Advertisement

*13*

“எதுக்கு இங்க வந்திருக்கோம்? யாருக்கு என்ன ஆச்சு?” குழப்ப ரேகைகள் அவள் முகத்தினில் படிய, அவளை கலவரப்படுத்த விரும்பாதவன்,

“நீங்க ரொம்ப குழப்பத்துல இருக்கீங்க. மனசுல இருக்குற குழப்பத்தை இறக்கி வச்சா தெளிவு கிடைக்கும். டாக்டர் கிட்ட பேசி பாருங்க.” என்ற அருணை விழி விரித்து பார்த்தாள் கல்பனா.

அவர்கள் வர வேண்டிய இடமும் வந்துவிட, அங்கிருந்த காத்திருப்பு இருக்கையில் அமர சொன்னவன் ஒரு இருக்கை இடைவெளி விட்டு தள்ளி அமர்ந்தான்.

“இதெல்லாம் வேண்டாம். நான்… நான் நல்லா இருக்கேன்.” அங்கிருந்த மனநல மருத்துவர் பதாகையை பார்த்ததும் தடுமாற்றம் பெண்ணுள்.

“இருக்கட்டுங்க, சும்மா பேசி பாருங்க. தெளிவு கிடைக்கும்.” 

“இல்லை இல்லை, வேண்டாம். எனக்கு ஒன்னுமில்லை.” பதட்டத்துடன் அவள் கைப்பையின் ஸ்லிங்கை விரலுக்குள் சுற்றுவதுமாய் பிரிப்பதுமாய் அவனை ஏறிட்டாள்.

“உடம்புக்கு சரியில்லைன்னா டாக்டரை பாக்குற மாதிரிதான் இதுவும். மனசு சரியில்லை அதனால வந்திருக்கோம், வேற எதுவும் யோசிக்காதீங்க.” அவளை அமைதிப்படுத்த பார்த்த அருணுக்கு தோல்வியே மிஞ்சியது.

அவன் மீதிருந்த நம்பிக்கையில் மறுத்துப்பார்த்தவள் அவன் விடுவதாய் இல்லை என்று தெரிந்ததும் சட்டென எழுந்துகொண்டாள்.

“நான், நான் கிளம்புறேன். எனக்கு ஒண்ணுமில்லை.” என்று பாதங்களை எட்ட வைத்து நடக்க, அதிர்ந்த அருண் வேகமாய் அவளை நெருங்கி கைபிடித்து நிறுத்தினான்.

“என் மேல நம்பிக்கை இருக்கப்போயி தான வந்தீங்க, அதை காப்பாத்துவேன். அன்னைக்கு சொன்ன மாதிரி பாதில விட்டுட்டு போகமாட்டேன். வாங்க.” 

என்ன சொல்கிறான் என்று அவள் புருவம் சுருக்கினாள். இருந்த பதட்டத்தில் அன்றொரு நாள் ‘என்னை நம்பாதீர்கள் நீங்க எதிர்பாராத நேரம் விட்டாலும் விட்ட்டுவிடுவேன்’ என்று அவன் சொன்னதெல்லாம் நினைவுக்கு வரவில்லை. அவனும் அதை நினைவுபடுத்த விரும்பாது,

“இந்த டாக்டரை பாக்குறதால உங்களுக்கு ஏதோ பெருசா மனநல பாதிப்போ பைத்தியமோனு அர்த்தமில்லை. நம்மளை ஒரு விஷயம் அழுத்துது, அதுலேந்து எப்படி வெளில வர்றதுனு புரியாம நிக்கிறப்போ வழிகாட்டுறவங்க இவங்க. நம்மள சுத்தி இருக்குறவங்ககிட்ட மனசுவிட்டு பேசுறதுக்கான சூழல் இல்லாதப்போ இவங்களை நாடி தீர்வு கண்டுபிடிக்கிறது ஒன்னும் தப்பான விஷயமில்லை.” என்று அவனுக்கு தெரிந்த வகையில் சமாதானமாய் பேசினான்.

அவன் பேச்சின் சாராம்சம் அவளை சாந்தப்படுத்தினாலும் படபடத்த அவள் இதயம் தன் வேகத்தை குறைத்துக்கொள்ளவே இல்லை. கையை விட்டால் சென்றுவிடுவாள் என்று பயந்தானோ என்னவோ பிடித்த கையை விடாது அவள் குழப்பமாக இருக்கும் போதே இருக்கைக்கு அழைத்து வந்து அமர வைத்தான்.

