Advertisement

*2*

“அவனோட வர்றாளாமே… என்கிட்டேயே சொல்றா… என்ன திண்ணக்கம் இருக்கணும். ஆடு பகை குட்டி உறவா? அத்தை பாசம் அவ பெத்த மகன் மேலையும் பொத்துகிட்டு வருதோ? இன்னும் ஒரே பரீட்சை அப்புறம் எப்படி அத்தான் நொத்தானுங்குறேன்னு நானும் பாக்குறேன்.” தலை முடியை கொத்தாய் பிடித்து கொண்டை போட்டார் சரளா.

“ஒட்டவே கூடாதுனு எட்ட வச்சிருந்தா ஒட்டப் பாக்குறாளா இவ? இல்லை இவ ஒட்டணும்னு தான் பக்கத்துலேயே இருந்து இவளை வச்சி ஒட்டிக்க பாக்குறாங்களா? இப்படி ஒரு வார்த்தை இவ வாயிலேந்து வந்திருக்கு என்னனு கேக்காம உக்காந்திருக்கீங்க…” மகளை வசவிய கையோடு கணவர் மீதும் பாய்ந்தார்.

மனைவியை நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்த கபிலனின் பார்வை அடுத்து அவ்வீட்டின் ஒற்றை படுக்கையறை புறம் சென்றது. அங்கு அமர்ந்து தானே அவர்கள் மகள் தாங்கள் பேசுவதை கேட்டுக்கொண்டிருக்கிறாள்.

மகளை கல்லூரியிலிருந்து அழைத்து வரச்சொல்லி சரளாவிடமிருந்து மதியம் போல் அழைப்பு வர, அவர் வேலை செய்யும் கடையின் கணக்கை பாதியில் விட்டு வரமுடியாதபடியால் கல்லூரிக்கு அழைக்க வர தாமதமாகும் என்று மகளுக்கு அழைத்து தகவல் சொல்ல, சரியென்றுவிட்டாள் கல்பனா.

அவருக்கு எங்கே தெரிந்தது மகள் அவர் தாமதமாக வருவதை ஒருவித ஆசுவாசத்துடன் உணர்ந்து, அவர் கல்லூரிக்கு வருவதற்குள் வண்டியை விரட்டி ஓட்டி கடற்கரையிலிருந்து திரும்ப கல்லூரிக்கு வந்து காத்திருப்பது போல் அமர்ந்துகொண்டது எல்லாம்…

‘சிகா அத்தானை இங்க காலேஜ் பக்கத்துல ஒரு கடையில பாத்தேன் அவங்களோட வந்துறவா?’ என்ற ஒற்றை கேள்விக்கு,

‘எவன் உனக்கு அத்தான்? உன் அத்தையே வேணாம்னு ஒதுங்கி இருக்கோம் அவ பெத்த புள்ளைகிட்ட போயி நிப்பியா நீயி? அவன் எல்லாம் ஒரு ஆளுன்னு அவன்கிட்ட வீட்டுக்கு அழைச்சிட்டு வரசொல்லி வேற கேப்பியா? குடும்பமே கடன்ல மூழ்குனாலும் வறட்டு பிடிவாதத்துக்கு குறைச்சல் இல்லாத குடும்பம் அது… அந்த குடும்பத்து ஆள்கிட்ட என்ன பேச்சு வேண்டி கிடக்கு? காலேஜுக்கு போனோமா வந்தோமான்னு இல்லாம எவன் எந்த கடையில் இருக்கானு பாக்குறதுதான் வேலையா உனக்கு?’ என்று சரளா கலர் கலராய் காய்ச்சி எடுத்ததில் கப்சிப்பென்று வாய் மூடிக்கொண்டாள் கல்பனா. பின்னர் தான் அவள் தந்தை அழைக்க வருவதாய் சொல்லியது.

வீடு வந்தபின்னும் பிடித்துக்கொண்டார் சரளா.

