Advertisement

வேந்தன் சொன்னபடி இரண்டாம் நாளும் சரளாவுக்கு வலி இருக்க, அன்று காலையே மருத்துவமனை கிளம்பி விட்டனர். கபிலன் வேலைக்கு விடுப்பு எடுக்க முடியாததால் கடைக்கு சென்றுவிட வேந்தனும் கல்பனாவும் உடன் சென்றனர். முன்பு சென்ற மருத்துவமனை விட சற்று பெரிய மருத்துவமனை சென்றனர். பெரிதாய் ஒன்றும் இருக்காது என்ற தைரியத்துடன் சென்றவர்களுக்கு முதல் இடியாய் வந்து இறங்கியது சரளா இடது மார்பில் இருந்த கட்டி. அது என்ன கட்டி என்று பரிசோதித்து பார்த்துவிட்டு மேலே சிகிச்சை பற்றி பேசலாம் என்று அனுப்பிவிட்டனர். பிரம்மை பிடித்தது போல் அமர்ந்திருந்தார் சரளா.

“அம்மா ஒன்னுமில்லை. டெஸ்ட் எடுத்தா என்னனு தெரிஞ்சிடும்.” பக்குவமாய் பேசி, சரளா கைபிடித்து அமர்ந்தாள் கல்பனா. 

பரிசோதனை செய்ய பணம் கட்டி டோக்கன் போட சென்றிருந்தான் வேந்தன். அவனுக்கும் உறுத்தல் தான் பரிசோதனை கட்டணம் கேட்டதுமே. அவனது மாத சம்பளத்தில் பாதியை பரிசோதனை கட்டணமாய் வசூலித்தனர். ஏதாவது பெரிதாய் இருக்குமோ என்ற பயம் கவ்விக்கொண்டது.

“நான்… டாக்டர் பாக்குற வரைக்கும் நான் கவனிக்கவே இல்லடி. ஏதோ பெருசா இருக்கும் போல.” மகளின் கையை இறுக பற்றிக்கொண்டார்.

“வலிச்சா முன்னாடியே சொல்லி இருக்கலாம்லமா… ஆரம்பத்திலேயே பாத்திருக்கலாம்.”

“நான் என்னத்தடி கண்டேன். எப்போவாவது வலிக்குற மாதிரி இருக்கும் வீட்டுக்கு தூரம் நிக்குறதுக்கு ஏதாவது பண்ணுதுனு நினைச்சு வலிக்கு மாத்திரை போட்டுப்பேன் அப்பப்போ.” நெஞ்சம் படபடக்க சொன்னார் சரளா. 

இப்படித்தான் பலரும் உடல் காட்டிக்கொடுக்கும் சிறு சிறு மாற்றங்களை அலட்சியம் செய்து நாமாகவே மருந்தகத்தில் சொல்லி மாத்திரை வாங்கி உண்டு விடுகிறோம். மாத்திரை உண்டதும் கிடைக்கும் புத்துணர்ச்சியில் உடல்நிலை மாற்றங்கள் பின்னுக்கு செல்ல, அவ்வப்போது மருந்தகத்தில் வாங்கி உட்கொள்வதே வாடிக்கையாகிவிடுகிறது. விளைவு சிறியதாய் துவங்குவது ஒருநாள் பெரிதாய் வெடித்து தன் வேலையை காட்டிவிடுகிறது. போதாக்குறைக்கு சமூக வலைத்தளங்களில் லைக்குகளுக்கும் வியூவ்ஸ்களுக்கும் அடிமையாகி தாங்களே மருத்துவர் போல் ஆலோசனைகள் வழங்கும் அதிமேதாவி கூட்டங்களின் காணொளி வைத்தியம் வேறு. 

