Advertisement

*5*

அலைபேசி பறிக்கப்பட்டிருக்க எந்நேரமும் தன்னைத் தொடரும் கண்காணிப்புப் பார்வையில் இந்த நான்கு நாட்களில் மனதளவில் சுணங்கிவிட்டாள் கல்பனா. படிப்பும் முடிந்திருக்க அனுதினமும் வீட்டுவேலை அவளை சூழுந்துகொண்டது. சிகாவிடம் பேச நேரமும் இல்லை வழியும் இல்லை. அன்று இரவும் அப்படி தோசை ஊற்றிக்கொண்டிருக்க ஒவ்வொருவராய் உண்ண அமர்ந்தனர். கபிலனும் வேந்தனும் காலை முதல் இரவு வரை உழைத்த அசதியில் கணக்கில்லாமல் தோசைகளை உள்ளே தள்ளிவிட்டு எழ அசதியுற்றவள் அடுப்பை அணைத்துவிட்டு வந்துவிட்டாள்.

“எனக்கெங்கடி தோசை?” சரளா கேள்வியாய் பார்க்க, 

“போமா நீயே ஊத்திக்கோ.” சலிப்பாய் வந்தது கல்பனாவின் குரல்.

“தினம் நான்தானே எல்லாம் செஞ்சிக்கொடுக்கிறேன் ஒரு நாலுநாள் உன்னால பாக்க முடியல. இத்தினி நாள் படிக்கிறேன்னு உன்னை விட்டது எவ்ளோ பெரிய தப்புனு நொடிக்கொரு முறை நிரூபிச்சிட்டே இருக்க நீ.”

“ம்ச்… என்னம்மா? உன்னை மீறி என்ன பண்ணிட்டேன் இப்போ? என்னால முடியல ஊத்திக்கோன்னு சொன்னது ஒரு குத்தமா? நானும் இன்னும் சாப்பிடல.”

“இப்போல்லாம் உன் பேச்சு, போக்கு எதுவும் சரியில்லைடி… நானும் பாத்துட்டே தான் இருக்கேன். வேலை செய்ய அலுத்துக்குற, எதிர்த்து பேசுற என்ன அந்த பய வந்து பேசுன தைரியமா?”

இவர்களின் உரையாடலை கேட்டுக்கொண்டிருந்த கபிலன் அமர்ந்த வாக்கிலே, “என்ன பண்ணுது கல்பனா?” மகளைக் கேட்க, அவள் அமைதியாய் அவரை பார்த்தாள்.

“வேடிக்கை பாக்காம புள்ளைக்கு தோசை ஊத்திக்கொடு சரளா. எப்படி வேர்த்திருக்கு பாரு அவளுக்கு.” அவர் மனைவியை ஏவ, 

“இத்தினி வருஷம் அந்த கிட்சன்ல மாங்கு மாங்குனு வேலை செஞ்சவளை விட்டாச்சு. ஒரு நாள் தோசை ஊத்தி வேர்க்கவும் தாங்கலையோ? நானும் பாத்துட்டு தான் இருக்கேன் உங்க பேச்சும் வர வர சரியில்லை.”

“என்ன சரியில்லை? மவன் உன் அண்ணன் பொண்ணை விரும்புனதும் குதிச்ச காலு என் பொண்ணு என் தங்கச்சி பையனை விரும்புறான்னதும் அந்த ஆட்டம் ஆடுது?”

“ஓ… சேதி அப்படி போகுதோ, பொண்ணை தூக்கி அவனுக்கு குடுக்க தயாராகிட்டீங்க போல…”

“குடுத்தா என்ன தப்புங்குறேன் இப்போ?”

“இதுக்கு நான் என்னைக்கும் ஒத்துக்க மாட்டேன்.” குதித்தார் சரளா.

“அப்பா, அம்மா சொல்றதும் சரிதான். இத்தனை வருஷம் சண்டை சச்சரவுனு பேசாம இருந்துட்டு அங்க கல்பனாவை குடுத்தா நல்லா இருக்காது. அவனுக்கும் பெருசா வருமானம் இருக்குற மாதிரி தெரியல.” சரளாவுக்கு துணையாய் வந்தான் வேந்தன்.

“என்னத்தை நீ பெருசா சம்பாரிக்கிறேன்னு உன் மாமா யோசிச்சிருந்தா தெரிஞ்சிருக்கும் சேதி.” மகனை கடிந்தவர் தொடர்ந்து, “உன் வருமானத்துக்கும் அவனோடதுக்கும் பெருசா வித்தியாசம் இல்லை.”

