Advertisement

காலை அவன் சொல்லி சென்ற டீ கடை இரண்டாவதாய் தெரிந்தது. அங்கே சென்றவள் தனக்கென்று பன் மற்றும் டீ வாங்கிக்கொள்ள,

“இனிமே ஏதாவது வேணும்னா உங்க கடை வாசல்லேந்து வாசுனு குரல் கொடுங்க, நானே எடுத்துட்டு வரேன்.” என்று புன்னகை முகமாய் அவன் சொல்ல, சரியென்று தலையாட்டினாள் கல்பனா.

“அப்புறம் தினம் டீ, பன்னுக்கு காசு கொடுக்க வேணாம். நீங்க வாங்குற எல்லாமே நோட்டுல கணக்கு வச்சிப்போம் மாச கடைசியில அருண் அண்ணன் கொடுத்துடுவாரு.” என்றான் கூடுதல் தகவலாய்.

நன்றி தெரிவித்துவிட்டு அவள் கடைக்கு வந்து பன்னை கடிக்க, அதன் சுவை பிடிக்கவில்லை. மல்லுக்கட்டி உண்ணவும் முடியவில்லை. நெஞ்சு வரை ஏதோ நிற்பது போல ஒரு உணர்வு. பன்னை வைத்துவிட்டு டீ குடித்தாள். பாதி க்ளாஸ் தான் குடிக்க முடிந்தது அதற்கு மேல் எதுக்களிப்பது போல் இருக்க அப்படியே வைத்துவிட்டு கடைக்குள் அங்குமிங்கும் நடந்தாள். நெஞ்சில் நின்றது சற்று கீழே இறங்கியது போல தோன்ற, உடல் வெளிப்படுத்தும் உணர்வுகளை புரிந்துகொள்ள முடியாது மெளனமாய் அமர்ந்துகொண்டாள்.

சற்று நேரத்திற்கெல்லாம், “எல்லாம் ஓகேவா’ங்க?” என்று கேட்டபடி அருண் வந்துவிட்டான்.

காலையில் இருந்த தெளிவு குறைந்து கலக்கத்துடன் நிமிர்ந்து பார்த்தவள் மென்னகை சிந்த, ஒருவாய் கடித்துவிட்டு ஈ மொய்க்க வைத்திருந்த பன்னும் பாதி குடித்த டீயும் அவனை யோசிக்க வைத்தது.

“ஏங்க இந்த வெயில்ல இருக்க முடியலையா? கஷ்டமா இருக்கா?” 

“இல்லை இல்லை, ஏதோ ஒருமாதிரி இருந்துச்சு. இப்போ ஓகே’ங்க.” என்றவள் அன்று வந்த கணக்கை அவனுக்கு காண்பித்தாள்.

அதுவரை வந்த டெலிவரியை மனதில் பதித்துகொண்டு ஸ்டாக் எவ்வளவு இருக்கிறது என்று பார்த்து வந்தான். அவன் வரவும் இருக்கை விட்டு எழுந்தவள் அவனை அமர சொல்ல, மறுத்துவிட்டு வேறொரு நாற்காலி எடுத்துப்போட்டு கடையின் மற்றொரு மூலையில் அமர்ந்துகொண்டான்.

மெளனம் அங்கே வென்று ஆட்சிபுரிய, கல்பனா போனை நோண்டினாள். அருண் எதையோ சிந்தித்தபடி வியர்வையை துடைத்தபடியும் இருந்தவன், “நீங்க கிளம்புங்க கல்பனா. நான் பாத்துக்குறேன்.”

அதற்குள்ளா என்று மணியை பார்க்க அது மாலை நான்கை நெருங்கியது. ஐந்து மணி வரை தனக்கு வேலை என்றானே என்று பார்த்தவள், “இன்னும் ஒருமணி நேரம் இருக்கே.”

“பரவாயில்லைங்க, நீங்க கிளம்புங்க. நான் சும்மா தான் இருக்கேன்.” என்று தலைகோதி அவளை பார்த்தான்.

பையை எடுத்துக்கொண்டவள், “நீங்க போன வேலை முடிஞ்சிடுச்சா? சீக்கிரம் வந்துட்டீங்க. தினமும் இப்படித்தானா?”

“இதைவிட சீக்கிரமே வந்திருப்பேன். உங்களை சங்கடப்படுத்த வேணாம்னு லேட்டா வந்தேன்.” என்கவும், குழப்பம் கல்பனாவிடம்.