கட்டணம் கட்டி வந்த வேந்தன் தங்கையிடம் அந்த ரசீதை கொடுத்து, அன்னைக்கு தைரியம் சொல்லி வெளியே சென்று நின்றுகொண்டான். சரளாவின் முறை வந்ததும் அழைப்பு வர உள்ளே சென்றார். கல்பனா அண்ணனைத் தேடி சென்றாள்.

தங்கையை அருகில் காணவும் விரைந்த வேந்தன், “அம்மா எங்க? என்ன சொல்றாங்க?”

அண்ணன் கரத்தை இறுக பற்றிக்கொண்ட கல்பனா, “டெஸ்ட்க்கு உள்ள போய் இருக்காங்க. பயமா இருக்குடா… இந்த ரிசல்ட் பாத்துட்டு தான் சாதா கொழுப்பு கட்டியா இல்லை கேன்சர் கட்டியான்னு சொல்ல முடியும்னு எல்லாம் சொல்றாங்களே…”

“அப்பாக்கு இன்னும் சொல்லல… ரிசல்ட் வந்ததும் சொல்லிக்கலாம்.”

“ரிசல்ட் வர லேட்டாகணும்னு சொல்றாங்க.” என்றாள் கல்பனா.

தாய் பரிசோதனை கூடத்தில் இருந்த இயந்திரங்களை பார்த்து படபடப்புடன் இருக்க, வெளியே பிள்ளைகள் இருவரும் அவருக்கு சற்றும் குறையாத பதட்டத்துடன் இருந்தனர். பெரிதாய் எதுவும் இருக்கக்கூடாது என்று மனதில் லட்சப் பிராத்தனைகள் இஷ்டதெய்வத்தின் மீது வைத்தாள் கல்பனா.

வேந்தனுக்கு இருப்பு கொள்ளவில்லை. அங்கிருந்த மற்றவர்களிடம் பேச்சு கொடுத்தபடி கட்டியின் வீரியங்கள் பற்றி மேலோட்டமாய் தெரிந்துகொண்டான். கேள்விப்பட்ட விஷயங்கள் யாவும் ஒருபக்கம் நம்பிக்கை கொடுப்பதாய் இருந்தாலும் பரிசோதனை முடிவு தங்களுக்கு சாதகமாய் இல்லாது போனால் என்று நினைக்கையிலேயே கைகள் நடுக்கம் கொண்டது. வேறேதாவது பிரச்சனை என்றாலாவது முகத்தை வைத்தோ அவரின் சோர்வை வைத்தோ முன்பே கண்டுகொண்டிருக்கலாம். இப்படி மார்பில் கட்டி வருவதெல்லாம் பெண்கள் தானே கண்டுகொண்டு முன்னெச்சரிக்கையாய் இருந்திருக்க வேண்டும் என்ற எண்ணம் வேந்தனுக்கு. 

அவ்வப்போது சுய பரிசோதனை, குறிப்பிட்ட வயது வந்தபின் வருடாந்திர பரிசோதனை செய்ய வேண்டும் என்பது போன்ற வாசகங்கள் கொண்ட துண்டுப்பிரசுரங்கள் அந்த அறையின் வெளியே ஆங்காங்கு ஒட்டப்பட்டிருக்க இதுவரை அதையெல்லாம் கருத்தில் கொள்ளாத வேந்தன் ஒவ்வொன்றையும் படித்து தெரிந்துகொண்டு தங்கையிடம் வந்தான்.

“நீயும் எல்லாத்தையும் பாத்து தெரிஞ்சிக்க…” என்று அந்த வாசகங்களை சுட்டிக்காட்ட தலையசைத்துக்கொண்டாள் கல்பனா.

பரிசோதனை முடித்து வெளியே வந்த சரளா அமைதியாய் மகள் கை பிடித்து அமர்ந்துவிட்டார். 

“அம்மா எல்லாம் ஓகே தான?” பரிதவிப்புடன் சரளாவை உற்று நோக்கினாள் கலப்பனா. 

