Advertisement

*4*

யாரும் இப்படி ஆகும் என்று எண்ணி இருக்கவில்லை. நிசப்தமான அந்த அடர் இருள் வேளையில் கண்ணீரும் கம்பலையுமாய் கல்பனா இருக்கையில் சாய்ந்தமர்ந்திருக்க, அருகில் சிகாமணி. அவள் கரம் பிடித்து தோள் சாய்த்து ஆறுதல் சொல்ல மனம் துறுதுறுத்தாலும் மாமனும் மச்சினனும் வந்துவிட்டபடியால் சற்று தள்ளி நின்றிருந்தான்.

போனை எடுத்து மணி பார்க்க நள்ளிரவை தாண்டியிருந்தது. அவசர சிகிச்சை அறை இருக்கும் தளத்தில் சற்று தள்ளி தள்ளி கபிலனும் வேந்தனும் நிற்க, அவர்களின் ஓய்ந்த முகத்தை பார்த்தவன் சரசரவென படிகளில் இறங்கி அந்த மருத்துவமனை வாயிலுக்கு வந்தான். அருகிலேயே டீக்கடை இருக்க, அங்கு சென்று ஒரு டீ குடித்தவன் இரண்டு பேப்பர் கோப்பைகளில் டீ வாங்கிக்கொண்டு மெல்ல மாடியேறி வந்து மாமனிடம் நீட்டினான்.

தன் முன் டீயுடன் நீண்டிருக்கும் கரத்தை பார்த்து நிமிர்ந்த கபிலன் தங்கை மகனின் அக்கறையில் நெகிழ முடியாமல் சூழ்நிலை வசத்தால் மறுப்பாய் தலையசைத்தார்.

“நைட்டே எதுவும் சாப்பிட்டிருக்க மாட்டீங்க. இதையாச்சும் குடிங்க.” என்று சிகா கட்டாயப்படுத்த, டீயை வாங்கிக்கொண்டார். மற்றொன்றை கல்பனாவிடம் நீட்ட அவள் அதை உணரும் நிலையில் இல்லை.

தலை கலைந்து முகம் பொலிவிழந்து ஒரே இரவில் சோர்ந்திருக்கும் அவளை அள்ளி அணைத்து உணவு புகட்ட துடித்தது சிகாவின் கரங்கள். கட்டுப்படுத்தி அவள் முன் டீயை நீட்டிட அதை அவள் கவனித்த மாதிரி தெரியவில்லை.

“கல்பனா…” வெகுநாள் கழித்து அவன் வாயில் அவளது முழுப்பெயர் அடிபட, அப்போதும் நிமிர்ந்து பார்த்தாள் இல்லை.

“அத்தைக்கு ஒன்னும் ஆகாது கல்ப்ஸ். சரியாகி வந்துருவாங்க. டீயாவது குடி.” அவனையும் மீறி இயல்பாய் பேசிட, விளுக்கென்று அவர்கள் புறம் திரும்பினான் வேந்தன். அவன் கவனம் மட்டுமல்ல கல்பனாவின் கவனம் கூட சிகாவிடம் நிலைகுத்தியது.

“பயமா இருக்கு அத்தான்.” அவள் அழுகுரலில் உதடு துடிக்கத் திணற, வேந்தன் சட்டென அவளருகில் வந்து அமர்ந்துகொண்டு சிகா நீட்டிய டீயை வாங்கிக்கொண்டவன்,

“அவ பால் தான் குடிப்பா.” என்று வேறு சொல்ல, அடப்பாவி என்றுதான் பார்த்தான் சிகா. ஏனெனில் கல்பனாவுக்கு பால் அறவே பிடிக்காது. அவள் வீட்டில் இரவு எப்போதாவது வற்புறுத்தினாள் குடிப்பாள் அவ்வளவே. 

இப்போது நான் பால் வாங்கி வர வேண்டும் என்று சொல்கிறானா என்று வேந்தனையே பார்த்தபடி சிகா நிற்க, வேந்தனோ நீ இன்னும் செல்லவில்லையா என்றுதான் பார்த்து வைத்தான்.

