Advertisement

மனம் முழுக்க பாரமேறி இருக்க, கால்கள் தன்னால் இரண்டு மாடி ஏறி மொட்டை மாடி கூட்டிச் சென்றது. கல்பனாவுக்கு ஒரு வணக்கத்தை தட்டிவிட்டவன் இருளை விரட்டும் நிலவை இலக்கின்றி வெறித்தான். சற்று நேரத்திலேயே கல்பனாவிடமிருந்து அழைப்பு வந்தது.

“நானே போன் பண்ணி இருக்கேன். பாசமா ஒரு ஹலோ கூட கிடைக்காதா?” சிகா அழைப்பை ஏற்று அமைதியாய் இருக்கவும் யோசனையுடன் கல்பனா பேச்சைத் துவங்கினாள்.

“சொல்லு கல்ப்ஸ்…”

“நீதான் என்ன பிரச்சனைனு சொல்லணும் அத்தான்.” என்றிருந்தாள் அவனின் இயல்பை மீறிய அமைதியான பேச்சில். அவளின் புரிதலில் எட்டிப்பார்த்த மென்முறுவலை மெல்லாது வெளிப்படுத்தியவன் முகம் கசங்க,

“தோத்து போயிட்டோம் கல்ப்ஸ்.”

வேதனை மொத்தமும் குரலில் தேக்கி, அடைக்கும் தொண்டையில் எச்சில் கூட்டி விழுங்கியபடி அவன் பேச, பதறியது பாவையின் மனம்.

“அத்தான், என்னாச்சு?”

“இதுக்கு மேல ஆக ஒன்னும் இல்லை கல்ப்ஸ். மானம் ரோஷம் பாக்காம ஊர்லையே இருந்திருக்கணும்.”

“அத்தான்?” 

“செய்யுற தொழில தெய்வமா மதிக்கணும்னு அப்பா எப்போதும் சொல்லுவாரு. ஆனா தெய்வமா பாத்த உழவை விட்டுட்டு இங்க வந்திருக்கவே கூடாது. முதலாளியா இல்லைனாலும் தொழிலாளியாவாவது விவசாயம் பாத்துட்டு அங்கேயே இருந்திருந்தா இது எதுவும் நடந்திருக்காதோன்னு தோணுது.”

“என்னை பத்தி தெரியாமையே போயிருக்கும். என்னை பாத்திருக்கவே மாட்ட.” பட்டென முகம் சுணங்கினாள் கல்பனா.

அவளின் சுணக்கம் உணரும் நிலையிலா இருக்கிறான் அவன்? 

“அங்க இருந்திருந்தா சேகர் இன்னும் நம்பிக்கையா இருந்திருப்பான்ல…” 

கல்பனாவின் எந்த கேள்விக்கும் விடையாய் இன்றி மனதில் உலவுபவற்றை தன் போக்கில் பேசியபடி இருந்தான்.

“சேகர் ஒழுங்கா இருந்தா அண்ணிக்கும் பிடிப்பு இருந்திருக்கும். அவங்களுக்கு நம்பிக்கை கொடுக்க தவறிட்டோம். நானாவது சேகரை கவனிச்சு அவனுக்கு நல்ல வேலை வாங்கிக் கொடுத்திருக்கணும். என்னை மாதிரி அவனுக்கு ஒத்துப்போறதை அவனே தேடிப்பான்னு இருந்துட்டேன்.”

“இப்போவும் ஒன்னும் ஆகல. பெரிய அத்தானுக்கு செட் ஆகுற மாதிரி ஏதாவது பாக்கலாம். என் பிரெண்டுக்குன்னு சொல்லி நான் அண்ணா அப்பாகிட்ட கேட்டுப்பாக்குறேன்.”

“இனியும் ஆக என்ன இருக்கு? எல்லாம் முடிஞ்சிச்சு. எங்களோட கையாலாகாதனத்துக்கு இந்த உலகத்தையே பாக்காத பிஞ்சு தான் பலியாகிடுச்சு. பலியாக்கிட்டோம்.” என்று வருந்த, விஷயம் என்னெவென்று கறந்துவிட்டாள் கல்பனா.

விஷயம் தெரிந்தபின் என்ன சொல்லி அவனைத் தேற்ற என்று புரியாது தவித்தாள். வசதி குறைவு என்று கரு தங்கிய பிள்ளையை வலுக்கட்டாயமாக வெளியேற்றியதை எவ்வாறு ஒத்துக்கொள்வது என்ற வாதமே அவளிடம். மத்திய மாநில அரசுகள் எத்தனையோ சலுகைகள் வழங்கி வசதி குறைவால் அவதிப்படும் மக்களின் அத்தியாவசிய தேவைக்கு சலுகை விலைகளில் பொருட்கள், இலவச கல்வி, மடிக்கணினி, சீருடை என்று அவர்களை உயர்த்த திட்டங்கள் பல செயல்படுத்தி வருகிறது. அதை உபயோகப்படுத்தி மேலேறிவிடலாமே என்ற எண்ணத்தை அவனிடம் பகிரவும் செய்தாள்.

