Advertisement

*3*

“நம்ம கடை கொஞ்சம் உள்ளக்க தள்ளி இருக்குற மாதிரி இல்லை? முன்னாடி ஷீட் போட்டு இழுத்தா இடமும் அதிகம் கிடைக்கும் ண்ணா… இந்த மூட்டையெல்லாம் நீட்டா அடுக்கி வைக்கலாம். போட்டுறலாமா?” என்ற சிகாவின் ஆர்வமான குரலுக்கு முறைப்பே விடையாய் கிடைக்க, எங்கே அதை அவன் பார்த்தால் தானே. 

முதலாளிக்கு முதுகு காட்டியபடி பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும் அரிசி மூட்டைகளை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தான் சிகாமணி. 

“என்ன ஒன்னும் சொல்ல மாட்டேங்குறீங்க? ஷீட் போட்டா கடையும் பளிச்சுனு வெளில தெரியும். நமக்கும் இடம் அதிகம் கிடைச்ச மாதிரி இருக்கும்.” வேலையினூடே பரபரத்து வந்தது சிகாவிடமிருந்து.

“இங்க வர கூட்டத்தை சமாளிக்க நான் ஒரு ஆளே போதும். உன்னை நிறுத்திடலாமா?” என்று அவன் முதலாளி கேட்டிட, நெஞ்சில் கைவைத்து திரும்பியவன்,

“ஆத்தாடி… எனக்கே ஆப்படிக்க பாக்குறீங்களே அண்ணா… நியாயமா இது?” என்று பாவமாய் கேட்க, கேலியாய் இதழ் வளைத்த அவன் முதலாளியோ,

“நீ தேவையில்லாத ஆணி எல்லாம் புடிங்குனா நானும் புடுங்கிடுவேன் பாத்துக்கோ… ரூல்ஸ் படிதான் கடை கட்டி இருக்காங்க. நம்ம இஷ்டத்துக்கு எல்லாம் மாத்தக் கூடாது.”

“நான் எதையும் இடிச்சிட்டு மாத்த சொல்லல… ஷீட் போட்டு கடையை வெளில இழுக்கலாம்னு தான் சொல்றேன்.” சாலையிலிருந்து நான்கடி உள்ளே இருக்கும் அவர்கள் கடையை சுட்டிக்காட்டிய சிகா முகம் கூம்பினான். 

“ஷீட் போட்டு இழுக்க இங்க இடம் எங்க இருக்கு?” முதலாளி கேட்டிட,

கடை வாயிலுக்கும் சாலைக்கும் இடையே இருக்கும் இடத்தை சுட்டிக்காட்டியவன், “இந்த இடம் சும்மாதானே இருக்கு.” 

“கடையை லீசுக்கு எடுக்கும் போதே எல்லாம் பாத்துட்டேன்டா… கடையோட எல்லை இதுதான்.” என்று அவர்கள் கடை வாயிலை காண்பித்த முதலாளி, “கடைக்கும் ரோட்டுக்கும் இடையில இருக்குற இடம் பொது இடம், கவர்மெண்டோடது.” என்றார்.

சாலைக்குச் சென்று எட்டிப்பார்த்து வந்த சிகாவோ, “மத்த கடையெல்லாம் ஒரே போல நாலடி முன்ன இருக்கும் போது நம்ம கடை மட்டும் ஏன் உள்ள தள்ளி இருக்கு?” என்று கேள்வி எழுப்ப, எழுந்து வந்த முதலாளி தண்ணீர் பருகியபடி,

“நாளைக்கே சாலை விரிவுபடுத்தணும்னு சொல்லி அளந்தாங்கன்னா இந்த தெரு முழுக்க இருக்குற எல்லா கடையோட வாசலையும் ஒத்தாப்புல இடிச்சி தள்ளிட்டு போய்டுவாங்க. ஆனா நம்ம கடை அப்படியே இருக்கும். நம்ம கடை மட்டும்தான் பொது இடத்துல ஒரு அடி கூட ஆக்கிரமிப்பு இல்லாம கட்டியிருக்கு.”

“ஓ… அப்போ எல்லா கடையும் பொது இடத்தை ஆக்கிரமிச்சுதான் கட்டி இருக்காங்களா?” என்று சிகா வாய் பிளந்து புருவம் உயர்த்த,

“ஆமா. என்னதான் ஆக்கிரமிச்சி கடை கட்டியிருந்தாலும் கவர்மெண்ட் இடிச்சா நஷ்டஈடு கொடுக்கணும். அதான் பயப்படாம எல்லாம் இழுத்து கட்டி இருக்காங்க.”

