Advertisement

“இதை நான் நிறையா முறை சொல்லியிருக்கேன், ஒருத்தரை மனசார விரும்பி அவங்க திரும்ப நமக்கு கிடைக்கவே மாட்டாங்கன்னு தெரியும் போது வர விரக்தி வாழ்க்கையை வெறுக்க வச்சிரும். அது என்னை சார்ந்தவங்க யாருக்கும் வேணாம்னு தான் சொல்லுவேன். உங்களுக்கு எப்போ தோணுதோ அப்போ தயங்காம முடிவு எடுங்க. என் சப்போர்ட் எப்போதும் உங்களுக்கு இருக்கும்.”

“நாம வாழுறதே அன்புக்காக தானுங்க. அதை நோக்கி போறதுல எந்த தப்பும் இல்லை. இருக்க இடம், மூணு வேலை சாப்பாடு மட்டும் வாழ்க்கைக்கு போதாது அன்பும் வேணும். அதுதான் வாழ்க்கையை நிறைக்கும். நிறைவு வந்தா குழம்பி அலைபாயுற மனசு நிம்மதியாகிடும்.” 

வழக்கம் போல் அவன் பேச்சு அவளை அமைதிப்படுத்த, அமைதியாக அசைபோட்டாள். இரண்டு நாள் கழித்து வழக்கம் போல் மனநல மருத்துவரிடம் அழைத்து சென்றான்.

அவரும் அவள் குழப்பத்தை சரி செய்வதற்கான ஆலோசனைகள் வழங்க, தெளிந்த மனதிற்குள் பல யோசனை. சரளா சொன்னது போல் காயத்ரி அவள் அம்மா வீடு சென்ற மறுநாளே கபிலனும் வேந்தனும் வந்து தங்கள் வீட்டுக்கு அவளை அழைத்து சென்றுவிட்டனர். 

சிகா இருந்திருந்தாலோ இல்லை இன்னொரு மணம் புரிந்திருதாலோ இந்நேரம் உனக்கும் வளையல் போட்டிருக்கலாம் என்று அவ்வப்போது புலம்பினார் சரளா.

கணவன் எப்படிப்பட்டவனாக இருந்தாலும் அவனை வைத்துதான் மனைவியின் மரியாதை மட்டுமல்ல அவள் என்ன உடுத்த வேண்டும், அவள் எந்த விசேஷங்களில் பங்கேற்கலாம், ஆசாபாசங்களை அடக்கி அவளுக்கென என்னனென்ன செய்துகொள்ளலாம் என்பது வரை நிர்ணயம் செய்கிறார்கள் என்பது தெளித்தெளிவாய் புரிந்தது. நாளை இதுவே தன் பிள்ளைக்கும் தொடருமெனில் அதற்கான விடை என்ன என்று தேட ஆரம்பித்தாள்.

அவ்வப்போது உணரும் குழந்தையின் அசைவுகள் நான் வளருகிறேன், என்னையும் கவனி என்றது. குழந்தை அசையும் போதெல்லாம் ஆசையுடன் வீட்டில் பகிர்ந்து கொண்டாள். பொங்கலன்று வேந்தன் காயத்ரியை பார்க்க சென்றுவிட, வீட்டில் எளிமையாக பொங்கல் வைத்து கொண்டாடினார்கள். சரளாவால் அனைத்தையும் இழுத்து போட்டு செய்ய முடியாத காரணத்தால் மகளுடன் இணைந்தே அனைத்து வேலையையும் பார்த்தார்.

“தை பொறந்தா வழி பொறக்கும்னு சொல்வாங்க. உனக்கு ஒரு வழி பொறந்தா நான் நிம்மதியா தூங்குவேன்.” என்றார் சரளா.

“இன்னும் ரெண்டு மாசத்துல தேதி கொடுத்திருக்காங்க கல்பனா, மனசை போட்டு குழப்பிக்காம தெளிவா வச்சிக்கோ. நாங்க இருக்குற வரை நாங்க பாத்துப்போம்.” என்றார் கபிலன்.

அப்போது அவர்களுக்கு அடுத்து என்ற கேள்வி வருகையிலேயே உன்னால் தனியாய் வாழ முடியும் என்றது உள்ளிருந்த கூக்குரல். அது கொடுக்கும் தைரியம் நாளாக நாளாக குறைந்துகொண்டே வந்தது. வேந்தன் காயத்ரியிடம் அலைபேசியில் பேசுவதாகட்டும், விடுமுறை கிடைக்கும் போதெல்லாம் வீட்டில் தங்காது அவளை பார்க்க செல்வதாகட்டும் அவனையும் அறியாமல் துணையின் அருகாமைக்கு தங்கையை ஏங்க வைத்திருந்தான் அவன்.