“அக்கா அவசரப்படாம யோசிச்சு இருக்கலாம்.”

“அவங்க நிலைமையில இருந்து பார்த்தாதான் தெரியும் கல்ப்ஸ். நானெல்லாம் இந்த மூணு வருஷமாத்தான் கஷ்டம்னா என்னனு பாக்குறேன் ஆனா அவங்க அப்படி கிடையாது.”

“ம்ம்… நீ சொல்றதும் சரிதான் அத்தான். சரியோ தப்போ நடந்தது நடந்துடுச்சு. அவங்க முடிவை விமர்சனம் பண்ற உரிமை நமக்கில்லை. வாழ்க்கையில அவங்கவங்க அனுபவப்பட்டதை வச்சுதான் முடிவுகள் எடுப்பாங்க. நாம நம்பிக்கை கொடுத்து வழிநடத்த தான் முடியும் அவங்க வாழ்க்கையை வாழ முடியாது. நீ கஷ்டப்படாத.”

“மனசு ஆறவே மாட்டிங்குது கல்ப்ஸ். மூணு வேலை சோத்துக்கும் நல்ல படிப்புக்கும் வக்கத்துப்போயிட்டோமான்னு இருக்கு. எங்க குடும்பத்துல கட்டிக்கொடுத்தா நிம்மதியா இருப்பாங்கன்னு நம்பித்தான் கல்யாணம் பண்ணி வச்சிருப்பாங்க. அந்த நம்பிக்கையை ஒடச்சிட்டோம் கல்ப்ஸ். அப்பாவாவது கடன் பிரச்சனையை முன்னாடியே சொல்லி இருந்திருக்கலாம். இப்படி மொத்தமா கைமீறி போனதுக்கு அப்புறம் ஒன்னும் செய்ய முடியாம நின்னுட்டோம்.” மனதில் இருப்பதை புலம்பலாய் கீழே இறக்கி வைக்க மட்டுமே முடிந்தது சிகாமணியால்.

“அடுத்து என்னனு பாக்கலாம் அத்தான்.”

“என்ன பாக்குறது?” அவளையே திரும்பக் கேட்டான். உண்மையில் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று அவனுக்கு ஒன்றும் பிடிபடவில்லை.

“முதல்ல பெரியத்தானுக்கு நல்ல வேலை தேடுவோம். நீயும் வேற வேலை தேடு அத்தான்…” எனும் போதே இடைமறித்தான் சிகா.

“நான் ஏன் வேற வேலை தேடணும்? அதெல்லாம் முடியாது.”

“என்ன முடியாது? கடைசி வரைக்கும் இதே கடையில மூட்டை தூக்கி காலம் ஓட்டலாம்னு இருக்கியா?” காட்டமாகவே வந்தது கேள்வி.

“நான் மூட்டை தூக்குறதை நீ பாத்தியா? அண்ணன் தர்ற கைநிறைய சம்பளத்துக்காக மட்டுமில்லை அவர் தர அந்த நிம்மதியான சூழலை விட்டு என்னைக்கும் வரமாட்டேன்.” காட்டத்துக்கு சற்றும் குறைவில்லாத காரம் சிகாவிடம்.

“வரமுடியாதுன்னா இப்போ கொஞ்ச நேரம் முன்னாடி புலம்பிட்டு இருந்த மாதிரி எப்போவும் புலம்ப வேண்டியதுதான். எதுவும் மாறாது.”

“பாத்துட்டே இரு ஒருநாள் நீயே அண்ணன் கடையிலேயே இருன்னு சொல்லப்போற…”

“பாக்கலாம் பாக்கலாம்.” அதிருப்தியில் முகம் சுருக்கினாள் கல்பனா. 

“இவ்வளவு நேரம் வாயளக்குற வீட்டுல யாரும் இல்லையா கல்ப்ஸ்?” பேச்சுக்கள் இயல்புக்கு தாவியது.

“நான் மட்டும்தான் இருக்கேன். நாளைக்கு மாமா வீட்டுக்கு வராங்க. அவங்களுக்கு விருந்து சமைக்க தேவையான சாமான் வாங்க அம்மா கிளம்பி போயிருக்கு.”

“உன்னை எப்படி தனியா விட்டுட்டு போனாங்க? அதுவும் ராத்திரி நேரத்துல?”

“அப்பா அண்ணன் ரெண்டு பேருமே வர லேட் ஆகும். வேற வழி இல்லாம வீட்டை பூட்டிக்கன்னு சொல்லிட்டு கிளம்பி போயிடுச்சு.”

“அவங்க அண்ணன் வராங்கன்னதும் தடல்புடலா எல்லாம் பண்றாங்க… இவங்கள மாதிரிதான் அண்ணன் இருக்காங்கனு நம்பி எங்க அம்மாவும் இங்க கூட்டி வந்துச்சு.” என்றதோடு நிறுத்திக்கொண்டவன் அதற்கு மேல் பேசவில்லை. பெற்றவர்களின் மனக்கசப்புகளுக்கு அவள் என்ன செய்வாள்.

