Advertisement

சுசீலாவுக்கு இத்தனை நாள் உரிமையாய் தான் வளைய வந்த அறையை பகிர்ந்து கொள்ள வேண்டிய சூழல் ஒப்பவில்லை. சேகருக்கு தங்களை ஒதுக்கி வைத்த மாமன் மகள் தம்பியின் மனைவியாய் வந்திருப்பதில் அத்தனை உவப்பு இல்லை.

இவ்வளவு நாள் இல்லாது இன்று அண்ணன் குடும்பம் ஹாலில் உறங்க, தான் மனைவியுடன் அறையிலா என்ற சங்கடம் சிகாவுக்கு. தங்களுக்கான தனிமை வழங்க குடும்பத்தினர் விருப்பப்பட்டாலும் மணமான பின் தங்கவென முதல் முறை புகுந்த வீடு வந்துள்ளதால் அச்சூழல் ஒருவித பதற்றத்தை கொடுத்தது கல்பனாவுக்கு. 

“சேகர் பாப்புவை உள்ள படுக்க வை.” அண்ணனிடம் திரும்பினான் சிகா.

“ஹாஸ்பிடல் வீடுன்னு அலைச்சலா இருக்கும் நீங்க முத சாப்பிட்டு போய் படுங்க.” என்ற சேகரும் குழந்தை அருகில் சென்று படுத்துக்கொண்டான்.

அசவுகரியமாக சிகா பார்த்து நிற்க, இந்த நேரத்தில் இதற்கு மேல் உறங்குமிடம் குறித்து வாதிட்டு தீர்வு காண தெம்பில்லை எனும் விதமாய் சிகாவுக்கு பரிமாறி தானும் உண்டு எழுந்து அறைக்குள் சென்றுவிட்டாள் கல்பனா. தலை சிலுப்பியபடி அனைத்தையும் ஒதுங்க வைத்துவிட்டு சிகாவும் அறைக்குச் செல்ல, தன்னுடைய பையை கண்டுபிடித்து இரவுடை எடுத்துக்கொண்டிருந்தாள் கல்பனா.

“கொஞ்சம் வெளில இருங்க அத்தான். டிரெஸ் மாத்தணும்.” 

சிகா வந்த வழியே வெளியே செல்ல எத்தனிக்க, கல்பனா பின் குத்தியிருந்த ஷாலை பிரித்தெடுக்கவும் கதவு தட்டப்பட்டது. நெற்றி சுருக்கியபடி சிகா கதவை திறக்க,  

“பாப்பாவோட டவல் மறந்துட்டேன்.” என்றபடி நின்ற சுசீலாவுக்கு வழி விட்டு நின்றான் சிகா.

விறுவிறுவென அறைக்குள் நுழைந்து கனியின் டவல் மற்றும் உடைகள் இரண்டை எடுத்துக்கொண்டு வெளியேறிவள் உடனே திரும்பி வந்து சேகரின் உடை ஒன்றை எடுத்துச் சென்றாள். மறுநாள் விடியல் பொழுதில் மார்க்கெட்டில் வேலை சேகருக்கு. அதன் பொருட்டு அவனுக்கு தேவையானதை கையோடு எடுத்துச்சென்றாள்.

காற்றை நன்கு உள்ளிழுத்து உதடு குவித்து அதை வெளியேற்றிய கல்பனா, “இன்னும் எதுக்கு பப்பரப்பான்னு கதவை திறந்து வச்சிட்டு நிக்குற அத்தான்? கதவை சாத்தி லைட் ஆப் பண்ணு.” 

அவள் குரல் தாங்கியிருந்த எரிச்சல் அவனை யோசிக்க வைத்தது.

“இங்க சவுகரியமா இல்லையா உனக்கு?” யோசனை தந்த விடை கேள்வியாய் அவளை சென்றடைந்தது. 

“இயல்பா இருக்க எல்லாரும் மெனக்கெடுறீங்கல்ல? சுசீலா அக்காக்கு, சேகர் அத்தானுக்கு என்ன பிரச்சனை?”

“அவங்களுக்கென்ன? ஒன்னுமில்லயே.” 

“அவங்களுக்குள்ள என்ன பிரச்சனைன்னு கேக்கல. நான் இங்க வந்தது அவங்களுக்கு பிடிக்கலையா? கல்யாணத்துலேந்தே பாக்குறேன் முகம் கொடுத்து பேசுனாலும் ஏதோ ஒதுக்கம் காமிச்சு தள்ளி இருக்குற மாதிரியே இருக்கு.” 