சரளாவின் தலை மட்டும் ஆடியது. மகளை தவிப்புடன் பார்த்தவர் பின் குனிந்துகொண்டார். சோதனை முடிவு எப்போது கிடைக்கும் என்று விசாரிக்க சென்றிருந்த வேந்தன் திரும்பி வந்து, “ரிசல்ட் கிடைக்க ஒரு வாரம் கூட ஆகுமாம். வீட்டுக்கு கிளம்பலாமா?” என்று கேட்டு நிற்க, இப்போது மகனை நிமிர்ந்து பார்த்த சரளா மீண்டும் குனிந்து கொண்டார்.

“தண்ணி குடுத்து கூட்டிட்டு வா கல்பனா. நான் ஆட்டோ புடிச்சிட்டு வரேன்.” என்றுவிட்டு வெளியே சென்றான்.

வீடு வரும் வரை மட்டுமல்ல அதற்கு மறுநாள் வரை கூட அவர்களின் வீடு நிச்சலனமாய் இருந்தது. அனைவர் மனதிலும் வந்து பசை போல் ஒட்டிக்கொண்ட பயம் ஒருவரையும் இயல்பாய் இருக்க விடவில்லை. ஏனோ அனைவரின் எண்ணமும் நேர்மறை விட்டு எதிர்மறை நோக்கியே சென்றது. நல்லதையே நினை என்று மனதை திசைதிருப்ப எவ்வளவு முயன்றாலும் பலன் பூஜ்யமாகி இருக்க, ஒருவித இறுக்கத்தில் இருந்தது வீடு. அதற்கு கொம்பு வைத்தது போல் வீட்டினர் நால்வரும் கூடி இருக்கையில்,

“அவனை கூப்பிடுங்க. வேந்தன் விருப்பப்பட்டது நடக்கும் போது கல்பனா மட்டும் ஏன் இப்படி இருக்கனும். எல்லாம் பசங்க விருப்பப்படி நடக்கட்டும்.” என்றார் சரளா. 

“அதுக்கு ஒன்னும் அவசரம் இல்லை. முதல்ல உன் உடம்பை பாக்கலாம்மா.” என்றாள் மகள். 

“அவசியம் கல்பனா. எனக்கு எதுவும் ஆகுறதுக்கு முன்னாடி நீங்க ரெண்டு பேரும் சந்தோசமா இருக்கறதை பாக்கணும்.” என்ற சரளாவை அதட்டினார் கபிலன்.

“என்ன பேசுற நீ? மாவுச்சத்து அதிகமா எடுத்தாலும் கொழுப்புக்கட்டி வருமாம். அதுவா தான் இருக்கும் உனக்கு. சும்மா மனசை போட்டு குழப்பி எங்களை பயமுறுத்தாத.”  

“நாங்க சொல்றதை கேளுமா… அமைதியா ரெஸ்ட் எடு. எல்லாம் சரியாகிடும்.” என்ற மகனை வெற்றுப்பார்வை பார்த்தார். சொல்லணா பாரம் மனதில் ஏறிக்கொள்ள நெஞ்சை நீவி விட்டுக்கொண்டார். 

பரிசோதனை அறை செல்லும் வரை பயத்தை சுமந்திருந்த மனம் சோதனை எல்லாம் முடித்து வந்த பின் நிச்சலனமானது. இப்படி இருக்க வேண்டும் அப்படி இருக்க வேண்டும் என்று என்னதான் வான் முட்டும் வரை கற்பனை கோட்டை கட்டினாலும் நமக்கென்று என்ன எழுதப்பட்டிருக்கிறதோ அதுதான் கிடைக்கும். நடக்கும். அதை மாற்றி அமைக்கும் சக்தி இதுவரை கண்டுபிடிக்க படவில்லை என்ற நிதர்சனம் தன் மக்களின் விருப்பம் பக்கம் சாய்த்தது. வீம்பாய் தன் மகளை வேறு வாழ்க்கைக்குள் திணித்து அவளை கஷ்டப்படுத்தி தான் மட்டும் நிம்மதியாய் கண்மூடுவதா வேண்டாம். நான் இருக்கும் போதே அவள் நிம்மதியாய் வாழட்டும் என்ற எண்ணத்தில், 

“அவனை போன் போட்டு வரச்சொல்லு.” பிடிவாதமாய் இருந்தார்.

