Advertisement

பின்னோடே வழியனுப்ப வந்த சுசீலா அன்னை கையை இறுகப் பிடித்து நிறுத்தி, “என்னமா இப்படி பேசிட்ட?”

“பின்ன உன்னை மாதிரி யோசிச்சிட்டே இருந்தா ஆச்சா? ஒழுங்கா பொழைக்க கத்துக்கோ. அந்த பொண்ணு எவ்வளவு நாள் இப்படியே இங்கேயே இருக்க முடியும்?”

“இருந்தாலும் நீ இப்படி ஒடச்சி பேசியிருக்க கூடாது.”

“கூறுகெட்டவளே, நான் பேசாம வேற யார் பேசுவா? கடைசி வரைக்கும் சிகாமணியை நினைச்சுகிட்டு அவ எந்நேரமும் அழுது வடிஞ்சிட்டு இருந்தா உங்க குடும்பம் எப்படி விளங்கும்? முன்னேற வேண்டாமா நீங்க. நான் எல்லாம் யோசிச்சுதான் பேசுனேன். நீ சூதானமா இருந்துக்கோ.” இன்னும் சில பல அறிவுரைகள் வழங்கிவிட்டு கிளம்பினார் அவர்.

அவர் சென்ற சிறிது நேரத்திற்கெல்லாம் ஒருவாரம் அம்மாவுடன் இருந்துவிட்டு வருகிறேன் என்று கல்பனா அவள் வீட்டிற்கு கிளம்பிவிட்டாள். சின்ன மருமகளிடம் என்ன சமாதானம் சொல்லியும் எடுபடாமல் போக, அனைத்தையும் சேகரிடம் இறக்கிவைத்தார் தேவி. அவனோ நாம் யோசித்து செய்திருக்க வேண்டியதை தான் அவர் சொல்லி இருக்கிறார் என்றுவிட்டான். அவன் கஷ்டம் அவனுக்கு. 

தேவையின்றி இரண்டு நாட்களுக்கு மேல் தங்களுடன் தங்காத மகள் ஒருவாரமாக தங்களுடன் இருப்பதில் சரளாவுக்கு சந்தேகம் என்றால் ஆறேழு நாட்களாய் எதையோ தொலைத்தது போல் பொலிவின்றி சோர்ந்திருக்கும் கல்பனா அருணின் கவனத்தையும் ஈர்த்திருந்தாள்.

“என்னாச்சுங்க?” கேட்கமாலா வேண்டாமா என்று இரண்டு நாட்களாய் யோசித்து அன்று கேட்டுவிட்டான் அருண். 

கடமைக்கு கணக்கு வழக்கு நோட்டை புரட்டிக்கொண்டிருந்தவள் அவனின் குரலில் நிமிர்ந்தாள். 

“ஒரு வாரமாவே ஒரு மாதிரி இருக்கீங்க, ஒழுங்கா தூங்குன மாதிரியும் இல்லை. ஏன்னு சொன்னா சரிபண்ணலாமான்னு பாக்கலாமே.” என்றான் அவள் முகபாவனைகளை கணித்தவாறே.

ஒன்றுமில்லை என்று அவள் தலையசைக்கவும், “வீட்ல ஏதாவது பிரச்சனையா? போன வாரம் கூட சேகர் கிட்ட பேசுனேன், புது வேலையெல்லாம் நல்லா போகுதுனு சொன்னாரே?” விடாமல் கேட்டான் அருண்.

சென்ற மாதம் தெரிந்தவர் மூலம் சேகருக்கு கடை ஒன்றில் வேலை வாங்கிக்கொடுத்திருந்தான். அதன் பொருட்டு அவ்வப்போது அவனிடம் பேசி அவர்கள் சூழலையும் தெரிந்துகொள்வான். சேகரும் வேலை மற்றும் நிதி நிலைமை பற்றி கலந்தாலோசிப்பவன் வீட்டின் உள் விஷயங்களை பகிர மாட்டான். 

