Advertisement

வந்த அரிசி லோடை கடையின் பின்னிருந்த சிறிய குடோனில் இறக்கி வைத்துவிட்டு முதலாளியோடு கணக்கு முடியும் வரை இருந்த சிகா தன் சைக்கிள் ஸ்டாண்டை எடுத்துக் கிளம்ப, 

“சீக்கிரம் வண்டி வாங்க பாருடா.” என்று அவன் முதலாளி நிறுத்தினார்.

“இப்போ என்ன அவசரம் ண்ணா…” என்றான் சிகா சாவுகாசமாய்.

“அது சரி. அப்போ எப்போ வாங்குறதா உத்தேசம்?”

“பாத்துக்கலாம் அண்ணா.”

“ஒரு சிலதை செய்ய வேண்டியதை நேரத்துல செஞ்சிடனும். அப்புறம் பாத்துக்கலாம்னா நமக்காக காலம் நிக்காது.”

“புரியுது அண்ணா. இப்போதான் கொஞ்சம் காசு சேர்ந்துட்டு இருக்கு.” என்று தலை சொரிந்தான் சிகா.

“சேர்க்குறது எல்லாம் சரிதான். ஆனா கல்பனாவுக்கும் படிப்பு முடியப்போகுதுனு சொன்னியே, அடுத்து என்னனு யோசிச்சு இருக்கீங்களா? இப்போலேந்து உன்னை நீயே உயர்த்திகிட்டாதான் உனக்கே உன் மேல தன்னம்பிக்கை வரும். தைரியமா பொண்ணு கேட்க போகும் போது அவங்களுக்கும் மறுக்க காரணம் இருக்காது.”

“ம்ம் பாக்குறேன் அண்ணா.”

“செய்யுறேன்னு சொல்லி பழகுடா. நடக்கணும்னு இருக்கிறது நீ சாவுகாசமா உன் தரம் உயர்த்திக்கிற வரைக்கும் நடக்காம இருக்காது. பாத்துக்கோ.” என்று அவன் முதலாளி முதுகை தட்டிவிட்டு செல்ல, வண்டியை கிளப்பிக்கொண்டு செல்லும் அவரை பார்த்தபடி நின்றான் சிகா. 

எனக்கு கல்ப்ஸ் போல் இவருக்கும் ஒரு நல்லது நடந்தால் நல்லா இருக்குமே என்ற எண்ணம் எழ அதை அசைபோட்டபடி சைக்கிளை தன் வீடு நோக்கி மிதித்தான்.

சென்னை வந்த நாளாய் அலைந்து திரிந்து வேலை என்ற ஒன்று கிடைத்து வீட்டில் மூன்று வேலை உணவு என்பதை உறுதி செய்த பின் அவனுக்கென்று அவனால் வாங்க முடிந்தது இந்த சைக்கிள் மட்டுமே. இதன்பின் சொத்து உடமை என்று இனிதான் யோசித்து வாங்க வேண்டும். முதலில் வீடு வாங்கத்தான் எண்ணினர் அண்ணனும் தம்பியும். ஆனால் விண்ணளவு உயர்ந்துவிட்ட சென்னை வீடுகளும் வீட்டுமனையின் விலைப்பட்டியலும் அவர்களை வாய் பிளக்க வைத்தது. ஆயிரம் சென்ட் நிலத்துக்கு சொந்தக்காரர்களாய் இருந்தவர்களால் தற்சமயம் இம்மண்ணில் ஒரு சென்ட் கூட வாங்க சாத்தியமே இல்லை என்று திண்ணமாய் தோன்ற அம்முடிவை கைவிட்டு தனித்தனியாய் சேமிக்க துவங்கினர். காலம் கனிந்தால் பின் பார்த்துக்கொள்ளலாம் என்ற எண்ணம்.

“என்ன யோசனையில வர சிகா?” என்ற அதிர்ச்சியான குரலில் சட்டென பிரேக்கிட்டு சைக்கிளில் இருந்து இறங்கினான் சிகா. மோதிவிடுவேன் என்ற கணக்கில் சேகர் காலடியில் நின்றிருந்தது சிகாவின் சைக்கிள். 