“அப்போ நாமளும் கட்டலாமே… ஆனா செய்ய மாட்டாரு ரூல்ஸ் பேசுவாரு…” என்று சிக்கா வாய்க்குள் முனக,

“இப்போ என்னடா?” அதட்டல் வந்தது முதலாளியிடமிருந்து. 

“இப்போல்லாம் மரச்செக்கு எண்ணெய்க்கு கிராக்கி இருக்குல்ல, பேசாம நாம அதையும் வெளில வாங்கி வித்தா என்ன? போக போக நம்மளே செக்கு போட்டு சொந்தமா தயாரிச்சு விக்கலாம்.” சிகா அடுத்த யோசனையை எடுத்துவிட, அவனையே அழுத்தமாய் பார்த்தார் முதலாளி.

“என்ன வேணும்னு சுத்தி வளைக்காம சொல்லு.”

“ண்ணா எல்லாம் நம்ம கடை விரிவுபடுத்த தான் சொன்னேன்.”

“என்ன திடீர்னு?” 

சிகா எப்போதும் அடுத்து அடுத்து என்று யோசித்து அவ்வப்போது இது போல யோசனைகளை பல சொன்னாலும் இன்று அவனிடம் ஏதோ மாறுதல் கண்டார் அவன் முதலாளி. அதன் பொருட்டே பேச்சு வளர்ந்து சென்றது.

“திடீர்னு இல்லை ண்ணா… இப்போதான் ஓரளவு கடை நல்லா போகுதே இதே பேரை வச்சி இன்னும் சாமான்களை கொண்டு வந்து இறக்கி கடையை பெருசு பண்ணா என்ன?” 

“இதுவே போதும்டா.”

“ண்ணா… எனக்கு போதாது.”

“அடிங்க… அப்போ வேற கடையை பார்த்துட்டு போங்க சிகா சார்.” என்றாலும் சிகா தன்னை விட்டு செல்ல மாட்டான் என்று நன்றாய் தெரியும் அவருக்கு. பெயருக்கு அவன் அண்ணன் என்று அழைக்கவில்லை உளமார உணர்ந்து அண்ணனாய் ஏற்றுள்ளான் என்பதை உணர்ந்தமையால் தான் கடையில் சிகாவுக்கு அத்தனை சலுகை. 

வாய்க்கு வாய் பேசியவன் அதற்கு மேல் பேசாது அமைதியாய் அமர்ந்துவிட, முதலாளியும் அவன் எதிரில் அமர்ந்தார்.

“வீட்டுல ஏதாவது பிரச்சனையா சிகா?” என்று கேட்டிட, மடை திறந்தது போல் ஒப்பிவித்திருந்தான் சிகாமணி.

“உன் அண்ணன்கிட்ட பேசுனியா?”

மறுப்பாய் தலையசைத்த சிகா, “காலையில நேரமே எங்கேயோ கிளம்பி போயிட்டானாம். நான் பாக்கவே இல்லை. ராத்திரி பேசலாம்னு இருக்கேன்.”

“தள்ளிப் போடாம பேசிடு. பணம் என்னைக்கு வேணும்னாலும் உழைச்சு சம்பாரிச்சிடலாம் ஆனா நம்மளோட வசதியை முன்னிறுத்தி நம்ம கைக்குள்ள இருக்குறதை அலட்சியபடுத்தி அப்புறம் பாத்துக்கலாம்னு தள்ளிப் போட்டா அது திரும்ப கிடைக்காது. இழந்தது இழந்ததுதான்.” 

“பேசுறேன் ண்ணா… கடையை பெருசு பண்ணலாமா?” என்று துவங்கியதிலே மீண்டும் வந்து நிற்க,

“ம்ச்… உனக்கு தேவை இருக்குனு புரியது. போக போக நான் குடுக்குற சம்பளம் உனக்கு பத்தாது நீ வெளில பாரு.” என்றிட முகத்தை தூக்கிக்கொண்டு அன்று முழுதும் அமைதியாய் சொல்வதை மட்டும் செய்து கொண்டிருந்தான் சிகா. முதலாளியும் பெரிதாய் கண்டுகொள்ளாமல் தன் வேலையை பார்த்துக்கொண்டு இருந்துவிட்டார். 

