Advertisement

*12*

மூன்றாம் மாதம் முடிவடைந்த நிலையில் மசக்கை சற்று மட்டுப்பட்டு உடல் தெம்பாக உணர்ந்தது. ஆனால் மனமோ ஆறாத காயமாய் ஓரத்தில் எரிந்து கொண்டிருந்தது. சிகாவின் இழப்பு பூதாகரமாய் தெரியவில்லை என்றாலும் செய்யும் செயல்கள் யாவிலும் அவன் இல்லாக்குறை உணர்ந்தாள். 

குழந்தை வளர வளர அவள் எதிர்கொள்ளும் உபாதைகள் அதை மீகி குழந்தையை உணரும் போது வெளிப்படும் சிறு சிறு மாற்றங்களை பகிர்ந்து கொள்ள அவன் இல்லையே என்ற ஏக்கம் ஏகத்திற்கு இருந்தது. அதனோடு நிகழும் சுரப்பிகளின் மாற்றங்களும் அவளை அலைகழித்தது. 

ஒரு நேரம் தெம்பாகவும் மறு நேரம் தொய்வாகவும் என சுரப்பிகள் கொடுக்கும் உபாதைகள் உவப்பாய் இல்லை. அவ்வப்போது கோபம், அழுகை, எரிச்சல் போன்றவை சற்று மிகைப்படுவது இயல்பாகவே நடக்க, அதை தயக்கமின்றி வெளிபடுத்தக்கூட ஆளின்றி தவித்துதான் போனாள் கல்பனா. 

என்னதான் தேவி அவள் முகம் பார்த்தே அனைத்தும் செய்து கவனித்துக்கொண்டாலும் உற்றவன் துணையின்றி கசந்தது பிள்ளைப்பேறு காலம். ஆனால் உற்றவனே மறுபதிப்பாய் வரவிருக்க, சங்கடங்களை பழக்கிக்கொண்டு அதனை ஆவலுடன் எதிர்கொண்டாள். அந்த ஆவல் ஒன்றே வலியில் மூழ்கடிக்காது அவளை உயிர்ப்பாய் வைத்துள்ளது. 

அன்று அவளுக்கு ஸ்கேன் எடுக்க முன்பதிவு செய்திருந்தார்கள். சென்ற முறை குழந்தையின் இதயத்துடிப்பை கேட்டது இன்னும் செவிகளில் ஒளித்துக் கொண்டிருகிறது. 

இதே நாள் காயத்ரிக்கும் ஸ்கேன் என்பதால் அவளுடன் இருக்க வேந்தன் ஊருக்கு சென்றிருந்தான். வழக்கம் போல் தேவி துணைக்கு கிளம்ப, எழ மனமின்றி சிகாவின் புகைப்படத்தை வெறித்த வண்ணம் அமர்ந்திருந்தாள் கல்பனா. 

“கிளம்பலையா கல்பனா?” சுசீலா அவளை உசுப்ப, 

“அத்தான் நினைப்பாவே இருக்கு, அவங்க இருந்திருந்தா இன்னைக்கு என்கூட வந்திருப்பாங்கல்ல. அவங்களும் குழந்தையை பாத்திருப்பங்கள்ல?” என்று அவளையும் மீறி கேட்டிருந்தாள்.

தேவி வலி தாங்கி நிற்க, சுசீலா அவளை பாவமாய் பார்த்தாள். எதிர்வினையின்றி அறையே அமைதியாய் இருக்க, சட்டென்று சுற்றம் உணர்ந்து நிமிர்ந்தவள் எழுந்துகொண்டாள். மருத்துவ கோப்புகள் இருக்கும் பையை எடுத்துக்கொண்டு கிளம்பலாம் என்பது போல் தேவியை பார்க்க,

“தண்ணீ எடுத்துட்டு வரேன் இரு.” என்று உள்ளே சென்றார் அவர்.