“நாங்க இவ்ளோ சொல்றோம் எங்க பேச்சுக்கு என்ன மரியாதை? உனக்கு முடியலைன்னு இன்னும் யாருக்கும் எதுவும் சொல்லல… இப்போ திடீர்னு அவனை கூப்புடுன்னா என்ன அர்த்தம்?” கபிலனின் குரல் உயர்ந்தது.

“நேத்தி வரைக்கும் கோபமும் வீம்பும் தான் பெருசா தெரிஞ்சுச்சு ஆனா இந்த நிமிஷம் நம்ம உயிருக்கு எந்த உத்திரவாதமும் இல்லைங்கும் போது எதுக்கு வேண்டாத ரோஷம், வாக்குனு எல்லாம் பாத்துகிட்டு. என் பொண்ணு அவன்கூட இருந்தா சந்தோசமா இருப்பான்னா இருந்துட்டு போகட்டும்.” என்றுவிட்டார் சரளா.

தன் விருப்பத்திற்கு சம்மதம் கிடைத்த மகிழ்ச்சியைக் கூட கொண்டாட முடியாத சூழலை எண்ணி அழுகைதான் வந்தது கல்பனாவுக்கு. நினைவு தெரிந்த நாளில் இருந்து அம்மாவை விடுப்பு எடுக்காத இரும்பு மனிதியாய் வீட்டில் வலம் வர கண்டவளுக்கு அவரின் இந்த பேச்சும் அவரின் நோவும் நெஞ்சை பிசைந்தது. 

சொன்னதோடு நில்லாமல் மகளின் அலைபேசியை எடுத்துவந்து அவளிடம் நீட்டினார்.

“அவனை கூப்பிடுடி.” 

“அவசரப்படாத சரளா.” என்று கபிலன் சொல்லியும் கேட்கவில்லை.

அம்மாவின் பிடிவாதத்தில் கல்பனா சிகாவை வீட்டிற்கு அழைக்க, வேலை முடிந்ததும் வருவதாய் சொல்லியவன் இரவு வீட்டிற்கு கூட செல்லாமல் கடையில் இருந்து நேராக மாமன் வீட்டு கதவை தட்டினான். கதவைத் திறந்த வேந்தன் அமைதியாய் அவனுக்கு வழிவிட்டு வா என்று அழைக்க, அவனை விசித்திரமாய் பார்த்தபடி உள்ளே வந்தான் சிகாமணி.

இவனைக் கண்டதும் அனைவரும் வரவேற்பாய் புன்னகை உதிர்த்து அவனை அமரச் சொல்ல, கல்பனா தண்ணீர் எடுத்து வந்து நீட்டினாள். வாங்கி பருகியவன் புருவம் உயர்த்தி கேள்வியாக அவளை நிமிர்ந்து பார்த்தான்.

“சீக்கிரம் வேற நல்ல வேலையா தேடிக்கிட்டு கல்பனாவை கல்யாணம் கட்டி கூட்டிட்டு போ. ரொம்ப நாள் வளத்திடாத நான் மனசு மாறிடுவேன்.” சரளா சொல்லவும்,

‘என்ன?’ என்றுதான் விழித்தான் சிகாமணி. 

அவனின் அதிர்வுக்கு எவரும் எதிர்வினை இன்றி அமைதியாய் இருக்க, குழப்பத்துடன் அனைவரையும் பார்த்தான்.

“என்னாச்சு?” அவன் கேள்விக்கு பதில் சொல்ல தான் யாருக்கும் வார்த்தை வரவில்லை. 

