Advertisement

*6*

மூன்று வருடங்களுக்கு முன் இரவோடு இரவாய் பேருந்தேறி விடியும் வேளையில் வந்திறங்கிய போது திகிலூட்டிய சென்னை மாநகர் அன்று போல் இன்றும் வாய்ப்பளித்து நம்பிக்கை கொடுத்தது சிகாவுக்கு. ஒரு வாரமாய் பிரபல பல்பொருள் அங்காடியில் உதவி ஊழியன் பணிக்கு சென்று கொண்டிருக்கிறான். முன்பை விட இரட்டிப்பு ஊதியம். இரட்டிப்பு வேலை. ஆனால் அதற்கான மாறுதல் எதுவுமின்றி இயல்பாய் இருந்தது வாழ்க்கை. சூழ்நிலை குறித்த புரிதல் நிரம்ப இருந்தாலும் புது மாப்பிள்ளை கலை வடிந்து ஏக்கம் மெல்ல எட்டிப்பார்க்க துவங்கியது.

வேக வேகமாய் குளித்து கிளம்பி வந்தவ ன் அடுப்படியில் நிற்கும் தேவியிடம் செல்ல, தயாராய் வைத்திருந்த உணவுப் பையை ஒரு கையிலும் மற்றொரு கையில் அவனுக்கான காலை உணவையும் திணித்தார்.

“எல்லாம் வச்சிட்டியாமா?” பார்வையால் இடக்கையில் இருந்த கூடையை ஆராய்ந்தபடி கேட்க, 

“வச்சிட்டேன்டா. பகல்ல தூங்கி நான் ரெஸ்ட் எடுத்துடுறேன், நைட் கல்பனாவை வீட்டுக்கு கூட்டிட்டு வந்துரு. இன்னைக்கு நான் பாத்துக்குறேன் அண்ணியை.” 

தேவி அப்படி சொன்னதும் நொடி நேரம் அவன் மனது குத்தாட்டம் போட்டு தெளிந்தது. 

“உனக்கு அங்க சரியா வருமா அம்மா? உடம்பு முடியாதவங்க வலில ஏதாவது பேசுனா சங்கடமாகிடும். கல்பனாவும் அவங்க மாமாவும் கூட இருக்காங்க பாத்துப்பாங்க.”

“அவங்க பாத்துப்பாங்கதான், கல்பனாவே சின்ன பொண்ணு அண்ணியை தூக்கி படுக்க வைக்கணு ஒத்தையா எப்படி சமாளிக்கும்.”

“சமாளிச்சுடுவாமா… மூணு நாளா பாத்துக்குறால்ல…”

“மொத ரெண்டு நாளு அண்ணியோட அண்ணன் வீட்டுக்காரம்மா கூட இருந்து பாத்துக்கிட்டாங்க சரின்னு நானும் சமைச்சி குடுத்துட்டு பேசாம இருந்துட்டேன், இனி என் மருமக தானே தனியா பாக்கணும். நான் ஒத்தாசையா இருக்கேன்.”

“இங்க பாப்புவை வச்சிட்டு அண்ணிக்கு கஷ்டமா இருக்கப்போவுது. அண்ணி ஓகே தான?” 

சுசீலாவிடம் குழந்தை பற்றி பேசிய பிறகு சிகா ஒதுங்கிக்கொண்டான். உடன் சரளாவின் நிலை, திருமண அலைச்சல் என்று அதன்பின் சுசீலாவின் உடல்நிலை பற்றி பெரிதாய் கேட்டிருக்கவில்லை. சுசீலாவும் இயல்பாய் நடமாட அனைத்தும் இயல்புக்கு வந்த நிம்மதி. 

“அதெல்லாம் நல்லாத்தான் இருக்கா. புதுசா கல்யாண ஆனவங்க இப்படி ஆளுக்கொரு மூளையா இருக்கிறது நல்லாவா இருக்கு? இன்னைக்கு நைட் நான் ஆஸ்பத்திரில தங்கிக்கிறேன். சின்னஞ்சிறுசுக மனசுவிட்டு பேசி ஓய்வெடுங்க.” முடிவாய் சொல்லிவிட்டார் தேவி.