அவர் கையில் தண்ணீர் நிரப்பியிருந்த பாட்டிலை கண்டு வெறுமை படர்ந்தது கல்பனாவினுள். அவளைப் போலவே வீட்டில் உள்ளவர்கள் சிகா இல்லாக்குறையில் தவிக்கிறார்கள். வாய்விட்டு சொன்னால் கல்பனாவுக்கு அழுத்தம் கொடுக்கும் என்ற நோக்கில் ஒருவரும் அவனைப் பற்றி பேசுவதில்லை. இப்போதும் தேவிக்கு அவன் நினைவில் தொண்டை அடைத்துவிட, கல்பனா முன் காட்டிவிடக்கூடாது என்று அடுப்பறைக்குள் தஞ்சம் புகுந்துகொண்டார். சற்று நேரத்திற்கெல்லாம் தன்னை சமன்படுத்திக்கொண்டு அவளுடன் ஸ்கேன் எடுக்க கிளம்பினார்.

காத்திருப்பு அறையில் அவளுடன் இன்னும் நான்கைந்து கர்ப்பிணிகள் இருந்தனர். பெரும்பான்மையானோர் கணவர்கள் உடன் காத்திருந்தனர். கல்பனாவின் கரம் சற்று மேடிட்டு இருந்த வயிறை தடவி பார்த்துக்கொண்டது. 

“அத்தான் வயித்துல இருக்கும் போது எப்படி இருந்துச்சு அத்தை? சமத்தா இருந்தாங்களா இல்லை உங்களை படுத்தி வச்சாங்களா?” கணவன் இல்லைதான் ஆனால் அவன் வாழ்ந்து விட்டுச்சென்ற நினைவுகள் இருக்கிறதே. அதுவாவது இந்த நேரத்தில் தனக்கு துணையாய் வேண்டும் என்ற அவா கல்பனாவுக்கு. 

அவள் கேட்கவும் தேவியின் முகம் கொஞ்சமாய் மலர்ந்தது, “ரொம்ப எல்லாம் படுத்துல. அப்போலேந்து வீட்டை புரிஞ்சிக்கிட்டவன் தானோனு இப்போ தோணுது. அப்போ நம்ம வீட்ல ஆடு மாடுங்க நிறைய இருக்கும். ஆள் வச்சிருந்தாலும் நாம பாக்காம இருக்க முடியாதுல்ல. எல்லாத்தையும் இழுத்து போட்டுக்கலைனாலும் பால் கறக்குறது, மாடுகளை குளிப்பாட்டுறதுனு செய்வேன். சேகரையும் பாக்கணும் ஆனா எவ்ளோ வேலை செஞ்சாலும் பகல் நேரத்துல தொந்தரவு இருக்காது. தூங்கும் போது மட்டும் முதுகு புடிச்சிக்கும். ஒரு குளியல் போட்டா அதுவும் இருக்காது.”

“ஓ… சேகர் அத்தான் கூட சண்டையெல்லாம் போடுவாங்களா?”

“ம்ம்கூம். சின்னதுலேந்து சேகர் அவங்க அப்பாகிட்ட தான் அதிகம் இருப்பான், இவன் என்கிட்ட ஒட்டிப்பான். நீ எப்படி சேகரை பாத்துகிறியோ அதுமாதிரியே அண்ணனை நான் பாத்துப்பேன்னு சொல்லுவான். எல்லாத்தையும் விட்டு கொடுத்துடுவான். சேகரும் இவன்கூட சண்டைக்கு எல்லாம் நிக்க மாட்டான். ஒன்னுக்குள்ள ஒன்னா தான் இருக்குங்க.” கவனமாக எதிர்மறையாய் பேசுவதை தவிர்த்தார் தேவி. 

சிகா பற்றிய நல்லெண்ணங்கள் மட்டுமே பிள்ளை கேட்டு வளர வேண்டும். அவனில்லை என்ற ஏக்கம் பிறக்கும் முன்னாவது வராது இருக்கட்டும் என்று அவர் நினைக்க, மனைவியோ அனுதினமும் நொடி நேரம் தவறாது மனதில் சுமக்கும் கணவனின் எண்ணங்கள் வயிற்றில் இருக்கும் பிள்ளைக்கு சென்று சேராமலா இருக்கும். சுற்றத்தை அதுவும் உணர்ந்துகொண்டு வளர்ந்தது.