கடையில் அவளை நன்றாகவே பார்த்துக்கொண்டான் அருண். கிடைக்கும் நேரத்தில் அவள் மனதை தெளிய வைக்க அவனால் ஆன முயற்சியை எடுத்தான். கடைக்கு செல்ல வேண்டாம் என்று வீட்டினர் முதற்கொண்டு அருண் வரை சொல்லிப்பார்த்தாயிற்று அவள் கேட்பதாய் இல்லை.

“இங்க வந்தா நிம்மதியா இருக்கேன் அது பொறுக்கலையா உங்களுக்கு?” என்று அருணிடம் பாய்ந்தாள். ஆம், அமைதியாய் சொல்வது போய் தோழமை கூட்டுக்குள் வந்தவுடன் அவள் பேச்சுக்களில் உரிமை தானாய் வந்தது. 

“இன்னமும் வீட்ல போர்ஸ் பண்றங்களா?” பதிலுக்கு அமைதியாகவே கேட்டான் அருண்.

இல்லை என்று மறுத்தவளுக்கு தன் எதிர்பார்ப்பின் மீது கோபம் வந்தது. இத்தனை மாதங்கள் அத்தான் அத்தான் என்று சிகாவை நினைத்து உருகிவிட்டு இப்போது தோல் சாய அருகாமை தேடுகிறது மனம். அனைத்திற்கும் வேந்தனை காரணமாக்கி மனதிற்குள் புகைந்தவள்,

“நான் எங்க வீட்டுக்கு போறேன்.” என்று வந்து நின்றாள்.

“இது யார் வீடு அப்போ?” என்று அழுத்தமாய் கேட்டான் வேந்தன்.

பதிலேதும் சொல்லாமல் அவள் உறுத்து விழிக்க, “அம்மா ஏதாவது சொன்னாளா?” என்றுதான் கேட்டார் கபிலன்.

சரளா இப்போது முறைக்க, இல்லை என்று தலையாட்டியவள் எதுவும் சொல்ல முடியாது அறைக்குள் சென்றாள். ஒரு மாதமாக வேந்தனின் அறை மீண்டும் வீட்டு பெண்களின் வசம். மாசமா இருக்குற பொண்ணு நினைச்ச நேரம் ஹால்ல படுக்க சிரமப்படும் என்று கபிலன் யோசிக்கும் போதே, காயத்ரியின் அறிவுறுத்தல்படி சரளாவையும் கல்பனாவையும் அறையில் தங்கிக்கொள்ள சொல்லிவிட்டான் வேந்தன். அவன் வெளியே தந்தையுடன் படுத்துவிடுவான். 

பெற்ற வீட்டிலும் குழப்பம் புகுந்த வீடு சென்றாலும் குழப்பம் என்று முடிவெடுக்க முடியாது தடுமாறிய சமயம், வேந்தனும் தந்தையும் பேசியது அவள் காதில் விழுந்தது.

“கல்பனாவுக்கு ஒன்பது மாசம் ஆரம்பிச்சிடுச்சு, முத பிரசவம் எப்போ வேணும்னாலும் வலி எடுக்கும்னு அம்மா சொல்றா. நீ கொஞ்சம் இங்கேயே இரேன்.” 

மாமனார் வீட்டிற்கு செல்லும் அவன் வழக்கம் அதிகரித்திருக்க, மகளுக்கு ஒன்றென்றால் எடுத்து செய்ய இவன் இருக்க வேண்டுமே என்ற எண்ணத்தில் அவர் கேட்க,

“காயத்ரிக்கும் இது ஒன்பதாவது மாசம் அப்பா. கல்பனாவுக்கு கொடுத்திருக்கிறதுக்கு ஒரு வாரம் முன்னாடி தேதி கொடுத்திருக்காங்க. அங்க பார்த்துட்டு வந்துறேன், அதுவரை சமாளிச்சிக்கோங்க.” என்றான் அவன்.

