Advertisement

*11*

இனிப்புகள் பரிமாறி கொண்டாட வேண்டிய மகிழ்ச்சியை இருகுடும்பமும் அத்தனை உவப்பாய் ஏற்றுக்கொள்ளவில்லை. அதிர்ச்சி, அறியாமை, கலக்கம் என ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு எண்ணம் கல்பனா கருவுற்றிருக்கிறாள் என்றதும்.

காயத்ரி விஷயத்தை வீட்டில் பகிர, கபிலன் தேவிக்கு அழைத்து சொன்னார். உடனே சேகரையும் சுசீயையும் அழைத்துக்கொண்டு வந்துவிட்டார். அவருக்கு கல்பனா என்ன நினைப்பில் இருக்கிறாள், எங்கு தங்க விரும்புகிறாள், அடுத்து என்ன செய்வது என்பதில் தெளிவு தேவைப்பட்டது. அதனால் உடனே வந்துவிட்டார். 

“ஹாஸ்பிடல் போய்ட்டு வந்துரலாம் கல்பனா. சாப்புட்டு கிளம்பு.” என்றான் வேந்தன்.

ஆவலும் பூரிப்புமாய் தலையசைத்த கல்பனா வேகமாய் அடுப்பறை செல்ல, எழுந்துகொண்ட தேவி,

“நீ ரெஸ்ட் எடு கல்பனா, நான் செய்றேன்.” என்றார் காயத்திரியின் மசக்கையையும் கருத்தில் கொண்டு.

“இருக்கட்டும் பெரியம்மா, இட்லி தான் ஊத்தணும். அத்தை ஊத்துவாங்க.” என்று சரளாவை பார்த்தாள் காயத்ரி.

அதுவரை வாய் திறவாமல் இருந்தவர் எழுந்து அனைவர் முகத்தையும் ஒருமுறை பார்த்துவிட்டு அமைதியாய் உள்ளே செல்ல, காயத்ரியின் கண்கள் யோசனையில் சுருங்கியது. கல்பனாவும் இம்முறை அம்மாவின் அமைதியை கண்டுகொண்டாள்.

சரளா இட்லி ஊத்த கிளம்பவும், விடைபெற எழுந்த தேவி, “நாங்க கிளம்புறோம் அண்ணா, கல்பனா இங்க இருக்க ஆசைப்பட்டா இருக்கட்டும்.” என்றவர் தயக்கத்துடன் அண்ணன் முகம் பார்த்து கண் சுருக்கினார்.

வேந்தன் அவர்களை சிற்றுண்டி முடித்து கிளம்பச்சொல்ல, மறுத்தவர்கள் விடைபெற, தேவி வாசலிலேயே தேங்கினார். பின்னோடே வந்த கபிலன், “என்னவோ சொல்ல தயங்குற மாதிரி இருக்கு. என்ன தேவி?”

“ரெண்டு புள்ளைதாச்சிங்க ஒரே வீட்ல இருக்க கூடாதுனு சொல்லுவாங்க. காயத்ரி அவங்க அம்மா வீடு போற வரைக்கும் கல்பனாவை நானே நல்லா பாத்துக்குறேன் அண்ணா. நம்பி அனுப்பி வைங்க.” என்று தயங்கிய கேட்டார்.

ஏற்கனவே இரு திருமணமும் ஒரே மேடையில் நடந்ததால்தான் இப்படி ஒரு அசம்பாவிதமாகிவிட்டது என்ற பேச்சு இருக்கிறது. குழந்தை விஷயத்திலாவது கவனமாக இருக்க வேண்டும் என்ற உறுதி அவரிடம். 

“நான் பேசிட்டு சொல்றேன் தேவி,” என்ற கபிலனுக்கும் யோசனை தான். 

வேந்தன் மூலமும் சரளா மூலமும் காயத்ரியின் பேச்சுக்கள் அவர் காதை எட்டியிருந்தது. அதற்கு அவர் விட்ட டோஸில் தான் சரளா அமைதியாய் இருக்கிறார். ஆனால் அதுவும் எத்தனை நாளுக்கோ தெரியாது. இப்போது மகள் கருவுற்றிருக்க, வேந்தன் காயத்ரியை தாங்கும் நேரம் கல்பனாவுக்கு ஏக்கம் வரும் என்ற ஐயம் உள்ளூர அரிக்க ஆரம்பித்தது. அடுத்த வாழ்க்கைக்கான சிக்கலாகவும் அக்குழந்தை பார்க்கப்பட்டது.