ஸ்கேன் முடித்து காத்திருந்து பரிசோதனை முடிவுகளை வாங்கிவிட்டு கிளம்பினர். குழந்தை வளர்ச்சி நன்றாக இருக்கிறது என்றே சொன்னார்கள். ரத்தக்கொதிப்பு அதிகம் இருக்கிறது, மனதை இலகுவாக வைத்துக்கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தினர். சரியென்று அவர்களிடம் தலையாட்டியவர்கள் நேராக வந்து குழந்தை வளர்ச்சியை பற்றி சரளாவிடம் பகிர, அவர் இதழ்கள் லேசாக விரிந்தது. அந்த கருப்பு வெள்ளை ஸ்கேன் அறிக்கையில் மகள் சுட்டிக்காட்டிய தன் பேரப்பிள்ளையை தடவிப்பார்த்தார்.

“பேர புள்ளை வேகமா வளர்ந்துட்டு இருக்கு, அவங்க பின்னாடி ஓட, தாலாட்டு பாடன்னு நிறைய வேலை இருக்கு சீக்கிரம் உடம்பை தேத்துங்க அண்ணி.” என்ற தேவி,

“கல்பனா அம்மாகூட இருந்துட்டு பொறுமையா வீட்டுக்கு வா. நான் கிளம்புறேன்.” சரளாவிடம் வெளிப்பட்ட அந்த சிறிய இதழ் விரிப்பு அவர் மனநிலையை எடுத்துரைக்க, கல்பனாவை அங்கேயே விட்டுச் சென்றார்.

“வேந்தன் புள்ளையும் இதே மாதிரி வளர்ந்திருப்பான்ல?” மீண்டும் ஒருமுறை அந்த ஸ்கேன் ரிப்போர்ட்டில் அவர் பார்வை சென்று மீண்டது. ஆமோதித்தவள்,

“மெசஜ் போட்டேன், அவங்க இன்னும் ஹாஸ்பிடல்ல தான் இருக்காங்களாம். வீட்டுக்கு வந்ததும் கூப்பிடுறேனு சொன்னாங்க.”

கல்பனா சொன்னதுக்கு ஒரு தலையசைப்பு மட்டுமே சரளாவிடம். அவரின் அமைதியும் அவர் உடலில் ஏற்பட்டிருக்கும் தொய்வும் கல்பனாவை கவலை கொள்ள செய்ய,

“ஏம்மா இப்போல்லாம் அமைதி ஆகிட்ட? எனக்காக உன் உடம்பை பாத்துக்க மாட்டியா?” என்று வருத்தத்துடன் கேட்டாள்.

“நான் பேசி என்ன மாறிட போகுது?” விரக்தியாய் பார்வையை எங்கோ பதித்து சொல்ல, கல்பனாவின் கண்கள் சட்டென கலங்கியது.

மூக்கை உறிஞ்சி கண்ணீரை நிறுத்த முயற்சித்து தோற்றவள், “நீயும் என்னை கஷ்டப்படுத்தாதமா. என்னால இன்னொரு இழப்பை தாங்க முடியாது. எனக்கு நீ வேணும்.” சிறுபிள்ளையென உடல்குலுங்க தேம்பி அழுதவள் அவர் மடியில் முகம் புதைத்துக்கொள்ள, பெற்ற மனம் கலங்கி துடித்தது.

மகளை தேற்ற வார்த்தைகள் தேடி ஓய்ந்து போனவர் அவள் தலையை வருடியபடி மெளனமாய் கண்ணீர் சிந்தினார். 

“எனக்கு ஏன்மா இப்படி ஆகணும்? நான் என்ன பண்ணேன்? அத்தான் என்ன பண்ணாங்க? என்னை எப்படி பாத்துக்கிட்டாங்க தெரியுமா?” எவ்வளவு தேடினாலும் விடை கண்டுகொள்ள முடியா கேள்விகளை அவள் இறக்கி வைக்க, அவள் மனதின் பாரம் அவருள் ஏறியது.

“குழந்தை… குழந்தை உருவானது கூட தெரிஞ்சிக்காம அத்தான் விட்டுட்டு போயிட்டாங்களே, ஏன் மா? எங்க குழந்தை என்னம்மா பண்ணுச்சு, அப்பாவோட வாசனையை உணர கூட தகுதி இல்லையா?” இன்னும் என்னென்னமோ பிதற்றியவள் அழ தெம்பில்லாமல் சோர்ந்து தரையில் படுக்கும் வரை நிறுத்தவில்லை. 

