Advertisement

காலை பத்து மணி போல வந்து சரளாவை பரிசோதித்த சிறப்பு மருத்துவர் வாயுத்தொல்லையால் ஏற்பட்ட வலிதான் என்றார்.

“வாயு தொல்லையா அம்மா நெஞ்சு வலிக்குதுன்னு சொன்னாங்களே…” வேந்தன் விவரம் கேட்க, 

“சிலருக்கு இதுபோல வாயுத்தொந்தரவால் மேல் வயிற்றில் வர்ற வலியை நெஞ்சு வலின்னு தப்பா புரிஞ்சிப்பாங்க. எதுக்கும் பார்த்துடலாம்னு எல்லா டெஸ்டும் எடுத்தாச்சு. ஹார்ட்ல எந்த ப்ராப்லமும் இல்லை. நீங்க வீட்டுக்கு கூட்டிட்டு போகலாம். வயிறு கோளாறுக்கு மட்டும்  மாத்திரை எழுதியிருக்கேன். ஒரு வாரம் சாப்பிட சொல்லுங்க.” என்றுவிட, அன்றே சரளாவை வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டார்கள்.

“கடைக்கு போய்ட்டு உள்ள நுழைஞ்சு ஒரு டம்ளர் தண்ணிதான் குடிச்சேன். சுளீர்னு இடது பக்க நெஞ்சுல வலி. புள்ளைங்களை இப்படியே நட்டாத்துல விட்டுட்டு போய்டுவேனோனு ரொம்ப பயந்துட்டேன் அண்ணா.” தன்னை பார்க்க வந்த அண்ணனிடம் புலம்பிக்கொண்டிருந்தார் சரளா.

“அப்படியெல்லாம் உன்னை விட்ருவோமா நாங்க? அதையும் இதையும் போட்டு உழப்பிக்காம சத்தா சாப்புடு. கல்பனாவுக்கும் தான் பரீட்சை முடிஞ்சிடுச்சே அவ பாத்துப்பா நீ ரெஸ்ட் எடு.” என்ற அவரது அண்ணன் கல்பனாவிடம் ஜூஸ் போட்டு எடுத்து வரச் சொன்னார்.

கல்பனாவும் பழச்சாறு செய்ய சென்றுவிட, கபிலன் அங்கேயே ஓய்வாய் படுத்திருந்தார்.

“ஏங்க ரெண்டு பேருக்கும் ஒரு கண்ணாலத்தை பண்ணிடலாம். நான் நல்லா இருக்கும் போதே ரெண்டு பேருக்கும் நல்லது பண்ணிடனும்.” ஒரு நாள் மருத்துவமனை வாசத்திலேயே சரளாவுக்கு கிலி பிடித்திருக்க, அதன் வெளிப்பாடாய் வெளிறி வந்தது இந்த யோசனை.

“ம்ச்… வாயுத்தொல்லைக்கு எல்லாம் இவ்ளோ பயப்பட வேண்டாம் சரளா. கல்பனா மேல படிக்கணும்னு சொல்லி இருக்கா. படிக்கட்டும் பாக்கலாம்.” கபிலன் மறுக்கவே செய்தார்.

“அப்படிலாம் விடமுடியாது. அண்ணா நீங்க சொல்லுங்க.” என்று அண்ணனை துணைக்கு அழைத்தார் சரளா.

“சரளாவும் சரியாத்தானே சொல்லுது. மூச்சு பேச்சு இல்லாம இவ உள்ள படுத்திருக்கும் போது உங்களுக்கும் கையும் ஓடியிருக்காது காலும் ஓடியிருக்காது. காலாகாலத்துல செய்ய வேண்டியதை செஞ்சிட்டா எல்லாருக்கும் நிம்மதி பாருங்க.” என்று மச்சினர் சொல்லவும் கபிலன் யோசனைக்குச் சென்றார்.