“அப்படி என்ன சொக்குப்பொடி போட்டான் அப்பாவும் பொண்ணும் ஒரேடியா அவன் பக்கம் சாஞ்சி நிக்குறீங்க?” சரளா தோசைக்கரண்டியை ஆட்டியபடி வந்தார்.

“நேர்மையா பேசுறான். பக்குவமா நடந்துக்குறான். வேற என்ன எதிர்பாக்குறீங்க ரெண்டு பேரும்?” 

“முடிவெடுத்துட்டு எங்களை சமாதானப்படுத்த பாக்குறீங்க.” என்றான் வேந்தன் தந்தையிடம்.

“நானும் அதையே சொல்லலாம்.” அம்மாவையும் மகனையும் ஒருசேர பார்த்து குற்றம் சாட்டினார் கபிலனும்.

“இப்போ என்னதான் சொல்ல வரீங்க அப்பா? அவனுக்கே கல்பனாவை கொடுக்கலாம்னு சொல்றீங்களா? அம்மா வேண்டாம்னு சொல்றாங்களே?”

“உன் அம்மா வேண்டாம் சொல்லவும்தான் ஏன் அவனுக்கு பொண்ணை குடுக்க கூடாதுனு யோசிக்க சொல்லுது. நீயும் பாத்தீல்ல அன்னைக்கு… எப்படி நிதானமா நடந்துக்குறான். வசதி குறைவே தவிர வேற என்ன குறை இருக்கு?” சரளாவை விடுத்து மகனை கேட்டார். சரளாவும் மகன் தன்புறம் இருக்கும் தைரியத்தில் அமைதி காத்தார்.

வேந்தனும் நொடி தந்தை புறம் சாய்ந்து யோசித்தவன் பின் தெளிந்து, “என்னதான் வருஷம் ஓடிட்டாலும் நடந்த பிரச்சனையெல்லாம் ரெண்டு பக்கமும் அப்படியே இருக்கே. அத்தை வீட்டோட உறவு முடிஞ்சுது முடிஞ்சதாவே இருக்கட்டும். புதுசு பண்ண பாக்காதீங்க.”

“அடபோடா பிரச்சனைனு அடிச்சிக்கிட்ட உன் அத்தை வீட்டுக்காரரே இல்லை. இன்னமும் அதையே பேசிகிட்டு.”

“இவ்வளவு அக்கறை இருக்கிறவர் அவங்க உங்களைத் தேடி இங்க வந்தப்போ ஏன் அடைக்கலம் கொடுக்காம கைவிரிச்சீங்க.” குதர்க்கமாய் கேட்டான் வேந்தன்.

“உன் அம்மா எதுவும் செய்யக்கூடாதுனு உடும்புப் புடியா இருந்துட்டா…”

“அவங்க பேச்சை அப்போ கேட்ட நீங்க இப்போ ஏன் இப்படி பேசுறீங்கன்னு புரியல.”

“அவ பேச்சை கேட்டு அவங்களை ஒதுக்குனாலும் நமக்கு ஒன்னுனதும் அவங்கதான் வந்தாங்க.”

“இது வேலைக்கு ஆகாது. என்னை மீறி எப்படி எல்லாம் நடத்திக்குறீங்கன்னு பாக்குறேன்.” பேச்சு மட்டுமல்ல மகளும் கணவரும் தன் கைமீறி செல்வது உணர்ந்து சரளா விடாப்பிடியாய் நின்றார். 

தந்தையின் ஆதரவில் தெளிந்த மகள் தைரியம் வரப்பெற்றவளாய், “ம்ச் நிறுத்துறீங்களா, என்னை வச்சி இவ்ளோ சண்டை வேண்டாம். உங்க எல்லார் சம்மதத்தோட தான் கல்யாணம் பண்ணிக்கனும்னு நினைக்குறேன். அதுக்கு எவ்ளோ நாள் ஆனாலும் சரி நான் வெய்ட் பண்றேன். நீங்க அண்ணனுக்கு முதல்ல பாருங்க.”

“அதெப்படி உன்னை வச்சிக்கிட்டு அவனுக்கு பண்றது? நீ நினைக்குறது எல்லாம் நடக்காது…” என்று கையாட்டி பேசும் போதே லேசாக நெஞ்சை நீவி விட்டுக்கொண்ட சரளா சட்டென அமைதியாகிவிட்டார்.