அதை கேட்ட கல்பனாவுக்கு சுருக்கென்றது. தன் குடும்பத்திற்கு பிறகுதான் உன்னை பார்ப்பார்கள், அவரவர்களது குடும்பம்தான் முதலில் என்று எத்தனையோ முறை அவள் காதில் ஓதியிருக்கிறார்கள். அப்போதெல்லாம் புரியாதது இப்போது புரிவது போலிருந்தது. தன்னையோ தன் குழந்தையோ முன்னிறுத்த உரியவன் இல்லையென்பதால் அனைவருக்கும் தாங்கள் இரண்டாம் பட்சமாகிவிட்டோமோ என்று கலங்கி நிற்க, அவள் வயிற்றை உதைத்தது குழந்தை. 

‘என்னை மாதிரி உன்னையும் இரண்டாம் பட்சமா பார்க்க நான் ஒத்துக்க மாட்டேன் தங்கம்.’ என்று குழந்தையிடம் சொல்ல, அவளை கவனித்த வேந்தன்,

“காயத்ரிக்கு சீக்கிரம் வலி வந்துடும்னு அத்தை சொல்றாங்க. நான் போயிட்டு வந்துறேன். எதுனாலும் எனக்கு கூப்பிடு.” என்றவன் அன்றிரவே கிளம்பிவிட்டான். 

அடுத்து பண பிரச்சனை வந்தது. பிரசவம் அறுவை சிகிச்சையில் முடியும் சமயத்தில் பணம் தேவைப்படும். அதற்கு என்ன செய்யலாம் என்று அவர்கள் யோசிக்கும் போதே, அவளுக்கென்று சேர்த்து வைத்திருக்கும் நகையை விற்க சொல்லிவிட்டாள்.

“அது உன்னோடது கல்பனா. அதெல்லாம் அடகு வைக்க வேண்டாம். ரெடி பண்ணிடலாம், வேந்தன்கிட்ட சொல்லி இருக்கேன்.” என்று மறுத்த கபிலன் மனைவியின் ஒற்றை செயினை கேட்க,

“யாரோடதும் விக்க வேண்டாம் அப்பா. கவர்மெண்ட் ஹாஸ்பிடல்ல பாத்துக்கலாம்.” என்று முடித்துக்கொண்டாள்.

“அங்கன்னா ஒரு வாரம் கழிச்சிதான் வீட்டுக்கு அனுப்புவாங்கலாம், ஒரு வாரமெல்லாம் அலைஞ்சு தங்கி அம்மாவால உன்னை பாத்துக்க முடியாது. இப்போ காமிக்குற ஹாஸ்பிடலிலேயே டெலிவரி பாத்துக்கலாம்னு வேந்தன் சொன்னான்.” என்று மகனை காரணம் காட்டினார் கபிலன்.

தாங்கள் எல்லாருக்கும் பாரமாய் இருக்கிறோம் என்ற உணர்வு மேலோங்கிய சமயம் அது. விடாது வேலைக்கு செல்ல,

“இனி குழந்தை பொறந்து நடக்க ஆரம்பிச்ச அப்புறம் வந்தா போதும்.” என்று கறார் காட்டினான் அருண். 

“எங்க செலவை பார்த்துக்கவாவது நான் இங்க வந்துதான் ஆகணும்.” என்றாள் பிடிவாதமாய்.

“ரொம்ப பிடிவாதம் கல்பனா. இந்த சமயத்துல நீங்க வந்தாலும் நான் சம்பளம் தரமாட்டேன். ஒழுங்கா போய் ரெஸ்ட் எடுங்க.” கண்டிப்பு காட்டி அனுப்பி வைத்த மறுநாள் மாத சம்பளத்தை அவள் அக்கவுண்டில் போட்டு விட்டு அவளுக்கு அழைக்க, அவள் ஏற்காமல் துண்டித்தாள்.

அன்றைய நாள் முழுதும் ஐந்தாறு முறை அழைத்தும் எடுக்காமல் போக, வேண்டுமென்றே அழைப்பை துண்டிக்கிறாள் என்று புரிந்துகொண்ட அருண் ‘இந்த பொண்ணுக்கு திடீர்னு என்ன ஆச்சு, ஏன் இப்படி நடந்துக்குறா’ என்ற அவன் எண்ணத்திற்கு தோதாய் அவளும் யோசித்துக் கொண்டிருந்தாள். 

‘எங்கிருந்து வந்தது இந்த பிடிவாதம், என் மனம் என்ன விழைகிறது? நான் என்ன எதிர்பார்க்கிறேன்.’ என்று குழம்பிய சமயம் இடுப்பு வலிப்பது போன்றிருந்தது.

இரு கைகொண்டு இடுப்பை பிடித்துவிட்டவள், அங்குமிங்கும் நடந்தாள். 