“ஏன் எல்லாம் அமைதியா இருக்கீங்க? யார் முகத்துலையும் சந்தோஷம் இல்லை.” சிகாவின் கேள்விகள் மட்டுமே அங்கு ஒலித்தது. 

என்னடா இது என்று பார்த்தவன் சரளாவிடம், “இப்போ உடம்பு எப்படி இருக்கு அத்தை?” என்று கேட்க, கல்பனா அனைத்தையும் சொல்லிவிட்டாள்.

“பெருசா எதுவும் இருக்காது. இப்போதான் எதேதோ வைரஸ் எல்லாம் கூட வருது. எல்லாத்துக்கும் மருந்து கண்டுபிடிக்கிறாங்க. சரி பண்ணிடலாம்.” நம்பிக்கை வார்த்தைகள் சொல்ல தலையாட்டி கொண்டனர் மற்றவர்கள்.  

ஆனால் அவனது நம்பிக்கை வார்த்தைகள் வார்த்தையோடு வார்த்தையாய் காற்றில் கலந்து கரைந்துவிட்டது தான் விதியின் நியதியோ. ஒரு வாரம் கழித்து வந்த பரிசோதனை ஆய்வில் சரளாவிற்கு இருப்பது மூன்றாம் கட்ட புற்றுநோய் கட்டி என்று ஊர்ஜிதமாகியிருந்தது. முறையான சிகிச்சை எடுத்தால் குணப்படுத்தி விடலாம் என்றனர். சிகிச்சை முறைகள் கலந்தாலோசிக்கப்பட்டன. மொத்த குடும்பமும் செயலற்ற தருணமது. 

விஷயம் கேள்விப்பட்டதும் சிகாவோடு அவர்களை காண வந்துவிட்டார் தேவி. சரளாவின் அண்ணன் குடும்பம் அவரைக் காண பயணத்தில்… 

“இப்போல்லாம் நிறைய மருந்து மாத்திரை வந்துடுச்சு அண்ணி எல்லாம் சரி பண்ணிடலாம்.” சரளா கைப்பிடித்து அமர்ந்திருந்தார் தேவி.

சரளா எதுவும் பேசாது சுவரை வெறித்தபடி அமர்ந்துவிட்டார். வேளா வேளைக்கு கல்பனா கொடுக்கும் உணவு பதார்த்தங்களும் பழச்சாறுகளும் நாவின் ருசியை தூண்டாது தொண்டைக்குள் இறங்கியது. 

மாலை சரளாவின் அண்ணன் வந்ததும் ஒருபாடு அழுது தீர்த்துவிட்டார். மகனுக்கும் மகளுக்கும் உடனே திருமணம் செய்து வைக்க வேண்டுமென்று பிடிவாதம்.

“முதல்ல ட்ரீட்மெண்ட் எடுத்துக்கோ கொஞ்ச நாள் போனதும் கல்யாணம் பண்ணலாம். யூடியூப்ல எல்லாம் பாத்தேன் இந்த கேன்சர் எல்லாம் குணப்படுத்திடலாமாம். நீ மனசை போட்டு குழப்பிக்கிட்டே இருந்தா பிள்ளைங்க பயந்துரும்.” சரளாவின் அண்ணன் அவரால் முடிந்த விதத்தில் ஆறுதல் அளித்தார். ஆனால் காது கொடுத்து அதை கேட்பதாய் இல்லை சரளா. 

புற்று நோய் என்ற கொடும் வியாதி வந்துவிட்டால் அதை சரிப்படுத்தி பழையபடி நடமாடுவதெல்லாம் சாத்தியமில்லாத விஷயம் என்று அவர் ஆழ்மனதில் பதிந்திருக்க, அடுத்து வந்த முகூர்த்தத்தில் திருமணம் என்று உறுதியானது.