வேந்தன் கிளம்பவும் நெற்றியை தேய்த்த கல்பனா, “நேத்திக்கும் நீ லீவு இன்னைக்கும் என் கூட வந்தா ஹாஸ்பிடல்ல எவ்வளவு நேரம் ஆகும்னு தெரியல. நான் கடைக்கு போயிட்டு அங்கேயிருந்து போயிக்குறேன்.”

“பர்மிஷன் போட்டிருக்கேன் கல்பனா, மாமாவும் அத்தையும் காயத்ரியை பாக்க வராங்க. நாம போயிட்டு வந்துரலாம். அம்மா நீயும் கிளம்பு.” என்று அன்னையை கிளப்ப,

“நான் வரல,” மறுப்பு அவரிடம்.

“ம்மா, நீ வந்தா அவளுக்கு துணையா இருக்கும். பேசாம கிளம்பு.” என்றான் மகன். மகனை ஒரு பார்வை பார்த்தார். அதில் என்ன இருந்தது என்று அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

“என்னமா?”

“என்ன பாத்துட்டு இருக்க சரளா, கூட போயிட்டு வா.” கபிலன் அழுத்தி சொல்லவும், காலை உணவு முடித்து மாத்திரைகள் போட்ட பின் மூவருமாக கிளம்பினர். கபிலன் வேலைக்கு சென்றுவிட, காயத்ரி அவள் வீட்டிற்கு அழைத்து கல்பனா கருவுற்றிருப்பதை தெரிவித்தாள். 

சற்று நேரத்திற்கெல்லாம் அவர்கள் வந்துவிட்டார்கள்.

“நம்ம வீட்டுக்கு கிளம்பு காயு, ரெண்டு பேரும் ஒரே வீட்ல இருக்குறது சரியா வராது.” என்றார் காயத்ரியின் அன்னை.

“அவருக்கு லீவு கிடைக்கும் போது வரேன்மா.” அவளுக்கு வேந்தனை விட்டு பிரிய மனமில்லை. 

“சொன்னா புரிஞ்சிக்கோடி. இந்த நேரத்துல மசக்கை படுத்தும், கவனமா இருக்கனும். உன் மாமியாரை பாத்துக்கவே ஒரு ஆள் வேணும், இங்க யார் உன்னை பார்த்துப்பா?”

“எனக்கு முடியலைன்னா அத்தை நல்லாதான் பாத்துப்பாங்க. இப்போ அவங்களுக்கு பிரச்சனை இல்லை, நல்லா இருக்காங்க.”

“ஒரு வாரத்துல கீமோதெரபி ஆரம்பிக்கலாம்னு சொன்னாங்கன்னு நீதான சொன்ன. அந்த நேரத்துல நீதான் அவங்களை பாத்துகிற மாதிரி இருக்கும். அதெல்லாம் சரியா வராது.” என்ற மனைவியை கடிந்தார் சரளாவின் அண்ணன்,

“நீ பேசுறது சரியில்லை. சரளாவும் கல்பனாவும் இருக்கிற நிலைமையில காயத்ரியை கூட்டிட்டு போறது நல்லா இருக்காது. இங்க முடியாத பட்சத்துக்கு அவ நம்ம வீட்டுக்கு வரட்டும். இங்க குடும்பத்தையும் பாக்கணும்ல.”

“நீங்களும் புரியாம பேசாதீங்க. கல்பனா இப்படி இருக்கும் போது நம்ம பொண்ணு புருஷன் குழந்தைன்னு பூரிப்போட வளைய வந்தா பார்வை ஒருபோல இருக்காது. ஏக்கம் வரும். அது குழந்தைக்கோ காயத்ரிக்கோ நல்லது இல்லை.”

“அவளும் நம்ம வீட்டு பொண்ணுடி, இப்படில்லாம் பேசாத.” என்றார் காயத்ரியின் அப்பா கண்டிப்பாய்.

“ஆமா, அம்மா. கல்ப்ஸ் பாவம். அத்தையும் அனுசரணையா இல்லை, சிகா அண்ணனும் கூட இல்லை. அவளை இப்படிலாம் சொல்லாத, அவ அந்த மாதிரி கிடையாது.” நாத்தனாருக்கு வாக்காலத்து வாங்கினாள் அவளை புரிந்துகொண்ட அண்ணியாய்.

“நான் அவளை குறை சொல்லல. மாப்பிள்ளை உன்கிட்ட அனுசரணையா நடந்துப்பாரு, ஆசையா ஏதாவது வாங்கிட்டு வந்து கொடுத்து உன்னை தாங்குனா அதை பாக்குறவளுக்கு ஏக்கம் வர்றது இயல்பு. அந்த ஏக்கம் உங்களை பாதிச்சிடக்கூடாது. 