அவர்கள் சொல்வது போல் சரளா இருந்த அறை வாயிலில் அமர்ந்திருந்த போது அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்று அறியாது தானே அமர்ந்திருந்தார். பெண் பிள்ளை வைத்துக்கொண்டு சரளா இல்லாது பிள்ளைகளை எப்படி கரைசேர்க்க என்ற ஐயம் அவரையும் தொற்றிக்கொண்டது. சரளா நன்றாய் இருக்கும் போதே செய்துவிடுவது தானே உசிதம் என்று சம்மதம் சொல்லிவிட்டார்.

“கல்பனாகிட்டேயும் ஒரு வார்த்தை கேட்டுடலாம்.” என்றார் பெயருக்கு.

இந்த உரையாடல்களை மூச்சை பிடித்து கேட்டுக்கொண்டிருந்த கல்பனா இழுத்துப்பிடித்த மூச்சை விடவும் மறந்து நின்றாள். செய்யும் வேலை நினைவிலிருந்து தப்பி நெஞ்சம் படபடவென அடித்துக்கொள்ள, நெஞ்சை நீவிக்கொண்டாள். மறுநிமிடமே அவளை அழைத்திருந்தனர்.

“ஜூஸ் எடுத்துட்டு வாமா… உன்கிட்ட பேசணும்.”

நெற்றியை தட்டிக்கொண்டவள் அவசர அவசரமாய் பழச்சாறு பிழிந்து எடுத்துச் சென்று அன்னையிடம் நீட்டினாள்.

“நாங்க பேசினதை கேட்டீல்ல… அம்மா இப்போவே உனக்கும் வேந்தனுக்கு கல்யாணம் பண்ணனும்னு சொல்றா.” என்று அவளது மாமா சொல்லிக்கொண்டிருக்கும் போதே இடைமறித்து,

“நான் மேல படிக்கணும்னு இருக்கேன் மாமா. அப்பா கூட ஓகே சொல்லிட்டாங்க.”

“படிக்கலாம் யார் வேண்டாம்னு சொன்னது. கல்யாணம் கட்டிக்கிட்டு படி. மாமா நான் பாக்குறேன் உனக்கு நல்ல இடமா.” என்றதும், இயலாமையுடன் தந்தையை பார்த்தாள் கல்பனா.

“மாமா சொல்றதும் சரிதான்டா. நீ மேல படிக்க ஆசைப்படுறேன்னு மாப்பிள்ளை வீட்டுல சொல்லிடுவோம்.”

“அவளை கொஞ்சிட்டு இருக்கீங்க ரெண்டு பேரும். இப்போ பாக்க ஆரம்பிச்சா உடனேவா கிடைக்கப் போகுது. நாளாகும். நீ படிக்குறபடி படி எல்லாம் நடக்க வேண்டிய நேரத்துல நடக்கும்.” என்று சரளா ஒரே போடாய் போட, கல்பனாவால் அதற்கு மேல் பேசமுடியவில்லை. பேசினாலும் எடுபடாது என்று அவளுக்குத் தெரியும்.

“காயத்ரியும் அவளும் மட்டும் தனியா வீட்ல இருப்பாங்க. நான் கிளம்புறேன் சரளா. நாளைக்கு ரெண்டு பேரையும் கூட்டிட்டு வரேன்.” மனைவி மகள் தனியாக இருக்கிறார்கள் என்று அவர் கிளம்ப,

“அண்ணா வேந்தனுக்கும் பாக்கணும்.” என்று நிறுத்தினார் சரளா.

“பாத்துடலாம் சரளா… நீ எதுக்கும் கவலைப்படாத…” என்று தைரியம் சொல்லிக் கிளம்பிவிட, செய்வதறியாது கை பிசைந்தபடி நின்றாள் கல்பனா.