அருணும் குடும்பத்திற்குள் ஊடுருவி கேள்விகள் கேட்டுக்கொள்ள மாட்டான். அவன் எல்லை எதுவென்று தெரிந்து அதில் நின்று கொள்வான். இன்றும் கல்பனாவிடம் கேட்டிருக்க மாட்டான், அவளின் மேடிட்ட வயிறு பிள்ளையின் வளர்ச்சியை வெளிச்சம் போட்டு காட்ட, இந்த நேரத்தில் கவலை தோய்ந்த முகத்துடன் அவள் உலா வருவது அவனுக்கு சங்கடத்தை கொடுத்தது. அதன்பொருட்டே பின்வாங்காது விசாரித்தான்.

“கடையை விரிவுபடுத்துறேன் அதுஇதுனு சொல்லிட்டு இங்கேயே டேரா போட்டிருக்கீங்க எஜமான்.” இயல்பாய் இருப்பது போல் காட்டிக்கொள்ள பிரயத்தனப்பட்டாள் அவள். 

“எத்தனை முறை பதில் சொன்னாலும் இந்த கேள்வியை விடவே மாட்டீங்களா?” 

“நீங்க இப்படி இருக்கிறது எனக்கு சங்கடமா இருக்கு. இப்படியே பண்ணிட்டு இருந்தா சொல்லாம கொள்ளாம வேலையை விட்டு நின்னுருவேன்.”

“நல்ல முடிவு. வீட்ல தெம்பா ரெஸ்ட் எடுங்க. எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்.” என்று அவன் அசராது சொல்லவும் பாவமாய் பார்த்தாள் அவள்.

“ஏங்க நீங்களுமா? இங்க இருக்குற நேரம்தான் கொஞ்சம் ஃப்ரியா பீல் பண்றேன். அதுக்கும் தடா போடுவேன்னா எப்படி?”

“ஒரு வாரமா ஃப்ரியா இருக்குற மாதிரி தெரியலையே.” என்று அவன் தாடையை நீவ, பெருமூச்சு அவளிடம்.

“பெருமூச்செல்லாம் பலமா இருக்கு. என்னை பிரெண்டா நினைச்சா எது உங்க மனசை போட்டு குடைஞ்சிட்டு இருக்குனு சொல்லணும் இப்போ.” 

“பிரெண்டா?” விழி விரித்தாள் அவள்.

“இல்லையா பின்ன? நான் உங்களை பிரெண்டா தான் நினைக்குறேன், நீங்களும் அப்டித்தான்னு நினைச்சேன்.”

“ஐயோ, என்னங்க நீங்க… எல்லாரும் என்னை இன்னொரு கல்யாணம் பண்ணிக்க சொல்றாங்க. நீங்களே சொல்லுங்க எல்லாத்தையும் மறந்துட்டு எப்படி இன்னொருத்தரோட வாழ முடியும்?” விஷயத்தை சுருக்க சொல்லி வருத்தமாய் அவனை பார்த்தாள்.

“நானே இதைப்பத்தி பேசலாம்னு நேரம் பாத்துட்டு இருந்தேன்.” என்று அனாசியமாய் குண்டை தூக்கி போட்டான் அவன். நீங்களுமா என்று சலிப்பாய் பார்த்தாள் கல்பனா.

“எப்போதும் இப்படியே இருந்துட முடியும்னு நினைக்குறீங்களா?” அவள் எண்ணம் புரிந்தது போல கேட்டான்.

“இருக்க முடியாதுனு எல்லாரும் சொன்னா ஆச்சா? என்னால முடியும்னு நான் நம்புறேன், அந்த நம்பிக்கையை உடைக்கிற மாதிரி நீங்களும் புரியாம பேசாதீங்க.”

“புரிஞ்சதுனால தான் பேசுறேன். இப்படியே போனா ஒரு கட்டத்துல வாழ்க்கை சலிச்சிடும்.” அனுபவத்தில் பேசினான் அவன். அது புரியாத பேதையோ சோர்வாய் உணர்ந்தாள்.

“எங்களுக்காக யாரும் பொறுப்பு எடுத்துக்க வேண்டாம், செலவு பண்ண வேண்டாம். என்னால எவ்வளவு முடியுமோ அந்தளவுக்குள்ள நானும் என் குழந்தையும் வாழ்ந்துக்குறோம். இந்த விஷயத்தை இதோட விட்டுருங்க.” சுசீலாவின் அம்மாவுக்கு சொல்ல வேண்டிய பதில் இவனிடம் இறங்கியது.