ஒரே மேடையில கல்யாணம் வேண்டாம்னு சொன்னேன் கேக்காம உன் அப்பா பண்ணி வச்சிட்டாரு. என்ன நடந்துச்சுனு பாத்தீங்கல்ல. இதுலையாவது என் பேச்சை கேளுங்க. புருஷன் இல்லாத பொண்ணு நாளைக்கு நீங்க தான் எல்லாமே பாக்குற மாதிரி வரும். இப்போவே பக்குவமா நடந்துக்கோ.” என்று குறிப்பு வைத்து பேச, அப்பேச்சில் அப்பா மகள் இருவருக்கும் உடன்பாடில்லை என்றாலும் ஒரே நாளில் பிணைக்கப்பட்ட இரு பந்தங்களில் ஒன்று மரித்துவிட, குழந்தை விஷயத்தில் பயம் வந்தது உண்மை. 

“ஆனா அவரு…” வேந்தனை விட்டு பிரிய வேண்டுமே என்ற ஏக்கம் எரிச்சல் கொடுத்தது காயத்ரிக்கு. அவள் யோசிக்கும் போதே,

“மாமா…” என்றபடி உள்ளே வந்துவிட்டாள் கல்பனா.

ஒரு நொடி அதிர்ந்து பின் தெளிந்தனர் மூவரும். தாங்கள் பேசியதை கேட்டிருப்பாளோ என்ற சந்தேகத்துடன் அவளின் மாமா பார்க்க, இயல்பாய் முகத்தை வைத்துக்கொள்ள சிரமப்பட்டாள் கல்பனா.

“காயு இப்போ தான் விஷயம் சொன்னா. டாக்டர் என்ன சொன்னாங்க?” என்று விசாரிக்கும் போதே பின்னோடு வந்துவிட்டனர் சரளாவும் வேந்தனும்.

அண்ணனை கண்டதும் சரளாவுக்கு கண்ணீர் முனுக்கென வந்தது.

“நீங்களாவது நான் சொல்றதை கேளுங்க அண்ணா. இவளுக்கு ஒரு நல்லதை பண்ணி விட்டுருங்களேன். இங்க யாரும் என் பேச்சை கேக்க மாட்டேங்கிறாங்க. இப்போ குழந்தை வேற.” என்று அண்ணனிடம் முறையிட்டார். 

“கொஞ்சம் பொறு பாக்கலாம். எடுத்தோம் கவுத்தோம்னு எல்லாம் செய்ய முடியாது. டாக்டர் என்ன சொல்றாங்க?” என்று பேச்சை திசை திருப்ப, மருத்துவர் குழந்தை நன்றாக வளர்வதை உறுதி செய்து விட்டதாக சொன்னார். 

சற்று நேரம் பொதுவாய் பேசிவிட்டு காயத்ரியை தங்களுடன் அழைத்துச் செல்வதாக அவர்கள் கூற,

“நான் வீட்டுக்கு கிளம்பிடுவேன் மாமா. அம்மாவும் தனியாதான் இருப்பாங்க. காயத்ரி இருந்தா ஒருத்தருக்கு ஒருத்தர் துணையா இருந்துப்பாங்க.” என்றாள் கல்பனா அவசரமாக குறுக்கிட்டு.

“வீட்டுக்கு போறியா? அதெல்லாம் வேணாம். இங்கேயே இரு.” என்ற சரளாவை அவள் கருத்தில் ஏற்றிக்கொள்ளவில்லை. 

“அங்க அத்தைக்கும் எல்லாருக்கும் சொல்லணும் அண்ணா. நான் வீட்டுக்கு கிளம்புறேன்.” என்று எழுந்தவளை காயத்ரியே விடவில்லை.

“வந்துட்டு உடனே கிளம்புற. சாப்பிட்டு போகலாம்.” 

“இல்லைடி, அத்தை ரொம்ப சந்தோஷப்படுவாங்க. எதிர்பார்த்துட்டு இருப்பாங்க.” என்று மறுத்தாள் கல்பனா. 

“போன் பண்ணி சொல்லிக்கலாம். அப்பா வரட்டும், நாங்களே கொண்டு வந்து விடுறோம்.” என்றான் வேந்தன்.

இவர்களின் பேச்சு காயத்ரி அம்மாவுக்கு ஒப்பவில்லை. அது அவர் முகத்தில் பிரதிபலிக்க, சொந்த வீட்டினர் முன்னிலையிலே சங்கடம் உணர்ந்தாள் கல்பனா.

