Advertisement

“வாழ்த்துக்கள்.” என்று புன்னகை முகமாய் வரவேற்றான் அருண்.

நேற்றைக்கு முந்திய தினம் வேலைக்கு சேர்ந்து நேற்றே விடுப்பு எடுத்ததில் சங்கடம் கல்பனாவுக்கு. அதுவும் குறுஞ்செய்தி மட்டுமே அனுப்பினாள். இருந்த மனநிலையில் அழைத்து விடுப்பு சொல்லவெல்லாம்  தோன்றவில்லை.

“சாரிங்க, நேத்தி ஹாஸ்பிடல் போயிட்டோம், லீவ் போட வேண்டிய சூழ்நிலை. இனி கரெக்டா வந்துடுறேன்.”

“பரவாயில்லைங்க. சிகாவே திரும்ப கிடைச்சிருக்கான். அவன் வரும்போது நீங்க ரொம்ப கவனமா இருக்கணும். வெயிட் எல்லாம் தூக்காதீங்க.” என்றான் அவனும் அவன் பங்குக்கு. 

மென்னகை புரிந்தவள் இருக்கையில் அமர்ந்துகொண்டாள். அன்று முழுதும் அருண் கடை விட்டு நகரவே இல்லை. வாடிக்கையாளர் வரும் போதெல்லாம் அவளை எழக்கூட விடாது அவனே எடை போட்டுக்கொடுத்தான். 

“நீங்க போயிட்டு வாங்க, நான் பாத்துக்குறேன்.” என்று சொல்லிப்பார்த்தாள் அவன் கேட்க வேண்டுமே.

“வேலை விஷயமா நான் பாக்க வேண்டிய ஆள் இன்னைக்கு வேற வேலையா இருக்காராம்.” என்றான் அவன். 

இரண்டு நாட்கள் இப்படியே செல்ல மூன்றாம் நாள் பொறுக்க முடியாமல், “நான் மட்டுமில்லை அத்தானோட தேவை கூட கடைக்கு அதிகபட்சமா தான் இருந்திருக்கும்.” என்று சொல்லியேவிட்டாள். 

இதழ் பிரித்து சிரித்தவன், “கரெக்ட் தான். ஆரம்பத்துல தெரியாம அவனை வேலைக்கு எடுத்துட்டேன். ஒரு வாரத்திலேயே தெரிஞ்சிருச்சு அவன் அதிகப்படின்னு. ஆனா அந்த ஒரு வாரத்துல என்கூட நல்லா ஒட்டிக்கிட்டான்.” புன்னகை மாறாது சொன்னவன், இடைவெளி விட்டு மெல்லிய குரலில் தொடர்ந்தான்.

“ஒரு கோடு போட்டு அவனை கோட்டுக்கு அந்த பக்கம் நிறுத்தினா கோடு தாண்டி வந்துடுவான். திட்டினாலும் தட்டிவிட்டுட்டு திரும்ப ஒட்டிக்குவான். யாருமில்லாத எனக்கு அவன் துணையா இருந்தான். தொலைஞ்சு போக இருந்த என்னை அப்பப்போ உயிர்ப்பா வச்சிக்கிட்டான். அவன் தேவை புரிஞ்சி அவனை வேற வேலை தேடிக்க சொன்னாலும் என்கூடவே நின்னான். அவனை தெரிஞ்ச யாரும் அவனை வேண்டாம்னு சொல்ல மாட்டாங்க.”

இருவருக்கும் அவனின் நினைவுகள். அவனைத் தெரிந்த யாரும் அவனை மறக்கமாட்டார்கள் என்பது எத்தனை சத்தியமான வாக்கியம். 

சிலரை பார்த்ததும் அவர்களை விட்டு தள்ளி இருக்கச் சொல்லும் உள்ளுணர்வு. அதுவே சிலரிடம் சட்டென ஒட்டிக்கொண்டு பழக வைத்துவிடும். அப்படியான ஒருவன் சிகாமணி. அவனை சுற்றி உள்ளவர்களுக்கு புன்னகையால் புத்துணர்ச்சி அளிப்பவன். பேச்சினில் பேரன்பு பொழிபவன். 

மற்றவர்களுக்கே இப்படியென்றால் கல்பனாவை கேட்கவும் வேண்டுமா? அவளின் ஆதாரம் அவன். அதனால் தானோ என்னவோ அவனின் ஆதாரத்தை அவளுள் அவளுக்காக விட்டுச் சென்றிருக்கிறான்.