“விட்டுறேங்க, ஆனா அதுக்கு முன்னாடி நான் சொல்றதையும் கேளுங்க. என்னோட அனுபவத்துல சொல்றேன், நம்மளோட சந்தோஷத்தையோ துக்கத்தையோ சந்தேகத்தையோ பகிர்ந்துக்க நமக்கே நமக்குன்னு ஒருத்தவங்க வேணுங்க. அவங்க இல்லாம வாழ்க்கையில பிடிப்பு இருக்காது. எதுக்கு வாழறோம்னு தோணும்.” என்றவனின் பேச்சினூடே குறுக்கிட முயன்ற கல்பனாவை கைகாட்டி நிறுத்தியவன்,

“குழந்தை எனக்கு துணையா இருக்கும்னு நீங்க சொல்லலாம். ஆனா அவங்ககிட்ட உங்களோட சோர்வையோ கஷ்டத்தையோ வருத்தத்தையோ சந்தேகத்தையோ பகிர்ந்து உங்களை நீங்களே தேத்திக்க முடியாது, அவங்க வெளியுலகத்தை, மனித உணர்வுகளை புரிஞ்சிக்குற நிலை வரவரைக்கும் எல்லாத்தையும் எதிர்த்து நீங்க தனியா போராடனும். அவங்களுக்கு அம்மாவா மட்டுமில்லை அப்பாவாவும் இருக்கனும். எல்லா நேரமும் ரெண்டாவும் யாராலயும் இருக்க முடியாதுங்க.”

“எதுவும் சுலபம்னு நான் சொல்லல, கஷ்டப்பட்டாலும் நான் பாத்துக்குறேனு தான் சொல்றேன். யாரும் புரிஞ்சிக்க மாட்டேங்குறீங்க.” அப்பட்டமான சோர்வு அவள் குரலில்.

“உங்க தேவைகளை வேணும்னா நீங்க பாத்துக்கலாம், உங்க குழந்தையோட தேவைக்கு நீங்க மட்டும் போதும்னு உங்களால உறுதியா சொல்ல முடியுமா?” அருண் பார்வையிலும் குரலில் அழுத்தம் நிரம்பி இருக்க, நெற்றி சுருக்கினாள் கல்பனா.

“வாழ்க்கை எப்போதும் ஒரே மாதிரி இருக்காது. நம்மளோட தகுதி தராதரத்துல மேல ஏறும் போது இருக்கிற சொந்தம் இறக்கம் வந்தா இருக்காது. அப்போ புள்ளைகிட்டயிருந்து வர்ற ஆறுதலுக்கும் உங்களுக்கான துணைக்கிட்டே இருந்து வர்றதுக்கு வித்தியாசம் இருக்கும் கல்பனா. 

எத்தனையோ சவாலை சந்திக்க வேண்டியதிருக்கும் நீங்க, அதையெல்லாம் தனியா தான் சந்திக்கணும்னு எந்த கட்டாயமும் இல்லை, அதுக்கான வயசும் இல்லை உங்களுக்கு. மீதி இருக்கிற வாழ்க்கையை தனியா வாழ்ந்துடுவேன்னு முடிவு எடுக்குறதுக்கும் அதை செயல்படுத்துறதுக்கும் இருக்கிற இடைவெளி அதிகம்.”

“நீங்க என்ன பேசுனாலும் என் முடிவு மாறாது. அத்தான் இடத்தை என்னால வேற யாருக்கும் கொடுக்க முடியாது.”

“இந்த நிமிஷம் சரின்னு தோணுற முடிவு நாளைக்கே கூட மாறலாம். இப்போ தாங்குற உறவுகள் அப்போ உங்களை கீழ தள்ளவும் செய்யலாம். என்னைக்கும் ஒரேபோல இருக்காது கல்பனா. இப்போ இருக்கிற நிலைமையை வச்சி எந்த முடிவும் எடுக்காதீங்க, இன்னும் பத்து வருஷம் கழிச்சி உங்க குழந்தை வளர்ந்து விவரம் புரியுற வயசு வரும்போது அவங்க வாழ்க்கை எப்படி இருக்கணும்னு யோசிங்க.” என்று அவன் பொறுமையாய் எடுத்துச் சொல்ல, அவள் யோசிக்கிறாள் என்பதை உடல்மொழியில் கண்டுகொண்டவன் மேலும் தொடர்ந்தான்.