“எல்லாத்தையும் சரிபண்ணிடலாம் அத்தான். மேல படிக்க அப்பா ஓகே சொல்லிட்டாங்க.” பேச்சை திசைதிருப்பினாள் கல்பனா.

அவளது முயற்சிக்கு அவனும் ஈடுகொடுத்து, “சூப்பர் கல்ப்ஸ். நான்கூட என்னமோன்னு நினைச்சேன்.”

“நீ நினைச்சது எல்லாம் சரிதான். நேத்தி உன்கூட வரவான்னு அம்மாகிட்ட கேக்காம இருந்திருந்தா ஒருவேளை பெர்மிஷன் கிடைச்சிருக்காதோ என்னமோ…” என்றவள் தங்களின் எதிர்காலத்தை அழகாக திட்டமிட்டாள்.

“M.Sc முடிச்சிட்டு உடனே ஒரு வேலை தேடிக்கணும் அத்தான். வேலை பாத்துட்டே B.Ed படிச்சிட்டு ஸ்கூலுக்கு மாறிடணும்.”

“ஓ டீச்சரம்மாவா நீங்க!” கேலியும் பெருமையும் ஒருமித்தமாய் சிகா குரலில் சங்கமித்தது.

“ஆமாங்க ஸ்டூடண்ட்டே!”

“அடிங்க! நான் ஸ்டூடண்ட்டா?”

“இல்லையா பின்ன? ஒழுங்கா பாடம் படிக்கலைன்னா பிரம்படிதான் அத்தான்.”

“இப்போல்லாம் அடிக்க கூடாதுனு ரூல்ஸ் இருக்கு டீச்சரம்மா.” பாரம் பின்சென்று மனம் லேசாகிட அவளிடம் வளவளத்தான்.

“அந்த ரூல்ஸ் எல்லாம் அத்தை பையனுக்கு பொருந்தாது மிஸ்டர் சிகாமணி.”

“டீச்சரம்மா சொன்ன சரியாத்தான் இருக்கும்… மாமா பொண்ணு அத்தை பையனுக்கு ரூல்சும் கிடையாது ரெகுலேஷனும் கிடையாது. எல்லாமே அன்லிமிடெட்தான்.” என்றவன் குரல் தழைந்து கரகரப்பாய் ஒலித்தது.

“அத்தான்.” அவனது மாற்றம் புரிந்து அவளது குரலும் உள்சென்றுவிட, ஒருவித மோன அவஸ்தை இருபுறமும்.

“கல்ப்ஸ்…”

“ம்ம்…”

“யோசிச்சு பாரேன் நேத்தி மாதிரி நீயும் நானும் மட்டும்… இப்போ ஒன்னா இருந்தா எப்படி இருக்கும்?”

“எப்படி இருக்கும்?”

“மக்கு டீச்சரே…”

“அத்தான்…”

“கல்யாணத்துக்கு அப்புறம் ஒரு பாடம் விடாம எல்லாம் நான் சொல்லித்தரேன் என் மாமன் மகளே.”

“இப்போல்லாம் வேற மாதிரி பேசுற அத்தான்… பேட் ஸ்டூடன்ட் ஆகிட்டு வர…” நெகிழ்ந்த மனது ஏற்படுத்திய ரசாயன மாற்றத்தில் கல்பனாவின் குரல் கிசுகிசுப்பாக வர, தலை கோதி நிலவை பார்த்தபடி நின்றான் சிகா.

சட்டென இருவருக்கும் இடையில் குடிகொண்ட அமைதியில் போனை காதிலிருந்து எடுத்துப்பார்த்து அழைப்பில் இருப்பதை உறுதி செய்துகொண்ட கல்பனா, “லைன்ல இருக்கியா அத்தான்?” 

“ம்ம்…” 

“நான் வைக்கட்டுமா?” தயங்கித்தான் கேட்டாள். இத்தனை தினங்கள் சிகா இதுபோல் எல்லாம் நெருக்கம் காட்டி பேசியிறாததால் தன்போல் தயக்கம் வந்து ஒட்டிக்கொண்டது.

“இன்னும் கொஞ்ச நேரம் பேசேன்.” 

“ம்ம்…”

“பேசு கல்ப்ஸ்,”

“என்ன பேச?”

“ஏதாவது…”

“வைக்கிறேனே… அம்மா வந்துருவாங்க.” வீட்டில் யாரும் இல்லாத பொழுதில் அவன் இதுபோல் பேச்சில் நெருக்கம் காட்டி அழைப்பை நீட்டித்திருப்பது அவளுக்கு ஒருவித குற்றவுணர்வையும் ஐயத்தையும் ஏற்படுத்த நெஞ்சம் தடதடத்தது. அதன்பொருட்டே அழைப்பை துண்டிக்க வேண்டி அவள் காத்திருக்க, அவளது நிலை உணர்ந்தவன் அதிருப்தியுடன் அழைப்பை துண்டித்தான். ஆனால் துண்டித்த சில நிமிடங்களிலேயே அவளது அழுகுரல் அவன் செவி எட்டி பதைபதைத்தது.

Advertisement