அசந்திருந்தால் அண்ணன் மேல் சைக்கிளை விட்டிருப்பான். அது பிரச்சனை இல்லை, அண்ணன் காலை சுற்றி விளையாடிய அவன் மகள் கனிமொழி பயந்து தந்தை காலை கட்டிக்கொண்டு ஓவென்று அழத் துவங்கிவிட்டது. தன்னையே நொந்துகொண்ட சிகா சைக்கிளை ஸ்டாண்ட் போட்டு நிறுத்திவிட்டு அண்ணன் தோளில் முகம் புதைத்து அழும் மகளை தூக்க முனையே, ஐயத்தில் அவனிடம் வரமாட்டேன் என்று முரடு பிடித்து தந்தை தோளில் அழுந்த முகம் புதைத்துக்கொண்டது.

“சாரிடா செல்லம்… சித்தப்பா சைக்கிள்ல ரவுண்ட் போலாம் வா.” என்று வம்படியாய் தூக்கியவன் அவள் கன்னத்தை துடைத்துவிட்டு தோளில் போட்டு தட்டிக்கொடுத்தான்.

“என்னாச்சு பாப்பு?” ஒன்றுபோல வீட்டின் இளவரசியின் அழுகுரல் கேட்டு வெளியே வந்தனர் மாமியாரும் மருமகளும்.

சேகர் விவரம் சொல்ல சின்ன மகனை முறைத்தார் தேவி, “அப்படி என்ன சைக்கிள் ஓட்டும் போது எதிரில இருக்கிறதை கவனிக்காத அளவுக்கு துரைக்கு யோசனை?” 

“ம்ச் ஏதோ இருந்துட்டேன்.” முகம் சுழித்தவன் கனிமொழியை அண்ணி சுசீலாவிடம் கொடுத்துவிட்டு வேகமாய் உள்ளே சென்று குழந்தை அமரும் கூடை சீட்டை எடுத்துவந்து சைக்கிளின் ஹேண்ட்பார் கம்பியில் மாட்டிவிட, 

“சித்தப்பா கூட ரவுண்ட் போயிட்டு வாங்க பாப்பு.” என்று கனியை அந்த கூடையில் அமரவைத்தாள் சுசீலா.

சைக்கிள் மெல்ல நகரவும் கனியின் அழுகை குறைந்து அவளது எலிப்பல் எட்டிப்பார்த்தது. இரவு நேர காற்று குளுமையாய் வீச வெகுதூரம் செல்லாமல் அத்தெரு முனை வரை சென்று திரும்பி வந்தான் சிகா. அழுகை முற்றிலும் ஓய்ந்திருக்க இப்போது சைக்கிளை விட்டு இறங்கமாட்டேன் என்பது போல் கெட்டியாய் சைக்கிளை பிடித்துக்கொண்டாள் கனி.

“உதை வாங்குவ பாப்பு.” என்று சுசீலா மகளை அதட்டி உள்ளே தூக்கிச்செல்ல சைக்கிளை கிடைத்த இடத்தில் சொருகி வைத்தான். 

ஆம் கிடைத்த இடம் தான். ஒரு காம்பவுண்ட்டுக்குள் சந்து விட்டு நேராய் ஐந்தாறு சிறு வீடுகள் வரிசையாய் கட்டிப்போட்டு வாசலில் சிறிய இடம் விட்டிருந்தனர் வண்டி நிறுத்தவென. கீழே ஆறு வீடுகள் போல் மேலேயும் வீடுகள் இருக்க அத்தனை குடும்பத்திற்கு அந்த வாகனம் நிறுத்தும் இடம் மிகக்குறைவே. முதலில் வருபவருக்கே முதல் உரிமை முறையில் வாகனங்கள் நிறுத்தப்படும். மீதி தெருவில் தான் ஓரமாய் நிறுத்த வேண்டும். 

இன்று சிகாமணி தாமதமாய் வந்தாலும் சிறிய இடம் கிடைக்க, சொருகி விட்டான். பெருமூச்சு ஒன்று எழுந்து அடங்கியது. சைக்கிள் வைக்கவே இந்த பாடு என்றால் வண்டி வாங்கி எங்கனம் பாதுகாக்க? முதலாளி அண்ணன் சொல்வது போல் சீக்கிரம் தங்கள் தரத்தை உயர்த்த வேண்டும் என்ற எண்ணத்தோடு வீட்டு கேட்டில் நின்று எட்டிப்பார்த்தான். தெருவின் மறுமுனைக்கு சற்று முன்னதாகவே இருக்கும் கல்பனா வீட்டில் வாசல் லைட் எரியவில்லை. படுத்துவிட்டார்கள் போல என்று எண்ணிக்கொண்டு சந்தில் இருந்த இரண்டாம் வீட்டின் கதவை தட்டினான். அதுதான் அவர்கள் வீடு. கையை கடிக்காமல் ஒற்றை படுக்கையறை கொண்ட வீடே கிடைக்க பரவாயில்லை என்று இருக்கின்றனர். 

