்கும் உன் புருசனுக்கு மதியம் சாப்பாடு செஞ்சு கொடுத்து விடுவேன்டி நான். உனக்கு சிரமமா இருக்குமேன்னு ரெண்டு பேரும் தினம் மதியம் வெளில சாப்பிட்டுட்டு இருக்காங்க, நீ என்னடான்னா இதுக்கே சலிச்சிக்குற.”

“உனக்காக தான் மதியம் கூட்டு பொரியல் சாம்பார்னு நிறைய சமைக்கிறேன், நீ என்னையே சொல்ற அத்தை.”

“அடிக்கழுதை, நீ தினம் சாம்பார் வைக்குற ரகசியம் எனக்கு தெரியாதுன்னு நினைச்சியா. ராத்திரி உன் புருசன் சாப்புடுறான்னு தான் தினம் நீ சாம்பார் வைக்குற, பொரியல் இல்லைனா உனக்கு இறங்காது. எல்லாம் உங்களுக்கு செஞ்சிட்டு எனக்காக செஞ்சாலாம்… ஹ்ம்ம்கூம்.” நொடிப்பு சரளாவிடம். 

மகள் இருந்தவரை நேரத்திற்கு உணவு, பழச்சாறு என்று அமர்களப்பட்டது கவனிப்பு. மகள் வீடு சென்றதும் பழங்கள் குறைந்துவிட்டது, உணவும் இவர் நேரத்திற்கு தோதுப்படவில்லை. அண்ணன் மகளே மருமகளாகிவிட்டது மட்டுமின்றி மகனின் பேச்சு குறைந்து, பார்வை எப்போதும் மனைவியை சுற்றியே வருவதால் குடும்பத்தில் தன் பிடி தளர்வது போல் ஒரு பிம்பம். அதை இழுத்துப்பிடிக்கும் நோக்கில் இறுக்கம் காட்டத் துவங்கினார்.

சரளா இறுக்கிப்பிடிக்கவும் முணுமுணுப்புடன் அடுப்பறை சென்றவள் நான்கு கேரட்டை மட்டும் எடுத்துவந்து நீட்டினாள்.

“என்ன இதை மட்டும் எடுத்துட்டு வர?”

“இது மட்டும்தான் இருக்கு.”

“காய்கறி தீர்றதுக்கு முன்னாடியே சொல்லி இருந்தா உன் மாமா வாங்கி வந்திருப்பாருல. இதை மட்டும் வச்சி என்ன செய்யுறது? பக்கத்து கடையில போய் இன்னைக்கு சமைக்க மட்டும் காய் வாங்கிட்டு வந்துடு. ராத்திரி வீட்டுக்கு வரும்போது உன் மாமாவை ஒரு வாரத்துக்கு தேவையானது எல்லாம் வாங்கிட்டு வர சொல்றேன்.”

“ம்ம்கூம், இப்போல்லாம் கடைக்கு போக முடியாது. இதை சீவி கொடு, நான் கேரட் சாதம் செய்யுறேன்.” என்று பிடிவாதமாய் நின்றாள் காயத்ரி.

“இப்படிலாம் சாப்டா எங்கிருந்து சத்து சேரும். இதோ இப்போ மாதிரி குச்சியா இருக்க வேண்டியது தான்.” என்று அவள் உருவத்தை பேச, விறுவிறுவென அறைக்குள் சென்றவள் ஒரு ஷால் எடுத்து நைட்டி மேல் போட்டுக்கொண்டு வெளியேறிவிட்டாள்.

செல்லும் அவளையே பார்த்த சரளா மகளுக்கு அழைத்து விட்டார்.

“இவ என்னடி தொட்டா சிணுங்கியா இருக்கா. ம்ன்னா கோவம் வந்துடுது.”

“அவ அப்படித்தான்னு உனக்கு தெரியாதா. கோவம் தான் பொசுக்குன்னு வரும் ஆனா மனசுல எதுவும் வச்சிக்க மாட்டா.”

“உன் அண்ணனும் சரியில்லை. குட்டி போட்ட பூனையாட்டம் அவ பின்னாடியே சுத்திட்டு இருக்கான்.”

“ம்மா, விருப்பம் இருந்தாலும் வீட்டை மதிச்சு காயத்ரியை தொந்தரவு பண்ணாம தள்ளி இருந்து கல்யாண பேச்சு வந்ததும் தானே சொன்னான். புதுசா கல்யாணம் ஆகியிருக்கு அப்படித்தான் இருப்பாங்க. இத்தனை நாள் எவ்வளவு அழுத்தம் நம்ம எல்லாருக்கும், இப்போ கொஞ்சம் ஆசுவாசமா இருக்கட்டும் ம்மா.”

“நீயும் தான் விரும்பி கட்டிகிட்ட, இப்படியா இருக்க இல்லை சிகா தான் இப்படி இருக்கானா?”

“ம்மா, கம்பேர் பண்ணாத. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி அன்பை வெளிப்படுத்துவாங்க. அண்ணன் வெளிப்படையா காட்டுது. இப்படியெல்லாம் பேசாத அம்மா. 