“உங்க வாழ்க்கைக்கு மட்டும்தான் உங்களால உறுதியா சொல்ல முடியும். உங்க மூலமா வந்த உங்க குழந்தையோட தேவைகளை கூட நீங்க மட்டும் தீர்மானிக்க முடியாது. பெரியப்பா பசங்க மாமா பசங்க அவங்க அப்பா அம்மா கூட இருக்கும் போது எனக்கு மட்டும் ஏன் இல்லைனு அந்த குழந்தை மூணு வயசிலே யோசிக்க ஆரம்பிச்சிடும்.”

அருணின் வார்த்தைகள் அவளுள் குழப்பத்தை ஏற்படுத்தியது. அவள் அண்ணன் பிள்ளைகளுடனும் கனியுடனும் தன் பிள்ளை வளரும் போது நியாயமாய் சில ஆசைகள் ஏற்படத்தானே செய்யும்.

“குழந்தைகிட்ட நீங்க சொல்லலாம், அப்பா இல்லைனு. ஆனா அப்பா பாசத்தை உணர்ந்து வளர்ந்த உங்களுக்கு, அந்த பாசம்னா என்னன்னே  தெரியாம அதை உரிமையா உணர முடியாம இருக்குறப்போ வர வலி என்னனு புரியாது. அதை நான் அனுபவச்சிருக்கேன் கல்பனா. அந்த வலி சிகா குழந்தைக்கு வேண்டாம். அவனும் அதை விரும்ப மாட்டான்.” என்றவன் அவள் யோசிக்கட்டும் என்று அதோடு நிறுத்திக்கொண்டு பழச்சாறு வாங்கி வந்து கொடுத்தான்.

“பொறுமையா யோசிங்க. உங்களுக்காக உங்க குழந்தைக்காக நல்ல முடிவா எடுங்க.” 

அருணின் வார்த்தைகள் ஒரு ஓரமாய் அவளை குடைந்துகொண்டிருக்க, அன்று காயத்ரி அவளுக்கு அழைத்தாள். ஒரு வாரத்திற்கும் மேலாக சிகா வீடு செல்லாமல் அம்மாவுடன் இருக்கிறாள் என்று வேந்தன் சொல்லவும் சந்தேகப்பட்டு அழைத்திருந்தாள் அவள்.

“என்னனு சொல்லு கல்பனா. காரணம் இல்லாம பத்து நாளா நீ அங்க இருக்க மாட்ட.” என்று துருவ, விஷயம் வெளிவந்தது. 

“எல்லாரும் என்னை கார்னர் பண்ற மாதிரி இருக்குடி காயு.” தேய்ந்து ஒலித்த அவள் குரலில் சொல்ல வந்ததை பாதியில் விழுங்கினாள் காயத்ரி.

“இன்னும் நாலு நாள்ல அங்க வந்துருவேண்டி, அப்புறம் ஏழு மாசத்துல வளைகாப்பு போடுற வரை அங்க தான் இருப்பேன். பேசலாம்.” என்று அமைதியாகிவிட்டாள்.

அவளுக்கும் கல்பனா தனக்கென்று ஒரு துணையை தேடிக்கொண்டால் தாங்களும் கலக்கம் நீங்கி குற்றவுணர்வின்றி வாழலாம் என்ற எண்ணம் இருக்கவே செய்தது. அம்மாவின் கைமணத்தோடு அவரின் போதனைகள் சிலவும் அவளுள் ஏறியிருக்க, கல்பனாவிடம் அதை பற்றி பேசவும் அழைத்தாள். ஆனால் அனைவரும் ஒன்றையே வலியுறுத்துகிறார்கள் என்று அவள் புலம்பவும் அவளிடம் மெளனித்துவிட்டு கணவனிடம் அனைத்தையும் சொல்லிவிட, அவன் பிடித்துக்கொண்டான்.

