Advertisement

*7*

காலை யார் சமைக்க என்று சுசீலா கல்பனா முகம் பார்க்க, கல்பனா சுசீலா முகம் பார்த்து நின்றாள். அப்பொழுது தான் குளித்து வந்த தேவி இருவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு சமையல் கட்டில் நுழைந்து அவர் பாட்டிற்கு சமைக்க ஆரம்பித்து விட்டார். 

இரண்டு நாள் அம்மாவுடன் இருந்துவிட்டு அச்சமயம் தான் வீடு வந்திருந்தாள் கல்பனா. 

சரளாவை வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டனர். ஹாலில் ஒரு கட்டில் வாங்கிப்போட்டு அதில் சரளா ஓய்வெடுக்க வசதி செய்து கொடுத்தாயிற்று. வேந்தன் காயத்ரி அறையில் தங்கிக்கொள்ள, கல்பனா சொன்னது போல் ஹாலில் மூவரும் புழங்கிக் கொண்டனர். 

சரளாவை வீட்டிற்கு அழைத்து வந்த தினமே உடன் இருந்து அம்மாவை பார்த்துக்கொள்கிறேன் என்ற மகளை புதிதாய் திருமணம் ஆகியிருக்கிறது இப்போது இங்கு தங்குவது உசிதமில்லை என்று கல்பனாவை சிகாவுடன் அவன் வீட்டிற்கு அனுப்பி விட்டார் கபிலன். ஆனால் இரவு நேரங்களில் இடையிடையே எழும் சரளாவை பார்த்துக்கொண்டு காலை வேலைக்கு செல்வது கபிலனுக்கு பெரும் சிரமமாய் இருக்க, மருமகள் முகம் பார்த்து நின்றார் மனிதர். 

எதிர்பார்த்தது போல் பகலில் அத்தையை நன்றாகவே கவனித்துக் கொண்ட காயத்ரி இரவு கணவன் வீடு வந்துவிட்டால் அவன் பின்னேயே சுற்றுவாள், வேறு ஒருவரும் அவள் கண்ணுக்குத் தெரியாது. மாற்று வழியின்றி நான்கே நாட்களில் மகளை அழைத்துக் கொண்டார் கபிலன். 

ஒரு வாரம் அம்மாவுடன் இருந்து கவனித்துக்கொண்டவள் அன்று காலையே கிளம்பி மாமியார் வீடு வந்துவிட்டாள். வீட்டின் கூடத்தில் சிகா உறங்க, எழுந்து கனிக்கு பால் புகட்டி தனக்கு காபி போட்டு குடித்த சுசீலா காலையே வந்து நின்ற கல்பனாவை கண்டு திகைத்து பின் அறையை பார்த்தாள். இனி அறையை ஓரகத்திக்கு கொடுக்க வேண்டும் என்ற எண்ணமே வேப்பங்காயாய் கசந்தது.

சமையல் அறையை எட்டிப்பார்த்தவள் கசடை ஒதுக்கி வைத்து, “அம்மா எப்படி இருக்காங்க கல்பனா?” என்று கேட்டிட, சரளாவின் நலம் தெரிவித்து கனியை தூக்கிக்கொண்டாள் கல்பனா. வெட்கச் சிரிப்பு உதிர்த்த கனி அவள் கையிலிருந்து கீழே இறங்க முற்பட்டாள்.

பேச்சு சத்தத்தில் உறக்கம் கலைந்து எழாமலிருந்த சிகா படுத்தவாக்கிலே, “சித்திடா பாப்பு, இனி நம்ம கூட தான் சித்தி இருக்கப் போறாங்க. சித்தி கூட விளையாடுங்க.” என்று அண்ணன் மகளிடம் சொல்ல, சூரியனைக் கண்ட தாமரை போல் மலர்ந்தது கல்பனாவின் வதனம்.

கனியை தூக்கிக்கொண்டு அவள் சிகா அருகில் சென்று அமர்ந்துகொள்ள பெருமூச்சு விட்ட சுசீலா தேவிக்கு உதவி செய்ய சென்றுவிட்டாள்.

கனியை வயிற்றில் அமரவைத்து சிகா விளையாட்டு காட்ட, அவர்களை ரசித்தபடி அமர்ந்திருந்த கல்பனாவையும் அருகில் இழுத்துக்கொண்டான். கரம் சுண்டி அவன் இழுக்கவும் தடுமாறி அவன் மீது மோதியவள் இருக்குமிடம் உணர்ந்து பட்டென எழுந்து அவனை முறைத்தாள்.