இத்தனைக்கும் அசையாது அமர்ந்திருந்தார் சரளா. மனதில் மகள் வாழ்க்கை குறித்த ஐயங்கள் விருட்சமாய் வளர்ந்திருக்க, அடுத்த வாழ்க்கை குறித்து மகள் யோசிக்ககூட இல்லை என்ற நிதர்சனம் வெகுவாய் தாக்கியது. அவளை எப்படி தேற்றி நல்லதொரு வாழ்க்கை அமைத்துக்கொடுக்க போகிறோம் என்ற நினைப்பே மலைப்பாய் இருந்தது.

ஒரு வாரம் சென்றிருக்கும் அன்று சுசீலாவை காணவென அவள் அம்மா மட்டும் வந்திருந்தார். இன்ப அதிர்ச்சியுடன் அவரை வரவேற்றாள் சுசீலா.

“என்னமா சொல்லாம கொள்ளாம வந்திருக்க? அப்பா வரலை?”

“அப்பா வேலைக்கு கிளம்புனதும் உன்னையும் பாப்பாவையும் பார்த்துட்டு போகலாம்னு வந்தேன்.” என்ற சுசீலாவின் அன்னை கனிமொழியை மடியில் அமர்த்திக்கொண்டு அவளிடம் கதை பேசினார்.

அவளும் பள்ளியில் தனக்கு கிடைத்திருக்கும் நட்புகளை பற்றி சொல்லிக்கொண்டிருந்தாள். ஆம், இப்போது கனிமொழி பள்ளி சென்றுகொண்டிருக்கிறாள். சிகாவின் சேமிப்பு என்று அருண் கொடுத்துச் சென்ற பணத்தில் பாதியை டொனேஷனாய் கட்டி ஒரு நடுத்தர பள்ளியில் சேர்த்திருந்தனர். மீதி பணம் வைப்பு நிதியாய் சேமிப்பில் உள்ளது. 

மதிய கொஞ்சம் ஓய்வெடுத்து மாலை காபி அருந்திக்கொண்டிருக்கும் வேளையில் வந்த கல்பனா அவர்களை வரவேற்கும் விதமாய் சிரித்தாள்.

அவளிடம் வேலையெல்லாம் எப்படி போகிறது என்று பொதுவாய் விசாரித்தவர், “என்ன முடிவெடுத்திருக்கமா?” என்று ஆரம்பித்தார்.

கல்பனா புரியாத பார்வை பார்க்க, என்னவென்று தேவி கேட்டார்.

“அதுதான் சின்ன பொண்ணு புரியாம இருக்குன்னா, நீங்களும் அமைதியா இருந்தா எப்படிங்க?”

“அம்மா நேரமாச்சு, இப்போ கிளம்புனா தான் ரொம்ப இருட்டுறதுக்கு முன்னாடி போக முடியும்.” அம்மாவை கிளப்பும் முனைப்பில் பரபரத்தாள் சுசீலா. 

“நீ சும்மா இருடி, நான் என்ன சுயநலமாவா பேசுறேன். அந்த பொண்ணு வாழ்க்கையும் மனசுல வச்சுதான் சொல்றேன்.” என்று மகளை அடக்கியவர், தேவியிடம் நேரே முறையிட்டார்.

“நீங்களே சொல்லுங்க, கல்பனாவுக்கு இருபது இருபத்தொரு வயசிருக்குமா? தனியா நிக்குற வயசாங்க இது? விருப்பப்பட்டு தான் கல்யாணம் பண்ணாங்க நான் இல்லைனு சொல்லல அதுக்காக நடந்ததை நினைச்சிகிட்டே காலத்தை ஓட்டிட முடியுமா? அப்படி நினைச்சிகிட்டே எத்தனை வருஷம் ஓட்ட முடியும்? பத்து வருஷம் இல்லை இருபது வருஷம்?” வேகமாய் பேசியவர் தான் சொன்னவற்றை கிரகிக்க அவர்களுக்கு அவகாசம் கொடுப்பது போல் சில நொடிகள் இடைவெளிவிட்டு தொடர்ந்தார்.