“வெளி ஆளுங்களை நம்பி அவளுக்கு துணையா அனுப்ப மாட்டோம்னு தெரிஞ்சிக்கிட்டு அவன் கூட வரவான்னு கேட்டிருப்பா. பெருசு பண்ணாத சரளா.” கபிலன் தணிந்து பேச, விடுவேனா என்று எகிறினார் சரளா.

“தங்கச்சி மவன் மேல பாசம் வழியுதோ?”

“ம்ச்… ஒதுங்கிட்டோம் அப்படியே இருந்துட்டு போயிடலாம். இதை பெருசு பண்ணாத. கல்பனாவுக்கு ஒரு பரீட்சை தான் இருக்கு அடுத்து என்ன பண்றதுனு பாப்போம்.” என்கையிலேயே காதை கூர்மையாய் தீட்டி இவர்கள் பேசுவதை கேட்டுக்கொண்டிருந்த கல்பனா தாய் மறுக்கும் முன்னர்,

“நான் மேல படிக்கணும் அப்பா.” என்று வந்து நின்றாள்.

“தாராளமா படி.” உடனடி ஒப்புதல் கிடைத்தது தந்தையிடம்.

யோசித்து கலந்தாலோசிக்காமல் கணவர் உடனடி ஒப்புதல் வழங்கியதை சற்றும் எதிர்பாராத சரளா, “என்னங்க?” அதிர, அவர் மனைவியை பார்த்த பார்வையில் சரளா தற்காலிகமாய் தன் அதிருப்தியை வெளிப்படுத்தாது நிறுத்திக்கொண்டார்.

“புள்ளைங்களுக்கு புடிச்ச போண்டா போடு போ. அப்படியே ராத்திரிக்கு வெங்காய தோசை வார்த்து தக்காளி சட்னி அரைச்சிடு.” என்றபடி எழுந்தவர் மகளை வாஞ்சையுடன் பார்த்துவிட்டு தன் வேலையை பார்க்கக் கிளம்பினார். பின்னோடு வழியனுப்ப வந்த சரளா கணவர் வண்டியை கிளப்ப விடாது,

“எதுக்கு தேவையில்லாம வார்த்தை விடுறீங்க? காலம் கெட்டுக்கிடக்கு இதுக்கு மேலையும் இவளை வெளில அனுப்புறது எல்லாம் சரிவராது. கடமைக்கு ஒரு டிகிரி படிக்க வச்சாச்சு…” என்றவரை இடைமறித்த கபிலன், 

“படிக்கத் தானே ஆசைப்படுறா. படிப்பு வேலைனு யோசனை போச்சுன்னா தேவையில்லாத ஆணி மேல எல்லாம் நாட்டம் போகாது. மேல படிக்கும் போதே கல்யாணம் பண்ணிடுவோம். அதுவரைக்கும் தேவையில்லாம அவ இருக்கும் போது இப்படி வார்த்தையை விட்டு அவ மனசுல எதையாவது வளர விட்டுறாத. வயசு பொண்ணு. கவனமா பேசணும்.” என்று அழுத்தமாய் சொல்ல, ஒருமித்தமாய் இருந்த கணவன் மனைவியின் எண்ணம் அங்கு வெளிப்பட்ட விதம் ஒன்றுக்கு ஒன்று முரணாய் நின்றது.

“நானும் அதுதான் சொல்றேன். வயசு பொண்ணு அவ கேக்குற எல்லாத்துக்கும் தலையாட்டுனா ஏதாவது ஏடாகூடமாயிட போகுது.” என்று தன் பிடியில் உறுதியாய் நின்றார் சரளா.