“உங்க மனசு நிம்மதியா இருந்தாதான் குழந்தையும் நல்லா வளருமாம். நான் விசாரிச்சேன், இனி நீங்க உணர்ற எல்லாத்தையும் குழந்தையும் உணர்ந்து அனுபவிக்கும். அதுக்காகவாது இந்த ஒருதடவை டாக்டரை பாருங்க.” அவன் தளர்ந்து பேசவும் செவிலியர் அவள் பெயரை அழைக்கவும் சரியாய் இருந்தது.  

அருண் எழுந்து நின்று கல்பனாவை பார்க்க, அவள் கலக்கத்துடன் அமர்ந்தே இருந்தாள். அருண் வேண்டுமென்றால் அவளுக்காக அமைதியாக நிற்பான் செவிலியர் இருப்பாரா? மருத்துவரை பார்க்க விருப்பமில்லையென்றால் அடுத்து உள்ளவரை உள்ளே அனுப்பிவிடுவேன் என்றதும் விழிகளை நாலாபுறமும் சுழற்றியபடி எழுந்தாள் கல்பனா. அருண் முன்னே நடக்க, அவனை பின் தொடர்ந்தவள் மருத்துவர் எதிரே இருந்த இருக்கையில் அமர்ந்தாள். அருண் அவள் பின் நன்றவாரே கல்பனாவுடைய தோழன் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டான்.

எதிரில் இருப்பவரை சிநேகமாய் பார்த்தபடி அவர்கள் சொல்வதை கேட்டுக்கொண்டிருந்தாலும் அந்த மருத்துவருடைய கூர் விழிகள் கல்பனாவின் சின்ன அசைவுகளையும் கவனித்து சேகரித்துக்கொண்டது.

“எத்தனை மாசம் மா?” 

“இன்னும் ரெண்டு நாள்ல ஆறு மாசம் ஆரம்பிச்சிடும்.” சின்ன குரலில் கல்பனா பதில் சொல்ல, மருத்துவர் அருணை ஏறிட்டு பார்த்து,

“உக்காருங்க.”

“பரவாயில்லை டாக்டர், அவங்களுக்கு என்னனு பாத்து சொன்னா கொஞ்சம் நிம்மதியா இருக்கும். நான் வேணும்னா வெளில நிக்குறேன்.” என்றான் கல்பனாவை பார்த்துக்கொண்டே. மருத்துவர் லேசாக தலையசைக்க அருண் வெளியேறி அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்துகொண்டான்.

முதலில் குழந்தையின் வளர்ச்சி பற்றி பொதுவாக விசாரித்து தெரிந்துகொண்ட மருத்துவர் மெல்ல பேச்சு கொடுத்து அவளை இயல்பாக்கி, அவள் வாழ்வில் நடப்பவைகளை தெரிந்துகொண்டார். 

“சோ, உங்களுக்கு இன்னொரு கல்யாணம் பண்ணிக்குறதுல இஷ்டம் இல்லை, ஆனா எல்லாரும் அதை வலியுறுத்துறாங்க ரைட்?” என்று கேட்டு குறிப்பு எடுத்துக்கொண்டார்.

“ஆளாளுக்கு பேசுறதை பார்த்தா எல்லாருக்கும் நாங்க தொந்தரவா இருக்கோம்னு சொல்லாம சொல்ற மாதிரி இருக்கு.” என்று வருந்தி சோர்வாய் சொன்னவளிடம் தண்ணீர் கிளாஸை நீட்டினார்.

ஒரு மிடறு அருந்தியவள் கலக்கமாய் மருத்துவரை பார்க்க, “உங்க மேல உள்ள அக்கறையா கூட இருக்கலாமே, நீங்க ஏன் தொந்தரவுனு நினைக்கறீங்க?” என்று கேட்டார் அவர்.

“பொண்ணா என்னால தனியா எதையும் பேஸ் பண்ண முடியாதுன்னு அவங்களா முடிவு பண்ணிட்டு என்னை நெருக்குறதை நான் வேற என்னனு சொல்றது.”

“இங்க பொண்ணு பையன்னு மாறுபாடு எல்லாம் கிடையாதுமா. சொல்லப்போனா ஆம்பளையா இருந்திருந்தா இந்நேரத்துக்கு அவருக்கு இன்னொரு கல்யாணம் பண்ணி வச்சிருப்பாங்க. நீங்க சொல்ற மாதிரி வேலைக்கு போய் சம்பாதிச்சு குடும்பத்தை பாத்துகிற ஆம்பிளைங்களாலையும் தனியா வாழ்க்கையை வாழ முடியாதுனு இந்த சமுதாயம் நம்புது.”