“நிஜமா உங்க கடைக்கு நான் தேவையில்லை தானே, அத்தானுக்காக தான எனக்கு வேலை கொடுத்திருக்கீங்க.”

அன்றைய ஒரு நாளே அவன் கடைக்கு அவனைத் தவிர்த்து காலை அவளும் மாலை இன்னொருவனும் என இரண்டு பேர் அதிகப்படி என்று தோன்றி கேள்வியாய் வெளிப்பட்டது.

அவளது கணிப்புத் திறனை மனதிற்குள் மெச்சியவன், சன்னமாய் புன்னகைத்தான்.

“இப்போ நான் என்ன சொல்லணும்னு எதிர்பாக்குறீங்க?”

“உண்மையை சொல்லுங்க, எங்களால உங்களுக்கு நஷ்டம் வேண்டாம்.” சன்னக்குரலில் சங்கடத்துடன் சொன்னாள் கல்பனா. 

“ஏற்கனவே சொன்னேனே, விரிவுபடுத்துற விஷயமா நிறைய பேரை நான் பாக்க வேண்டி இருக்கும். கடையை பூட்டி போட்டுட்டு போக முடியாது, அதான் அந்த வேலையை உங்களுக்கு கொடுத்தேன். விரிவுபடுத்திட்டா இப்போ இருக்கிறதை விட கூட்டம் அதிகம் வரும். அப்போ ஆள் தேவைதானே. நஷ்டம்னு எல்லாம் யோசிக்காதீங்க. முதலீடா பாருங்க.”

“சரி, நான் கிளம்புறேன். நாளைக்கு நேரமே வந்துடுறேன்.” என்று விடைபெற்றவள் பேருந்து பிடித்து வீடு சென்றாள்.

அவர்கள் வீடை கடக்கும் தருவாயில் வேந்தன் அழைத்தது நினைவு வர, நேரே அங்கே சென்றாள்.

“சீக்கிரம் வந்துட்ட கல்ப்ஸ்.” புன்னகை முகமாய் வரவேற்ற காயத்ரி உள்ளிருந்து இனிப்பு எடுத்துவந்து கொடுக்க, வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருக்கும் அண்ணனை கேள்வியாய் பார்த்தாள்.

“அத்தை ஆகப்போற கல்பனா. காலையில டாக்டர் கன்பார்ம் பண்ணாங்க.” சிரித்த முகமாய் கண்சிமிட்டி சொன்னான் வேந்தன்.

“ஹே, சூப்பர்டா…” ஆர்பரிப்புடன் காயத்ரி கரத்தை பிடித்துக்கொண்டு வேந்தனுக்கு வாழ்த்து சொன்னவள் சட்டென அமைதியாகிவிட, குழப்பத்துடன் அவளை பார்த்தாள் காயத்ரி.

“என்னாச்சு? ஏன் அமைதியாகிட்ட?” கரங்களில் அழுத்தம் கொடுத்து காயத்ரி கேட்க,

“ஒன்னு… ஒன்னுமில்லை,” என்ற கல்பனாவின் குரலில் தடுமாற்றம். 

மகளின் அமைதியை வேறு விதமாக புரிந்துகொண்ட சரளா காயத்ரியை உள்ளே போகச் சொல்ல,

“தூக்கம் வரல அத்தை. அப்புறமா போய் ரெஸ்ட் எடுக்குறேன்.” என்று சரளாவின் நோக்கம் புரியாது பதில் சொன்னாள் அவள்.

“எவடி இவ, ஒன்னும் புரியாது. வேலை முடிஞ்சி களைப்பா வந்திருக்கா இனிப்பு மட்டும் குடுத்தா ஆச்சா. காபி போடலாம்ல, எல்லாம் நான் சொல்லணும்.” சரளா அவளை அப்புறப்படுத்துவதில் மும்மரம் காட்ட முறைப்பு மூன்று பக்கத்திலிருந்தும் வந்தது.

“அதெல்லாம் வேண்டாம் ம்மா, நான் கிளம்பிடுவேன் அங்க அத்தை வெய்ட் பண்ணுவாங்க. உடம்பை பார்த்துக்க காயு.” என்ற கல்பனா எழுந்துகொள்ள,

“முதல் மூணு மாசம் கவனமா இருக்கணும்னு சொல்லியிருக்காங்க டாக்டர். அவளை பாத்துக்கமா.” என்றான் மகன்.