இவர்களின் இந்த போட்டியில் வேந்தன் கையில் இருந்த டீயை கல்பனா வாங்கிப் பருகி இருந்தாள். அதைப்பார்த்ததும் ஆசுவாசமான சிகா மீண்டும் கீழிறங்கிச் சென்றான். செல்லும் அவனையே பார்த்த வேந்தன் தங்கையின் முழங்கை பற்றி, “அவன் கூட முன்னாடியே பழக்கமா உனக்கு?” என்று விசாரனை நடத்த, இது இப்போது தேவையா என்று பார்த்தாள் கல்பனா.

“என்ன பாக்குற பதில் சொல்லு…” என்று அண்ணன் உலுக்க,

“பழக்கம் இருந்தா என்ன இப்போ? அவன் இருக்கப்போய் தான் இன்னைக்கு அம்மாவை காப்பாத்த முடிஞ்சிது இல்லைனா நெஞ்சை புடிச்சிட்டு சரிஞ்சிவளை கல்பனா எப்படி தனியா இங்க தூக்கிட்டு வரமுடியும்?” என்று கபிலன் ஒரே போடாக போட, 

“அப்பா…” அதிர்ந்தான் வேந்தன்.

“அப்பாதாண்டா… உனக்கு டீ வாங்கிட்டு வந்திருக்கான் பாரு. வாங்கிக்குடி.” என்றவர் நெற்றியை தேய்த்துவிட்டார்.

சிகா தான் வாங்கிவந்த டீயை வேந்தனிடம் நீட்ட அவனுக்கு அந்நேரம் அது தேவையாய் இருந்தமையால் வாங்கி ஒரே இழுப்பில் குடித்துவிட்டான். அவனின் வேகத்தை கண்ட சிகா, “இந்நேரம் பக்கத்துல சாப்பாடு கிடைக்காது அதான் டீ வாங்கிட்டு வந்தேன். கொஞ்சம் வெயிட் பண்ணுங்க சாப்பாடு வாங்கிட்டு வரேன்.” என்று கிளம்பப் பார்க்க,

“அதெல்லாம் வேண்டாம்.” தடுத்த கபிலன், மகளிடம், “நாளைக்கு உனக்கு பரீட்சை இருக்கு கல்பனா. வேந்தனோட வீட்டுக்கு கிளம்பு.” என்றவர் கையோடு மகனையும் எழுப்பினார், “அவளை கூட்டிட்டு வீட்டுக்கு போய் சாப்புட்டு தூங்குங்க. இங்க நான் பாத்துக்குறேன்.”

“முடியாது அப்பா.” ஒன்றுபோல மறுத்தனர் இரு பிள்ளைகளும்.

“ம்ச் புரிஞ்சிக்கோங்க… அரியர் வைக்காம மூணு வருஷ படிச்ச படிப்போட கடைசி பரீட்சை நாளைக்கு. போய் எழுதிட்டு வா கல்பனா.” மகளை வற்புறுத்தியவர், “அவளை வீட்டுல தனியா விட முடியாது. நீ கூட இருந்து நாளைக்கு காலேஜில அவளை விட்டுட்டு வா. இவன் இருக்கான்ல நான் சமாளிச்சுடுவேன்.” என்று இறுதியில் சிகாவை சுட்டிக்காட்டியவர் அவனிடம்,

“என்ன இருப்பீல்ல?”

“இருக்கேன் மாமா…” அம்பாய் வந்தது சிகாவிடமிருந்து சம்மதம். 

சிகாமணி தந்தையுடன் இருக்கிறான் என்றதும் தெம்பு பெற்றவளாய் வீட்டிற்கு கிளம்ப எழுந்துவிட்டாள் கல்பனா. ஆனால் அங்கிருந்து கிளம்ப மனமின்றி அமர்ந்திருந்தான் வேந்தன்.

“டாக்டர் வந்ததும் என்ன சொன்னாங்கனு உடனே போன் போடுங்க அப்பா. அம்மா கண் முழிச்சதும் என்கிட்ட பேச வைங்க. பரீட்சை இருக்குனு தான் போறேன், முடிச்சிட்டு உடனே வந்துடுவேன்.” தெளிவாய் இருந்தாலும் கலக்கமாய் வந்தது கல்பனாவின் குரல். 