அவனுக்கும் கல்பனாவுடன் நேரம் செலவழிக்க ஆசை கொட்டிக்கிடக்கிறது. எதிர்பாராத திருப்பங்களால் நடந்தேறிய திருமணம் எனினும் அவர்களுக்கான உலகம் எப்படி இருக்க வேண்டுமென்று இருவருக்கும் கனவுகள் பல உண்டு. காலம் இருக்கிறது பொறுமையாய் தங்களுக்கானதை அமைத்துக்கொள்ளலாம் என்று ஒருமித்தமாய் இருவரும் முடிவெடுத்திருந்தாலும் நேசம் வைத்த நெஞ்சு மற்றவரின் அருகாமையை நாடியது. 

மாமியாரின் உடல்நிலையும் உடனடியாக அவர் சிகிச்சை எடுக்க வேண்டிய கட்டாயத்தையும் உணர்ந்து கொண்டவன் கல்பனாவை தொல்லை செய்யவில்லை. அவள் விருப்பப்படி விட்டுவிட்டான். காதலுக்கான ஏக்கம் வெளியேற துடித்தபடி ஒரு மூலையில் தன் முறை வர தவித்துக்கொண்டிருந்தது. இன்று அது நிறைவேறப் போகும் ஒளி அவன் முகத்தில் அப்பட்டமாய் பளிச்சிட்டது.

துள்ளலுடன் சைக்கிளை வேகமாக மிதித்து மருத்துவமனை வளாகம் வந்தவன் சரளா இருக்கும் அறைக்குச் சென்றான். அறையின் வெளியே கல்பனாவின் மாமா அமர்ந்திருக்க,

“சாப்பிட எடுத்துட்டு வந்திருக்கேன். வாங்க சித்தப்பா.” முறையாய் அவரை அழைக்க, ஏற்கனவே பசியில் இருந்தவர் உடனே அறைக்குள் நுழைந்தார். பின்னோடு சிகா நுழைய அவனைக் கண்டதும் கல்பனாவின் இதழ்கள் அந்த சோர்விலும் சட்டென விரிந்தது.

உணவுக் கூடையை கல்பனாவிடம் கொடுத்தவன் சரளாவைப் பார்க்க அவர் உறக்கத்தில் இருந்தார். புற்றுக் கட்டியை நீக்கும் அறுவை சிகிச்சை நடந்திருந்தது. இன்னும் ஓரிரு நாளில் வீட்டுக்கு அனுப்பி விடுவர் பின் கீமோதெரபி சிகிச்சை. 

“நைட் நீ வீட்டுக்கு வந்து ரெஸ்ட் எடு கல்ப்ஸ், அம்மா இங்க வந்து பாத்துப்பாங்க.” 

உணவை பிரித்து மாமனுக்கு பரிமாறியவள் புருவம் சுருக்கினாள், “அத்தைக்கு ஏன் சிரமம் அத்தான்? இன்னும் ரெண்டு நாள்ல வீட்டுக்கு அனுப்பிடுவாங்க,நான் பாத்துக்குறேன்.”

“தம்பி சொல்றதும் சரிதான் கல்பனா. நீயும் கல்யாணம் முடிஞ்ச மறுநாள்லேந்து இங்க தான் இருக்க. சரளாவுக்கு இப்போ கொஞ்சம் தேவலையா இருக்கே. ரெஸ்ட் எடுத்துட்டு கோவிலுக்காச்சு போய்ட்டு வா.”

“இல்லை மாமா, நாளைக்கு சாப்பாடு கொடுத்து பாக்கலாமான்னு சொல்லி இருக்காங்க. குளிக்க வைக்கணும்.” என்று கல்பனா தயங்கி நிற்க,

“அது நாளைக்கு தானே… நைட் போயி தங்கிட்டு காலையில கிளம்பி வந்துடு. நானும் ஊருக்கு கிளம்புறேன் வேலை கொஞ்சம் கிடக்கு. நைட் உங்கப்பாவையும் வரசொல்லிக்கலாம்.” என்று அவள் மாமா முடிவாய் சொல்ல, தெளியாது சிகாவை பார்த்தாள். சிகா ஆதரவாய் கண் சிமிட்ட, வேறு வழியின்றி தலையாட்டி வைத்தாள்.