“என்னமா பண்ணுது?” அவரின் செய்கையை கவனித்த கல்பனா அருகில் வந்து கேட்க,

“ஒன்னுமில்லடி…” பலகீனமாய் வந்த அவரது குரல் மட்டுமல்ல சட்டென அவர் முகத்தில் வந்து குடிகொண்ட சுழிப்பும் கலக்கமும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

“உக்காரு முதல்ல… கல்பனா தண்ணி எடுத்துட்டு வா…” சரளாவை மின்விசிறிக்கு கீழ் அமரவைத்த வேந்தன், கல்பனா எடுத்துவந்த தண்ணீரை அவருக்கு கொடுக்க, மறுக்காது வாங்கிக்குடித்த சரளா,

“அப்பப்போ இது மாதிரி கை தூக்குனா இல்லைனா ஏதாவது வேலை செஞ்சிட்டு இருக்கும்போது லேசா வலிக்குது.” என்றவரை ஐயத்துடன் பார்த்தனர் குடும்பத்தினர்.

“வலிச்சா சொல்ல மாட்டியா?” கடிந்துகொண்ட கபிலன் அடுத்து என்ன செய்யலாம் என்பது போல் மகனைப் பார்த்தார்.

“ஏதாவது சேராததை சாப்பிட்டிருப்பாங்க, ரெண்டு நாள் பாப்போம் அப்பா… வலி தொடர்ந்து இருந்துச்சுன்னா டாக்டர்கிட்ட போகலாம்.”

அன்னையின் சோர்ந்த முகத்தைக் கண்டதும் கல்பனாவின் அசதி எல்லாம் எங்கோ ஓடிச் சென்றிருக்க, “ரெஸ்ட் எடுமா..” என்று தாய்க்கு தோசை வார்த்துக் கொடுத்து தானும் உண்டாள்.

சரளா நேரத்துடன் அறைக்குள் சென்று முடங்கிக் கொள்ள, வேந்தன் அலைபேசி நோடியபடி வெளியே சென்றான். 

“பிரச்சனை பிரச்சனைன்னு எல்லாரும் சொல்றீங்க அப்படி என்ன பிரச்சனை அப்பா நம்ம வீட்டுக்கும் அத்தை வீட்டுக்கும்?” கேட்டபடி தந்தை முன் வந்து நின்றாள் கல்பனா.

மகளை நிமிர்ந்து பார்த்தவர் பின் குனிந்து, “பெருசா எதுவும் இல்லமா. பணப் பிரச்சனை தான்.” பெருமூச்சு அவரிடம்.

“பேச்சு வார்த்தை கூட இல்லையே.” கேள்வி கல்பனாவிடம்.

“தேவி வீட்டுக்காரர் எவ்வளவுக்கு எவ்வளவு வசதியோ அவ்வளவுக்கு அவ்வளவு யோசிக்காம செலவும் பண்ணுவாரு. தேவையா தேவை இல்லையான்னு எல்லாம் பாக்க மாட்டாரு. புது நிலமாகட்டும் புது மிஷினாகட்டும் எது புதுசா வந்தாலும் வாங்கிடுவாரு. அப்போவே டிராக்டர் வச்சி உழுவாங்க. என்ன கொஞ்சம் பந்தா காமிப்பாரு. எல்லாம் நல்லாத்தான் போச்சு அப்படிதான் நாங்க நினைச்சோம். 

ஆனா அந்த வருஷம் மழை சரியா இல்லை அடுத்த வருஷம் நிறைய மழைனு அறுவடைல நஷ்டம். என்னதான் நஷ்டமா இருந்தாலும் அவங்க வசதிக்கு கை கடிக்காதுனு நினைச்சேன்.

இல்லை கைக்கு மீறி எல்லாம் போச்சுன்னு உன் அத்தை பொங்கல் சீர் வைக்க போகும் போது சொன்னா. விசாரிச்சு பாத்ததுல சேமிப்பு மொத்தமும் காலினு தெரிஞ்சுது. அடுத்த அறுவடை பண்றதுக்கு அவர்கிட்ட பணம் இல்லை. எப்படி அப்படியே விடுறது? வற்புறுத்தி என் சேமிப்பு உடைச்சு அவங்களுக்கு கொடுத்தேன்.”

“அம்மா அன்னைக்கு அவங்ககிட்ட வாக்கு சுத்தம் நன்றி இல்லைன்னு எல்லாம் பேசுனாங்க?”