கனியின் சாகசத்திற்கு பயந்து வீட்டின் கதவை எந்நேரமும் மூடியே வைத்திருப்பார்கள். எப்போது திறக்கும் என்று காத்திருக்கும் குட்டி கதவிடுக்கு வழியே வெளிச்சம் கொஞ்சம் எட்டிப்பார்த்தாலும் கதவை திறந்துகொண்டு சிட்டாக ரோட்டுக்கு பறந்துவிடுவாள். அவளை கையணைவில் பிடித்தாற்போல் கதவை திறந்துவிட்டார் தேவி.

“இவ்வளவு நேரம் தூங்காம என்ன பண்றீங்க?” என்ற கேள்வியோடே உள்ளே நுழைந்தான் சிகா.

“மதியம் ஒரு அரைமணி நேரம் அதிகமா தூங்கிட்டு இந்த குட்டி பண்ற அழிச்சாட்டியம் இருக்கே… பாவம் சுசி எப்போடா படுப்போம்னு இடுப்பை புடிச்சிட்டு உக்காந்திருக்கா.” என்று நீண்ட விளக்கம் கொடுத்தார் தேவி.

அன்னையின் பதிலை காதில் வாங்கியபடியே ஹாலில் இருந்த செல்ப்பில் இருந்து துண்டையும் கைலியையும் எடுத்துச் சென்றவன் ஐந்தே நிமிடத்தில் குளித்து வந்தான். துண்டை உதறி அங்கிருந்த கொடியில் போட்டுவிட்டு கையோடு ஒரு டிஷர்ட்டை அவசரமாக மாட்டிக்கொண்டவன் அண்ணி மடியில் ஏறி குதித்துக்கொண்டிருந்த கனியை தன்வசப்படுத்திக் கொண்டான்.

“பாப்புக்கு தூக்கம் வரவரைக்கும் நான் பாத்துக்குறேன் அண்ணி.” சற்று கால் நீட்டி படுத்து ஓய்வெடுங்கள் என்று பொறுப்பை தனதாக்கிக்கொண்டவனை நன்றி கலந்த நிம்மதி மூச்சுடன் பார்த்தவள் அப்படியே மாமியார் புறம் பார்வையை திருப்ப, சின்ன மகனுக்கு சுடச்சுட தோசை சுட்டுக்கொண்டிருந்தார் தேவி.

தன் கைவளைவில் முண்டும் குழந்தையை தூக்கிப்போட்டு பிடித்து விளையாடியபடி அடுப்படி வந்தவன் கனியை அடுப்பு மேடையில் நிற்க வைத்து விளையாட்டு காட்ட தோசை ஊற்றியபடியே மகனுக்கு ஊட்டிவிட்டார் தேவி.

“சேட்டை பண்றீங்களா பாப்பு. அம்மா பாட்டியெல்லாம் பாவம்ல…” பேச்சினூடே குழந்தை கன்னத்தில் முத்தம் வைத்தவன், “இன்னைக்கு ஏன் அண்ணி டல்லா இருக்காங்க? பாப்பு ரொம்ப வாலு பண்ணாளா?” என்று தாயிடம் மென்குரலில் வினவ அவனை ஏறிட்டு பார்த்தவர் பின் தோசைக்கல்லில் பார்வை பதித்து, “மாசமா இருக்கா.” என்று ஒட்டாத குரலில் தகவல் சொன்னார்.

“சொல்லவே இல்லை…” என்று ஆர்ப்பரிப்பு அந்த சித்தப்பனிடம்.