பின்னே நன்றாக கடைக்குச் சென்றவர் கை நிறைய பையோடு வீடு திரும்பிய சற்று நேரத்திலேயே நெஞ்சை பிடித்து சரிந்துவிட, பதறிவிட்டாள் பெண். அப்பாவுக்கு அழைக்க அவர் எடுக்காமல் போகவும் உடனே சிகாவுக்கு அழைத்துவிட்டாள். அவளின் பதட்டத்தையும் அழுகுரலையும் செவிவழி கேட்டவன் அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் அவர்கள் வீடு வந்துவிட்டான். பின் இருவரும் சேர்ந்து சரளாவை அருகில் இருக்கும் மருத்துவமனை தூக்கி வந்து சேர்த்தனர். அப்போதிலிருந்து டெஸ்ட், மருந்து, மாத்திரை என்று சொல்கிறார்களே ஒழிய அவருக்கு என்ன பிரச்சனை என்று டாக்டர் இதுவரை சொல்லவில்லை. இரவு வேளை என்பதால் ட்யூட்டி டாக்டர் மட்டுமே இருக்க, முதலுதவி செய்து உறங்க வைத்திருக்கின்றனர் சரளாவை.

“வேந்தன் கிளம்பு.” கபிலன் வற்புறுத்த வேறு வழியின்றி அங்கிருந்து கிளம்பினான்.

கல்பனா அப்பாவிடமும் சிகாவிடமும் தலையசைத்து விடைபெற வேந்தன் தந்தையிடம் மட்டும் சொல்லிக்கொண்டு கிளம்பினான். 

கல்பனா அமர்ந்திருந்த இடத்தில் கபிலன் அமர்ந்துகொள்ள, சிகா சற்று தள்ளி நின்று கொண்டான். மூடியிருக்கும் அவசர சிகிச்சை பிரிவை பார்ப்பதுமாய் மணியை பார்ப்பதுமாய் இருந்த மனிதர் சில நிமிடங்கள் கழித்து சிகாவை அருகில் அழைத்து அமர வைத்துக் கொண்டார்.

என்னதான் உரிமையாய் மாமா என்று அழைத்துவிட்டாலும் அவரிடம் பேச சிகாவுக்கு தயக்கம். அவருக்கும் அப்படியே. தங்கை மகன் என்று அவர் மடியில் வைத்து மொட்டை போட்டு காது குத்தியதோடு அவர் கடமை முடிந்துவிட்டது. அதன்பின் மாமன் உரிமை கொண்டாட சூழ்நிலை இடம் கொடுக்கவில்லை. அவன் குழந்தை பருவம் தொட்டு வாலிபம் வந்த பின்னும் இரு குடும்பத்துக்கும் பேச்சு வார்த்தை இல்லை. சிகாவின் தந்தை தவறிய செய்தி வந்ததற்கு மனது கேளாமல் கபிலன் மட்டும் சென்று வந்தார். 

கணவரின் இழப்புக்கு அண்ணன் வந்தது தேவிக்கு தெம்பாய் இருக்க, ஊரில் இருந்த சொத்துக்கள் அனைத்தும் கைவிட்டு போனதும் அண்ணன் இருக்கும் தைரியத்தில் வாழ்வாதாரம் தேடி சென்னை கூட்டி வந்தார் மக்களை. அப்போது தான் சிகா முதன்முதலாய் கபிலன் குடும்பத்தை பார்த்தது. பின் கல்பனாவுடன் பழக்கம் ஏற்பட்டு காதல் வயப்பட்டது. 

“சின்ன புள்ளைல உன்னை பாத்தது. நல்லா வளந்துட்ட.” என்று துவங்கினார் கபிலன். அவசரத்துக்கு கை கொடுத்திருப்பவனை உதாசினம் செய்ய மனம் வரவில்லை.

மாமன் பேச நினைக்கிறார் என்று புரிந்தாலும் சிகாவால் சட்டென இயல்பு போல் பேச முடியவில்லை. உரிமையெடுத்து அங்கேயே இருக்க ஒப்புக்கொண்டவனை சகஜமாய் இருக்க எதுவோ ஒன்று தடுத்தது. சென்னை வந்த புதிதில் மாமன் வீட்டு வாயிலை நம்பி மிதித்தவர்களை பழையதை முன்னிறுத்தி உள்ளே சேர்க்காதது கூட காரணமாய் இருக்கலாம். 