“நாமளே சுயமா கடை திறக்கலாம்னு சேமிச்சி வச்சிருந்த பணம் அது. தேவி ரொம்ப கஷ்டப்படவும் மனசு கேக்காம எடுத்து குடுத்துட்டேன். சரளாவுக்கு தெரிஞ்சதும் பயங்கர சண்டை. கொடுக்கும் போதே அந்த பணம் கடனா கொடுக்கிறேன்னு சொன்னீங்களான்னு ஆட்டம் ஆடிட்டா உன் அம்மா…” 

“அம்மாகிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு கொடுத்திருக்கணும் அப்பா…”

“ம்ம்… போக போக புரிஞ்சுது. நான் சொல்லி இருக்கணும் அவகிட்ட இல்லை தேவிகிட்டயாவது சொல்லி இருக்கணும். சொல்லாம ரெண்டு பக்கமும் சமாளிச்சேன். நினைச்சபடி கடை வைக்க முடியுமான்னு தெரியலையேன்னு சரளா புலம்புன புலம்பல் எப்படியோ தேவி வீட்டுக்காரர் காதுக்கும் போய்டுச்சு… 

ஒரு வருஷம் ஓடியிருந்துச்சு அதுக்குள்ள. என்னை கூப்பிட்டு ஏன் சொல்லலைனு விசாரிச்சாரு பணத்தை சீக்கிரம் கொடுத்துடுறேனு சொன்னாரு. எல்லாம் சரியாகிடும்னு உன் அம்மா வாயை அடைச்சேன். ஆனா ஊர் திருவிழாவுக்கு போனப்போ பிரச்சனை முத்திடுச்சு.” 

பெருமூச்சிழுத்தவர் அன்றைய நாளை யோசிக்க பெரிதாய் நினைவுகள் ஏதும் இல்லை. பெரிதாய் ஏதாவது இருந்தால் தானே நினைவில் இருக்கும். உடன் இருந்த பங்காளிகள் ஏதோ பேசப்போய் அது எங்கோ சென்று முடிந்திருந்தது.

“இப்போ யோசிச்சா எதுவும் சரியா நியாபகம் இல்லை. அவரோட பங்காளி, எங்ககிட்ட ஒரு வார்த்தைகூட சொல்லாம ஏன் மச்சான்கிட்ட காசு வாங்குனேனு கேக்கப்போய் ஏதோ கைகலப்பு ஆகிப்போச்சு. சமாதானம் பேச போன என்னாலையும் ஒரு கட்டத்துக்கு மேல அமைதியா இருக்க முடியல… எக்குத்தப்பா கைகலப்பு ஆகி அவரோட தம்பியை நான் அடிச்சிட்டேன். அன்னையோட எல்லாம் முடிஞ்சுது. இப்படி பிரச்சனைன்னு வந்ததுக்கு அப்புறமும் வாங்குன காசை அவங்க குடுக்காம போனது உங்கம்மாவுக்கு பெரிய குறை. என்னமோ அதுக்கப்புறம் நம்மாளையும் கடை திறக்குற அளவுக்கு பெருசா காசு சேர்க்க முடியல. அதான் உங்கம்மாவுக்கு ஆதங்கம்.”

“அவங்க அப்பா எப்படி இறந்தாருனு சிகா சொல்லி இருக்கானா?” என்று மகளை கேள்வியுடன் நிமிர்ந்து பார்த்தார். 

“அவங்க அப்பா பத்தி பேச்சு வந்தாலே ரொம்ப எமோஷனல் ஆகிடுவாங்க நானும் பெருசா கேட்டது இல்லை.”

“நிறைய கடன் வாங்கி இருந்திருக்காரு. வீட்ல கூட யார்கிட்டேயும் சொல்லல… எவ்வளவு நாளைக்கு மறைக்க முடியும், வட்டி ஒழுங்கா குடுக்கலைனதும் கடன் குடுத்தவங்க வீட்டுக்கே வந்து பிரச்சனை பண்ணி இருக்காங்க. அப்போதான் வீட்ல எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கு. வீட்ல அன்னைக்கு சேகர் மாமனார் வீட்லேந்தும் வந்திருக்காங்க. அவங்க முன்னாடி கடன் குடுத்தவங்க தரக்குறைவா பேசுனதை தாங்க முடியாம குறுகி போய் ஒரே வாரத்துல ஹார்ட் அட்டாக்ல போய்ட்டாரு.”

“அப்போவும் நீங்க மூணாவது மனுஷனா நின்னுட்டு வந்துட்டீங்கள்ல அப்பா?” குற்றச்சாட்டு மகளிடம்.

“அவங்க பங்காளிங்க தான் எல்லாம் எடுத்துக்கட்டி செஞ்சாங்க. சட்டுனு என்னால ஒட்ட முடியல. கொஞ்ச நாள்லையே எல்லாத்தையும் வித்திட்டு இங்க வருவாங்கனு நான் எதிர்பாக்கல. எங்க திரும்பவும் அவங்களுக்காக பாத்து உங்களை விட்டிருவேனோனு உன் அம்மாவுக்கு பயம்.” என்று கைவிரித்தார்.