அந்த பூரிப்பு அவளின் வலியை தாண்டி அகத்தில் பிரதிபலித்தது. வீட்டில் தேவி தாங்கினால் கடையில் அருண் அவளை எதையும் தூக்க விடவில்லை. வாசுவின் டீக்கடை தாண்டி அதன் பக்கத்தில் இருக்கும் பழக்கடையில் இருந்துதான் இப்போதெல்லாம் காலையும் மாலையும் பழச்சாறு வருகிறது. அவள் வேண்டாம் என்று மறுத்தாலும் கேட்பதில்லை. அவளே வீட்டிலிருந்து எடுத்து வந்தாலும் பழமாய் இவன் வாங்கி கொடுத்து விடுவான். 

அந்த மாத இறுதியில் சரளாவுக்கு முதல் கீமோதெரபி கொடுக்கப்பட்டது. உடன் வருகிறேன் என்ற கல்பனாவை விட்டுவிட்டு தேவி துணைக்கு சென்றார். அடுத்த அமர்வுக்கு இருபது நாள் கழித்து வர சொல்லி இருந்தனர். முதல் அமர்வுக்கு பின் சரளா நன்றாக தேறி வந்தது போல் இருந்தது. 

கல்பனாவும் வேலைக்கு சேர்ந்து ஒரு மாதம் முடிந்த பின் வந்த சம்பளத்தை நேரே தேவியிடம் நீட்டினாள்.

நெகிழ்ந்தவர், “நீ வச்சிக்கோ.” என்று அவளிடம் திருப்பிக்கொடுக்க, அங்கு ஒரு பாசப்போராட்டம்.

“சிகா அத்தான் கொடுத்தா வாங்கிப்பீங்கதான?”

“அவனுக்குன்னு வச்சிகிட்டு தான் அவன் கொடுப்பான். உன்னை மாதிரி எல்லாத்தையும் கொடுக்க மாட்டான்.”

சரியென்றவள் போக்குவரத்து செலவுக்கான பணத்தை வைத்துக்கொண்டு மீதியை கொடுக்க, தேவி சேகர் முகம் பார்த்தார்.

“ஆசைப்பட்டு கொடுக்குது. வாங்கிக்கோ.” என்றான் அவன். 

அவனுக்கோ அவன் சம்பளம் மட்டும் அவர்கள் வீட்டுத் தேவையை நிறைவேற்றுமா என்ற ஐயமே. 

அவளிடமிருந்து பணத்தை வாங்கியவர் அதிலிருந்து கொஞ்சம் எடுத்து அவளுக்கே கொடுத்தார், “புள்ளதாச்சி பொண்ணு கையில எப்போதும் காசு வச்சுக்கணும். மருந்து மாத்திரை எல்லாம் வாங்கனும்ல.” என்றார். 

அப்போது தான் அவளுக்கே அவள் செலவுகள் மீது கவனம் சென்றது. முதல் மாதம் வேந்தன் மருத்துவரை பார்க்க அழைத்துச் சென்றதால் அவனே பணம் கட்டி மருந்து வாங்கி கொடுத்தான். எல்லா மாதமும் அவனை எதிர்பார்க்க முடியாதே. 

அதுவரை சிகாவே வந்துவிட்டான் என்ற பூரிப்பில் இருந்தவள் பிள்ளையை எப்படி வளர்க்கப் போகிறோம் என்று யோசிக்க ஆரம்பித்தாள். ஒரு நேரம் தைரியமும் ஒரு நேரம் ஐயமுமாய் கழிந்தது. உள்ளுக்குள் அலைபுரிதல் நிரந்தரமாய் குடிகொண்டது. அதுவும் முகத்தில் பிரதிபலிக்க சுற்றத்தினருக்கு என்ன செய்வது என்று தெரியாது கைபிசையும் நிலை. 

குறுகிய காலத்தில் இன்னொரு திருமணத்திற்கு சம்மதிக்க மாட்டாள் என்பது சரளாவிடம் அவள் பேசுவதை வைத்தே புரிந்துகொண்டனர் வீட்டினர். சரளா மகளை நினைத்து மறுக ஆரம்பித்தார். மகளுக்கு பிடித்ததை சமைத்து கொடுத்தனுப்புவதை தவிர வேறு எதற்கும் அவள் அவரை நெருங்க விடவில்லை. 