சொன்னது போல் இரவு சரளாவை பார்த்துக்கொள்ள தேவியும் கபிலனும் வந்துவிட்டார்கள். அன்றிரவு மகள் வீட்டிற்கு செல்கிறாள் நாத்தனார் உடன் இருந்து தன்னை கவனித்துக் கொள்ளப் போகிறார் என்றதும் சரளா சற்று சுணங்கித்தான் போனார். வலி எடுக்கும் நேரமெல்லாம் அதை பொறுக்க முடியாது மகளிடம் சிடுசிடுத்து விடுவார் இல்லை முகத்தை சுருக்கி வைத்து முனகி தள்ளி விடுவார். 

தன் மகள் என்ற உரிமையின் வெளிப்பாடு அவரின் அனைத்து செயல்களிலும் தெரிந்துவிடும். ஆனால் இப்போது நாத்தனார் உடன் இருக்கிறேன் என்கையில் தன் உடல் வேதனையை மன கலக்கங்களை வெளிப்படுத்துவதில் தவிப்பும் தயக்கமும் வந்தது.

“எதுனாலும் அத்தைகிட்ட இல்லை அப்பாகிட்ட சொல்லுமா.” என்ற கட்டளையுடன் மகள் வீடு சென்றிருக்க, கண்களை மூடி அமைதியாக படுத்துக்கொண்டார். 

சைக்கிளில் மனைவியை அழைத்துச் செல்ல மனமின்றி ஷேர் ஆட்டோ பிடித்து அவர்கள் வீட்டருகே இருக்கும் பேருந்து நிறுத்தத்தில் இறங்கிக்கொண்டார்கள்.  

“சீக்கிரம் ஒரு வண்டி வாங்கணும் கல்ப்ஸ்.” என்றபடி அவள் கரம் கோர்த்து சாலையில் எட்டி நடை போட்டான் சிகா.

அவன் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் இணைந்திருந்த கரத்தில் அழுத்தம் கொடுத்து பெண் பின்தங்க, புரிந்துகொண்டவன் சன்னச் சிரிப்புடன் அவள் வேகத்திற்கு நடையை குறைத்தான்.

தனக்கே உரித்தான குளுமையுடன் வாடைக்காற்று அவர்களை வருடிச் செல்ல, மூன்று நாட்களாய் அனுதினமும் வீசிய மருந்துகளின் நெடி நீங்கி புத்துணர்ச்சியுடன் அந்த ஊதலை ரசித்து உள் இழுத்தாள் கல்பனா.

“இப்படி தான் என் மாமன் மக மூணு வருஷம் முன்னாடி வீட்டு வாசல்ல நின்னு காத்து வாங்குறேன்னு மூக்கை உறிஞ்சி உறிஞ்சி என்னை மொத்தமா உறிஞ்சி எடுத்துகிட்டா அவ பக்கம்.” என்றவன் அவள் தோள் உரசும் வகையில் நெருங்கிக்கொண்டான். 

“ம்க்கும்… இவர் மட்டும் என்னவாம். வேலைக்கு போனோமா வந்தோமான்னு இல்லாம நடந்து போகும் போதெல்லாம் இந்த பக்கமும் அந்த பக்கமும் ஓரக்கண்ணால எங்க வீட்டை நோட்டம் விட்டு விட்டு என்னை திரும்பி பாக்க வச்சது யாராம்?” செல்ல நொடிப்பு அவளிடத்தில். 

“என் மாமன் கண்ணுல படமாட்டாறானு பாத்தா மாமன் மக கண்ணுல தான் பட்டிருகேன்.”

“நல்லா பட்டு தட்டி தூக்கியாச்சு…”

“நானே எதிர்பாக்கல கல்ப்ஸ் நம்ம கல்யாணம் இவ்ளோ சீக்கிரம் நடக்கும்னு.”

“அம்மாவுக்கு இப்படி ஆகும்னு நினைக்கவே இல்லை அத்தான். அவங்க கஷ்டப்படுறதை பாக்கும் போது படிச்சு என்ன கிழிச்சிட்டேன்னு தோணுது. புத்தகத்தில் இருக்கிறதை படிக்கறது மட்டும் அறிவு கிடையாது, அது தர அனுபவத்தை நாலு பேருக்கு கொண்டு சேர்க்குறதுல தான் இருக்குனு உச்சி மண்டையில நங்குன்னு கொட்டுன மாதிரி இருக்கு.”