“அதுக்குன்னு உன்னை மாதிரி கண்டிச்சா எல்லாம் சரியாகிடுமா? ஒன்னுமில்லாததை நீ பேச பேச அதுவே அவளை யோசிக்க வைக்கும். அப்புறம் அவனை பார்த்தாதான் என்னனு எண்ணம் வந்துடுச்சுன்னா ஒன்னும் பண்ண முடியாது. போ, போயி அவளுக்கு புடிச்சதா செஞ்சு கொடு. இதை இன்னையோட மறந்துடுவா.” என்று மகள் எண்ணம் அறியாது இவர் ஒரு கணக்கு சொன்னார்.

“என்னவோ போங்க. எனக்கு பயமாவே இருக்கு.”

“உன் அண்ணன் பொண்ணு காதலிச்சு ஓடி போனா என் பொண்ணும் அப்படி இருப்பாளா? அவளை நல்லா வளத்திருகேன்.” கர்வமாகவே வந்தது கபிலனின் வார்த்தைகள். சரளாவுக்கு தன் அண்ணன் மகள் குறித்த அவரின் வார்த்தை பிரயோகம் சுருக்கென்றாலும் எதுவும் பேச முடியாது அமைதியாகிவிட்டார். 

கபிலனும் வேலைக்கு கிளம்பிவிட்டார். நடுத்தர துணிக்கடையில் கணக்கர் வேலை. மகன் ஒரு பிரபல கட்டுமான கம்பெனியில் ஓட்டுநர் வேலை பார்க்கிறான். மகளுக்கு படிப்பு ஏறுவது போல் மகனுக்கு வரவில்லை. படிக்க வேண்டுமே என்று முட்டி மோதி ஒரு டிப்ளமோ முடித்து வைத்திருக்கிறான். தற்சமயம் நடந்த விவரங்கள் ஒன்று விடாமல் அவனுக்கு கடத்தப்பட தங்கையிடம் பேசுகிறேன் என்று சொல்லி அன்னையை அடக்கினான். சொன்னது போல் பேசவும் செய்தான் இரவு வேலை முடித்து வந்தவுடன்.

“என்னாச்சு அம்மா போன்லையே அந்த கத்து கத்துச்சு?” என்று ஒன்றும் தெரியாதது போல் தங்கையிடம் துவங்கினான் வேந்தன்.

ஆனால் விசயம் இன்னதென நீ அறிவாய் என்பதை நான் அறிவேன் என்பதை பார்வையால் உணர்த்திய கல்பனா, “எவ்ளோ நாளைக்கு எல்லாத்துக்கும் நீ வருவ அப்பா வருவாங்கனு உங்களையே எதிர்பார்த்து நான் காத்துட்டு இருக்குறது? டிகிரி முடிக்கப் போறேன் இன்னும் சின்ன பொண்ணு மாதிரியே நடத்துனா எப்படி?”

“அதுக்கும் நீ அவனை கூப்புடுறேனு சொன்னதுக்கும் என்ன சம்பந்தம். பயப்படாதீங்க தனியா வந்துறேன்னு தானே சொல்லி இருக்கணும் நீ?”

தூண்டிலில் பிடிபட்டாலும் நழுவிவிடுவேன் என்ற கணக்காய், “அடுத்த  பஸ்ல பத்திரமா வந்துறேன்னு சொல்றதை நம்பாம இருந்தா என்ன பண்றது நான்?”

“உன்னை நம்பாம இல்லை கல்பனா… ஊருல நடக்குறது கேள்விப்படுறதை எல்லாம் பாத்து பயந்து வருதுல்ல.”

“சும்மா நொண்டி சாக்கு சொல்லாதீங்க. பல்லவி அக்கா விருப்பத்தை மீறி மாமா கல்யாண ஏற்பாடு பண்ணதால அவங்களுக்கு புடிச்ச வாழ்க்கையை தேடிகிட்டு போயிட்டாங்க. ஆனா அதுக்கான பலனை நானும் காயத்ரியும் அனுபவிச்சிட்டு இருக்கோம்.” என்று தன் மாமன் மக்களை இழுக்க வேந்தனின் வாய் ஏனோ அதன்பின் அவ்விசயத்தை பேசவே இல்லை. மூடிக்கொண்டது.