இந்த மாதிரியான சூழலில், “காயூவோட நகையை வச்சி பணம் வாங்கலாம்னு இருக்கேன்.” என்று வந்து நின்றான் வேந்தன்.

சரளாவின் மருத்துவ செலவு கையை கடிக்க ஆரம்பித்த சமயம். என்ன செய்வது என்று பலவாறாக யோசித்து அவன் எடுத்த முடிவுக்கு காயத்ரி முழுமனதாக ஒத்துக்கொண்டாள். 

சிகாவின் இழப்பால் சீர், விருந்து எல்லாம் நினைவிலேயே இல்லை. அதற்காக அப்படியே விடமுடியுமா என்று காயத்ரிக்கு செய்ய வேண்டியதை அவள் கருவுற்ற பின் ஆர்பாட்டமின்றி ஒரு நாள் வந்து செய்துவிட்டு சென்றனர் அவள் வீட்டினர். 

வேந்தனின் முடிவில் கபிலனுக்கு உடன்பாடு இல்லையென்றாலும் வேறு எந்த வழியில் பணம் புரட்டுவது என்று தெரியவில்லை. ஆனால் அனைவரும் எதிர்பாராத விதமாய் அடையார் புற்றுநோய் மருத்துவமனையில் பார்த்துக்கொள்ளலாம் என்றுவிட்டார் சரளா. அதுதான் வினையாய் முடிந்ததா இல்லை மகளின் வாழ்க்கை மனதை அறுத்ததால் ஆன பின்னடைவா என்று பிரித்தறிய முடியா வண்ணம் இரண்டாம் கீமோவுக்கு பின் அவர் உடல் நிலையில் ஒரு தொய்வு. 

சிரத்தை எடுத்து கவனமாய் பார்த்துக்கொள்ள முடியாத நிலை காயத்ரிக்கு. மசக்கையால் கல்பனாவும் சோர்ந்துவிட்டாள். அவளை கவனிப்பதே தேவிக்கு முழுநேர வேலை. 

அன்று தலைசுற்றுவது போலிருக்க, வேலைக்கு விடுப்பு எடுக்க சொல்லி தேவி வலியுறுத்தினார். கல்பனாவுக்கு அதுவே சரியென்றுபட, சுருண்டு படுத்திருந்தாள்.

காயத்ரியிடம் இருந்து அழைப்பு வந்தது. சரளாவுக்கு உண்ண முடியவில்லை. சாப்பிடுவது எல்லாம் வாந்தி எடுத்து விடுகிறார் என்றாள். உடனே தேவியை அழைத்துக்கொண்டு சரளாவை பார்க்க சென்றாள். 

துப்பட்டா போட்டு மூக்கை மூடியிருந்த காயத்ரி சரளாவின் வாயிலிருந்து வழிந்த பழசாறை துடைப்படி நிற்க, அருகில் அவர் வாந்தி எடுத்தது அப்படியே இருந்தது. கல்பனாவுக்கு அதை பார்த்ததும் குமட்டிக்கொண்டு வர, காயத்ரியும் வாந்தி எடுத்துவிட்டாள்.

தேவிதான் சிரமம் பார்க்காது சரளாவுக்கு உதவி, வீட்டையும் துடைத்துவிட்டார். அவரை பார்க்க பார்க்க, சரளாவுக்கு அழுகை பொங்கியது. யாரை வேண்டாம் என்று ஒதுக்கினாரோ அவர்தான் இன்றைக்கு கடவுளாய் தெரிந்தார். இக்கட்டு வரும் நேரம்தான் உறவுகளின் உன்னதம் புரிகிறது. காலம் தாழ்ந்த ஞானொதயம்.

“என் பொண்ணை விட்டுறாதீங்க.” என்று தேவியிடம் கெஞ்சவும் தயங்கவில்லை அவர்.

அந்த வார இறுதியே காயத்ரி வீட்டிலிருந்து வந்து அவளை அழைத்து சென்றுவிட்டனர். அவள் வரமாட்டேன் என்று முரண்டு பிடித்தால்தான் ஆனால் முன்பு போல் ஸ்திரமாய் இல்லை. நாளுக்கு நாள் சரளாவின் உணவு குறைந்துவிட, விட்டுச் செல்லவும் மனமில்லை உடனிருந்தால் பார்த்துக்கொள்ளவும் முடியவில்லை. சரளா வாந்தி எடுத்தால் இவளுக்கும் உமட்டிக்கொண்டு வர, இவளை பார்க்கவே இன்னொருவர் தேவை என்ற நிலை. வேறு வழியின்றி அம்மாவுடன் கிளம்பிவிட்டாள்.