“உங்களுக்கு தெரியாதது இல்லை, வளர்ந்து நின்ன ரெண்டு புள்ளைங்க இருக்கும் போதே சுசீலா மாமனார் இறந்ததும் நீங்க உடைஞ்சி நின்னீங்க. இந்த பொண்ணை பாருங்க, இன்னும் வாழவே ஆரம்பிக்கல, ஆறேழு மாசத்துல குழந்தை பொறந்துடும். எப்படிங்க எல்லாத்தையும் தனியா கடந்து வரும்? இந்த காலத்துல குழந்தையை படிக்க வச்சு வளக்குறது எல்லாம் நம்ம காலம் மாதிரி எளிமையாவா இருக்கு. நீங்களே நல்ல முடிவு எடுப்பீங்கன்னு தான் நானும் பேசாம இருந்தேன். ஆனா நீங்களும் கண்டுக்குற மாதிரி தெரியல அவங்க வீட்லயும் விட்டுட்டாங்க.” என்று படபடத்தவரை எதுவும் சொல்ல முடியாது தவித்து நின்றாள் கல்பனா.

தேவிக்கு மனது பிசைந்தது. கல்பனா வயிற்றில் வளரும் சிகாவின் பிள்ளையை அருகில் வைத்து வளர்க்க வேண்டும் என்ற ஆவலில் இதையெல்லாம் யோசிக்கவில்லை அவர். சரளா அடுத்த திருமணம் பற்றி பேசும் போதெல்லாம் மருமகள் பிடிகொடுக்காமல் இருந்தது அந்த நேரம் ஆசுவாசமாக இருந்தது. அதை இப்போது நினைத்தால் அபத்தமாக தெரிந்தது. 

“எங்க சொந்தத்துலேயே ஒரு பையன் இருக்கான். பொண்டாட்டியோட ஒத்துவரலைனு பிரிஞ்சிட்டாங்க. இப்போ அந்த பையனுக்கு கல்யாணம் பண்ண பொண்ணு பார்த்துட்டு இருக்காங்க, நல்ல பையன். கல்பனாவை மட்டுமில்லை பொறக்க போற குழந்தையையும் அவங்க குடும்பத்துல ஒருத்தரா நடத்துவாங்க.” என்றதுதான் தாமதம் கல்பனாவின் பொறுமை கரைந்தது.

அவள் அம்மாவே அவள் சம்மதத்திற்கு காத்திருந்தாரே ஒழிய மாப்பிள்ளை பார்க்கிறேன் என்றெல்லாம் இறங்கவில்லை. ஆனால் இவரோ ஒருபடி மேலே சென்றுவிட்டாரே என்று எரிச்சல் வந்தது.

“என் மேல அக்கறை எடுத்து சொன்னது ரொம்ப சந்தோஷம்மா. ஆனா இதை இதோட நிறுத்திக்கோங்க, என் அத்தான் என்னை தனியா விட்டுட்டு போகலை அவரோட குழந்தையை எனக்கு துணையா விட்டுட்டு போயிருக்காரு. எனக்கு என் குழந்தை போதும் யாரும் வேண்டாம்.” என்றாள் பளிச்சென்று.

சுசீலாவின் அம்மாவும் விடுவேனா என்று நின்றார், “எல்லாம் சொல்றதுக்கு நல்லா இருக்கும்மா. புள்ளை பெத்து வளர்த்து பார்த்தாதான் தெரியும். எதுவும் இன்னையோட முடியுற விஷயமில்லை, இப்போ வேலைக்கு போற உன் செலவுக்கு நீ சாம்பாரிக்குற. இன்னும் நாலஞ்சு மாசம் கழிச்சி போக முடியாது, அப்புறமும் பால் குடிக்கிற பிள்ளையை விட்டுட்டு போக முடியுமா. அப்போல்லாம் யார் பார்ப்பா? புள்ளை வளர்ந்து ஸ்கூல் அனுப்பனும், காலேஜ் சேக்கணும் எவ்ளோ இருக்கு. அதெல்லாம் ஒத்தையா சமாளிச்சிடுவியா?”

“நீங்க அவ்ளோ யோசிக்க தேவையில்லை. நான் படிச்சிருக்கேன், என்னால என் குழந்தையை வளர்க்க முடியும்.”