“இப்போது இதெல்லாம் சரிவருமா?” என்று சேகர் தயங்கி நிற்க, அரிசி கடையில் மாலை மட்டும் வேலை செய்து பகல் நேரத்தில் வேறு வேலை தேடி அலைந்து கொண்டிருந்தான் சிகா. 

இதோ நாளை திருமணம் எனும் நிலையில் பரபரப்பாய் இருந்தது சிகாவின் வீடு. பெரிதாக சொந்தங்களை யாரையும் அழைக்கவில்லை. சுசீலா வீட்டிலிருந்து மட்டும் வந்திருந்தார்கள். சிகா அவனின் முதலாளியை அழைத்திருந்தான் அவ்வளவே.

“ஏன்டி நீங்க இருக்குறதே ஒரு ரூம் இருக்கிற வீட்டுல. இப்போ போய் உன் கொழுந்தனுக்கு கல்யாணம் பண்ணா அவங்களை எங்க வைப்பாங்க?” என்று திருமண சச்சரவை அமோகமாய் ஆரம்பித்து வைத்திருந்தார் சுசீலாவின் அம்மா. அந்த நேரம் பார்த்து கனிமொழி அழவும் சுசீலா குழந்தையை பார்க்க சென்றுவிட்டாள். 

சிகாவும் வேலை தேடி ஓடுவதால் கல்பனாவிடம் சரியாக பேசிக் கொள்ளக்கூட முடிவதில்லை. அவளும் அன்னையை விட்டு நகராது அவரை கண்ணுக்குள் வைத்து பார்த்துக்கொண்டாள். இதோ மணப்பட்டு உடுத்தி அந்த பிரபல கோவிலில் மாங்கல்யம் வாங்க தயாராய் இருந்த கல்பனா சிகாவின் கரத்தை அழுந்த பற்றிக்கொண்டாள்.

அவளின் பயம், தயக்கம், வருத்தம் என அத்தனையும் தாங்கி கண்சிமிட்டி அவள் கையில் அழுத்தம் கூட்டி தன் ஆதரவை வெளிப்படுத்தினான் சிகாமணி. மஞ்சள் கயிறு தன் கைக்கு வந்ததும் பக்கவாட்டில் இருக்கும் கல்பனாவை பார்த்து கண்சிமிட்ட அவளும் அவனைத் தான் பார்த்தாள்.

கண்களில் வஞ்சனை இல்லா காதலுடன் கரத்தில் மஞ்சள் கயிறு வைத்திருப்பவனை மனதில் இருத்திக்கொண்டவள் முகம் கொள்ளா புன்னகையுடன் லேசாக தலை சாய்த்து மாங்கல்யம் பெற்றுக்கொண்டாள். அந்த நொடி அன்னையின் உடல்நிலை எல்லாம் பின்சென்று அவர்களின் காதலே அவள் மனதில் ஆட்சி செய்ய, முகத்திலும் அது பிரதிபலித்தது. நிறைவாய் தாலிக்கு குங்குமம் இட்டவன் அவள் தோள் சுற்றி நெற்றி வகுட்டிலும் குங்குமம் இட்டான். நேசம் கரை சேர்ந்ததின் பலனாய் நெஞ்சம் நிறைந்தது அவர்கள் இருவர் முகத்திலும் வெளிப்பட வெளிவந்த கண்ணீரை சுண்டிவிட்டு அட்சதை தூவினார் சரளா.

கல்பனா கழுத்தில் ஏறியது போல சில நொடிகளிலேயே காயத்ரி கழுத்தில் மங்கல நாண் பூட்டியிருந்தான் வேந்தன். 

இரு பிள்ளைகள் முகத்தில் ஜொலிக்கும் புன்னகையும் நிம்மதியும் நிறைவும் சரளாவை உணர்ச்சிவசப்பட வைக்க, கண்ணீருடன் அவர்களை மனதிற்குள் நிரப்பிக்கொண்டிருந்தார்.

Advertisement