முன்னிரவு ஏழு மணிக்கே வீட்டுக்கு வந்தமையால் தாராளமாய் இருந்த இடத்தில் சைக்கிளை நன்றாக நிறுத்தி வைத்தவன் வாயிலில் நின்றபடியே கல்பனாவுக்கு குறுஞ்செய்தி அனுப்பினான். ஐந்து நிமிடம் நின்று பார்த்தவன் அவளிடமிருந்து பதில் வராது போகவும் நெற்றியை தேய்த்தபடி வீட்டிற்குச் செல்ல, தன் வீடா இது என்று சந்தேகம் கொள்ளும் அளவிற்கு நிசப்தமாகவும் இருளாகவும் இருந்தது அவன் வீடு.

“லைட் போடாம என்ன பண்ற ம்மா? பாப்பு சத்தத்தையே காணோம் தூங்குறாளா?” என்று கேட்டபடி கதவை தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்தான்.

அவன் கேள்விக்கு பதில் வராமல் போக, தானே சென்று லைட் போட்டவன் இருளில் ஏதோ யோசனை செய்தபடி அமர்ந்திருந்த தேவியை புரியாத பார்வை பார்த்து அவரின் கைப்பிடித்து எதிரில் அமர்ந்தான்.

“பாப்பு, அண்ணி எல்லாம் எங்க? ஏன் இப்படி இருக்க?”

தேவி எதுவும் பேசாது அறையின் புறம் கை காட்ட, கண்களை சுருக்கிய சிகா அமர்ந்தவாக்கிலே அறையினுள் எட்டிப்பார்த்தான். அங்கு இருளில் பாய் விரித்து சுசீலா படுத்திருப்பது தெரிந்தது.

“என்னாச்சு?”

“எல்லாம் முடிஞ்சுச்சு.” விரக்தியாய் வந்த தேவியின் பதில் அவனை பதைபதைக்கச் செய்ய தயக்கம் உதறி அறையினுள் சென்று கதவை தட்டினான் சிகா.

“அண்ணி”

சிகாவின் அழைப்பு கேட்டு மெல்ல திரும்பிப் படுத்த சுசீலா தன் அலைபேசியில் டார்ச் லைட் ஆன் செய்து மெதுவாய் எழுந்து சுவற்றில் சாய்ந்தமர்ந்து கொண்டாள்.

அவள் முகத்தில் நேற்று தெரிந்த சோர்வுக்கும் இன்று தெரியும் சோர்வுக்குமான வித்தியாசம் சிகாவுக்கு உறுத்தலை உண்டு செய்ய நெற்றியை தேய்த்துக்கொண்டவன் எப்படி துவங்குவது என்று தெரியாது முழித்து நின்றான்.

“ஏதாவது வேணுமா?” சுசீலாவே பேச்சை ஆரம்பித்தாள்.

“ம்ம்… ஹான்… உங்க உடம்பு எப்படி இருக்கு? ஏன் என்னவோ போல இருக்கீங்க?” என்று கேட்டுவிட்டு அருகில் உறங்கிக்கொண்டிருந்த கனியின் மீது பார்வை பதித்துக்கொண்டான். 

“உங்க அண்ணன் எதுவும் சொல்லலையா?” பலகீனமாய் ஒலித்தது சுசீலாவின் எதிர்கேள்வி.

சிகா இல்லை என்று தலையசைக்க அலைபேசியின் வெளிச்சத்தை அமர்த்தியவள், “நைட் லைட் போடுங்க… பாப்பு நல்லா தூங்குறா முழிக்க மாட்டா.” என்கவும் நகர்ந்து சென்று இரவு விளக்கை போட்டுவிட்டு தள்ளி நிற்க, அவனை அருகில் அழைத்து அமரச் சொன்னாள் சுசீலா.

கனியின் காலடியில் அமர்ந்தவன், “அண்ணி?”

“எங்களுக்கு வேற வழி தெரியல. அதான் முறையா கலைச்சாச்சு.” என்று சொல்லும்போதே குரல் கமறி உடைந்தது.

வேகமாய் வெளியே சென்று தண்ணீர் எடுத்து வந்தவன் அவளிடம் நீட்ட, வாங்கிக்குடித்து ஆசுவாசமானவள் மீண்டும் சுவரில் தலை சாய்ந்து அமர்ந்துகொண்டாள்.

அவள் சொன்ன செய்தியை செமிக்க சில நொடிகள் தேவைப்பட்டது சிகாவுக்கு. காலம் தாழ்த்தக்கூடாது என்று எண்ணி இன்றே பேசிட வேண்டும் என்று நினைத்து வீடு வந்தால் அனைத்தும் முடிந்துவிட்டது என்கிறார்களே என்ற ஆற்றாமையுடன் சுசீலாவை ஏறிட்டுப் பார்த்தான். 