“சமுதாயம் நம்புதுங்குறதுக்காக என்னால மனசை மாத்திக்க முடியல மேம்.”

“நீங்க, நான், உங்க கூட வந்தாரே அவரு, உங்க குடும்பம் இவங்க எல்லாரும்தான் சமூகம். எல்லாரும் ஒரு விஷயத்தை வலியுறுத்துறதால அந்த விஷயம் சரியானதா தான் இருக்கும்னு இல்லை, அதே சமயம் அதை முழுசா ஒதுக்கவும் முடியாது. ஏன்னா நாளைக்கு இவங்க மத்தியில தான் வாழ போறீங்க.” என்ன சொல்ல வருகிறார் என்று கல்பனா அவரையே உற்று நோக்கி பார்க்க, மெலிதாய் புன்னகைத்தவர்,

“சரி சொல்லுங்க, மறுமணம் வேண்டாம்னு நீங்க முடிவெடுத்ததுக்கு பின்னாடி என்ன காரணம்? உங்க கணவரை மறக்க முடியாதுன்னா இல்லை பழைய காலம் மாதிரி வாழ்க்கையில ஒருதடவை தான் கல்யாணம். அது முடிஞ்சிடுச்சு, இனி ஒருதரம் அப்படி ஒன்னு வேண்டவே வேண்டாம்னு நினைக்குறீங்களா?” என்று கேட்க, 

“அத்தான் இடத்துல வேற யாரையும் என்னால நினைச்சி கூட பார்க்க முடியாது மேம்,” அவசரமாய் வந்தது கல்பனாவின் பதில்.

“ரிலாக்ஸ். யார் வந்தாலும் போனாலும் எந்த நேரத்திலேயும் உங்களோட வாழ்க்கையில உங்க அத்தானோட இடத்தை யாராலயும் மாத்தவும் முடியாது, அழிக்கவும் முடியாது.” என்று ஆதரவாய் பேசவும், பதட்டம் குறைந்து தளர்ந்து இருக்கையில் சாய்ந்தாள் கல்பனா.

“உங்களோட வைட்டல்ஸ் எல்லாம் எப்படினு எனக்கு தெரில. சோ அடுத்த முறை வரும்போது ரிப்போர்ட்ஸ் எல்லாம் எடுத்துட்டு வாங்க.”

“திரும்பவும் வரணுமா?” அவளையும் மீறி அதிர்ச்சியாய் கேட்டிருந்தாள் கல்பனா.

மெல்ல சிரித்துக்கொண்டவர், “இப்போதான உங்க பிரச்சனை பத்தி சொல்லி இருக்கீங்க. அதை எப்படி சரி பண்றதுனு பாக்கணும்ல. இந்த நேரத்துல மனசும் உடம்பும் இலகுவா இருக்கனும். இவ்ளோ டென்சன் ஆகாது. ரொம்ப யோசிக்காதீங்க, உங்களுக்கே ஒரு தெளிவு வரவரைக்கும் யார் சொல்றதையும் மண்டையில ஏத்திக்காதீங்க. தினம் காலை அண்ட் இரவு தியானம் பண்ணுங்க, ஒரே இடத்துல உக்காந்திருக்கமா கொஞ்சம் நடந்து ஆக்டிவா இருங்க. வெளில போங்க, உங்களுக்கு புடிச்ச விஷயத்துல மனசை செலுத்துங்க. எது உங்களை அழுத்துனாலும் உங்க பிரெண்ட்ஸ் கிட்ட ஷேர் பண்ணுங்க. நெக்ஸ்ட் டைம் பாக்கலாம்.” என்றவர் அடுத்து எப்போது வர வேண்டும் என்று அவளுக்கான அட்டையில் எழுதிக்கொடுத்தார்.  

“கண்ணுக்கு கீழ கருவளையம் இருக்கு, அடுத்த முறை வரும் போது அது குறைஞ்சிருக்கணும்.” இதழ்களை சிரிப்பில் விரிந்திருந்தாலும் அந்த மருத்துவர் குரலில் அழுத்தமும் கண்டிப்பும் இருந்தது. 