“என்னடி பண்ணுது?” என்று கவனித்து அருகே வந்த சரளாவுக்கு பயம் பிடித்துக்கொண்டது.

சொன்ன தேதிக்கு இன்னும் இருபது நாளிருக்க, வலி வந்திருக்குமோ என்று விசாரித்து கஷாயம் வைத்து கொடுத்துப் பார்க்க, கொஞ்ச நேரம் மட்டுப்பட்ட வலி மீண்டும் வலிக்கையில் அதிகமாகியது.

பதறிய சரளா கணவருக்கு அழைத்து சொல்ல, அவர் அரை மணி நேரத்தில் கிளம்பி வந்துவிடுகிறேன் என்றார். மகனுக்கு அழைத்தால் அவன் வர குறைந்தது இரண்டு மணி நேரமாகும் என்றான். அடுத்து தேவிக்கு அழைக்க,

“நீ இப்படியே ஒவ்வொருத்தருக்கா போன் பண்ணிட்டு இரு.” என்று வலியில் கத்திய கல்பனா வயிற்றை பிடித்துக்கொண்டு தானே பர்ஸை எடுத்துக்கொண்டு வெளியேற, ஓடிவந்து அவளை பிடித்து நிறுத்தினார் சரளா.

“ஆட்டோ கூப்பிடுறேன் இருடி.” 

அப்படியே வாயில் படியில் அமர்ந்துவிட்டாள் கல்பனா. உயிர் வரை சென்று தாக்கும் வலி தேவையில்லாத சிந்தனையையும் வரவைத்தது. வலிக்கும் வயிற்றை தாங்கி பிடித்திருந்த தன் கையை பார்த்தாள், சிகா நினைப்பு வராமல் இல்லை. அவன் இருந்தால் இந்நேரம் என்னை தனியாய் தவிக்க விட்டிருக்க மாட்டான் என்று வெம்பியது.

அவன் இருந்திருந்தாலும் அவளுக்கு வலி வரும் நேரம் உடன் இருந்திருப்பானா என்பது சந்தேகம்தான். ஆனால் தகவல் கிடைத்தவுடன் ஓடி வந்திருப்பான் என்பது திண்ணம். திரும்பி வர முடியாத இடத்திற்கு சென்றதாலேயே அவனை அதிகம் தேடினாள். 

ஆட்டோ சற்று நேரத்திற்கெல்லாம் வந்துவிட, ஏறிக்கொண்டார்கள். 

“இந்த தேவி இன்னைக்குன்னு பாத்து மருமவ கூட ஜோடி போட்டு பேத்தி ஸ்கூலுக்கு போயிருக்கலாம். சொல்லிட்டேன். முடிஞ்சளவு சீக்கிரம் வந்துறேன்னு சொன்னா.”

பற்களுக்கிடையில் சிக்கிக்கொண்டு திணறும் அவள் உதடுகள் போல் மனமும் திணறியது. ஒரு கரத்தால் வயிறை பிடித்துக்கொண்டவள் மற்றொரு கரத்தை சரளாவின் கரத்தோடு கோர்த்து அவர் தோளில் சாய்த்துக்கொண்டாள்.

வலி பொறுக்க முடியாது அழுகிறாள் என்று நினைத்து மகள் முகத்தை துடைத்துவிட்டபடி அவர் இருக்க, அவளோ தங்களிடம் இல்லாத ஒன்றை ஏங்கி அழுதாள். அம்மாவை விட்டால் தனக்கு நாதி இல்லை, நாளை அம்மாவும் இல்லையென்றால் என்ன செய்வேன், குழந்தையை எப்படி வளர்ப்பேன், எனக்கே ஏதாவது ஆகிவிட்டால் என் குழந்தையை யார் பார்ப்பார்கள் என்று கற்பனை குதிரை தறிகெட்டு ஓட, மருத்துவமனை வந்ததும் கைத்தாங்கலாக அவளை கீழிறக்கினார் சரளா.

உடனே அவள் முன் ஒரு வீல்சேர் வந்தது. மெல்ல ஏறி அதில் அமர்ந்துகொள்ள,

“ஒன்னுமாகாது, நீங்களும் குழந்தையும் நல்லபடியா திரும்ப வாங்க. நாங்க இருக்கோம்.” என்ற ஆதரவான குரலை அவள் அந்நேரம் எதிர்பாராத மனிதனிடமிருந்து கேட்க, மனதின் அலைப்புறுதலுக்கு முற்று கிடைத்த நிம்மதி.