“யோசிச்சிருக்கலாமே அண்ணி…”

“யோசிச்சதால தான் இந்த முடிவு…” நிறுத்தி அழுத்தமாய் சொன்னவள் ஆழ மூச்சிழுத்து, “அத்தை மாதிரி நீங்களும் எங்களை தப்பா நினைக்குறீங்களா?” என்று கேட்க நிமிர்ந்து அவளை பார்த்தானே ஒழிய பதில் ஏதும் கூறவில்லை, “சேகர் எங்க?” என்ற கேள்வி மட்டும் முணுமுணுப்பாய் வந்தது.

“இன்னைக்கு முழுக்க என்கூட ஆஸ்பத்திரில இருந்துட்டு இப்போதான் வேலைக்கு போய் இருக்காங்க.”

“உங்களை கேட்கலாமான்னு தெரில ஆனா கேக்காம இருக்க முடியல… ஏன் அண்ணி இப்படியொரு முடிவு எடுத்தீங்க? நாங்க உங்களை, பாப்பாவை, குழந்தையை அப்படியே விட்டுருவோமா?” மனம் தாளாது சிகா கேட்டிட, வெற்றுப் புன்னகை முந்திக்கொண்டு வந்தமர்ந்தது சுசீலாவின் இதழில்.

“என்னை ஏன் உங்க அண்ணனுக்கு கட்டிக்கொடுத்தாங்க தெரியுமா?”

“…”

“முப்போகம் காணுற குடும்பத்துல மூணு வேலை சாப்பாட்டுக்கு பொண்ணு கஷ்டப்படாதுங்குற ஒரே காரணத்துக்காக தான் மாமா வந்து பொண்ணு கேட்கவும் உடனே ஒத்துக்குட்டாங்க. ஏக்கர் கணக்குல விவசாயம் பண்றவங்க ஏன் சோத்துக்கே கஷ்டப்படுற எங்க குடும்பத்துல சம்பந்தம் பேசுனாங்கனு இன்னைக்கு வர எங்களுக்கு தெரியாது.”

“உங்க குணம் பாத்துதான் அப்பா பொண்ணு கேட்டாங்க அண்ணி. வசதி இருக்கான்னு எல்லாம் நாங்க பாக்கல.” என்று அவசரமாய் இடைமறித்தான் சிகாமணி. இது இப்போது தேவையற்றது என்பது போல் அதை கடந்தவள்,

“ஸ்கூல்ல மதிய போடுற சத்துணவுக்காகத் தான என்னை எங்க வீட்டுல ஸ்கூலுக்கு அனுப்புனாங்க. அப்படிப்பட்ட குடும்பத்திலேந்து வந்து ஒரு ஆறு மாசம் நிம்மதியா இருந்திருப்பேனா அது பொறுக்கல கடவுளுக்கு… என்னோட ராசிதான் உங்களையும் இந்த நிலைமைக்கு இழுத்துட்டு வந்துடுச்சு…”

“ஐயோ! அண்ணி, என்ன பேசுறீங்க? ராசி அதுஇதுன்னு ஏதேதோ சொல்றீங்க. அதெல்லாம் ஒண்ணுமில்லை.” சிகா அழுந்தச் சொன்னாலும் அவளுள் அழுத்தமாய் பதிந்த சொற்கள் அழிய மறுத்து வெளிவந்த வண்ணம் இருந்தது.

“என் தலையெழுத்துதான் இப்படி ஆகிடுச்சு என் புள்ளைங்களாவது நல்லா இருக்கும்னு பாத்தா அதுக்கும் வழியக் காணும். இந்த வருஷம் கனியை ஸ்கூல் சேக்கணும். நாமதான் சரியா படிக்கல நம்ம புள்ளையாவது நல்ல இடத்துல சேர்த்து படிக்க வைக்கலாம்ன்னா அதுக்கு வக்கில்லை. என்னை மாதிரியே என் பொண்ணையும் ரெண்டு வேலை சாப்பாட்டுக்காக கவர்மெண்ட் ஸ்கூல்ல சேர்க்க சொல்றாரு உன் அண்ணன். இதுல இன்னொன்னு பெத்துக்கிட்டு அதையும் சேர்த்து கஷ்டப்படவைக்க என்னால முடியாது.”