வெளியே இருந்த அருணை அழைத்து பரிந்துரைத்த வழிகாட்டுதல்களை ஒருமுறை அவனிடமும் சொன்னார். உன்னிப்பாய் கேட்டுக்கொண்டவன் மருத்துவர் பீஸ் கட்டிவிட்டு அவளிடம் வர,

“டாக்டர் பீஸ் எவ்ளோ?” என்று கேட்டபடியே பர்ஸிலிருந்து அவள் பணம் எடுக்க, அவள் பர்ஸை திறக்க விடாமல் பிடித்தவன்,

“என் பிரெண்டுக்கு நான் கொடுக்குறேன், இதுக்கெல்லாம் கணக்கு பாக்க கூடாது.” என்று மலர்ந்த முகமாய் அவன் சொல்ல, விழி விரித்தாள் பாவை.

“டாக்டர் சொன்னதை கேட்டீங்கள்ல எந்த நேரம் எது உங்களை தொந்தரவு பண்ணாலும் நீங்க தயங்காம எங்கிட்ட சொல்லணும்.” என்று உரிமையாய் கேட்டுக்கொண்டான்.

“நீங்க ஏன் இதெல்லாம் செய்றீங்க?” அவள் சந்தேகமாய் பார்க்க, 

“நம்மோட எல்லா உணர்வையும் ஷேர் பண்ணிக்க யாராவது ஒருத்தர் நமக்கே நமக்குன்னு வேணும்னு சொன்னேனே, அது துணையா மட்டும்தான் இருக்கணும்னு இல்லை. பிரெண்டாவும் இருக்கலாம்.” அவன் இலகுவாய் சொல்ல, புன்னகை மெல்ல எட்டிப்பார்த்தது கல்பனாவின் இதழ்களில். 

“வந்தப்போ இருந்ததை விட இப்போ நல்லா பீல் பண்றேன்.” என்றாள் புன்னகை முகம் மாறாமல்.

“புது பிரெண்ட் கிடைச்சிருக்கேன்ல, அப்படிதான் இருக்கும்.” என்று கண்சிமிட்டி சொன்னவன் ஆட்டோ பிடித்து அவளை ஏற்றி விட்டவன், “நீங்க வீட்டுக்கு போங்க நான் அப்படியே கடைக்கு போறேன்.” என்று வெளியே இருந்தபடியே சொல்ல, மறுப்பை காட்டினாள் கல்பனா.

“இப்போ இருக்குற அமைதி வீட்டுக்கு போனா கிடக்குமான்னு தெரில, நாம கடைக்கே போலாமே.”

புரிந்து கொண்டவன் ஓட்டுனருடன் அமர்ந்துகொண்டு கடைக்கு அழைத்து சென்றான். அன்று இரவு ஏழு மணி வரை கடையிலேயே இருந்தாள் கல்பனா. எப்போதும் ஆறு மணிக்குள் வீட்டிற்கு வந்துவிடும் மருமகள் வீடு திரும்பவில்லை என்றதும் அழைப்பு விடுத்து விசாரித்தார் தேவி. கடையில் கூட்டம் அதிகம் இருக்கிறது என்று காரணம் சொல்லி அவரை சமாளிக்க, அனைத்தையும் கவனித்தபடி இருந்தான் அருண். 

வீட்டின் சூழல் அவளுக்கு இதமளிக்கவில்லை என்பதை விழிகளை சுற்றி வட்டமிட்டிருக்கும் கருமையே எடுத்துக்காட்டியிருக்க, எங்கிருந்தால் அவள் மனம் இலகுவாய் இருக்குமோ அங்கு இருக்கட்டும். அது அவன் கடையாய் இருக்கும் பட்சத்தில் எந்த தொந்தரவும் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்துகொண்டான் அருண்.

ஒரு நாள் இரண்டு நாள் தாமதமாவது போய் வாரத்தின் இறுதி நாளும் அவள் கடைக்கு கிளம்ப, வழிமறித்தார் தேவி.

“ஞாயிற்றுக்கிழமை கடை லீவாச்சே கல்பனா, வேற எங்கேயாவது போறியா? நான் துணைக்கு வரவா?”

“இந்த வாரத்திலேந்து எல்லா நாளும் கடை உண்டு அத்தை. நான் போயிட்டு வரேன்.” 

“அந்த தம்பிகிட்ட நான் பேசுறேன், நீ லீவு போட்டு ரெஸ்ட் எடு.” என்று சொல்லிப்பார்த்தார் தேவி.

கல்பனா கேட்கவில்லை, அங்கு சென்றாலே மனம் லேசாவது இந்த ஒருவாரத்தில் புரிந்திருக்க, ஓய்வெடுக்கிறேன் என்ற பெயரில் வீட்டிலிருந்து கொண்டு முகம் தூக்கும் சுசீலாவையோ தன்னையே சுற்றி சுற்றி வரும் தேவியின் பார்வையையோ எதிர்கொள்ள விரும்பவில்லை அவள். 