“தலை பிரசவம் நாங்க தான் பாக்கணும் கல்பனா. ஆனா அம்மா இருக்குற நிலைமையில எங்களால செலவு மட்டும்தான் பண்ண முடியும், மத்தது எல்லாமே தேவி அத்தை தான் முன்ன நின்னு பாக்குற மாதிரி வரும். ஆனா சேகர் மாமியார் பேசிட்டு போனதை பாத்தா எதுவும் நல்லதா படல. உனக்கு ஒரு ஆரோக்கியமான சூழல் இங்கேயும் இல்லை அங்கேயும் இல்லை. எப்படி எல்லாம் சரியா வரும்னு யோசிக்கோ. அவங்ககிட்ட எல்லாம் பேச்சு வாங்கணும்னு உனக்கு என்ன அவசியம். ம்ம்னு சொல்லு நான் பாக்குறேன் ஒரு நல்ல குடும்பமா…” என்றிருந்தான் வேந்தன்.

இன்னும் அப்பா அம்மாவிடம் இந்த விஷயத்தை சொல்லவில்லை. சரளாவோ இப்போது தான் கொஞ்சம் அமைதியாய் இருக்கிறார், இந்த நிலையில் அவர்கள் மாப்பிள்ளை இருக்கிறது என்று வந்து நின்ற விஷயம் தெரிந்தால் மீண்டும் கலகம் வெடிக்கும் என்று அமைதியாக இருந்தான் வேந்தனும்.

இப்படி ஆளாளுக்கு அவளை குழப்ப, கரை சேர முடியாத பாவையாய் நடுக்கடலில் தத்தளித்தாள். காயத்ரி வீடுவரவும் வேறுவழியின்றி சிகா வீட்டிற்கு வந்துவிட்டாள். ஆனால் சுசீலாவை பார்க்கும் போதெல்லாம் குழப்பம் படரும். அவளும் ஒதுங்கிச் செல்ல முன்பிருந்த தெளிவு தொலைந்திருந்தது. யாரிடமும் பேச பிடிக்கவில்லை, உண்ண பிடிக்கவில்லை, உறக்கம் சரிவர வரவில்லை என்று பட்டியல் நீள, சிகாவின் இழப்பில் வாடுகிறாள் என்று குடும்பத்தினர் தங்களுக்குள்ளாகவே முடிவுசெய்து பெருமூச்சு விட்டுக்கொண்டார்கள். 

யாரை நம்புவது, நாளை எப்படி விடியும், யார் உடன் இருப்பர் என்பது போன்ற கேள்விகள் விடாது அவளை தொடர்ந்த வண்ணம் இருக்க, அவளையே கவனித்துக்கொண்டிருந்த அருண் ஒரு மாதம் கடந்து அவள் முன் நின்று அவளை கிளப்பிக்கொண்டிருந்தான்.

“எங்க கூப்பிடுறீங்க? கடைக்கு கஸ்டமர் வருவாங்களே.” என்று அவள் தயங்க,

“கடைக்கு இன்னைக்கு லீவு விட்டாச்சு. ஆட்டோக்கு சொல்லி இருக்கேன் நீங்க கிளம்புங்க.” என்று பிடிவாதமாக நிற்கவும் வேறு வழியின்றி பை எடுத்துக்கொண்டு அவனுடன் கிளம்பினாள்.

ஆட்டோவில் அவள் ஏறியதும், ஓட்டுனருடன் முன் இருக்கையில் அமர்ந்தவன் அவரிடம் மெதுவாக ஓட்ட சொல்ல, எங்கு அழைத்துச் செல்கிறான் என்று யோசனையுடன் சாலையில் கவனம் பதித்தாள். சற்று நேரத்திற்கெல்லாம் ஆட்டோ ஒரு மருத்துவமனையின் முன் நிற்க, யோசனையுடன் அருணை பார்த்தாள். அவன் இறங்கச் சொல்ல, மெதுவாக இறங்கியவள் விழிகளை அங்குமிங்கும் அலைபாயவிட்டு நிற்க, முன்னே கைகாட்டி அவளுடன் நடந்தான்.

Advertisement