நம்ம அத்தை வீடுங்குற உரிமையில இயல்பு மாறாம அவ அவளாவே இருக்கா. நீ இப்படி பேசுறேன்னு தெரிஞ்சா வருத்தப்படுவா. அண்ணனுக்கு தெரிஞ்சா நல்லா இருக்காது.” 

“என்னவோ சொல்ற, இப்போ சீர் வேணாம்னு சிகா சொல்றானாம். இப்போ செய்யாம வேற எப்போ செய்யுறது?”

“ஏற்கனவே பேசி முடிச்ச விசயத்தை திரும்ப ஆரம்பிக்காத.”

“அதெப்டிடி, காயத்ரிக்கு சீர் இறக்குறோம்னு உன் மாமா நாள் குறிக்க சொல்லி கேட்டிருக்காங்க, உனக்கு செய்யாம எப்படி?” என்று இழுத்தார் சரளா.

“கல்யாணம் ஒரே நாள்ல நடந்ததுனால எல்லாமே ஒரே மாதிரி நடக்கணும்னு இல்லைம்மா, அத்தான் சொன்ன மாதிரி அப்புறம் செய்ங்க நாங்க வேணாம்னு சொல்ல மாட்டோம்.” கல்பனா சமாதானம் செய்து வைக்க, மகளிடம் இருக்கும் பக்குவம் மருமகளிடம் இல்லை என்ற எண்ணம் வலுப்பெற்றது.  

காரணம், பிறந்த வீட்டு சீர் வரப்போகிறது என்றதும் ஒளிர்ந்த காயத்ரியின் முகம், கல்பனாவுக்கு செய்ய வேண்டும் என்றதும் ஒளி குன்றியதே. 

இரு சம்பந்தி குடும்பத்திற்கும் ஒரே நாளில் விருந்து ஏற்பாடு செய்து சீர் வாங்கி, கல்பனாவுக்கான சீரையும் செய்துவிடலாம் என்று சரளா யோசனை சொல்ல, திருமணம் தான் ஒரே நாளில் நடந்தது சீர் விசேசம் கூட ஒன்றாய் தான் நடக்க வேண்டுமா, எனக்கே எனக்கான நாளாக நான் நினைவு கொள்ளும்படியாக எதுவும் தனித்து இருக்காதா என்ற ஆதங்கம் தான் காயத்ரிக்கு. அது சரளாவுக்கு புரியவில்லை. மருமகள் மேல் வருத்தம்.

மகளிடம் பேசிய பின் சரளா காயத்ரியிடம் வாய் கொடுக்கவில்லை. காய் நறுக்கி கொடுத்து அவள் போக்கிற்கு விட்டுவிட்டார். 

அன்று வாரத்தின் மத்திய நாள் என்பதால் பல்பொருள் அங்காடியில் கூட்டம் அவ்வளவாக இல்லை. பொருட்கள் அனைத்தையும் அதனிடத்தில் நேர்படுத்தி அடுக்கி வைத்து ஸ்டாக்கை சரிபார்க்க சொல்லி இருந்தனர் சிகாவிடம். அவனும் சிரத்தையுடன் என்னனென்ன பொருள் எவ்வளவு இருக்கிறது, எத்தனை நாள் வரும், புதிதாய் எப்போது வாங்கலாம், எவ்வளவு செலவு ஆகும், அதை எப்படி குறைக்கலாம் என்று பட்டியல் தயாரித்து முதலாளியிடம் கொடுக்கப் போகும் சமயம் அவன் கையிலிருந்த பட்டியலை வாங்கினான் அக்கடையின் மேற்பார்வையாளன்.

கொடுக்கப்பட்ட வேலைக்கு அதிகமாய் அச்சுப்பிசகின்றி நேர்த்தியாய் அவன் தயாரித்த பட்டியலைப் பார்த்தவன்,

“நீ போ, நான் குடுத்துக்குறேன்.” என்று சிகாவை அனுப்பப் பார்க்க,

“முதலாளி சார் தான் எல்லாத்தையும் ரெடி பண்ணி எடுத்துட்டு வரச் சொன்னாருங்க சார், நானே எடுத்துட்டு போறேன்.” என்று சிகா நிற்க,

“நேத்து வந்தவன் என்னையே எதிர்த்து பேசுற… என்னை மீறிதான் நீயெல்லாம் முதலாளிகிட்ட போக முடியும்.” என்றவன் சிகாவின் தோளில் கைவைத்து தள்ளிவிட்டு தானே தயாரித்தது போல் அந்த பட்டியலை எடுத்துச் சென்றான்.

கடுப்பான சிகா வேலை நேரம் முடிந்ததும் நேரே சென்று நின்றது அவனின் முதலாளி அண்ணனிடம் தான்… ஆஸ்தான அரிசி கடையே… 

“ண்ணா இங்க மாதிரி எதுவுமே இல்லை… எங்க முன்னுக்கு வந்துடுவோம்னு கீழ தள்ளப் பாக்குறாங்க.” குமுறல் வெளிப்பட்டது சிகாவின் உடல்மொழியிலும் வார்த்தையிலும். 