“இனிமே என்ன பண்ணலாம்னு பாக்கலாம். நீ எதுக்கும் கவலைப்படாத அம்மாவை சமாளிச்சிடலாம்.” மகள் தலையில் கை வைத்தவர் லேசாய் அவள் தலை கலைத்துவிட்டு தன் அலைபேசியில் மூழ்கிவிட்டார்.

“ப்பா என் போன்?” கல்பனா எழாது எதிர்பார்ப்புடன் தந்தையை பார்க்க,

“கோவத்துல புடிங்கி வச்சிட்டா. சீக்கிரம் தந்துடுவா நீ போய் தூங்கு.” என்று மகளை அனுப்பி வைத்தார்.

கல்பனா வீட்டின் நிலை எப்படியோ அப்படியே இருந்தது சிகா வீட்டிலும். கல்பனாவை ஏற்றுக்கொள்வதில் தேவிக்கு மட்டுமே உடன்பாடு. கல்பனா வீட்டிற்கு மருமகளாய் வந்தால் பிறந்தகத்தில் தன் பிடிப்பு இறுகும் என்ற எண்ணம். சேகருக்கு அப்படி ஒன்றும் இல்லையே.

“இதெல்லாம் தேவையா? அவங்களை தேடி வந்தப்போ நம்மளை அம்போன்னு விட்டாங்க தான? காசில்லைனு உதாசீனப்படுத்துனாங்க தான?” என்று முறுக்கினான் சேகர். கணவர் கேட்பது சரிதானே என்று சேகர் பக்கம் நின்றாள் சுசீலாவும். கைக்குழந்தை இருந்தமையால் இவர்கள் சென்னை வந்தபோது இவர்களுடன் வரவில்லை அவள். இங்கு ஒரு வீடு பார்த்து எல்லாம் சரி செய்த பின்னே தான் அவளை அழைத்துக்கொண்டனர்.

“உறவுன்னு இருந்தா சண்டை சச்சரவு இருக்கத்தான் செய்யும் அதுக்காக சிகா ஆசை படக்கூடாதுன்னு சொல்லுவியா?” தேவி பெரிய மகனுடன் மல்லுக்கு நின்றார்.

“நம்ம மட்டும் அவங்களை உறவா நினைச்சா போதாது அவங்களுக்கும் அந்த நினைப்பு இருக்கனும்.”

“கல்பனா இங்க வந்தா எல்லாம் தானா வரும்.” விடவில்லை தேவி.

“அதுக்கு உங்க பாசக்கார அண்ணி ஒத்துக்கணும்.” இகழ்ச்சி சேகரிடம்.

இவர்கள் இப்படி இருக்க கல்பனா வீட்டில் என்ன நடக்கிறது என்று அறியாது கலக்கத்திலும் குழப்பத்திலும் சுற்றிக்கொண்டிருந்தான் சிகா. திரும்ப மாமனிடம் சென்று என்னவென்று கேட்டிடலாமா என்ற எண்ணத்தை ஒழித்திருந்தார் அவனின் பாசக்கார அரிசி கடைக்கார அண்ணன்.

“அவங்க யோசிக்க கொஞ்சம் டைம் கொடு சிகா. நீ இப்படி பட்டுனு வந்து பொண்ணு கேப்பேனு அவங்க எதிர்பார்த்திருக்க மாட்டாங்க. முதல்ல வேற வேலை தேடுற வழியைப் பாரு. இனியும் இங்க நீ காலம் ஓட்டுனா சரி வராது.”

“ண்ண்ணா சும்மா என்னை இங்கிருந்து துரத்துறதுலேயே இருக்காதீங்க.”

“சம்பாரிக்குறது பெருசு இல்லைடா, அதை கையில இறுத்திகிட்டு பெருக்க தெரியணும். அதுக்கு நீ வெளி உலக பாரு. போ போய் நல்ல இடத்துல வேலை தேடு. நேரம் இருக்கும் போது இங்க வந்துட்டு போ, எனக்கொன்னும் சிரமம் இல்லை.” என்று பிடிவாதமாய் சிகாவை வற்புறுத்திக்கொண்டிருந்தான் அவன் முதலாளி.

“போறேன் போறேன் ஆனா ஒரு நாள் இல்லை ஒரு நாள் என்கிட்டேயே வந்துருடான்னு கெஞ்சப்போறீங்க.” சிலிர்த்துக்கொண்டு சென்றான் சிகாமணி.

“போடா போடா…” என்று அவரும் விரட்டிவிட்டார்.

Advertisement