எவ்வளவு நேரம்தான் அமைதியாய் இருப்பது சூழ்நிலையை இயல்பாக்கும் பொருட்டு, “சாப்டியா?” கபிலனே மீண்டும் பேசினார்.

இம்முறை சிகா இல்லை என்று வாய் திறந்தான்.

“போய் எதாவது சாப்புடு.”

“இங்க பக்கத்துல கடை எதுவும் இல்லை. டீ குடிச்சிட்டேன்.” ஓ என்று தலையாட்டிக்கொண்டவர் அவன் புறம் திரும்பி,

“நீ இல்லைனா கல்பனா தனியா கஷ்டப்பட்டிருப்பா…” என்றிட, 

‘இவர் நம்மிடம் போட்டு வாங்கப் பார்க்கிறாரோ?’ என்றெண்ணி சுதாரிப்பாய் வாயை இறுக மூடிக்கொண்டான் சிகா. பேச்சு சுவாரசியத்தில் ஏதாவது உளரப்போராய் அதுவே நாளை கல்பனாவுக்கு பிரச்சனையாகி விடக்கூடாது என்ற எண்ணம். ஏற்கனவே சந்தேக விதை விழ தானே காரணமாகிவிட்டோம் என்பதும் நினைவடுக்கில் ஓரிடத்தில் பதுங்கியிருந்தது.

சிகா எதற்கும் பிடிகொடுக்காமல் இருக்கவும் எழுந்து சென்றவர் அங்கிருந்த செவிலியரிடம் சரளாவின் நிலை கேட்டறிந்து வந்தார்.

“என்ன சொல்றாங்க? அத்தைக்கு என்னவாம்?” எழுந்து நின்றான் சிகா.

“இப்போ எல்லாம் சீரா இருக்காம். காலையில வேற டாக்டர் வந்ததும் பாக்கலாம்னு சொல்றாங்க…”

“ஓ… என்ன பிரச்சனையாம்?”

“எதுவும் தெளிவா சொல்ல மாட்டேங்குறாங்க. ஸ்பெசலிஸ்ட் வந்ததும் பாத்துட்டு தான் சொல்ல முடியும்னு சொல்றாங்க.” அதிருப்தியாய் பெருமூச்சு விட்ட கபிலன் இருக்கையில் சாய்ந்தமர்ந்து கண்களை மூடிக்கொண்டார். அன்றைய நாளின் வேலைப்பளு உடலை அசத்த, சரளாவின் நிலை மனதை உறுத்த, கண்களை தேய்த்தபடி நிமிர்ந்து அமர்ந்து கொண்டு சுற்றும் முற்றும் பார்த்தார். சிகா அவரையே பார்த்த வண்ணம் இருந்தான். கவனம் அவன் மீது பதிந்தது. 

மெலிந்த உடல் வேலையின் காரணத்தால் கறுத்து இறுகியிருக்க, கண்களில் ஒளி. எதையும் சமாளிக்கும் பக்குவம். சற்று பெருமையாகவும் இருந்தது குற்றவுணர்வாகவும் இருந்தது. இருக்கும் ஒரே தங்கையின் பிள்ளைகளை சீராட்டாமல் விட்டுவிட்டோமே. தங்களைத் தேடி அருகில் வந்த பின்னும் கண்டுகொள்ளவில்லையே. உள்ளுக்குள் எதுவோ செய்ய அவன் பேசவில்லை என்றால் என்ன இனி நானே பேசுகிறேன், என்று இக்கட்டு வந்ததும் உறவுகளின் அருமை புரிந்தது.

“வேலையெல்லாம் எப்படி போகுது?” 

“நல்லா போகுது. நாளைக்கு நீங்களும் வேலைக்கு போகணும்ல… கொஞ்சம் தூங்குங்க.” என்றவனை கண்டு மெல்ல முறுவலித்தவர்,

“என் மேல கோபமா?”