“காலேஜ்ல அப்பப்போ விழிப்புணர்வு முகாம்லாம் போட்டு இதுபத்தி எல்லாம் சொல்லி இருக்காங்க. அதை பெருசா எடுத்தது இல்லை. அட்லீஸ்ட் அதை காதுல வாங்கிட்டு வந்து அம்மாட்ட சொல்லியிருந்தா அவங்களும் சுதாரிப்பா இருந்திருப்பாங்கல்ல. நமக்கு எங்க இதெல்லாம் வரப்போகுதுன்னு அலட்சியமா இருந்துட்டோம்.” என்றவளிடத்தில் வருத்தம் மேலோங்கியிருந்தது. 

“நம்மள மீறி என்ன ஆகிடப்போகுதுன்னு சின்ன சின்ன இடத்தில கோட்டை விடுறது இயல்புதான் கல்ப்ஸ். எதுவும் வேணும்னு பண்றது இல்லை அறியாமைல தவற விட்டுறது தான். எது நடக்கணும்னு இருக்கோ அதான் நடக்கும். அத்தை மனசு மாறி நம்ம கல்யாணத்துக்கு ஒத்துப்பாங்கன்னு என்னைக்காவது நீ நினைச்சிருக்கியா?”

மறுப்பாய் அசைந்தது அவள் சிரம்.

“இது இப்படித்தான் நடக்கணும்னு இருக்கு. அவங்க சம்மதத்துக்கு நாம கொடுத்திருக்கிற விலை அவங்களோட உடல்நிலை. அதை தேத்தி கொண்டு வந்துரலாம்னு எனக்கு நம்பிக்கை இருக்கு கல்ப்ஸ். நீயும் நம்பனும்.”

அவனது வார்த்தைகள் அவளுக்கு தெம்பூட்டுவதாய் இருக்க, நடந்தபடியே அவள் வீட்டை கடக்கும் தருவாயில் சட்டென நின்றான் சிகா. 

“வீட்ல ஏதாவது எடுக்கனுமா?” கேள்வியாய் அவளைப் பார்க்க, நெற்றி சுருக்கியவள் பூட்டியிருந்த வீட்டை பார்த்தாள்.

லைட் எல்லாம் அணைக்கப்பட்டு அமைதியாய் இருந்தது வீடு. தந்தை மருத்துவமனை வந்ததும் வேந்தனும் காயத்ரியும் நேரமே படுத்துவிட்டார்கள் போல. பெருமூச்சு எழுந்து அடங்கியது.

“எதுக்கு இந்த பெருமூச்சு இப்போ?”

“காயத்ரி ஹாஸ்பிடல் வந்து பாக்கலைனு அம்மாவுக்கு வருத்தம்.” என்றவளை புருவ முடிச்சுடன் ஏறிட்டான்.

“ஆப்ரேஷன் அன்னைக்கு எல்லாரும் தானே ஹாஸ்பிடல்ல இருந்தோம்?”

நின்றிருந்த நடை துவங்கியது. 

“அதுக்கப்புறம் வரலையாம். மாமாவும் அத்தையும் புதுசா கல்யாணம் ஆன பொண்ணு ஹாஸ்பிடல் வந்து என்ன பண்ணப் போறான்னு சொல்லி இருக்காங்க.”

“வலி கொடுக்குற இயலாமைல பேசுறாங்க. போக போக சரியாகிடும்.” 

பேசியபடியே அவர்கள் வீடு வந்து விட, சிகாவை முன்னே விட்டு அவனை பின் தொடர்ந்தாள் கல்பனா. வழக்கம் போல் கனியின் சேட்டைக்கு பயந்து கதவு அடைக்கப்பட்டிருந்தது. கதவை தட்டிவிட்டு சிகா காத்திருக்க, சிறிது நேரம் கழித்தே கதவு திறக்கப்பட்டது.

“தூங்கிட்டீங்களா?” சுசீலாவிடம் கேட்டபடி உள்ளே நுழைந்த சிகா வழக்கம் போல் ஹாலில் இருந்து தன் துண்டு மற்றும் மாற்று உடையை எடுத்துக்கொண்டு குளிக்கச் சென்றவன் சட்டென சுதாரித்து கல்பனாவை அழைக்க, நொடி தயங்கியவள் இயல்பாய் அவனிடம் சென்றாள்.

“கை கால் கழுவிட்டு வா.” துண்டை அவளிடம் கொடுத்து உள்ளே அனுப்பினான்.