என்னடா இது என்று சரளா மூவரையும் பார்க்க, கல்பனா கிளம்பிவிட்டாள். அவள் சென்றதும் அத்தையிடம் வந்த காயத்ரி, “நான் சந்தோஷமா இருக்குறதுல உனக்கு என்ன வருத்தம் அத்தை?” என்று கேட்டேவிட்டாள்.

“என்ன பேசுற நீ?” வேந்தன் அதிர்ந்து பார்க்க, காயத்ரி சரளாவை அழுத்தமாய் பார்த்தாள்.

“என்ன?” என்ற திகைப்பு சரளாவிடம். இப்படி ஒரு நேரடி கேள்வியை அவர் எதிர்பார்க்கவே இல்லை. மருமகள் மகிழ்ச்சியை பார்த்து நான் வருந்துகிறேனா? நெஞ்சில் கைவைத்தார் அவர்.

“சொல்லு அத்தை. கல்பனாவுக்கு இப்படி ஆனது எனக்கும் கஷ்டமா தான் இருக்கு. அதுக்காக நான் என்னோட சந்தோஷத்தை கூட காட்டிக்க கூடாதா? அன்னைக்கு பாக்குறேன் அரை முழம் பூ வச்சதுக்கு அப்படி பாக்குற என்னை.” பாரபட்சமின்றி அவள் நேரடி தாக்குதல் நிகழ்த்த வேந்தன் கண்டித்தான்.

“மனசுல எதுவும் வச்சிக்காம துடுக்கா பேசுறேன்னு விட்டா அதிகமா பேசிட்டு இருக்க காயு.”

“நான் என்ன எல்லாத்தையும் வேணும்னா பண்ணேன், அன்னைக்கு ஏதோ ஆசையா இருந்துச்சுன்னு கொஞ்சமா பூ வச்சிக்கிட்டேன். அதையெல்லாம் கல்ப்ஸே கண்டுக்கல, அதுக்கு அத்தை அப்படி பாக்குறாங்க. உங்களுக்கு தெரியாது அவ இங்க இருந்தா இவங்க என்னை வேற மாதிரி… ஏதோ சொல்லுவாங்களே… ஆங், போட்டி… என்னமோ போட்டியா பாக்குறாங்க. நான் என்ன பண்ணேன்? எனக்கு அவ மேல அக்கறை இல்லைனு நினைச்சிக்குறாங்க.” என்று மல்லுக்கு நின்றாள் அவள். 

இவள் இப்படி பேச பேச, இனி இவளிடம் தேவையில்லாது பேச்சு வைத்துக்கொள்ள கூடாது என்ற முடிவுக்கே வந்துவிட்டார் சரளா.

“அடியே, என்ன பேசுற நீ? என் பொண்ணு இப்படி இருக்கானு நெஞ்சு முழுக்க துக்கம் இருக்குதான் அதுக்காக நீங்க சந்தோஷமா இருக்கறதை பார்த்து வயிறு எரியுற அளவுக்கு தரம் தாழ்ந்தவ இல்லை நானு. அவ மனசு ஏங்கிடும்ன்னு நான் பார்த்தா இவ என்னலாம் சொல்றா பாரு வேந்தா… ஒன்னும் சொல்றதுக்கு இல்லை. அண்ணன் மகனு கொண்டாடுனதுக்கு நல்லா செஞ்சுட்ட…” என்று புலம்பியபடியே படுத்துவிட்டார். 

வேந்தன் எந்த பக்கம் பேசுவது என்று தெரியாது முழிபிதுங்கி நின்றான்.

வீட்டிற்கு சென்ற கல்பனா ஏதோ யோசனையிலேயே இருக்க தேவி என்னவென்று விசாரித்தார். சுசீலாவும் கேட்டாள் ஒன்றுமில்லை என்றவள் அன்று முழுதும் ஒருவித படபடப்பிலும் எதிர்பார்ப்பிலும் கடத்த, காலை விடிந்ததும் காயத்ரிக்கு அழைத்தாள்.

“என்னடி காலையில கூப்பிட்டிருக்க?”

“நல்லா இருக்கியா?”

“காலங்காத்தால இதை கேக்கத்தான் போன் பண்ணியா?” என்று கேட்ட காயத்ரி பாலை சுவைத்தபடி கிட்சனிலேயே அமர்ந்தாள்.

“படபடப்பா இருக்கு. யாரை கேக்குறதுனு தெரில, அதான் உன்னை கூப்பிட்டேன்.” விஷயம் இன்னதென சொல்லாமல் கல்பனா தலை சுற்றி மூக்கை தொட முயற்சிப்பது காயத்ரியின் பொறுமையை சோதித்தது.