சரளாவின் நிலை இன்னும் மோசமாகியது. காயத்ரி இருந்தால் எதாவது நசநசத்துக் கொண்டிருப்பாள் நேரம் தெரியாது பொழுதை ஓட்டிவிடிவார் சரளா. அவளும் இல்லாத பொழுதுகள் இருண்டது. சதா மகளின் வாழ்க்கை குறித்த பயம். தினம் காலை மாலை வேலைக்கு செல்லும் போதும் திரும்பி வரும்போதும் அம்மாவை பார்த்துவிட்டு செல்வாள் கல்பனா. தேவியும் தன் பங்கிற்கு தினம் உணவு பற்றி விசாரித்துவிடுவார். முடியாத பட்சத்தில் அவரே செய்து எடுத்து சென்று சரளாவுடன் கொஞ்ச நேரம் பேசிவிட்டு வருவார். 

கனியையும் உடன் அழைத்து செல்வார். அந்த பொழுதுகள் சற்று இதமாய் இருக்கும் சரளாவுக்கு. அவளை பார்க்கும் போதுதான் தன் வீட்டிற்கும் இரண்டு மழலைகள் வரப்போகிறது என்ற குதூகலம் தெரியும். மற்றைய நேரத்தில் கல்பனா குறித்த ஐயமும் வீட்டில் வேறு யாருக்கும் அவள் வாழ்க்கை குறித்த கவலை இல்லையே அவள் விருப்பத்திற்கு விட்டுவிட்டார்களே என்ற ஆதங்கமும்தான் துணை. 

“அம்மா எப்படி இருக்காங்க கல்பனா?” தேவியிடம் போனில் பேசிவிட்டு வைத்த கல்பனாவின் முகத்தில் கவலை ரேகைகள் தெரிய வலிய வந்து கேட்டான் அருண். 

“காலைலேந்து எதுவும் சாப்பிடலையாம். ஜுஸ் குடுத்தாலும் வாந்தி எடுக்குறாங்களாம்.” 

“நீங்க கிளம்பி டாக்டர்கிட்ட கூட்டிட்டு போங்க. இங்க நான் பாத்துக்குறேன்.” 

“இல்லைங்க பரவாயில்லை. சில நாள் இப்படி இருப்பாங்க. சாயங்கலாம் தானா சாப்பிடுவாங்க.” என்றுவிட்டாள். 

ஆனால் மறுநாளும் இதே கதை தொடர, மருத்துவமனை அழைத்துச் சென்றனர். உடல்நிலையில் பின்னடைவு. கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள் என்று அனுப்பிவிட்டனர்.

கல்பனா குறித்த கவலை பின்சென்று சரளா உடல்நிலை குறித்த அழுத்தம் அனைவருக்கும் பிரதானமாகியது. 

“என்னை பத்தி கவலைப்படாதமா. நான் நல்லா வாழ்வேன் நீயும் அதை பார்ப்பா.” 

“அதை பாக்குற குடுப்பணை எனக்கு இருக்கானு தெரியலையே. நீயும் ஒத்துக்க மாட்டேங்குற. தனியா கஷ்டப்படுறியே.” என்று அழுதவர் மனம் ரணம்.

ஒருவரின் எழுச்சியும் வீழ்ச்சியும் அவரவர் மனதிடம் பொறுத்தது. அந்த விதத்தில் கல்பனாவின் திடம் ஒவ்வொரு படியாய் மேல் ஏறுகையில் சரளாவின் திடம் ஒவ்வொன்றாய் கீழிறங்கியது. 

“கடையை விரிவுபடுத்துறேன்னு சொல்லிட்டு கடையை விட்டு நகராம இருக்கீங்க நீங்க.” அன்று கேலியாய் அருணை பார்த்தாள் கல்பனா.

“பண்ணலாம் பண்ணலாங்க. கடை எங்க போயிட போகுது.” என்றான் அசிரத்தையாய்.

“நான் நின்னுகுறேங்க. தேவையில்லாம சம்பளம் கொடுத்து என்னை உக்கார வச்சு என் வேலையும் நீங்களே பாக்குறீங்க. உங்க வேலையும் என்னால தேங்கி நிக்குது.” என்றாள் வருத்தமாய்.