“சொல்ற நிலைமையில எதுவும் இல்லை.” சொன்ன இனிப்பான செய்தியும்  அதை அவர் வெளிப்படுத்திய விதமும் முரணாய் இருக்க,

“என்னமா? சந்தோஷமா இருக்க வேண்டிய நேரத்துல… ம்ச்…”

“நீயும் நானும் மட்டும் சந்தோஷப்பட்டா போதுமா?” என்று அழுத்தமாய் கேட்டவர் மகன் கையில் தட்டை திணித்துவிட்டு கனிமொழியை தூக்கிச் சென்று சுசீலாவிடம் விட்டார்.

புரியாத பாவத்துடன் அவர் பின்னோடே வந்த சிகா கனியை மீண்டும் சுசீலாவிடமிருந்து வாங்கும் முன், “அவங்க தூங்கட்டும் சிகா. நீ சாப்புடு.” என்று அழுத்திச் சொல்ல, தாய் முகத்தையே பார்த்து நின்றான் சிகாமணி.

அவர் முகத்தில் தெரிந்தது கடினமா அதிருப்தியா வருத்தமா என்னவென்று பிரித்தறியமுடியா அப்பாவனையை கிடப்பில் போட்டு அண்ணியை பார்க்க குனிந்த தலை நிமிராது அவர்கள் அறைக்குச் சென்று கதவடைத்துக்கொண்டாள் சுசீலா.

“என்னமா நடக்குது? சேகர் எங்க?” 

“அவனுக்கென்ன நல்லா இழுத்து போர்த்திட்டு தூங்குவான்.” என்று கடினமாய் சொன்னவர் இன்னுமொரு தோசை எடுத்துவந்து சிகா தட்டில் போட்டு, “நாள் முழுக்க வேலை பார்த்து அலைஞ்சுட்டு வர, சூடா சாப்பிட்டா நல்லா இருக்கும்னு மெனக்கெட்டு உனக்காக ஊத்திக்கொடுத்தா ஆற வச்சிட்டு நிக்குற. நாளையிலேந்து இட்லி ஊத்தி டப்பில அடச்சி வச்சிடுறேன் அப்போதான் சரிவருவ நீயி…” என்று சிகாவிடம் பாய எதுவோ சரியில்லை என்று புரிந்துகொண்டவன் அமைதியாய் தனக்கு வேண்டியவற்றை உண்டு முடித்து தட்டை கழுவி மேடையில் கவுத்து வைத்தான்.

ஹாலில் பாய் விரித்திருந்த தேவி மகனுக்கு காத்திராமல் இரவு விளக்கை மட்டும் போட்டுவிட்டு சுவரை பார்த்தபடி படுத்துவிட அவர் அருகில் வந்து படுத்தவன்,

“ம்மா… ம்மா… ம்மா…”

மூன்று முறை அழைத்தும் தேவியிடமிருந்து பதில் இல்லை. சில நொடிகள் கழித்து செருமும் சத்தம் மட்டும் கேட்டது.

“ம்மா என்னன்னு சொன்னாத்தான தெரியும்…” சிகா புரியாது பதறி வினவ,

“வருமானம் பத்தாதுனு வம்சத்தை முடக்கப் போறாங்கலாம். வம்சம் தழைக்க கனி மட்டும் போதுமாம்.” என்றிட புரிந்துவிட்டது செய்தி. 

தேவியை போல் அவனுக்கும் தாளவே இல்லை மனது, “பணம் என்னைக்கு வேணும்னாலும் சம்பாரிக்கலாம் ஆனா…”

“அது புரிய வேண்டியவங்களுக்கு புரியனுமே.”

“நான் பேசுறேன் சேகர் கிட்ட…”

“வேண்டாம். அவன் புள்ளை அவன் என்னவோ செஞ்சிக்கட்டும்.”

“அவன்தான் புரியாம பேசுறான்னா நீதான் எடுத்து சொல்லணும். சொன்னா கேட்டுப்பான்.” என்றவன் யோசனை வந்தவனாய், “அண்ணி என்ன சொல்றாங்க?”

“அவ சொல்றதுக்கு எல்லாம் தலையாட்டுறது மட்டும்தான் உன் அண்ணன் வேலை. வேற என்ன கிழிச்சிடுவான்.” என்று கோபம் கொப்பளிக்க பொங்கியவர் மகன் புறம் திரும்பிப்படுத்து வழியும் விழி நீரை துடைத்தார்.