“என்னடி?” கிசுகிசுப்பாய் அவன் கண் சிமிட்டி கேட்டிட, 

“ஹால்ல இருக்கோம் என்ன பண்ற அத்தான்?” மிரட்ட நினைத்தாலும் சிணுங்களாகவே வந்தது அவள் கண்டிப்பு.

“நானே ஒரு வாரம் கழிச்சு என் ஆளை பாக்குறேன் வேற என்ன பண்ணுவாங்கலாம்.” என்றவன் பார்வையை மனைவியிடம் பதித்து இதழ்களை கனியின் கன்னத்தில் பதித்தான்.

அந்த முத்தம் தனக்கானது என்று உணர்ந்த கல்பனாவின் உடல் சிலிர்க்க, அழகாய் விரிந்தது அவளது அதரங்கள். கன்னங்கள் குங்கும நிறம் பூசிக்கொள்ள, அந்த வழியே வந்த சுசீலாவின் முகம் இதைக் கண்டு சுருங்கி இயல்பானது.

“தினம் வீட்டுக்கு வந்து என்னை பாத்துட்டு இப்போ ஒரு வாரமா என்னை பாக்கலையாம்?” அவன் செய்கைக்கு அவளுணர்வுகள் போட்ட கூத்தாட்டத்தை அடக்கி, மோன நிலைக்கு செல்லவிருந்த சிந்தையை தெளிய வைத்து அவள் நொடிக்க,

“இன்னைக்கு வந்துருவேன்னு சொல்லாம இப்படி திடீர்னு வந்து நின்னா நான் என்ன ஆகுறது மாமா பொண்ணே…” சீண்டியபடியே எழுந்தவன் கனியை மனைவியிடம் கொடுத்துவிட்டு காலை வேலைகளை பார்க்கக் கிளம்பினான். கனியுடன் எழுந்த கல்பனாவும் ஹால் அலமாரியில் இருந்த அவனின் உடையை எடுத்துக்கொடுத்தாள்.

மனைவியின் உரிமையான செய்கையை கண்சிமிட்டி ரசித்தவன் அவளின் அருகாமையை உணர்ந்து ரசனையான புன்னகை உதிர்த்துவிட்டு வேலைக்கு தயாராக, மாமியாரை தேடிச் சென்ற கல்பனா,

“கனிக்கு என்ன சாப்பாடு அத்த? நான் ஊட்டி விடவா?” என்று நிற்க, 

“ஸ்கூல் சேக்கணும்ல, தனியா சாப்பிட பழக்கப்படுத்திட்டு இருக்கா சுசி. நம்மளோடவே சேர்ந்து உக்காந்து சாப்பிடுடுவா கல்பனா.” என்ற தேவி புடி தோல் உரிக்காத சிறிய வெங்காயத்தை கடாய் ஒன்றில் போட்டு ஒரு கரண்டியையும் சேர்த்து பேத்தியுடன் நீட்ட அங்கேயே கீழே அமர்ந்து குதூகலமாய் அதை கிண்டி விளையாட ஆரம்பித்து விட்டாள் கனி.

“விளையாட்டு சாமான் ஒன்னு தொட மாட்டா, இதை கொடுத்துட்டா போதும் கவலையில்லாம நாம வேலை பாக்கலாம். அவ விளையாடுவா நீ இந்த தேங்காய் துருவி கொடு சட்னிக்கு.” ஒரு தேங்காய் மூடியை மருமகளிடம் கொடுத்துவிட்டு மதிய உணவு தயாரிப்பில் கவனம் செலுத்தினார்.   

சிரத்தையுடன் அவள் தேங்காய் திருக மீண்டும் ஏதோ வேலையாய் அடுப்படி நுழைந்த சுசீலா இதனைக் கண்டு திருப்தி பட்டுக்கொண்டாள். அதன் பின் காலை நேர பரபரப்பு தொற்றிக்கொள்ள, வாசல் வரை சிகாவை வழியனுப்பிட அவன் பின்னூடே வந்தாள் கல்பனா.