“கோபமான்னு தெரியல, வருத்தம் இருக்கு. என்ன பிரச்சனைன்னு மேலோட்டமா தெரியும் ஆனா அதுக்கு நீங்க என்னையும் அண்ணனையும் ஒதுக்கி வைக்கிறது என்ன நியாயம்னு புரியல. விடுங்க. ” என்று அது பற்றி பேச விரும்பாதவனாய் சிகா முற்றுப்புள்ளியிட, கபிலன் என்ன சொல்வார் வாய்க்கு பூட்டு போட்டுக்கொண்டார். 

அவருக்கு அவனைப் பற்றி தெரிந்துகொள்ளும் ஆர்வம் இருந்தாலும் கேட்க வேண்டிய கேள்வி ஒன்று நங்கூரமாய் மனதில் நின்றது. அது கல்பனாவுக்கும் அவனுக்கும் இருக்குமான பழக்கம் எங்கே எப்படி தொடங்கி எங்கு செல்கிறது என்பதுதான்… பெண் பிள்ளையை பெற்றவர் அல்லவா கவனமாய் இருக்கத்தான் அறிவுறுத்தியது மனம். இருப்பினும் உதவி செய்தவனை விசாரணை செய்ய ஒப்பாததால் அமைதியாகிவிட்டார்.

இரவு முழுதும் சரளாவுக்கு என்ன பிரச்சனை என்றே சொல்லாமல் ஓட்ட, கபிலனும் சிகாவும் ஆளுக்கொரு இருக்கையில் சாய்ந்து அமர்ந்தபடி உறங்கினர். ஆழ்ந்த தூக்கமில்லை அவ்வப்போது எழுந்து சரளாவையும் பார்த்துக்கொண்டனர். விடிந்த சில நேரத்திற்கெல்லாம் சிகாவிற்கு வீட்டிலிருந்து அழைப்பு வந்தது. சிகா விவரம் சொல்லவும் அரைமணி நேரத்தில் தேவியும் சேகரும் மருத்துவமனையில் கபிலன் முன் நின்றனர்.

அந்நேரத்திலேயே தேவியைக் கண்டதும் தனக்கு ஒன்றென்றதும் தங்கை ஓடி வந்துவிட்டாளே தான் அப்படி இல்லையே என்ற குற்றவுணர்வுதான் மேலோங்கியது கபிலனுக்கு.

“அண்ணி எப்படி இருக்காங்க அண்ணா?” தயக்கம் எல்லாம் பாராமல் தேவியே பேசினார்.

“நல்லாயிருக்கானு சொல்றாங்க. ஏன் இவ்ளோ காலையில அலையுறீங்க. நைட் முழுக்க இவன் தூங்காம இங்க இருந்ததே எனக்கு கஷ்டமா இருக்கு.” என்று சிகாவைக் காட்ட,

“நம்ம குடும்பத்துக்கு ஒன்னுன்னா நாமதான பாக்கணும்.” என்று தேவி பெருந்தன்மை காட்ட, குற்றம் உள்ள நெஞ்சு குத்தியது.

“வீட்டுக்கு போய் குளிச்சிட்டு வாங்க… நானும் சேகரும் இங்க இருக்கோம்.” தேவியின் பேச்சே அங்கு பலமாய் ஒலித்தது.

“வேண்டாம் தேவி. நீங்க மூணு பேரும் கிளம்புங்க. வேந்தன் வந்துருவான் வந்ததும் என்னன்னு பாத்துட்டு வரேன். சரளா அண்ணனும் வரேன்னு சொல்லி இருக்காங்க.” கபிலன் மறுக்க, தேவி அதற்கு மேல் வற்புறுத்தவில்லை. ஒருவேளை அண்ணன் வீட்டிற்கு சென்றிருக்கும் நேரத்தில் அண்ணி விழித்துவிட்டால் தங்களால் சமாளிக்க முடியுமா என்ற எண்ணமே அவரை அமைதியாக்கியது. 

“நான் அவங்க வரவரைக்கும் இங்க இருக்கேன்.” அத்தனை நேரம் அமைதியாய் இருந்த சிகா வாய் திறக்க, அதற்கும் மறுப்பு கபிலனிடம்.