‘நாங்க இருக்கோம்.’ இதைத்தானே அவள் எதிர்பார்த்தாள். அவளின் பொறுப்பை யார் ஏற்பது என்று பேசினார்களே ஒழிய, அவள் மனதுக்கு மருந்தாய், ஆதரவாய், துணையாய் இருப்பதை பற்றி ஒருவரும் பேசவில்லையே. கடமையை செய்துவிடுவோம் என்றவர்கள் உன் வாழ்க்கைக்கு உறுதுணையாய் இருப்போம் என்று எங்கேயும் வெளிப்படுத்தவில்லையே. ஆக, தன் துணையைத் தவிர மற்றையவர்களுக்கு தான் பாரம் மட்டுமல்ல தேவையற்ற செலவீனமாகவும் பார்க்கப்பட்டிருக்கிறோம் என்றெல்லம் தோன்ற, அதற்கு மேல் அவள் இருக்கும் இடம் பற்றி கூட யோசிக்கவில்லை.

“கடைசி வரை கூடவே இருப்பேன்னு சொன்ன அத்தான் என்னை உங்க பொறுப்புல விட்டுட்டு போன மாதிரி, நீங்க போக மாடீங்கள்ல?” அழுகுரலில் நிமிர்ந்து அருணை பார்த்து கேட்க, 

அந்த நேர பதட்டத்தில் அவள் கேட்ட தொனியும் கேள்விக்கு பின்னிருக்கும் விஷயமும் புரிபடவில்லை அவனுக்கு.

“கண்டிப்பா இருப்பேன்.” என்று வாக்கு கொடுத்து அவளை மருத்துவரிடம் அழைத்துச் சென்ற அரை மணி நேரத்திலேயே குழந்தை பிறந்துவிட்டது. தேவி தான் அவனுக்கு அழைத்து சொல்லி இருந்தார். உதவ யாருமில்லை கொஞ்சம் ஒத்தாசையாக இருக்க முடியுமா என்று அழைத்த நிமிடமே கடையை பூட்டிக்கொண்டு மருத்துவமனை வந்துவிட்டான்.

பனிக்குடத்தில் தண்ணீர் குறைந்துவிட்டது உடனே அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர் சொல்லிவிட, பதறிய சரளா மீண்டும் மீண்டும் கணவரை அழைக்க, அவரை தேற்றி பணம் கட்டுவது, மருத்துவ உபகரணங்கள் வாங்கி கொடுப்பது என்று அருணே எல்லாவற்றையும் முன்னின்று பார்த்துக்கொண்டான். 

சுத்தம் செய்து குழந்தையை எடுத்து வந்து சரளாவிடம் கொடுக்க, பஞ்சு போல் மெதுமெத்துவென இளஞ்சிவப்பு நிறத்தில் கை கால்களை குறுக்கி வைத்துக்கொண்டு கண்களை மூடியிருந்தான் சிகாவின் மைந்தன். எட்டிப்பார்த்த அருண் இனம்புரியாத படபடப்பை உணர்ந்தான். 

சிகாவே வந்துவிட்ட திருப்தி அவன் மனதை நிறைக்க, குழந்தையை வாங்க கை பரபரத்தது. இதுவரை பார்த்து உணர்ந்திராத மாசுமருவற்ற பச்சிளம் பிஞ்சின் ஸ்பரிசத்தை உணர உந்தியது மனம். ஏக்கமும் ஆவலும் போட்டிப்போட கைகளை சரளா முன் நீட்டிவிட்டான்.

பேரனை பார்த்த மகிழ்ச்சியில் திளைத்த சரளா ஒரு நொடி யோசித்து பின் அருண் கையில் கொடுத்தார். குழந்தையை வாங்கும் போது நடுங்கிய கரங்கள் குழந்தையை கைகளில் ஏந்தியபின் இறுக பற்றிக்கொண்டது. கை மாறியதும் தன் மொச்சை விழிகளை விரித்து அருணை நன்றாக பார்த்து, அவன் நெஞ்சில் ஒரு உதை விட, அவன் உணர்ந்த பரவசத்துக்கான அளவாய் விழிகளில் நீர் திரண்டு கண்களை நிறைத்தது. 

சிகாவை கண் எதிரே பலிகொடுத்தது போல் உன்னை விட்டுவிட மாட்டேன், உனக்காக என்னவும் செய்வேன் என்று அரற்றியது மனம். கைகள் தன்னால் பிள்ளையை நெஞ்சோடு இறுக்கிக்கொண்டது.

Advertisement