“அவரையும் மாமாவையும் அங்க அனுப்பிவிடவா? இங்க ஒரு வாரம் இருந்துட்டு போறீயா?” மனதளவில் சோர்ந்திருக்கிறாள் போல, தங்களின் அருகாமையை தேடுகிறாளோ என்ற எண்ணத்தில் கேட்டாள் காயத்ரி.

“வேண்டாம் வேண்டாம்…” அவசரமாக மறுத்தவளோ, “இவ்ளோ நாள் கவனிக்கல நேத்தி நீ சொல்லவும் தான் யோசிச்சேன். கல்யாணத்துக்கு அப்புறம் பீரியட்ஸ் வரல, எனக்கும் சந்தேகமா இருக்குடி. பயமாவும் இருக்கு. யாருகிட்ட சொல்றதுனும் தெரில. அத்தான் இருந்திருந்தா இப்படியெல்லாம் பயந்திருக்க மாட்டேனோன்னு எல்லாம் தோணுது.” இறுதியில் கல்பனாவின் குரல் கமர, காயத்ரிக்கு என்னவோ போலானது.

இந்த அத்தை கொஞ்சம் நிதானமாய் கல்பனாவுக்கு ஆதரவாய் இருந்தால்தான் என்ன? என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை. 

“நாங்கல்லாம் இருக்கோம்ல பயப்படாத. வீட்ல டெஸ்ட் எடுத்து பாத்தியா?” என்று அவளுக்கு ஆறுதலாய் பேச்சு கொடுத்தாள் காயத்ரி.

“எடுக்கலடி, ஒரு மாதிரி படபடப்பா இருக்கு.” திக்கித்திணறியவள், “பாஸிட்டிவா இருந்தா அத்தானே திரும்ப வந்த மாதிரி இல்லைனா எப்போவுமே எனக்கு அத்தான் கிடைக்கமாட்டாங்கல்ல.” என்ன கட்டுப்படுத்தியும் விம்மிவிட்டாள்.

“சரி சரி அழாதடி. நான் ஒரு கிட் எக்ஸ்டரா வாங்கி வச்சேன். வீட்டுக்கு வரியா டெஸ்ட் பண்ணிடலாம்.” என்று அழைக்க உடனே வருகிறேன் என்று கிளம்பி வந்துவிட்டாள்.

இந்த நேரத்தில் எங்கே என்று தேவி கேட்க அம்மாவை பார்த்துவிட்டு வருகிறேன் என்றவளை வாசலிலேயே வழிமறைத்தார் கபிலன். உடை எடுக்க வந்தேன் என்று சொல்லி உள்ளே வந்தவள் பார்வையாலே காயத்ரியை தேட, அப்போது தான் எழுந்த சரளாவும் விசாரித்தார். அவரிடமும் உடை எடுக்க வந்தேன் என்று சொல்ல, வேந்தனை எழுப்பி அறையின் வெளியே தள்ளிய காயத்ரி கல்பனாவை உள்ளே அழைத்து எப்படி பரிசோதனை செய்ய வேண்டும் என்று சொல்லி அனுப்பினாள்.

முதல் சிகப்பு கோடு வந்த சில நொடிகளுக்கு பின்னும் ஒற்றை கோடே மினுமினுக்க, தடதடக்கும் இதயத்துடன் அதனிலேயே விழி பதித்திருந்தவளின் விழிகளில் கண்ணீர் உருண்டைகள் திரண்டு கீழே வழிந்தது. அடுத்த சில நொடிகளிலேயே மற்றொரு கோடு மெலிதாய் பரவ, அதனை நெஞ்சோடு அணைத்துக்கொண்டு வெடித்து அழுதாள் கல்பனா.

அவன் தன்னை தனித்து விடவில்லை, தன்னுடைய உயிரையே தனக்காக விட்டுச்சென்றிருக்கிறான் என்ற உண்மையை அந்த பரிசோதனை சாதனம் உறுதிப்படுத்த, அவன் வாசமும் நேசமும் திரும்ப அவளுக்கே வந்துவிட்ட நிம்மதி. 

திக்குத்தெரியாத பாலைவனமாய் வறண்டிருந்த மனம் பூத்துக்குலுங்கும் சோலைவனமாய் பரிமாற்றம் கொண்டது. வசந்தகாலத்தின் துவக்கமாய் அவன் விட்டுச்சென்ற விதை இன்று அரும்பாய் வளர்ந்து மலரின் சுகந்தத்தை மலரும் முன்னமே அவளுள் பரப்பியது.

Advertisement