நினைத்தபடி மேலே படித்து வேலைக்குச் சென்ற பின் சிகாவை பற்றி வீட்டில் சொல்லி சம்மதம் வாங்கி விடலாம் என்று எண்ணியிருந்தவளுக்கு இந்த எதிர்பாரா திருப்பங்கள் பதட்டம் கொடுத்தது. முன்பு போல் புத்தகத்தை வைத்துக்கொண்டு சிகாவிடமும் பேச முடியாது என்று நினைக்கையிலேயே தொண்டை அடைத்தது. என்ன செய்வது இதற்கு எப்படி தீர்வு கண்டுபிடிப்பது என்று யோசித்து யோசித்து களைத்துப் போனவள் ஒருகட்டத்தில் சரளா அருகில் படுத்து உறங்கிவிட, தாமதமாய் வீட்டிற்கு வந்த வேந்தனோ அவள் அலைபேசி எடுத்துப் பார்த்தான். அதன் பாஸ்வோர்ட் தெரியாமல் தலைகோதியவன் அதை எடுத்த இடத்தில் வைத்துவிட்டு வர, 

“அவ போன்ல என்ன பாத்துட்டு இருக்க? உன் போன் என்ன ஆச்சு?” என்று ஆராய்ச்சியாய் அவனை மறித்து நின்றார் கபிலன்.

“ம்ச்… உங்களுக்கு வேணும்னா உங்க தங்கச்சி மகனோட கல்பனா பழகுறது சாதாரணமா இருக்கலாம் ஆனா எனக்கு அப்படி இல்லை.”

“என்னடா பேசுற… அவ மனசுல ஒன்னும் இருக்காது. அவளுக்கு மாப்பிள்ளை பாக்க சொல்லி இன்னைக்குத்தான் உன் மாமாகிட்ட சொல்லி இருக்கு. கல்பனாவும் சரினு சொல்லிட்டா.” என்ற தந்தையை நம்பாத பார்வை பார்த்தவன்,

“அவ சரின்னு சொன்னாளா?”

“சின்ன பொண்ணு முகத்துக்கு நேரா எப்படி சொல்லுவா… நாம தான் பாத்து கட்டி வைக்கணும். உடம்புக்கு முடியாம போனதும் உன் அம்மா பயப்படுறா… உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணனும்னு தீர்மானமா இருக்கா…” என்ற செய்தியில் தங்கை பின் சென்றுவிட்டாள்.

“என்ன எனக்கா? இப்போ எதுக்கு எனக்கு?”

“ஏன் உனக்கென்ன? எல்லாம் கல்யாணம் பண்ற வயசுதான்.”

“ப்பா…” தலைகோதியபடி வேந்தன் தயங்கி நிற்க, மகனை புரியாது பார்த்தவர்,

“என்னடா?”

“…”

“எனக்கு வெளிலலாம் பாக்க வேணாம். காயத்ரிய கேளுங்க.” ஒரு வழியாய் சொல்லிவிட்ட பின் வெட்கச் சிரிப்போடு தலைகோதி நின்றவனை வியப்பாய் பார்த்தார் கபிலன்.

“இது எப்போடா… உன் விருப்பம் தெரிஞ்சா உன் அம்மா கால் தரையில நிக்காது. கொண்டாடி தீர்த்துடுவா.” என்றார் அவன் விருப்பத்திற்கு பெரிதாய் மறுப்பு தெரிவிக்காமல்.

கபிலன் சொன்னபடியே தான் மறுநாள் விஷயம் தெரிந்தபின் பம்பரமாய் சுழன்றார் சரளா. உடனே அண்ணனிடமும் பேச, பெரிய மகள் அவர்கள் விருப்பமின்றி வேற்று சாதியினரை மணந்ததுக்கு தங்கை மகன் எவ்வளவோ தேவலாம். அதனால் தங்கை மகனுக்கு மகளை கொடுக்க அவருக்கும் விருப்பமே. 

இதனைத்தையும் அமைதியாய் பார்த்துக்கொண்டிருந்த கல்பனா யாரும் அறியா சமயம் அலைபேசி எடுத்துக்கொண்டு குளியலரை சென்று தண்ணீரை திறந்துவிட்டு சிகாவுக்கு அழைத்தாள்.

“நாம முடிவு பண்ண வேண்டிய நேரம் வந்துடுச்சு அத்தான். என்ன செய்றதுன்னு நீதான் சொல்லணும்.”

“என்ன செய்யலாம்னு சொல்ற கல்ப்ஸ்?”