“வேண்டாம்டா நீ வேலைக்கு கிளம்பணும்ல… போய் கொஞ்சம் தூங்கி ரெஸ்ட் எடு. ஏதாவது வேணும்னா நானே கூப்பிடுறேன். உன் நம்பர் கொடு.” என்று சிகாவின் அலைபேசி எண்ணை வாங்கிக்கொண்டார். 

சேகர் பெயருக்கு தேவியுடன் வந்திருந்தவன் கபிலனிடம் ஒரு வார்த்தை பேசவில்லை. சிகாவும் தேவியும் கபிலனிடம் சொல்லிக்கொண்டு கிளம்பவும் அவர்களை அழைத்துக்கொண்டு புறப்பட்டு விட்டான். அவனின் புறக்கணிப்பு கபிலனுக்கு தெரிந்தே இருந்தது. பெரிதாய் அலட்டவில்லை அவர். அப்பனை போல பிள்ளை என்று எண்ணிக்கொண்டார்.

“ராத்திரியே கேக்கணும்னு நினைச்சேன் எல்லாரும் பதட்டமா இருக்காங்கனு நீ சொல்லவும் விட்டுட்டேன். நைட்டு மாடில தான இருந்த நீ? எப்படிடா அவங்களை ஆஸ்பத்திரி கூட்டிட்டு போன?” நடையின் வேகம் குறைத்து தேவி சின்ன மகனைப் பார்க்க,

‘ஆஹா பாயிண்ட்டை புடிக்குது அம்மா.’ மனதிற்குள் அலறியவன், “மாடிலேந்து கீழ வந்ததும் பக்கத்து வீட்டு அண்ணன் கூட வெளி வாசல்ல நின்னு பேசிட்டு இருந்தேன், கல்பனா கலக்கமா அவங்க வீட்டு வாசல்ல நின்னு சுத்தி முத்தி பாத்துட்டு இருந்துச்சு. ஏதோ தப்பா படவும் என்னனு போய் விசாரிச்சா அவங்க அம்மா கீழே நெஞ்சு வலிக்குதுன்னு உக்காந்திருக்காங்க.” என்று நீண்ட விளக்கம் கொடுத்தான்.

உண்மையாவா? என்பது போல் பார்த்த தேவி நடையைத் தொடர, அவனை நெற்றி சுருக்கி பார்த்தபடி வந்தான் சேகர்.

“இஞ்சி திண்ணவனாட்டம் மூஞ்சை வச்சிக்கத்தான் வீட்டுலேந்து கிளம்பி வந்தியா?” என்று அவன் தோளில் கைபோட்டு சிகா அழுத்த, தோளில் விழுந்த கையை உதறியவன், “அவசரத்துக்கு ஆஸ்பத்திரியில சேத்தோமா வீட்டுக்கு தகவல் சொல்லிட்டு கிளம்புனோமான்னு இல்லாம ராத்திரி முழுக்க இங்க என்னடா வேலை உனக்கு?”

“அப்படியே விட்டுட்டு வர சொல்றியா?” அதிருப்தியாய் அண்ணனை பார்த்தான் சிகாமணி.

“அவங்களை பாத்துக்க அவங்க குடும்பம் இருக்கு. உனக்கு என்ன வேலை இங்க?”

“அப்படி எல்லாம் விட முடியாது.” என்ற இளையவனை அழுத்தமாய் பார்த்த சேகர்,

“எல்லாம் அந்த பொண்ணுக்காக தான?”

சிகாவின் நடை தன்னால் நின்றது. தேவி இதையெல்லாம் கவனிக்காது முன்னேறி சென்றுவிட்டார்.

“அன்னைக்கு வண்டியில நீங்க ரெண்டு பேரும் போறதை பாத்தேன். இதெல்லாம் சரிவராது விட்டுடு.” கண்டித்த சேகரை மறுப்பாய் பார்த்தவன்,

“எல்லாம் சரிவரும். நீ எதுவும் குழப்பாத.” 

“மாமா ஒத்துக்கிட்டாலும் அத்தை ஒத்துக்க மாட்டாங்க… யோசிச்சிக்கோ.”

“அதை அப்போ பாத்துக்கலாம்.” என்று சிகா உறுதியாய் பேசினாலும் சேகர் சொன்னது போலத்தான் நடந்தது.

Advertisement