“சரி சரி பார்த்து இருந்துக்கோ. மேல படிக்கப்போறேனு அப்பா சொன்னாங்க. காலேஜ்க்கு அப்ளை பண்ண ஜெராக்ஸ் ஏதாவது எடுக்கணும்னா குடு எடுத்துட்டு வந்து தரேன்.”

“எக்சாம் முடியட்டும் காலேஜ்ல ‌ஃபார்ம் வாங்கிட்டு என்னனென்ன வேணும்னு சொல்றேன்.” என்று பேச்சுக்கள் முடிந்துவிட, தனிமை எப்போது கிடைக்கும் என்று காத்திருந்தாள் கல்பனா. மதியம் அவசர அவசரமாய் கடற்கரையில் இருந்து கிளம்பி வந்தபின் சிகாவிடம் இன்னும் பேசிடவில்லை. வீடு வந்துவிட்டேன் என்று குறுஞ்செய்தி மட்டுமே அனுப்பிவைத்தாள். அதற்கு ஒரு தம்ஸப் பதிலாய் அவனிடமிருந்து. 

தனிமை கிட்டாததால் தன் புத்தகத்தை வைத்துக்கொண்டு அந்த ஒற்றை அறையில் அவள் அமர்ந்து கொள்ள, உண்டுவிட்டு படுக்க வந்த வேந்தன் கையில் புத்தகத்தோடு அமர்ந்திருப்பவளை கண்டு தன்னுடைய தலையணையை எடுத்துக்கொண்டு ஹாலில் சென்று படுத்துக்கொண்டான். அவன் செயலில் குற்றவுணர்வு எழுந்தாலும் நேசம் கொண்ட மனது கள்ளத்தனத்தை சரியென்று வாதிட்டது. கொஞ்ச நேரம் புத்தகத்தை பார்ப்பதும் பின் யாரும் அறியா வண்ணம் போனை பார்ப்பதுமாய் இருக்க எந்த செய்தியும் வந்தபாடில்லை சிகாவிடமிருந்து. 

தினம் எல்லாம் இதுபோல் அவன் செய்திக்கு காத்திருப்பவள் அல்ல அவள். அவனும் அதை விரும்பமாட்டான். படிக்க வேண்டிய நேரத்தில் படிக்க வேண்டும் என்பதில் இருவருமே தெளிவாய் இருந்தனர். இன்று சரளா வீட்டில் பேசியதையும் மேலே படிக்க ஒப்புதல் கிடைத்ததையும் அவனுக்கு பகிரவே ஆவலும் ஐயமும் கொண்டது மனது. அவளது காத்திருப்பை உணர்ந்தது போல் வந்து விழுந்தது செய்தி. அரிசி மூட்டை லோட் வருவதால் இரவு வேலை முடித்து வர தாமதமாகும் என்று தகவல் அனுப்பி இருந்தான் சிகாமணி.

அதை பார்த்ததும் சுணங்கிய மனதை இழுத்துப்பிடித்தவள் அதற்கு மேல் படிக்கப் பிடிக்காது புத்தகத்தை மூடி வைத்து படுத்துவிட்டாள். சற்று நேரத்தில் சரளாவும் அவளருகில் படுக்கும் அரவம் கேட்க கண்களை இறுக மூடிக்கொண்டாள். விழித்திருந்தால் பேச்சு கொடுப்பார். சிகா பற்றி விசாரித்தாலும் விசாரிப்பார் என்ற ஐயம். அவள் எண்ணம் மெய் என்பது போல் என்றுமில்லாமல் இன்று ஏன் அவன் எண்ணம் வந்தது என்று கல்பனாவிடம் கேட்கும் முடிவில் தான் இருந்தார். அவள் உறங்கவும் பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்று உறங்கிவிட்டார்.

Advertisement