“அண்ணனுக்கு பொண்ணு கிடைக்க லேட்டானா அதை காரணமா வச்சி கொஞ்சம் தள்ளி போடலாம், இப்போ அதுக்கு வழியில்லை. இனி அம்மாவை கையில புடிக்க முடியாது. அதுக்குள்ள நிச்சயம் வரை பேசியாச்சு. ஆனா என் கல்யாணம் முடிச்சிட்டு தான் அண்ணனுக்குனு சொல்லி தீவிரமா மாப்பிள்ளை பாக்க ஆரம்பிச்சிடுவாங்க அத்தான்.”

“யோசிச்சு முடிவு பண்ணலாம் கல்ப்ஸ். நீ ஃப்ரீயா இரு.” ஆறுதல் சொல்லி அழைப்பை துண்டித்த சிகாவுக்குமே என்ன செய்வது என்று தெரியவில்லை. அதை முதலாளியிடம் பகிர்ந்தபடி அவன் யோசனையுடன் அமர,

“என்ன பண்ணலாம்னு இருக்க?” என்ற கேள்வி முதலாளியிடமிருந்து.

“தெரில அண்ணா…”

“தெரிலைன்னா என்ன அர்த்தம்? ஏதாவது முடிவெடுக்கத்தானே வேணும்?”

“அவ அண்ணனுக்கு ஓகே ஆகிட்டதுனால சீக்கிரம் பாக்க ஆரம்பிச்சிடுவாங்கனு பயப்படுறா…”

“கல்பனா பயப்படுறதும் நியாயம் தான? இதுக்கு மேல பொறுமையா கல்பனா படிக்கட்டும்னு எல்லாம் இருக்க மாட்டாங்க. ரெண்டு வீட்லையும் பேசு. அதுக்கு முன்ன நீ தெளிவா இரு. என்ன முடிவுனாலும் அதுல உறுதியா இரு. சாதக பாதகத்தை அலசி ஆராய்ஞ்சு சரியா முடிவெடு. பணம் காசெல்லாம் இன்னைக்கு இல்லாம இருக்கலாம் ஆனா என்னைக்குனாலும் சம்பாரிச்சிடலாம்… வசதி குறைவை பாத்துட்டு கல்பனாவை விட்டுறாத அப்புறம் எப்போவும் கிடைக்காது. பாத்துக்கோ. உன்னை நம்பி இருக்குற பொண்ணை கைவிட்டுறாத. அந்த பாவம் உன்னை வாழ்நாள் முழுக்க நிம்மதியா இருக்க விடாது.” என்று அவன் முதலாளி அண்ணன் அளித்த நீண்ட விளக்கத்தில் தெளிவு பெற்றவனாய் முதலில் தேவியிடம் தன் விருப்பத்தை சொல்லியவன் பின் நேரே மாமன் வீடு சென்றுவிட்டான்.

மாமன் நேற்று பழகிய விதம் வேறு அவனுக்குள் புத்துணர்வை தூண்ட, அவர்கள் வீட்டு வாயிற்மணியை அடித்துவிட்டான். கதவைத் திறந்த கல்பனா அவனைக் கண்டதும் அதிர்ந்து நின்றுவிட்டாள்.

“ஷாக்கை குறைங்க பொண்டாட்டி…” என்று அவள் கன்னம் தட்டியவன், அவளை இடித்துக்கொண்டு உள்ளே சென்றான்.

நடுவீட்டில் மின்விசிறி கீழே அமர்ந்திருந்த சரளாவிடம் நேரே சென்றவன், “எப்படி இருக்கீங்க அத்தை?”

நலம் விசாரித்தவனை அதிர்ந்து பார்த்த சரளா உடனே மீண்டு, “நல்லா இருக்கேன். உனக்கு இங்க என்ன வேலை?” தாட்சண்யமின்றி  சரளா பேச அசரவில்லை சிகாமணி.

“மாமா இல்லைங்களா?” என்று கேட்கும் போதே பின்னிருந்து வந்தார் கபிலன்.

“வாடா… உக்காரு.” என்று நாற்காலி எடுத்துப்போட, எண்ணெயில் இட்ட கடுகாய் வெடித்தது சரளாவின் முகம்.