விடுமுறை தினமென்பதால் அவள் வீட்டில் இருப்பாள் என்று எண்ணி மதிய உணவு சமைக்கவில்லை தேவி. 

“மதியம் வெளில வாங்கி சாப்பிடாத, காலையில சுட்ட இட்லி நாலு வச்சி தரவா, எடுத்துட்டு போறியா?” என்று அவர் கேட்க அதற்கும் மறுப்பு அவளிடம்.

“வேண்டாம் அத்தை. இன்னைக்கு ஒரு நாள் வெளில சாப்பிட்டுக்குறேனே, எனக்கும் கொஞ்சம் மாற்றமா இருக்கும்.” என்று சொல்லிச் சென்றவளிடம் ஏதோ மாற்றத்தை உணர்ந்தார் தேவி. என்னவென்று அவரால் கணிக்க முடியவில்லையே தவிர, அவளிடம் மறுப்பும் பிடிவாதமாகும் அதிகமாகி இருப்பது போன்றதொரு பிரம்மை அவருக்கு.

தேவியை சமாளித்து அவள் வீட்டினரையும் சமாளித்து அவள் கடைக்கு வரும் நேரம்தான் அருணும் தன் வண்டியிலிருந்து இறங்கினான்.

“நான் சீக்கிரம் வந்துட்டேனா இல்லை நீங்க லேட்டா?” புன்னகை முகமாய் அவனிடம் கேட்க, அருண் உணர்ந்த ஆசுவாசத்திற்கு அளவே இல்லை. 

அவள் மனநிலையை சுமூகமாக்கும் பொருட்டே ஞாயிற்றுக்கிழமை கடை திறந்திருக்கிறான். இதற்கு முன் வார இறுதி அந்த ஒருநாள் விடுப்பு தினமே. 

“தூங்கிட்டேன் கல்பனா.” அவளுக்கு பதில் கொடுத்தவாறே ஷட்டரை திறந்தான். 

அவன் பின்னோடு உள்ளே நுழைந்த கல்பனா அவளிடத்தில் பையை வைத்துவிட்டு கடையை பார்த்தாள். தூசி படிந்திருந்தது. எப்போதும் காலை அவள் வரும் நேரம் அருணே கடை திறந்து சுத்தம் செய்திருப்பான். இன்று அவன் வர தாமதமானதால் இனிதான் செய்ய வேண்டும். அவன் செய்யட்டும் என்று காத்திராது ஓரத்தில் வைத்திருந்த துடைப்பத்தை எடுத்து அவளே பெருக்க ஆரம்பித்தாள். 

அதுவரை அரிசி மூட்டைகளை ஆராய்ந்தவன் பாய்ந்து வந்து துடைப்பத்தை பிடுங்கினான், “என்ன பண்றீங்க? எல்லாம் நான் பாத்துக்க மாட்டேனா.” என்று கண்டிக்க, அவளும் பதிலுக்கு முறைத்தாள். 

“இந்த சின்ன இடத்தை பெருக்குறதால ஒன்னும் ஆகிடாது. குடுங்க நான் பாத்துக்குறேன்.” என்று அவள் பிடுங்கப்பார்க்க, அவளுக்கு எட்டாதவாறு கையை பின்புறம் மடக்கியவன், 

“மார்கழி குளிருல சில நேரம் அரிசி மூட்டையில் வண்டு புழுக்க ஆரம்பிச்சிடும். எல்லாத்தையும் பார்த்து சரி பண்ணிட்டு சுத்தம் பண்ணிக்கலாம். நீங்க வாசல்ல போய் உக்காருங்க.” என்றான் அருண்.

இப்படியொரு காரணம் சொல்லும்போது மறுக்கவா முடியும்? அவளுக்கு அரிசி பராமரிப்பு பற்றியெல்லாம் இன்னும் தெரியாது அதனால் அவன் சொன்னது போல் அமைதியாய் ஓரிடத்தில் அமர்ந்துகொண்டு அவனை கவனித்தாள். பார்வைக்காக முன் வரிசையில் வைக்கப்பட்டிருந்த சாக்கு மூட்டைகளை பிரித்துப்பார்த்து ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தான். வண்டுகள் இருந்த அரிசியை தற்காலிகமாக அப்புறப்படுத்தி, வேறு மூட்டையை பிரித்து வைத்து, மொத்த கடையையும் கூட்டி சுத்தம் செய்தவன் தூசி கடைக்குள் வராதிருக்க வாசலில் தண்ணீர் தெளித்துவிட்டான்.

Advertisement