“அப்படிலாம் இல்லை கல்ப்ஸ். பாப்புவோட சேர்த்து நாம அஞ்சு பேர் இந்த வீட்டுல குடும்பம் பண்றது கஷ்டம்னு யோசிக்குறாங்க. நான் பேசிட்டேன், இன்னும் கொஞ்ச நாள் போகட்டும் பெரிய வீடா பாத்து போய்டலாம்.” மறைக்கவெல்லாம் நினைக்கவில்லை சிகா, உள்ளதை அப்படியே அவளிடம் பகிர்ந்தான்.

“கஷ்டமா இருக்கும்னு அவங்க சொன்ன பிறகும் ஏன் இப்படி அத்தான்? அவங்க ரூமை பறிச்சிக்கிட்ட மாதிரி இருக்கு.” என்று தவிப்பாய் வந்தது கல்பனாவின் பதில்.

“இப்போ தான் வேலை மாத்தி இருக்கேன் கல்ப்ஸ். கல்யாண செலவு வேற… கொஞ்ச நாள் போகட்டும், அதுக்குள்ள பணம் சேர்த்து வீடு மாறிடலாம் அத்தையும் கொஞ்சம் சரியாகிடுவாங்க. இங்க இருந்தா உனக்கும் உங்க வீட்டுக்கு போய்ட்டு வர வசதி.” 

அறையினுள் கல்பனாவின் வசதியை முன்னிறுத்தி சிகா சொன்ன அதே காரணம் தான் வெளியே சுசீலாவை குறைபட வைத்தது.

“உங்க அத்தையை அவங்க பொண்ணு கூடவே இருந்து பாத்துக்கணும்னு என்னையும் என் பொண்ணையும் ரூமை விட்டு வெளில தள்ளியாச்சு.”

“உனக்கு தான் நம்மோட வரவு செலவு தெரியுமே. அப்புறமும் இப்படி சொன்னா எப்படி சுசி?” என்று சமாதானத்தில் இறங்கினான் சேகர்.

“அப்படி என்ன அவசரம் இப்போவே கல்யாணம் பண்ணனும்னு? ரூம் வசதி கூட இல்லாம இப்படி அவசரமா பண்ணி நாந்தான் ரூம் இல்லாம அவங்க இருக்கும் போது ரூமை தட்டி அல்லாடுறேன்.”

“ம்ச், அத்தை நிலைமை தெரியாத மாதிரி அவங்க கல்யாணத்துக்கான காரணம் கேக்காத. கல்யாணமாகி இன்னைக்குத்தான் அந்த பொண்ணு நம்ம வீட்டுலேயே தங்குது இப்போ போய் அவங்களை ஹால்ல படுக்க வச்சிட்டு நாம ரூம்ல படுக்க முடியுமா? விவஸ்தை இல்லாம பேசாத.”

“இப்போ பேசாம எப்போ பேச? இன்னைக்கு ஒருநாளோட முடிஞ்சி போற விஷயமா இது? தினம் இதே பிரச்சனை வரும்.

ரூம் கதவை தட்டி உங்க டிரெஸ் எல்லாம் எடுத்துட்டு வந்தது நான்தானே அதான் சுலபமா பேசுறீங்க. எங்க இப்போ ரூம் கதவை தட்டி டிரெஸ் எடுத்துட்டு வாங்க பாப்போம்.” சவாலாய் பேசினாள் சுசீலா.

“அது… நான்… எப்புடி?” என்று சேகர் முழிக்க,

“அவசரத்துக்கு நான் டிரெஸ் மாத்தணும்னாலும் உங்க தம்பி ரூம்ல இருக்காரான்னு பாத்துட்டு தான் இனி போகணும். எனக்குன்னு தனிப்பட்டது எல்லாம் எங்க வைக்க நானு? ம்ச்… உங்களுக்கு புரியுதா இல்லையா நான் சொல்றது?” சுசீலாவின் குரல் உயர்ந்தது.

“கொஞ்ச நாள் பொறுத்துக்கோ எல்லாத்தையும் சரி பண்ணிடுறேனு சிகா சொல்லி இருக்கான்ல. சரி பண்ணிடுவான்.”

“எல்லாம் அவர் பண்ணுவார்னா மூத்தவர்னு நீங்க எதுக்கு இருக்கீங்க? சரி பண்ணிடுவாங்கனு அவங்களை பாத்துட்டு இருந்தா இனி வீட்டோட எல்லா முடிவும் அவங்க எடுக்குறதுதான்னு ஆகிடாதா?” 

“எல்லாரும் கலந்து பேசி தானே இதுவரை முடிவு பண்ணுவோம், இப்போ என்ன புதுசா பேசுற?”

“இதுவரை எப்படியோ இனியும் அப்படியே இருக்கும்னு எப்படி சொல்வீங்க? ஏற்கனவே கல்பனாவுக்காக எல்லாத்தையும் பாத்து பாத்து செய்யுற உங்க தம்பியும் அம்மாவும் நாளைக்கு அவளோட வசதியை தானே முன்னிறுத்துவாங்க. அப்போ என்னோட விருப்பத்துக்கு என்ன மதிப்பு இருக்கும்?”