தன்னை அவள் பின்தொடர்வதை உணர்ந்தவன் சைக்கிளை வெளியே எடுத்து அவளை அருகில் வரும்படி கண்மூடி தலையசைத்தான். அவள் நெருங்கவும், 

“ஒரு வாரத்துல வந்துட்ட, அங்க வீட்ல எல்லாம் ஓகே தானே கல்ப்ஸ்?”

அவனின் அக்கறையில் நெகிழ்ந்தவள், “ஓகே தான் அத்தான். நைட் இப்போ அம்மா முழிக்குறது இல்லை. அசந்து தூங்கிடுறாங்க. பகல்ல காயத்ரி பாத்துப்பா.” 

“அப்பப்போ போய் தலையை காட்டிட்டு வா. அத்தைக்கு ஆறுதலா இருக்கும்.” என்றவன் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு அவள் கன்னத்தை ஆசையாய் தட்டிச் சென்றான்.

செல்லும் அவனையே காதலுடன் பார்த்து நின்றவள் மன நிறைவுடன் வீட்டிற்குள் சென்றாள். குழந்தையை தூக்கி கொஞ்சும் சாக்கில் மெல்ல சுசீலாவிடம் பேச்சுக் கொடுத்து இயல்பாக்க முயன்றாள். அப்பாவின் உடன்பிறப்பு என்பதாலோ என்னவோ தேவியிடம் இயல்பாகவே ஒட்டிக்கொண்டாள். அன்றைய நாள் நிறைவாகவே செல்ல கபிலனிடமிருந்து அழைப்பு வந்தது. சிகாமணி எப்போது வீட்டிற்கு வருவான் என்ற விசாரிப்பு அழைப்பில் முகம் சுருக்கினாள் கல்பனா. 

“எதுக்குப்பா கேக்குறீங்க?”

“கேட்டு சொல்லு கல்பனா. நானும் அண்ணனும் உங்க வீட்டுக்கு வரோம்.” காரணம் சொல்லாமல் அவர் அழுத்தமாய் கேட்கவும் சிகாவுக்கு அழைத்து எப்போது வீடு வருவான் என்று கேட்டுச் சொன்னாள்.

கல்பனா தகவல் கொடுக்கவும் சரியான நேரத்திற்கு வீடு வந்த அண்ணனையும் தந்தையையும் உபசரித்து ஒதுங்கி நிற்க,

“என்ன அண்ணா திடீர்னு ரெண்டு பேரும் வந்திருக்கீங்க? அண்ணி நல்லா இருக்காங்கல்ல?” சிகா வருவதற்கு தாமதமாக, அவன் வரும் வரை காத்திருக்கிறோம் என்று காரணம் சொல்லாது அமர்ந்திருந்தவர்களிடம் தேவிதான் பேச்சு கொடுத்தார். 

தங்கையை பார்த்த கபிலன், “நல்லா இருக்கா தேவி. முக்கியமான விஷயம் பேசலாம்னு தான் வந்தோம் சிகா வந்துடட்டும். சேகர் எப்போ வருவான்மா?” சுசீலாவிடம் கேள்வி சென்றது.

“மதியதுக்கு மேலதான் இன்னைக்கு வேலைங்க சித்தப்பா. ராத்திரி லேட் ஆகிடும்.” 

சரி என்று கேட்டுக்கொண்டவர் கனியுடன் பேச, கல்பனா மெல்ல வேந்தன் அருகில் சென்று அவன் கையை சுரண்டினாள். என்ன என்பது போல் அவன் நிமிர்ந்து பார்க்க, வலக்கை பெருவிரல் விட்டு மற்ற நான்கு விரல்களையும் மடித்து ‘என்ன விஷயம்?’ என்பது போல் மேலும் கீழுமாய் அவள் கையசைத்துக் கேட்க, கண்சிமிட்டி ஆள்காட்டி விரலை லேசாக குவிந்த உதடுகள் மேல் வைத்து சொல்ல மாட்டேன் என்பது போல் தலையசைத்தான் வேந்தன். கடுப்பில் கல்பனா கழுத்தை வெட்டி உதட்டை சுழிக்க, சிகா வந்துவிட்டான்.

உள்ளே நுழைந்தவன் அமர்ந்திருந்த மாமனையும் மச்சினனையும் வரவேற்று என்ன விஷயமாய் வந்திருக்கிறார்கள் என்ற கேள்வியுடன் மனைவியைப் பார்க்க, உதடு பிதுக்கினாள் கல்பனா.