கணவனை விட்டு வரமாட்டேன் என்று முரடு பிடிக்கும் மகளை ஒன்றும் சொல்ல முடியாமல் வீட்டிற்கு கிளம்பி சென்றுவிட்டார் காயத்ரியின் அம்மா. 

சற்று நேரம் ஓய்வெடுக்க என்று சரளா படுத்துக்கொள்ள, கல்பனாவின் அமைதி கண்டு அவளை தன்னுடன் இழுத்துக்கொண்டு சமையல் செய்தாள் காயத்ரி.

“உன்னால முடியலைன்னா அம்மாட்ட சொல்லு காயு, இழுத்து போட்டு செய்யாத. ரெண்டு பேருக்கும் கஷ்டமா இருந்தா போன் போடு, நானும் அத்தையும் வரோம்.” என்ற கல்பனாவை எண்ணி கவலையே காயத்ரிக்கு.

இரவு கபிலன் வந்ததும் ஒரு மனதாய் கல்பனாவை சிகா வீட்டில் விட்டு வந்தார்கள். கனிகளும் உலர் பழங்களும் தவறாது எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்திவிட்டு சென்றார்கள். அனைத்தையும் ஒருவித யோசனையுடன் பார்த்துக்கொண்டிருந்த சுசீலா முன்னை விட இன்னும் விலகிக்கொண்டாள் கல்பனாவிடமிருந்து.

மறுநாள் காலை வேலைக்கு புறப்பட தயாராகும் மருமகளை பார்ப்பதுமாய் பின் ஏதோ யோசிப்பதுமாய் இருந்த தேவி ஒருகட்டத்தில் தைரியம் வரப்பெற்று, “கண்டிப்பா வேலைக்கு போகணுமா கல்பனா? குழந்தை பொறந்ததும் பாத்துக்கலாமே.” என்றிட, சுசீலாவுக்கு தான் தூக்கி வாரிப்போட்டது.

“ஒருநாள் தான் வேலைக்கு போனேன் அதுக்குள்ள நிக்கணுமா? முடிஞ்ச வரைக்கும் போறேன் அத்தை.” என்றாள் கல்பனா. 

“அதுக்கில்லமா, முத மூணு மாசம் கவனமா இருக்கனும். அரிசி கடையில எடை போடுற மாதிரி இருக்கும். வெய்ட் தூக்க கூடாது.” 

இவரையும் சமாளிக்க வேண்டுமா என்று ஆயாசமாய் இருந்தது அவளுக்கு. சற்று முன்தான் அவள் அம்மா துவங்கி காயத்ரி வரை கடை வேலைக்கு செல்லாதே என்று பாடம் எடுத்து அனுப்பினர். அவர்களை சமாளிக்க முடியாது பார்த்துக்கொள்கிறேன் என்று மட்டும் சொல்லிவிட்டு வந்தாள். இப்போது தேவி.

சிகா இருந்திருந்தால் அவளும் வேலைக்கு செல்ல பிரியப்பட்டிருக்க மாட்டாள். இப்போதோ அவன் நினைவை வலியின்றி கடக்கவும் அவர்கள் வீட்டு சூழலுக்கு தோள் கொடுக்கவும் இந்த வேலை அவசியம். அதை சொன்னால் இவர்கள் எல்லாம் புரிந்துகொள்வார்களா என்ற தயக்கம் கல்பனாவுக்கு. ஆனால் சமாளிக்கத்தானே வேண்டும்.

“அங்க போனா எல்லாத்தையும் மறந்து கொஞ்சம் ஃப்ரியா இருப்பேன் அத்தை.” என்றதும் தேவியால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. 

அதிக எடை தூக்காதே, பழங்கள் தவறாது எடுத்துக்கொள் என்று அறிவுறுத்தி அனுப்பி வைத்தார். பேருந்து நிறுத்தம் செல்லும் வழியில் கபிலன் நிறுத்தி விசாரிக்க தேவிக்கு சொன்ன பதிலையே அவருக்கும் சொல்லி அவர் வாய் அடைத்துவிட்டாள். 

பெற்றவர் மனது கேட்குமா தேவியிடம் அருண் தொலைபேசி எண்ணை வாங்கி அவனுக்கு அழைத்து கல்பனாவின் பிடிவாதத்தையும் அவளின் நிலையையும் சொல்லி பார்த்துக்கொள்ள சொன்னார். அவனும் பார்த்துக்கொள்வதாய் வாக்கு கொடுக்க நிம்மதி மூச்சு விடமுடியவில்லை கபிலனால்.

Advertisement