“நல்ல ஸ்கூல்ல சேர்க்கலாம்னு நாமதான் பேசி வச்சிருந்தோமே அண்ணி. சேகர் கூட சரி சொன்னானே…”

“எவ்வளவு பிரச்சனை வந்தாலும் உங்ககிட்ட இருக்கிற துள்ளலும் தன்னம்பிக்கையும் உங்க அண்ணன்கிட்ட கிடையாது. மாமா இறந்தப்பவே மொத்தமா முடங்கிட்டாரு. படாதபாடுபட்டு தான் அவரை தேத்தி கொண்டு வந்திருக்கேன். இப்போ இருக்கிற நிலைமைக்கு அவரால இன்னொரு சுமையை சுமக்க முடியாது.” சொல்லும் போதே தொண்டை அடைத்தது சுசீலாவுக்கு. 

“அண்ணி!” அதிர்ந்து அதிருப்தியாய் அழைத்தான் சிகா. குழந்தையை சுமை என்பதா?

“குழந்தை கடவுளோட வரம், இல்லைனு சொல்லல… ஆனா எல்லா வரமும் நமக்கு சுகமா இருக்காது சில நேரம் சுமையாவும் இருக்கும்.” தங்களின் இயலாமை எண்ணி கோடாய் இறங்கிய விழி நீரை அழுந்தத் துடைத்தவள், “அந்த சுமையை சுமந்து கரையேத்துற திறமையும் பக்குவமும் இல்லாதவங்க அந்த சுமையை இறக்கி வைக்குறதுதான் நல்லது.” 

“நான் பாத்துக்க மாட்டேனா?” 

“சுகமோ சுமையோ என்னோடதை உங்க தலையில தூக்கி வைக்க முடியாது. இப்போ நீங்க தனியா இருக்கீங்க சொல்றீங்க நாளைக்கு உங்களுக்கும் குடும்பம் வரும், பேருக்கு புள்ளையை பெத்து போட்டுட்டு அப்போவும் உங்க கையை எதிர்பார்த்துட்டு இருக்க முடியுமா?”

“அவசரப்படாம இன்னும் நீங்க யோசிச்சிருக்கலாம். நம்ம நிலைமை இப்படியே இருக்க போறதில்லை.” என்று சிகா அப்போதும் மனம் கேளாது சொன்னான்.

“நிலைமை மாறட்டும் பாக்கலாம்.” என்று சுசீலா முடித்துக்கொள்ள இதற்கு மேல் என்ன பேச என்று எழுந்து வெளியே வந்துவிட்டான் சிகா.

அவர்கள் பேச்சை வெளியே இருந்தபடி கேட்டுக்கொண்டிருந்த தேவி மகனைக் கண்டதும் உதட்டை பிதுக்கி தலையசைக்க, சிகாவும் தலையெழுத்து இதுதான் என்பது போல் நெற்றியில் விரல் கொண்டு கோடிட்டு காட்டிச் சென்றான்.

வேலை முடித்து வரும் மகனுக்கு தவறாது உணவளிக்கும் தேவிக்கும் இன்று மகனை கவனிக்கத் தோன்றவில்லை, அவனுக்கும் பசியுணர்வு எடுக்கவில்லை. 

பணம். நிறம், மொழி, கண்டம் என்று பேதங்கள் கடந்து இப்பூவுலகில் நிம்மதியான ஊண் உறக்கம் காண இந்த நூற்றாண்டில் மிக மிக அவசியமானதாக மாறிப்போன ஒன்று. அப்பணத்தை ஈட்டும் வழிகள் பல இருந்தாலும் அவரவர் அவர்கள் கற்றுத் தேர்ந்த தொழிலில் ஜொலித்து முன்னுக்கு வருகிறார்கள். 

அப்படி நல்ல நிலைமைக்கு வந்தபின் சிற்சில காரணங்களால் வீழும் பலர் எழுந்துகொண்டாலும் சேகர் போன்ற சிலர் தடுமாறி எதிர்மறை பிம்பங்களுக்குள் சிக்கி மீண்டுமெழ அச்சம் கொள்பவர்களாகவும் இருக்கிறார்கள். 

தடுமாற்றங்களை தடைக்கற்களாய் நினைத்து அதை ஏறி மிதித்து மேலேறும் மார்க்கம் அறியும் ஆவல் கொண்ட சிகா போன்றோர் எதிலும் நேர்மறை கண்டு துணிந்து இறங்கவும் தயாராய் இருக்கிறார்கள். இவர்களால் என்றும் சேகர் போன்றோரின் முடிவை ஏற்க இயலாது. சிகாவும் அதே நிலையில் இருந்தான்.

Advertisement