“என்ன பாத்துட்டு இருக்க கல்பனா, இப்போதான் மாப்பிள்ளை வந்திருக்கான் போய் காபி தண்ணி கொடு. நீ போய் முகம் கை கால் கழுவிட்டு வா சிகா, ஒன்னும் அவசரம் இல்லை. நாங்க வெயிட் பண்றோம்.” மகளை ஏவி மருமகனை அனுப்பிவிட்டு கபிலன் மீண்டும் கனியுடன் விளையாட, வேகமாக தன்னை சுத்தப்படுத்தி வந்தான் சிகா.

“என்ன விஷயம் மாமா?” காபி குடித்துக்கொண்டே சிகா வினவ, 

“கல்யாணமாகி பதினைஞ்சு நாள் ஆச்சு மறுவீடு சடங்குக்கு அப்புறம் ஹாஸ்பிடல் அதுஇதுனு ஓடிடுச்சு. நாங்க சீர் செய்யணும்ல, நீ எப்போ வச்சிக்கலாம்னு சொல்றியோ அன்னைக்கு முறையா விருந்து வச்சி சீர் எல்லாம் இங்க இறக்கிடுவோம்.” என்று கபிலன் சொல்ல, சிகா அன்னையைப் பார்த்தான்.

இதுதான் விஷயம் என்றதும் மனதில் ஆயிரம் எண்ணங்கள். ஆனால் அதனை உடைத்துப் பேசும் முன் அன்னையை ஒரு முறை பார்த்தான்.

“நீ சொல்றது தான் சிகா.” என்று அவன் முடிவுக்கு விட்டுவிட்டார் தேவி.

“கல்பனாவுக்கு செய்ய நீங்க விருப்பப்படுறீங்கன்னு புரியுது மாமா. ஆனா அத்தைக்கு ஆப்ரேஷன் மருந்து மாத்திரை செலவுனு உங்களுக்கு நெருக்கடி இருக்குனு எனக்கு தெரியும்…”

“அது இருந்துட்டே தான் இருக்கும் சிகா. அதெல்லாம் பார்த்தா கல்பனாவுக்கு எப்போ செய்யுறது நாங்க?” இடைமறித்திருந்தார் கபிலன்.

“உங்க மகளுக்கு நீங்க செய்யவே கூடாதுனு நான் சொல்லல. இன்னும் பதினைஞ்சு நாள்ல அத்தைக்கு கீமோதெரபி இருக்கு. அதுக்கு செலவு ஆகும். அதை முதல்ல பாருங்க மாமா.”

“அதெல்லாம் பாத்துக்கலாம் சிகா.” என்றான் வேந்தன் தன் பங்கிற்கு. 

“பாத்துப்பீங்கனு தெரியும் ஆனா இப்போ எதுக்கு முக்கியத்துவம் குடுக்கணும்? அத்தையோட டிரீட்மென்ட்கா இல்லை சீருக்கா?” கேள்வியாய் மாமனார் மச்சினனை ஏறிட்டவன் இப்போது மனைவியைப் பார்த்தான். புரிந்துகொண்டவள் மலர்ந்த வதனத்துடன் கண்மூடித் திறக்க, ஆசுவாசம் சிகாவினுள்.

மாப்பிள்ளையிடம் எடுபடாது என்பது புரிந்து, “தேவி நீயே சொல்லு. செய்ய வேண்டியதை அந்தந்த நேரத்துல செஞ்சிடனும்.” தங்கையை துணைக்கு அழைத்தார் கபிலன். 

“நீங்க சொல்றது புரியுது அதே சமயம் சிகா சொல்றதும் சரிதான… அண்ணி சரியானதும் எல்லாம் பாத்துக்கலாமே.”

“அப்பா, இவங்க சொல்ற மாதிரியே முதல்ல அம்மாவை பாக்கலாம். என்னைக்கு இருந்தாலும் நீங்க தான செய்யப்போறீங்க எனக்கு.” என்று கல்பனா இடைபுகுந்து பேச, அப்பேச்சு அத்துடன் முடிந்தது.

“சரளா நல்லானதும் சேர்த்து செஞ்சிடுவோம். அப்போ எதுவும் காரணம் சொல்லக்கூடாது.”

என்ற கேலி கண்டிப்போடு அவர்கள் கிளம்பினார்கள்.

Advertisement