“இங்க நீயும் நானும் மட்டுந்தான்டா. இன்னொரு ஆள் இருந்திருந்தா கண்டிப்பா அங்க மாதிரி இங்கேயும் நடந்திருக்கும். இதையெல்லாம் சமாளிச்சு மேல வர கத்துக்கோ.” என்றான் அரிசி கடை முதலாளி. 

“அடபோங்க ண்ணா, ஈசியா சொல்லிட்டீங்க பெண்ட் கழழுது எனக்கு.”

“நான் எப்படி இந்த கடை வச்சேன்னு நினைக்கிற? எல்லாம் ஒரே நாள்ல வந்தது இல்லை. உன்னை மாதிரி தான் நானும் பொறந்த இடம், வளர்ந்த சூழல்னு என்னோட அடையாளத்தை விட்டுட்டு வந்தேன். ஒரு வருஷம் என்ன பண்றதுன்னு தெரியாம வயித்தை நிறைக்க ஓடினேன். என்னோட சேர்ந்து என்னோட ஆயாவும் கஷ்டப்பட்டுச்சு. ஒரு ரெண்டு மாசம் ஆயாவுக்காகன்னு ஓடுன எனக்கு அது போனதுக்கு அப்புறம் வாழ பிடிப்பு இல்லை. ஒரு கட்டத்துல சலிச்சு போய் பொறந்த இடத்தில விட்ட அடையாளத்தை இங்க உருவாக்கணும்னு ஆரம்பிச்ச கடை தான் இது. தெரிஞ்சவங்க கிட்ட மூலதனம் வாங்கி கடை போட்டேன். தட்டுதடுமாறி மேல வந்தேன். யாருக்காக ஓடுறேன்னு தெரியாம ஓடிட்டு இருக்கேன். உனக்கு அப்படி இல்லை. உன்னை நம்பி குடும்பம் இருக்கு. அவங்களுக்காகவாவது நீ மேல வருவடா. எனக்கு நம்பிக்கை இருக்கு.”

“உங்கிட்ட இருக்கும் போது வர்ற திருப்தி எங்கேயும் வராது ண்ணா.” கலங்கிய மனம் நிறைந்து வார்த்தைகளில் வெளிப்பட்டது. 

“எப்போதும் இந்நேரம் கடையை பூட்டிடுவீங்க!” திறந்திருக்கும் கடையை அலசியபடி கேட்டான் சிகா.

“லோட் வந்துச்சு சிகா. இப்போ தான் இறக்கிட்டு போனாங்க. பூட்ட வேண்டியது தான்.” என்றவன் எழுந்து கடையை பூட்டிக்கொண்டே, “நம்ம அரிசி எடுக்குற கம்பெனியோட குடோன் மேனேஜர் வேலையை விட்டு போகப்போறாராம். உனக்கு சொல்லி வச்சிருக்கேன். ரெண்டு மாசம் பொறுத்துக்கோ அங்க மாறிக்கலாம்.” என்றதும் மகிழ்வில் அண்ணனை கட்டிக்கொண்டான் சிகா.

எதிர்பாராது திடுமென தோள் பற்றி அணைக்கவும் அதிர்ந்த முதலாளியோ அனிச்சையாய் உதற, கலகலவென சிரித்தான் சிகாமணி.

“ண்ணா, இதுக்கே இப்படி பயந்தா எப்படி?” என்று கேட்டவனை திரும்பி முறைக்கும் முன் அதிவேகமாக வந்த லாரி சிகாவை தூக்கி அடித்திருந்தது.

நொடி நேரத்திற்கும் குறைவான வேளையில் நிகழ்ந்துவிட்ட அசம்பாவிதம். 

சிகாவை அழைத்தபடி வேகமாய் ஓடிப்போய் இரத்த வெள்ளத்தில் மிதந்த சிகாமணியை மடி தாங்கினான்.

மூச்சுவிட சிரமப்பட்ட சிகாவின் அகக்கண்ணில் கல்பனாவும் சேகரும் நிழலாய் தெரிய, கையை வீசி அவர்களை தொட முயன்றான்.

“உனக்கு ஒன்னும் ஆகாதுடா… கண்ணை மூடாத ஹாஸ்பிடல் போயிடலாம்.” என்ற வார்த்தைகள் சிகாவின் கருத்தில் பதியாது போக, தன்னை பற்றியிருந்த கரத்தை அழுந்தப்பிடித்தவன்,

“கல்பனாவையும்… சேகரையும்… விட்டுறாத… அ… அருண் ண்ணா…” என்ற வார்த்தைகளுடன் சிகாவின் மூச்சு நின்றதை நம்ப முடியாமல் சித்த பிரம்மை பிடித்தது போல் உயிரற்று இருந்த சிகாவை வெறித்தான் அருண். 

Advertisement