“ஏன் இப்படி ஒரு முடிவு? அப்படி என்ன ஆகிட்டு இப்போ?” காரணத்தை விவரமாய் அறிய மேலும் அவ்விஷயத்தை தோண்டினான்.

“சோத்துக்கே வக்கில்லாம இருக்கோமாம். ஊருக்கே படி அளந்து சோறு போட்ட குடும்பம்டா நாம…” என்ன முயன்றும் கேவலும் கண்ணீரும் போட்டி போடுவதை தவிர்க்கமுடிவில்லை அவரால்.

சிகாவும் அவரின் வார்த்தையில் அமைதியாகிவிட்டான். பத்து ஏக்கர் நஞ்சையில் விளைச்சல் கண்ட குடும்பம் இன்று அடுத்த வேலை சோற்றை நினைத்து வரவிருக்கும் வீட்டு வாரிசை வெளியுலகம் பார்க்க விடாது செய்யும் நிலையில் இருக்கிறார்கள். இது எப்படி நடந்தது என்று எத்தனை யோசித்தும் விடையில்லை. அவர்களை பொறுத்தவரை எல்லாம் நன்றாய் சென்று கொண்டிருக்கிறது என்றே நினைத்திருக்க ஒரே வாரத்தில் அனைத்தும் தலைகீழாகி தந்தையை இழந்து ஊரை பிரிந்து சென்னைக்கு குடியேறிவிட்டனர். 

விவசாயம் மட்டுமே பிரதானமான தொழிலாய் வாழ்க்கையாய் இருக்க, அதை விடுத்து சென்னை வந்தவர்களால் முதலில் இங்கு ஒன்ற முடியவில்லை. என்ன வேலை செய்வது என்று பிடிபடவில்லை. அதை கொண்டுதான் சிகா பல நாள் வேலையின்றி அலைந்தது பின் அரிசி மண்டியில் சேர்ந்தது. சிகாவுக்கு கிடைத்தது போல் மாத சம்பளம் வேலை இல்லை சேகருக்கு. தினக்கூலியாய் கூப்பிடும் இடத்திற்கு சென்று கிடைக்கும் வேலை செய்பவன். சில நாட்கள் வேலையும் இருக்காது. அதன் பொருட்டே இரண்டாம் குழந்தை வேண்டாம் என்ற முடிவு. அதை ஏற்கத்தான் குடும்பத்தினருக்கு மனதில்லை. 

பிறக்கவில்லை என்றாலும் அது அவர்கள் வீட்டு உயிர் அல்லவா… உயிரின் உன்னதம் உணர்ந்த தேவியாலும் சிகாவாலும் மூத்த வாரிசு எடுத்த முடிவை அங்கீகரிக்க முடியவில்லை. மறுநாள் அண்ணனிடம் இதுபற்றி பேசிட வேண்டும் என்ற எண்ணத்துடன் கண் மூட,

“நம்ம நிலைமை மாறிடும்னு நம்புனேன்டா. சேகர் பண்றதெல்லாம் பாத்தா எனக்கு அந்த நம்பிக்கையே போயிடும் போல.” என்று சிகாவிடம் முறையிட்டார் தேவி.

“மாறிடும் ம்மா. நீ நம்பிக்கையை தளரவிட்டுறாத. நான் பாத்துக்குறேன்.” என்றான் நம்பிக்கையாய். 

அவன் மனதில் அடுத்து என்ன என்று சில பல கணக்குகள் மனக்கணக்காய் ஓட நாளையே இதைப்பற்றி முதலாளியிடம் பேசி தன் வருமானத்தை பெருக்க ஏதாவது செய்திட வேண்டும் என்று உறுதி பூண்டான். 

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் எதிர்பார்ப்பு பொய்க்கும் தருணத்தில் தோன்றும் கோபம், வருத்தம், இயலாமை, வன்மம் போன்ற எந்த உணர்ச்சிக்கும் வேலை இல்லாது போய்விடுமே… அற்புதங்களும் அனர்த்தங்களும் இல்லாத வாழ்வு எவரையும் முன்னேற்றுவதில்லை. நல்லதோ அல்லதோ அதிரடியான மாற்றங்கள் வாழ்வில் நிகழாதிருப்பின் கற்றலும் அனுபவமும் கைக்கு எட்டாமலே போய்விடும்.

Advertisement