“உனக்கு முடியலைன்னதும் இவன்தான் ஆஸ்பித்திரில சேர்த்தது.” என்று மனைவியிடம் சொல்லியவர் மகளிடம் அவனுக்கு குடிக்க ஏதாவது எடுத்து வரச் சொல்லலாம் என்று அவளைப் பார்க்க, அவளோ சுவற்றோடு சுவராய் ஒடுங்கி நின்று சிகாவை கலவரத்துடன் பார்த்து நின்றாள். 

மகளின் பாவனை மனிதரை குழப்ப அதை தெளிவுப்படுத்த முன்வந்தான் சிகா.

“சுத்தி வளைச்சு பேச விரும்பல மாமா. நானும் கல்பனாவும் ஒருத்தரை ஒருத்தர் விரும்புறோம். கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறோம். நீங்க மாப்பிள்ளை பார்க்கப்போறதா சொன்னா அதான் பேசிடலாம்னு வந்தேன்.”

மனிதர் சமைந்துவிட அவனை விரட்டாத குறையாய் பொரிந்துவிட்டார் சரளா.

“என் பொண்ணுக்கு கல்யாணம் பண்ணாம கூட இருப்பேன் ஆனா உனக்கு கட்டிக்கொடுக்க மாட்டேன். உனக்கு வேணும்னா தெரியாம இருக்கலாம் ஆனா உங்க குடும்ப லட்சணம் எனக்குத் தெரியும். காசு இல்லைனாலும் வாக்கு சுத்தமும் நன்றியும் வேணும். அது சுட்டுப்போட்டாலும் உங்க குடும்பத்துக்கு வராது. உன் அப்பா எப்படி செத்தாரு, இப்போ உங்க நிலைமை என்னனு எல்லாம் தெரிஞ்சும் நீ பொண்ணு கேட்டு வர்றீன்னா எல்லாம் இவங்க குடுத்த இடம்…” மகளையும் கணவரையும் சாடத் தவறாதவர் ஒரே பிடியாய் பெண் தர மறுத்துவிட்டார்.

“எங்க நிலைமை இப்படியே இருக்கப் போறதில்லை. நீங்க சொன்ன மாதிரி முன்னாடி என்ன பிரச்சனைன்னு எனக்கு சரியா தெரியாதுதான் ஆனா கல்பனாவுக்கு எந்த பிரச்சனையும் கலங்கமும் வராம என்னால பாத்துக்க முடியும்.” நம்பிக்கையாகவே பேசினான் சிகாமணி. 

“பொறுமையா இரு சரளா… பேசலாம்.” அதிர்விலிருந்து தெளிந்து பேசினார் கபிலன்.

“என்ன தங்கச்சி மகன்னு பாசம் பொங்குதோ?”

“ஆமா அதுக்கு என்ன இப்போ? இப்படி எடுத்தெறிஞ்சு பேசாத. என்னனு பேசி ஒரு முடிவுக்கு வரலாம்.”

“இதுல பேசி முடிவெடுக்க எல்லாம் ஒன்னும் இல்லை. ஏற்கனவே முடிவு எடுத்தாச்சு. என்னால இதுக்கு ஒத்துக்க முடியாது.”

“அத்தை நீங்க பழசை வச்சி பேசுறீங்க. கொஞ்சம் நிதானமா யோசிச்சு என்னை பத்தி விசாரிச்சிட்டு உங்க முடிவை சொல்லுங்க.” என்று பணிவாகவே வேண்டியவன் கலக்கத்துடன் நின்ற கல்பனாவுக்கு விழி மொழியால் ஆறுதல் சொன்னான்.

“அங்க என்ன பார்வை. கிளம்பு இங்கிருந்து…” சரளா அங்கிருந்து அவனை அப்புறப்படுத்தப் பார்க்க, கையெடுத்து கும்பிட்டுவிட்டு கிளம்பினான் சிகா.

“இப்படி பணிவா நடிச்சா நான் மயங்கிடுவேனா…” என்று கொதித்த சரளாவே ஒரே வாரத்தில் அவனை அழைத்து மகளை அவன் கையில் பிடித்துக்கொடுக்கும் தருணமும் வந்தது.

Advertisement