இந்த ஒரு மாதத்தில் அவன் சொல்லவில்லை என்றாலும் அவளுக்கே கடையின் கணக்கு வழக்கு புரிந்துவிட்டது. இப்போது கடை விரிவுபடுத்த வேண்டுமென்றால் ஒரு பெரிய தொகை தேவைப்படும். அந்த தொகை கையிருப்பு அவனிடம் இருந்தாலும் அதன் பின்னான செலவுகள் இருக்கிறது. முதல் சில மாதங்கள் வியாபாரம் எப்படி இருக்குமென்று கணிக்க முடியாது. இலாபமோ இழப்போ அனைத்திற்கும் தயாராக இருக்க வேண்டும். இந்த சூழலில் அந்த சிறிய கடைக்கு அவளுக்கு சம்பளம் கொடுத்து வைத்திருப்பது அதிகப்படி தான். புரிந்துகொண்டவள் தடையாய் இருக்க தயங்கினாள்.

இப்போது வெளியில் வேலை தேடிக்கொள்ளும் பக்குவம் அவளுக்கு வந்துவிட்டாலும் இந்தளவுக்கு எங்கும் சலுகைகள் கிடைக்காது என்று தெரியும். அது அவளுக்கு மட்டுமல்ல அவனுக்கும் தெரியுமே. அதனால் அவளை தன் கடையிலேயே வைத்திருக்கிறான்.

போ போ என்று சிகாவை விரட்டா குறையாக தள்ளியவன், போகிறேன் என்றவளை பிடித்து வைத்திருந்தான். 

“ஜுஸ் குடிக்காம ஓப்பியடிக்க என்னலாம் பேசுறீங்க. ஒழுங்கா குடிங்க கல்பனா.” என்று ஒருமிடறு அருந்திவிட்டு மீதி வைத்திருந்த குவளையை அவன் கண்காட்ட, கண்களை சுருக்கி கெஞ்சலாய் பார்த்தாள் கல்பனா. 

“நீங்க குடிக்காம நான் நகரமாட்டேன்.” என்று அவள் எதிரில் அமர்ந்துவிட்டான். 

“ஐயோ… அத்தானை கூட நான் ஏமாத்தி இருக்கேன். நீங்க என்னன்னா இப்படி பண்றீங்களே.” என்று முகத்தை சுழித்தாள் கல்பனா.

மெலிதாய் சிரித்தவன், “சரிங்க, உடனே குடிக்க வேண்டாம். பொறுமையா குடிங்க.” என்று நகர்ந்து சென்றான். 

“அதென்ன எனக்கு ஜுஸ் உங்களுக்கு மதிய சாப்பாடே டீயும் பன்னும்? நல்லா சாப்பிடலாமே?” என்று அவனை நிறுத்தினாள்.

“சாப்பிடனும்னு தோனலைங்க. வயிறு நிறைஞ்சா போதும் அது எப்படி இருந்தா என்ன.” என்றான் விட்டேற்றியாய்.

என்ன இப்படி சொல்கிறான் என்று பார்த்தவள் அதை கேட்கவும் செய்தாள்.

“நம்புனவங்களுக்கு முதுகை காமிச்சு துரோகம் பண்ணிட்டேன்.” பழையவைகள் நினைவுக்கு வர ஒரு உந்துதலில் வார்த்தை விட்டுவிட்டவன் கல்பனாவின் ஆர்வமான முகம் கண்டு சுதாரித்துக்கொண்டான்.

“என்னை ரொம்ப நம்பாதீங்க. நீங்க எதிர்பாராத நேரம் விட்டாலும் விட்ருவேன்.” கசங்கிய முகத்துடன் சொன்னவன் நிற்காமல் விடுவிடுவென வெளியேறிவிட்டான். 

அவன் முக மாறுதலில் வருத்தம் கொண்டவள் அவன் கூற்றை ஏற்கவில்லை. சிகா இல்லை என்றான பின் தங்கள் குடும்பத்துக்காக வந்து நின்றவன் என்றளவில் அவன் மேல் அதிக நம்பிக்கையும் மரியாதையும் இருந்தது. சிகாவின் மனம் நெருங்கியவன் என்பதால் அவனை தப்பான கண்ணோட்டத்தில் எண்ண தோன்றவிலை. 

பின் வந்த நாட்களில் அந்த நம்பிக்கையும் மரியாதையும் பெருகி, அவனை தன் வாழ்க்கையின் அங்கமாக அனுமதிக்கும் பக்குவம் வந்தது.

Advertisement