“மதிப்பு மரியாதை எல்லாம் எதுக்கு இப்போ குடும்பத்துக்குள்ள வருது?”

“வரவேண்டிய சூழல் வந்தா எல்லாம் வரத்தான் செய்யும்.” என்ற சுசீலாவின் பேச்சில் அவள் அன்னை ஏற்றிச் சென்ற பாதுகாப்பின்மை அச்சு பிசகாமல் பிரதிபலித்தது. 

“ரூமை அவங்களுக்கு விட்டுக்கொடுத்த கோவத்துல பேசுற. இதை அப்படியே அவங்ககிட்ட காமிக்காத. நாளைக்கு எல்லாம் சரியானதுக்கு அப்புறம் முகம் கொடுத்து பேச முடியாது.” சேகர் குரலில் கண்டிப்பு இருந்தது.  

“என் வாயை அடைக்க மட்டும்தான் முடியும் உங்களால. வேற எதுவும் பண்ணிடாதீங்க.” முணங்கியவள் கண்களை இறுக மூடிக்கொண்டாள். அவளைப் பார்த்து தலை சிலுப்பியவன் திரும்பிப் படுத்துவிட்டான்.

அறையினுள்ளோ சிகாவை முறைத்தபடி நின்றாள் கலப்பனா. என்னவென்று புரியாத சிகாவோ கண்களை சுருக்கி அவளை கேள்வியாய் பார்த்தான்.

“வீடு விஷயத்துல அக்காவுக்கு வருத்தம்னு முன்னாடியே என்கிட்ட சொல்லி இருந்தா அதுக்கு தகுந்த மாதிரி நடந்திருப்பேன்ல.” 

“சொல்ல எங்க நேரம் இருந்துச்சு? எல்லாம் அவசர அவசரமா நடந்துச்சு. கல்யாணமான முதல் நாள் கூட உங்க வீட்ல தான் தங்கி இருந்தோம் மறுநாளே அத்தையை ஹாஸ்பிடல்ல சேர்த்தாச்சு. இப்போ தான் வீட்டுக்கே வர்ற, இதுல எப்போ எல்லாத்தையும் சொல்லி இருக்கணும்னு எதிர்பாக்குற நீ?” 

சிகா சொல்வது போல் மணமான முதல் நாள் சிகா வீடு வந்து விளக்கேற்றி சென்றதோடு சரி அன்று இரவு சடங்கிற்கு என பெண் வீட்டிற்கு அழைத்துச் சென்றுவிட்டனர் கபிலனும் சரளாவும்.

மகன் வேந்தனுக்கான முதல் இரவு அவன் மனைவி காயத்ரி வீட்டிலே கழிந்தது. சரளாவை மறுநாள் மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என்று காரணம் காட்டி கல்பனாவை மணமான நாளே தன்னுடன் வைத்துக்கொண்டாலும் சிகா வீட்டின் நிலை உணர்ந்தே சரளா பெண்ணுக்கான சடங்கை தன் வீட்டில் வைக்கச் சொல்லி சாதித்துக்கொண்டார். 

என்னதான் அனைத்தையும் சரளா முடிவு செய்தாலும் சிகா தம்பதியரின் முடிவோ அவர்களின் எதிர்கால திட்டங்களில் லயித்திருந்தது. 

அவசர அவசரமாய் திருமணம் நடந்தாலும் உடனடியாய் தாம்பத்திய பந்தத்தில் இணைய விரும்பாது நிதானித்து ரசித்து அனுபவித்து வாழவே பிரியப்பட்டனர். தங்களின் நிலையை உயர்த்திக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருவர் மனதிலும் இருக்க, எதிலும் இணக்கம் தானாய் வந்தது.

“போனதும் போகட்டும் அத்தான். அடுத்து என்ன பண்ணலாம்னு பாக்கலாம். முதல்ல ரெண்டு ரூம் இருக்குற மாதிரி வேற வீடு பாக்கணும்.”

“கையில அவ்ளோ பணம் இல்லை கல்ப்ஸ். இந்த மாச சம்பளம் வந்தாதான் அடுத்து எப்படி குடும்பத்தை எடுத்துட்டு போறதுன்னு ஒரு முடிவுக்கு வரமுடியும். புதுசா சேர்ந்திருக்கிறதால சூப்பர்மார்கெட்ல முன்பணம் எல்லாம் கேக்க முடியாது.” அடுத்து என்ன கேள்வி வரும் என்பதை யூகித்து முன்பே பதிலை கூறிவிட்டான் சிகா.