“சாப்பாடு எல்லாம் ஹால்ல எடுத்து வச்சிருக்கேன் ரெண்டு பேரும் சாப்பிட்டுருங்க.” என்று ஹாலில் இருந்தபடியே சுசீலா குரல் கொடுக்க, நின்ற இடத்திலிருந்தே எட்டிப்பார்த்தவன் யோசனையுடன் ஆமோதித்தான்.

அவ்வளவு தான் என் வேலை முடிந்துவிட்டது என்பது போல் சுசீலா அறைக்குச் சென்றுவிட, கல்பனா முகம் கழுவி வெளியே வந்து துண்டை அவனிடம் நீட்டினாள்.

“இங்க இருக்கட்டும்னு அவசரத்துக்கு கொஞ்ச டிரெஸ் மட்டும் கல்யாணத்தன்னைக்கு கொண்டு வந்தேன். எங்க இருக்கு அத்தான்? டிரெஸ் மாத்துனா தேவலாம் போல இருக்கு.” என்றவள் பதிலுக்காக அவனை பார்க்க, விரல் கொண்டு புருவம் நீவியவன் ஹாலில் அவளுடையது எதுவும் இருக்கிறதா என்று ஆராய்ந்தான்.

“ஆரஞ்சு கலர் டிராவல் பேக் அத்தான்.” அவன் கண்கள் அலைபாய்ந்த விதமே அவனுக்கு அவள் பை பற்றி தெரியவில்லை என்பது புரிய, தேடுவதற்கு இலகுவாய் பையின் நிறம் சொன்னாள் கல்பனா. 

“அம்மா ரூம்ல வச்சிருக்கும்னு நினைக்கிறேன்.” என்றவன் விழிகள் தன்னால் அந்த ஒற்றை படுக்கையறைக்குச் செல்ல, கதவு அடைக்கப்பட்டிருந்தது. அவனைத் தொடர்ந்த அவள் விழிகளும் இந்நேரம் அவர்களை எழுப்பி தன் உடை எடுக்க வேண்டுமா என்று சங்கடம் உணர்த்தியது.

“பரவாயில்லை அத்தான். நீங்க குளிச்சிட்டு வாங்க சாப்புடலாம்.” என்றவள் கீழே அமர்ந்துகொள்ள, அந்த ஹாலை சுற்றி பார்வையை அலையவிட்ட சிகா பின்னந்தலை கோதி நின்றான்.

அவனின் எண்ணப்போக்கு உணர்ந்த கல்பனா, “அத்தான்!” 

அழுத்தமாய் ஒலித்த அவளின் அழைப்பில் தலை சிலுப்பியவன் வேகமாய் சென்று குளித்து வர, கல்பனாவுடன் பேசிக்கொண்டிருந்தான் சேகர். சிந்தைக் கோடுகள் நெற்றியில் விரவ சேகரிடம் பார்வையை செலுத்தியபடி கல்பனா அருகில் வந்தான் சிகா. தம்பியின் பார்வை உணர்ந்தவன் நிமிர்ந்து சங்கடப்பார்வை உதிர்த்து,

“சாப்பிட்டுட்டு ரூம்ல படுத்துக்கோங்க. கனி ரொம்ப சிணுங்கிட்டே இருந்தான்னு சுசி ரூம்ல படுக்க வச்சா. இப்போ பாப்பா தூங்கிட்டா…” எனும் போதே பாய் ஒரு கையிலும் மகள் மறு கையிலுமாய் தூக்கி வந்து ஹாலின் மற்றொரு ஓரத்தில் போட்டு படுக்க வைத்தாள் சுசீலா.

“அண்ணி என்ன பண்றீங்க? பாப்புவை ரூம்ல படுக்க வைங்க. போங்க.” அதிர்ந்தவனாய் சிகா சொல்ல, இழுத்து பிடித்த முறுவலுடன், “இருக்கட்டும் தம்பி. அத்தை சொல்லிட்டு தான் போனாங்க.” என்றாள் சுசீலா. 

அனைத்தும் இயல்பாய் சூழலுக்கு இசைந்து கொடுத்து போவது போல் இருந்தாலும் அங்கிருந்த இரு தம்பதிகளுக்கு இடையிலும் அகப்படா மெல்லிய திரைவொன்று சரிந்து கிடந்ததை நால்வராலும் உணர முடிந்தது.

Advertisement