“அதெப்படி நான் யோசிக்காம இருக்க முடியும்? என் பொண்ணு வாழ்க்கையும் இதுல சம்மந்தப்பட்டிருக்கு.”

“சுசீலாவுக்கு இவளுக்கும் என்ன சம்மந்தம்?” அதுவரை சுசீலா அன்னை பேசியதன் தாக்கத்தில் இருந்த தேவி குழப்பமாய் கேட்டார்.

“இன்னொரு புள்ளை பொறந்தா நல்லா வளர்க்க முடியாதுனு மனசை கல்லாக்கிகிட்டு ரெண்டாவது குழந்தையை கலைச்சா எம்பொண்ணு. நாளைக்கு உனக்கும் உன் புள்ளைக்கும் சேர்த்து அவங்க பார்க்குற நிலைமை வராதுன்னு என்ன நிச்சயம்? பிரசவம் பார்த்து அப்புறம் வர செலவுக்கெல்லாம் யார் பொறுப்பேத்துகிறது?” என்று நேரடியாய் கல்பனாவிடம் கேள்விகளை வீச, விக்கித்து நின்றாள் அவள்.

“என்ன பேசுறீங்க நீங்க? என் மருமகளும் என் பேரப்புள்ளையும் யாரும் இல்லாதவங்க இல்லை. நாங்க இருக்கோம் அவங்களுக்கு. எங்க குடும்பத்து பொண்ணை, எங்க வாரிசை பாக்குற கடமையும் உரிமையும் எங்களுக்கு இருக்கு. இதுல எல்லாம் நீங்க தலையிடாதீங்க.” பொறுப்பை பற்றி பேசும் வரை அவர் சொன்னதெல்லாம் சரி என்று தோன்றிய தேவிக்கு இறுதியாய் அவர் பேசியது ஒப்பவில்லை. இனியும் அமைதியாய் இருக்க முடியாது என்று சம்மந்தியை கண்டித்துவிட்டார். 

“என்ன சுசீ அம்மாவை பேசவிட்டு வேடிக்கை பாத்துட்டு இருக்க.” என்று பெரிய மருமகளை சாடவும் தவறவில்லை.

“அவளுக்காகதான் பேசிட்டு இருக்கேன் அண்ணி. என்னைக்கு இருந்தாலும் இதுல பிரச்சனை வரும். கனி ஒருத்திக்கே திணறித்தான் எல்லாம் செய்யுற நிலைமையில இருக்காங்க, எப்படி இவங்க பொறுப்பையும் அவங்க தலையில சுமக்க முடியும்?” என்று தேவியிடம் கேட்டவர் பின் கல்பனாவிடம் பார்வையை திருப்பினார்.

“இங்க பாருமா, என் பெண்ணுக்காக மட்டும் சொல்லல உன் நல்லதுக்கும் தான் சொல்றேன். நம்மால முடியலைனாலும் அம்மா இருக்காங்க, அண்ணன் இருக்காங்க நாளைக்கு அவங்க பாத்துப்பாங்கன்னு நீ உன் பொறந்த வீட்டையும் நம்பிட்டு இருக்க முடியாது. எல்லாருக்கும் அவங்கவங்க குடும்பம் தான் முதல்ல… தன்னோட குடும்பத்தை கரையேத்துறதே பெரிய விஷயமா இருக்கு நம்மள போல நடுத்தர மக்களுக்கு.

உங்க அம்மாவும் உடம்பு முடியாம இருக்காங்க, அவங்களையே நீங்க தான் பாக்குறீங்க. இதுல அவங்களை நம்பி நீ இருக்க முடியுமா? என் பொண்ணும் மாப்பிள்ளையும் உன்னை மாதிரி தான் சிகா தம்பி இருக்கான், எப்படியும் குடும்பத்தை முன்னேத்திடலாம்னு நம்புனாங்க. ஆனா என்னாச்சு? நீ ஒரு துணையை தேடிக்குறது தான் உனக்கும் நல்லது, உன் குழந்தைக்கும் நல்லது. யோசிக்கோமா.” 

வந்த வேலை முடிந்துவிட்டது என்பது போல் பேசிமுடித்ததும் சொல்லிக்கொண்டு கிளம்பிவிட்டார்.

Advertisement