“சரி அப்போ ஒன்னு பண்ணலாம், அம்மா இருக்குற நிலைமைக்கு காயத்ரியால ஒத்த ஆளா அங்க எல்லாத்தையும் சமாளிக்க முடியாது. நான் அடிக்கடி அங்க போற மாதிரி இருக்கும். அங்கேயும் இங்கேயுமா மாத்தி மாத்தி இருந்துக்குறேன் நான்.” என்றதுதான் தாமதம்,

“உங்க வீட்லயும் ஒரு ரூம்தானே இருக்கு?” முந்திக்கொண்டு வந்தான் சிகா.

“அம்மா, அப்பா, நான் மூணு பேரும் ஹால்ல இருந்துப்போம் அது ஒன்னும் பிரச்சனை இல்லை. சுசீலா அக்காவும் பெரிய அத்தானும் இங்க ரூமலையே இருந்துகட்டும்.”

அடிப்பாவி என்று வாயில் கைவைத்தான் சிகா, “நமக்கு கல்யாணம் ஆகிட்டுன்னு மறந்துடாத கல்ப்ஸ்.”

“நீ மறக்காம இருந்தா சரிதான் அத்தான்.” சத்தம் வெளியே வராதபடி அவள் கீழுதட்டை உள்மடக்கி கடித்துச் சிரிக்க, சட்டென அறையின் சூழல் மாறியது. கல்பனா முகத்தில் வழிந்த கேலியான சீண்டல் பார்வையில் தூண்டப்பட்டு உல்லாச கூச்சலோடு அவளை நெருங்கினான் சிகா.

தன்னை நெருங்கிடாதபடி அவன் மார்பில் கைவைத்து தடுத்த கல்பனா, “ஷ் அத்தான்… டிஸ்டன்ஸ், டிஸ்டன்ஸ்…”

“டிஸ்டன்ஸ் எல்லாம் என் மாமா பொண்ணுகிட்ட மட்டும்தான் என் பொண்டாட்டிகிட்ட இல்லை… அதுவும் மூணு நாள் கழிச்சி இப்போதான் பக்கத்துலேயே பாக்குறேன் இப்போ போய் டிஸ்டன்ஸா… வாய்ப்பில்லை வாய்ப்பில்லை.” என்றவனின் சொற்கள் அவளிதழில் சென்று சேர, புதிதாய் புலர்ந்த உணர்வுகளில் நடுக்கம் கொண்டது பெண்ணுடல்.

அவளுக்கு நடுக்கம் எனில் அவனுக்கு வெம்மை. இரண்டும் சரிசமமாய் பரவ காந்தமென ஒருவர் புறம் ஒருவர் ஈர்க்கப்பட்டு காற்றை திண்டாட வைத்தனர். சுழலும் மின்விசிறியின் சத்தத்திற்கு ஈடுகொடுக்கும் விதமாய் முனகல் வெளிப்பட்டது. 

கரங்கள் மற்றவரின் மேல் தயக்கமின்றி ஊர்ந்து அருகாமையை உறுதி செய்துகொண்டது. இருவருக்கும் இடையில் தடையாய் இருக்கும் அனைத்தையும் துறந்து உயிரோடு உயிர் சேர்ந்துவிடும் வேகம் மட்டும் குறையவே இல்லை நள்ளிரவு வரை.

களைத்த உடல் உறக்கத்திற்கு கெஞ்ச, களிப்பில் உறங்க மனமின்றி கணவனின் நெஞ்சத்தை மஞ்சமாக்கி அங்கு சிறு சிறு முத்தங்கள் பதித்தவண்ணம் இருந்தாள் பெண்ணவள்.

“தூங்குடா…” கரகரத்து வந்த அவனது குரல் அவளுக்கு சிலிர்ப்பை உண்டுபண்ண, ஏனோ அவ்விரவு விடியா இரவாகிடாதா என்ற ஏக்கம் கல்பனாவிடம். 

இன்னவென்று பிரித்தறியா முடியாவிட்டாலும் மீண்டும் மீண்டும் வலியுடன் கூடய சுகத்தை நாட விரும்ப, ஆடவனை இறுகப் பற்றி தன்வசப்படுத்தியிருந்தாள் பெண். அவனுக்கும் என்ன புரிந்ததோ சளைக்காது ஈடுகொடுக்க, 

பிரித்தறிய முடியாத அந்த உணர்வு என்னவென்று வெகு சில நாட்களிலேயே கண்டுகொண்டாள் பெண். கண்டுகொள்ள வேண்டிய கட்டாயத்தில் விதி நிறுத்தி வைக்க, ஒரே நாளில் ஒரே மேடையில் இரு திருமணங்கள் நடந்ததுதான் பிழையாகிவிட்டது என்றதில் வந்து நின்றது.

Advertisement